வியாழன், 5 செப்டம்பர், 2019

ஒரு முருங்கைக்காயும், ஒரு தர்பூசணியும்.

கல்யாண வீட்டிற்கு கிளம்பும்போதே பேச்சில் லேசான ஒரு "உரசல்" வந்திருந்தது. தற்போதெல்லாம் எங்கு கிளம்பும்போதும் இந்த "வாக்கு தர்க்கம்" வந்து விடுகிறது. பெரிதான சப்தமில்லாது வெடிக்கும் ஓலை வெடியைப்போல். ஒன்பது வருடத்திற்குள் கல்யாண வாழ்க்கை இருவருக்கும் சலித்து விட்டதா என்ன? என்ன செய்ய. முரளியின் வாயும் சும்மா இருக்காது. நாற்பது வயதாகிறதல்லவா? நாற்பது வயதில் நாய் குணம் வருமென்று சும்மாவா சொல்கிறார்கள்.
"உன் உடம்பு வாக்குக்கு... இந்த சாரி... கீரிலாம் சரிப்பட்டு வராது"ன்னு பட்டென்று முரளி சொல்லியது அவள் முகத்தில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாவம் லலிதா. வெடுக்கென்ற வார்த்தைத் தீயில் உள்ளுக்குள் ஏற்பட்ட "அவமான சங்கோஜத்தை" வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
"நான் உங்கள்ட நல்ல இருக்கான்னு, கேக்கவே இல்லையே?" - சிரித்தான கோபத்தில் மறுபடி கூறிக்கொண்டே, சேலைக் கட்டுவதில் மும்முரம் காட்டினாள் லலிதா.
"நீ இப்ப இருக்குற சைசுக்கு, "பாதாள பைரவி" படத்துல ரங்காராவ் போடுறமாறி மேலிருந்து, கீழ வர பெரிய "அங்கி மாதிரி" போட்டாத்தான் சரி..." - மெல்லமாக சிரித்து, மட்டமான ஒரு காமெடியடித்தான் முரளி.
மேற்கொண்டு பேசினால் பெருஞ்சண்டையாகும் அபாயம் இருந்ததால் அடுத்த பதிலை தவிர்த்து, உரையாடலை முடித்தாள் லலிதா. பதிலேதும் கிடைக்காததால், பரிகாச முகபாவனையில் கல்யாண வீட்டிற்கு கிளம்பும் வேலையில் மும்முரமானான் முரளி.
முந்தானை போக மீதம் உள்ள சேலையை, டக் வைத்து அடிவயிற்றினுள் செருக முயற்சித்துக் கொண்டிருந்தாள் லலிதா. பருத்த உடம்பு அங்கொன்றும் இங்கோன்றுமாய் சாய்ந்திருக்க, சமீபத்திய நான்கைந்து வருடங்களில் கொழுப்பேறிய வயிறு, தொப்புள் சுருக்கத்தோடு பிதுங்கி வெளியே மடிந்திருந்தது. சிசேரியனின் போது ஏற்பட்ட கீறல் அடையாளங்களை, அடிப்பாவாடைக்குள் திணித்து சேலையடுக்கை அடிவயிற்றில் செருக முயற்சித்துக் கொண்டிருக்கும் போது தான், முரளியின் வாயிலிருந்து இந்த கிண்டல் பிதற்றல்.
எதிர்பாராமல் ஏற்பட்ட உடல் பருமனின் காரணமாக சமீப காலங்களில் சேலை அணிவதையே தவிர்த்திருந்தாள் லலிதா. உள்ளூர் கல்யாணமாய் இருக்க, இதுவரை மூன்று முறை மட்டுமே அணிந்த முப்பதாயிரம் ருபாய் முகூர்த்த பட்டுசேலையை இன்று அரைகுறை ஆசையோடு அணியும் போதுதான், முரளி அதிகப்ரசங்கித்தனமாய் இப்படி திருவாய் மலர்ந்திருந்தான்.
லலிதா முகம் வாடியதை முரளியும் கண்டு கொண்டான். சில நிமிடங்களுக்கு அந்த குற்றவுணர்வு மனதிற்குள் கிடந்தாலும், அடுத்த மணித்துளிகளில் மீண்டும் அவளை பரிகசிப்பான். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான குணாளன் இந்த முரளி. அதற்காக நீங்கள் அவனை பாசமற்றவன் என்றோ? கொடுங்கோலன் என்றோ கற்பனை செய்ய வேண்டாம். இனிய பண்பாளன் தான். பாசமுள்ளவன்தான். ஊருக்கு கோமாளியாக இருந்தாலும், அவரவர் வீட்டிற்கு அவரவர் ராஜாதானே. நாகர்கோவிலின் புறநகரில் HDFC கொடுத்த கடனில் கட்டிய ஒன்றரை கிரௌண்ட் வீட்டின் ராஜ கம்பீர, ராஜா குலோத்துங்க, ராஜராஜ சோழன்தான் முரளி. அரசு புள்ளியியல் துறையில் கணக்கர் உத்தியோகம். வேலையின் சர்வீஸ் பதினாறு வருடங்கள் ஆனாலும், இப்போதும் "நீங்கள் புள்ளியியல் துறையில் என்ன வேலையாக்கும் செய்வீர்கள்? -என்ற நண்பர்களின் கேள்விக்கு சரியாக விளக்கம் சொல்லத்தெரியாதவன். "அது நாங்க எக்கனாமிக் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரிச்சு" -என ஆரம்பிக்கும்போதே, "நீ... நல்ல... எக்கனாமிக்க தூக்கி நிறுத்துன... போ..."- என்று நண்பர்கள் கிண்டல் தொனியில் குரலை உயர்த்த, வெட்கத்தில் சம்மி நாறிவிடுவான் முரளி.
வேலையின் போது தான் எடுக்கும் தரவுகள் எப்படி பொருளாதாரத்தை உயர்த்தும் அல்லது தாழ்த்தும் என்ற சந்தேகம் அவனுக்குமே உண்டு. தேதியானால் சம்பளம் வருகிறது, பண்டிகைதோறும் விடுமுறைகளும். இதைத்தவிர சம்சாரிக்கு என்ன வேண்டுமென்று எண்ணியதால், செய்த வேலையையே திரும்பத் திரும்பத் செய்து அரசு நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்தான் முரளி. வெளிப்புற பரிகாசத்தாலோ என்னவோ, வீட்டுக்குள் கொஞ்சம் கோபம் கொப்பளிக்க காமெடி செய்வான் முரளி. ஒரே மகள் வெளியூரில் தங்கி பள்ளிப்படிப்பு படிக்க, வீட்டுக்குள் ஓன்றை மனிஷியாய் முரளியைப் பொறுத்துக்கொண்டு காலம் தள்ளிக்கொண்டிருந்தாள் லலிதா.
முன்னரெல்லாம் முரளி இந்த அளவிற்கு பேச மாட்டான். அவன் விஷயத்தில் ஆசை அறுபதுநாள். மோகம் முப்பது நாளெல்லாம் இல்லை. அன்பாக பண்பாக நடந்து கொண்டவன்தான். இப்போது எதற்கெடுத்தாலும் அவள் உடல் பருமனை பற்றிய பரிகாசம். எத்தனை நாள்தான் பொறுப்பாள் லலிதா.
"உங்களுக்கும் வயசாயிட்டு வருகு...மறந்துடாதீங்கோன்னு"- லலிதா பதில் அளித்தால், "அதான் நானும் சொல்லுகேன்... எனக்கும் வயசாயிட்டு, ஆனா உன்ன மாதிரி "இடி தடியங்காய் மாதிரியா" இருக்கேன்"- என மறு பதில் உரைப்பான் முரளி. மறு பேச்சிற்கு வழியின்றி மலங்க, மலங்க அவள் விழிப்பாள்.
அழகான மனைவி வேண்டுமென்பது ஒவ்வொரு சராசரி ஆண் மகனுக்கும் இருக்கும் உணர்வு தானே. கட்டிய மனைவியோடு ரோட்டில் இறங்கி நடக்கும் போது, மொத்த உலகமும் அவர்களை பார்க்கவேண்டுமென்ற ஆவல் தானே. உடனே அழகான கணவன் வேண்டுமென்று ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆசையிருக்காதாவென பெண்டீர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வரலாகாது. திருமண பந்தத்தில் அழகு என்பது பெண்ணுக்குரியதாகவும், செல்வச்செழிப்புடன் கூடிய வீரமென்பது ஆண்களுக்குரியதாகவும் வழிவழியாக பின்பற்றப்படுவதை கதை படிக்கும் கனவான்களும், கனவாள்களும்(?) புரிந்து கொள்ள வேண்டும். நவீன காலத்தின் கோலத்தில் வீரத்தின் அவசியம் இல்லாது போக, "பொருளீட்டும் திறன்" மட்டுமே ஆண்களின் திருமண அத்யாவசியமாகிறது.
கல்யாணமான புதிதில் அழகான மனைவியோடு ரோடுகளில் ஒய்யாரமாய் நடந்து திரிந்தது முரளியின் ஞாபகத்திற்கு வந்தது. தன் மனைவியை எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டுமென்றும், அந்தப் பார்வை மிகக் கண்ணியமான(?) பார்வையாக இருக்க வேண்டுமென்றும் - என்ற எதிர்பார்ப்பு எல்லா ஆண்களையும் போல் முரளிடம் இருந்தது. அழகு பதுமையாய் லலிதா உடன் வர, அந்த மொத்த அழகுக்கும் உரிமையாளன் நானாக்கும் - என்று சொல்லாமல் சொல்லும் உடல் மொழியில் பெருமிதத்தோடு வெளியில் வலம் வருவான் முரளி. லலிதாவும் அத்தனை அழகாக இருந்தாள். நீண்ட நெடிய கூந்தலோடு,சுண்டி இழுக்கும் கண்களோடு, விம்மி இழுக்கும் வனப்போடு, அன்றில் மலர்ந்த இதழ்களோடு, பால் கொதிக்கையில் படரும் பாலாடையின் வெண்மஞ்சள் வண்ணத்திலிருந்தாள் லலிதா. கல்யாணமான நாட்களில் பெரும்பாலான பெண்களும், சில ஆண்களும் வெளிப்படையாகவே முரளியிடம் லலிதாவின் அழகைப் புகழ்ந்தனர். அழகான மனைவி கிடைத்ததில் ஒருவித புளகாங்கித மயக்கத்தில் திளைத்திருந்தான் முரளி.
பெற்றோர் பார்த்து வைத்த திருமணமாதலால் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளவே சில மாதங்கள் பிடித்தது. கட்டவிழ்த்த முரளியின் அன்பில் கட்டுண்டுக் கிடந்தாள் லலிதா. மாநிறமாக இருந்தாலும், அன்பைக் கொட்டுவதில் அவன் உயரத்தைவிட உயர்ந்தவனாக இருந்தான் முரளி. படுக்கையறை பணியின் பரிசாய், அன்பிற்கு அடையாளமாய் ஹரிணியும் பிறந்திருந்தாள். சிசேரியன் செய்த நாள்தொட்டு கொஞ்சம் கொஞ்சமாக பருத்து விரிந்தாள் லலிதா. நாட்கள் மாதங்களை நெருக்கி தள்ள, வருடங்கள் உருண்டு கொண்டேயிருந்தது. அப்படியும், இப்படியாய் கல்யாணமான இந்த ஒன்பது வருடங்களில் முழுதாய் இருபத்தொருகிலோ கூடியிருந்தாள் லலிதா.
வாழ்க்கை எப்போதும் வசந்தத்தை மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்குமா? கால வெள்ளத்தின் இன்ப துன்பங்களில் உருண்டெழும்பினர் தம்பதியினர் இருவரும். அடித்தும், பிடித்தும், கொஞ்சியும், கெஞ்சியும் பொழுதுகள் கழிய, பெரிதான கவலையில்லாத நடுத்தர வர்க்கத்தின் சராசரி வாழ்க்கை. இருந்தும் தற்போது முரளியின் வாயிலிருந்து விழும் கிண்டல் தொனிகள் அவளுக்குள் சில கவலை அதிர்வுகளை உண்டாக்கத்தான் செய்கிறது. அழகு கொட்டிக்கிடந்தபோது ஆராதித்து விட்டு, கொஞ்சம் வற்றிக் குறைந்த போது ஏளனம் செய்தால் யாருக்குத்தான் பிடிக்கும். கணவனாய் துணைவனாய் உள்ளுக்குள் பாசமெல்லாம் இல்லாமலில்லை. பாசம்,நேசம், காதல் எல்லாம் உண்டு. ஆனால் தன் உடல் பருமனை குறிப்பிட்டு எப்போதும் ஒரு பரிகாசம். "நறுக்" கென்று உள்மனதை தைக்கும்படியான, "வெடுக்" கென்ற நெருஞ்சி முள் வார்த்தைகள்.
"இப்படியே வீட்டுக்குள்ளயே இருக்கத்துக்கு பதிலா, கொஞ்சம் ஊரைச் சுத்தி நடக்கப்பிடாதா... வர வர நம்ம கோவில் பூதத்தான் சிலை மாறி இருக்க"
"நல்ல இனிப்ப தின்னு.. அப்புறம் எப்டி.. உடம்பு குறையும்"
"இந்த மாரி மாடர்ன் டிரஸ் எல்லாம் நீ ஆசைப்படலாமா... உன் சைசுக்கு அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது."
"முருங்கைக்காய் ஒரு நாள் தர்பூசணியா மாறும்னு சொன்னா, யாரவது நம்புவாங்களா,..... ஆனா... நான் இப்ப கண்கூடா பாக்குறேன்."
"இப்படி மூணுநேரம் சோத்த திங்கிறதுக்கு பதிலா, ரெண்டு நேரம் கோதம்ப தின்னா என்னா....சவம்... வர வர பாக்க சக்கப்பழம் மாறி இருக்க"
-- என்பது மாதிரியான ஏளன சம்பாஷணைகள்.
ஆசையாய் ஏதாவது சாப்பிடும்போது, புதிதாய் நவீன ஆடையணியும் போது, ஆசுவாசமாய் சிறிது நேரம் ஓய்வெடுக்கும்போது "வெடுக் வெடுக்" கென்ற வார்த்தைகள். கேட்கும் லலிதாவுக்கோ வெப்ராளம் பட்டென்று பொட்டித் தெறிக்கும். சில நேரம் பதிலுரைப்பாள். பல நேரம் கண்ணீர் சொரிவாள். ஆவேசத்தில் உடம்பு குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவாள். உணவைக் குறைத்துப் பார்த்தாள். உடற்பயிற்சியைக் கூட்டிப்பார்த்தாள். ஆன முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தாள். மருத்துவர்கள் சோதித்துவிட்டு "உடல் வாகு" என்றனர். பெண்ணுடம்பு சிசேரியனுக்கு பிறகு அப்படித்தான் என்றனர். தண்ணீர் குடிக்கச் சொன்னார்கள். தலைகீழாக நிற்கச் சொன்னார்கள். எல்லாம் செய்து பார்த்தாள் லலிதா. ஆனால் பயனேதுமில்லை. நாளாக நாளாக எடை ஏறியதேயன்றி, இறங்கிய பாடில்லை.
.
போனால் போகட்டுமென்று சிலநேரங்களில் விட்டுவிடுவாள் லலிதா. பின்பு முரளியின் ஏதோ ஒரு கிண்டல் பேச்சின் வேகத்தில் மீண்டும் "உடற்பயிற்சிகளை" ஆரம்பிப்பாள். காலம் மட்டுமே கடந்து கொண்டிருந்தது, அவள் கட்டுடல் திரும்பிய பாடில்லை.
வீட்டைப் பூட்டிக்கொண்டு பஸ்டாண்டுக்குள் நடந்து கொண்டிருந்தனர் தம்பதியர் இருவரும். முரளி முன்புறம் நடக்க, புஸ்... புஸ்வென அவன் வழியை பின்பற்றி நடந்தாள் லலிதா. கல்யாணமான ஒன்பது ஆண்டுகளுக்கு தோதாக, நடந்து கொண்டிருக்கும் இருவரின் இடைவெளிகள் ஒன்பது அடிகளாக நீண்டிருந்தது. இதே தெருவில் காற்றுக்கூட, புக முடியா இடைவெளியில் அவன் கரம்பிடித்து நடந்த காலங்கள் அவள் நினைவுக்கு வந்தது. இதே பட்டாடையோடு அவன் கரம் பிணைத்து நெருப்பை சுற்றிவந்த கல்யாண பொழுதுகள் நினைவுக்கு வந்தது. லலிதா பின்னால் வருகிறாளா? இல்லையா? என்பதை அவன் கவனித்த மாதிரியே தெரியவில்லை. பஸ்ஸை பிடிக்கும் யோசனையில், ஒல்லி உடம்போடு விறுவிறுவென நடந்து கொண்டிருந்தான் முரளி.
நாகர்கோயில் பெருமாள் கல்யாண மண்டபத்தில் "கடுகு" போட இடமில்லாத கூட்டம். பொருளாதாரம் பெருத்த இருபெரும் கைகள் இணையும் திருமண நிகழ்வு.
கூட்டவியல், பொரியல், உப்புலோடு, இஞ்சி கிச்சடி, உள்ளி பச்சடி, எலுச்சேரி, மசாலா கூட்டென பதினோரு வகை தொடு கறிகள், பருப்பு, சாம்பார், ரசம், புளிச்சேரி, மோர்க்குழம்பு உட்பட ஆறுவகை குழம்பு வகைகள். நெய்ச்சோறு, பிரியாணி உட்பட மூணு வகை சாதங்கள், பால், அடை, பருப்பு, சக்கப்பழம் உட்பட நான்கு பாயாசங்கள், செந்துளுவன், ரசக்கதலி, துளுவன் உட்பட மூன்று வகை பழம், அது போக நாலைந்து ஐஸ் கிரீம்கள், ரெண்டு மூன்று பழச்சாறுகள்.
கழுத்து வரைச் சாப்பிட்டு வெளியே வந்திருந்தான் முரளி. மூச்சு முட்டிக்கொண்டு ஒரு மாதிரி வந்தது. கைகழுவிவிட்டு இடுப்பு பெல்ட்டை சற்று அவிழ்த்து விட்டான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. தூக்கம் மேலிட கண்கள் சொருகுவது போலிருந்தது. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா. வீட்டுக்கு போகும் முடிவில் லலிதாவைத் தேடினான். போன பந்தியில் சாப்பிட்டு முடித்த லலிதா பெண்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
மீண்டும் அதே ஒன்பது மீட்டர் இடைவெளியில், இருவரும் சேர்ந்து பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து கொண்டிருக்கும் போதுதான் சுப்பையா பிள்ளை ஆசிரியர் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். எப்படியும் ஒரு எழுபது வயதிருக்கும். முரளியின் பத்தாம் வகுப்பு ஆசிரியர். முரளியின் அப்பாவின் நண்பரும் கூட. நடையிலும் பார்வையிலும் முதுமையின் அடையாளங்கள். சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான் பேச ஆரம்பித்தான் முரளி.
"சார்... நல்லா இருக்கீங்களா? நான் முரளி... போஸ்ட் மேன் ரங்கசாமி பையன். உங்கள்ட பத்தாப்பு படிச்சேன்லா..."
தடித்த கண்ணாடி பிரேமை மெதுவாக அசைத்து முரளியின் முகத்தைப் பார்த்தார் சுப்பையா பிள்ளை. கூடவே சிநேக புன்னகையோடு நின்றிருந்த லலிதாவையும். வயதான மூளை சற்று நேரமெடுத்து அடையாளம் கண்டு கொண்டது. முதிர்ந்த முகமெங்கும் சிரிப்பை காட்டினார் சுப்பையா பிள்ளை.
"ஏ... முரளி... எப்படி இருக்கடே... உங்கப்பன் ரங்கசாமி நம்ம தோஸ்த்தில்லா..."
"ஆமா..சார்... நல்லா இருக்கேன்... நீங்க எப்படியிருக்கீங்க?"
"நான்... இன்னா பார்த்தேல்லா... வாக்கிங் போயிட்டு, நல்லா இருக்கேன்... நீதான் கிழவன் ஆயிட்டேயேடே... இது யாரு உன் பொஞ்சாதியா..."
"கிழவன்" என்ற வார்த்தையை கேட்டதும், "கிழட்டுக்கு கொழுப்பை பாருன்னு" - மனதிற்குள் நினைத்துக் கொண்டான் முரளி. இருந்தும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் பள்ளி ஆசிரியருக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
"ஆமா... சார்... பேரு லலிதா..." - என்று முரளி கூற, இருகைக் கூப்பினாள் லலிதா.
சுப்பையா பிள்ளை ஆசிரியர் அவளைப் பார்த்து புன்னகைத்து, நல்லா இரும்மோன்னு வாழ்த்தி, பின்னர் வேலை, குழந்தைகளை பற்றி விசாரித்து விட்டு மீண்டும் முரளியிடம் பேச்சைத் தொடர்ந்தார்.
"அவா... சின்ன பிள்ளையாட்டுதான இருக்கா... நீதான் கிழவனாயிட்ட... - என்று சொல்லி சிரித்து, "என்னடே உனக்கு சுகர் இருக்கோன்னு?" - கேள்வியும் வைத்தார்.
முரளி கோபம் கொப்பளித்தாலும் வெளியே காட்டிக்கொள்ள வில்லை.
"சுகர்லாம் இல்ல சார்... " - சகஜமாக பதிலுரைத்தான் முரளி.
நல்ல சாப்பிட்ட முரளியின் வயிற்றை பார்த்துக்கொண்டே, அடுத்த கேள்வியை வைத்தார் சுப்பையா பிள்ளை ஆசிரியர்.
"அப்ப பிரஷர் இருக்கும்டே... இப்ப... இந்த ரெண்டும் இல்லாம யாரு இருக்கா? - பொக்கை வாய் விரித்து காமெடியடித்து சிரித்தார் சுப்பையா பிள்ளை.
வெட்கத்தில் முரளி சிறிதாக நெளிய, லலிதாவிற்கு சிரிப்பு "பொத்துக்" கொண்டு வந்தது.
பேசாம எதிர்த்த கால்வாயில் "பெருச", தள்ளிவிடலாமா என்ற யோசனையிலிருந்தான் முரளி.
சுப்பையா பிள்ளை ஆசிரியர் லலிதாவிடம் திரும்பி, "பெரிய அசத்தாக்கும் உம்...மாப்பிள்ளை... படிப்பு சுட்டு போட்டாலும் வராது... எப்படியோ கரையேறி, இன்னைக்கு அரசாங்க உத்தியோகமும் பாக்கான்... கொஞ்சம் நல்ல பாத்துக்கம்மோ... ஆளு நல்ல உடஞ்சில்லா இருக்கான்... ஏதாவது டாட்டர்ட காட்டப்பிடாதா... இல்லன்னா நாட்டுக்கோழி முட்ட வாங்கி கொடு... - என்று பேசிக்கொண்டே இருந்தார்.
முரளி "புளித்த சிரிப்போடு" வெட்க அவஸ்தையிலிருந்தான். லலிதாவிற்கு ரோடென்றும் பாராமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும்போல இருந்தது. அடக்கிக் கொண்டாள்.
"சரி சார்... நாங்க போயிட்டு வாரோம்" - ன்னு சொல்லி, முரளி பேச்சை துண்டிக்க, "சரிப்போ... பார்த்து போ-ன்னு முரளிடம் கூறிவிட்டு, "எம்மொ... அவன பார்த்து கூட்டிட்டு போமோ-ன்னு லலிதாவிடமும் கோரிக்கை வைத்தார்.
"பன்னக் கிழவன், இவனப்... பார்த்து பேசினதே தப்பு..."- என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் முரளி. லலிதாவும் விடைபெற்று, முரளியைப் பின்தொடர்ந்தாள்.
"வேணும்னா... நாட்டுக்கோழி முட்டை வாங்கிட்டு போவோமான்னு"- சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டாள் லலிதா.
பதிலேதும் கூறாது பஸ்ஸ்டாண்டை நோக்கி, புசு புசு- வென நடந்து கொண்டிருந்தான் முரளி. ஆனால் அவர்களுக்கிடையான இடைவெளி மட்டும், ஏனோ இரண்டடியாகக் குறைந்திருந்தது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

சாமு

இப்படி ஒரு இக்கட்டான நிலையை சாமு வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை. உடம்பெங்கும் கசக்கி பிழிகின்ற காயத்தின் வலிகள். வலி நிவாரணி ஊசி போட்ட இரண்டு மூன்று மணிநேரத்திற்கு உணர்வில்லாமலிருக்கும். நேரம் செல்ல சிறுமூளையை துரத்தி பிடிக்கும் வலியென்ற கருநாகத்தின் நாவுகள். அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியோடு எதிர்கொண்ட வாழ்க்கையை, பற்றியெரியும் சோகத்தோடு கடந்திட யாருக்குத்தான் பிடிக்கும். நடந்த விபத்தில் உண்டான நெற்றிக்காயம் இரண்டு கண்களின் பார்வையையும் பாதித்திருக்க வேண்டும். காணுகின்ற காட்சிகள் எல்லாம், மேகத்தில் கரைந்த உருவங்களாய் "புகை மூட்டமாய்" இருந்தது. "கண்ணுக்கு மருந்து ஊத்துக்கோம்லாம்மா...நாலு நாளுல சரியாகிடும்னு" - நர்ஸு சொன்ன வார்த்தை, தெய்வ அசிரிரீயாய் காதுகளை நனைத்து நெஞ்சுக்குள் இனித்தது.
விழுந்த வேகத்தில் இடது பிஷ்டத்தில் பட்ட அடியின் வலி மட்டும் "விடுவேனா" என்பது போல், முதுகு தண்டு வரை எந்நேரமும் தொடர்ந்தது. காரின் பின் இருக்கையில் இருந்தபடி கண்ட விபத்தின் "கொடூரக்காட்சி" திரும்ப திரும்ப அடிமனத்திற்குள் தோன்றி மறைந்தது. கட்டிய கணவனும், பெற்ற மகளும் உடல் நசுங்கி இறந்த காட்சியின் "வலி" மனப்பரப்பை விட்டு போக மறுத்தது. கொடூரம்..!அப்பப்பா... கொடுமையின் உச்சம்... ரெத்த வெள்ளத்தில் இடுப்பு துண்டித்த நிலையில் கடைசியாக அவள் கணவன் அவளை பார்த்த பார்வை, உடல் நசுங்கி, காதுகளில் மூக்கினில் ரத்தம் வடிய தன்னை நோக்கி விரல் நீட்டிய மகளின் காட்சிகள் மாறி, மாறி அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது. வெடித்து அழுதால் சோகம் தீர்ந்து விடுமென்கிறார்கள். அழுதவுடன் தீர்கின்ற துயரமா அது. இருந்தும் அழுதழுது, கண்ணீர் வழி துயரம் கரைக்க முயன்று கொண்டிருந்தாள் சாமு. துடித்து வெடித்து அழுது கண்ணீர் வற்றி, வெதும்பி உறங்குகிறாளா அல்லது களைத்து மயங்குகிறாளா என்பது சாமுவுக்கே குழப்பமாக இருந்தது. சோகத்தின் மூர்க்கத்தில் நினைவறியாது உறங்கவோ, மயங்கவோ செய்து விடுகிறாள் சாமு.
சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி - என்று மருத்துவரோ, நர்ஸோ, கூப்பிடும்போது மீண்டும் தூக்கம் கலைந்து நினைவு திரும்பும். சுயநினைவு திரும்பிய அடுத்த கணத்தில் மீண்டும் உடம்பெங்கும் வலியின் துயரம். மருந்தின் துணையில், அதை நிறுத்தும் வேளையில் உற்றவர்களை இழந்த ஆழ்மனதின் துயரம் பாடாய் படுத்தும்.
மனித வாழ்வில் சாவை நினைத்த பயம் எல்லோருக்கும் உண்டு. அந்த சாவு தண்ணீரில் கரையும் உப்பென, பட்டென்று நிகழ்ந்தால் வரமாகும். அது விடுத்து சாவின் விளிம்பில் நின்று கொண்டு, மருத்துவர் கரம் பற்றி வாழ்வை நோக்கி திரும்பும் கணங்கள் மிக மிக வேதனையானது. உற்றவர்களை இழந்த துயரமும், சிகிட்சையோடு கழியும் "மருத்துவமனையின் நாட்களும்" மரணத்தை விட கொடியதாக இருந்தது சாமுவுக்கு.
ஐ சி யூ விலிருந்து எட்டு நாட்களுக்குப் பிறகுதான் உள்நோயாளிகள் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள் சாமு. நாற்பத்தெட்டு வயது முதிர்பெண் இப்போது இரண்டு வயது குழந்தையை போல் மருத்துவமனை வராந்தாவில் நடைபயிலுகிறாள். உற்றவர்கள் யாருமில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்போது பொங்கி வந்தாலும், பிழைத்த வாழ்வை, வாழும் ஆசை எந்த உயிருக்குத்தான் இல்லை. தாங்கமுடியா துயரமானது, கடந்துபோன சோகங்களாக நெஞ்சுக்குள் புதைய, தன் முன் விரிந்திருக்கும் வாழ்க்கையை வாழ முடிவெடுத்தாள் சாமு. ஆருயிர் கணவன் சாரங்கபாணி அவளுடனேயே இருப்பதாக தோன்றியது. சில இரவுகளில் அவர் குரலும் அப்பட்டமாக காதுகளுக்குள் ஒலித்தது.
அவ்வளவு பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தினர் இருவரும். இந்தியன் வங்கியில் ஒன்றாக வேலைபார்க்கும் போது, காதலாகி அது கல்யாணத்தில் முடிந்தது. வீட்டிற்கு ஒற்றை பிள்ளையான இருவருக்கும் கல்யாணத்தின் போது உடனிருந்தது சுற்றம் சூழ் நண்பர்கள் மட்டுமே. சாமுவிற்கு அப்பா இல்லை. சாரங்கபாணிக்கு அம்மா இல்லை. சேர்த்து வைத்த அன்புப் பாளங்களை தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொண்டனர் ஜோடிகள் இருவரும். ஒற்றை மகளாய் பவித்ரா பிறந்த போது, அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. சிப்பிக்குள் அடைபட்ட முத்தாய், பெற்ற மகளை அன்பால் அடைகாத்து வளர்த்தனர். இருபத்திநான்கு வருட குடும்ப வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்ததெல்லாம் ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோசம் இவை மட்டுமே. சுற்றும் நாற்காலியாய் நாட்கள் நகர்ந்து, வருடங்களை உருட்டி தள்ள, பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் பேரழகோடு, பதினெட்டு வயது பருவமங்கையானாள் பவித்ரா. சாரங்கபாணி தோற்றத்தில் அண்ணனாக இருந்து, மாமாவாகி, தாத்தா என்ற முதிர்பதத்திற்குள் தாவியிருந்தார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாலோ என்னவோ சாமு மட்டும் மாறாத இளைமையோடு இருந்தாள். சாமுவையும், பவித்ராவையும் வெளியே பார்ப்பவர்கள் அம்மா, மகளென்று சொல்வதில்லை. உடை, உருவமைப்பு, பேச்சு முதற்கொண்டு எல்லாவுமே அவர்களை அக்கா தங்கையாகவே காட்டியது.
சொந்த பந்தங்களுக்காக ஏங்கிய நிலையில் மகளையாவது பெருங் கூட்டுக்குடும்பத்தில் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தனர் பெற்றோர்கள் இருவரும். அதற்கு எதிரியாய் பவித்ராவின் வாழ்க்கையில் வந்தான் மோகன். அசப்பில் நடிகர் மோகனைப்போலவே இருக்கும் அவனுக்கும், பவித்ராவிற்கும் காதல் பூத்தது கல்லூரியில். அழகான, அன்பான இருபத்தெட்டு வயது வாலிபன். பன்னாட்டு நிறுவனத்தில் சிவில் எஞ்சினீராக நிறைவான வேலை. ஆசை மகளின் உண்மையான காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பேதும் சொல்ல வில்லை. ஆனால் மோகனும் அம்மா, அப்பா இல்லாத அனாதை என்ற போது, அவர்களுக்குள் ஒரு உறுத்தல். மீண்டுமொரு ஏமாற்றம். இருந்தும் மகளின் ஆசையை பூர்த்தி செய்து மோகனை தங்கள் மகனாகவே ஏற்றுக் கொண்டனர். நண்பர்கள் புடைசூழ திருமணத்தை நடத்திக் கொடுத்தனர்.
வாழ்வு இத்தனை இனிமையானதா என வாழ்ந்து களித்தனர் நால்வரும். எல்லோரும் வேலைக்கு செல்வதால், வாரவிடுமுறை நாட்களையெல்லாம் அணுஅணுவாக ரசித்து கழித்தனர். மோகன், பவித்ராவின் பெற்றோரை அம்மா, அப்பாவெனவே அழைத்தான். பாவம் அனாதையல்லவா. அவர்களின் உண்மையான அன்பு அவனை பலநேரங்களில் உணர்ச்சிவசப்படச் செய்தது. உன்னை விட உன் பெற்றோரே எனக்கு முக்கியமென பவித்ராவிடமே கூறினான். அவளும் மனதிற்குள் மகிழ்ந்து "அப்ப.. நான் உனக்கு முக்கியமில்லையாவென" செல்ல கோபம் காட்டினாள்.
ஒருநாள் காலையில் சாரங்கபாணி மோகனை அழைத்து ஒரு பார்சலை கொடுத்தார்.
"இது என்னதுப்பா..." - ஆச்சர்யத்தோடு மோகன் கேட்டார்.
"பிரிச்சு பாருப்பா"-என்றார்.
அவன் ஆர்வத்தோடு பிரிக்கும் அந்த நிமிடத்தில் சாமுவும், பவித்ராவும் உடன் சேர்ந்து கொண்டனர். இருவர் முகத்திலும் மந்தகாசப் புன்னகையும், பெருமிதமும்.
பார்சலுக்குள் புதிதாக பதிந்த பத்திரக் கட்டு ஒன்றிருந்தது.
வாழ்நாளின் மொத்த சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை மோகன் பேருக்கு எழுதி வைத்திருந்தனர் சாமுவும், சாரங்கபாணியும்.
உணர்ச்சி உச்சத்தில் ஏறத்தாழ அழும் நிலையிலிருந்தான் மோகன்.
"அப்பா... உங்க சுவீகார புத்திரன் இப்ப அழப்போறாங்க ... அழுதாச்சு... அன்னா... கண்ணீர் வந்தாச்சு..." என சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தாள் பவித்ரா.
உணர்ச்சி போராட்டத்தின் உச்சத்திலிருந்த மோகன், சட்டென்று சாரங்கபாணியின் தோளில் சாய்ந்து கட்டிப்பிடித்து விசும்பினான்.
"இதுல்லாம் எதுக்குப்பா" - என விம்மினான்.
சாமுவும் சாரங்கபாணியும் மோகனை சமாதானப் படுத்த, பவித்ரா அவன் மேல் சாய்ந்து கொண்டு
"இது பொய் அழுகை தானேவென" கிண்டலடித்தாள்.
"இனி எங்களுக்கு எல்லாமே நீதானப்பா.." என சாமு சமாதானம் சொன்னாள். ஆழ்மனதின் ஆழத்திலிருந்து மோகன் சொன்னான்.
"நான் ரெம்ப லக்கிப்பா. என்னை பெத்தவங்க கூட ஏன் மேல இவ்வளவு அன்பா இருந்திருப்பாங்களான்னு சந்தேகம்" - என்று உணர்வு மிகுந்து பேசினான் மோகன்.
சந்தோச உணர்ச்சி பிரவாகங்களில் நான்கு மனதுகளும் ஒன்றோடொன்று மோதி அன்பை தங்களுக்குள்
வாரியிறைத்துக் கொண்டன.
அப்படியொரு சிறப்பான வாழ்வில் இப்படி ஒரு பேராபத்து வருமென யாருமே எதிர்பார்க்க வில்லை. அந்த சனிக்கிழமை மட்டும் விடியாமல் இருந்திருந்தால். அப்பாவும் மகளும் வற்புறுத்தி அந்த சினிமாவிற்கு தன்னை அழைக்காமல் இருந்திருந்தால், நான்தான் கார் ஒட்டுவேனென பவித்ரா சொல்லாமல் இருந்திருந்தால், வேலை இருப்பதால் வர முடியவில்லையென மோகன் சொல்லாமல் இருந்திருந்தால், எதிரே அந்த டிம்பர் லாரி வராமல் இருந்திருந்தால், சட்டென்று உள்புகுந்த நாயை பவித்ரா கவனிக்காமல் இருந்திருந்தால், அந்த விபத்து நிகழ்ந்திருக்காது. ஆமாம். இதில் ஏதேனும் ஓன்று நிகழ்த்திருந்தாலும் அந்த கொடூர விபத்து நிகழ்ந்திருக்காது. நம் இஷ்டத்திற்கு தகுந்தவாறு கணக்கை நாமிட்டுக் கொள்ளலாம். ஆனால் இறைவன் அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே. கோர விபத்தில் செத்து பிழைக்கும் கணக்கை சாமுவிற்கும், அற்பாயுளில் சாகும் கணக்கை பவித்ராவிற்கும், சாரங்கபாணிக்கும் விதித்திருந்தான் இறைவன்.
பத்து நாட்கள் தாடியோடு படிக்கட்டில் ஏறி வந்து கொண்டிருந்தான் மோகன். அள்ளி சாப்பிட நினைத்த சந்தோச சாப்பாடு, சாப்பிடும் போதே கைநழுவி சிந்தியது போலிருந்தது அவன் மனநிலை. யாருமில்லாத தனக்கு பவித்ராவே எல்லாவுமென நினைத்தான். காதலும் காமமும் எல்லாரும்தான் செய்கிறார்கள். ஆனால் யாருமே இல்லாத ஒருவருடைய தனிமையை போக்கவரும் மற்றோருவர் கடவுளுக்கு நிகரானவர். மோகனின் வாழ்வில் கடவுளாக வந்தவள் பவித்ரா. அவனுக்கென தன் குடும்பத்தை ஈந்த கடவுள். காதலியாய், மனைவியாய், தோழியாய் எல்லாவுமாய் இருந்த கடவுள் பவித்ரா. இனி எல்லாம் சுகமே - என்றிருந்த வாழ்க்கை இன்று கருங்கல் பட்ட கண்ணாடிக் குடுவையாய் சிதறிக் கிடக்கிறது. மூவருக்கும் நடந்த விபத்தை அறிந்து துடிதுடித்து போனான். உயிரற்று கிடந்த மனைவி, மாமனாரின் உடல்களை அடக்கம் செய்த தினங்கள், மூன்று நாட்களுக்கு பிறகு குற்றுயிராய் கிடந்த அத்தையிடம் அதை தெரிவித்த பொழுதுகள் - என கடந்து போக முடியா பொழுதுகளை கடந்து நிற்கிறான் மோகன். இந்த வாழ்விருக்கிறதே ஏதோ ஒரு பொழுதில் எல்லாவற்றையும் நகர்த்தி, கடத்தி விடுகிறது. வாழ்க்கையின் சக்தி அதுவே. "வாழ முடிந்த வரை வாழ்ந்து விடு" என்பதே ஒரு உயிரின் பெருந்தேவையாக இருக்கிறது. மொத்த கவலையையும் கடந்து வாழத் தொடங்கியிருந்தான் மோகன்.
மருத்துவமனை அறைக்குள் ஏ சி ஓடும் சப்தம் மெதுவாக கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மருந்தின் நெடி காற்றை ஆக்கிரமித்திருந்தது. கையிலிருந்த பழக்கூடையை ஆஸ்பத்திரி கப்போர்டில் வைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான் மோகன்.
"இப்ப எப்படி இருக்கும்மா"
"பரவாயில்லப்பா..." - சொல்லும் போதே சாமுவிற்கு அழுகை வந்தது. மோகனும் உணர்ச்சியை அடக்கி ஆதங்கப்பட்டான்.
"அம்மா.. இதுக்குதான் நான் உங்க பார்வையிலே படாம இருக்கேன். நடந்தது நடந்து போச்சு... உங்களுக்கு நான் இருக்கேன்.. கவலை பாடாதீங்கம்மா..." - என்றான்.
சாமு அழுகையை அடக்கி கொண்டாள்.
"பிளீஸ் மா... நீங்க இப்ப ரெம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாது... டாக்டர் ரெம்ப ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க.. பிளீஸ்..."
சாமு ஒரு பெருமூச்சு விட்டு, மொத்த அழுகையையும் நிறுத்த முயற்சித்தாள்.
"இப்ப வலி எப்படி இருக்கு?"
"பரவாயில்லை... மெடிசின்லாம் சாப்பிட்டிட்டு நாக்குதான் கசப்பவே இருக்கு..."- தொண்டை கமர பேசினாள்.
"இன்னையிலிருந்து ஜூஸ் குடிக்கலாம்னு சொல்லியிருக்காங்க... அதான் வாங்கிட்டு வந்திருக்கேன். இன்னும் ஒருவாரம் கழிச்சுதான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம்.. உங்கள பக்கத்துல இருந்து பாக்கிறதுக்கு எங்க ஆபீஸ் பியூனோட வொய்ப்ட சொல்லியிருக்கேன்... அவங்க பேரு மேரி... இன்னைக்கு வந்திருவாங்க... நான் நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்... எதுக்கும் கவலை படாதீங்கம்மா.. உங்களுக்கு நான் இருக்கேன்..." - உறுதிபடப் பேசினான் மோகன்.
மோகனின் நம்பிக்கை வார்த்தைகள், மீதியிருக்கும் வாழ்நாளின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த
சாமுவின் கண்களுக்குள் ஒரு புத்துயிர்ப்பு பிறந்தது.
காலம் எல்லா காயங்களுக்கும் ஏதாவது ஒரு மருந்திட்டு குணப்படுத்தி விடுகிறது. மோகன் அடுத்து வந்த மூன்று மாதத்தில் ஓரளவிற்கு சகஜமாயிருந்தான். தன் வேலையின் பளுவில் முற்றிலும் மூழ்கியிருக்க, கூடவே அத்தையாகிய அம்மா சாமுவையும், வேலைக்காரி மேரியின் துணையோடு நன்றாக கவனித்துக் கொண்டான். சாமுவும் மனதை தேற்றிக் கொண்டிருந்தாள். உடம்பு சரியாகிய நிலையில் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள் சாமு. சேர்ந்த மறுமாதத்தில் அவள் பலவருடங்களாய் எதிர்பார்த்த பணி உயர்வு பம்பாய் கிளையில் கிடைத்தது. உடல் நலத்தையும் மனநிலையையும் கருத்தில் கொண்டு வேண்டாமென மறுத்து விட்டாள் சாமு. பெரிதாக மகிழ்ந்து கொண்டாடாவிட்டாலும், வாழ்க்கை இருவருக்கும் மீண்டும் வசப்பட ஆரம்பித்திருந்தது.
இதற்கெல்லாம் மாறாக அவர்கள் எதிர்பாராத வேறொரு பேச்சு ஊருக்குள் உலவ ஆரம்பித்தது. அத்தையும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதை வைத்து, சமூக சீர்கெட்ட சிந்தனையாளர்கள் தங்கள் கதைகளை எழுத ஆரம்பித்தனர். எலும்பில்லாத நாக்கினை கொண்டு, வரம்பில்லா வார்த்தைகளை தரம் கெட்டுப் பேசத் தொடங்கினர்.
"ஐம்பது வயசிலையும் ஆளு எப்படி இருக்கா... அதான் பையன் மடிஞ்சிட்டான்"
"அதெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டே... கோழியையும் தின்னு... அதுக்கு குஞ்சையும் திங்கத்துக்கு..."
"என்னதான் தாயா.. பிள்ளையா... பழகினாலும், உடம்புக்கு அதெல்லாம் தெரியுமா?.."
"மேரிட்ட கேட்டா தெரியும்... ரெண்டு பேரும் அடிக்கக் கூடிய கூத்து..."
"முன்னாடியே இருந்திருக்கும்... இப்ப லெக்காலிகளுக்கு ரெம்ப வசதியா போச்சு..."
அமிலம் தோய்த்த வார்த்தைகளை ஊரார்கள் அள்ளி வீசினர். சில வார்த்தைகளை நேரடியாக பேசிவிட்டு, இன்ன பலவற்றை, பார்க்கும் கண்களின் கற்பனைக்கு விட்டு விடுவதை ஊராருக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும். களங்கமில்லா அன்பர்களுக்கிடையே காமம் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். கட்டிப் பிடித்ததாய் பேசிக் கொண்டனர். கட்டிலில் கிடந்ததாய் பேசிக் கொண்டனர். அவர்கள் ஒன்றாக கடந்து செல்லும்போது, தங்களுக்குள் கண்ணடித்து சிரித்துக் கொண்டனர்.
ஊராரின் பேச்சு உலையாக கொதிப்பதை, இருவரும் இலைமறை காயாக அறிந்தனர். அதுவரை பிழையில்லா அவர்கள் உறவில் ஏதோ ஒரு நெருடல். இருவருக்கும் இடையே இருந்த பேச்சு படிப்படியாக குறைந்தது. ஒருவர் முகம் பார்த்து மற்றவர் பேச ஒரு தயக்கம். வேலை பளுவை காரணம் காட்டி வீட்டிற்கு தாமதமாக வர ஆரம்பித்தான் மோகன். நேரம் விடிவதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்ப ஆரம்பித்தான். அம்மாவென்று அவன் அழைக்கும் ஓசை காதுகளில் விழுந்து இரண்டு மூன்று மாதமிருக்கும்.
சோகம் கலந்த தவிப்பில் வெகுண்டுருகினாள் சாமு. என்னவாயிற்று தனக்கு... மோகன் பேசாமல் இருந்தால் என்ன? மகன் தானே.. சரியாகச் சொன்னால் மருமகன் தானே... அவன் என்னோடு ஏன் பேச வேண்டும்... அம்மாவென்று ஏன் அழைக்க வேண்டும்... அவனை தவிர இப்போது எனக்கென்று யார் இருக்கிறார்கள்... என்னமாதிரியான மனநிலையிது... ஒரு வேளை ஊரார் சொல்வதைப்போல், உனக்கே தெரியாமல் அவன் மீது... சீ... அவன் என் மகன்... வயோதிகம் தழுவும் வேளையில் வேறென்ன வேண்டும்... அயரும்போதெல்லாம் சில நம்பிக்கை வார்த்தைகள்... தளரும் போதெல்லாம் சில ஆறுதல் செய்திகள்... வேறென்ன வேண்டும் இந்த வயதில்... அவனுக்கு வேறு கல்யாணம் பண்ணிவிட்டால் குழப்பம் தீருமே... செய்யலாம், ஆனால் வருபவள் இந்த அம்மா மகன் உறவை மதிப்பாளா... சுற்றியிருக்கும் உலகம்தான் அதை அனுமதிக்குமா... தற்போது பேசாமலிருக்கும் அவன், புது மனைவியோடு வேறு வீட்டிற்கு சென்று விட்டால்... மீண்டும் துரத்திவரும் தனிமையின் கொடுமையை நினைக்கையில்... அய்யோ... முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமை... உனக்கென்று சொந்த வீடு கூட இல்லையே... - மனப்போராட்டத்தில் நெஞ்சுக்குள் பல குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்படியான மனப்போராட்டத்தில் வாழ முடியாது. வாழவும் கூடாது. எல்லாவற்றிற்கும் வரும் சனிக்கிழமை உறுதியாக ஒரு முடிவு எடுத்துவிட தீர்மானித்தாள் சாமு.
அந்த சனிக்கிழமையின் இரவில் கையில் ஒரு பார்சலோடு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சாமுவின் முன் நின்றான் மோகன். வழக்கத்துக்கு மாறாக அவனே முன் வந்து நின்றது சாமுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை நம்மை போல் அவனும் ஏதோ ஒரு முடிவோடு வந்திருப்பானோவென பலவாறு எண்ணிக் கொண்டிருக்கையில் மோகன் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தான்.
"ரெம்ப சாரி அத்தை..." சாமுவை முதன் முதலாய் அத்தை என்றழைத்தான்.
அவன் சொன்ன அந்த அத்தை அவளுக்கு அசாதாரண வார்த்தையாகப் பட்டது. அவளும் கோப மிகுதியில் "சொல்லுங்க மருமகனே" என்றாள். பார்சலை பிரித்துக் கொண்டே தயங்கி தயங்கி பேசினான் மோகன்.
"இதுல அப்பாவோட, அவளோட இன்சூரன்ஸ் அமௌண்ட் அப்ரூவ் ஆன செக் இருக்கு... இந்த வீட்டை உங்க பேர்ல மாத்தி எழுதுன பாத்திரமும் இருக்கு..." - சாமுவின் கையில் கொடுத்தான்.
"சோ... எல்லாம் முடிச்சுது... நான் கிளம்புறேன்னு சொல்ற..." - சிறிதான அதட்டலுடனே கேட்டாள் சாமு.

அவள் பேச்சின் கோபத்தை உணர்ந்து கொண்டவனாய், "அம்மா பிளீஸ் நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க... இந்த ஊரு நம்மள பத்தி பேசுறது போதாதா?" - என்றும் கெஞ்சும் குரலில் பேசினான் மோகன்.
"ஊரு என்ன பேசுது... சொல்லு மோகன்..."
"ஏம்மா... என்ன அழ வைக்கிறீங்க..."

"இதுல அழறதுக்கு என்ன இருக்கு... ஊரு ஏதாவது சொன்னா... ஆமா... எங்க அத்தையை நான் வச்சிருக்கேன்னு நீ சொல்ல வேண்டியதுதானே... அத விட்டிட்டு நீ ஏன் ஏன்ட பேசாம இருக்க..." - தெளிவான குரலில் உறுதியாகப் பேசினாள் சாமுண்டீஸ்வரி.
மோகன் கண் கலங்கி இருந்தான்.
"காருக்குள்ள மொத்த குடும்பமா நாங்க உயிருக்கு போராடிட்டு இருந்தப்ப... சுற்றி நின்னு வீடியோ எடுத்த கூட்டம்ப்பா இந்த ஊரு... அவங்க பேசுறத வச்சு... என்னைய நீ பிரிஞ்சு போக நினைக்குற..." - பொட்டிக் கரைந்தாள் சாமு. எங்கிருந்துதான் வந்ததோ அவ்வளவு கண்ணீர்.
"மோகன்... உனக்கெப்படியோ... எனக்கு நீதான் மகன்... உனக்கு கொடுத்த வீடு, இந்த பணம் எல்லாம் உனக்குத்தான்... நான் இன்னைக்கே பம்பாய் கிளம்புறேன்... அங்க எனக்கு டிரான்ஸ்வர் கன்பார்ம் ஆயிடுச்சு... நீ என்னைய விட்டிட்டு போறத என்னால தாங்க முடியல... அதுனால நானே உன்ன விட்டிட்டு போறேன்... நல்ல ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு..." - கையிலிருந்த பார்சலை மீண்டும் மோகனின் கையில் திணித்து விட்டு, வீட்டுக்குள் சென்று ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பெட்டிப் படுக்கைகளுடன் வெளியே வந்தாள்.
"என் புருஷனையும், பொண்ணையும் தூக்கி போட்ட மாதிரி, நான் செத்தா... என்னையும் தூக்கி போட்டிடு... என் மகனா அத மட்டும்தான் நான் உன்ட கேக்குறதுன்னு" - சாமு கண்ணீர் நிரம்ப கூறித் திரும்புவதற்கும், அவள் புக் செய்த ஓலா டாக்ஸி வருவதற்கும் சரியாகயிருந்தது.

வியாழன், 14 மார்ச், 2019

கோழி

எப்போதிருந்து மகேசுக்கு அந்த வட்டப்பெயர் வந்ததென்று அவனுக்கு சரியாக நினைவிலில்லை. சிறுவயதில் ஏதோ ஒரு விளையாட்டின் போது நண்பர்கள் கூப்பிட ஆரம்பித்ததாய் ஞாபகம். செங்கோட்டை (கிட்டி புல்) விளையாட்டில் இவன் செய்த சிறு கள்ளத்தனத்திற்காக முதன் முதலாய் அந்த பெயரைச் சொல்லி நண்பர்கள் அழைத்ததாய் ஒரு நினைவு உள்ளது. "லேய் கோழி மகேசு... வசமா ஏமாத்த பாக்கையா? சாக்குட்டான்.. சத்தியாம்பிரை... மும்முட்டி..னு அடுக்கிட்டே போற... எங்களுக்கும் விளையாட்டு தெரியும்டே... கள்ளக்கோழி.." என்று முதன் முதலாய் "கோழி" என்ற அடைமொழியோடு அவன் பெயரை உச்சரித்தது இசக்கிமுத்துதான்.
சிறந்த ஆட்சியாளர் என்ற பொருளுடைய மகேஸ்வரன் என்ற அவனுடைய சான்றிதழ் பெயர் தற்போது வழக்கொழிந்து, சாதாரணநிலையில் மகேஷ் என்றும், கிண்டல் தொனியில் "கோழிமகேஷ்" என்றும், ஊரின் இன்னபிற நகைச்சுவை பேச்சு அத்யாவசியங்களுக்கு "மத்தவன்.. கோழியை எங்க?" என்றும் பரிகாசம் தெறிக்கும் தொனியோடும் பயன்படுத்தப்படுகிறது. ஊரின் வடகிழக்கிலிருந்த மஹேஸ்வரர் சந்நிதியால், ஊருக்குள் ஒவ்வொரு தலைமுறைக்கும் மகேஷ் என்ற பெயர் ஏழெட்டு பேருக்காவது இருக்கும். எனவே ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்த ஏதோ ஒரு அடைமொழி தேவை பட்டது. கம்பு மகேஷ், கரண்டி மகேஷ், கத்திரிக்கா மகேஷ், மாங்கா மகேஷ், மகுடி மகேஷ், கோம்பை மகேஷ், போலீஸ் மகேஷ், போத்து மகேஷ் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடைமொழி வாய்க்க, இவனுக்கு விதிக்கப்பட்டதோ கோழி மகேஷ் என்றாகியது. எது எப்படியோ இன்று அவன் அடையாளத்திலிருந்து அழிக்க முடியாத பெயராய் அது மாறியிருந்தது. நடுத்தர நிலையிலிருந்த அவன் குடும்பத்திற்கும் அவனுடைய இந்த வட்ட பெயர் சிறிதான நெருடலை தந்தது.
குழந்தை பருவம் முடிந்து, விடலை பருவம் நுழைந்ததும் ஹார்மோன்களால் ஊற்றெடுக்கும் "காதல்" மகேஷை என்னவெல்லாமோ செய்தது. பதின்ம வயது வாலிபனை பெண்கள் பாதிப்பது போல், வேறு யார்தான் பாதிக்க முடியும். ஹார்மோன்களின் தூண்டுதலால் பெண்களுடன் பேச ஆரம்பித்து, கண்ணில் பட்ட பெண்களையெல்லாம் மானாவாரியாக காதலிக்க தொடங்கினான் மகேஷ். அவர்களும் பதிலுக்கு தன்னை காதலிக்க வேண்டுமென்ற "பெரும் எதிர்பார்ப்பெல்லாம்" அவனிடம் இல்லை. ஆனால் இவன் விடாமல் அனைவரையும் உயிருக்குயிராய் காதலித்தான். அது ஒருவிதமான மகிழ்வு போதை. காதல் செருக்கோடு அத்தனை பெண்களுடனும் வழிந்து, வழிந்து பேசினான். அப்பேச்சினை அதிகப்படியான காம ரசத்தோடு, கற்பனை கலந்து நண்பர்களிடம் வேறு விதமாய் விவரித்தான். அவனையறிந்த இளைஞர்கள் அனைவருக்கும் அவன்மீது பொறாமையின் பொறுமல்கள். அதனாலோ என்னவோ அதுவரை கிண்டலாக உச்சரிக்கப்பட்ட இளவயது கோழி என்ற வட்டப்பெயர், அதன் பின்னர் வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட்டது.
ரோட்டில் சிவப்பு தூவல்களுடன், பெட்டைக் கோழிகளை கண்டவுடன், ஒருபக்க சிறகை சாய்த்து, படபடத்து, பெட்டையின் முதுகேறி, தன்னுறுப்பை கோர்த்து, பற்றிப் புணரும் சேவல் கோழிகளை நீங்கள் கண்டிருக்கலாம். கண்டவரையெல்லாம் காதலித்து மகிழும் மகேஷை அந்த சேவல் கோழியுடன் ஒப்பிட்டு, கோழிமகேஷ் என்று நமட்டு சிரிப்புடன் நண்பர்கள் அழைக்கையில், ஆரம்ப காலங்களில் மகேசுக்கு பெருமிதமாக இருந்தது. அதாவது எல்லா பெண்களையும் வளைத்தெடுப்பதில் வல்லவன் என்ற அர்த்தத்தில். ஆனால் நாளாக நாளாக பெண்கள் விஷயத்தில் அவன் மிகவும் மோசம் என்ற அர்த்தத்தில் "அந்த வட்டப்பெயர்" திரிக்கப்பட்ட போதுதான், சொல்ல முடியா ஒரு சோகம், அவன் நெஞ்சமெங்கும் ஆட்கொண்டது. இத்தனைக்கும் எந்த பெண்ணுடனும் அம்மாதிரியான உடல்தொடர்பேதும் அவனுக்கு இருந்ததில்லை. அதை செய்யும் அளவிற்கு அவனுக்கு மனத்துணிவும் இருந்ததில்லை, வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே. இருந்தும் அவன் வயதொத்த இளைஞர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மீது அப்படியொரு கிண்டல் மொழியை வாரியிறைத்துக் கொண்டே இருந்தனர்.
என்னடே.... கோழி இன்னைக்கு... வடசேரியில மேயுது?
மத்தவன் கில்லாடிடே... கும்பாட்ட காரிய மடக்கிட்டான்லா... கோழி.. கோழிதான்..
சூரம்பாடுக்கு(சூரசம்காரம்) நெறைய வெடக்கோழிகள் வரும்.. சேவலுக்கு கொண்டாட்டம்தான்..
நம்ம தூப்புக்காரிட்ட நேத்து கோழி பேசிட்டு இருந்தான். எப்படியும் கொத்தியிருப்பான்..
- என்பது மாதிரியான அங்கத உரையாடல்கள். அடுத்தடுத்த அடுக்கடுக்கான எள்ளி நகையாடும் உரையாடல்கள். இந்நாட்களில் தன்னை கோழி என்றழைப்பதை பெரும் கௌரவக் குறைச்சலாக நினைக்க ஆரம்பித்தான் மகேஷ். கோழி என்றழைத்தவர்களின் குரல்வளையை பிடித்து சண்டையிட்டான். இருந்தும் அப்பெயர் அவனிடமிருந்து அகலவே இல்லை. அதன் பொருளிலேயே ஊராரும் அவனை அடையாளப்படுத்தினர். பெண்களிடம் வாய்ப்பேச்சுக் காரனாக இருந்த அவனுக்கோ, செயல்வீரனாகும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. ஊருக்குள்ளேயே சிறு மளிகை கடைவைத்து அதன் வருமானத்திலும், பூர்வீக சொத்து வருமானத்திலும் குறை சொல்ல முடியா வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் மட்டும் நடந்த பாடில்லை. அந்நிகழ்வு நடப்பதற்கான அறிகுறியுமில்லை. அவன் வயதொத்த இளைஞர்கள் அனைவரும் திருமண பந்தத்தில் இறங்க, ஊருக்குள் உலவிய கெட்ட பெயரால், மணம் முடிக்க மணப்பெண் கிடைக்காமல் மனம் வெதும்பி, தண்ணி கிட்டாத செவ்வாழை மரமென வதங்கி, தெவங்கி நின்றான் மகேஷ்.
கடுக்கரை ஊர் முதலடி வெள்ளை வேஷ்டி குத்தாலம் பிள்ளைக்கு முன்னும் பின்னுமாய் இரண்டு பெண் மக்கள். வருகிற சித்திரை பதினாறு வந்தால் மனைவி விசாலாட்சி இறந்து ஆறு வருடங்கள் முடிகிறது. கொல்லைக்கு போவதிலிருந்து , ஆற்றுக்கு குளிக்க போவது வரை வெள்ளை வேஷ்டியை பிஷ்டத்திலிருந்து இறக்காத குத்தாலம் பிள்ளையை "வெள்ளை வேஷ்டி குத்தாலம் பிள்ளையென" ஊர் விளிப்பதில் வியப்பேதும் இல்லை. குத்தாலம் பிள்ளையின் முதல் பெண் நீலாம்பரி என்ற நீலா செவ்வாய் தோசத்தில் மணமாகாமலிருக்க, இளையவள் வசந்தா ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தாள். கண்களுக்கு அழகான ஓவியமாக, தேய்த்து வைத்த செப்பு சிலைகளாக பெண் மக்கள் இருவருமிருந்த போதும், அக்காவின் செவ்வாய் தோஷம், தங்கச்சியின் எதிர்கால வாழ்க்கைக்கும் தடையாகயிருந்தது.
வரதட்சணையை கூட்டி, தோஷ ஜோசியம் தவிர்த்து, சில நேரங்களில் மறைத்து என பல விதங்களில் மூத்த மகளின் திருமணத்திற்கு அடித்தளமிட முயன்றார் குத்தாலம் பிள்ளை. ஆனால் ஓட்டை ஒடிசலென்று, ஊரார்கள் பேசிய குடத்திற்குள், வாட்டமின்றி நீர் இறைக்க, வந்தவர் எவருமில்லை. வேண்டாத தெய்வம் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. சில ஜோசியர்கள் வியாழநோக்கு வரவில்லையென்றார்கள். சிலபேர்கள் தெய்வ குத்தம் என்றார்கள். ஊரடி கோவில் வீரவநங்கையம்மனுக்கு அடிமேல் அடிவைத்து அங்க பிரதட்சணம் செய்தாள் நீலா. ஆயிரத்தெட்டு தடவை ஸ்ரீராமஜெயமெழுதி மாலையாக்கி அனுமனுக்கு இட்டு வணங்கினாள். தங்கச்சி வசந்தா துணையுடன் எம்பெருமான் கோயிலுக்கு சென்று எள்ளு விளக்கேற்றினாள். தென்னைக்கு இறைத்த நீரில், வாழை செழித்து வளர்வதைப் போல், சில தினங்களிலேயே வசந்தாவை பெண்கேட்டு மாப்பிளை வீட்டார் வந்து நின்றனர். அம்மாவில்லாத நீலா வெப்ராளம் மேலோங்க, ஆறுதல் சொல்ல ஆளின்றி, அழுது, அலுத்து களைத்தாள். தங்கையின் மணவாழ்க்கைக்கு தடையாக இருக்கிறோமே என்ற தவிப்பு அக்காவிற்கு. அக்காவின் திருமணத்திற்கு போட்டியாக நாமே இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி தங்கைக்கு. முதிர் குலையை விடுத்து, இளங்கருதை மணவடையில் எப்படி ஏற்றுவது என தன் பங்கிற்கு குழம்பி வெகுண்டார் குத்தாலம் பிள்ளை. பெண் பிள்ளைகள் இருவருக்கும் போதுமென்ற அளவிற்கு சொத்திருக்க, ஆஸ்தியோட சேர்ந்து அறிவிருக்க, அழகிருக்க, செவ்வாய் தோஷமென்ற பெயரில் "பெருங்கவலையை" அவர்களுக்குள் விதைத்திருந்தான் இறைவன்.
வயல்கரையில் குத்தாலம் பிள்ளையின் அத்தான் முறை போஸ்ட் ஆபீஸ் சிவதாணு பிள்ளைதான் முதன் முதலாய் அந்த பேச்சை ஆரம்பித்தார்.
"மாப்பிள.. எத்ர காலம் டேய்... இப்படி பிள்ளைல நினைச்சி கவலை பட்டுட்டு இருப்ப... நான் சொல்லுகத நீ விதர்ப்பமா எடுக்க கூடாது... உம்ம பிள்ளையா இருந்தா... இப்படி கேப்பீரான்னும்... கேட்டுறதா... ஒரு அபிப்ராயம் தான்..." - சரியான பீடிகையுடன் பேச்சை வீசினார் சிவதாணு பிள்ளை.
"சொல்லுங்கத்தான்... முதல்ல விஷயத்தை சொல்லுங்க"
"இல்ல.. மாப்ள... நம்ம மூத்த குட்டியை... நடுத்தெரு கடை முத்தையா பிள்ளைக்கு மகனுக்கு குடுப்பியான்னு, கேட்காங்க பார்த்துக்கோ..."
"யாரு கோழி மகேசுக்கா...ஆச்சர்யத்தோடு புருவம் உயர்த்தி கேட்ட குத்தாலம் பிள்ளை... அதிருப்தியோடு மேலும் தொடர்ந்தார். யத்தான்... நீரு.. இப்படி கேப்பீருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... - என்று.
சிவதாணு பிள்ளையும் பதட்டப்பட்டார்.
"இதான் உண்ட முதல்லயே சொன்னனேன்... நாளைக்கு ஒரு காலத்துல... யார் மூலமாவது விஷயம் கேள்விப்பட்டு, ஆனாலும் யத்தான்... நீரு ஒரு வார்த்தை யான்ட கேட்கலையேன்னு.... நீ சொல்ல கூடாது பார்த்தியா... அதான் கேட்டேன்..
இல்லத்தான்... அது வந்து...
ஏய்... ரெண்டு பிள்ளைலும் கோவில் கோவிலா... வேண்டுதலோடு சுத்துகத பாக்க முடியலைடே... பாவம்லா...... அம்ம இல்லாத பிள்ளைக வேற... நல்லதோ.. கெட்டதோ... காலா காலத்துல அது..அது நடந்துரணும் டே...
குத்தாலம் பிள்ளை அமைதியாக யோசனையிலிருந்தார். அவரின் அந்த யோசிக்கும் நேரத்தை பயன்படுத்தி சிவதாணு பிள்ளை மேலும் பேசினார்.
"பய... கொஞ்சம் அப்டி..இப்படித்தான்... கல்யாணம் ஆனா.. எல்லாம் சரியாகும் டே... வீட்ல ஆகாரம் இல்லாட்டாதான்... நாய்கோ, தெருவுக்கு போய், கண்ட கண்ட இடத்துல வாயை வைக்கும்.... பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருந்தா.. அவன் யான்டே ஊர் மேய போறான்... நம்ம பிள்ளைக்கு வேற செவ்வாய் தோஷம்.... கட்டிக்குடுடே... ரெண்டாவது குட்டிக்கும் வயசு ஏறிட்டு போகு பார்த்துக்கோ...அப்புறம் உன் இஷ்டம்...
நகர்த்தும் விதமாய் கல்லை நகர்த்தி, கரைக்கும் விதத்தில் "கரைப்பார்" கரைத்தால் "கருங்கல்லும்" கரையாமல் இருக்குமோ...குத்தாலம் பிள்ளை கரையத் தொடங்கியிருந்தார்.
திருமணத்திற்காக ஏங்கிய இரு மனங்களும் நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில் கல்யாண கடலில் குதித்தன. பெண்ணுடம்பை பற்றிய காம ஈரத்தோடு கட்டில் கரையில் காத்திருந்தான் மகேஷ். கதவைத் திறந்து வந்த நீலா வேறொரு மனநிலைமையிலிருந்தாள். கல்யாணம் என்ற ஒன்றை காட்டி தன்னை இத்தனை காலமாய் நிராகரித்த சமூகத்தின் மீது கட்டுங்கடங்கா கோபத்திலிருந்தாள் நீலா. கண்களெங்கும் காமம் கொப்பளிக்க உட்கார்ந்திருந்த மகேஷை கம்பளிப் பூச்சியை பார்ப்பது போல் பார்த்தாள். கம்பங்கொல்லையில் பாயத் துடித்த காய்ந்த மாட்டினை தடுத்து, ஒற்றை கேள்வியால் எதிர்திசையில் இழுத்தாள்.
நீ தொடப்போற, எத்தரையாவது ஆளு நான்? - என்ற எதிர்பாராத கேள்வியால் நிலைகுலைந்தான் கோழி மகேஷ். திருமணம் என்ற ஒற்றைச்சொல்லால் தன்னை அழவைத்த, நிராகரித்த, அவமானப்படுத்திய ஆண் வர்க்கத்தின் மீது ஆற்றொணா விரக்தியிலிருந்தாள் நீலா. தன் தங்கையின் வாழ்க்கையை நினைத்தே இந்த பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக உறுதிப்படுத்தினாள். "எப்போதும் போல் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள். என் முன் உன் சிறகுகளை விரிக்காதே என்ற பொருளுடன், உறுதிப்படப் பேசிய நீலாவை பார்த்து, "கோழி" பெரும் பயம் கொண்டது. பேச்சு சாதுர்யத்தால் பல பெண்களை வசீகரித்த கோழி மகேஷின் "காம மூக்கு" அவன் காலடியிலேயே விழுந்து நொறுங்கியது. ஆவேசமாக அத்தனையும் பேசிமுடித்து கட்டிலின் ஒரு ஓரத்தில் நெடுநாட்களுக்கு பிறகான நிம்மதியான பெருந்தூக்கத்தில் நீலா லயிக்க, அவள் அழகான முதுகையும், வளைவுகளையும் பார்த்து கொண்டு தூங்கமின்றி படுத்துக் கிடந்தான் மகேஷ். முதலிரவு அறை முழுவதும் நிரம்பியிருந்த பூக்களின் மணத்தோடு, தூங்கமின்றி புரண்டு கொண்டிருந்த மகேஷின் ஏக்க பெருமூச்சும் சேர்ந்து கொண்டது.
விரக்தியில் இருக்கிறாள், இரண்டொருநாளில் சரியாகிவிடுமென நினைத்தான் மகேஷ். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாகியும் வீம்பு குறையாத நாகமென விரக்தியின் உச்சத்திருந்தாள் நீலா. ஏதேதோ செய்து நீலாவின் நம்பிக்கையை பெற முயற்சித்தான் மகேஷ். கடைக்கு வரும் பெண்களிடம் பேச்சை குறைத்து, கண்ணியவானாக நடந்து கொண்டான். திருமணமான நாள் தொட்டு, ஊருக்குத்தான் அவர்கள் கணவன் மனைவி. ஆனால் தாம்பத்யம் சிறகடிக்கும் கட்டிலறையில், எதிர் எதிரே படுத்துக்கொண்டு பயணிக்கும் ரயில் பயணிகள் மட்டுமே. கொப்பளிக்கும் காமத்தை உடலுக்குள் அடக்க முடியாமல் தவித்தான் மகேஷ்.
இதுவேதும் அறியாத நவீன உலகம், கிண்டல் பேச்சுக்களால், ஆபாச வார்த்தைகளால் மகேஷை மேலும் வறுத்தெடுத்தது. 
அன்று அப்படித்தான். முட்டை வாங்கும் அவசரத்தில் கடைக்கு வந்து நின்ற நையாண்டி சேகர் உச்ச ஸ்தாயில் சிரித்துக் கொண்டே பேச துவங்கினான்.

"என்ன மாப்ள... ராத்திரி முழுக்க பயங்கர வேலை போல.."
சட்டென்று அரண்ட மகேஷ், அடுத்த அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நீலாவுக்கு கேட்டிருக்குமோவென பயந்து, பட்டென்று பேச்சை மாற்றினான்.
"உனக்கு என்ன வேணும்..."
நையாண்டி சேகரோ விட்ட பாடில்லை.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மாப்ள... ஆளு ஒடிஞ்சு போயில்லா இருக்க.... முட்டை கிட்டை குடிக்க கூடாதா?
நான் என்ன குடிக்கணும்னு எனக்கு தெரியும்.. உனக்கு என்ன வேணும்னு சொல்லு..
அது சரிதான்... கோழிக்கு தெரியாதா... எப்ப முட்டை குடிக்கணும்னு....- என்று நக்கலடித்தான் சேகர்.
மகேசுக்கு சுள்ளென்று கோபம் பின் மண்டையில் ஏறியது. அடக்கி கொண்டான். மெலிதான கோபத்தோடு,
லேய்.. உனக்கு என்ன வேணும் சொல்லு... இல்லாட்டா.. இடத்தை காலி பண்ணு...
முட்டைதான் வேணும் மாப்ள... - சிரித்து கொண்டே பதிலுரைத்தான் நையாண்டி சேகர்.
அவசர அவசரமாக முட்டையை எடுத்துக் கொடுத்து ஆசுவாசப்பட்டான் மகேஷ்.
"பார்த்து டே.. சின்ன பிள்ளையாக்கும் என் தங்கச்சி... ஊர்ல ஏனோ தானமா மேஞ்ச மாதிரி அவள்டையும் உன் வேலையை காட்டிராத ..."
என்று போகிற போக்கில் தன் நையாண்டி தனங்களுக்கு அடையாளமாய் ஒன்றிரெண்டு வார்த்தைகளை விட்டுக் கொண்டே சென்றான் சேகர்.

ஆவலாதியில் மகேஷ் பரபரக்க, அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த நீலாவுக்கு அவமானப் புள்ளிகள் மேலோங்கி, மகேஷின் மீதான வெறுப்பு மேலும் சில மடங்கு கூடியது.
எறும்பு கூட்டுக்குள் கைவிட்ட தேன் திருடனாய், தன்னிலையை நினைத்து, விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் மொத்த பரிதவிப்பையும் மனதிற்குள் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான் கோழி மகேஷ்.
தீப்பட்ட காயத்தில் தேள்வந்து கொட்டுவது போல், மொத்த ஊரையும் கலங்கடித்தது அந்த செய்தி. ஆம். கெட்ட செய்திதான். யாரும் எதிர்பார்க்காத செய்திதான். இளையவள் வசந்தா வயலடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்றும், தலையில் பலத்த அடி என்றும், இளைஞர்கள் சிலபேர் குத்துயிரும், கொலை உயிருமாய் மயங்கியநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர் என்றும். என்ன பிரச்சனை? யாரால் பிரச்சனை? எதற்காக இப்படி ஒரு முடிவு? ஏகப்பட்ட கேள்விகள் எல்லோர் மனதிலும். மகேஷ் படபடப்புடன் இருந்தான். குத்தாலம் பிள்ளை அணுஅணுவாய் சிதறியிருந்தார். நீலா மூர்ச்சையாகி அரைகுறை நினைவிலிருந்தாள். சரியாக காரணம் யாருக்கும் தெரியாமல், ஆங்காங்கே பல ஆருடங்கள் கணிக்க ஆரம்பித்தனர். அதில் சில மகேஷை குறி வைப்பதாயிருந்தது.
"ஊருக்குள்ளயே அவன் வேலையை காட்டுனவன்.. வீட்டுக்குள்ளே சும்மையா இருந்திருப்பான்.. பாவம் பிள்ளை.. பயந்து.. கிணத்துல விழுந்திருக்கு.... "
மொத்த ஊரும் ஏற்றுக் கொள்ளும் ஊர்ஜிதமாக அது இருந்தது. அவரவருக்கு விரும்பிய வகையில் மேலும் சிலவற்றை சேர்த்து இழித்தும் பழித்தும் பேசினர். நரம்பில்லாத நாக்கால், குத்தாலம் பிள்ளையின் காது பட வரம்பு மீறி பேசினர்.
அத்தான் சிவதாணு பிள்ளையும் ஊரோடு சேர்ந்து கொண்டார்.
"மாப்பிள... இவன.. இப்படியே விட்டா..என்ன வேணாலும் செய்வான்.. பேசாம போலீஸ்ல பராதி கொடுத்திருவோமென" - குத்தாலம் பிள்ளையை வற்புறுத்த, ஆவேசத்துடன் மாமனாரே மருமகன் மீது புகார் கொடுத்திருந்தார். சில மணிநேரத்துக்குள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தான் மகேஷ். என்னவோ? என்ன குழப்பமோ தெரியவில்லை. அவன் போலீசாருக்கு பெரிதான எதிர்ப்பெதுவும் தெரிவிக்க வில்லை. என்னவோ மாதிரியிருந்தான். பித்து பிடித்த மனநிலையில் சிறை கதவுகளுக்குள் இருந்தான் மகேஷ்.

இருமகள்களின் வாழ்க்கையை நினைத்து குத்தாலம் பிள்ளை இடிந்து போயிருந்தார். 
"அந்த படுபாவிக்கு கைல உன்னைய புடிச்சி கொடுத்திட்டேன்னே... அது இப்ப நம்ம வம்சத்தையே அழிச்சிருக்கும் போலிருக்கே? " -நீலாவின் முன்னின்று கண்ணீர் வடித்தார். தன்னை நினைத்து வெடித்து அழுது நொந்து கொண்டாள் நீலா. சோகம் மேலோங்க அப்பாவும் மகளும் ஆஸ்பத்திரியில் இருந்து தங்கையை கவனித்துக் கொண்டனர். ஆறேழு நாளாகியும் நினைவேதும் திரும்பாமல், மயக்க நிலையிலேயே இருந்தாள் வசந்தா.

சம்பந்தப்பட்ட அனைவரின் மனங்களும், 
சோகம் என்பது என்ன? 
துயரம் என்பதற்கான அடையாளம்தான் என்ன? துன்பத்தின் வரையறை என்ன? 
- என்பது போன்ற கேள்விக்கான விடைகளை அனுபவித்து களைத்திருந்தன. எட்டு நாட்கள் சிறை வாழ்க்கையில் முற்றிலும் ஒடிந்திருந்தான் மகேஷ். கண்களுக்கு கீழே அயற்சியின் அடையாளமாய் கருப்பாய் சிறுகோடு போல. நறு நறுவென வளர்ந்திருந்த எட்டு நாள் தாடி, அவன் அகத் துயரத்தை அப்பட்டமாய் பறைசாற்றுவது போலிருந்தது.

என்ன சொல்லி நீலாவை சமாதானம் செய்வது? 
-என யோசித்தான்.

என்ன சொல்லி ஊராரை, உறவுகளை, சட்டத்தை நம்ப வைப்பது? -என யோசித்தான்.
காமம் என்பதை இதுவரை அனுபவித்திராத தனக்கு, காமக்கோழி என்ற பெயர் வந்தது எப்படியென யோசித்தான்.
எதனால் வசந்தா கிணற்றுக்குள் விழுந்திருப்பாள்வென யோசித்தான்.
எந்த ஒரு எதிர்ப்பும் எழுப்பாமல் தான் இப்படி இருப்பதற்கான காரணங்களை சிந்தித்தான்.
சிந்தனைகள் அவன் எண்ணமெங்கும் கேள்வியெழுப்பி, அலையலையாய், மலைமலையாய் தாவிச் செல்லும் குரங்குகளைப் போல, எங்கெல்லாமோ அழைத்து சென்றது. தெளிவாகத் தேடியும் கண்களுக்கு அகப்படா குண்டூசியை போல, தெளிவாக சிந்தித்தும் தீர்க்கமான முடிவு கிட்டிய பாடில்லை. அரைகுறை உறக்கத்தோடு அன்றைய இரவும் கழிந்தது.
ஒன்பதாம் நாள் காலையில் தன் காதில் விழுந்த வார்த்தைகளால், தூக்கம் விழித்து சிறிதான பதட்டத்திற்குள்ளானான் மகேஷ். ஆமாம். சிறைக்கு வெளியே மாமனார் குத்தாலம் பிள்ளைக்கும் இன்ஸ்பெக்டருக்குமான உரையாடல் அரைகுறையாய் காதில் கேட்டது.
"அப்ப.. கேஸ வாபஸ் வாங்குறீங்களா"
"ஆமா சார்... எல்லாரும் சொன்னதுனால நானும் ஒரு குழப்புத்துல புகார் கொடுத்திட்டேன். கிணத்துல விழுந்த என் மக சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு எல்லா விஷயமும் மனசிலாச்சு "
இன்ஸ்பெக்டர் ரெம்ப பந்தா காட்டினார். அருகில் நின்றிருந்த ரைட்டரிடம் உயரதிகாரிக்கே உரித்தான தோரணையில் பேசினார்.
"என்னையா.. இவரு சொல்லுறது எல்லாம் உண்மையா.. அந்த பொண்ணோட வாக்குமூலம் என்ன?"
"உண்மைதான் சார்... தோட்டத்துல கரண்டு ஷாக் அடிச்சுதான் அந்த பிள்ளை கிணத்துல விழுந்துச்சாம்.. அந்த பையனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்"
சம்பாஷணைகளை கேட்ட அம்மாத்திரத்தில் ஒருவித புளகாங்கித மனநிலைக்குள் விழுந்தான் மகேஷ். பொங்கி வந்த அழுகையை அடக்கியதால் உதடுகள், சிலந்தி வலையில் சிக்கிய தட்டாம் பூச்சி இறகாய் படபடத்தது.
காரில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மாமனாரும், மருமகனும் மருந்துக்கு கூட பேசிக்கொள்ளவில்லை. தன் பராதியால்தான் தன் மாப்பிளைக்கு இப்படி ஒரு அவமானம் என்பதை குத்தாலம் பிள்ளையால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. மகேசும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை. அசாத்திய மௌனம் இருவருக்குள்ளும். திறந்திருந்த கார் கண்ணாடியின் வழி, மத மதவென வந்து மோதிய காற்றினாலோ என்னவோ, இருவரின் கண்களிலும் கண்ணீர் துளிகளின் அடையாளங்கள்.
வசந்தாவை டிஸ்சார்ஜ் செய்வதற்காக வழியில் ஆஸ்பத்திரியில் இறக்கி கொண்டார் குத்தாலம் பிள்ளை. தனியாக வீடு வந்திறங்கி, தயங்கி தயங்கி ஒருவித ஆவேச மனநிலையில் வீட்டுக்குள் நுழைந்த மகேஷின் நெஞ்சோடு அன்பும், அழுகையும் கலந்த அட்டை பூச்சியாய் ஆவேசமாய் வந்து ஒட்டிக்கொண்டாள் நீலா. சந்தோசம் மேலோங்க சின்னஞ்சிறு துகள்களாகி காற்றில் மிதந்து கொண்டிருந்தான் மகேஷ்.
மகிழ்ச்சியின் பெருமிதத்தில், அழுகையின் விம்மலோடு ஆனந்த கண்ணீருடன் நீலா பேசினாள்.
"வசந்தா.. மட்டும் கரண்ட் ஷாக் அடிச்சு, கிணத்துல விழலைண்ணா... நான் இன்னும் உங்கள வெறுத்திட்டுத்தான் இருப்பேன்.".- என்றாள்.
தன் மீதிருந்த நெடுநாள் பழி நீங்கிய மகிழ்வில், முதன் முதலாக உணரும் நீலாவின் ஸ்பரிசத்தில் அவளை ஆனந்த பெருக்குடன் ஆரத்தழுவிக் கொண்டான் மகேஷ். விம்மி விட்ட இருவரின் பெருமூச்சில் மொத்த சோகங்களும் தூள் தூளாகியது.
பொங்கி எழும்பும் உணர்ச்சி பிரவேசத்தில், காற்றுப் புக முடியா இடைவெளியில் இரு உடல்களும் கட்டித் தழுவிக்கொள்ள, இதுநாள் வரை நடக்காமல் இருந்த மன்மத ஆட்டத்தின் அசைவிற்கு, அவ்வீட்டின் "படுக்கையறைகட்டில்" தன்னை தயார் செய்து கொண்டது.
தெரிசை சிவா

வாழ்வே யோகம்

சின்னதாய் மழை பெய்திருந்த மதிய நேரம். வானம் மிதமான மேகமூட்டத்துடன் மீண்டும் மழை கொட்டலாம் என்பது போன்றிருந்தது. காற்றெங்கும் புதிதாய் நீர் குடித்த மண்ணின் வாசம். சாலையெங்கும் மங்கலாய் முகம் தெரியும் நீர் தேங்கல்கள். குளித்து முடித்த இளம்பெண்ணின் தலைமுடி நுனியில் வழியும் நீர்துளிகளைப்போல், மழையில் நனைந்த மர இலைகளிலிருந்து நீர் துளிகள் வழிந்துக் கொண்டிருந்தது.
அன்பை யாரிடம் காட்டலாம் என்ற அசாத்திய உணர்வோடு வெளியே வந்திருந்தான் ராகவன். “வாழ்வே யோகம்” என்ற மனவெழுச்சி வகுப்பில் கற்றுக் கொண்ட பாடங்கள், அறிவுரைகள், பொங்கி வரும் அணை வெள்ளமென மனம் முழுவதும் திரண்டிருந்தது. மூன்று நாள் வகுப்பாக இருந்தாலும் முப்பதாண்டு வாழ்க்கைக்கு தேவையானவற்றை அவ்வகுப்பு தனக்கு கற்பித்ததாக அவனுக்குத் தோன்றியது. அன்பை விதையுங்கள்...அன்பை விதையுங்கள் என கடைசி நாளில் கைகளை ஆட்டி “ஐம்பது” முறை சொன்னது நினைவிற்கு வந்தது. யாரிடமாவது அன்பை காட்ட வேண்டுமென்பது அதிகப்படியான ஆதங்கமாகியது. எப்படியும் வீட்டுக்கு சென்று சேர இரவு ஏழு, எட்டு மணி ஆகி விடும். அங்கு போனதும் மனைவி செல்வியிடமும், மகள் ப்ரியாவிடமும் அன்பை கொட்டி விட வேண்டியதுதான். மனதிற்குள் முடிவு செய்து கொண்டான் ராகவன்.
ஆர்வமிகுதியில் அலைபேசி எடுத்து செல்வியின் எண்ணுக்கு சுழற்றினான்.
"ஹலோ"
"என்னா.. முடிஞ்சுதா.. 6 மணிக்குதான் முடியும்னு சொன்னீங்க"
"இல்லப்பா... இப்பவே முடிஞ்சிட்டு"
"அப்ப.. இனி ஒரே அன்புதான்" - செல்வி நக்கலடித்தாள்.
"ஆமா.. அன்புதான்"
"அப்ப.. இனி "முன்கோபி ராகவன்" இல்ல... "அன்பன் ராகவன்தான்" - என்றாள்.
"ஆமா. இனியெங்கும் அன்புமயம் தான்" - என்று சிரித்தான் ராகவன்.
"அப்படின்னா... அந்த ஊர்ல தானே என் வீடு இருக்கு.. எங்க அப்பா, அம்மாவை ஒரு எட்டு பார்த்திட்டு வாரீங்களா? - உண்மையான ஒரு ஆவலில் தான் கேட்டாள் செல்வி.
இரண்டொரு நாட்களாக உள்ளுக்குள் இருந்த முன்கோபநாய் சிறிதாக வெளியே வரப்பார்த்தது. அடக்கி கொண்டான்.
"நான் மட்டும் தனியா எப்படி போறது... ரெண்டு நாள் கழிச்சு புள்ளையையும் கூட்டிட்டு எல்லாரும் சேர்ந்து வருவோம்"
ராகவனின் அமைதியான இந்த பதிலை கண்டு ஆச்சர்யம் காட்டினாள் செல்வி.
"என்னங்க... எப்படி அமைதியாய் பதில் சொல்றீங்க.. பேசுறது என் மாப்பிள்ளைதானா"
"உன் மாப்பிளையேதான்" -மீண்டும் சிரிப்புடன் பதில் கூறினான் ராகவன்.
"அப்ப சண்டை வந்துன்னா தூக்கி தூக்கி எறிவீங்களே அந்த செம்ப எடுத்து தூர போட்டுறவா?"
"போடு... போடு..சரி வந்து பேசிக்கலாம்"-என்று சொல்லி போனை அணைத்தான் ராகவன்.
கதை நாயகன் ராகவனை நடுத்தர பொருளாதார சமுதாயத்தின் பிரதிநிதியாக எவ்வித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம். அதாவது நாம் பணக்காரனா, ஏழையா என்ற சந்தேகத்துடனே சுற்றித் திரியும் மிடில் கிளாஸ் மக்களின் பிரதிநிதியாக. இன்னும் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன். அப்போது உங்களுக்கு தெளிவாகப் புரிவதற்கான வாய்ப்பு அதிகம். குடும்பத்தோடு சினிமா பார்க்கச் சென்று, சினிமாத் தியேட்டரின் வரிசையில் நின்று கொண்டே, தொண்ணூறு ருபாய் டிக்கெட் எடுக்கலாமா? நூற்றியிருபது எடுக்கலாமா என குழம்பித் தவிக்கும் குடும்பத்தலைவர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். அடுத்தவர் மெச்ச உயர்தர சட்டை, பேண்டுகளை தள்ளுபடியில் வாங்குவதாக நினைத்து, அநியாய விலைக்கு வாங்கி, அதனை ஆறேழு வருடங்களாய் மாற்றாத, கிழிந்த, நைந்த உள்ளாடைகளின் மீது அணிந்து, ஒய்யாரமாய் கண்ணாடி முன் அழகு பார்க்கும் அப்பாவிகளை உங்களுக்கு தெரிந்திருக்கும். தின்னத் தெரியாத, கொஞ்சமும் பிடிக்காத பிட்சாவையோ, பர்கரையோ கூட்டத்தோடு சேர்ந்து ருஷி பார்த்து, ஆகா, ஓகோ வெனப் பாராட்டும் அலவலாதிகளை உங்களுக்கு தெரிந்திருக்கும், போனஸ், டிஸ்கவுன்ட், தள்ளுபடி போன்ற வார்த்தைகளை கேட்ட உடனே, காது வரை சிரித்து, கடை கடையாக ஏறி இறங்கும் கண்ணியவான்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இவர்களில் யாரை வேண்டுமானாலும் ராகவனின் சாயலாக நீங்கள் உருவகித்துக் கொள்ளலாம். வீட்டில் புலியாகவும், வெளியில் எலியாகவும் நடந்து கொள்ளும் ராகவன் ஆறேழு வருடங்களாய் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கௌன்டன்டாக பணிபுரிகிறான். அலுவலகத்தின் மனிதவளத்துறையின் சார்பாக இரண்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக "வாழ்வே யோகம்" பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இன்று உங்கள் முன் அன்பின் வடிவமாக நிலைகொண்டிருக்கிறான் மிடில் கிளாஸ் ராகவன்.
அன்பு என்பது என்ன? அதற்கு உருவம் உண்டா? அதனை எப்படி அடுத்தவர்களுக்கு கொடுப்பது? கைவசம் கால்கிலோ அன்பு கிடைக்குமான்னு யாரிடமாவது கேட்க முடியுமா? "அன்பின் திருவுருவமே அன்னை தெரசா" என்கிறார்கள். அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ் என்கிறார்கள். "அன்பென்றாலே அம்மா" என்று பாட்டெல்லாம் இருக்கிறது. இதில் எதுவுமே நானில்லையே என்று ஆரம்பத்தில் பரிகாச கேள்விகள் எழுப்பியவன்தான் ராகவனும். ஆனாலும் இந்த "வாழ்வே யோகம்" பயிற்சி வகுப்பு அவனை முற்றிலும் மாற்றியிருந்தது.
அடுத்தவரை சந்தோஷப்படுத்தும் எல்லாவுமே அன்பென்கிறது இந்த பயிற்சி வகுப்பு. ஏதோ ஒன்றை செய்து அடுத்தவரை மகிழ்ச்சி கடலில் வீழ்த்தும் போது, அவர்கள் மீது நீங்கள் அன்பு பாராட்டியிருக்கிறீர்களென அர்த்தப்படுத்துகிறது. அதனை நீங்களே மனமுவந்து செய்யும் போது, பேரன்பின் பெருநதி உங்கள் உள்ளமெங்கும் பாய்ந்தோங்கும் என்று பறைசாற்றுகிறது பயிற்சி வகுப்பு. முன்பின் தெரியாதவர்களிடம் இதையே நீங்கள் செய்யத் துணிந்தால், "அகில உலகத்தின் அன்பின் சாரம்" நீங்களே என்கிறது பயிற்சி வகுப்பு. இப்படி அன்பை அடுத்தடுத்து போதித்து, நாடி, நரம்பு, மூளை, முதுகென எல்லாம் அன்பால் நிரப்பி, நம்ம ராகவனை மிதமிஞ்சிய அன்பனாக மாற்றியிருந்தது அவ்வகுப்பு.
ஊருக்கு செல்லும் பஸ்ஸிலேறி, எதிர்ப்படும் அனைவருக்கும் ஒரு மிதமான புன்னகையை வீசி, சீட்டை பிடித்து அமர்ந்திருந்தான் ராகவன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பஸ்சுக்குள் கூட்டம் அலைமோதியது. செல்போனை எடுத்து நோண்டலாமா என்று நினைத்த போது, "இயற்கையை நேசித்து, உலகை கவனித்து, அன்பை விதையுங்கள்" என்று பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாளில் இளவயது டாக்டர் புனிதா சொன்னது நினைவுக்கு வந்தது. செல்போனை பாக்கெட்டிலிருந்து எடுக்க வில்லை. லேசான பசி வயிற்றை கிள்ளியதால், பையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை மெதுவாக தின்ன ஆரம்பித்து, ஏதோ நினைவில் கண்களை விரித்து உலகத்தை கவனிக்க தொடங்கினான். தீடிரென அந்த புனிதா டாக்டரின் திரண்ட தோள்களும், அவர் கட்டிக்கொண்டு வந்த சாரியும், அவர் அசைந்து, அசைந்து பேசும் போது கண்ணில் பட்ட அவரின் அழகான தொப்புளும் நினைவுக்கு வந்தன. "அன்பே சிவம்" என்று மனதிற்குள் சொல்லி கொண்டான். பிறகு காமம் என்பதும் அன்பின் வெளிப்பாடுதானே என்று அவனாகவே சமாதானம் செய்து கொண்டான். அவ்வாறு யோசித்துக் கொண்டேயிருக்கையில் காமமும், அன்பும் ஒன்றா? என்ற பெருங்குழப்பம் அவன் பின் மண்டையை ஆக்கிரமித்தது. மரம் பற்றி, கிளை பற்றி, இலை பற்றி தொடர்ந்து தாவும் குரங்கென மனம் பற்பல சஞ்சல சலனத்தில் அலைந்து கொண்டேயிருந்தது.
அடுத்தடுத்து வந்த பேருந்து நிறுத்தங்களில் மக்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தார்கள். கடைசியாக பக்கத்தில் வந்தமர்ந்த பையனை பார்த்தபோதே தெரிந்தது அவனின் ஏழ்மை நிலை. ஒரு பதினாறு வயதிருக்கலாம். எங்கோ வேலைக்கு சென்று திரும்புகிறான். கருத்த உருவம், கலையான முகம். கைகால்களின் நக இடுக்குகளில் திருநீறு போல சிமெண்ட் படிவுகள். ஏதோ ஒரு கட்டிட கட்டுமானத்தில் வேலை செய்யலாம். பொங்கி வரும் அன்பை இவன் மீது கொட்டி விடலாமா என யோசித்தான் ராகவன். யோசித்துக் கொண்டிருக்கும்போதே அப்பையனை பார்த்து சிரித்தும் வைத்தான். அதுவரை இயல்பாய் இருந்த பையன் கொஞ்சம் உஷாராகியது போலிருந்தது. அன்பு மிகுதியில் கையிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் அவன் முன்னே நீட்டிவிட்டு, குரலெங்கும் அன்பு வழிய, மெதுவாக பேச ஆரம்பித்தான்.
உன் பெயரென்னப்போ?
அப்பையன் ராகவனின் செய்கைகளை, வார்த்தைகளை கவனித்ததாக தெரியவில்லை. "போடா... போ.. நீயும் உன் பிஸ்கட்டும்" என்பதுபோல் பஸ்ஸின் முன்புறத்தையே கண்களை கூர்மையாக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். ராகவனும் குழப்பமாய் பஸ்ஸின் முன்புறத்தை பார்த்தான். சில கனகாம்பரம் பூ வைத்த இரட்டைச்சடைகள், அரக்கு மற்றும் பச்சை நிற தாவணிகள் பார்வைக்கு கிடைத்தன. திரும்பி அப்பையனை பார்த்தான் ராகவன். அவன் விழிகளுக்குள் "பசலை நோயின்" அறிகுறி. அவன் செய்கைகளில் "காதல் தாக்கத்தின்" அடையாளங்கள். ராகவனுக்கு விளங்கியது. இச்சூழ்நிலையில் அரைலிட்டர் அன்பெடுத்து அவன் வாயில் வைத்து ஊட்டினாலும், தன் முகத்திலேயே திருப்பி துப்பி விடுவான்யென ராகவனுக்கு தோன்றியது. ராகவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. பாழாய் போன உலகில் பொங்கி வரும் அன்பை காட்ட கூட ஆள் இல்லையே என்ற விரக்தி சிந்தனையின் போதுதான், அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் ஏறிய அப்பெண்ணை கவனித்தான்.
மூன்று வயது பெண் பிள்ளையை தூக்கி ஏறிய அழகான அப்பெண், கூட்டத்தில் அசௌகரியமாய் நின்று கொண்டிருந்தாள். தன்னை சுற்றி ஆம்பிளைகளாக இருந்ததால் அக்குழந்தையை மட்டும் தருமாறு ராகவன் சைகை செய்தான். அப்பெண்ணும் அதை ஆமோதித்து குழந்தையை சிறிய புன்முறுவலுடன் ராகவனிடம் கொடுத்தாள். அப்பெண்ணின் சிரித்த முகம் ராகவனுக்கு நிரம்ப பிடித்தது. குழந்தையும் அப்பெண்ணின் சாயலில் மிக அழகாக இருந்தது. பொங்கி வந்த அன்பையெல்லாம் கொஞ்சி தீர்த்து மகிழ்ந்தான் ராகவன். அதுவரை அழுது கொண்டிருந்த குழந்தையும் ராகவனோடு ஒட்டிக்கொண்டு சிரித்தது. பக்கத்திலிருந்த பையன் நடக்கும் எதையும் பெரிதாக சட்டை செய்யாதபடி, முன்பிருந்தபடியே தாவணி சீட்டுகளை நோக்கி, "கருமமே காதலாய்" இருந்தான்.
இருபது நிமிடங்களில் அப்பெண் இறங்குமிடம் வந்தது. ராகவனிடம் குழந்தையை பெற்றுக்கொண்டு, கூட்டத்தில் நுழைந்து இறங்கும் நேரத்தில், அப்பெண்ணின் அபயக்குரல் ஒலித்தது.
"குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க செயினை காண வில்லையென்று" பஸ்ஸெங்கும் எதிரொலித்தது. பஸ்சுக்குள் பெருங்குழப்பம். ஆளாளுக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் சொன்னார்கள். பஸ் அடுத்து நகராமல் நிறுத்தப்பட்டது.
பிள்ளையிருந்த ராகவனின் சீட், அதன் கீழே சில பேர் குனிந்து தேடினார்கள். ராகவனும் ஆடைகளை உதறி, எதேச்சையாக எங்கும் சிக்கி இருக்குமான்னு தேடிக் கொண்டிருக்க, சில பேர் மட்டும் சந்தேக கண்களோடு ராகவனை பார்க்கத் தொடங்கினர். சிலபேர் கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாய் ராகவனின் பையில் தேட வேண்டுமென்றனர். சிலர் பஸ்சை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல சப்தமிட்டனர். இக்கட்டான அவமானத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றான் ராகவன். உடம்பெங்கும் வியர்த்திருந்தது. கூர்ந்து பார்க்கையில் விரல்களில் லேசான நடுக்கமும். போதாத குறைக்கு "இவரு ஏண்டையும் பிஸ்கட்டை கொடுத்து திங்க சொன்னாருன்னு" வாக்கு மூலம் கொடுத்தான் பக்கத்திலிருந்த சிறுவன். சரியாகச் சொன்னால் ஐந்தாறு நிமிடங்கள், யாரிடம் என்ன சொல்வது என்ற எந்த அறிவுமின்றி, மனம் முழுதும் பரிதவிப்போடு செயல்பாடின்றி நின்றிருந்தான் ராகவன். மனம் முழுதும் பொதுமக்களால் தூக்கி எறியப்பட்ட "அவமானக் குப்பை".
ஏழாவது நிமிடத்தின் ஆரம்பத்தில் யாரோ சொன்னார்கள் "செயின் கிடைச்சிருச்சு". கூட்டத்திற்குள் ஒரு ஆசுவாசம். அக்குழந்தையின் அம்மாவின் சேலை முந்தானை அடுக்கில் சிக்கி இருந்தாக பேச்சு நடந்தது. ராகவனுக்கு கொஞ்சம் சமாதானமாக இருந்தது. பெருமூச்சு விட்டு சீட்டில் அமர, சிறிது நேரத்தில் பஸ் நகர ஆரம்பித்தது. அவன் மீதான பரிதாப, அனுதாப பேச்சுக்கள் சில அவன் காதுகளுக்குள்ளும் விழுந்தது. ராகவன் யார் முகத்தையும் பார்க்கவில்லை. பக்கத்திலிருந்த பையன் ராகவனை பார்த்து இரண்டொருமுறை சிரிக்க முயற்சித்தான். மோன நிலையிலிருக்கும் சாமியாரைப் போல் ஆடும் பஸ்ஸில் அமைதியாக உட் கார்ந்திருந்தான் ராகவன்.
வீட்டுக்குள் ஏறும்போதே முகமெங்கும் சிரிப்புடன், செம்பில் தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள் செல்வி. ராகவன் அதை எதிர்பார்த்தது போலவே, பட்டென்று வாங்கி குடிக்கும் போது, "அப்புறம்... அன்பன் ராகவன்,, எப்படி இருக்கீங்க" - என்று கிண்டல் தொனியில் செல்வி கேட்க, யார் மீதோ இருந்த கோபத்தில் தண்ணீர் செம்பை வீசியெறிந்தான் ராகவன்.
- தெரிசை சிவா

ஆவி

நடுநிசியில் அவன் ஊருக்குள் செல்லும் பொது அவனுக்கே பல இடங்கள் அடையாளம் தெரியாமலிருந்தது. சொந்த ஊரையே அடையாளம் தெரியாத அளவிற்கு, ஊருக்குள் “எத்தனை மாற்றங்கள்”. ஊர் குளத்தருகே இருந்த வேப்பமரம் முறிக்கப்பட்டு, புதிதாய் ஒரு பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டிருந்தது. “டீக்கடை” வேலாயுதம் அண்ணன் தனது கடைக்கு மரப்பலகை கதவை மாற்றி, கிரில் கதவு போட்டிருந்தான். ஒட்டுப்புரை கட்டிடங்களாய் இருந்த ஊர் பள்ளிக்கூடம், மேக் அப் செய்த சினிமா நடிகை போன்று வண்ணங்கள் அடித்த கான்க்ரீட் கட்டிடங்களாய் மாறியிருந்தது. ஊர்கோவில் கோபுரச்சிலைகள் பெயிண்ட் வண்ணங்களோடு ஜொலிக்கிறது. “கும்பாபிஷேகம்” கழிந்திருக்கலாம். அவன் வீட்டு தெருவிலும், இரண்டு மூன்று ஓட்டு வீடுகள், கான்கிரிட் வீடுகளாக பதவி உயர்வு அடைந்திருந்தது. அவன் வீட்டை ஒட்டி இருந்த சாக்கடை முழுதும், சிமெண்ட் சிலாப்புகளால் மூடப்பட்டிருந்தது. இதற்காக எத்தனை முறை பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுத்திருப்போம் என எண்ணினான் அவன். எப்படியோ வேலை நடந்து விட்டது என சமாதானமும் அடைந்தான். வெளிநாட்டில் அடிமை வேலைபார்த்து, சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குள் வரும் “அயல்வாசியின்” மன நிலைமையிலிருந்தான் அவன்.
ஊரைவிட்டு போய் ஒரு இரண்டரை வருடங்கள் இருக்குமா? ஆமாம். சரியாக கணக்கு பார்த்தல் ஊரைவிட்டு, இந்த உலகத்தை விட்டு போய் இரண்டு வருடம், ஏழு மாதங்கள் ஆகிறது. காஷ்மீரில் குண்டடி பட்டு, இறந்ததில் தொடங்கி, ராணுவ துப்பாக்கிகள் முழங்க, தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்ததது, மனைவிக்கும் மகனுக்கும் “பரம்வீர் சக்கரா” பதக்கங்கள் கொடுத்து கௌரவித்தது, சவமாய் பெட்டிக்குள் விழுந்து, ஹெலிகாப்டரில் பறந்து, சொந்த ஊரில் சொந்த பந்தங்கள் உட்பட பலபேர் அழுகைக்கு நடுவில் சிதையில் எரிந்து சாம்பலானது -என எல்லாம் அவன் நினைவுக்கு வந்தது. மிலிட்டரிகாரனின் வாழ்க்கை இப்படித்தான். “வீரமரணம்”-னா சும்மாவா? “நாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன்னு” – எல்லாரும் சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே உயிரை கொடுத்து வீரமரணம் எய்துவது எவ்வளவு பெரிய விஷயம். அந்த பாக்கியம் அவனுக்கு கிடைத்திருந்தது. இறந்து விண்ணுலகம் சென்ற அவன், எமனிடம் ஸ்பெஷல் அனுமதி பெற்று, குடும்பம், சுற்றத்தாரை காணும் ஆவலில், இரண்டரை ஆண்டுகள் கழித்து, இந்த பின்னிரவின் மூன்றாம் ஜாமத்தில் சொந்த ஊரை அடைந்திருந்தான்.
மனித உடலை கடந்த “ஆத்மா”வாகையால், பூட்டியிருந்த தன் வீட்டுக் கதவை தாண்டி அவனால் உள்ளே வர முடிந்தது. ஆவியாக இருந்தாலும் அவன் வீட்டுக்குள் வரும் போதெல்லாம் உணரும் “அந்த வீட்டின் வாசத்தை” அவனால் உணர முடிந்தது. இதுவரை மாற்றியிராத அம்மா, அப்பாவின் செருப்புகள், மனைவின் செருப்புகள், அளவில் சிறிய மகனின் செருப்புகளை பார்த்ததும் கண்ணீர் முட்டியது. தான் உபயோகித்த செருப்புகளும், ஷுக்களும் எங்கே? என்று நினைத்தான். வெளியே எறிந்திருப்பார்கள் அல்லது யாருக்காவது பயன்படுத்த கொடுத்திருப்பார்கள். இறந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை வெளியே எறிவதுதானே “மரபு” என்றெண்ணி சமாதானம் அடைந்து கொண்டான்.
உருட்டி வைத்த “நீளமான சாக்கு மூட்டையைப்”- போல், முன்புற ஹாலிலிருந்த இரட்டை பெஞ்சில் கம்பளிப் போர்வைக்குள் அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த தூக்கத்திற்கு அடையாளமாய் நிதானமான “குறட்டை” சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கிழே பாயில் ஒருக்களித்து படுத்து அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். ஆவியாக இருந்தாலும் மனிதன் தானே. பாச உணர்வு இருக்காதா, என்ன? உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பரிதவிப்புடன் இருந்தான் அவன். முன்புற ஹாலில் எந்த மாற்றமும் இல்லை. தோற்றம், மறைவு தேதிகளுடன், சந்தன மாலை தொங்க, இராணுவ சீருடையுடன் கூடிய அவன் போட்டோ மட்டும் புதியதாய் இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும், இவன் வாங்கி விட்ட “மீன் தொட்டிமீன்கள்” முன்பை விட வளர்ந்திருந்தது.
அத்தனையும் கனத்த மனதுடன் கடந்து, படுக்கை அறைக்குள் நுழைந்தான். மனைவியையும், மகளையும் காணப் போகும் உணர்ச்சி துடிப்பை அவனால் அடக்க முடியவில்லை. சதையில்லா, எலும்பில்லா “ஆவிஉடம்பு” பாசப்பிணைப்பால் பரிதவித்தது. கட்டிலில் வாடிய பூப்பந்தாய் உறங்கிக் கிடந்த மனைவி மிருளாயிணியையும், அவள் மீது காலிட்டு படுத்திருக்கும் மகன் பத்மனையும் கண்டான். இரண்டரை வருடத்தில் இவர்களுக்குள் எத்தனை மாற்றங்கள்.
மிருளாயிணியை “மிரு” என்றே அழைப்பான் அவன். கொஞ்சமாய் குண்டாகியிருந்தாள். முடி அங்கும் இங்கும் கலைந்திருக்க, பொட்டில்லாத நெற்றி, பாலைவன நிலம் போல பரந்திருந்தது. “மிரு”வுக்கு அழகே அவள் சிரிப்புதான். அவள் சிரிக்கும் போதெல்லாம், “ஆயுள் முழுவதும் அதில் விழுந்து கிடக்கலாம்” -என்ற அளவிற்கு, பென்சில் நுனி வடிவில் கன்னத்தில் “ஒரு குழி” தோன்றும். கல்யாணமான நாள் தொட்டு, அதனை காண்பதற்காகவே அவளை ஏதாவது செய்து, சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான் அவன். எட்டு வருட திருமண வாழ்க்கையில், அவளோடு அன்பில் கலந்து, ரசித்து, சிரித்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தான். அவளோடு காஷ்மீரில் கழித்த ஒன்றரை வருட “புதுத் தம்பதிகள்” வாழ்க்கை, சுற்றித் திரிந்த இடங்கள், கட்டியணைத்த பொழுதுகள், முத்தமிட்ட விநாடிகள், “உடல் சுகம்” சுகித்த நிமிடங்கள், பெற்றோர் ஆன காலங்கள் என அனைத்தும் காட்சிகளாய், கண் முன்னே விரிந்தது. அற்ப ஆயுளில் இறந்த அவனை நினைத்து, அவனுக்கே பாவமாய் இருந்தது.
தன் அம்மா பத்மாவதியின் பெயரையே, மகனுக்கு “பத்மன்” என சூட்டியிருந்தான் அவன். தன் அச்சு அசலான முகச்சாயலுடன் மகன் பிறந்த நாளில் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆசை மகன் “அப்பாவென” அழைத்த நாளில், ஆனந்த எல்லையின் வரைமுறையை தாண்டிய மகிழ்ச்சியிலிருந்தான் அவன். அத்தனையும் மொத்தமாக பொசுக்கிய ஆண்டவன் மீது கோபம் வந்தது. “எல்லாம் விதி” என்ற மேம்போக்கான எண்ணவோட்டத்திற்கு அவனால் வர இயலவில்லை. கைவிட்டுப் போன வாழ்க்கையை நினைத்து, கட்டுக்கடங்காத கவலையும், கண்ணீரும், வருத்தமும் நெஞ்சமெங்கும் எதிரொலித்தது. மனிதனாக இருந்தால் அழுது தீர்க்கலாம். ஆவியாக இருக்கும் “அவன்” என்ன செய்வான்? படுக்கையறையின் ஓரத்திலிருந்து துக்கம் மேலிட பொருமிக்கொண்டிருந்தான்.
சேவல் விசிலடிக்க, கதிரவன் லைட்டடிக்க பொழுது புலர்ந்தது. வழக்கம் போல் அப்பா முதலாய் எழுந்திருந்தார். சிறிது நேரத்தில் அம்மாவும் எழுந்து சமையலறைக்கு சென்றாள். ஆறரை மணி கடிகார ஆலார ஒலியில் மிருவும் எழுந்து சோம்பல் முறித்தாள். அவள் உடுத்தியிருந்த அரக்கு நிற நைட்டி அவனுக்கு புதியதாய் இருந்தது. அவனுக்கு அவளை அப்படியே சென்று கட்டியணைக்க வேண்டுமென்று இருந்தது. கணவன் மனைவியின், எவ்வளவு பெரிய குடும்ப சண்டையையும், “காலைநேர கட்டியணைப்பு” தீர்த்து விடும் -என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் அவன். அவர்களுக்குள் சண்டை ஏதும் இல்லாமல் இருந்தாலும், அவளோடு இருந்த நாட்களில் அவர்களுடைய “காலைநேர கட்டியணைப்பு” எந்நாளும் தவறாது. ஆனால் இன்று உணர்வோடு, உடம்பில்லாமல் வெதும்பி புழுங்குகிறான்.
வழக்கமான வீட்டு நிகழ்வுகள், அந்த வீட்டுக்குள்ளும் அடுத்தடுத்து அரங்கேற, நேரம் கடந்து போய் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் ஆர்வம் மேலிட கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அம்மா சமையலறை வேலைகளில் பரபரப்பாக இருந்தாள். அப்பா வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். மிரு குளித்து முடித்து, பத்மனை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள். பத்மனின் ஆடை எடுக்கும் போது பிரோவுக்குள் கவனித்தான் அவன். அவன் உடைகள் ஏதும் இல்லை. அவன் விரும்பி படிக்கும் புத்தகங்களில் ஒட்டடை பிடித்திருந்தது. அலங்கார மேஜையில் அவன் பயன்படுத்தும் உருண்ட சுருள்முடிச் சீப்பு இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அந்த வீட்டில் அவன் இருந்ததிற்கான அடையாளமே அழிக்கப்பட்டிருந்தது. யாரும், எதற்காகவும் அவனை நினைத்துப் பார்த்ததாக தெரியவில்லை. செத்த ஆட்களை எந்நேரமுமா? நினைத்துக் கொண்டிருப்பார்கள். “இறந்தவர்கள் வரப்போவதில்லை” என்ற நியதியை உணர்ந்தவர்கள், போனவர்களை நினைத்துப் பார்க்க வேண்டுமென்பது கட்டாயமா? என்ன? இருந்தாலும் நான் இவர்கள் மீது எத்தனை பாசம் வைத்திருந்தேன். 
மிரு மீது, 
பத்மன் மீது, 
அம்மா மீது, 
அப்பா மீது....

எத்தனை பாசம் வைத்திருந்தேன். எப்போதும் வேண்டாம். ஒரு சில வினாடிகளாவது என்னை நினைக்கலாமே- என்பது மாதிரியான எண்ணவோட்டத்திலிருந்தான் அவன். வருத்தமாக இருந்தது அவனுக்கு.
பத்மனை பள்ளிகூடத்தில் விட்டு விட்டு, அப்பா வேலைக்கு செல்வார் போலும். இருவரும் ஒன்றாக பைக்கில் கிளம்பினார்கள். அப்போதுதான் கவனித்தான், அவன் பைக்கில் முன்புறத்திலும், பின்புறத்திலும் எழுதியிருந்த “INDIAN ARMY” என்ற வாசகம் அழிக்கப்பட்டிருந்தது.
அவன் உயிரோடு இருந்த நாளில், கலவி முடிந்த ஒரு பொழுதில், படுக்கையில் மிருளாயினி உதிர்த்த வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தது.
“நீங்க இல்லன்னா... நான் செத்துருவேங்க”
ஏதோ ஒரு உணர்ச்சி பெருக்கில் அவள்தான் சொன்னாள்.
“நீங்க இல்லன்னா... நான் செத்துருவேங்க”
ஆனால் இப்போது அவள் முகத்தை மீண்டும் கவனித்தான். அம்மாவும் அவளும் உட்கார்ந்து ஏதோ ஒரு “டிவி சீரியல்” பார்த்துக் சிரித்துக் கொண்டிருந்தனர். பின்பு ஊர்க்கதைகளை பேசி, சமையலறை பணிகளை செய்து கொண்டிருந்தனர். அவன் மன உறுத்தலோடு, ஆவியாக அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
சாயங்காலம் அப்பாவும், பத்மனும் வந்தார்கள். மிரு எல்லோருக்கும் காப்பி கொடுத்தாள்.
அம்மா பத்மனிடம் கொஞ்சினாள்.
“குட்டா... ஆச்சி.... உனக்கு என்ன செய்து வச்சிருக்கேன் சொல்லு”
பத்மன் ஆச்சர்யம் காட்டி, கண்களை உருட்டினான்.
“என்னது ஆச்சி... சொல்லு...சொல்லு.. என்று துள்ளிக் குதித்தான்.
மிரு அவனைப் பார்த்து சிறிதாக புன்னகை காட்டினாள்.
“அம்மா... நீயாவது சொல்லுமா... என்னதுமா? என்றான் பத்மன்.
அம்மா சமையலறைக்கு சென்று ஒரு பாத்திரம் நிறைய “பால் பணியாரம்” எடுத்து வந்தாள். 
பால் பணியாரத்தைப் பார்த்து ஆர்வத்தில் துள்ளிக் குதித்தான் பத்மன். அவன் அம்மாவின் பணியாரச் சுவை தெரிந்ததால், ஆவியாக இருந்த அவனுக்கும் நாக்கில் எச்சில் ஊறுவதுபோலிருந்தது.

பத்மன் குஷியாக, 
பண்ணியாரம்...! 
பண்ணியாரம்...! 
பண்ணியாரம்...! 
பண்ணியாரம்...!- என்று ஆர்வதோடு சப்தமிட்டு, இரண்டு மூன்றை அள்ளி வாயினுள் திணித்தான்.

“லேய்.. மெதுவா தின்னுல... நாசில ஏறிராமே” என்று பதட்டப்பட்டார் அப்பா. அவரும் ஒன்றை எடுத்து தின்ன எண்ணினார்.
பத்மன் தின்னுவதைப் பார்த்து,
“அவ அப்பனும் இப்படித்தானே... பால் பண்ணியாரம்னா செத்துருவான்னு”- சொல்லி, வார்த்தை கமறி, கண் கலங்கினாள் அம்மா.
அப்பா தின்ன வாய் வரைக்கும் கொண்டு போனதை கிழே வைத்து விட்டார்.
அம்மா சொன்னதை கேட்டு முகம் மாறிய மிருளாயினி, கண்கலங்கி சட்டென்று படுக்கையறைக்கு ஓடினாள். யாருக்கும் தெரியாமல், அவள் கைப்பட தைத்த, அவன் அழுக்கு சட்டைகளால் செய்யப்பட்ட “தலையணையில்” முகம் புதைத்து, அழுதாள்.
பத்மன் சாப்பிட்டது போக “மீதிப் பணியாரங்கள்” அப்படியே கிடந்தது.
ஆவியாகிய “அவனுக்கு” அங்கு நிற்கவே பிடிக்க வில்லை.

#தெரிசை சிவா 

பூக்களை பறிக்காதீர்கள்

சமீப காலங்களில் எதிர்ப்படும் பாலியல் அவலங்களுக்கு, மிக எளிதாக நடைமுறைப் படுத்தப்படும் தீர்வாக எனக்கு படுவது, நம் பிள்ளைகளுக்கும் நமக்கும் உண்டான கலாச்சாரத்தின் (?) பொருட்டு ஏற்படும் தொடர்பு இடைவெளிகளை குறைப்பதில் இருக்கிறது. வெளியே இருக்கும் மனிதர்களில் யாரை சந்தேகப்படமுடியும், யாரை நம்ப முடியும். பிள்ளைகளுடன் பெற்றோருக்கு உள்ள "புரிந்துணர்வே" இதற்கான தீர்வாக இருக்குமென்று நம்புகிறேன்.
முதலில் பிள்ளைகளுடன் இது குறித்து உறவாடுங்கள். பதின்ம வயது பெண் பிள்ளைகளோடு இது எப்படி சாத்தியம் என்கிறார்கள். சாத்திய படுத்தவேண்டும். நாம் அவர்கள் வயதில் இருந்தபோது, நமக்கு இருந்த அறிவை விட, அவர்களுக்கு இப்போது smartness அதிகம். அறிவு அதிகம். exposure அதிகம். நம்முடைய இளவயது அறிவை, தற்போதைய சிறார்களின் அறிவோடு compare செய்து, அந்த அளவிற்கு சிந்திக்காமல், தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப சிந்தித்து, விரைவாக செயல்பட பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
சில பெண் பதிவர்கள் எழுதிதை படித்து இருந்தேன். ஆறேழு வயதிற்கப்புறம் பெண் குழந்தைகளை, பெற்ற தாயே, தந்தையின் மடியில் அமர அனுமதிப்பதில்லை என்று. அதனை பெருமையாக சொல்லி, எழுதி மார்தட்டி கொள்கின்றனர். மிகவும் வேதனையாக இருந்தது எனக்கு . அடேய்.. பெண் குழந்தாய்... உனக்கு இந்த உலகத்தில் பாதுகாப்பு இல்லை. அதுவும் சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை. அப்பாவை கூட நம்பாதே ... எச்சரிக்கையாய் இரு.. என்று கூறுவது போல் இருந்தது. இதை கேட்கின்ற இரண்டும் கெட்ட வயதிலுள்ள பெண் குழந்தைகள், அதன் பின்பு "அப்பாவை" எப்படி பார்க்கும் என்று வெகு நேரம் சிந்தித்து கொண்டிருந்தேன். சமுதாய நிகழ்வுகளை காட்டி எச்சரிக்கை செய்வது வேறு, பயமுறுத்துவது வேறு. இப்படி அளவிற்கு அதிகமாக அவர்களை alert செய்யும் போது, "அந்த பெண்" "அந்த உயிர்" எப்படி நிம்மதியாக இந்த உலகத்தில் வாழும்? எப்படி சுயமாக சிந்திக்கும்? சுற்றுச் சுழலில் எப்படி நிம்மதியாக சிரிக்கும்? ஆணோ பெண்ணோ சமூகத்துடன் இணைந்து வாழ்வது தானே வாழ்கை. எச்சரிக்கை.. எச்சரிக்கை.. எச்சரிக்கை என்ற பெயரில் தன சுயத்தை இழந்து, தன்னம்பிக்கையை இழந்து, ஆயுள் முழுதும் தன் உடலை, தன் யோனியை, தன் மார்பகத்தை , இன்ன பிற அங்க அவயங்களை சுற்றியிருப்பவர் பார்வையிலிருந்து பாதுகாக்கவே முயன்று கொண்டிருக்கும். 
நான் சொல்ல விரும்புவது, சொல்ல வருவது எல்லாம் ஒன்றேதான். உங்கள் பிள்ளைகளுக்கு "நீங்கள்தான் அவர்கள் பாதுகாப்புக்கு உகந்தவர்கள்" - என்பதை உணரவையுங்கள். இந்த வயதில் உனக்கு இப்படியெல்லாம் தோன்றும் என்பதை கூறுங்கள். தயக்கம் விடுத்து, வெட்கம் ஏதுமின்றி, குழந்தைகளோடு பேசுங்கள். தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். வெளிச்சமாக இருக்கிறது என்று வேறு இடத்தில் தேட முடியாது.
அம்மாவும், அப்பாவும் “இப்படிச் செய்ததால்தான்” நீ வந்தாய் என தெளிவாக விளக்குங்கள். உங்கள் குழந்தையின் குஞ்சுமணியை பிடித்து “ஒண்ணுக்கு” போவதை சொல்லிக் கொடுத்தீருப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கினை உபயோகப்படுத்த சொல்லிக் கொடுத்தீருப்பீர்கள். அதே போல் அவர்களுக்கு புரியும் வயதில், நேரடியாக சொல்லி விடுங்கள். முடியவில்லையென்றால் at least இலைமறை காயாக, அவர்களுக்கு விளங்கும் படி சொல்லுங்கள். அவர்களின் கேள்விகளுக்கு, தெளிவான பதிலளியுங்கள். உடல்ரீதியாக விளக்கி, உள்ளத் தேவையையும் புரிய வையுங்கள்.
பெண்ணுடல் புனிதமானது என்ற சமயவழிச் செய்திகளை அவர்களுக்குள் புகுத்தாதீர்கள். ஆணை போன்று உனக்கும் ஒரு உடல். அவ்வளவே.. அந்த உடம்பை மற்றவர்கள் தவறாக உபயோகிக்கும் போது, சட்டென்று எதிர்வினையாற்ற கற்றுக் கொடுங்கள். "உன் உடலை அவன் தொட்டு விட்டான்.. உன் புனிதமே போய் விட்டது" என்பது மாதிரியான "மன நிலைமையை" எக்காலமும் பெண் குழந்தைகள் மனதில் உருவாக
காரணமாக இருக்காதீர்கள். அது அவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பதோடு, "தனக்கு ஏதோ பெரிதாக நேர்ந்து விட்டது.. இந்த இழிவை எக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லக் கூடாது" - என்ற மனநிலைக்கு அவர்களை தள்ளுகிறது. இந்த இடத்தில்தான் "பாலியல் தொல்லையில்" ஈடுபடுவோர் வெற்றியடைகிறார்கள்.
படிப்படியாக முன்னேறி தன்னுடைய வெறிக்கு குழந்தைகளை பலியாக்குகிறார்கள்.

ரோட்டில் ஒரு நாய் துரத்தினால் பெண் பிள்ளைகள் அப்பாவிடம், அம்மாவிடம், அண்ணனிடம் சொல்வதைபோல், பாலியல் துன்புறுத்தல்களையம் சகஜமாக வெளியே சொல்ல அனுமதியுங்கள். இம்மாதியான செயல்களில் ஈடுபடுபவர்களின் முதல் வெற்றியே "பெண் பிள்ளைகளின்" பயம் தான். "வெளியே சொன்னால் உனக்குத்தான் அசிங்கம்" "எல்லாத்தையும் இன்டர்நெட்ல போட்ருவேன்" " வெளியே சொன்னால் கொன்னுருவேன்" என்ற வார்த்தைகள் தான்.
"ஆம்பிளைனா நெட்ல போடு டா பாப்போம்... நீ போட்டிட்டு எப்படி உயிரோட இருப்பேன்னு பாக்குரேன்னு " - சொல்லுற பெண்கள் வேண்டுமென்கிறேன்"
இதையெல்லாம் விட முக்கியம் இம்மாதியான விஷயங்களை உணர்வுபூர்வமாக அணுகுவதை விடுங்கள். அறிவு பூர்வமான விடைகளோடு அணுகுங்கள். ஆண் குழந்தைகளுக்கும் உரிய ஆலோசனைகளை கொடுங்கள். பெண்ணுடம்பை பற்றிய புரிதல்களை ஆண் குழந்தைகளுக்கும் தெளிவு படுத்துங்கள். குழந்தை வளர்ப்பு என்பது ஆண் குழந்தையாயினும், பெண் குழந்தையாயினும் ஒன்றே. சானிட்டரி நாப்கின் விளம்பரங்களை கண்டு, கமுக்கமாக சிரிக்கும் பத்து, பனிரெண்டு வயது ஆண் சிறார்களை நான் பலமுறை கண்டிருக்கிறேன். விசாரித்த போது, அங்கும் இங்கும் கேட்டதை வைத்து, அரையும், குறையுமாய் ஏதோ தெரிந்து வைத்திருக்கிறார்கள். "அம்மா... உன்னோட periods ல நீ எந்த pad உபயோகப் படுத்துறன்னு" கேக்குற சுதந்திரம் ஆண் மகவுக்கு உண்டா? எத்தனை தாய்மார்கள், இது குறித்து தங்கள் பையனுடன் பேசியிருப்பார்கள்? இப்படி பெண்ணுடம்பை பற்றிய புரிதல் இல்லாமல், வளர்கின்ற ஆண்மகன்கள், கிடைக்கின்ற வாய்ப்பிலெல்லாம் "பெண்ணை" சீண்டவே துணிகின்றனர்.
அம்மாவைப்போல் உனக்கும் ஒருத்தி வருவாள், அவளை நீ எவ்வாறெல்லாம் கவனிக்க வேண்டுமென்ற உறுதியை மகனுக்கு ஊட்டுங்கள். புறஅழகை கண்டு, infatuation – ல் விழும் “அந்த ஈர்ப்பு” காதலில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். உடலை பற்றி விளங்குங்கள். உள்ளம் தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
ஒரு பெண் தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை கூட "நல்ல கண்களால்" காண முடியாத சமூகத்தில் வாழ்வதாக எங்கோ படித்தேன். அந்த நல்ல கண்கள் இல்லாதவர்களில் பதின்ம சிறுவர்களிலிருந்து, அறுபது வயது தாத்தா வரை இருப்பதுதான் அபத்தம்.
வீட்டுக்குள் தயக்கங்கள் விலகும் போது, நாட்டுக்குள் எளிதாக களையெடுப்பை தொடங்கலாம்.. வேறு என்ன சொல்ல...!