அன்று கல்லூரி வகுப்புகள்
வேகமாக முடிந்து விட்டதால் சீக்கிரமாகவே வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். விசுவாசமாக மரத்தடியில் தலைகுனிந்து ஒரு
பக்கமாய் சாய்ந்திருந்த என் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கல்லூரி வாசலை
கடந்து பிரதான சாலைக்கு வந்தேன்.
பயண தூரங்களை
பிரதிபலிக்கும் பிரதான சாலைக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தது என் கல்லூரி.
கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வழி எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதனை அழகானது..
மிகவும் ரம்மியமான பாதை அது.... சுற்றிலும் மலை சூழ ஒரு காட்டில் பயணிப்பது போல
இருக்கும்.. இருட்டிய நேரத்தில் அந்த வழியாக செல்வது கொஞ்சம் கஷ்டம்தான்..
இருந்தாலும் இயற்கை மீது பற்று உள்ள யாரும் அந்த வழியை புறக்கணிக்க மாட்டார்கள்..
ஆரல்வாய்மொழியை கடந்த கொஞ்ச நேரத்தில் ஆள் சஞ்சாரமற்ற அந்த வழி ஆரம்பித்து
விடும்.. நல்ல சாலை தான்.... எதிரே வாகனங்கள் ஏதும் வரும் வாய்ப்பு இல்லாததால் இரு
சக்கர வாகனத்தில் பயணிக்கின்ற யாவரும் 60 கீ.மீ வேகத்துடனே செல்வார்கள்...
எப்போதாவது எதிரே ஒரு பேருந்து வரும். வழி நெடுக மரங்கள், மின் கம்பங்கள்,மேய்ச்சலுக்கு
பின் திரும்பும் மாடுகள் இவை மட்டுமே..
இவை தவிர தற்போது
சில செங்கல் சூளைகளும் புதிதாக முளைத்திருந்தன. சில நேரங்களில் மாட்டு கூட்டங்கள்
வந்து வழியை ஆக்ரமித்து கொள்ளும். சிறிது தூரம் பயணித்ததும் சற்று தொலைவில் மலை
மனிதனுக்கு அரைஞான் கயிறு கட்டி விட்டது போல் “பொய்கை” அணை அழகாக தெரியும். அதனை சுற்றி பச்சை
பசேலென பட்டு துணி விரித்தது மாதிரி இருக்கும்.
முகத்தில் மோதும்
குளிச்சியான காற்றை சுமந்தபடி பற்பல நினைவுகளோடு கொஞ்சம் வேகமே பயணித்து
கொண்டிருந்தேன். காற்று தலை முடியை திக்குக்கொன்றாய் கலைத்தது.. காற்று மோதியதால்
கண்களிலும் சிறிது கண்ணீர்..
சாலையின் ஒரு வளைவை
திரும்பிய கணத்தில் ஒரு பாட்டி தலை நிறைய விறகை சுமந்து நடந்து வந்து
கொண்டிருந்தாள். பாட்டிக்கு வழி விடுத்து நான் வண்டியை வேகப்படுத்தும் வேளையில்
தான் கவனித்தேன், சாலை முழுவதும் பூக்கள்.. அழகான கிரேந்தி பூக்கள்... குவியல்
குவியலாக ரோடு முழுவதும் ..வழி நெடுக போட்டிருந்தார்கள். காற்றில் அங்கும்
இங்குமாய் அவை ஆடிக்கொண்டிருந்தன.
அத்தனையும் கிரேந்தி பூக்கள்... இடையிடையே சில ரோஜா பூக்களும்..
இந்த வழிகளில் ஏராளமான
சுடுகாடுகளும், கல்லறை தோட்டகளும் இருப்பது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது.
ஒருவாறு ஊகித்து கொண்டேன். இது யாரோ ஒருவருடைய மரணத்திற்கு போடப்பட்ட பூக்கள்தான்.
கொஞ்சம் பயமாய் இருந்தது.. என்னதான் மனிதன் ஆட்டம் போட்டாலும் சாவை கண்டு
பயப்படாதவன் இருக்க முடிமோ?? மரணம் என்ற ஓன்று மட்டும்தான் எத்தனை பெரிய
மனிதர்களுக்கும் ஒரு முடிவை கொடுத்து விடுகிறது. சில நேரங்களில் சாலையோர
சுடுகாடுகளில் பிணம் எரிந்து கொண்டிருக்கும். பிணம் எரியும் வாடை எனக்கு
அறிமுகமானது இந்த வழியாக பயணிக்கும் போது
தான்.. அம்மாதிரியான பகுதிகளில் என் வண்டியின் வேகம் பல மடங்காக இருக்கும்.
வண்டியின் வேகத்தை
அதிகப்படுத்தினேன்.. வேகமா செல்... வேகமா செல்... என்று யாரோ கூறினார்கள்.. வண்டியின்
வேகத்தில் கிரேந்தி பூக்கள் எல்லாம் பதறி சிதறி வழி விட்டன..
சற்று தூரத்தில்
வெள்ளை நிற பேருந்து ஓன்று சென்று கொண்டிருப்பது போல் தெரிந்தது.. அமரர் ஊர்தியாக
இருக்கலாம்.. இறந்தவர் உடலை கொண்டு செல்லலாம்.. தன்னிச்சையாக வண்டியின் வேகம் குறைந்தது.
நன்றாக உற்று பார்த்தேன்.. வண்டியை சுற்றி கூட்டம் ஏதும் இல்லையே??? இறந்தவர்களை
கூட்டமாக சென்று வழியனுப்புவது தானே மரபு. வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினேன்.
வழியெங்கும் இப்போதும் கிரேந்தி பூக்கள் கிடந்து என் பயத்தை அதிகப்படுத்தியது..
சுமாரான ஒரு வேகத்தில்
பேருந்தை நெருங்கிய பின்பு தான் தெரிந்தது அது ஒரு வேன் என்று.. வண்டியின் பின்புற
வாசல் திறந்திருந்தது. அதன் வழியே ஒரு மூடையிலிருந்து கிரேந்தி பூக்கள் வழியெங்கும்
சிந்தி கொண்டிருந்தது.. கேரளா வண்டியாக இருக்க வேண்டும். வண்டி எண் KL என்று
ஆரம்பித்திருந்தது.. இந்த வழியில் தான் தோவாளையிலிருந்து கேரளாவிற்கு பூக்கள்
கொண்டு செல்வார்கள்.. எனக்கு இப்போது தான் எல்லாம் புரிந்தது.. “மரண பயம்” விலகி
வண்டியை விரட்டினேன்..
வேனை தாண்டி
செல்லும் போது பூக்கள் சிந்துவதாக சைகை செய்து வண்டியை நிறுத்தினேன். வேன் ஓட்டுனர்
மற்றும் கூட ஒரு ஆள் வண்டிக்குள் இருந்தனர். நான் கூறியதை கேட்டதும் ஒருவர்
பதறி... உடனடியாக வண்டி நின்றது. இருவரும்
இறங்கி வந்து சாலையெங்கும் சிதறி கிடந்த பூக்களை கோபம் கொப்பளிக்க பார்த்தனர்..
வண்டி ஓட்டுனர் வயதானவராக தெரிந்தார்.. மற்றொருவர் இளம் பிராயமாக தெரிந்தார்.
அவர்களை பார்த்தவுடன் மலையாள மக்கள்
என்பது தெளிவாக தெரிந்தது.
இருவரும் நெற்றியில் குங்குமம் இட்டு கொண்டிருந்தனர். உடைகளிலும், உடல்
அசைவுகளிலும் மலையாள நடிகர்களை ஞாபகப் படுத்தினர். அவர்கள் கண்கள் இரண்டும்
சிவந்து இருந்தது.. ஆர்வ மிகுதியில் நானும் வண்டியை நிறுத்தினேன்..
அருகாமையில் சென்று
பார்த்த போதுதான் அவர்கள் இருவரும் அரை போதையில் இருப்பது தெரிந்தது..
தண்ணியடித்திருக்கிறார்கள்.. கோபமாக பேசிக்கொண்டே வண்டியின் பின்புறத்தில் மூடைகளை
சரி செய்தனர்.. நானும் சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்தேன்..
வேனை விட்டு
இறங்கிய இருவரும் சிறிது நேரம் பூக்கள் சிந்தியதற்காக கவலை பட்டார்கள். ஒருத்தர்
மாற்றி ஒருத்தர் குறை கூறிக் கொண்டார்கள்.. அவர்கள் பேசுவது ஏதோ குத்துமதிப்பாக
புரிந்தது..
எல்லாவற்றையும் சரி
செய்து விட்டு “வழர நண்ணி சேட்டா”னு என்னை பார்த்து கூறினர்..
நானும் பல்லிளித்து
கொண்டே “ஈஈ புஷ்பமெல்லாம் எவ்ட போகுன்னு?? என்று
அரைகுறை மலையாளத்தை அவிழ்த்து விட்டேன்..
“ சேட்டா
இதுநெல்லாம் சபரி மலை சேத்ரம் போகுன்னு!!!” சொன்னான். இருவர் வாயிலிருந்தும் கெட்ட வாடை வீசியது..
வாடையில் என் முகம் சுருக்குவதை கவனித்திருப்பார்கள் போலும்... இருவரும் சற்று தூரம் பின் சென்று விட்டனர். வாயை மூடிக்கொண்டே வயதானவர் கேட்டார்.. சாரே... இவடே இருன்ந்து நெடுமங்காடு எத்ர கிலோ மீட்டர்??? எம்பது எம்பதஞ்சு கிலோமீட்டர் இருக்கும்... நான் சொன்னேன்.. விடை பெற்று கொண்டு சென்று விட்டேன்.. என் வண்டியின் பின்னால் கேரள வேன் மெதுவாக வந்து கொண்டிருந்தது.. கிரேந்தி பூக்கள் சிந்தாத ரோட்டில் பய உணர்வின்றி வண்டியில் பயணித்தேன்.. வீடு சென்று சேரும்போது மணி ஏழு..
மறுநாள் காலை வழக்கம்போல்
கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன்.. முந்தின நாள் சம்பவங்கள் மறந்து போன நிலையில்,
இன்று மீண்டும் பயணம்..
சீதப்பால் பாலத்தை தாண்டியதும்
கொஞ்சம் கூட்டமாக இருந்தது.. தலை கீழாக குப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு வேன்.. எனக்கு
மனசிலாயி விட்டது.. பூ கொண்டு சென்ற கேரளா வேன் தான்.. கடவுளே... தானாகவே உதடு
சொன்ன வார்த்தை.. வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்..
ஆர்வ மிகுதியில் அவரிடம் கேட்டேன்..
அண்ணே என்னாச்சு...
ஆக்சிடேண்டா???
ஆமா போ... தண்ணியே
போட்டிட்டு வண்டியே உருட்டுனா இப்படிதான் ஆகும்.. பலவரோளிக்கல்லேலுக்கு கொழுப்பு..
எங்கயோ பொறந்து இங்க வந்து செத்து கெடக்கு...
எப்போ னே நடந்தது...
சயங்காலம் ஏழு
மணிக்காம்.... தோவாளைல பூ எடுத்திட்டு மருந்த போட்ட்ரிகானுவோ....மப்புல பூவை எல்லாம்
சிந்திட்டே வந்திருக்கானுவ.... மாடு குறுக்கே வந்ததும்... ஆத்துக்குள்ள வண்டியை
தலை குப்ரா கவித்திட்டான்.. வண்டி புள்ளா பூவா கெடக்கு.. பத்து..... இருவது..முப்பது
ஆயிரத்துக்கு காணும்... எல்லாம் அங்கனயே கெடக்கு.. சாமிக்கு பூ வாங்க
வந்தானுவளாம்... இப்ப எல்லாம் அவனுவ சாவுக்கே போட்ட மாறி கிடக்கு...
எனக்கு
அடிவயிற்றில் இருந்து ஏதோ உருண்டு தொண்டைக்கு வந்தது...
பாடி
எடுத்தாச்சா... னே.....
காலையில தான்
ஆம்புலன்ஸ் வந்துச்சு... எடுத்து வெளிய போட்டாச்சு.... ஒரு பாடி தண்ணில நல்ல
ஊரிட்டாம்.... இம்ம்.... வேற என்ன செய்ய.. விதி முடிஞ்சு போச்சி..... இப்படி போக
ரெம்ப நேராகும்னு நேனைகேன்.... வண்டி இப்பெல்லாம் உட மாட்டனுவோ.... நீ வேணா இறச்சகுளம் சுத்தி போகப்புடதா??? என்று
சொல்லும் போதே...என்னை தாண்டி ஒரு சில வண்டிகள் நகர ஆரம்பித்தது....
வண்டி
விட்டிட்டானுவோ.... போப்...போ.... என்றார்...
நானும் வண்டியை
நகர்த்தினேன்... இரண்டு சடலங்களையும் வெள்ளை நிற துணியில் சுற்றி சாலையருகில் வைத்திருந்தனர்...
குப்புற கிடந்த வண்டி எங்கும் கிரேந்தி பூக்கள்... கொஞ்சம் வாடி இருந்தது...
உள்ளுக்குள் பயம் உறுத்த, ஒருவாறு சமாளித்துக்கொண்டு வண்டியை நகர்த்தினேன்.. மனமெங்கும்
ஏதோ ஒரு கனம்... ஜன நெருக்கம் தீர்ந்து வண்டியை வேகப்படுத்தினேன்... மலையாள
பேய்கள் என் மண்டையை வட்ட மிடுவது போல் இருந்தது....
சாரேரேரேரேரேரேரேரேரேரே...
இவடே இருன்ந்துதுதுது நெடுமங்காடுடு எத்ர கிலோ மீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்??? என்று
மானசீகமாய் ஒரு குரல் கேட்பது போல் இருந்தது...
பகலிலேயே எனக்கு
பயமாய் இருந்தது.... என்னை அச்சுருத்தும் பல பேய்களுடன் மலையாள பேய்களும் சேர்ந்து
விட்ட சந்தோஷத்தில்...... இல்லை............ “பயத்தில்” நான் வண்டியை விரட்டி
கொண்டிருந்தேன்.... தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டு கொண்டிருந்தது....
தமிழ் பேய்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாத போது மலையாள பேய்கள் நம்மை என்ன செய்து விட முடியும்!!!
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பயணம் ........
அன்புடன்,
சிவா.அ
நன்றி... தம்பி....
பதிலளிநீக்குஎதையாவது எழுதறேன்னு ஒரு சிலர் மாதிரி மொக்க போடாம, வரிக்கு வரி ஆர்வமா படிக்கற மாதிரி எழுதிருக்கிங்க.
பதிலளிநீக்கு