அந்தி கழிந்துப் பிறக்கும் முன்
பெரும் பச்சையை உடம்பெங்கும் சூடிய மலைக்காடு. தனக்குள் நுழைபவர்களின் புலன்களை, எண்ணங்களை, சிந்தனைகளை மெதுவாக கீறி, பற்பல நினைவுகளை சுரக்கச் செய்யும் அடர்காடு. காடென்பது மர்மம்.
காடென்பது பொக்கிஷம். காடென்பது அமானுஷ்யம். காடென்பது அதிஉன்னதம். பச்சை ரத்தம் பரவி நிற்கும் பெருங்கடலென விரிந்திருந்தது "பசும் காடு". பாசி பிடித்த பாறைகளால், கற்களால், மரங்களால் சூழப்பட்ட வனத்தின் உடல், அவர்கள் முன் "அம்மணமாக" விரிந்துக் கிடந்தது.
அடர்ந்த மலைக் காட்டினுள் "அவர்கள்" இருவர் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்த நடையில் சுரந்த அக்குள் வியர்வையில் "ஜனாவின் உடை" அதிகப்படியாய் நனைந்திருந்தது. வழக்கத்தைவிட நீண்...ட "பெருமூச்சு", நுரையீரலை நிறைத்துப் பிரிந்தது. நாசியெங்கும் ஈரம் குடித்த "காட்டு மண்ணின்" மணம். சில இடங்களில் மூலிகைகளின் மணம். சில இடங்களில் தேக்கம்பூக்களின் மணம். சில இடங்களில் சம்மந்தமே இல்லாத "அரிசி முறுக்கின் மணம்". சாரை பாம்புகள் சல்லாபத்தில் இருப்பதற்கான அறிகுறி - என்று யாரோ கூறியது ஜனாவிற்கு நினைவுக்கு வந்தது. முகத்தில் அறைந்த தண்மை கூடிய "வாடைக்காற்று" குளிரை மென்மேலும் கூட்டியது. சமத்தளமில்லாத "நடைக்களம்" உடலுக்கு அதிகப்படியான களைப்பைத் தந்து கொண்டிருந்தது.
இன்னும் எவ்வளவு தூரம்டே ... - முதிர்ந்த களைப்பில் காடுகளின் இலை தழைகளுக்கு மத்தியில் ஒலித்த ஜனாவின் குரல், வலுவற்று சன்னமாய் ஒலித்தது.
முன்னே போய்க் கொண்டிருந்த வேலைக்காரன் கருப்பன் "இன்னா வந்திட்டு... ஏமானே? என்று கூறிக்கொண்டே முன்னேறிக்கொண்டிருந்தான்.
அடுப்படி தணலில் காய்ந்து முருகிய "வெட்டக் கருப்பட்டி"-யின் நிறத்திலிருந்தான் கருப்பன். இதே பதிலை இதே தொனியில் மூன்று நான்கு முறை ஏற்கனவே கூறியிருந்தான். தெறிக்கும் மார்பை தொள தொள சட்டையால் மறைத்திருந்தான். பழுப்பு நிறத்தில் ஒரு பருத்தி வேஷ்டி. தோளில் அத்தியாவசிய பொருள்களை தாங்கிய பிளாஸ்டிக் பையொன்று பொதும்பிக் கிடந்தது. இடுப்பைச் சூழ்ந்த தோல் பெல்ட்டில் "மான்கொம்பு" கைப்பிடியிட்ட வெட்டுக்குத்தியொன்று தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்தது. நடையின் இடைவெளியில் அண்ணாந்து பார்த்து எதையோ தேடுவது போல் வானம் நோக்கினான். பின்பு திசையை அனுமானித்து, ஒரு "கருஞ்சிறுத்தையை" போல் வேகமாக நடந்து கொண்டிருந்தான். கருப்பனை பின்தொடர்ந்து நடக்க, ஜனாவிற்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
பேசாம... ஊருக்குள்ளேயே எங்கையாவது பதுங்கியிருக்கலாம்டே... அப்பாரு சொன்னாருன்னு இவ்வளவு தூரம் வரவேண்டியதாயிற்று...- சலித்துக் கொண்டான் ஜனா.
ஊருக்குள்ள எங்க இருந்தாலும் போலீஸ் தூக்கிரும்... கேஸு அப்படி பட்டதுல்லா... இங்க ஒரு பயக்க வரமாட்டானுகோ...
இங்க வரதுக்கு வண்டி பாதை ஒண்ணும் இல்லையா?
நாம வந்து இறங்குன முதுகுளி வரைக்குத்தான் பாதை. அதுக்கப்புறம் காட்டுக்குள்ள நாம நடக்கிறதுதான் பாதை - கருப்பன் புன்முறுவல் பூத்தான்.
அப்ப இந்த பாதை வழியா போலீஸ் வரமாட்டாங்களா? ஜனாவின் ஆச்சர்யக் கேள்விக்கு, கருப்பன் அமானுஷ்யமாய் சிரித்தான்.
நாம போறது... பாதையே இல்ல ஏமானே ... -நடந்து கொண்டே ஏளனமாய் பதிலுரைத்தான் கருப்பன்.
அப்புறம்... - ஜனாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.
கருப்பன் பதிலேதும் கூறாது மீண்டும் மந்தகாசித்தான்.
ஜனாவிற்குள் திடீரென குழப்பம் தலையெடுக்க ஆரம்பித்தது. இதுவரை இல்லாத ஒரு பயம். இவனை நம்பி இவ்வளவு தூரம் வந்தது தப்பென்று தோன்றியது. போலீசின் கெடுபிடி அப்படி. ஒரு வாரம் பிடிகொடுக்காமல் தலைமறைவாய் இருக்கவேண்டியது மிக மிக அத்தியாவசியமாகப் போயிற்று.
"மாட்டினோம்னா அவ்வளவுதான். பொம்பள கேசு வேற... நாறு நாறாய் பிரிச்சுடுவானுக்கோ- என்று வக்கீல் பயமுறுத்தியதால், வேறு வழியே இல்லாமல் அப்பாருவின் தூண்டுதலின் பேரில், கருப்பனை நம்பி வரவேண்டியதாயிற்று.
அப்பாருக்கு கருப்பன் மேல் அப்படியொரு நம்பிக்கை. கருப்பனும் விஸ்வாசத்தின் மறுவடிவம். அப்பாரு "கொண்டு வா" என்றால், "கொன்று வரும்" பணி சாமர்த்தியம் அவனுக்குண்டு. ஒவ்வொரு பௌர்ணமியிலும் தான் வழிபடும் அகஸ்தியர் கோவிலிருக்கும் "ஏகபொதிகை மலை" பதுக்குவதற்கு சரியான இடமென்று கருப்பன் சொன்ன போது, ஜனாவும் ஒத்துக் கொண்டான். யாருக்கும் தெரியாமல் திட்டங்கள் ரகசியமாய் தயாராயின.
பொதிகை மலையின் சகல இண்டு பொந்துகளும் கருப்பனுக்கு "பரிச்சயம்" என்பதால், அப்பாருவும் முழு நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார். ஆனால் ஊராரோடு உறவாடும்போது வேலைக்காரனாக இருந்த கருப்பன், காட்டுக்குள் காலடி பதித்ததும் வேறாளாக இருக்கிறான். எங்கெங்கோ பார்க்கிறான். உடல் குறுகி நாணுகிறான். வித்தியாசமாகச் சிரிக்கிறான். திரும்பவும் முடியாமல் தொடரவும் மனமின்றி ஒருவாராய் குமுறிக் கொண்டிருந்தான் ஜனா.
இது பாதை இல்லைன்னா... நாம மட்டும் எப்படி போறோம் கருப்பா...- மீண்டும் சங்கோஜமாய் கேள்வியெழுப்பினான் ஜனா.
நமக்குதான் வழிகாட்ட ஆள் இருக்கே...
வழி காட்ட ஆளா? யாரு... நட்சத்திரங்களா?
கடலுக்குத்தான் நட்சத்திரம்... காட்டுக்கு வேற...
காட்டுக்கு என்னது கருப்பா? - மூச்சுவாங்கி சுவாரஸ்யத்துடன் கேள்வி எழுப்பினான் ஜனா.
அன்னா... தெரியுற விளக்கொளிய பார்த்து... அப்படியே திசைமாத்தி நடக்க வேண்டியதுதான்...- மீண்டும் கருப்பனின் அமானுஷ்ய பதில்.
என்னது... விளக்கொளி தெரியுதா? எங்க டே... - வியப்பில் கண்ணைச் சுழற்றினான் ஜனா.
கருப்பன் வடகிழக்கிலிருந்த மேட்டுத் திடலை நோக்கி கை காட்டினான்.
தூரத்தில் "சில நெருப்புக் குமிழ்கள் " பல மின்மினிப் பூச்சியின் வடிவில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஜனாவிற்கு ஆச்சர்யம் மேலோங்கியது. கூடவே சிறுபயமும்.
யாரு டே... அது.
கருப்பனிடம் பதில் இல்லை.
ஆட்களா ?
கருப்பனிடம் மீண்டும் ஒரு சிரிப்பு.
யாருடே... சொல்லு - ஜனா கட்டாயப்படுத்தினான்.
அது புலச்சியாக்கும்.
புலச்சியா...?
ஆமா.
பொம்பளையா...?
கருப்பன் சிரித்தான்.
உண்மையிலேயே பொம்பளையா?
ஆமா... சிலபேரு அத "ஒளிரும் மரங்கள்னு" சொல்றாங்க...
யாரு...
ஊருக்குள்ள வாழற ஆட்கள்.
அப்ப... உண்மையிலே அது யாருடே...
கருப்பன் மீண்டும் சிரித்தான். அதே மந்தகாசப் புன்னகை. ஜனாவோ நிரம்பக் குழம்பியிருந்தான்.
உன்ட யாருடே... இதெல்லாம் சொன்னா... -
மேல இருக்குற காணிக்காரங்க...
அவங்க கூட்டத்துல உள்ள பொம்பளைங்களா?
இல்ல... இவங்க வேற...
வேறன்னா...?
காணிக்கராங்க இவங்களை நீலி, யட்சி, சாமிக்கிறாங்க...
யட்சியா?
ஆமா... - என்று சொல்லி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தான் கருப்பன். எதையோ தீவிரமாக தேடுவது போலிருந்தது.
என்னாச்சு... கருப்பா? வழி மாறிடிச்சா?- பயத்துடன் பேசினான் ஜனா.
கருப்பன் திரும்பி மீண்டும் சிரித்தான். இருட்டில் வெள்ளைப்பற்கள் மெலிதாகப் பிரகாசித்தது. காட்டுக்குள் இன்னும் இருட்டு கூடியிருந்தது. ஜனாவிற்குள் அதிர்ச்சியும்.
நடையை நிறுத்தி மீண்டும் பெருமூச்சு வாங்கினான். சற்று தூரத்தில் தெரிந்த கரும்பாறைகள் நிலவொளியில் பெரும் கம்பளிப் போர்வையைப் போல் பிரகாசித்தன. இவனை நம்பி இங்கு வந்தது சரிதானா? - என்ற கேள்வி மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. தீடிரென்று ஈத்தல் மரப் புதர்களுக்கு நடுவே ஏதோ ஒரு "அரவம்" கேட்க "இருவரும்" கவனமானார்கள். சற்று கூர்தீட்டி செவிசாய்க்கும் போது, ஏதோ ஓன்று அவர்களை நோக்கி வருவது போலிருந்தது. சட்டென்று அருகிலிருந்த புதருக்குள் இருவரும் குதித்தனர். இருவர் இதயக்கூடுகளும் இயல்புக்கு மீறி துடிக்க ஆரம்பிக்க, இடுப்பில் தொங்கிய வெட்டுக்குத்தியைப் பற்றி, எதற்கோ ஆயத்தமானான் கருப்பன்.
காற்றெங்கும் ஒருமாதிரியான "பச்சிலைகளின்" வாசம் பரவி நிரம்பியது. என்னவென்று கணிக்க முடியாத சூழல்.
மூன்று நான்கு நொடிகளில் காற்றெங்கும் அதிர்ந்தது அந்த "பிளிறல்".
கருப்பு மேகமென, தந்தமற்ற காட்டு யானை ஓன்று, சிறிதான பிளிறலோடு அந்தக் கரும்பாறையை நோக்கி நடந்து கொண்டிருந்தது.
இருவரும் ஆடாமல், அசையாமல் புதருக்குள் பதுங்கியே இருந்தனர். வழிகாட்டிய விளக்கொளியும் தூரத்தில் அசையாமல் நின்றது மாதிரியிருந்தது.
ஓடிச்சென்ற யானை அந்த கரும்பாறை இடுக்கில் சென்று அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தது. இடையிடையே ஈனஸ்வரத்தில் ஏதோ வலியில் முனங்குவது போல் சிறு சிறு பிளிறல்கள்.
பதுங்கியிருந்த இருவருக்கும் எதுவும் புரியவில்லை. அசையாது பேச்சு, மூச்சின்றி மௌனம் காத்தனர்.
காட்டுக்குள் ஒற்றையாய் தனித்திருக்கும் யானை மிகவும் ஆபத்தானது -என்று கருப்பன் மெதுவாய் ஹாஸ்ய மொழியில் கூறத்தொடங்கிய நிமிடத்தில், மீண்டும் ஈத்தல் காட்டுக்குள் பெரும் காலடிகளின் சப்தம். தொடர்ந்த சில நிமிடங்களில் சிறிதும், பெரிதுமாய் யானைக் கூட்டமொன்று கரும்பாறையைச் சூழ்ந்து நின்றன.
என்னாச்சு கருப்பா...- பயத்தில் உறைந்தான் ஜனா.
இஷ்...- என்றான் கருப்பன்.
அந்நேரத்தில் காற்றெங்கும் ததும்பி நிற்கும் இந்த பச்சிலைகளின் வாசம், யானையினுடையதா? அல்லது காட்டினுடையதா? குழம்பித் தவித்தான் ஜனா.
இருவரும் ஒலியெழுப்பாமல் மௌனித்திருக்க, பத்து பதினைந்து நிமிடங்கள் வெகுவேகமாக செத்து விழுந்தன. அதற்கடுத்த வினாடியில் வந்த வேலை முடிந்தது போல், யானை கூட்டம் அவ்விடம் விட்டு மெதுவாக நகரத்தொடங்கியது. ஏதோ ஒரு கட்டளைக்கு கட்டுப்பட்டது போல், ஏகப்பொதிகையின் பாண்டியர் கோட்டை இருக்கும் "கொட்டுதளத்தை" நோக்கி யானைகள் நகர ஆரம்பித்தன.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் கொடும் காற்றின் மௌனம்.
யானை நின்ற கரும்பாறைக்கு அருகில் சென்று கவனித்தான் கருப்பன். பாறைக்கு நடுவே ஈரநைப்பிற்கான அடையாளங்கள். சட்டென்று "அதை" குனிந்து ஆராய்ந்தான் கருப்பன்.
என்னாச்சு கருப்பா...
ஒண்ணுமில்ல ஏமானே... நாம போவோம்.
என்னாச்சு...
ஒண்ணுமில்ல... நாம போவோம்...- கட்டளையிடுவதுபோல் பேசினான் கருப்பன்.
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
இவ்வளவு பயங்கரமான காட்டுக்குள்ள ஆயுதமில்லாம வந்தது பெரிய தப்பு கருப்பா... - நடையுனுடே பேச ஆரம்பித்தான் ஜனா.
கையிலிருந்த வெட்டுக்குத்தியைக் காட்டி, இதைவிட வேறென்ன வேண்டும் ஏமானே?- பெருமிதம் காட்டினான் கருப்பன்.
ஆமா... பாய்ஞ்சு வர்ற யானையையும் புலியையும் வெட்டுக் குத்திய வச்சு... லாவகமா வகுந்திரலாம் - சிரிப்போடு பரிகாசம் காட்டினான் ஜனா.
ஏமானே, இந்த ஆயுதத்தை சாதாரணமா நினைக்காதீங்க... இதை தாங்குற கை மட்டும்தான் என்னோடது... இது தேர்ந்தெடுத்து வாங்குற உயிரை "தெய்வம்தான்" தீர்மானிக்கிது. யானையோ, புலியோ எதுவா இருந்தாலும் "பலி" வாங்கணும் நினைச்சிட்டா, அவ்வளவுதான். இந்த காட்டுக்குள்ள இது மட்டும் தான் நமக்கு பாதுகாப்பு - பேசிக்கொண்டே இடுப்பிலிருந்த வெட்டுக்குத்தியின் கைப்பிடியை மீண்டும் ஒருமுறை தடவிக் கொண்டான் கருப்பன்.
இன்னும் எவ்வளவு தூரம் போகணும்டே...- பேச்சை மாற்றிய ஜனாவிற்கு "அயற்சியாய்" இருந்தது.
இன்னா வந்திட்டு... என்று கூறத் தொடங்கிய கருப்பன்... சட்டென்று சிரித்து, பதிலை அப்படியே நிறுத்திக்கொண்டான்.
அதைப் பார்த்ததும் ஜனாவிற்கு கோபமாய் வந்தது.
விளக்கொளி நகர்வில் மீண்டும் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
ஜனாவிற்கு எல்லாம் குழப்பமாகவே இருந்தது. என்ன நடக்கிறது... என எதையும் அனுமானிக்க முடியவில்லை. எதிர்வரும் நாலைந்து நாட்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்ற குழப்பம் வேறு நெஞ்சைப் பிசைந்து கொண்டிருந்தது. கருப்பனோ, எந்த சொரணையுமின்றி வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தான். "நேரம்" மட்டும் இம்மாதிரியான எந்த நெருடலுமின்றி, சீராக செத்து வீழ்ந்து கொண்டிருந்தது.
இஞ்சிக்குழியைத் தாண்டி,
அகஸ்திய மலையைத் தாண்டி
பூங்குளத்தைத் தாண்டி,
பொதிமேட்டை அடைந்த போது விடியற்காலை இரண்டு மணியாகியிருந்தது. அவ்விடம் முழுதும் ஈர வாசம் நிரம்பிய "பூங்குளிர்" சிறு பூக்களைப் போல் உதிர்ந்து கொண்டிருந்தது..
களைப்புடன் நடந்து, நடந்து முன்னேற தூரத்தில் சில தீப்பந்த விளக்கொளிர்வுகளும், சில கூரை வீடுகளும் தென்பட்டன.
நீல இருளில் சில மனிதர்கள் கருப்பனை சிரிப்போடு வரவேற்றனர். இவன் வருகைக்காக அவர்கள் காத்திருந்தது மாதிரி தெரிந்தது. பார்த்த மாத்திரத்தில் கரடுமுரடான ஊர்ப்புறத் தொழிலாளிகளைப் போலிருந்தனர். சிலபேர்களின் கைகளில் டார்ச்சை பார்க்க முடிந்தது. இருளில் யாருடைய முகத்தையும் தெளிவாக பார்க்க முடியவில்லை. அவர்கள் வேறேதோ பாஷையில் பேசுவது போலிருந்தது. இடையே இடையே பல தமிழ் சொற்கள் அவன் காதுக்குள் விழுந்தன. அவர்களின் சம்பாஷணை புரிவது போலவும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.
சிறிதுநேரத்திற்குள் வெகு தூரத்தில் ஜனாவுக்கென ஒரு குடில் ஒதுக்கப்பட்டது. மரஇலைகளாலும், ஒருவகை புல்லினாலும் கட்டப்பட்ட "பத்தி" என்ற குடில். உள்ளுக்குள் ஒரு கயிறுகட்டில். ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டான் ஜனா. உடல் முழுவதும் களைப்பிருந்தாலும் ஜனாவிற்கு தூக்கம் வாய்க்கவில்லை. செல்போனை உசுப்பி, துழாவ ஆரம்பித்தான். தடவ, தடவ படங்களும், காணொளிகளும் நகர ஆரம்பித்தன. வெட்கத்தில் கெஞ்சும் "அந்த பெண்ணின் முகம்" வந்ததும் அப்படியே நிறுத்தினான். கருப்பன் வரவில்லை என்பதை உறுதிசெய்து, காணொளியின் ஒலியளவைக் குறைத்து காட்சிகளை ஓடவிட்டான். ஆடைகளை அவிழ்த்து, மாரை மறைத்துக்கொண்டு கெஞ்சும் பெண்ணின் குரல் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. சிறிதுநேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். பட்டென்று அலைபேசியை அணைத்து படுக்கையில் புரண்டான். என்னென்னவோ நினைவுகள். மீண்டும் "அவள் முகம்" வந்து போனது. நடந்த "துர்சம்பவம்" அவன் நினைவைத் தீண்டிக் கடந்தது. வெளியே கருப்பனின், காணிக்காரர்களின் "சம்பாஷணைகள்" கேட்டுக் கொண்டிருந்தன. கூடவே "பௌர்ணமி நிலவு" பாலொளியை ஒரு மேகக்கூட்டம்போல் நிலத்தில் விதைத்திருந்தது.
அரைமணிநேரம் கழித்து, குழைந்த மரச்சீனியும், சூடான கட்டஞ்சாயாவும், நாவல்பழ கள்ளையும், கூடக்கடிக்க புளிச்சங்காய் துண்டுகளையும் மண் பாத்திரங்களில் ஏந்தியவாறு, கருப்பன் அவன் முன்னமர்ந்தான்.
சாப்பிட்டு நல்லா தூங்குங்க ஏமானே... - என்று கூறி கொண்டே மடியில் பொதிந்திருந்த, "வெள்ளை வஸ்து"-வை கட்டஞ்சாயாவில் சேர்த்தான். இருண்ட கிணற்றில், நிலவொளி கலந்ததுபோல், "கருத்த சாயா" சில நொடிகளில் காபி நிறத்திற்கு வெளிறியது.
என்னது டே இது... - வியப்புடன் கேள்விகேட்டான் ஜனா.
இது யானைப்பாலு...
யானைப்பாலா? - ஜனாவிற்குள் ஆச்சர்யம் அகலவில்லை.
ஆமா... பொம்பளை யானை, தேவைக்கு அதிகமான பாலை பாறை இடுக்குகளில் தேய்த்து தேய்த்து பீச்சி வச்சிடும்... நல்ல காஞ்ச "பாலு திரடு" இந்த மாதிரிதான் இருக்கும். அதை காப்பில கலந்து குடிச்சா... தேனாமிர்தமா இருக்கும்...
அப்ப... நேத்து ராத்திரி... அதுதான் நடந்ததா? - ஆச்சரியமாய் கேள்வி கேட்டான் ஜனா.
ஆமா... இதைக் குடிச்சிட்டு கொஞ்சம் கண்ணயிருங்க...
ஏதோ யோசனையோடு காப்பியை உறிஞ்சினான் ஜனா. கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. கூடவே சிறு மயக்கமும் பின் மண்டையைத் தாக்கியது.
தூங்க முடியலை கருப்பா... செத்து போன அந்த பொண்ணு நினைப்பாவே இருக்கு...
பயப்படாதீங்க... எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான்... மத்த விஷயங்களை பெரியய்யா பார்த்துக்குவாரு...
சிறிதுநேரமாய் எங்கோ மேல்கூரையைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனா, மெதுவாக அந்தக் கேள்வியை கேட்டான்.
உயிர் பிரிஞ்சு போறப்ப, உடம்போட "கண்களை, நீ பார்த்திருக்கியா கருப்பா ?
கருப்பன் தடுமாறினான்.
அத மறந்திடுங்க... நீங்க வேணும்னு செய்யலையே...
ஒரு மாதிரி இருக்கு கருப்பா...- கண்ணசைத்துச் சாய்ந்தான் ஜனா.
கொழுப்பு கூடுன பாலுல்லா... கொஞ்சம் மயக்கமாதான் இருக்கும்...- என்று கூறிக்கொண்டே ஒன்றுக்கு போவதாகக் கூறி மீண்டும் வெளியேறினான் கருப்பன்.
அவன் திரும்பி வருவது வரை மேல்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜனா.
கருப்பன் வந்து பேசி உசுப்ப, சில நிமிடங்களுக்கு பிறகு, மரச்சீனியோடு நாவல்பழக் கள்ளை பருக ஆரம்பித்தனர். உவர்ப்பு மிகுந்த "கள்" உடம்பிற்குள் சென்று உறைய ஆரம்பித்தது.
நேரம் செல்ல, செல்ல ஏதோ ஒரு அக மாற்றத்தை ஜனாவினால் உணர முடிந்தது. உடல் உருகுவது போல். எங்கோ நழுவிச் செல்வது போல். தூக்கம் தழுவது போல். எண்ணமெங்கும் சில வண்ணங்கள் நிரம்பியது போல். தூரத்தில் ஒரு ஒளிக்கீற்று வருவது போல்.
சட்டென்று ஒருமுறை தலையைச் சுழற்றி உதறினான் ஜனா.
எதிரே அம்மாதிரியான மயங்கிய கண்களோடு கருப்பன் இருப்பது தெரிந்தது.
பேச்சற்ற மௌனமாய் சில நிமிடங்கள் கரைந்தன. தூரத்தில் சில "விலங்கொலிகள்" மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தன.
போதையேறிய ஜனாவின் உடம்பு, லௌகீக சிந்தனையில் இளகத் தொடங்கியது.
அந்த வெளிச்சம் எப்படி வந்தது... சொல்லு டே...- அவ்விடம் நிரம்பிய மௌனத்தை, கேள்விகளால் கலைத்தான் ஜனா.
கண்கள் மேலேற, கருப்பன் பெரும் போதையில் சிரித்தான்.
யாரு டே அந்த புலச்சி... - மீண்டும் ஜனா கேட்டான்.
இந்த மலையோட காவலாளிங்க...- கருப்பனுக்கு லேசாக நாக்கு குழறியது.
பொம்பளையா...???
ஆமா... பொம்பளைதான்... பொம்பளைன்னா, நாம பார்த்து புழங்கிய வீட்டு பொம்பளைங்க இல்ல... அசல் காட்டு பொம்பளைங்க...
பொம்பளைல ஏதுடே காடு, நாடுன்னு...
காட்டுயானை... நாட்டு யானைன்னு இல்லையா... அதுமாதிரிதான்...
எனக்கு தெரிஞ்ச பொம்பளைங்க ரெண்டே வகைதான்... வீரியம் கூடுன குதிரை மாதிரி... அல்லது சீறி படரும் பாம்பை போல...- எங்கோ படித்த விஷயங்களோடு "ஆணீயம்" பேசினான் ஜனா.
அதெல்லாம் ஊருக்குள்ள நாம பாக்குற நாடன் பொம்பளைக... இதுக வேற வகை...
வேற வகையா.... நீ அடிக்கடி இங்க வருவியோ...
கருப்பன் சிரித்தான்.
நான் அடிக்கடி வந்தாலும் அண்ட முடியாத பொம்பளைங்க இவங்க... நீங்க சொன்ன குதிரையும் இல்ல... பாம்பு இல்ல... விஷம் கூடிய தேனீ வகைப் பெண்கள்... அதுவும் தாய்வழிச் சமூகத்தில் ஊறிய ராணித் தேனீ வகை...
ராணித் தேனீயா... அப்ப "கொடுக்கு" இருக்குமா? - கிண்டலடித்தான் ஜனா.
இருக்கும்... கொட்ட கொட்ட சுகம் கொடுக்கும் "கொடுக்குகள்"...- கருப்பனின் வார்த்தைகள் உதறிச் சிதறின.
ஜனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் கருப்பன் கூறும் எல்லாவற்றிலும் அமானுஷ்யத்தின் சுவடு இருந்தது.
அவங்க ஏன் இங்க இருக்காங்க?
அவங்கெல்லாம் தாய்வழி சமூகமா இந்த காட்டுக்குள்ள வாழ்ந்திட்டு இருக்குற மலையாளிங்க ...
மலையாளிங்களா?
ஆமா...
தாய்வழி சமூகம்ன்னா?
மனுஷன் தோன்றுனபோது இருந்த மாதிரி...
புரியலையே???
இப்பவும் இருக்கே... தேனீக்கள் மாதிரி... யானைகள் மாதிரி... பாம்புகள் மாதிரி... பெண்ணினம்தான் மொத்த கூட்டத்தையும் வழி நடத்தும்.
அப்ப... ஆம்பளைங்க...?
"சோலி' பாக்கத தவிர, ஆம்பிளைகளுக்கு பெரிதான வேலை இல்ல... நல்ல சாப்பிடணும்... அப்புறம் பொம்பளைங்க கூப்புடரப்போ போகணும். -போதை திமிரப் பேசினான் கருப்பன்.
அவ்வளவு போதையிலும் காமக் குதூகலத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான் ஜனா.
ஆனா... பொம்பளைங்க விருப்பம்தான் பிரதானம். அவங்க இஷ்டம் இல்லாம கிட்ட நெருங்கவே முடியாது.
அப்படின்னா...?
தான் கூட "கூடணும்" நினைக்குற ஆம்பிளைகள பொம்பளைங்கதான் தேர்ந்தெடுப்பாங்க.
தேர்ந்தெடுத்து?
தேர்ந்தெடுத்தவன... தேவைக்கேற்ப ஆசை தீர அனுபவிப்பாங்க... இணையா இருக்குற காலம் முழுதும் "அந்த ஆம்பளைக்கு" தேவையானதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வாங்க. காலப்போக்குல ஆசை தீரும்போது, வேற ஒரு துணையை தேடுவாங்களாம். சுருக்கமா சொன்னா, இப்ப நாம ஊருக்குள்ள பொம்பளைகளுக்கு பண்ணுறத, காட்டுக்குள்ள இவங்க ஆம்பிளைகளுக்கு பண்ணுறாங்க...
எச்சில் இறக்க மறந்து கேட்டுக்கொண்டிருந்தான் ஜனா. ஊருக்குள் அவனறிந்த "குடும்ப பெண்கள்" அனைவரும் நினைவுக்கு வந்தார்கள். ஆதிக்கத்திலிருக்கும் ஆண்வழி சமூக கட்டமைப்பை அவனால் உணர முடிந்தது. கருப்பன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
இதுல கொடுமை என்னன்னா... படுக்கையில் திருப்தி தராத ஆம்பிளைகள, சில "புலச்சிங்க" ஆவேசமா கொல்லவும் செய்வாங்களாம்...
இருவரின் போதையும் உச்சத்தை அடைந்திருந்தது. மூன்று கலையங்கள் "கள்" தீர்ந்து, இரண்டு கலயங்கள் மீதமிருந்தது. கருப்பன் கதை சொன்ன தோரணையோ என்னவோ, ஜனாவின் மனதிற்குள் பல காட்சி படிமங்கள் தோன்றி மறைந்தன. கொஞ்சநேரம் புலச்சிகளின் நினைவாகவே இருந்தது. புரண்டு, புரண்டு படுத்து, பின்பு உடல் அயற்சியில் அப்படியே கண்ணயர்ந்தான் ஜனா.
நள்ளிரவில், நல்லெண்ணெய் விளக்கொளியில், மேனியெங்கும் எண்ணெய் வழிய, பளபளக்கும் கருங்கல்லைப் போல் கருப்பன் மல்லாந்து படுத்திருந்தான். விரிந்த கூந்தல் முதுகை மறைக்க, உரித்த நுங்கு நிறத்திலிருந்த, மேலாடை அணியாத பெண்ணொருத்தி கால் விரித்து, அவன் இடுப்பின் மேல் அமர்ந்திருந்தாள். தூக்கணாங்குருவியின் சிறிய கூடு போலிருந்த "மார்புகள்" குலுங்க, "அவனை" தனக்குள்ளாக்கி இயங்கிக் கொண்டிருந்தாள். பாலாபிஷேக ஆலிங்கமென, வழிந்தோடிய "முலைப்பால்", கருப்பனின் நெஞ்சுக்கூட்டினை நனைத்திருந்தது. அந்த ஒத்திசைவான இயக்கத்தில் தன்னிலை மறந்து, கண்கள் மேலேறி... முனங்கிக் கொண்டிருந்தான் கருப்பன்.
கண்ட கனவில் பதறி விழித்தான் ஜனா. பொழுது நண்பகலை கடந்திருந்தது. வெகு நேரமாக அயர்ந்து உறங்கியது அப்போதுதான் தெரிந்தது. கருப்பன் படுத்த இடம் காலியாக இருந்தது. கண்ட கனவு மீண்டும் நினைவுக்கு வந்தது. ஏதோ யோசனையோடு பையிலிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து பரிசோதித்தான். இவ்விடத்தில் "தகவல் தொடர்பு" சாத்தியம் இல்லையென்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகியது. மெதுவாக நடந்து காணிக்காரர்களின் குடிலுக்கருகில் நடந்தான். எல்லா குடிலும் காலியாக இருந்தது. ஒரு குடிலில் மட்டும் ஒரு குழந்தையின் அழுகை. தென்பட்ட பெண்ணிடம் கருப்பனை விசாரித்தான். இவன் கூறுவதை சற்று சிரமத்துடன் புரிந்து கொண்ட பெண், கிழக்கு திசையை நோக்கி கைகாட்டி, கருப்பன் நாகப்பொதிகையிலுள்ள கோவிலுக்குச் சென்றதாகக் கூறினாள்.
ஏதோ ஒரு வேட்கை, புலைச்சிகளிள் கதையில் பிறந்த ஆர்வம், கண்ட கனவின் களிப்பு, அது கொடுத்த ஊக்கம், அந்தப் பெண் கைகாட்டிய திசையில் விறுவிறுவென நடக்கத் தொடங்கினான் ஜனா. அதே நேரத்தில் ஏதோ ஒரு சமிக்கை போல, நாகப்பொதிகை மலையில் மட்டும் காணப்படும் சலிமலியின வவ்வாலொன்று அவன் தலைக்கு நேராய் செங்குத்தாய் பறக்கத் தொடங்கியது.
அரைமணிநேரம் நடந்திருப்பான். குழப்பமில்லாத மலைப்பாதை ஒரு பாயைப் போல் நேரடியாய் நீண்டுகொண்டிருந்தது. சுற்றிலும் கருகருவென ஈத்தல் மரங்கள். இடையிடையே உயரம் கூடிய புங்கை மரங்கள், குங்கிலியம் சுரந்து நிற்கும் கருமருது மரங்கள். பத்தாண்டுகளுக்குப்பின் குலைவிடும் கல்வாழை மரங்கள். பால் கசியும் பலா மரங்கள். மரம்விட்டு மரம் தாவும் மந்திக் குரங்குகள். ஐம்பத்திரெண்டு நிமிட நடையில், ஒரு வளைவின் உயரத்தில் தெரிந்த குகைக்கோவிலில், கருப்பன் மண்டியிட்டு முதுகு தெரிய அமர்ந்திருப்பது தெரிந்தது. கருப்பன் தானா? அவனே தான். ஜனா உறுதிப்படுத்தினான். கூடவே மார்புக்கச்சையணிந்த நான்கைந்து பருவப் பெண்கள் "தங்க நிறத்தில்" அவனைச் சுற்றியிருப்பதும் தெரிந்தது. ஆச்சர்யம் மேலோங்க, பட்டென்று ஒரு மரத்தின் பின்புறம் ஒளிந்து கொண்டான் ஜனா.
இவர்கள்தான் புலைச்சிகளா?
அங்கிருந்து அவர்களைப் பார்க்கையில் அமானுஷ்யமாய் "ஒரு பூஜை" நடப்பது போலிருந்தது. தலைமட்டும் தெரிந்த ஏதோ ஒரு "தெய்வம்" காட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏதோ ஒரு மரத்தின் "பிசின்" நெருப்பைச் சுவைத்து "புகையை" உமிழ்ந்துக் கொண்டிருந்தது. கருப்பனின் உடம்பு முழுவதும் பெண்கள் சந்தனம் பூசிக் கொண்டிருந்தார்கள். மார்பில் பெண்களின் கைகள் படுக்கையில், கருப்பன் உடல் உதறி, வெட்கப்படுவதுபோலிருந்தது. பலகாலமாய் தனது வீட்டில் வேலை செய்தாலும் சட்டை கழற்றிய நிலையில் கருப்பனை பார்த்ததாக ஜனாவிற்கு நினைவேதுமில்லை. சந்தனம் பூசி, குங்குமமிட்டு, வளையலிட்டு, அவர்கள் அணிந்த நிறத்திலுள்ள ஒரு மார்புக் கச்சையை கருப்பனுக்கும் அணிவித்தார்கள். முற்றித் திரண்ட கருத்த பெண்ணொருத்தியைப் போலிருந்தான் கருப்பன். ஒரு குறிப்பிட்ட பொழுதில் பெண்ணொருத்தி ஓற்றை கொட்டு போன்ற இசைக்கருவியை இசைக்க, காடெங்கும் அதன் அதிர்வு. அதனால் அதிர்ந்த பறவைக் கூட்டமொன்று திசை மாற்றிப் பறந்து மறைந்தன. வந்த நிமிடங்களில், அதிர்வு உச்சம் தொடுகையில், கருப்பன் "சன்னதம்" தெறிக்க, பெண்களின் நளினத்தோடு ஆடத் தொடங்கினான்.
மனமெங்கும் குழப்பத்தோடு, கூர்மையான பார்வையுடன் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தான் ஜனா. ஒரு திருநங்கையின் சாயலில் கருப்பன் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தான். கருப்பன் உண்மையிலேயே ஆண்மகன் தானா? என்ற சந்தேகம் அந்த நிமிடத்தில் ஜனாவிற்குள் தோன்றியது. கருப்பன் மறைத்த "உடல் நளினங்கள்" எல்லாம் ஜனாவின் நினைவில் அலைமோதியது.
ஒரு வேளை திருநங்கையாக இருப்பானோ? கணிக்க முடியாத ஏதோவொன்று முதுகில் ஊர்வது போல், தளர்ந்து குழம்பினான் ஜனா.
கருப்பன் திருநங்கையென்றால், எப்படி இத்தனை காலமும் அவனால் அதை மறைக்க முடிந்தது. பெண்மையை உயர்த்தி அவன் பேசிய வசனங்கள் எல்லாம் நினைவுக்குள் சுழன்றன. ஜனாவிற்கு வியப்பு மேலோங்கியது. சதா சர்வ காலமும் கருப்பனை புகழும் அப்பாருவின் மீது லேசான சந்தேகம் துளிர்த்தது. அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அப்படியே இறங்கி குடிலுக்கு வந்து விட்டான். ஆனால் குழப்பப் பருந்துகள், அவன் பின் மண்டையைக் தொடர்ந்து குடைந்து கொண்டிருந்தன.
முன்னிரவின் தொடக்கத்தில் குளித்த சாயலோடு கருப்பன் குடிலுக்குள் நுழைகையில், ஜனா மீதமிருந்த புளித்த கள்ளைக் குடித்து ஏக போதையோடு அரைத்தூக்கத்திலிருந்தான். இரவு உணவும், கட்டஞ்சாயவும் கருப்பனின் கைவசமிருந்தது.
ஏமானே... சாப்பிடுங்க... மெதுவாக குரல் கொடுத்தான் கருப்பன்.
அறையின் ஓரத்திலிருந்த பையை துழாவி, திரும்பி நின்று, ஈரமான மேல்ச் சட்டையை கழற்றி, வேறொரு சட்டைக்கு மாறினான் கருப்பன். படுக்கையில் கிடந்தவாறே கருப்பனின் முதுகை குறுகுறுவென பார்த்தான் ஜனா.
எங்க போயிட்ட கருப்பா...
பூஜைக்குத்தான் ஏமானே? - உடைகளை சரிசெய்து, உணவோடு ஜனாவின் முன் அமர்ந்தான்.
பூஜ நல்படியா மு...ஞ்சுதா? - ஜனாவிற்கு நாக்கு லேசாக குழறியது.
ஆமா... நீங்க சாப்பிடுங்க?
புலைச்சிகள பார்த்...தியா?
இல்லையே...
இல்ல நீ பார்த்த... அத நான் பார்த்தேன்.
என்ன சொல்றீங்க ஏமானே... எனக்கு புரியல...
லேய்... நீனும் அந்த குட்டிகளும் ஆட்டம் போட்டத... நான் பார்த்தேன்...- ஜனாவின் குரல் தடித்தது.
யாரைச் சொல்றீங்க...அப்படியெதுவும் இல்லை - கருப்பன் குழம்பியது போல் பேசினான்.
நான் பார்த்தேன்...
யாரை?
புலைச்சிகள...
கண்டிப்பா அப்படி எதுவும் இல்ல...- கருப்பன் திட்டவட்டமாக மறுத்தான்.
கருப்பா... அவங்கள நான் திரும்ப பார்க்கணும்...- விழும் தோரணையில் எழும்பி, பக்கத்திலிருந்த தூணை பற்றி நின்று கொண்டான் ஜனா.
பதறிய கருப்பன், ஏமானே நீங்க சொல்றது எனக்கு புரியல... அப்படி ஏதும் நடக்கல...
இல்ல... நான் பார்த்தேன்...
அப்படியே உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருந்தாலும், நாம விருப்பப்படுற நேரத்துல அவங்கள பார்க்க முடியாது. நம்மள பார்க்க அவங்க விருப்படணும்...
நான் பார்த்தேன்... அந்த குட்டிகளோடு நீ ஆடுன... சட்டையில்லாம ஆடுன... - என்று மீண்டும் ஆக்ரோஷம் பொங்க பேசினான் ஜனா.
பொதிகையில இப்படி பல அதிசயங்கள் நடக்கும்... பொறுமையா இருங்க...
இல்ல... நான் பார்த்தேன்... நீ சட்டையில்லாம ஆடுன - மீண்டும் மீண்டும் உளறிக் கொண்டிருந்தான் ஜனா. அவன் மூளையெங்கும் புலைச்சிகளும், கருப்பனும் ஆடிய சன்னதத்தின் காட்சிகள்.
பயப்படாதீங்க... உட்காருங்க... என அவனைப் பற்றி படுக்கையில் உட்காரவைக்க முயன்றான் கருப்பன்.
கருப்பனின் ஸ்பரிஸம் பட்டதும், ஏதோ ஒரு வேகத்தோடு கருப்பனின் பிடித்து இழுக்க, கையில் அகப்பட்ட அவன் வேஷ்டி ஜனாவின் கையோடு வந்தது.
வெறும் மேல் சட்டையோடு கருப்பன் திமிறினான்.
நான் பார்த்தேன்... அந்த குட்டிகளோடு நீ ஆடுன - ஜனாவின் வாயிலிருந்து மீண்டும், மீண்டும் அதே பிதற்றல்.
இதை சற்றும் எதிர்பாராத கருப்பன், ஏமானே... ஏமானே... பொறுங்க... என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
நீ பொம்பளைதானே... வா... வா... வென்று ஆக்ரோஷம் காட்டினான் ஜனா. சட்டையைப் ஆவேசமாகப் பற்றிய கை விடவே இல்லை.
நிலைமையின் விபரீதம் உணர்ந்து மன்றாடினான் கருப்பன்.
கருப்பன் கெஞ்ச, கெஞ்ச அலைபேசியில் கண்டு கழித்த "அந்தப்பெண்ணின்" முகச்சாடையிலிருப்பதுபோல் ஜனாவிற்கு தோன்றியது. அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியும், தலைக்கேறிய போதையும் ஜனாவை மூர்க்கம் கொள்ளச் செய்தன.
தொடர்ந்த இருவரின் அங்கலாய்ப்பில் சட்டை கிழிந்து கருப்பனின் அவயங்கள் வெளித்தெரிய ஆரம்பித்தன.
எந்த நேரத்தில் அது நடந்ததென்று கருப்பனுக்கே தெரியவில்லை.
சுவரோரத்தில் ஒதுக்கி வைத்திருந்த வெட்டுகுத்தியின் கைப்பிடி கருப்பனின் வலக்கையிலிருந்தது. அதன் மறுமுனை ஜனாவின் கழுத்திற்குள் பாதிக்குமேல் புதைந்திருந்தது. உள்ளுக்குள் இருந்த ஜனாவின் "காமம்" இரத்தத் துளிகளாய் சிதற ஆரம்பித்தது.
வெகுநேரமாய் ஜனாவின் தலைக்கு மேல் பறந்த "சலிமலியின வௌவால்" அக்கணத்திலிருந்து வேறுதிசையில் பயணிக்கத் தொடங்கியது.
- தெரிசை சிவா