செவ்வாய், 23 அக்டோபர், 2012

கொலுப்போட்டி




வெகு நாட்களுக்கு பிறகு அன்று கொஞ்சம் திருப்தியாக குளித்தேன்.. வழக்கமாக நான் எந்நாளும் குளித்தாலும், எப்போதும் அது ஒரு அவசரக் குளியலாகவே இருக்கும்.. ஆனால் இன்று மிகவும் அனுபவித்துக் குளித்தேன்.. சிறு வயதில் இருந்தே எனக்கு குளிப்பதென்றால் அலாதி பிரியம் தான்... அதிலும் அம்மணமாக ஆற்றில் குளிக்க சொன்னால் ஆயிரம் முறை வேண்டுமானாலும் குளிப்பேன்.. வெக்க கேடு தான்... என்ன செய்ய? ஆத்மார்த்த குளியலின் சுகம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தெரியும்... என் பள்ளி நாட்களில் காலையில் குளிக்க சென்று விட்டு மாலையில் திரும்பிய நாட்களும் உண்டு.... நீரியானைக்கு பொறந்த பய??? என்று என் அப்பாவே என்னை திட்டி இருக்கிறார்கள்...

குளிர குளிர குளிக்கும் போது உடம்போடு மனமும் சுத்தமாகி தெளிவடைவதாய் எனக்குள் ஒரு எண்ணம்.... உன் பொழுது போக்கு என்ன? என்று கேட்ட ஆசிரியரிடம் “ நல்ல குளிப்பேன் சார்”.. என்று கூறி பெருமை பட்டுக் கொண்டேன்..
சரி,, விசயத்துக்கு வருவோம்... இன்று இந்த இன்ப குளியலுக்கு காரணம்,,,என்னை எங்கள் ஊரில் உள்ள வீடுகளுக்கு சென்று கொலுப் போட்டிக்கு மதிப்பெண் இடச் சொல்லி இருந்தார்கள்... ஏதோ கவர்னர் பதவி கிடைத்த மாதிரி எனக்கு சந்தோசம்... ஏனென்றால் மிகச் சிறிய வயதில் இப்பொறுப்பை எனக்கு எங்கள் ஊர் வழங்கி இருந்தது.. வழக்கமாக பணி நிறைவு பெற்றவர்களே போன நவ ராத்திரிக்கி கூட வந்து மதிப்பெண் இட்டார்கள்... வயதான நல்லமுத்து வாத்தியாரும் அவருடன் உதவிக்கு ஒரு பையனும் வந்து எல்லோர் வீட்டையும் பார்வை இட்டார்கள்... கீழத்தெரு ரமா அக்கா வீட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது... மதிப்பெண் இட்ட நல்ல முத்து வாத்தியார்  அவர் மாமா என்ற குழப்பமும் ஏற்ப்பட்டது... அது வழக்கமாக உள்ளது தான்... எங்கள் ஊர் விழாக்கள் அனைத்தும் தடபுடலாக ஆரம்பித்து, பின்பு சிறிது மனக் கசப்பில் தான் முடியும்...
இந்த வருடம் நல்லமுத்து ஆசிரியர் ஆரம்பத்திலேயே “என்னால முடியாதுப்போ??? கண்ணு பத்த மாட்டங்கதுல்லா??? என்று கூறி நைசாக நழுவி விட்டார்... விழாக்குழுகாரர்கள் பிரசிடன்ட போய் சொல்லி இருப்பார்கள் போலும்.... கடைசியில் ஊர் பிரசிடென்ட் தான் என்னிடம் கேட்டார்.... நவ ராத்திரிதினத்திற்கு ஒரு வாரம் முன்னால்... ஒரு நாள் மாலையில் வலிய வந்து என்னிடம் பேச்சு கொடுத்தார்.
                                                                                 “என்னப்போ இன்னிக்கி ரெம்ப லேட் ஆயிட்டு...” என்றார் என்னிடம்...

“ஒண்ணும் இல்ல னே... இப்பம் பரிச்சைலா....” .இது நான்..

“நவ ராத்திரிக்கு எத்ர நாள் லீவுடே...”

"மூணு நாளுன்னு நெனைக்கேன்.. விழா ஏற்பாடெல்லாம் ஆயிட்டானே?"

"ஆயிட்டே......இருக்கு.... பயலுவோ பாதிதான் சாமிக்காக விழா நடத்துகானுவோ??  மீதி சண்டைகில்லா பிளான் போடுகானுவோ.... போதும்பா.... ஊருக்கு ஒளைச்சது??? அடுத்து முறை வேண்டாம்பா... உங்க ஊர் பஞ்சாயத்து..... "- பொரிந்து தள்ளினார்.... அவர் வாயிலிருந்து சில எஞ்சில் சிதறி என் முகத்தில் விழுந்தது... துடைத்து கொண்டேன்.... அவர் கூறியதற்கு ஆதரவாக சிரித்து கொண்டேன்...

"போன தடவை நடந்தது.....உனக்கு தெரியும்லா... சாமியை தூக்கிட்டு சர்ச் முன்னாடி போய் ஆடிரிக்கானுவோ.... ஏய்.... நம்மளுக்கு நம்ம சாமி பெருசுன்னா,,அவனுகளுக்கு அவனுவ சாமி பெருசுடே..."

பிரசிடன்ட் பேச்சை நிறுத்துவதாக தெரிய வில்லை... தொடர்ந்து பேசினார்... 

“அந்த காலத்துல ரூவா கொடுக்கான்னு இடத்தை வித்தானுகல்லா... அவனுகல சொல்லணும்... ஒரே  ஊருக்குள்ள இப்ப மல்லு கட்ட வேண்டி இருக்கு... ஆரம்பதில்ல மூணு குடும்பம்... இப்பம் முப்பத்தியேழு வீடுல்லா இருக்கு...”. சற்று மூச்சு வாங்கி கொண்டார்... பின்பு மெதுவாக “67 வோட்டு இருக்குடே....” “போன தடவை விளையாட்டா ஆரம்பிச்சு ..கத்தி குத்துலேலா முடிஞ்சது....   “இந்த தடவை என்னெல்லாம் திருக்கூத்தோ???”  பேசி முடித்து பெருமூச்சு வாங்கினார்....

"இந்த தடவை ஒண்ணும் நடக்காதுனே.... கடவுள் மேல பாரத்தை போட்டு ஆரம்பிக்க வேண்டியது தான்..... "மணியை பார்த்தேன் நழுவும் நோக்கத்தோடு......

"சரி.... இந்த தடவை கொலு போட்டிக்கி மார்க் நீ போடுன்னா..."

"அண்ணே.... நானா?? நல்ல முத்து சார்.. இருகாருல்லா???"

"அவரு பயப்பிடுகார் டே... போன தடவையே படாதபாடு படுத்திட்டார்...."
சற்று ஆச்சரியம் காட்டினேன்....

“நான் எப்டினே... வேற ஆள் இல்லையானே???

"இருந்தா.... யாண்டே உண்ட சொல்லுகேன்.... பந்தா பண்ணாம வந்துருடே???"

சற்று தயங்கி ... பின் தலையசைத்து விட்டேன்...... அதன்  பொருட்டு இப்பொழுது  தயாராகிக் கொண்டிருக்கிறேன்....

எங்கள் ஊர் எனக்கு இப்பணியை வழங்கியதற்கு என் ஆசிரிய பணி கூடக் காரணமாக இருக்கலாம்.... எது எப்படியோ அவர்களின் வேண்டுதலுக்கு சரி என்று நானும் தலையசைத்தாகி விட்டது..... இனி மாட்டேன் என்றால் வழக்கமாக முடிவில் வரும் மனக்கசப்பு விழாவின் ஆரம்பத்திலே வந்து விடும்... எங்கள் ஊரில் நவராத்திரி விழா அவ்வளவு சிறப்பாக் கொண்டாடப் படும்... எல்லோர் வீட்டிலும் கொலு வைப்பார்கள்.. பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்... இந்த முறை பொம்மைகளை விற்பவன் ஏகப்பட்ட புது பொம்மைகளை கொண்டு வந்திருந்தான்... பல வீடுகளில் புது பொம்மைகளை வாங்கி வெகு சிறப்பாக கொலு வைத்திருந்தனர்... இந்த முறை பரிசு வழங்குவது கொஞ்சம் கஷ்டம் தான்....

குளித்து விட்டு வரும் போதே அய்யர் வீட்டு மாமி என்னைப் பார்த்து சிரித்தாகி விட்டது....ஒரு வேளை அவர்கள் வைத்திருக்கும் கொலுவிற்கு நான்தான் மதிப்பெண் இடப் போகிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போலும்...  தெருவில் ரெம்ப கெமையாக நடந்து வந்து கொண்டிருந்தேன்...  வரும் வழியில் யாருடைய வீட்டிலிருந்தோ வெளியில் தூக்கி எறியப்பட்ட உடைந்த பொம்மைகளை என்னிடம் பயிலும் ராஜனின் தம்பி ஜோசப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.... ஏற்கனவே நிறைய இடங்களில் எடுத்திருப்பான் போலும்.. ஒரு கவர் நிறைய உடைந்த பொம்மைகளை வைத்திருந்தான்.. அவன் உடல்,கை கால்களில் எல்லாம் அழுக்கு படிந்திருந்தது... ராஜன் நன்றாக படிப்பான்.. எனக்கு அவனை ரெம்ப பிடிக்கும்.. ஜோசப்பிற்கும் ராஜனுக்கும் ஒரே முக சாயல்.... எங்கள் ஊர் ஐந்தாறு கிறஸ்தவக் குழந்தைகள் என்னிடம் தான் படிக்கின்றனர்...

"டேய்... இதெல்லாம் எதற்கடா.. " என்று கேட்டேன்...

என்னை பார்த்ததும் கொஞ்சம் பயந்து பின் சிரித்து விட்டு ஓடி விட்டான்...  வீட்டுக்கு சென்று 250 கி பவுடர் போட்டு, எட்டு முதல் ஒம்பது முறை தலை சீவி சந்தனமிட்டு சொப்பனச் சுந்தரனாக மதிப்பெண் இட கிளம்பிக் கொண்டிருந்தேன்... இதற்கிடையில் என் அம்மாவின் மூலம் ஐந்தாறு சிபாரிசுகளும் வந்திருந்தன.....

ஓவ்வொரு வீடாக சென்று மதிப்பெண் இட்டுக் கொண்டிருந்தேன்.. ஒரு சில இடங்களில் லஞ்சக் காப்பிகளும் கிடைத்தன... பெரிய வீட்டு தாத்தாவிற்கு அல்லது ராஜா அண்ணன் வீட்டுக்கு முதல் பரிசு கொடுக்கலாம் என தோன்றியது..... இரண்டு வீட்டிலும் தான் மிகவும் நன்றாக இருந்தது.. இருவர் வீட்டிலும் நிறைய புது பொம்மைகள் வைத்திருந்தனர்... எனவே அவர்கள் இருவரில் ஒருவருக்கு பரிசு கொடுப்பதென முடிவு செய்தேன்... இருவர் பெயரையும் சிபாரிசு செய்யலாம்.... முடிவை விழாக்குழு எடுக்கட்டும்.. என்ற எண்ணத்தில் நடக்க எத்தனித்த போதுதான் கவனித்தேன்.... பின்னால் அந்த சப்தம் கேட்டது...

"சார்....,,, "ஜோசப் நின்று கொண்டிருந்தான்.

"என்னடா ஜோசப்... என்ன விஷயம்??"

“நீங்கதான் எல்லார் வீட்டிலையும் மார்க் போடுவீங்களா...??

“ஆமா டா... ஏன்...... என்ன விஷயம்??

“சார்... எங்க வீட்டிலையும் கொலு வச்சிருக்கோம் மார்க் போட வாங்க... சார்....

சட்டென்று சிரித்து விட்டேன்...

ஜோசப் சிரித்தான்....

“வாங்க சார்.... எங்க வீட்டுக்கும்...”. கெஞ்சினான்....

“டேய்... சும்மா இருடா...”. சமாளிக்கப் பார்த்தேன்...

ஆனால் அவனோ பட்டென்று என் கை பிடித்து, அவன் வீட்டருகே அழைத்துச் சென்றான்...

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த நான், அவன் கை விடுத்து நின்றேன்....
கொஞ்சம் கோபம் வந்தது...

ஜோசப் அழும் குரலில் “சார்...வாங்க சார்..... ப்ளீஸ்.....” என்றான்...

என்னால் மதச்சண்டை ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என மனதுக்குள் பதை பதைத்தேன்...

ஜோசப் வலுக்கட்டாயமாக என்னை அழைத்தான்...

அவனை பார்க்கப் பாவமாய் இருந்தது...
யாரவது கவனிக்கிறார்களா? என்று பார்த்து கொண்டே அவனுடன் நடக்க ஆரம்பித்தேன்..  அவன் வீட்டின் பின் பக்கம் என்னை அழைத்து சென்றான்.. வீட்டின் பின்புறத்தில் இருந்த சிறு கொட்டகைக்கு அழைத்து சென்றான்.. அங்கு “கலர் பேப்பர்”, “தென்னம் ஓலை”, “சுக்குநாரி கம்புகளை வைத்து ஒரு சிறு குடில் இருந்தது... உடைந்த பொம்மைகளை கொண்டு ஒரு குடில் உருவாக்கப்பட்டிருந்தது...அவர்களின் கிறிஸ்தவ முறையில் உருவாக்கி இருந்தான்.. அந்த பொடியன்..

அதில் என் மனதை தொட்ட விஷயம் என்னவென்றால், “மாடு”, “மேரிமாதா”, வைக்கோல் மெத்தையின் மீது குழந்தையாக இருந்தது இயேசு கிறிஸ்து அல்ல... நம்ம கிருஷ்ணர்... இயேசு கிறிஸ்து பக்கத்தில் கோபியர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.... மற்றொரு இயேசு பானை பானையாக ஏறி வெண்ணை திருடிக் கொண்டிருந்தார்.. உடைந்த பொம்மைகளைக் கொண்டும், அவன் வீட்டில் இருந்ததைக் கொண்டும் மிக நேர்த்தியாக கொலு அமைத்திருந்தான்... இல்லை... இல்லை... குடில் அமைத்திருந்தான்.. உண்மையிலேயே அசந்து விட்டேன்..


எனக்கென்னவோ இது வரை நான் பார்த்த கொலுவிலேயே இது தான் மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றியது.. இந்தியாவும், இங்கிலாந்தும் கைக்கொடுப்பது போலவும் இருந்தது அக் குடில் பொம்மைகள்.. இந்தக் கொலுவிற்குதான் முதல் பரிசு கொடுக்க வேண்டுமென்று நான் கூறினால் எங்கள் ஊர் மக்களும், விழாக்குழுவும் ஒத்துக் கொள்வார்களா????? என்ற யோசையுடனே அங்கிருந்து நகர ஆரம்பித்தேன்...

ஜோசப் என்னைப் பார்த்து... எனக்கு எத்தனை மார்க்கு சார்??.. என்றான்... அவன் வலது கையைப் பிடித்து, பிரித்து நூற்றுக்கு நூறு என்று எழுதி வட்டமடித்துவிட்டு நகர்ந்தேன்.. 

கடைசியாக ஒரு முறை திரும்பி குடிலைப்…..…..…..…..…..….. இல்லை….. இல்லை….. கொலுவைப் பார்த்தேன்... 

இயேசு கிறிஸ்துவும்,கிருஷ்ணரும் என்னை பார்த்து சிரித்தனர்......

1 கருத்து:

  1. 250கிராம் பவுடர் போட்டு, 7,8 முறை தலைவாரி, பொட்டிட்டு....
    முதல்முறையா ஒரு ஆண் மேக்கப்போட்டதை சொல்லி( ஒத்துக்கொண்டு) பார்க்கிறென்.அருமை

    பதிலளிநீக்கு

Thanks