அவனைப் பார்த்தாலே
எல்லோருக்கும் ஒரு எளக்காரம்... சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும்
ஒரு பரிகாசம். இத்தனைக்கும் அவன் பண்ணையார் வீட்டில் பிறந்தவன்தான். அவனையொத்த
வயதுள்ள சில “பண்ணையார் வாரிசுகள்” செய்யும் ஊதாரித்தனம்,
கள்ளு குடிப்பு, சீட்டு களிப்பு, பெண்ணுப்பிடிப்பு, இவைஏதும் இவனுக்கில்லை. இருந்தாலும் இவன் என்றால், ஊரில் உள்ள
அனைவருக்கும்.. ஒரு உதாசீனம். அவனளவில் சொத்து
பத்துக்கும் குறைவு இல்லை. சிறமடம் பத்தில் முக்குருணி வயல்காடும், தெள்ளாந்தி
பத்தில் அரை ஏக்கரும் அவன் பேருக்கு எழுதி வைத்து விட்டுத்தான் நீலகண்டப் பண்ணையார்
இறந்திருந்தார். புத்தி குறைவான
பிள்ளை பிறந்ததற்கு அவர் என்ன செய்வார். நல்ல
காலம்....சாவுக்கட்டிலில் இருக்கும் போதே விவரமா கொஞ்சம் சொத்து எழுதி வைத்ததினால்,
இப்போது சொந்த வீட்டில் கஞ்சியாவது கிடைக்கிறது அவனுக்கு.
ஆரம்பத்தில்
சொகுசாக வீட்டில் இருந்தாலும், பண்ணையாரின் இறப்பிற்குப் பின் வெளியே வர ஆரம்பித்தான். சாப்பாடு கொடுத்து யார் என்ன வேலை கொடுத்தாலும்
செய்ய ஆரம்பித்து, இப்போது ஊரின் தவிர்க்க முடியாத வேலைக்காரனாகியிருந்தான். ஆரம்பத்தில் தடுத்த கூடப்பொறப்புகளும் இப்போதேதும்
கண்டு கொள்வதில்லை. அவனை விட, சிறமடம் முக்குருணி
வயல்காடும், தெள்ளாந்தி அரை ஏக்கரும், அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது.
ஆதிமூல
பெருமாள் பிள்ளை என்பது அவன் அம்மா, அப்பா இட்ட பெயர். ஆனால் மொத்த ஊரும் அழைப்பது இப்போது இந்த பெயரைச்
சொல்லித்தான்.
“அண்டி”
“ஏல அண்டி
நாளைக்கு தேங்கா வெட்டுடே...காலைல வந்திரு மக்கா.. நேர்த்த வந்தா பதினோரு
மணிக்குள்ள செமந்து முடிச்சிருலாம். நேர்த்த வாடே..”
“அண்டி ...
ராத்திரி எட்டு மணிக்கு போணும்டே.. வடசேரி சந்தையில மலைக்கறி எடுத்திட்டு, விறகு
கடைக்கு போணும்... பெருமாளுக்கு வண்டிதான்.. மறந்திருராத டே,,”
“அண்டியண்ணே...
அப்பா கலப்பையை எடுத்திட்டு தெக்கு பத்துக்கு வர சொல்லுச்சு.. முழக்கோலும்
எடுத்திட்டு போவியாம்.. நேராகாம்..
“மாப்பிள அண்டி... நம்ம சொக்கலிங்க தாத்தா
மண்டைய போட்டுட்டாருடே... நாலு பச்சை மட்டை வெட்டிட்டு வந்திரு.. போ மாப்ள...”
--- என்பது
மாதிரியான சம்பாஷனைகள் அவன் வாழ்வின் அங்கம்.
அவனை வைத்து ஆகவேண்டியக் காரியங்களை செய்து முடிப்பதும், காரியம்
முடிந்ததும் கழட்டி விடுவதுமாய் அவன் வாழ்கை சபிக்கப் பட்டிருந்தது.
பாவம்.... சம
யோசித புத்தி இல்லாமல் பிறந்தது அவன் குற்றமா?
ஆதிமூல
பெருமாளுக்கு.. இல்லை.... இல்லை... அண்டிக்கு குறை சொல்ல முடியாத ஆஜானுபாகுவான
உடம்பு.. கருப்புதான்.. ஆனால் கருவேல மரங்களுக்கு நிகரான உடற்கட்டு.. கள்ளம்
கபடமற்ற வெள்ளை மனம். எப்போதும் அளவுக்கதிகமாக எண்ணை தேய்க்கப்பட்ட தலை. பக்க
வகிடு எடுத்த தலை சீவல். அளவான முட்டை கண்கள்.. அளவுக்கு மீறிய முன்பல் நீட்டம். அடிக்கடி
எச்சில் வடியும் வாய் பகுதி. புஷ்டியான கொளுத்த வயிறு. நரம்புகள் பின்னி காணப்படும் கால்கள். கால் விரல்களில் நகம் வெட்டி குறைந்தது ஐந்தாறு
வருடங்கள் இருக்கும். நக திரடுகள், கடலில் ஊறி தடித்த பாறையைப் போல் கரடு முரடாக
இருந்தன. தற்போது எழுத்தில் விவரிக்க
முடியாத ஒரு கலரில் இருந்த வேஷ்டித்தான் “முழு நேர உடை”. ஒரு காலத்தில் அந்த வேஷ்டி வெள்ளை கலரில் இருந்ததாக
சொல்கிறார்கள். உண்மை கடவுளுக்குதான்
தெரியும்.
இப்படிப்பட்ட
சர்வ லட்சணங்களையும் சேர்த்து, மனதில் ஓன்று கூட்டினால் ஒரு உருவம் வருமே அவன்தான்
“அண்டி”. பத்து நிமிடம் அவனோடு
பேசிக்கொண்டிருந்தால், எந்த பாமரனுக்கும்
தெரிந்து விடும் அவன் புத்தி கூர்மையின் இயலாமை.
சில
நேரங்களில் அவன் செய்வது சில பேருக்கு எரிச்சலாகவும், பல பேருக்கு சிரிப்பாகவும்
இருக்கும்.
லேய் அண்டி
செய்த வேலை தெரியுமா இன்னைக்கு??
இல்லய............
என்ன செய்தான்.?
மேலத்தெருவிற்கு
பதிலாக தெற்கு தெரு சொக்கலிங்கம் வீட்டுக்கு போய்
பச்சை ஓலையை போட்டு விட்டு,
“தாத்தா, நீரு இன்னும் சாகலையான்னு கேட்டிருக்கான்.. மத்தவரு கோவத்துல....சீலை
இல்லாம ஆடிருக்காரு..
அன்று ஊரு
முழுவதும்.... இதனால் ஏற்பட்ட “சிரிப்பொலி”தான்..
ஊரில் கொஞ்சம்
காறாரானவர் காளிமுத்து வாத்தியார்.
நாப்பது வயதானாலும் தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பவர். எந்த வம்பு
தும்புக்கும் போகாதவர். அவர் மானத்தை வாங்கிட்டான் இந்த அண்டி பய. நடந்தது இதுதான். ஊருக்குள் செய்தித்தாள் போடும் பையன்
காய்ச்சலில் விழ, இரண்டு நாள் மட்டும் பேப்பர் போடும் வேலை, அண்டிக்கு
வாய்த்தது. அந்தப் பையனைப்போல அண்டிக்கு
சைக்கிள் ஓட்டத் தெரியாததால், பேப்பரை கையிலேயே கொண்டுச் சென்று, வீடு வீடாகப் போடச்
சொல்லி இருந்தான் பேப்பர்காரன்.
இரண்டு
நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் பேசி, அண்டியும் ஒத்துக்கொண்டான்.
அடுத்த நாள்
காலை ஐந்து ஐந்தரை மணிக்கு விடியம் போதே ஒரே மழை.
அண்டியும் தளராது வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டுக்கொண்டிருந்தான். காளிமுத்து
வாத்தியார் வீட்டு வாசலில் வெள்ளம் தேங்கி இருந்ததால் வெளிக் கதவை திறந்து,
ஜன்னலின் வழி பேப்பரை நனையாமல் போடும் நோக்கத்தில் ஜன்னல் கதவை தள்ளினான். மழை நேரமாதலால் வாத்தியார் மனைவியோடு
சல்லாபத்தில் இருந்திருக்கிறார். விரக
உச்சத்தோடு இருந்த கட்டில் காட்சியை கண்ட அடுத்தகணம், போட்டான் பாரு சத்தம்..
அவ்வளவுதான்.
“ஏய்..அந்த
அக்காவை உடு... அந்த அக்காவை உடு... அந்த அக்காவை விடு...”
அண்டி போட்ட
சத்தத்தில் பக்கத்தில் இருந்த ஐந்தாறு குடும்பங்கள் விழிக்க, சிலர் வீட்டு பக்கம்
ஓடி வர, காளிமுத்து வாத்தியாரின் மானம்
கண்ட துண்டமாகி போனது அந்த காலை வேளையில்.
எல்லாரும்
என்னாச்சு? என்னாச்சுன்னு கேட்க, திருட்டு முழி விழித்தார் காளி முத்து
வாத்தியார். யாரிடம் என்ன சொல்ல முடியும்.
அவர் மனைவி வெளியே வரவே இல்லை.
அண்டி மட்டும்
முடிந்தவரை எல்லோரிடமும் “வாத்தியாரு அந்த அக்காவ புடிச்சு அமுக்கி கொல்ல
பாத்தேரு”-னு சொல்ல, ஊர் முழுதும் அந்த சிரிப்பு சத்தம் அடங்கவே பல மாதங்கள்
ஆகியது.
அவனைப்
பிடித்தவர்கள் “கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாத பய” என்பதும், பிடிக்காதவர்கள்
“காரிய கிறுக்கன்டே...மத்தவன்” என்பதும் வழக்கமான ஓன்று.
அவனைப் பற்றிய
ஊராரின் இழிப்பேச்சுக்கள் அவன் காதுகளில்
விழுந்தாலும், அந்த பேச்சுமொழியின் வீச்சம் அவன் புத்திக்கு உறைப்பதில்லை. அல்லது அவனுக்குப் புரிவதில்லை.
“டாட்டரு
மாத்தி போட்ட ஊசியில தான் இப்படியாயிட்டான்” என்று சிலரும், “ எல்லாம் அவன் அப்பன் செய்த பாவம்டே” என்று
பலரும் அவன் இயலாமைக்கு ஆருடம் கணித்து கொண்டனர்.
மொத்த ஊரும்
அவனை ‘அண்டி” “அண்டி” என்றே அழைப்பதால், ஆதிமூலபெருமாள் என்ற பெயர் அவனிலிருந்து
அழிக்கப்பட்டிருந்தது அல்லது அப்பேருக்கான அவசியம் இல்லாதிருந்தது.
“ஆ காட்டு, ஆ
காட்டு, இந்த ஒரு வாய் வாங்கு மக்கா... இல்லாட்ட அண்டிட்ட புடிச்சு
கொடுத்திருவேன்னு..:- என்று இளம் தாய்மார்கள் குழந்தைகளை மிரட்டி சாப்பிட
வைப்பதும், குழந்தைகளை “சாப்பிடு,
சாப்பிடு” என்று தன் வெங்காய கண்களை உருட்டி அண்டி பயமுறுத்துவதும் அவ்வூரின்
அன்றாட வழக்கமாகிவிட்டது.
இப்படி
எல்லாரும் சொன்ன வேலையை மாடு மாதிரி செய்து விட்டு அவர்கள் கொடுக்கும் அம்பது,
நூறை வாங்கி விட்டு, முடிந்தால் வேலை பார்த்த வீட்டில் அல்லது ரோட்டோர
ஹோட்டல்களில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு படுப்பது தான்...அவன் அன்றாட வாழ்க்கையின்
நிகழ்ச்சி நிரல்.
வேலைகேற்றாற்போல்
சாப்பாட்டிலும் வெளுத்து வாங்கி விடுவான் அண்டி.
எந்த வேலை செய்வதற்கு முன்னாலும், பின்னாலும் சாப்பிடச் சொன்னால் சந்தோஷப்படுவான். சாப்பிடுகையா? சாவுறியான்னு கேட்டா.... “சாப்டிட்டு சாவுரேன்”..னு சொல்லுற
கட்சி...
லேய் அண்டி
ஆராம்பழி சந்தைக்கு வாரியா?
நான் வரல...
இன்னைக்கு பிரதோசம்லா.. கோயிலிலுக்கு போணும்..
வந்தா..
திட்டுவிளையில் ப்ரோட்டா வாங்கி தரேன்... – என்ற வார்த்தையில், உடனே வேலைக்கு
தலையசைத்து விடுவான் அண்டி.
கல்யாண
வீடுகளில் பருப்பு சோறு, சாம்பார் சோறு, ரச சோறு, மோரு சோறுன்னு அவன் வாங்கி
சாப்பிடுவதைப் பார்த்தாலே நமக்கு வயிறு நிரம்பி விடும். டீ குடிச்சாலும் மூணு நாலு தான். வடை முறுக்கெல்லாம் ஏழு எட்டு தான். புத்தியை குறைவாக வைத்த கடவுள், வயிறை மட்டும் வாட்டமில்லாமல்
கொடுத்திருந்தார்.
ஆவணிமாத
மூன்றாவது வெள்ளிக்கிழமை, நிறைந்த பௌர்ணமியன்று ஊர் சுடலை மாட கோவிலுக்கு கொடை
கழிப்பதென்று தீர்மானிக்கப் பட்டது. ஊருக்கு வெளியே பழையாற்றின் கரையில் அமைந்திருந்தது
சுடலை கோவில். நீண்ட நெடிய சுடலை சிலை
உருவமும், அருகில் அமர்ந்திருந்த இசக்கி அம்மனும், எதிரில் அமர்ந்த முண்டன்
சாமியும், பரந்து விரிந்த ஆலமரமும், ஒட்டி அமைந்த கரி படர்ந்த மயானமும், கடந்து
செல்லும் எவரின் மனதிலும், ஒரு வித அமானுஷ்ய தன்மையை ஏற்படுத்தும்.
கொடை நடக்கும் மூன்று நாளும் அண்டிக்கு
கோவில் தான் தஞ்சம். கால் நாட்டுவதில்
தொடங்கி, கோயிலை சுத்த படுத்துதல், சாமி சிலைகளை குளிப்பாட்டுதல், பொங்கி பொரிக்க
தேவையான ஏற்பாடுகளைச் செய்தல், பூஜைப் பொருட்களை அடுக்கி வைத்தல், போன்ற எடு பிடி
வேலைகளுக்கு அண்டிதான் பொறுப்பு.
வாயிலிருந்து வடியும் “நெய்க்கு” பயந்துப் பஞ்சாமிர்தம் முதலான பிரசாதம் செய்யும்
வேலையிலிருந்து அவனுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஊர்த்தலைவர் மாணிக்கம்பிள்ளை
சமையல் நடக்கும் “ஆக்குபிரை”யின் சாவியை அண்டியிடம் கொடுத்திருந்தார். அது அவனுக்கு
பெரிய கௌரவமாக இருந்தது. சாவியைத் திறப்பதும் மூடுவதுமாக அவன் செய்யும் பாசாங்குகள்
பல பேருக்குச் சிரிப்பை ஏற்படுத்தியது.
ஒய் மாமா...
பைத்தியாரண்ட போய் சாவியை கொடுக்கேரு..?
யாரு அவனா பைத்தியம்????
.. விவரகாரண்டே அவன்... வேற எவன்ட கொடுத்தாலும் பிரச்சனைதான்... இவன்ட இருந்தா ஒரு துண்டு இலை ஒருத்தருக்கும்
கொடுக்க மாட்டான்.
மாணிக்கம்
பிள்ளை சொன்னது உண்மைதான்.
மூன்றாம் நாள்
நள்ளிரவு யாம வேளையில் உச்சிக் கொடை நடந்து முடிந்திருந்தது. மயானக் குழியில் உருண்டாடிய “சாமி கொண்டாடிகள்”
உடலெங்கும் சாம்பலோடு, களைப்பு மிகுதியில் குளிக்கச் சென்றுக் கொண்டிருந்தனர். திருநீறு, சாம்பிராணிப் புகை, பாக்குக் கொலை, பழங்கள்,
சந்தனம், களபம் போன்ற எல்லா வாசனைகளையும் ஏற்றுக்கொண்டு ஆஜானுபாகுவாய் சிரித்திருந்தனர் சுடலை மாடனும்,
இசக்கி அம்மனும். பலியிடப்பட்ட விலங்கின்
ரத்தம் கோவில் முகப்பில் மண் குடித்தது போக மீதமிருந்தது. வில்லுப்பாட்டு காரர்கள், மேளக்காரர்கள் பனை ஓலை பாயை விரித்து ஆலமர மூட்டில் படுத்து
கிடந்தனர்.
படைப்புச்
சோறுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துக் கொண்டிருக்க, தறிகெட்ட இளவட்டங்கள் ஏழெட்டு பேர், கோயிலை
அடுத்த ஆற்றங்கரை இருட்டில் தண்ணியடித்துக் கொண்டிருந்தனர். படைப்புப்சோற்றின்
சுவையை நினைத்துக் கொண்டே ஆற்றில் உருளியை
கழுவிக் கொண்டிருந்தான் அண்டி. ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்ட கறிகளையும், பலி
முடிந்து, சமைத்துக் கொண்டிருக்கும் அசைவ கறியையும் சேர்த்து, ஒருவித ரகசிய விகிதாச்சாரத்தில்,
கலந்து, சேர்த்து கிண்டும் போது வருமே ஒரு
மணம். செத்து கிடந்த பிரேதமும் “எனக்கு
கொஞ்சம் தாங்கடே”ன்னு எழுந்து வந்து சொல்லும்.
படைப்பு சோற்றின் சுவைக்கு அடிமைப்பட்ட
பலர், கோயில் வாசலில் ஆங்காங்கே காத்துக் கிடந்தனர்.
ஆற்றங்கரை
இருட்டில் தண்ணியடித்துக்கொண்டிருந்த கோலப்பனுக்கு போதைத் தலைக்கேறியிருந்தது. காளி முத்து வாத்தியாரின் கடைசி தம்பிதான்
கோலப்பன். கொஞ்சம் சட்டம்பி. ஆரல்வாய்மொழி காற்றாலையில் மெக்கானிக் வேலை
பார்ப்பவன். ‘திண்டுக்கு முண்டு’
பேசுபவன். வீட்டுல “சொல்லி” அடங்காதது, ஊர்ல “பட்டு” அடங்கட்டும்னு, காளிமுத்து வாத்தியாரும் கண்டு
கொள்வதில்லை. போலீஸ் காரர்களுடன்
பேசுவதையே விரும்பாத அண்ணனுக்கு, பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் தன் பெயரில் ஒரு வழக்கு
இருப்பதை, பெருமையாக நினைக்கும் தம்பி.
மூன்றாவது
ரவுண்டின் ஆரம்பத்தில் தான் கோலப்பனுக்கு சட்டென்று அந்த “ஆசை” வந்தது. உடனிருந்து தண்ணியடித்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளையிடம்
பேச ஆரம்பித்தான்.
லேய்...
ஆரம்பிள்ள..
சொல்லு...
மாப்ள...
கோவில்
ஆக்குபெரையில போய்.... கொஞ்சம் “அவியல்” எடுத்திட்டு வால..
இப்பமா..
மாப்ள... கொஞ்சம் பொறு டே.. படப்பு சோறு திங்கலாம்..
அது திங்கலாம்ல...
இப்ப கொஞ்சம் “அவியல்” எடுத்திட்டு வால...
அய்யோ....
மாப்ள... ஆக்குபெரை சாவி, அந்த பைத்யாரன் அண்டிக்கு
கைல இருக்கு.. இப்பம் போனா அவன்ட
சண்டைதான் போடணும்..
தன் அண்ணன்
காளிமுத்து வாத்தியாரை கேவலப்படுத்திய அண்டி மீது
ஏற்கனவே கொலை வெறியில் இருந்தான்
கோலப்பன். அரைகுறை போதையோடு எழுத்து சாரத்தை மடித்து கட்டிக்கொண்டு கொண்டு கோவில்
ஆக்குபிரையை நோக்கி நடந்தான்.
எல்லாக்கறிகளையும்
ஓன்று சேர்த்து படைப்பை கிண்டி கொண்டிருந்தார் சமையல் காரர். படைப்புச்சோறை வாங்க, தூக்கக் கலக்கத்தில்
ஊர்மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். சிலர்
இலையோடுப் பந்தியிலேயே உட்காந்து விட்டனர்.
சமையல் செய்த
பாத்திரங்களை ஆற்றில் கழுவி விட்டு, தலையில் இரண்டு குத்துபோணி, சருவம், வாளிகளை,
இரண்டு கையில் வைத்துக் கொண்டு கோயில் முகப்பிற்கு வந்து கொண்டிருந்தான்
அண்டி.
போதை
செருக்கோடு, நேராக அண்டியிடம் சென்றான் கோலப்பன்.
லேய்...
ஆக்குபெரை,சாவிய எடு..
ஒன்றும்
புரியாத அண்டி தலை சுமையோடு, கொஞ்சம் பயத்தோடு சொன்னான்.
அங்க ஒண்ணும்
இல்ல.. பாத்துக்கோ..
அத நான்
பாத்துகிடுகேன். நீ சாவிய எடுல.. தொட்டி தயழி,,!
பாத்திரத்தை
வச்சிட்டு...நானே காணிக்கேன்.. வா... நீ..
ஏதோ ஒரு
வேகத்தில் அண்டி இப்படி சொல்ல கோபம் கொப்பளிக்க கொக்கரித்தான் கோலப்பன்.
“நீ ஒரு
மயிரும் காணிக்காண்டாம்.. சாவிய எடுல மொதல்ல” என்று வேஷ்டியில் கை வைத்து இழுக்க..
மொத்த பாத்திர சுமையோடு அண்டி மிரள.. இவன் வேஷ்டி கோலப்பனின் கையில்
இருந்தது. உள்ளாடை என்ற ஆடம்பரம்
அண்டிக்கு இல்லாதால் அவன் “லிங்க தரிசனம்” சோற்றுக்கு காத்திருந்த அனைவருக்கும்.
மொத்த ஊரும்
சட்டென்று சிரிக்க, அவமானத்தில் ஆடிப்போய்விட்டான் அண்டி. மொத்த
பாத்திரத்தையும் கிழே போட்டு விட்டு கோலப்பனின் மீது பாய்ந்தான் அண்டி.
“பைத்தியார பயல...
யாம் மேல கை வைக்கியா... அண்டிக்கு நாலைந்து அடி கொடுத்து மண்ணில் சாய்த்தான்
கோலப்பன். வலு உள்ளவன் மத்தியில் வலுவற்றவன் என்ன செய்ய முடியும்.
எல்லாம் ஓரிரு
மணித்துளிகளில் நடந்து முடிய, நாலைந்து பேர் கோலப்பனை பிடித்து விலக்கி, வேஷ்டியை
பறித்து அண்டியின் மேல் போட்டனர்.
“எல்லாவன்டையும்
விளையாடுற மாறி எண்ட விளையாடின கொன்னே போடுவேன் தே.......... மவனே.”.. குடி
போதையில் சப்தமிட்டபடி ஆற்றங்கரைக்கு ஓடினான் கோலப்பன். பலியிட்ட ரத்தகறைப் படிந்த
மண்ணில் விழுந்து கிடந்தான் அண்டி. எழவே
இல்லை.
பட்ட அடிகளை
விட அந்த நிர்வாண அவமானம் அண்டியை வெகுவாகப் பாதித்திருந்தாக தெரிந்தது. பலி ரத்தம் அவன் கன்ன பரப்பில் பிசுபிசுப்பாய்
ஒட்டியும் அவன் எழும்பவே இல்லை.
படைப்பு சோறு
ஆசையில் வேகம் வேகமாய் சைக்கிளில் வந்த மாணிக்கம் பிள்ளை விஷயம் கேள்வி பட்டு,
அண்டியை தூக்கி ஆலமர மூட்டில் இருத்தினார்.
“அந்த
சட்டம்பிட்ட யாம்ல சண்டைக்கு போன... கிறுக்கா.. போ... போ... சீலையை உடுத்திட்டு குளிச்சிட்டு
வால.. நேராகு... படப்பு சோறு விளம்பனும்...”
நடந்த அவமானம்
புத்தி சுவாதீனம் இல்லாதவனுக்கு என்பதால் வெகு விரைவில் ஊரார்கள் இயல்பு நிலைக்குத்
திரும்பினர். சில இளவட்ட பெண்கள் மட்டும் எதையோ நினைத்து சிரித்து கொண்டிருந்தனர்.
நாலைந்து பேர்
சேர்ந்து படைப்பு சோறு விளம்பினார்கள்.. மொத்த ஊரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத்
தொடங்கினார்கள்.
அண்டி இருந்த
இடத்திலேயே இருந்தான். முகம் முழுவதும்
மண்ணாய் இருக்க, அழுத இடம் மட்டும் இரு கோடுகளாய் தெரிந்தது. மாணிக்கம் பிள்ளை இரண்டு தடவை சாப்பிட்டு விட்டு,
ஒரு இலை நிறைய சோற்றை வைத்து அண்டியின் முன் வைத்தார்.
“லேய்... கையை
கழுவிட்டு... சாப்டுல...” – என்றார்.
முதன் முறையாக
“அண்டி”... இல்லை இல்லை.. “ஆதிமூல பெருமாள்” சொன்னான்.
“எனக்கு
வேண்டாம்.. பசிக்கல”
இதைச் சற்றும்
எதிர்பாக்காத சுடலை மாடனும், இசக்கி அம்மனும் அவமானத்தில் கற்சிலைகளாய் நின்றிருந்தனர்.
மனதை ஈர்க்கும் வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் அண்ணே.
பதிலளிநீக்குநன்றி தம்பி
நீக்குவட்டார வழக்கு சொற்களில் வெளுத்து வாங்கி விட்டீர்கள்....
பதிலளிநீக்குநன்றி
நீக்குபின்னி எடுத்திட்டடே... அப்படியே ஊரு பக்கம் போய்ட்டு வந்த மாரி இருக்குடே.நெறய எழுது....
பதிலளிநீக்குபின்னி எடுத்திட்டடே... அப்படியே ஊரு பக்கம் போய்ட்டு வந்த மாரி இருக்குடே.நெறய எழுது....
பதிலளிநீக்குநன்றி அண்ணா...
பதிலளிநீக்குஅருமை. திரு. நாஞ்சில் நாடன் கதைகளை படித்த திருப்தி.
பதிலளிநீக்குசெத்து கிடந்த பிரேதமும் “எனக்கு கொஞ்சம் தாங்கடே”ன்னு எழுந்து வந்து சொல்லும்.///////////// செம!!!! வட்டார நடை அருமை.
பதிலளிநீக்குஅருமையான வட்டார வழக்கு. நல்ல நடை . வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குநன்றி
நீக்குஏற்கனவே படிச்சு அதிர்ந்த கதை..இப்போது தான் எழுதாளரை அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்கு