வெள்ளி, 1 ஜூலை, 2016

தோசை

தெற்கேப் போய்விட்டு ஊருக்குத் திரும்பும் எவரும் பக்கீர் பாயின் கடையைத் தாண்டித்தான் வர வேண்டும்.  அந்த தோசைக்கடை அவ்வளவு பிரபலம்.  பக்கீர் பாயும்தான்.  தோசை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. அதன் சுவை எல்லாரும் அறிஞ்சதுதான்.  ஆனால் பக்கீர் பாயின் தோசைகளில் மட்டும் ஏதோ ஒரு விஷேசம்.  ஒரு தடவைச் சாப்பிட்டு, நாக்குக்கு அந்தச் சுவையைக் காட்டி விட்டால், அந்தக் கடையைக் கடக்கும் போதெல்லாம் “வாடே... வா... வந்து என்னைத் தின்னுட்டுப்  போ-ன்னு” தோசைக் கூப்பிடும்.  சுவை ஒருபுறம் இருக்க பக்கீர் பாயின் அணுகுமுறையும், ஹோட்டலின் சுத்தமான அமைப்பும் மற்றுமொரு காரணம். 

திட்டுவிளை இறக்கம் இறங்கி நன்றிக்குழித் தாண்டியதும் இடப்பக்கம் இருந்தது, ஓலை வேய்ந்த அந்தக்கடை. அங்கிருந்து மணத்திட்டைக்கு நடந்து போக வேண்டியிருப்பதால் எல்லோரும் அந்த பஸ் ஸ்டாப்பில்தான் இறங்கியாக வேண்டும். மணத்திட்டை ஊர்க்காரர்கள், முக்கடல் அணைக்கு வேலைக்கு செல்வோர், வாழை வயலுக்கு வேலைக்கு செல்லும் நாடாக்கமார்கள், என சொற்ப மனிதர்களே வர சாத்தியம் உள்ள இடத்தில் இன்று ஓரளவிற்கு கூட்டம் உள்ளதென்றால் அதற்கு பக்கீர் பாயின் கடைதான் காரணம்.  சிறுவாகனங்கள் தொடங்கி இரு சக்கர வாகனங்கள் வரை  வடமதியிலிருந்து தெற்கே செல்வோரும்,  தெற்கேயிருந்து உள்ளே வருவோரும் பக்கீர் பாயின் கடைக்குச் செல்லாமல் செல்வதில்லை. 

இத்தனைக்கும் கடை ஒன்றும் அத்தனை பெரிய மாட மாளிகை இல்லை. கடையின் வெளிப்புற முன் பக்கம் இரண்டு பெரிய படுப்பறைகள்.  நடுவே உள்ள பழைய மரக்கதவை திறந்து உள்ளே சென்றால் “ப” வடிவில் பெரிதும், சிறிதுமாய் மூன்று ஹோட்டல் பெஞ்சுகள்.  மறுபுற சுவரில் மூன்று மதக்கடவுள்கள் சங்கமிக்கும் ஒரு போட்டோவும், கரி படர்ந்த ஒரு சந்தன மாலையும்.  அதற்கு கீழே ஒரு மேஜையிட்டு, மூன்று ஆண்டுக்கு முந்தைய நியூஸ் பேப்பர் விரிக்கப்பட்டிருக்கும்.  பக்கீர் பாயின் கல்லாப்பெட்டி, அலமாரி, பணப்பெட்டகம், ஆவண காப்பகம் எல்லாம் அந்த மேஜைதான்.  அதைத் தொட்டு மேல் இருந்த செவ்வகத்திறப்பின் வழியாக “சுக்கு காப்பி” வியாபாரம்.  பக்கவாட்டில் இருந்த கண்ணாடி அலமாரியில் முறுக்கு, தட்டை, ஓமப்பொடி, மடக்குசா, முள்ளு முறுக்கு போன்ற உலகத்தரம் வாய்ந்த பலகாரங்கள் பத்திரப் படுத்தப்பட்டு  வியாபாரத்திற்குக் காத்திருக்கும்.  அதை தொட்டு அடுத்திருக்கும் கரி படர்ந்த சமையல்கட்டிற்கு, பக்கீர்பாய், வேலைக்காரன் வேலுவை தவிர, வேறு யாருக்கும் “கோடி ரூபாய்” கொடுத்தாலும் அனுமதி இல்லை.  நன்கு நெருக்கி முடையப்பட்ட தென்னம் கூரையாதலால், கடைக்குள் ஆடைக்கும் கோடைக்கும் ஒரே சீதோஷன நிலைதான்.

“பாய் நல்ல முறுவலா முறுக்கு மாறி…. ரெண்டு தோசை தாரும்...”

“பாய் நம்ம ஸ்பெஷல்தான் உமக்கு தெரியுமே..ரெண்டு கெட்டி தோசை போடும்...”

“கொஞ்சம் கரிசலா மூணு தோசை வையும். ரச வடை வைக்க மறந்துராதையும்..”

“நாலு மசாலா தோசை பார்சல் பண்ணும் பாய்..”  என - கதவை திறந்து ஆட்கள் உள்ளே வரும் போதே ஆர்டர்கள் பறக்கும்.  
ஒரே தோசைமாவை வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் பிடித்தமாதிரி தோசையின் ருசியை மாற்றியமைத்து கொடுப்பதில் இருக்கிறது, பக்கீர் பாயின் தொழில் ரகசியம். காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் பதினோரு மணி வரையிலும் கடை திறந்திருக்கும் நேரம்.  சாதா தோசை, கெட்டி தோசை, மசாலா தோசை, முறுவல் தோசை,  கரிஞ்ச தோசை, உள்ளி தோசை, ரவா தோசை, நெய் தோசைன்னு தோசைகளில், ஏகப்பட்ட வித்தியாசம் காட்டுவார் பக்கீர்பாய்.

“பாய்க்கு தோசையில மட்டும் ஏன் இவ்வளவு டேஸ்ட்னு தெரியுமா... தோசை மாவை அரச்சிட்டு,  கடைசியில கையை கழுவி ஊத்துவார் பார்த்துக்கோ... அதான் அதான் இவ்வளவு டேஸ்ட்ன்னு”- பத்து தோசை தின்னுட்டு, கையை நக்கிட்டே, சிரிச்சி  “தமாஷ்” அடிப்பான் ராமு அண்ணன்.

தோசைக்கு கூட காந்தாரி மிளகு வைத்து அரைத்த தேங்காய் சட்டினி, தண்ணி சாம்பார்.  கேட்டால் மட்டும் மிளகு பொடி.  கேட்காமல் இருந்தாலும் “ரச வடை” வைக்கப்படும்.  தண்ணீரில் ஊறிய பஞ்சு போலுள்ள கொவந்த ரசவடையை  ஒரு துண்டு பிய்த்து உள்நாக்கில் வைக்கும் போது, வடையின் சுவை நாக்கை நனைக்க, ரசத்தின் சுவை தொண்டையை கிறக்கும்.  ரசத்தில் மிதக்கும் வடை, நாவில் போட்டதும் கரையும்.  இதே கிறக்கத்தோடு தோசையை எடுத்து சட்னியில் தொட்டு, சாம்பாரில் முக்கி வாயில் போட்டால், ருசியில் மூளை சிலிர்க்கும்.  இரண்டு தோசை சாப்பிட நினைத்தவர்கள் எல்லாம் நாலஞ்சு சாப்பிட்டு முடித்து விட்டு, இலையை நக்கிக் கொண்டிருப்பார்கள்.

பக்கீர் பாய்க்கு நல்ல ஐஸ்வர்யமான இஸ்லாமிய முகம்.  வெள்ளை நிற தொப்பி, கணுக்கால் தெரிய ஏற்றி கட்டின சாரக்கட்டு, கருத்த நேற்றிமேடு, நன்கு மழிக்கப்பட்ட மோவாய், கழுத்தை தாண்டாத தாடி - என பழுத்த பழமாக இருந்தார். நடையில் ஒரு வேகமும், பேச்சில் ஒரு நிதானமும் இருக்கும்.  பெரிய ஜோக்குகள், உலக மகா தமாசுகள் போன்றவற்றிக்குச் சிறிதாகத்தான் சிரிப்பார். புதிதாக பார்ப்பவர்களுக்கு அவருக்குள் ஏதோ மர்மம் இருப்பதாகத் தோன்ற வாய்ப்புண்டு.  ஆனால் மூன்றாம் முறை பார்பவர்களுக்குத் தெரிந்து விடும் “பக்கீர் பாயும், பச்ச குழந்தையும்” ஒன்றென்று.

ஆறேழு ஆண்டு வெளிநாட்டு வாழ்கையில் சம்பாதித்தது, தற்போது ஹோட்டல் இருக்கும் இந்த இடம் மட்டும் தான். ஒரே மகன் குடும்பத்தோடு சவூதி அரேபியாவில் இருக்கிறான்.  பக்கீர் பாயின்  மனைவி இறந்த இந்த 13 ஆண்டுகளில், தன்னுடன் வந்து இருக்குமாறு பலமுறை கூப்பிட்டு விட்டான் மகன். அவருக்கென்னவோ இங்கு இருப்பதுதான் சௌகர்யம் என்று கூறி விட்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெக்காவிற்கு “ஹஜ்” புனித பயணம் போய் வந்தததோடு சரி.  பின்பு ஹோட்டல், தர்கா, பள்ளி வாசல், ஹோட்டல்  வாடிக்கையாளர்கள், இதுதான் பக்கீர் பாயின் உலகம்.

அவசியம் ஏற்பட்டாலொழிய பக்கீர்பாய் மற்ற நேரங்களில் பேசுவதில்லை.  சொற்பமாக பேசினாலும் நியாயமாக பேசுவதால், ஊர் முழுவதும் அவர் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருந்தது. அவருடன் சற்று நெருங்கி உரையாடுவது அவருடைய பால்ய கால நண்பன் பிரம்மநாயகம் பிள்ளை என்ற பிரம்மா மட்டுமே.  1960-களில் இருவரும் பூதப்பாண்டி பள்ளியில் ஒன்றாகப் படித்த “பள்ளி தோழர்கள்”.  பத்திரஎழுத்தர் வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பெண்பிள்ளையை கரையேற்றி, பையனை எஞ்சினீரிங் படிக்க வைத்திருந்தார் பிரம்ம நாயகம் பிள்ளை.  வேலையில்லா பொழுதுகளில் பக்கீர்பாயின் கடையிலமர்ந்து “கதை” பேசுவது பிரம்மநாயகம் பிள்ளைக்கு ஆனந்தம். பக்கீர்பாயிக்கும், கடை வேலைகளுக்கிடையில் அது “ஒரு ஆறுதல்”.

“ராமாயண காலத்துல “அயோத்தி” இவ்வளவு பிரபலமா இருந்துச்சோ? இல்லையோ? இந்த பயக்கோ ரெம்ப பிரபல படுத்திட்டானுகோ..?” - அன்றைய பேப்பரை புரட்டிக்கொண்டே பிரம்ம நாயகம் பிள்ளை பேச்சை ஆரம்பித்தார்.

“அத வச்சி தானே அரசியல் நடக்கு பிரம்மா.. இங்க எவனுக்கும் சாமில்லாம் வேண்டாம்.. மதப்பிரச்சனை மட்டும் தீராம இருக்கணும்.. ஒவ்வொரு அரசியல் வாதியும், அதுக்கு என்ன செய்யணுமோ அத மட்டும் செய்திட்டே இருக்கானுவோ...” – என்று சுக்கு காப்பியை ஆற்றிக்கொண்டே பதில் சொன்னார் பக்கீர் பாய்.

“அது சரிதான்... நீ என்ன சொல்லுக பக்கீரு.. அங்க கோவில் கட்டணுமா? அல்லது  மசூதி கட்டணுமா?”

ஒரு நிமிட யோசனைக்கு பின் “ரெண்டும் வேண்டாம் பிரம்மா....பாவப்பட்ட பிள்ளைக படிக்க ஒரு பல்கலைகழகம் கட்டிட்டா பிரச்சனை தீரும்லா”...

நடக்குமோ... நடக்காதோ.. பிரம்மநாயகம் பிள்ளை ஏற்றுக் கொள்ள கூடிய பதிலாக “அது”  இருந்தது..

இப்படி உலக நடப்புகள், உள்ளூர் செய்திகள்,பருவ கால மாற்றங்கள், சில குடும்ப விசயங்கள் என இருவரின் பேச்சுகளும் ஒரு வரையறையோடு செல்லும்.  “பெருசுக ரெண்டும் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சாச்சு டேய்... நம்ம கிளம்புவோம்” என்ற கிண்டல் பேச்சுடன் இளவட்டங்கள், அவர்கள் பேச ஆரம்பிக்கும்போதே, இடத்தை காலி செய்வார்கள்.

ஒரு முழுபௌர்ணமி நாளின் இரவில் இடியும் மின்னலுமாய் இருந்தது.  மழை வருமா? வராதா? என்பதை கணிக்க முடியாத ஒரு சீதோஷ்ண நிலை.  கருப்பு இருட்டில் பாலை ஊற்றியது போல் வெளிச்சமும், இதமான குளிரும் இடங்களை ஆக்ரமித்திருந்தது. பதினோரு மணியளவில் வியாபாரம் முடிந்து, வேலுவும் பக்கீர் பாயும் ஹோட்டல் வாசலை மூட எத்தனித்த போதுதான் வாசலில் அந்த சப்தம் கேட்டது.  இர்ர்ர்ரர்ர்ர்ர்...டம்ம்மம்ம்ம்ம்...க்ரிச்ச்......

“வேலு.. அது என்னடே சத்தம்.. நம்ம கூரைக்கு மேலத்தான் தாண்டே.. போய் பாரு..பாரு..”

கூரையின் மேற்புறத்திலும் பக்க வாட்டிலும் ஆராய்ந்துவிட்டு வேலு சொன்னான்.

“போஸ்ட் தூண்ல விரிசல் உழுந்துருக்கு பாய்... சரிச்சு கூரைல விழுந்துட பிடாது.. தீ... கீ... பிடிச்சிட்டுனா.. பிரச்சனைதான்..”

கொஞ்சம் பதறினார் பக்கீர்பாய்.. “அந்த லைன் மேன் தெறிப்பான்ண்ட அன்னைக்கே சொன்னேன்... ஒரு மயிரும் ஆகாதுன்னான்.  கிறுக்கு பயலுக்கு பொறந்த பய..”- பக்கீர் பாயிக்கு கோபமாக வந்தது.  

வெளியே சென்று அண்ணாந்து பார்த்து விட்டு மீண்டும் உள்ளே வந்தார்.

“அந்த மாந்தயன், இப்பம் எங்க இருப்பான் வேலு.. அவன போய் கூட்டிட்டு வராயா?”

“இப்பமா... அவன் மருந்த போட்டிட்டு உறங்கிருப்பான்.. நாளைக்கி காலைல தான் பாக்க முடியும்னு..”- வேலு சொல்லி முடிக்கவும் ஹோட்டல் வாசலில் அந்த  கேரளா ரிஜிஸ்ட்ரேசன் வண்டி வந்து நின்றது.

சிறு உதறலுடன் வண்டியை நிறுத்தி, வண்டியின் டிரைவர் மட்டும் இறங்கி பக்கீர் பாயின் கடைக்குள் நுழைந்தான். பக்கீர் பாயை பார்த்ததும்,
சலாம் அலைக்கும் பாய்..- என்றான்.
அலைக்கும் அஸ்.. லாம்...சொல்லுங்கோ – என்றார் பக்கீர் பாய்.

சுத்தமான உருது மொழியில் உரையாட ஆரம்பித்தார்கள்.  வேலு மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தான்.  சில நிமிட உரையாடலுக்குப் பின் அவன் சென்று விட.. பக்கீர் பாய் வேலுவிடம் கூறினார்.

வேலு... மூணு பேரு சாப்பிட வராங்களாம்.. தோசையை கல்லுல ஊத்துடே.. அடுப்புல தீயை குறைச்சு வை...ன்னு சொல்லி முடித்த அந்த கணத்தில் நெட்டையும் சிவப்புமாக இரு வாலிபர்களும், ஒரு பெண்ணும், கடைசியில் டிரைவரும் ஹோடல்லுக்குள் நுழைந்தனர். அழகாக இருந்த அந்த பெண்ணை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் வேலு.  அவர்களும் தங்களுக்குள் உருது மொழியில் பேசிக்கொண்டார்கள்.  சிரித்துக் கொண்டே தோசையை சாப்பிட்டார்கள்.  பக்கீர் பாயும் இடை இடையே ஏதேதோ பேசினார்.  வேலுவுக்கு ஒன்றும் புரியவில்லை.  சாம்பார், சட்னி ஊற்றும் சாக்கில் இரண்டு முறை அப்பெண்ணின் அருகில் சென்றான் வேலு.   பார்க்க கூடாத இடங்களை பார்த்துக்கொண்டே சாம்பாரை ஊற்றினான்.  இருபது முப்பது நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து விட்டு , பக்கீர் பாயுடன் சந்தோசமாக உரையாடி விட்டு, பக்கீர் பாயின் அலைபேசி எண்ணை கேட்டு, ஒரு டைரியில் குறித்து வைத்து கொண்டு, கிளம்பினார்கள்.  சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து விட்டு, பக்கீர் பாய் மீதி கொடுக்க, வேண்டாமென்று மறுத்து விட்டு விடை பெற்று சென்றனர்.  

அவர்கள் போவதையே வெறிக்க பார்த்து விட்டு யோசனையிலிருந்தான் வேலு.  சில நிமிட அமைதிக்குப் பின் பக்கீர்பாயிடம் கேட்டான்.

“யாரு பாய் இவங்க... ரெம்ப சின்ன பிள்ளைலா இருக்காங்க?” வேலுவின் 
மனம் முழுதும் அப்பெண்ணைப் பற்றிய காம கசடுகள்.

பாய்லர் அடுப்பை குறைத்துக்கொண்டே பக்கீர்பாய் சொன்னார்.  “முஸ்லிம் பிள்ளையோ.. படிப்பு விஷயமா கண்யாரிக்கு வந்தாங்களாம்.. இப்ப திருவந்த்ரத்திற்கு போறாங்களாம். நம்ம சாப்பாடு ரெம்ப புடிச்சிருக்காம்.  அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா வரோம்னு போன் நம்பெர வாங்கிட்டு போகுதுவோ.. இன்ஷா அல்லா.. படிச்சு பெரிய ஆட்களா வரட்டும்..”

வேலு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

சரி.. போ.. போ... கடையைச் சாத்து.. உனக்கு நேராகலையா.. கிளம்பு டே..- என்று பக்கீர் பாய் சொல்ல, வேலு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.  தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டுக் கொண்டிருக்க மொத்த இடத்திலும் மயான அமைதி.

பொழுது விடிந்து காலை காட்சிகள் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.  அதிகாலை ஆறு மணிக்கு குளித்து முடித்து , ஈர வேஷ்டியை கொடியில் காய போட்டுக்கொண்டிருக்கும் போதுதான், பிரம்ம நாயகம் பிள்ளையின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழுந்தது.

“பக்கீர் பாயை போலீஸ் பிடிச்சிகிட்டு போயிட்டாம்... அவரு தீவிரவாதியாம்.”- மூச்சிறைக்க வந்து சொல்லிக்கொண்டிருந்தான் ஆசாரி பொன்னையன்.

தீக்கம்பியை மிதித்தவர்போல் ஆடிப்போய் விட்டார் பிரம்ம நாயகம் பிள்ளை.

“என்னவே சொல்லுகேரு... ”

“ஆமா..பிரம்மா.... பக்கீரு கடையில ஒரே கூட்டம்.. நாலு நாலேகாலுக்கு வந்து அவர தூக்கிட்டு போய்டாங்களாம்.  வேலு கடையில இருந்திருக்கான்.  அன்னா.. வாரான் பாரு..”

வெளியே வேலு வந்து கொண்டிருந்தான்.. பிரம்ம நாயகம் பிள்ளை வேகமாக வெளியே வந்து விசாரித்தார்.

“என்னடே ஆச்சு வேலு”

“என்னன்னே தெரியல பாட்டா... அஞ்சரைமணி வாக்குல ஒரு போலீஸ் வேன் வந்து.. நேர போய் பாய்ட்ட “நீதான் பக்கீரா” னு கேட்டாங்க.. பாய்.. பயந்து போய்... ஆமான்னாரு.. நேத்து ராத்திரி கடையில சாப்பிட்ட மூணு பேர பத்தி கேட்டாங்க.. அவங்க போட்டோ கைல வச்சிருந்தானுவோ.. பாய் தெரியும்னு சொன்னதும்.. கொஞ்சம் விசாரிக்கணும்னு தூக்கிட்டு போய்டானுகோ..

பிரம்ம நாயகம் பிள்ளை ஆச்சர்யத்தோடும் ஒரு வித அவஸ்தையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.  எல்லோரும் அதிர்ச்சியில் இருக்க ஆசாரி பொன்னையன் வேலுவிடம் கேட்டார்.

“ஓண்ட ஒண்ணும் கேக்கலையாடே..”

“நேத்து வந்தவங்களை பத்தி கேட்டானுவோ.. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னேன்..”- மலங்க மலங்க விழித்து விட்டு பின்பு தயங்கி கூறினான்.

“பாய்கூடத்தான் வேற ஏதோ பாசையில பேசிக்கிட்டான்கன்னு சொன்னேன்.  இதுக்கு முன்னாடி அவங்க இங்க வந்திருக்காங்களான்னு கேட்டாங்க. நான் இல்லைன்னு சொன்னேன்..”

கூட நாலைந்து ஆட்கள் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்கள். எல்லோரும் வாயடைத்து வேலு சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

“எத்ர வருசமா வேலை பாக்கிறேனு கேட்டாங்க... பாய் எப்படி ஆளுன்னு கேட்டாங்க.. நான் நல்லவருன்னு சொன்னேன்.”- எச்சிலை விழுங்கிக் கொண்டான் வேலு.

“வேற யாராவது கடைக்கு வருவாங்களா.. கூட்டம் எதாவது நடக்குமானெல்லாம் கேட்டானுவோ.. அப்புறம்.. அட்ரஸ்..போன் நம்பர வாங்கிட்டு போக சொல்லிடானுகோ...”

சிறிது நேர யோசனைக்குப்பின் உண்மையான கவலையோடு பிரம்மநாயகம்பிள்ளை கேட்டார். “பாயை எங்க கொண்டு போயிருக்காங்கன்னு தெரியுமா..”

தெரியல... வந்த போலீஸ் காரங்க நம்ம ஊரு ஆட்கள் மாறியே இல்லை... வடக்க உள்ளவனுக மாறி இருந்தானுகோ..

எல்லோரும் வாயடைத்து நின்றார்கள்.  யாருக்கும் எதுவும் அவ்வளவாகப் புரிய வில்லை.  எதற்கு பக்கீர் பாயை கூட்டிக் கொண்டு போனார்கள்? அவரு தீவிர வாதியா? அவர எங்க கூட்டிட்டு போயிருக்கிறார்கள்?.....என பல கேள்விகள் எல்லோர் மனதிலும்.

“இன்னைக்குள்ள பேப்பர எடுத்து பாரும் வேய்... எதாவது போட்டிருக்காணான்ணுன்னு பாரும்.. – ஆசாரி பொன்னையன் தான் கூறினார். பிரம்ம நாயகம் பிள்ளைக்கும் அது சரியாகப்பட்டது.

வேகமா வீட்டிற்குள் சென்று பேப்பரை அங்குமிங்கும் புரட்டினார்.   

இரண்டாவது பக்கத்திலேயே அந்த செய்தி இருந்தது.  “களியக்காவிளை அருகே தீவிரவாதிகள் கைது...! நாகர்கோயில் டிசம்பர்: 5, களியக்காவிளை சோதனை சாவடியில் போலிசாரின் வழக்கமான வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான இரு ஆண், ஒரு பெண் உட்பட மூன்றுபேரை போலீசாரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.  விசாரணையின் போது அவர்கள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகி உள்ளது.   ரகசிய விசாரணையில் கிடைத்த சில தொலைபேசி எண்கள் மற்றும் அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் மூலம், தமிழ் நாட்டில் அவர்கள் நுழைந்ததன் நோக்கம் மற்றும் அவர்களுக்கு இங்குள்ள தொடர்புகள் என்னென்ன? - என்ற ரீதியில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது”

பிரம்மா நாயகம் பிள்ளை படிக்க படிக்க அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.  எல்லோர் மனதிலும் பல கேள்விகள். கேள்வி பட்ட அனைவருக்கும் அதிர்ச்சி.  காய்ந்த நிலத்தில் விழுந்த மழை நீரை போல், கொஞ்ச நேரத்தில் மொத்த ஊரும் அந்த செய்தியால் நனைந்திருந்தது.

மூன்று நாட்களாக ஊரெங்கும் இதே பேச்சு.  இதற்கிடையே வேலு வீட்டிற்கும் போலீசார் வந்து விசாரித்து விட்டு சென்றிருந்தனர். பக்கீர்பாயைப் பற்றி பலபேர் பழித்தும், சிலபேர் பரிதாபபட்டும் வார்த்தைகளை விதைத்திருந்தனர்.

“நம்ம பாய்..அப்படி பட்டவர் இல்லைடே... அவரு பாவம்லா”

“நல்ல கமுக்கமா இருந்துட்டு எவ்வளவு பெரிய வேலை பாத்திருக்கான் பார்த்தியா”

“அவரு முழியும், நடையும் அப்பமே சரி இல்லடே.. எனக்கு முந்தியே சந்தேகம்”

“அன்னைக்கு ஒரு நாள் கடைக்கு போகும் போது உள்ளி கூடைக்குள்ள “பாம்” மாறி என்னவோ வச்சிட்டு இருந்தாரு.. என்ன பாத்ததும் பம்முனாரு... இப்பம்லா தெரியி... எம்மா...”

“பாய் பாவம் டே.. எவனோ அவரை மாட்டி விட்டிருக்கானுவோ..”

“வேணும்னா பாரு... இன்னும் ரெண்டு மூணு நாளையில... பிரம்மநாயகம் பிள்ளையும் போலீஸ் தூக்கும்.. இவர்தான  ரெம்ப குளோஸ் ப்ரெண்டு”

“பாரின்ல முன்னாடி இருக்கும் போதே அந்த க்ரூப்ல இருந்தாராமமே”

“ஊருக்கெல்லாம் தோசையைச் சுட்டு தந்திட்டு... பண்ணிருக்க வேலைய பார்த்தியா..”
-----------என பல தரப்பட்ட பேச்சுக்கள்.. பிரம்ம நாயகம் பிள்ளைக்கு கொஞ்சம் பயமாகவும், ரெம்ப வருத்தமாகவும் இருந்தது.  நம்ம பக்கீரா இப்படி? என்ற கேள்வி மட்டும் நெஞ்சுக்குள் மீண்டும்... மீண்டும்.. அவரால் நம்ப முடிய வில்லை.

நான்காம் நாள் மதிய வேளையில் வேலு, பிரம்ம நாயகம் பிள்ளையின் வீட்டிற்கு ஓடி வந்தான்..

“பாட்டா.. பாயை விட்டிட்டாங்களாம்.  அவருக்கு மேல குத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்..”

ஒரு வித புளகாங்கித மனநிலையில் சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு பக்கீர்பாயின் கடைக்கு விரைந்தார் பிரம்ம நாயகம் பிள்ளை.

ஞாயிற்றுகிழமை வெறிச்சோடிக் கிடக்கும் பள்ளிக்கூடத்தை போல் ஆள் அரவமற்று இருந்தது பக்கீர் பாயின் கடை.  கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் கதவை திறந்து உள் சென்றார் பிரம்ம நாயகம் பிள்ளை. முதலறையில் யாருமில்லை.  அடுப்படியை தாண்டி பக்கீர்பாயின் படுக்கை அறைக்கு சென்றார்.  அரைகுறை வெளிச்சத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து, முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் “நமாஸ்” செய்து கொண்டிருந்தார் பக்கீர் பாய்.  ஆறேழு நிமிடங்கள் காத்திருந்த போது வெளியே வந்தார்.  வெளியில் பிரம்ம நாயகம் பிள்ளை இருப்பதை கண்டு, அடுக்களையைக் கடந்து மெதுவாக மேஜை நாற்காலியில் அமர்ந்தார்.

போலீஸ் காரன் அடிக்க,கிடிக்க செய்திருப்பானோ என்று பக்கீர் பாயை கூர்ந்து கவனித்தார் பிரம்மநாயகம் பிள்ளை.  தளர்ந்து போயிருந்தார் பக்கீர் பாய்.  இருவர் முகத்திலும் ஒரு வித தயக்கமும், வெப்ராளமும் நிரம்ப, பக்கத்துத் தோட்டக் கால்வாயில் தண்ணீர் பாயும் சப்தம் மட்டும் முழுஅறையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சட்டென்று பிரம்ம நாயகம் பிள்ளைதான் ஆரம்பித்தார்.

“வேலு வரலையா பக்கீரு?”

இல்லை என்று தலை அசைத்து, தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கீர் பாய். 

“கடைய நடத்து டே.. பக்கீரு...சும்மா நடந்தையே நினைச்சிட்டு இருந்தா எப்படி டே...”

நேருக்கு நேராய் பிரம்ம நாயகம் பிள்ளையின் முகத்தைப் பார்த்தார் பக்கீர்பாய்.

“எதை மறக்க சொல்லுக பிரம்மா? ராத்திரியில குண்டு கட்டா தூக்கிட்டு போனாங்களே... அதையா.. அல்லது கேள்வி மேல கேள்வி கேட்டாங்களே...அதையா...?”

“ஏய்...விடு டே... சந்தேகப்பட்டு கூடிட்டு போனானுவோ.. இப்ப ஒண்ணு மில்லைன்னு விட்டாச்சுல்லா... நடந்ததை விடு....”

“முடியலை பிரம்மா...  அங்க சவுதில, யான் மகன்ட்டலாம் போன் போட்டு விசாரிச்சிருகானுவோ...இரண்டு மூணு நாளா எங்க பார்த்தாலும் இதே பேச்சுதலா... டிவி, கம்பியுட்டர்லேலாம் வந்திட்டாமே..”- என்று சொல்லும் போதே மனதளவில் வெதும்பினார் பக்கீர் பாய். பிரம்ம நாயகம் பிள்ளைக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. பின்னர் பக்கீர்பாயிக்கு ஆறுதலாக பேசும் பொருட்டு, கொஞ்சம் கோபமாக கொந்தளித்து பேசினார்..

“அந்த எரப்பாளிகளுக்கு வேற வேலை இல்லடே.... நாளைக்கே... எவளாவது, எவனுக்கு கூடயாவது, போய்ட்டானா.... மொத்த ஊரும் அந்த நியூஸ் பக்கம் போயிரும்...  அத விடு பக்கீரு... பேசாம கொஞ்ச நாளைக்கி உன் மகன் கூட இருக்கப்பாரு...”

“என்னய இங்க விட்டு போக சொல்லுகையா பிரம்மா..?”

“பைத்யாரன் மாறி பேசாத டே... கொஞ்ச நாள் அங்க இங்க போயிட்டு வந்தா... உனக்கு இந்த வெப்ராளமும், குறைச்சலும் கொஞ்சம் தீரும்லா..”

“என்ன இங்க வீட்டு போக சொல்லாத பிரம்மா.... இனி இங்க விட்டு போனா.... நேரா.. படைச்சவன்ட தான்...”—வார்த்தையை சொல்லி முடிக்கும் போதே பக்கீர் பாயின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து  குரல் கமுறியது.

நண்பனின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் நிலை குலைந்து போனார் பிரம்மநாயகம் பிள்ளை.  ஆண் முன்னால் ஆண் அழுவதும், ஆண் அழுவதை மற்றொரு ஆண் பார்ப்பதும் கொடுமையிலும் கொடுமை. இருவரும் அக்கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தனர். நிலைமையை சீராக்கும் நோக்கத்தோடு...

“விடு டே பக்கீரு... உன்னைய தீவிரவாதின்னு சொன்னதும் எனக்கு சிரிப்புதான் வந்ததுடே..” லேசாக சிரித்தார் பிரம்மா. பக்கீர் பாயையும் சிரிக்க வைக்க முயற்சித்தார்.

ஏதோ ஒரு வெறுமையுடன் உச்சிக்கூரையை பார்த்துக் கொண்டிருந்தார் பக்கீர் பாய். சற்று நேர அமைதிக்குப் பின் ... கன்ன பரப்பில் கண்ணீர் வடியக் கேட்டார் பக்கீர்பாய்..

“ஒரே ஒரு கேள்விதான் பிரம்மா... நான் இருந்த இதே இடத்துல... நெத்தியில பட்டையோட.. வேற ஒரு ஆளு இருந்திருந்தா... இந்த பயக்கோ இதே மாதிரிதான் பண்ணிருப்பானுகளா..”

வார்த்தையின் வீரியத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார் பிரம்மா.

“சந்தேகம்னு வந்துட்டா எல்லாவனையும் தூக்கிட்டுப் போகத்தான் செய்வானுகோ..” – என்று சொல்லி சமாளிக்க பார்த்தார் பிரம்மா.

“நாங்கன்னா மட்டும் சந்தேகம் கொஞ்சம் கூடுதலா இருக்கும் பார்த்தியா பிரம்மா...”—பக்கீர் பாயின் கண்கள் மீண்டும் கலங்கியது.

கேள்வியின் தீவிரத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் நெளிந்தார் பிரம்மா.

“நடந்ததையே நினைக்காத பக்கீரு..  போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதெல்லாம்  இப்ப பேஷனாயிட்டுடே...  ஊர் பணத்தை கொள்ளையடிச்சவன், பொம்பளை பொறுக்கிகள், ஊழல் பேர்வழிகள்னு ...ஆயிரம் பேரு  சிரிச்சிட்டே.. ஜெயிலுக்கு போயிட்டு... மூணு நாளையில சிரிச்சிட்டே, வெளிய வர்ற காலமிது. நீ என்னனா....?”

பக்கீர் பாய் லேசாக உதட்டை பிரித்து சிரித்தார்.

“அவனுகளும் நானும் ஒண்ணா.. பிரம்மா..?”

கொஞ்சம் எரிச்சல் பட்டுக் கொண்டு எழுந்தார் பிரம்ம நாயகம் பிள்ளை.

“பக்கீரு இப்படி நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா... எதுவும் நடக்காது.  எல்லாத்தையும் மறந்திட்டு... வேலுவ வர சொல்லி..நடக்க வேண்டிய வேலையை பாரு... நாறோயில் வரைக்கும் போயிட்டு சாயங்காலம் வாறேன்”

கடையை விட்டு வெளியே வந்து நாகர்கோயில் பஸ்சில் ஏறினார்.  பக்கீர்பாயை பற்றிய கவலை மனதை ஆக்ரமித்திருந்தது. திட்டுவிளை தர்க்காவை கடக்கும் போது.. பக்கீர் பாயின் கேள்வி மீண்டும் நெஞ்சை உறுத்தியது.  பற்பல எண்ணங்கள் நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க... பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்தார்.

வேலையை முடித்துக்கொண்டு கடுக்கரை பஸ் ஏறி ஊர் வந்து இறங்கியதுமே.... வேலு அதிர்ச்சியோடு சொன்னான்.

“கூரையில..... போஸ்ட் தூண் சரிஞ்சு விழுந்து... ஷாக்கடிச்சு..பாய் செத்து போனாரு...பாட்டா...”


பின் மண்டையில் ஆணியடித்ததுபோல் அதிர்ச்சியில் ஆடிப்போனார் பிரம்மநாயகம் பிள்ளை.