அந்தி கழிந்துப் பிறக்கும் முன்
தெரிசை சிவா
செவ்வாய், 22 மார்ச், 2022
சன்னதம்
பெரும் பச்சையை உடம்பெங்கும் சூடிய மலைக்காடு. தனக்குள் நுழைபவர்களின் புலன்களை, எண்ணங்களை, சிந்தனைகளை மெதுவாக கீறி, பற்பல நினைவுகளை சுரக்கச் செய்யும் அடர்காடு. காடென்பது மர்மம்.
காடென்பது பொக்கிஷம். காடென்பது அமானுஷ்யம். காடென்பது அதிஉன்னதம். பச்சை ரத்தம் பரவி நிற்கும் பெருங்கடலென விரிந்தி ருந்தது "பசும் காடு". பாசி பிடித்த பாறைகளால், கற்களால், மரங்களால் சூழப்பட்ட வனத்தின் உடல், அவர்கள் முன் "அம்மணமாக" விரிந்துக் கிடந்தது .
அடர்ந்த மலைக் காட்டினுள் "அவர்கள்" இருவர் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்த நடையில் சுரந்த அக்குள் வியர்வையில் "ஜனாவின் உடை" அதிகப்படியாய் நனைந்திருந்தது. வழக்கத்தைவிட நீண்...ட "பெருமூச்சு", நுரையீரலை நிறைத்துப் பிரிந்தது. நாசியெ ங்கும் ஈரம் குடித்த "காட்டு மண்ணின்" மணம். சில இடங்களில் மூலிகைகளின் மணம். சில இடங்களில் தேக்கம்பூக்களின் மணம். சில இடங்களில் சம்மந்தமே இல்லாத "அரிசி முறுக்கின் மணம்". சாரை பாம்புகள் சல்லாபத்தில் இருப்பதற்கான அறிகுறி - என்று யாரோ கூறியது ஜனாவிற்கு நினைவுக்கு வந்தது. முகத்தில் அறைந்த தண்மை கூடிய "வாடைக்காற்று" குளிரை மென்மேலும் கூட்டியது. சமத்தளமில்லாத "நடைக்களம்" உடலுக்கு அதிகப்படியான களைப்பைத் தந்து கொண்டிருந்தது.
இன்னும் எவ்வளவு தூரம்டே ... - முதிர்ந்த களைப்பில் காடுகளின் இலை தழைகளுக்கு மத்தியில் ஒலித்த ஜனாவின் குரல், வலுவற்று சன்னமாய் ஒலித்தது.
முன்னே போய்க் கொண்டிருந்த வேலைக்காரன் கருப்பன் "இன்னா வந்திட்டு... ஏமானே? என்று கூறிக்கொண்டே முன்னேறிக்கொண்டிருந்தான்.
அடுப்படி தணலில் காய்ந்து முருகிய "வெட்டக் கருப்பட்டி"-யின் நிறத்திலிருந்தான் கருப்பன். இதே பதிலை இதே தொனியில் மூன்று நான்கு முறை ஏற்கனவே கூறியிருந்தான். தெறிக்கும் மார்பை தொள தொள சட்டையால் மறைத்திருந்தான். பழுப்பு நிறத்தில் ஒரு பருத்தி வேஷ்டி. தோளில் அத்தியாவசிய பொருள்களை தாங்கிய பிளாஸ்டிக் பையொன்று பொதும்பிக் கிடந்தது. இடுப்பைச் சூழ்ந்த தோல் பெல்ட்டில் "மான்கொம்பு" கைப்பிடியிட்ட வெட்டுக்குத்தியொ ன்று தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்தது. நடையின் இடைவெளியில் அண்ணாந்து பார்த்து எதையோ தேடுவது போல் வானம் நோக்கினான். பின்பு திசையை அனுமானித்து, ஒரு "கருஞ்சிறுத்தையை" போல் வேகமாக நடந்து கொண்டிருந்தான். கருப்பனை பின்தொடர்ந்து நடக்க, ஜனாவிற்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
பேசாம... ஊருக்குள்ளேயே எங்கையாவது பதுங்கியிருக்கலாம்டே... அப்பாரு சொன்னாருன்னு இவ்வளவு தூரம் வரவேண்டியதாயிற்று...- சலித்துக் கொண்டான் ஜனா.
ஊருக்குள்ள எங்க இருந்தாலும் போலீஸ் தூக்கிரும்... கேஸு அப்படி பட்டதுல்லா... இங்க ஒரு பயக்க வரமாட்டானுகோ...
இங்க வரதுக்கு வண்டி பாதை ஒண்ணும் இல்லையா?
நாம வந்து இறங்குன முதுகுளி வரைக்குத்தான் பாதை. அதுக்கப்புறம் காட்டுக்குள்ள நாம நடக்கிறதுதான் பாதை - கருப்பன் புன்முறுவல் பூத்தான்.
அப்ப இந்த பாதை வழியா போலீஸ் வரமாட்டாங்களா? ஜனாவின் ஆச்சர்யக் கேள்விக்கு, கருப்பன் அமானுஷ்யமாய் சிரித்தான்.
நாம போறது... பாதையே இல்ல ஏமானே ... -நடந்து கொண்டே ஏளனமாய் பதிலுரைத்தான் கருப்பன் .
அப்புறம்... - ஜனாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.
கருப்பன் பதிலேதும் கூறாது மீண்டும் மந்தகாசித்தான்.
ஜனாவிற்குள் திடீரென குழப்பம் தலையெடுக்க ஆரம்பித்தது. இதுவரை இல்லாத ஒரு பயம். இவனை நம்பி இவ்வளவு தூரம் வந்தது தப்பென்று தோன்றியது. போலீசின் கெடுபிடி அப்படி. ஒரு வாரம் பிடிகொடுக்காமல் தலைமறைவாய் இருக்கவேண்டியது மிக மிக அத்தியாவசியமாகப் போயிற்று.
"மாட்டினோம்னா அவ்வளவுதான். பொம்பள கேசு வேற... நாறு நாறாய் பிரிச்சுடுவானுக்கோ- என்று வக்கீல் பயமுறுத்தியதால், வேறு வழியே இல்லாமல் அப்பாருவின் தூண்டுதலின் பேரில், கருப்பனை நம்பி வரவேண்டியதாயிற்று.
அப்பாருக்கு கருப்பன் மேல் அப்படியொரு நம்பிக்கை. கருப்பனும் விஸ்வாசத்தின் மறுவடிவம். அப்பாரு "கொண்டு வா" என்றால், "கொன்று வரும்" பணி சாமர்த்தியம் அவனுக்குண்டு. ஒவ்வொரு பௌர்ணமியிலும் தான் வழிபடும் அகஸ்தியர் கோவிலிருக்கும் "ஏகபொ திகை மலை" பதுக்குவதற்கு சரியான இடமென்று கருப்பன் சொன்ன போது, ஜனாவும் ஒத்துக் கொண்டான். யாருக்கும் தெரியாமல் திட்டங்கள் ரகசியமாய் தயாராயின.
பொதிகை மலையின் சகல இண்டு பொந்துகளும் கருப்பனுக்கு "பரிச்சயம்" என்பதால், அப்பாருவும் முழு நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார். ஆனால் ஊராரோடு உறவாடும்போது வேலைக்காரனாக இருந்த கருப்பன், காட்டுக்குள் காலடி பதித்ததும் வேறாளாக இருக்கிறான் . எங்கெங்கோ பார்க்கிறான். உடல் குறுகி நாணுகிறான். வித்தியாசமாகச் சிரிக்கிறான். திரும்பவும் முடியாமல் தொடரவும் மனமின்றி ஒருவாராய் குமுறிக் கொண்டிருந்தான் ஜனா.
இது பாதை இல்லைன்னா... நாம மட்டும் எப்படி போறோம் கருப்பா...- மீண்டும் சங்கோஜமாய் கேள்வியெழுப்பினான் ஜனா.
நமக்குதான் வழிகாட்ட ஆள் இருக்கே...
வழி காட்ட ஆளா? யாரு... நட்சத்திரங்களா?
கடலுக்குத்தான் நட்சத்திரம்... காட்டுக்கு வேற...
காட்டுக்கு என்னது கருப்பா? - மூச்சுவாங்கி சுவாரஸ்யத்துடன் கேள்வி எழுப்பினான் ஜனா.
அன்னா... தெரியுற விளக்கொளிய பார்த்து... அப்படியே திசைமாத்தி நடக்க வேண்டியதுதான்...- மீண்டும் கருப்பனின் அமானுஷ்ய பதில்.
என்னது... விளக்கொளி தெரியுதா? எங்க டே... - வியப்பில் கண்ணைச் சுழற்றினான் ஜனா.
கருப்பன் வடகிழக்கிலிருந்த மேட்டுத் திடலை நோக்கி கை காட்டினான்.
தூரத்தில் "சில நெருப்புக் குமிழ்கள் " பல மின்மினிப் பூச்சியின் வடிவில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஜனாவிற்கு ஆச்சர்யம் மேலோங்கி யது. கூடவே சிறுபயமும்.
யாரு டே... அது.
கருப்பனிடம் பதில் இல்லை.
ஆட்களா ?
கருப்பனிடம் மீண்டும் ஒரு சிரிப்பு.
யாருடே... சொல்லு - ஜனா கட்டாயப்படுத்தினான்.
அது புலச்சியாக்கும்.
புலச்சியா...?
ஆமா.
பொம்பளையா...?
கருப்பன் சிரித்தான்.
உண்மையிலேயே பொம்பளையா?
ஆமா... சிலபேரு அத "ஒளிரும் மரங்கள்னு" சொல்றாங்க. ..
யாரு...
ஊருக்குள்ள வாழற ஆட்கள்.
அப்ப... உண்மையிலே அது யாருடே...
கருப்பன் மீண்டும் சிரித்தான். அதே மந்தகாசப் புன்னகை. ஜனாவோ நிரம்பக் குழம்பியிருந்தான்.
உன்ட யாருடே... இதெல்லாம் சொன்னா... -
மேல இருக்குற காணிக்காரங்க...
அவங்க கூட்டத்துல உள்ள பொம்பளைங்களா?
இல்ல... இவங்க வேற...
வேறன்னா...?
காணிக்கராங்க இவங்களை நீலி, யட்சி, சாமிக்கிறாங்க...
யட்சியா?
ஆமா... - என்று சொல்லி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தான் கருப்பன். எதையோ தீவிரமாக தேடுவது போலிருந்தது.
என்னாச்சு... கருப்பா? வழி மாறிடிச்சா?- பயத்துடன் பேசினான் ஜனா.
கருப்பன் திரும்பி மீண்டும் சிரித்தான். இருட்டில் வெள்ளைப்பற்கள் மெலிதாகப் பிரகாசித்தது. காட்டுக்குள் இன்னும் இருட்டு கூடியிருந்தது. ஜனாவிற்குள் அதிர்ச்சியும்.
நடையை நிறுத்தி மீண்டும் பெருமூச்சு வாங்கினான். சற்று தூரத்தில் தெரிந்த கரும்பாறைகள் நிலவொளியில் பெரும் கம்பளிப் போர்வையைப் போல் பிரகாசித்தன. இவனை நம்பி இங்கு வந்தது சரிதானா? - என்ற கேள்வி மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. தீடிரென்று ஈத்தல் மரப் புதர்களுக்கு நடுவே ஏதோ ஒரு "அரவம்" கேட்க "இருவரும்" கவனமானார்கள். சற்று கூர்தீட்டி செவிசாய்க்கும் போது, ஏதோ ஓன்று அவர்களை நோக்கி வருவது போலிருந்தது. சட்டென்று அருகிலிருந்த புதருக்குள் இருவரும் குதித்தனர். இருவர் இதயக்கூடுகளும் இயல்புக்கு மீறி துடிக்க ஆரம்பிக்க, இடுப்பில் தொங்கிய வெட்டுக்குத்தியைப் பற்றி, எதற்கோ ஆயத்தமானான் கருப்பன்.
காற்றெங்கும் ஒருமாதிரியான "பச்சிலைகளின்" வாசம் பரவி நிரம்பியது. என்னவென்று கணிக்க முடியாத சூழல்.
மூன்று நான்கு நொடிகளில் காற்றெங்கும் அதிர்ந்தது அந்த "பிளிறல்".
கருப்பு மேகமென, தந்தமற்ற காட்டு யானை ஓன்று, சிறிதான பிளிறலோடு அந் தக் கரும்பாறையை நோக்கி நடந்து கொண்டிருந்தது.
இருவரும் ஆடாமல், அசையாமல் புதருக்குள் பதுங்கியே இருந்தனர். வழிகாட்டிய விளக்கொளியும் தூரத்தில் அசையாமல் நின்றது மாதிரியிருந்தது.
ஓடிச்சென்ற யானை அந்த கரும்பாறை இடுக்கில் சென்று அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தது. இடையிடையே ஈனஸ்வரத்தில் ஏதோ வலியில் முனங்குவது போல் சிறு சிறு பிளிறல்கள்.
பதுங்கியிருந்த இருவருக்கும் எதுவும் புரியவில்லை. அசையாது பேச்சு, மூச்சின்றி மௌனம் காத்தனர்.
காட்டுக்குள் ஒற்றையாய் தனித்திருக்கும் யானை மிகவும் ஆபத்தானது -என்று கருப்பன் மெதுவாய் ஹாஸ்ய மொழியில் கூறத்தொடங்கிய நிமிடத் தில், மீண்டும் ஈத்தல் காட்டுக்குள் பெரும் காலடிகளின் சப்தம். தொடர்ந்த சில நிமிடங்களில் சிறிதும், பெரிதுமாய் யானைக் கூட்டமொன்று கரும்பாறையைச் சூழ்ந்து நின்றன.
என்னாச்சு கருப்பா...- பயத்தில் உறைந்தான் ஜனா.
இஷ்...- என்றான் கருப்பன்.
அந்நேரத்தில் காற்றெங்கும் ததும்பி நிற்கும் இந்த பச்சிலைகளின் வாசம், யானையினுடையதா? அல்லது காட்டினுடையதா? குழம்பித் தவித்தான் ஜனா.
இருவரும் ஒலியெழுப்பாமல் மௌனித்திருக்க, பத்து பதினைந்து நிமிடங்கள் வெகுவேகமாக செத்து விழுந்தன. அதற்கடுத்த வினாடியில் வந்த வேலை முடிந்தது போல், யானை கூட்டம் அவ்விடம் விட்டு மெதுவாக நகரத்தொடங்கியது. ஏதோ ஒரு கட்டளைக்கு கட்டுப்பட்டது போல், ஏகப்பொதிகையின் பாண்டியர் கோட்டை இருக்கும் "கொட்டுதளத்தை" நோக்கி யானைகள் நகர ஆரம்பித்தன.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் கொடும் காற்றின் மௌனம்.
யானை நின்ற கரும்பாறைக்கு அருகில் சென்று கவனித்தான் கருப்பன். பாறைக்கு நடுவே ஈரநைப்பிற்கான அடையாளங்கள். சட்டென்று "அதை" குனிந்து ஆராய்ந்தான் கருப்பன்.
என்னாச்சு கருப்பா...
ஒண்ணுமில்ல ஏமானே... நாம போவோம்.
என்னாச்சு...
ஒண்ணுமில்ல... நாம போவோம்...- கட்டளையிடுவதுபோல் பேசினான் கருப்பன்.
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
இவ்வளவு பயங்கரமான காட்டுக்குள்ள ஆயுதமில்லாம வந்தது பெரிய தப்பு கருப்பா... - நடையுனுடே பேச ஆரம்பித்தான் ஜனா.
கையிலிருந்த வெட்டுக்குத்தியைக் காட்டி, இதைவிட வேறென்ன வேண்டும் ஏமானே?- பெருமிதம் காட்டினான் கருப்பன்.
ஆமா... பாய்ஞ்சு வர்ற யானையையும் புலியையும் வெட்டுக் குத்திய வச்சு... லாவகமா வகுந்திரலாம் - சிரிப்போடு பரிகாசம் காட்டினான் ஜனா.
ஏமானே, இந்த ஆயுதத்தை சாதாரணமா நினைக்காதீங்க... இதை தாங்குற கை மட்டும்தான் என்னோடது... இது தேர்ந்தெடுத்து வாங்குற உயிரை "தெய்வம்தான்" தீர்மானிக்கிது. யானையோ, புலியோ எதுவா இருந்தாலும் "பலி" வாங்கணும் நினைச்சிட்டா, அவ்வளவுதான். இந்த காட்டுக்குள்ள இது மட்டும் தான் நமக்கு பாதுகாப்பு - பேசிக்கொண்டே இடுப்பிலிருந்த வெட்டுக்குத்தியின் கைப்பிடியை மீண்டும் ஒருமுறை தடவிக் கொண்டான் கருப்பன்.
இன்னும் எவ்வளவு தூரம் போகணும்டே...- பேச்சை மாற்றிய ஜனாவிற்கு "அயற்சியாய்" இருந்தது.
இன்னா வந்திட்டு... என்று கூறத் தொடங்கிய கருப்பன்... சட்டென்று சிரித்து, பதிலை அப்படியே நிறுத்திக்கொண்டான்.
அதைப் பார்த்ததும் ஜனாவிற்கு கோபமாய் வந்தது.
விளக்கொளி நகர்வில் மீண்டும் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
ஜனாவிற்கு எல்லாம் குழப்பமாகவே இருந்தது. என்ன நடக்கிறது... என எதையும் அனுமானிக்க முடியவில்லை. எதிர்வரும் நாலைந்து நாட்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்ற குழப்பம் வேறு நெஞ்சைப் பிசைந்து கொண்டிருந்தது. கருப்பனோ, எந்த சொரணையுமின்றி வெகுவேகமாக முன் னேறிக் கொண்டிருந்தான். "நேரம்" மட்டும் இம்மாதிரியான எந்த நெருடலுமின்றி, சீராக செத்து வீழ்ந்து கொண்டிருந்தது.
இஞ்சிக்குழியைத் தாண்டி,
அகஸ்திய மலையைத் தாண்டி
பூங்குளத்தைத் தாண்டி,
பொதிமேட்டை அடைந்த போது விடியற்காலை இரண்டு மணியாகியிருந்தது. அவ்விடம் முழுதும் ஈர வாசம் நிரம்பிய "பூங்குளிர்" சிறு பூக்களைப் போல் உதிர்ந்து கொண்டிருந்தது..
களைப்புடன் நடந்து, நடந்து முன்னேற தூரத்தில் சில தீப்பந்த விளக்கொளிர்வுகளும், சில கூரை வீடுகளும் தென்பட்டன.
நீல இருளில் சில மனிதர்கள் கருப்பனை சிரிப்போடு வரவேற்றனர். இவன் வருகைக்காக அவர்கள் காத்திருந்தது மாதிரி தெரிந்தது. பார்த்த மாத்திரத்தில் கரடுமுரடான ஊர்ப்புறத் தொழிலாளிகளைப் போலி ருந்தனர். சிலபேர்களின் கைகளில் டார்ச்சை பார்க்க முடிந்தது. இருளில் யாருடைய முகத்தையும் தெளிவாக பார்க்க முடியவில்லை. அவர்கள் வேறேதோ பாஷையில் பேசுவது போலிருந்தது. இடையே இடையே பல தமிழ் சொற்கள் அவன் காதுக்குள் விழுந்தன. அவர்களின் சம்பாஷணை புரிவது போலவும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.
சிறிதுநேரத்திற்குள் வெகு தூரத் தில் ஜனாவுக்கென ஒரு குடில் ஒதுக்கப்பட்டது. மரஇலைகளாலும், ஒருவகை புல்லினா லும் கட்டப்பட்ட "பத்தி" என்ற குடில். உள்ளுக்குள் ஒரு கயிறுகட்டில். ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டான் ஜனா. உடல் முழுவதும் களைப்பிருந்தாலும் ஜனாவிற்கு தூக்கம் வாய்க்கவில்லை. செல்போனை உசுப்பி, துழாவ ஆரம்பித்தான். தடவ, தடவ படங்களும், காணொளிகளும் நகர ஆரம்பித்தன. வெட்கத்தில் கெஞ்சும் "அந்த பெண்ணின் முகம்" வந்ததும் அப்படியே நிறுத்தினான். கருப்பன் வரவில்லை என்பதை உறுதிசெய்து, காணொளியின் ஒலியளவைக் குறைத்து காட்சிகளை ஓடவிட்டான். ஆடைகளை அவிழ்த்து, மாரை மறைத்துக்கொண்டு கெஞ்சும் பெண்ணின் குரல் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. சிறிதுநேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். பட்டென்று அலைபேசியை அணைத்து படுக்கையில் புரண்டான். என்னென்னவோ நினைவுகள். மீண்டும் "அவள் முகம்" வந்து போனது. நடந்த "துர்சம்பவம்" அவன் நினைவைத் தீண்டிக் கடந்தது. வெளியே கருப்பனின், காணிக்காரர்களின் "சம்பாஷணைகள்" கேட்டுக் கொண்டிருந்தன. கூடவே "பௌர்ணமி நிலவு" பாலொளியை ஒரு மேகக்கூட்டம்போல் நிலத்தில் விதைத்திருந்தது.
அரைமணிநேரம் கழித்து, குழைந்த மரச்சீனியும், சூடான கட்டஞ்சாயாவும், நாவல்பழ கள்ளையும், கூடக்கடிக்க புளிச்சங்காய் துண்டுகளையும் மண் பாத்திரங்களில் ஏந்தியவாறு, கருப்பன் அவன் முன்னமர்ந்தான்.
சாப்பிட்டு நல்லா தூங்குங்க ஏமானே... - என்று கூறி கொண்டே மடியில் பொதிந்திருந்த, "வெள்ளை வஸ்து"-வை கட்டஞ்சாயாவில் சேர்த்தான். இருண்ட கிணற்றில், நிலவொளி கலந்ததுபோல், "கருத்த சாயா" சில நொடிகளில் காபி நிறத்திற்கு வெளிறியது.
என்னது டே இது... - வியப்புடன் கேள்விகேட்டான் ஜனா.
இது யானைப்பாலு...
யானைப்பாலா? - ஜனாவிற்குள் ஆச்சர்யம் அகலவில்லை.
ஆமா... பொம்பளை யானை, தேவைக்கு அதிகமான பாலை பாறை இடுக்குகளில் தேய்த்து தேய்த்து பீச்சி வச்சிடும்... நல்ல காஞ்ச "பாலு திரடு" இந்த மாதிரிதான் இருக்கும். அதை காப்பில கலந்து குடிச்சா... தேனாமிர்தமா இருக்கும்...
அப்ப... நேத்து ராத்திரி... அதுதான் நடந்ததா? - ஆச்சரியமாய் கேள்வி கேட்டான் ஜனா.
ஆமா... இதைக் குடிச்சிட்டு கொஞ்சம் கண்ணயிருங்க...
ஏதோ யோசனையோடு காப்பியை உறிஞ்சினான் ஜனா. கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. கூடவே சிறு மயக்கமும் பின் மண்டையைத் தாக்கியது.
தூங்க முடியலை கருப்பா... செத்து போன அந்த பொண்ணு நினைப்பாவே இருக்கு...
பயப்படாதீங்க... எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான்... மத்த விஷயங்களை பெரியய்யா பார்த்துக்குவாரு...
சிறிதுநேரமாய் எங்கோ மேல்கூரையைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனா, மெதுவாக அந்தக் கேள்வியை கேட்டான்.
உயிர் பிரிஞ்சு போறப்ப, உடம்போட "கண்களை, நீ பார்த்திருக்கியா கருப்பா ?
கருப்பன் தடுமாறினான்.
அத மறந்திடுங்க... நீங்க வேணும்னு செய்யலையே...
ஒரு மாதிரி இருக்கு கருப்பா...- கண்ணசைத்துச் சாய்ந்தான் ஜனா.
கொழுப்பு கூடுன பாலுல்லா... கொஞ்சம் மயக்கமாதான் இருக்கும்...- என்று கூறிக்கொண்டே ஒன்றுக்கு போவதாகக் கூறி மீண்டும் வெளியேறினான் கருப்பன்.
அவன் திரும்பி வருவது வரை மேல்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜனா.
கருப்பன் வந்து பேசி உசுப்ப, சில நிமிடங்களுக்கு பிறகு, மரச்சீனியோடு நாவல்பழக் கள்ளை பருக ஆரம்பித்தனர். உவர்ப்பு மிகுந்த "கள்" உடம்பிற்குள் சென்று உறைய ஆரம்பித்தது.
நேரம் செல்ல, செல்ல ஏதோ ஒரு அக மாற்றத்தை ஜனாவினால் உணர முடிந்தது. உடல் உருகுவது போல். எங்கோ நழுவிச் செல்வது போல். தூக்கம் தழுவது போல். எண்ணமெங்கும் சில வண்ணங்கள் நிரம்பியது போல். தூரத்தில் ஒரு ஒளிக்கீற்று வருவது போல்.
சட்டென்று ஒருமுறை தலையைச் சுழற்றி உதறினான் ஜனா.
எதிரே அம்மாதிரியான மயங்கிய கண்களோடு கருப்பன் இருப்பது தெரிந்தது.
பேச்சற்ற மௌனமாய் சில நிமிடங்கள் கரைந்தன. தூரத்தில் சில "விலங்கொலிகள்" மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தன.
போதையேறிய ஜனாவின் உடம்பு, லௌகீக சிந்தனையில் இளகத் தொடங்கியது.
அந்த வெளிச்சம் எப்படி வந்தது... சொல்லு டே...- அவ்விடம் நிரம்பிய மௌனத்தை, கேள்விகளால் கலைத்தான் ஜனா.
கண்கள் மேலேற, கருப்பன் பெரும் போதையில் சிரித்தான்.
யாரு டே அந்த புலச்சி... - மீண்டும் ஜனா கேட்டான்.
இந்த மலையோட காவலாளிங்க...- கருப்பனுக்கு லேசாக நாக்கு குழறியது.
பொம்பளையா...???
ஆமா... பொம்பளைதான்... பொம்பளைன்னா, நாம பார்த்து புழங்கிய வீட்டு பொம்பளைங்க இல்ல... அசல் காட்டு பொம்பளைங்க...
பொம்பளைல ஏதுடே காடு, நாடுன்னு...
காட்டுயானை... நாட்டு யானைன்னு இல்லையா... அதுமாதிரிதான்...
எனக்கு தெரிஞ்ச பொம்பளைங்க ரெண்டே வகைதான்... வீரியம் கூடுன குதிரை மாதிரி... அல்லது சீறி படரும் பாம்பை போல...- எங்கோ படித்த விஷயங்களோடு "ஆணீயம்" பேசினான் ஜனா.
அதெல்லாம் ஊருக்குள்ள நாம பாக்குற நாடன் பொம்பளைக... இதுக வேற வகை...
வேற வகையா.... நீ அடிக்கடி இங்க வருவியோ...
கருப்பன் சிரித்தான்.
நான் அடிக்கடி வந்தாலும் அண்ட முடியாத பொம்பளைங்க இவங்க... நீங்க சொன்ன குதிரையும் இல்ல... பாம்பு இல்ல... விஷம் கூடிய தேனீ வகைப் பெண்கள்... அதுவும் தாய்வழிச் சமூகத்தில் ஊறிய ராணித் தேனீ வகை...
ராணித் தேனீயா... அப்ப "கொடுக்கு" இருக்குமா? - கிண்டலடித்தான் ஜனா.
இருக்கும்... கொட்ட கொட்ட சுகம் கொடுக்கும் "கொடுக்குகள்"...- கருப்பனின் வார்த்தைகள் உதறிச் சிதறின.
ஜனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் கருப்பன் கூறும் எல்லாவற்றிலும் அமானுஷ்யத்தின் சுவடு இருந்தது.
அவங்க ஏன் இங்க இருக்காங்க?
அவங்கெல்லாம் தாய்வழி சமூகமா இந்த காட்டுக்குள்ள வாழ்ந்திட்டு இருக்குற மலையாளிங்க ...
மலையாளிங்களா?
ஆமா...
தாய்வழி சமூகம்ன்னா?
மனுஷன் தோன்றுனபோது இருந்த மாதிரி...
புரியலையே???
இப்பவும் இருக்கே... தேனீக்கள் மாதிரி... யானைகள் மாதிரி... பாம்புகள் மாதிரி... பெண்ணினம்தான் மொத்த கூட்டத்தையும் வழி நடத்தும்.
அப்ப... ஆம்பளைங்க...?
"சோலி' பாக்கத தவிர, ஆம்பிளைகளுக்கு பெரிதான வேலை இல்ல... நல்ல சாப்பிடணும்... அப்புறம் பொம்பளைங்க கூப்புடரப்போ போகணும். -போதை திமிரப் பேசினான் கருப்பன்.
அவ்வளவு போதையிலும் காமக் குதூகலத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான் ஜனா.
ஆனா... பொம்பளைங்க விருப்பம்தான் பிரதானம். அவங்க இஷ்டம் இல்லாம கிட்ட நெருங்கவே முடியாது.
அப்படின்னா...?
தான் கூட "கூடணும்" நினைக்குற ஆம்பிளைகள பொம்பளைங்கதான் தேர்ந்தெடுப்பாங்க.
தேர்ந்தெடுத்து?
தேர்ந்தெடுத்தவன... தேவைக்கேற்ப ஆசை தீர அனுபவிப்பாங்க... இணையா இருக்குற காலம் முழுதும் "அந்த ஆம்பளைக்கு" தேவையானதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வாங்க. காலப்போக்குல ஆசை தீரும்போது, வேற ஒரு துணையை தேடுவாங்களாம். சுருக்கமா சொன்னா, இப்ப நாம ஊருக்குள்ள பொம்பளைகளுக்கு பண்ணுறத, காட்டுக்குள்ள இவங்க ஆம்பிளைகளுக்கு பண்ணுறாங்க...
எச்சில் இறக்க மறந்து கேட்டுக்கொண்டிருந்தான் ஜனா. ஊருக்குள் அவனறிந்த "குடும்ப பெண்கள்" அனைவரும் நினைவுக்கு வந்தார்கள். ஆதிக்கத்திலிருக்கும் ஆண்வழி சமூக கட்டமைப்பை அவனால் உணர முடிந்தது. கருப்பன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
இதுல கொடுமை என்னன்னா... படுக்கையில் திருப்தி தராத ஆம்பிளைகள, சில "புலச்சிங்க" ஆவேசமா கொல்லவும் செய்வாங்களாம்...
இருவரின் போதையும் உச்சத்தை அடைந்திருந்தது. மூன்று கலையங்கள் "கள்" தீர்ந்து, இரண்டு கலயங்கள் மீதமிருந்தது. கருப்பன் கதை சொன்ன தோரணையோ என்னவோ, ஜனாவின் மனதிற்குள் பல காட்சி படிமங்கள் தோன்றி மறைந்தன. கொஞ்சநேரம் புலச்சிகளின் நினைவாகவே இருந்தது. புரண்டு, புரண்டு படுத்து, பின்பு உடல் அயற்சியில் அப்படியே கண்ணயர்ந்தான் ஜனா.
நள்ளிரவில், நல்லெண்ணெய் விளக்கொளியில், மேனியெங்கும் எண்ணெய் வழிய, பளபளக்கும் கருங்கல்லைப் போல் கருப்பன் மல்லாந்து படுத்திருந்தான். விரிந்த கூந்தல் முதுகை மறைக்க, உரித்த நுங்கு நிறத்திலிருந்த, மேலாடை அணியாத பெண்ணொருத்தி கால் விரித்து, அவன் இடுப்பின் மேல் அமர்ந்திருந்தாள். தூக்கணாங்குருவியின் சிறிய கூடு போலிருந்த "மார்புகள்" குலுங்க, "அவனை" தனக்குள்ளாக்கி இயங்கிக் கொண்டிருந்தாள். பாலாபிஷேக ஆலிங்கமென, வழிந்தோடிய "முலைப்பால்", கருப்பனின் நெஞ்சுக்கூட்டினை நனைத்திருந்தது. அந்த ஒத்திசைவான இயக்கத்தில் தன்னிலை மறந்து, கண்கள் மேலேறி... முனங்கிக் கொண்டிருந்தான் கருப்பன்.
கண்ட கனவில் பதறி விழித்தான் ஜனா. பொழுது நண்பகலை கடந்திருந்தது. வெகு நேரமாக அயர்ந்து உறங்கியது அப்போதுதான் தெரிந்தது. கருப்பன் படுத்த இடம் காலியாக இருந்தது. கண்ட கனவு மீண்டும் நினைவுக்கு வந்தது. ஏதோ யோசனையோடு பையிலிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து பரிசோதித்தான். இவ்விடத்தில் "தகவல் தொடர்பு" சாத்தியம் இல்லையென்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகியது. மெதுவாக நடந்து காணிக்காரர்களின் குடிலுக்கருகில் நடந்தான். எல்லா குடிலும் காலியாக இருந்தது. ஒரு குடிலில் மட்டும் ஒரு குழந்தையின் அழுகை. தென்பட்ட பெண்ணிடம் கருப்பனை விசாரித்தான். இவன் கூறுவதை சற்று சிரமத்துடன் புரிந்து கொண்ட பெண், கிழக்கு திசையை நோக்கி கைகாட்டி, கருப்பன் நாகப்பொதிகையிலுள்ள கோவிலுக்குச் சென்றதாகக் கூறினாள்.
ஏதோ ஒரு வேட்கை, புலைச்சிகளிள் கதையில் பிறந்த ஆர்வம், கண்ட கனவின் களிப்பு, அது கொடுத்த ஊக்கம், அந்தப் பெண் கைகாட்டிய திசையில் விறுவிறுவென நடக்கத் தொடங்கினான் ஜனா. அதே நேரத்தில் ஏதோ ஒரு சமிக்கை போல, நாகப்பொதிகை மலையில் மட்டும் காணப்படும் சலிமலியின வவ்வாலொன்று அவன் தலைக்கு நேராய் செங்குத்தாய் பறக்கத் தொடங்கியது.
அரைமணிநேரம் நடந்திருப்பான். குழப்பமில்லாத மலைப்பாதை ஒரு பாயைப் போல் நேரடியாய் நீண்டுகொண்டிருந்தது. சுற்றிலும் கருகருவென ஈத்தல் மரங்கள். இடையிடையே உயரம் கூடிய புங்கை மரங்கள், குங்கிலியம் சுரந்து நிற்கும் கருமருது மரங்கள். பத்தாண்டுகளுக்குப்பின் குலைவிடும் கல்வாழை மரங்கள். பால் கசியும் பலா மரங்கள். மரம்விட்டு மரம் தாவும் மந்திக் குரங்குகள். ஐம்பத்திரெண்டு நிமிட நடையில், ஒரு வளைவின் உயரத்தில் தெரிந்த குகைக்கோவிலில், கருப்பன் மண்டியிட்டு முதுகு தெரிய அமர்ந்திருப்பது தெரிந்தது. கருப்பன் தானா? அவனே தான். ஜனா உறுதிப்படுத்தினான். கூடவே மார்புக்கச்சையணிந்த நான்கைந்து பருவப் பெண்கள் "தங்க நிறத்தில்" அவனைச் சுற்றியிருப்பதும் தெரிந்தது. ஆச்சர்யம் மேலோங்க, பட்டென்று ஒரு மரத்தின் பின்புறம் ஒளிந்து கொண்டான் ஜனா.
இவர்கள்தான் புலைச்சிகளா?
அங்கிருந்து அவர்களைப் பார்க்கையில் அமானுஷ்யமாய் "ஒரு பூஜை" நடப்பது போலிருந்தது. தலைமட்டும் தெரிந்த ஏதோ ஒரு "தெய்வம்" காட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏதோ ஒரு மரத்தின் "பிசின்" நெருப்பைச் சுவைத்து "புகையை" உமிழ்ந்துக் கொண்டிருந்தது. கருப்பனின் உடம்பு முழுவதும் பெண்கள் சந்தனம் பூசிக் கொண்டிருந்தார்கள். மார்பில் பெண்களின் கைகள் படுக்கையில், கருப்பன் உடல் உதறி, வெட்கப்படுவதுபோலிருந்தது. பலகாலமாய் தனது வீட்டில் வேலை செய்தாலும் சட்டை கழற்றிய நிலையில் கருப்பனை பார்த்ததாக ஜனாவிற்கு நினைவேதுமில்லை. சந்தனம் பூசி, குங்குமமிட்டு, வளையலிட்டு, அவர்கள் அணிந்த நிறத்திலுள்ள ஒரு மார்புக் கச்சையை கருப்பனுக்கும் அணிவித்தார்கள். முற்றித் திரண்ட கருத்த பெண்ணொருத்தியைப் போலிருந்தான் கருப்பன். ஒரு குறிப்பிட்ட பொழுதில் பெண்ணொருத்தி ஓற்றை கொட்டு போன்ற இசைக்கருவியை இசைக்க, காடெங்கும் அதன் அதிர்வு. அதனால் அதிர்ந்த பறவைக் கூட்டமொன்று திசை மாற்றிப் பறந்து மறைந்தன. வந்த நிமிடங்களில், அதிர்வு உச்சம் தொடுகையில், கருப்பன் "சன்னதம்" தெறிக்க, பெண்களின் நளினத்தோடு ஆடத் தொடங்கினான்.
மனமெங்கும் குழப்பத்தோடு, கூர்மையான பார்வையுடன் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தான் ஜனா. ஒரு திருநங்கையின் சாயலில் கருப்பன் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தான். கருப்பன் உண்மையிலேயே ஆண்மகன் தானா? என்ற சந்தேகம் அந்த நிமிடத்தில் ஜனாவிற்குள் தோன்றியது. கருப்பன் மறைத்த "உடல் நளினங்கள்" எல்லாம் ஜனாவின் நினைவில் அலைமோதியது.
ஒரு வேளை திருநங்கையாக இருப்பானோ? கணிக்க முடியாத ஏதோவொன்று முதுகில் ஊர்வது போல், தளர்ந்து குழம்பினான் ஜனா.
கருப்பன் திருநங்கையென்றால், எப்படி இத்தனை காலமும் அவனால் அதை மறைக்க முடிந்தது. பெண்மையை உயர்த்தி அவன் பேசிய வசனங்கள் எல்லாம் நினைவுக்குள் சுழன்றன. ஜனாவிற்கு வியப்பு மேலோங்கியது. சதா சர்வ காலமும் கருப்பனை புகழும் அப்பாருவின் மீது லேசான சந்தேகம் துளிர்த்தது. அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அப்படியே இறங்கி குடிலுக்கு வந்து விட்டான். ஆனால் குழப்பப் பருந்துகள், அவன் பின் மண்டையைக் தொடர்ந்து குடைந்து கொண்டிருந்தன.
முன்னிரவின் தொடக்கத்தில் குளித்த சாயலோடு கருப்பன் குடிலுக்குள் நுழைகையில், ஜனா மீதமிருந்த புளித்த கள்ளைக் குடித்து ஏக போதையோடு அரைத்தூக்கத்திலிருந்தான். இரவு உணவும், கட்டஞ்சாயவும் கருப்பனின் கைவசமிருந்தது.
ஏமானே... சாப்பிடுங்க... மெதுவாக குரல் கொடுத்தான் கருப்பன்.
அறையின் ஓரத்திலிருந்த பையை துழாவி, திரும்பி நின்று, ஈரமான மேல்ச் சட்டையை கழற்றி, வேறொரு சட்டைக்கு மாறினான் கருப்பன். படுக்கையில் கிடந்தவாறே கருப்பனின் முதுகை குறுகுறுவென பார்த்தான் ஜனா.
எங்க போயிட்ட கருப்பா...
பூஜைக்குத்தான் ஏமானே? - உடைகளை சரிசெய்து, உணவோடு ஜனாவின் முன் அமர்ந்தான்.
பூஜ நல்படியா மு...ஞ்சுதா? - ஜனாவிற்கு நாக்கு லேசாக குழறியது.
ஆமா... நீங்க சாப்பிடுங்க?
புலைச்சிகள பார்த்...தியா?
இல்லையே...
இல்ல நீ பார்த்த... அத நான் பார்த்தேன்.
என்ன சொல்றீங்க ஏமானே... எனக்கு புரியல...
லேய்... நீனும் அந்த குட்டிகளும் ஆட்டம் போட்டத... நான் பார்த்தேன்...- ஜனாவின் குரல் தடித்தது.
யாரைச் சொல்றீங்க...அப்படியெதுவும் இல்லை - கருப்பன் குழம்பியது போல் பேசினான்.
நான் பார்த்தேன்...
யாரை?
புலைச்சிகள...
கண்டிப்பா அப்படி எதுவும் இல்ல...- கருப்பன் திட்டவட்டமாக மறுத்தான்.
கருப்பா... அவங்கள நான் திரும்ப பார்க்கணும்...- விழும் தோரணையில் எழும்பி, பக்கத்திலிருந்த தூணை பற்றி நின்று கொண்டான் ஜனா.
பதறிய கருப்பன், ஏமானே நீங்க சொல்றது எனக்கு புரியல... அப்படி ஏதும் நடக்கல...
இல்ல... நான் பார்த்தேன்...
அப்படியே உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருந்தாலும், நாம விருப்பப்படுற நேரத்துல அவங்கள பார்க்க முடியாது. நம்மள பார்க்க அவங்க விருப்படணும்...
நான் பார்த்தேன்... அந்த குட்டிகளோடு நீ ஆடுன... சட்டையில்லாம ஆடுன... - என்று மீண்டும் ஆக்ரோஷம் பொங்க பேசினான் ஜனா.
பொதிகையில இப்படி பல அதிசயங்கள் நடக்கும்... பொறுமையா இருங்க...
இல்ல... நான் பார்த்தேன்... நீ சட்டையில்லாம ஆடுன - மீண்டும் மீண்டும் உளறிக் கொண்டிருந்தான் ஜனா. அவன் மூளையெங்கும் புலைச்சிகளும், கருப்பனும் ஆடிய சன்னதத்தின் காட்சிகள்.
பயப்படாதீங்க... உட்காருங்க... என அவனைப் பற்றி படுக்கையில் உட்காரவைக்க முயன்றான் கருப்பன்.
கருப்பனின் ஸ்பரிஸம் பட்டதும், ஏதோ ஒரு வேகத்தோடு கருப்பனின் பிடித்து இழுக்க, கையில் அகப்பட்ட அவன் வேஷ்டி ஜனாவின் கையோடு வந்தது.
வெறும் மேல் சட்டையோடு கருப்பன் திமிறினான்.
நான் பார்த்தேன்... அந்த குட்டிகளோடு நீ ஆடுன - ஜனாவின் வாயிலிருந்து மீண்டும், மீண்டும் அதே பிதற்றல்.
இதை சற்றும் எதிர்பாராத கருப்பன், ஏமானே... ஏமானே... பொறுங்க... என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
நீ பொம்பளைதானே... வா... வா... வென்று ஆக்ரோஷம் காட்டினான் ஜனா. சட்டையைப் ஆவேசமாகப் பற்றிய கை விடவே இல்லை.
நிலைமையின் விபரீதம் உணர்ந்து மன்றாடினான் கருப்பன்.
கருப்பன் கெஞ்ச, கெஞ்ச அலைபேசியில் கண்டு கழித்த "அந்தப்பெண்ணின்" முகச்சாடையிலிருப்பதுபோல் ஜனாவிற்கு தோன்றியது. அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியும், தலைக்கேறிய போதையும் ஜனாவை மூர்க்கம் கொள்ளச் செய்தன.
தொடர்ந்த இருவரின் அங்கலாய்ப்பில் சட்டை கிழிந்து கருப்பனின் அவயங்கள் வெளித்தெரிய ஆரம்பித்தன.
எந்த நேரத்தில் அது நடந்ததென்று கருப்பனுக்கே தெரியவில்லை.
சுவரோரத்தில் ஒதுக்கி வைத்திருந்த வெட்டுகுத்தியின் கைப்பிடி கருப்பனின் வலக்கையிலிருந்தது. அதன் மறுமுனை ஜனாவின் கழுத்திற்குள் பாதிக்குமேல் புதைந்திருந்தது. உள்ளுக்குள் இருந்த ஜனாவின் "காமம்" இரத்தத் துளிகளாய் சிதற ஆரம்பித்தது.
வெகுநேரமாய் ஜனாவின் தலைக்கு மேல் பறந்த "சலிமலியின வௌவால்" அக்கணத்திலிருந்து வேறுதிசையில் பயணிக்கத் தொடங்கியது.
- தெரிசை சிவா
ஞாயிறு, 28 மார்ச், 2021
தாச்சி
ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வந்தது. ஊதிப் பெருத்த பலூன் ஒன்றை அடிவயிற்றில் வைத்து தைத்தது போலொரு கனம். வளைவுகளிலும் வேகத்தடுப்பான்களிலும் வண்டி வேகமெடுக்கும் போதெல்லாம் "மூத்திரப்பை" நசுங்கி உடைந்து விடுவது போல ஒரு பதட்டம். அதிகப்படியாய் இருப்பது பேர்கள் ஏற்றக்கூடிய இந்த சிறிய பேருந்தில் நாற்பது பேர்கள் ஏற்றினால் இப்படித்தான் இருக்கும். சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். திருச்செந்தூர் முருகனைப் பார்க்கப் போக வேண்டியதுதான். அதற்காக இப்படி கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு போக யார் சொன்னார்களோ?. கடுகு போட இடமில்லாதபடி வண்டிக்குள் பெரும் கூட்டம்.
திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள். நெருங்கி முண்டியடிக்கும் உடல்கள். எல்லாம் நெருங்கிய சொந்தக்காரர்கள் மற்றும் பக்கத்து வீட்டு உறவுகள் தான். இருக்கையிலிருந்த ஒவ்வொரு பெண்களின் மடியிலும் சிறிதும் பெரிதுமாய் குழந்தைகள் உட்கார்ந்திருந்தனர். என் மடியிலும் ஒரு வாண்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தது. சரியாகச் சொன்னால் கிடந்து உருண்டுக் கொண்டிருந்தது. கண்டிப்பாக அனுமன் ஜெயந்தியில் பிறந்த குழந்தையாக இருக்கக்கூடும். செய்யும் நடவடிக்கைகள் அப்பட்டமாக அதை பறைசாற்றியது. வண்டிக்குள் இருந்த ஒவ்வொருவரின் கைக்குள்ளும், காலுக்குள்ளும் மற்றொருவரின் கைகால்கள் பிணைந்திருந்தன. கூட்டத்தில் யாரென்று சரியாகப் பிடிபடவில்லை. ஏதோ ஒரு புண்ணியாத்மாவின் கடினமான பாதரட்சையின் அடிப்பாகம் என் பெருவிரலை அடிக்கடி பதம்பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்திற்கு நடுவே கிடந்து உருளும் தர்பூசணிப் பழங்களென மொத்த உடல்களும் நசுங்கி நெளிந்தன. கூட்ட மேளத்தால் ஆசுவாச பெருமூச்சென்பது என் நுரையீரலின் சுவாசத்திற்கு அடிக்கடி தேவையாயிருந்தது.
தாச்சி... கதவை பூட்டுனேன்... கேஸை ஆப் பண்ணினானு சந்தேகமா இருக்கு? - என்று கூட நெரிசலில் தலையுயர்த்திக் கூறினாள் செண்பகத்தம்மா. முற்றித் திரண்ட ஹைபிரிட் எலுமிச்சை பழ நிறத்திலிருந்த செண்பகத்தம்மாவிற்கு "கணீர்" என்ற வெண்கலக் குரல். கனிவும், கருணையும் ஒரு சேர பூத்து குலுங்கும் முகம். கழுவித்துடைத்த பளிங்கு கல்லைப்போல் வெள்ளை மனம். பொடு பொடுவென்ற அவரின் அறுவை பேச்சை மட்டும் பொறுத்துக்கொள்ள பழகிவிட்டால், வெகு ஜோராக அவளுடன் வாழ்ந்து மடியலாம்.
நான் அடுப்பை அணைச்சிட்டுதான் வந்தேன்... அதையும் இதையும் சொல்லி என்னையும் பயம்புறுத்தாதீங்கோ... - ஒண்ணுக்கு மேலும் முட்ட லேசான எரிச்சலோடு பதில் கூறினேன். செண்பகத்தம்மா சமாதானமாகியது போலிருந்தது.
யாரோ சொல்லிக் கொடுத்தது போல் மடியிலிருந்த வாண்டு அடிவயிற்றை கால்முட்டியால் அழுத்திக்கொண்டேயிருந்தது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாமென்ற "உச்ச உணர்ச்சி நிலை". இந்த வைபவத்திற்கு வராமல் இருந்திருக்கலாமென்று மீண்டும் தோன்றியது. வராமல் இருந்திருந்தால், "தாச்சி... கோவத்துல இருக்கா... அதான் வரலன்னு"- செண்பகத்தம்மா எல்லோரிடம் குறை கூறியிருப்பாள். அதற்காக வரவேண்டியதாயிற்று. என்ன செய்வது. தாயா... பிள்ளையா... பழகியாயிற்றே.
ஊரிலுள்ள அனைவரும் என்னைச் சுட்டிக்காட்டி "இவளின்றி செண்பகத்தம்மா வீட்டில் ஓரணுவும் அசையாது" - என பரிகாசமாய் விமர்சிக்கும் போது எனக்குள் ஒரு ஆனந்தமும், மன நிறைவும் அக்கணமே தட்டுப்படும். வெறும் வீட்டு வேலைக்காக, "வேலைக்காரியாய்" வந்தவளுக்கு இதைவிட வேறு என்ன மரியாதை கிடைத்து விடக் கூடும். செல்வம் இல்லாத, அதனால் கல்வி செழிக்காத வீட்டில் பிறந்ததை தவிர வேறெந்த குற்றமும் நான் செய்ததில்லை. கட்டிய கணவன், பெற்ற குழந்தையோடு இந்த செண்பகம்மா வீட்டுக்கு வேலைக்கு வந்து பதிமூன்று பதினான்கு வருடங்கள் இருக்கும்.
காலச்சக்கரம் தான் எத்தனை வேகமாக சுற்றுகிறது. மண்ணைக் கிளறி விவசாயம் பார்க்கும் "நிலையில்லா வேலையில்" கணவன் தவிக்க, மொத்த குடும்பத்தையும் "நெம்புகோலாய்" தூக்கி நிறுத்தியது இந்த வீட்டு வேலைதான். பின்வந்த ஆண்டுகளில் மகனும் டிப்ளமோ படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலைக்கு நகர, வீட்டுக்குள் ஆச்சியும் ஐயரும் மட்டும்தான். ஒரே வீட்டில் வேலைக்காரியாக பணியைத் தொடங்கி, அப்படியே எத்தனை காலங்கள் கடந்து இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது, எனக்கே மலைப்பாக இருக்கிறது. மகன் வேலைக்குச் சென்ற பின்பு, இந்த வீட்டு வேலை வேண்டாமென ஒதுக்கி விட முடியவில்லை. அதற்கு இந்த வீட்டில் உள்ள நபர்கள் என் மீது கொண்ட அன்பும் அக்கறையும் பரிவும் பாசமும் மட்டுமே காரணமாக இருந்திருக்கிறது.
ஏதோ ஒரு காரணத்தால் ஒருநாள் வேலைக்கு செல்லா விட்டாலும் "தாச்சி... இன்னைக்கு வரலையா... உடம்புக்கு சொகம் இல்லையோ?" - என்று எண்ணியபடி மொத்த குடும்பமும் என் வீட்டிற்கு வந்து விடும். இந்த வீடும் அவர்கள் கட்டிக் கொடுத்ததுதான். தலைவலி, காய்ச்சல் என்று எதுவாக இருந்தாலும் அடுத்த அரைமணிநேரத்தில் "உலக மகா கசப்பு" கொண்ட ஒரு கசாயத்தோடு செண்பகத்தம்மா ஆஜராகிவிடுவாள்.
"எங்க வீட்ல எல்லோரையும் நீதான் பார்த்துக்கிடுக? உனக்கொண்ணுன்னா நாங்க சும்மா உட்ருவோமா" - என்று கூறி அந்த மருந்துக் குவளையை வாய்க்குள் திணிப்பாள். கூடவே நெஞ்சையும், தலையையும் பிடித்துவிடுவாள். அந்த கசப்பு மருந்துக்கு பயந்தே எந்த உடல் அசௌகரியத்தையும் அவளிடம் தெரிவிப்பதில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் ராகவன் அண்ணாச்சியும் வந்திடுவார். சிறுவயதில் இறந்த அண்ணாச்சியின் தங்கையின் சாயலில் நானிருப்பதால் என்னை தன் சொந்த தங்கையாகவே பாவிப்பார்.
"இதெல்லாம் இப்படி வச்சிட்டு இருக்கப்பிடாது... வடசேரி ஆசுத்திரிக்கி போய் ஒரு ஊசி போட்டாத்தான் தீருமென" - என் உடல்நிலைக்கு அவர் சார்பாய் ஒரு தீர்ப்புக் கூறுவார். எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். கூடவே சிறிது நேரத்தில் பிள்ளைகள் அருணும், பிரேமாவும் "தாச்சிக்கி என்னாச்சு?" என்ற கேள்வியோடு வீட்டுக்குள் வந்து அமருவார்கள். அவர்களின் பேச்சிலும் மனதிலும் உண்மையான பாசத்தின் நிறமே வெளிப்படும். நான் வளர்த்த பிள்ளைகளல்லவா?. வெள்ளந்தியான மனிதர்களின் "கலப்படமில்லாத அன்பு" மிகுந்த சந்தோச பெருமிதத்தையும், கொஞ்சம் மன அயற்சியையும் கொடுக்கும். அன்பாகவே இருந்தாலும், அளவுக்கு மீறிய எதுவும் திகட்டும் தானே. எதற்காக இவர்கள் நம் மீது இத்தனை பாசத்தை கொட்டுகிறார்கள் என பலமுறை யோசித்திருக்கிறேன். இருந்தும் விடை ஏதும் கிட்டியதில்லை.
எல்லோரும் போன பின்பு, "அந்த வீட்டிலுள்ள அனைவரையும் வசியம் பண்ணிதான் வச்சிருக்க" - என்பார் வீட்டுக்காரர். பதினாலு வருசமா இதையாவது சம்பாதித்தேனே...- என்று கூறி ஏக்க பெருமூச்சு விடுவேன் நான்.
ஆரம்ப நாட்களில் ஒரு வேலைக்காரிக்குரிய இடைவெளியோடுதான் அவர்கள் வீட்டில் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். நாட்கள் செல்ல... செல்ல... வீட்டிலுள்ள மொத்த மனிதர்களின் அன்பும், பரிவும் என்னை அவர்களில் ஒருத்தியாய் மாற்றியிருந்தது. தீடிரென்று ஒருநாள் ஒரு வங்கி பரிவர்த்தன அட்டையை கைக்குள் திணித்தாள் செண்பகத்தம்மா. ஆச்சர்யம் மேலோங்க இது எதுக்கு? என்று நான் கேட்டதற்கு, " மாசா மாசம் கைநீட்டி சம்பளம் கொடுக்கும்போதுதான், நீ எங்களுக்கு வேறொருத்தியா தெரியுற? இனிஅது வேண்டாம். நாங்க சம்பளத்தை பேங்க்ல போட்டிருறோம். நீ அங்கிருந்தே எடுத்துக்கோன்னு உள்ளங்கையை பிடித்து செண்பகத்தம்மா கண்கலங்கிய போது, முற்றிலுமாய் அழுகையில் கரைந்து விட்டேன்.
இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள். செய்கிற வேலைக்குத்தான் சம்பளம் தருகிறார்கள் என்ற போதும், கைநீட்டி சம்பளம் வாங்கும் சங்கோஜமும் இப்போது எனக்கில்லை. பின் வந்த காலங்களில் நான் இங்கு வேலை செய்ய வருகிறேன் என்பதே எனக்கு மறந்து விட்டது. இது "என் குடும்பம்" என்பது போன்ற மனநிலை. அவர்களின் பிள்ளைகள் என் பிள்ளைகள்தான் என்பது போல. "விசாலாட்சி" என்ற என் பெயரை எந்த விதத்தில் சுருக்கினார்களோ தெரியவில்லை. கடவுளுக்குத்தான் வெளிச்சம். தாச்சி... தாச்சி... தாச்சி என கூப்பிட ஆரம்பித்து, இன்றைய தேதியில் அந்தப் பெயர் அவ்வீட்டிலுள்ள அனைவரின் வாய்க்குள்ளும் எந்நாளும் ஓயாது உருண்டு புரளும்.
"தாச்சி... அவரோட கண்ணாடியை காணலை..."
"தாச்சி... இன்னைக்கு எனக்கு சேமியா உப்புமா வேணும்..."
"கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்பிடாதோ... தாச்சி. அப்ப இருந்து வேலை பார்த்திட்டே இருக்கியே..."
"கேசரி அல்வா... நன்னா வந்திருக்கு... பையனுக்கும், அவாளுக்கும் எடுத்திட்டு போயிரு... நான் யூடூப் பார்த்து சமைச்சதுன்னு சொல்லு."
"நாளன்னிக்கு நீ வரவேண்டா... வீட்டுல ரெஸ்ட் எடு... நான் சமையல் பண்ணி கொண்டு வரேன் தாச்சி..."
- என "தாச்சி" என்ற விளிப்பெயர் எந்தஒரு வயது வித்தியாசமும் பார்க்காமல் அவ்வீட்டுக்குள் தவறாது உச்சரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
இவர்களின் அதிகப்படியான அன்பில் சில நேரம் நானும் திக்கு முக்காடி விடுகிறேன். பையனின் கல்விக் கட்டணமாக இருக்கட்டும். கணவரின் மருந்துத் தேவைகளாக இருக்கட்டும். திருவிழாநாட்களில் பரிசுப் பொருள்களாக இருக்கட்டும். நான் நினைப்பதற்கு முன்பு அவர்கள் எனக்காகச் செய்து முடித்திருப்பார்கள். சிலநேரம் சங்கோஜத்தில் வேண்டாமென்றால் "வரிந்து கட்டிக்கொண்டு" அனைவரும் அதற்கு காரணம் கேட்பார்கள். சில நேரங்களில் எரிச்சல் தலைக்கேறும். விழுங்கவும் முடியாத, கக்கவும் முடியாத "கையறுநிலை" -யில் காலமும் கோபமும் கடந்து போய்விடும்.
நாளடைவில் அவர்களின் சந்தோஷமும், துக்கமும் என்னையும் பாதித்தது. என்னால் அவர்களிடம் கோபப்படமுடிந்தது. சராசரியான வாக்கு வாதம் பண்ணி சண்டை போட முடிந்தது. கோபித்துக் கொண்டு வீட்டுக்கு போய்விட்டால், சில மணிநேரத்தில் மொத்த குடும்பமும் என் வீட்டிற்கு புடைசூழ வந்து "சரணாகதி" அடையும் அதிசயமும் நிகழும்.
நான் போனா... என்னைய மாறி ஆயிரம் பேரு வருவாங்கன்னு- சற்று கோபத்துடன் பதில் சொன்னால், "வரவங்க எல்லாம் தாச்சி ஆயிட முடியுமான்னு?" - என்னிடமே கேள்விக் கேட்டு கண்ணீர் முட்டிக் கரைவாள் செண்பகத்தம்மா. ஒருமாதிரி தர்ம சங்கடமாகிவிடும். பின் வந்த பொழுதுகளில், பிணக்கம் தீர்ந்து அடுத்தநாள் வழக்கம் போல் "பணி பரிவர்த்தனைகள்" பழுதில்லாமல் தொடங்கும்.
இன்றைய திருச்செந்தூர் பயணத்திற்கு செண்பகத்தம்மா முதலில் கேட்ட போது வேண்டாம் என்றுதான் கூறினேன். பின்பு அவர்கள் மீண்டும் மீண்டும் அழுத்திக் கூப்பிட வர வேண்டியதாயிற்று. வரவே மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தால், ஒருவாரம் முன்பு நடந்த அந்த "சங்கோஜ நிகழ்வை" முன்னிறுத்திதான் நீ வராமல் இருக்கிறாயென்று செண்பகதம்மாள் குற்றம் சாட்டியிருப்பாள். செண்பகத்தம்மாவை விடுங்கள். வீட்டில் உள்ள அனைவரும் அந்த சம்பவத்தினால் தான் நான் வராமல் இருக்கிறேன் என்று உறுதியும் செய்து விடுவார்கள்.
விஷயம் இதுதான்... இரண்டாண்டுகள் கழித்து இளையவள் பிரேமா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். பிரேமாவின் குழந்தை லக்ஷ்மி படுசுட்டி. மூன்று வயதாகிறது. அங்கு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து இங்கு ஊர்ப் புறத்தை பார்த்ததும் வீட்டைவிட்டு இறங்கி ஓடுவதற்கு எப்போதும் தயார் நிலையிலிருப்பாள் குழந்தை. வந்த மூன்று நாளிலேயே தாச்சி... தாச்சி... தாச்சி என என்னிடமும் ஒட்டிக்கொண்டாள்.
பிரதோஷம் முடிந்த ஒரு மாலைநேரத்தில் ஒரு புத்தகத்தை வைத்து படம் பார்த்துக் படித்துக் கொண்டிருந்தாள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய படங்களை அடையாளம் காணுவதற்கான "பாடம்" அது.
புத்தகத்திலிருந்த வயதான ஒருநபரின் படத்தைக் காட்டி நம்ம வீட்டு கிரான்பா யாரு சொல்லு? என்று பிரேமா கேட்க, ஆர்வப்பெருக்கில் ராகவன் அண்ணாச்சியைச் சுட்டிக் காட்டினாள் குழந்தை. செண்பகத்தம்மாவிற்கு வாயெங்கும் பல்லாயிருந்தது. அடுத்த படத்தை காட்டி கிரான்மா யாரு? என்றதும் செண்பகத்தம்மாவை அடையாளம் காட்டியது. வீட்டிலுள்ள அனைவருக்கும் சந்தோசம் தாங்க வில்லை. எனக்கும் தான். அந்த சரஸ்வதியே எனக்கு பேத்தியா வந்திருக்கான்னு பெருமை பீத்தினாள் செண்பகத்தம்மா. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கழிந்து, வீட்டில் House Made யாரென்று கேட்க குழந்தை என்னைச் சுட்டியது. எல்லோரும் சந்தோசத்தில் சிரித்தார்கள். House Made-ன் பொருள் தெரியாத நானும் சிரித்து, குழந்தையைத் தூக்கி மாரோடு அணைத்துக் கொண்டேன்.
சில நிமிடங்களுக்கு பின் அடுக்களைக்குள் புகுந்து வேலையில் பரபரப்பானேன். மனதிற்குள் மிஞ்சிய அந்தக் கேள்வி குடைந்து கொண்டேயிருந்தது. இப்போது கேட்டால் எப்படியும் செண்பகத்தம்மா கிண்டல் செய்வாள். செய்தால் செய்யட்டும். காய்கறி வெட்டிக்கொண்டிருந்த செண்பகத்தம்மாவிடம் பட்டென்று கேட்டு விட்டேன்.
அம்மா... இந்த housemade ன்னா யாரு?
தலையுயர்த்தி பல்லைக்காட்டினாள் செண்பகத்தம்மா.
அது சரி... அதுக்கு அர்த்தம் தெரியாமத்தான் சிரிச்சியா நீ... மூணு வயசு பொண்ணுக்கு கூட தெரிச்சிருக்கு... உனக்கு தெரியல... அசடு... அசடு...என்று வெள்ளந்தியாய் சிரித்தாள்.
லேசாக வெட்கமாய் இருந்தது.
அமெரிக்காவும், அரசம்பட்டியும் ஒண்ணாகுமாமா? நான் புரிஞ்சு வச்சுக்குற அரைகுறை இங்கிலீசும் நீங்க சொல்லி தந்ததுதான்... - பதில் கூறி சமாளித்தேன்.
அதான்... பிரேமாவோட பிரசவத்திற்கு நீ அமெரிக்காவுக்கு போன்னு சொன்னோம்... உன் கையை புடிச்சி... நான் கெஞ்சினனோ... இல்லையோ... நீதான் பிடிவாதமாய் வேண்டாம்ணே...
அதுக்கு அண்ணாச்சிதான் காரணமென்றேன்.
அவர் என்ன செய்தார்? - ஆர்வத்தோடு கேள்விகேட்டாள் செண்பகத்தம்மா.
அமெரிக்கா பூமியோட அடுத்த பக்கத்துல இருக்குன்னு அண்ணாச்சி சொன்னாரு... அத கேட்டதுமே எனக்கு பயம் வந்திட்டு...
"க்ளுக்" என்று சிரித்தாள் செண்பகத்தம்மா.
அசடு... அசடு... பொம்மனாட்டிகள் இப்ப உலகம் புல்லா சுத்துறா... நீ இந்த அடுக்களையே கட்டிண்டு அழு... கிண்டல் தொனியில் பேசினாள் செண்பகத்தம்மா.
பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் தேவைன்னு... நானும் புத்தகத்திலெல்லாம் படிக்கிறேன் மா... அதுக்காக ஆரம்பத்திலியேயே அமெரிக்கா போகச் சொன்னா எப்படி ... மொதல்ல மெட்ராஸ்... அப்புறம் மும்பையோ, டெல்லியோ... அதுக்கப்புறம் வேணா அமெரிக்கா போறேன்.- ஏக்கத்தோடு பதில் கூறினேன்.
வெண்டைக்காயை நறுக்கிக்கொண்டிருந்த செண்பகத்தம்மா மெலிதாகச் சிரித்தாள்.
தாச்சி... நீ மட்டும் போயிட்டு வந்திருந்தேன்னா... இப்ப நான் உன்ட இங்கிலிஷ் படிச்சிண்டு இருப்பேன்... தெரியுமா?
பட்டென்று நானும் சிரித்தேன்.
சரி... சரி... அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
housemade ன்னா "வீட்டு வேலைக்காரி"-ன்னு அர்த்தம்- வெண்டைக்காயை வெட்டிமுடித்து சீஞ்சட்டியில் இட்டுக்கொண்டே பதில் கூறினாள் செண்பகத்தம்மா.
நகக்கண்ணில் "பனச்சிரா" ஏறியதுபோல் எனக்கென்று நறுக்கென்றிருந்தது. சில நொடிகள் ஸ்தம்பித்திருந்தேன். என் முகமாற்றத்தை கண்டவுடன்தான் செண்பகதம்மாவிற்கு தான் கூறியதன் "உள் அர்த்தம்" விளங்கியது. சுதாரித்துக் கொண்டாள்.
தாச்சி... வீட்டை நல்ல படியா பார்த்துக் கிறவள்னு அர்த்தம்டி - என்று கூறி சமாளிக்க முயன்றாள்.
நான் அசையாமல் நின்று கொண்டிருந்தேன்.
தாச்சி... குழந்தைக்கு என்னடி தெரியும்... இதுக்கெல்லாம் முகத்தை தூக்கி வச்சிண்டா... நான் என்ன செய்வேன். காலில் விழாத குறையாக கெஞ்சினாள் செண்பகத்தம்மா.
ஏதோ ஒரு நினைப்பில் விறு விறுவென வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.
சில நிமிடத்தில் மொத்த குடும்பமும் என் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் சமாதானப்படுத்தினர். சிலநேரங்களில் என் தகுதிக்கு மீறி நடப்பதாகத் எனக்கே தோன்றும். என்னதான் இருந்தாலும் அவர்கள்வீட்டு வேலைக்காரிதான் நான். வேலைக்காரியை வேலைக்காரியென்று கூறாமல் வீட்டுக்காரியென்றா கூற முடியும். செய்தது பெரும் தவறென புரியும். இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு "சுய பட்சாதாபம்" ஊற்றெடுத்துக் கொண்டேஇருக்கும்.
ஒருவழியாய் மனது மாறி அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாமென்று நான் கைதூக்குவதற்கு முன்னால், மொத்த குடும்பமும் என் வீட்டிற்கே வந்து, கெஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் குணநலன் அப்படி. நானும் கண்ணீர் பெருக்கோடு சமாதானமாகி விடுவேன். அப்படி என்னை சமாதானம் செய்துதான், இதோ... இப்போது, குழந்தை லக்ஷ்மியின் காதுகுத்துச் சடங்கிற்காக திருச்செந்தூருக்கு கூட்டிப் போய் கொண்டிருக்கிறார்கள்.
மனஸ்தாபம் குறைந்த ஆர்வப்பெருக்கில் கடைசி சீட்டில் வந்தமர்ந்தது என் இரண்டாவது தவறு. வெறும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்தக் காதுகுத்து சம்பிரதாயத்திற்கு நான் வந்தது என்னுடைய முதல் தவறு. இரண்டுக்கும் சேர்த்து இப்போது "ஒண்ணுக்கு முட்டி" அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
வண்டி வேகமெடுத்துப் பறந்து கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழியில் தென்பட்ட "அசுரக் காத்தாடிகள்" சுழன்று சுழன்று டா..டா.. காட்டியது. பயணக்களைப்பில் முட்டி நின்ற மூத்திரத்தின் நினைப்பு மனதை விட்டு அகன்றிருந்தது. கையிலிருந்த வானர வாண்டு முன் சீட்டிற்கு தாவியிருந்தது. பிரேமாவும் தூக்கத்தில் விழ, house made - என்ற சொல்லின் வழி பிரளயம் ஏற்படுத்திய குழந்தை லஷ்மி என் கைக்கு வந்து சேர்ந்தது. ஓடியாடி விளையாடிய குழந்தை அயர்ந்த தூக்கத்திலிருந்தாள். குழந்தையின் பிட்டத்தில் வைத்திருந்த பேம்பெர்ஸ் சிறுநீரை உறிஞ்சி பால் ப்ரட்டைபோல் பொதும்பியிருந்தது.
தாச்சி... உனக்கு கை வலிக்கிறதோ... இல்லையோ... குழந்தையை கொண்டா நான் வச்சுகிறேன்- என்று வெண்கலக் குரலில் சப்தமிட்டாள் செண்பகத்தம்மா.
வேண்டாம் மா... நான் வச்சுகிறேன். - என்றேன்.
முப்பந்தல் கோவிலில் வண்டி பிரேக் பிடிக்கையில், மேலிருந்த பெரிய குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலொன்று சரிந்து எங்கள் மேல் கவிழ்ந்தது. பலபேர்கள் வேடிக்கைப் பார்க்க கடைசி சீட்டிலிருந்த நாங்கள் கொஞ்சம் தெப்பலாக நனைந்திருந்தோம். சிறிது நேர களேபரங்களுக்கு பின் வண்டி மீண்டும் நகரத்தொடங்கியது. குளிர்ந்த தண்ணீர் நெஞ்சின் வழி இறங்கி அடிவயிற்றை நனைக்க, முட்டி நின்ற "மூத்திர உணர்வுகள்" மீண்டும் மூளையை உருத்த ஆரம்பித்தது.
வண்டி காவல்கிணறு, வள்ளியூர் தாண்டி வட்டக்குளம் நோக்கித் திரும்பியிருந்தது. வெட்கத்தைவிட்டு யாரிடமாவது சொல்லி, வண்டியை நிறுத்தலாமென முடிவு செய்தேன். செண்பகத்தம்மாவை பார்த்தேன். அரைத்தூக்கத்தில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் வழி வெளியே பார்த்தால் மறைவுக்கு சிறு இடமும் இல்லாத பொட்டைக் காடு. வேகவேகமாய் சில பனைமரங்கள் பாய்ந்துக் கடந்தன. அம்மம்மாவென வறண்ட நிலம் விரிந்து பரந்துக் கிடந்தது. இங்கு வண்டியை நிறுத்தினாலும் சிறுநீர் கழிப்பதற்கான வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஈரமான காட்டன் சேலை அடிவயிற்றை தெப்பலாக நனைத்து இம்சை படுத்தியது. வளைவுகளில் நெளிவுகளில் பள்ளங்களில் வண்டி விழும்போதெல்லாம் "கட்டுப்படுத்தி வைத்திருக்கும்" கட்டுப்பாடு குறைந்து அதிர்வது போன்றதொரு "அசௌகர்ய" நிலை.
என் முகத்தைப் பார்த்து செண்பகத்தம்மா, தாச்சி... என்னாச்சு... கை கடுக்கிறதா... குழந்தையை வச்சுக்கிடவா என்றாள்.
பரவாயில்லம்மா ... என்று கூறி பல்கலைக் கடித்துக் கொண்டேன்.
பூரானைப் போல் வண்டி வளைந்து நெளிந்து சென்று சமூகரெங்கபுரம் ஜங்ஷனில் திரும்பியது. யாரோ கலெக்டர் வருகிறார் என்று வண்டியை முன்னரே நிறுத்தியிருந்தார்கள். எங்களோடு வந்த ஆண்கள் சிலபேர்கள் வண்டியை விட்டு வெளியே சாடி வேட்டியை மடித்துக்கட்டி திரும்பி நின்று பனைமர மூட்டில் மூத்திரம் பாய்ச்சினார்கள். பெண்கள் யாரும் இறங்கவில்லை. என்னைப் போலவே அனைத்து பெண்களுக்கும் மூத்திரம் முட்டிக்கொண்டு இருப்பதாகத் எனக்குத் தோன்றியது. யாரும் எதுவும் கூறவில்லை. ஆணாய் பிறந்திருக்கலாமென அந்த நிமிடத்தில் தோன்றியது. சிறுநீர் பிரியும் சுகத்தில் தலையுயர்த்தி வானம் நோக்கி நின்றிருந்தனர் ஆண்கள். தொலைவில் அவர்களின் கால் இடைவெளி வழி பாய்ந்த "வளைந்த கோடு போன்ற நீரோட்டத்தை" பார்க்க எனக்குப் பொறாமையாகவும் ஆற்றாமையாகவும் இருந்தது. அடிவயிறு பொம்மி, ஒண்ணுக்கு முட்டி, தலை லேசாக வலிக்கத் தொடங்கியது. குழந்தை இருந்த கையும் லேசாகக் கடுக்கத் தொடங்கியது. இருந்தும் முட்டி நின்ற மூத்திர அவஸ்தைக்கு கைவலி ஒன்றும் அத்துணைப் பெரிதாகத் தெரியவில்லை.
சிலநிமிடங்களில் ரோட்டுக்குள் சில சலசலப்பு. அடுக்கடுக்காய் சில வாகனங்களின் பிரவேசம். தொடர்ந்து பெண் கலெக்டர் ஒருவர் "பாலியல் சமநிலை குறித்து" ஏதோ அறிவிப்பு செய்து கொண்டே அவ்விடம் கடந்தார். வண்டிக்குள் இருந்த பெண்கள் அனைவரும் அவரைப் பார்த்து வியந்தனர். இன்னும் சிலர் அவரைப் பார்த்து கையசைத்தனர். செண்பகத்தம்மாவும் கையசைத்துச் சிரித்தாள்.
தாச்சி... பார்த்தியா... நம்மள மாதிரிதான் இருக்கா... சின்ன பிள்ளைதான்... பெரிய கலெக்டராம்... நம்ம இன்னும் சமையல் கட்ட விட்டே வெளிய வரலை- செண்பகத்தம்மா ஏக்கப்பெருமூச்சோடு திமிறினாள்.
நமக்கு இதுதான் விதிச்சிருக்கு போல...- ஒருவாறாக ஆசுவாசத்துடன் பதில் கூறினேன்.
விதிச்சத மாத்தணும்... ஆம்பளைங்க போல பொம்மனாட்டிகளும் எல்லா வேலையும் செய்யணும்... - உள்ளுக்குள் ஊறிய ஆளுமை உணர்வோடு கிசுகிசுத்தாள் செண்பகத்தம்மா.
ஆம்பளைங்க செய்யுற வேலையெல்லாம் செய்யுறது பொறவும்மா... மொதல்ல இப்ப ஆம்பிளைங்க போனது மாதிரி, வெட்ட வெளியில பொம்பளைங்களால ஒண்ணுக்கு போக முடியலையே... முடிஞ்சா அதுக்கு ஏதாவது பண்ணுங்க ... - உடல் அனுபவிக்கும் துயரம் என் வாயின் வழி வார்த்தைகளாய் வெளியேறியது.
தாச்சி... நான் என்ன சொல்றேன்... நீ என்ன சொல்லுற...- குழப்பத்துடன் என்னை நோக்கி பரிகசித்தாள் செண்பகத்தம்மா.
எனக்கு ஒண்ணுக்கு போணும்னு சொன்னேன்... வேற ஒண்ணும் இல்லை.- வெட்கத்துடன் மெதுவாகக் கிசுகிசுத்தேன்.
செண்பகத்தம்மாவிற்கு என் நிலைமை புரிந்த மாதிரி தெரிந்தது. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிடம் இருக்கும் இடமாகப் பார்த்து வண்டியை நிறுத்த வேண்டுமென்று டிரைவரிடம் சப்தமாகக் கூறினாள். இதற்காகவே காத்திருந்தது மாதிரி, வண்டியில் இருந்த பலபெண்கள் உயிர்ப்போடு நெளிந்து உட்கார்ந்தனர்.
தாச்சி... மேல தண்ணி ரெம்ப கொட்டியிருக்கு... சேலையும் வேணா மாத்திக்கோவென - ஒரு சேலையைத் தந்தாள் செண்பகத்தம்மா. தலையசைத்து பேருந்து நிறுத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
மூன்று நான்கு நிமிடங்களில் அந்த பேருந்து நிலையம் பார்வைக்கு கிட்டியது. கழிப்பிடம் பார்த்ததும் சொர்க்கவாசலை கண்ட பூரிப்பில், இரண்டு மூன்று பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் அவ்விடம் புகுந்தோம். அடக்கி வைத்திருந்த ஆசைகளையெல்லாம் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடுவதுபோல், பூமியை நனைத்து பிறவிப்பயன் அடைந்தேன். முகமெங்கும் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளை பெற்ற பூரிப்பு. நிறைவாக பெருமூச்செறிந்தேன்.
இயற்கை உபாதை கழிந்து, கைவசம் கொண்டு சென்றிருந்த சேலையை மாற்றி மீண்டும் என் இருக்கையில் வந்து அமர்ந்த போது, செண்பகத்தம்மா ஒரு கட்டியான பெட்ஷீட் துணியை என் இருக்கையின் மேல் போர்த்தியிருந்தாள். வண்டியெங்கும் லேசான சீறுநீர்வாடை. எனக்கு என்னவோ நினைவுகளில் ஓடியது. பேருந்து நிறுத்தத்திற்கு முந்தைய வேகத்தடையில், வண்டி கொஞ்சம் வேகமாய் தூக்கி போட்டதில் என் கட்டுப்பாடு முறிந்து லேசாக சிறுநீர் வெளியேறியது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. அய்யே... என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.
இது நம்முடைய வேலைதான். சே... என்பது போலிருந்தது. குற்ற உணர்வில் எனக்கு என்னவோ மாறியிருந்தது. எல்லோரும் என்னையே குறுகுறுவென பார்ப்பதுபோல் தோன்றியது. வெட்கத்தில் சம்மலில் மெலிதாக நெளிந்துச் சரிந்தேன். அவமானம் என்னைக் கொன்றெடுத்தது. மூக்கு முழுதும் மூத்திர வாடை ஏறியது போல் ஒரு "தோணல்". சிலபேர்கள் காற்றில் பரவிய "மூத்திரநெடியில்" முகம் சுளிப்பது போலவும் உணர்ந்தேன். என் அற்ப புத்திக்குள் தாழ்வுமனப்பான்மை குடியேறி எங்கெல்லாமோ நினைவுகள் ஓடியது. ஒருமாதிரி படபடப்பாய் உணர்ந்தேன். செண்பகத்தம்மா... என் முகக்குறிப்பை உணர்ந்தவளாய், எல்லோரும் கேட்கும்படி சட்டென்று சப்தமிட்டாள்.
"தாச்சி... சீட்ல குழந்தை மூத்திரம் போயிட்டா... கேட்டயா. அதான் பெட்ஷீட் போட்டிருக்கேன். நல்ல சாஞ்சு உட்காரு... கொஞ்ச நேரத்துல காஞ்சிரும்... "- என்று கூறி கண்ணடித்துச் சிரித்தாள்.
பற்றியெரியும் என் அவமானத்தீயில் நீர் இறைத்தது போலிருந்தது அவளின் வார்த்தைகள். வண்டி நகர நகர மூத்திர நெடி காற்றில் கரைந்தது. கொஞ்ச நேரத்திற்கு செண்பகத்தம்மாவை திரும்பியே பார்க்கவில்லை. வண்டிக்குள் இருந்த மற்ற எல்லோரும் இயல்பாக பயணிப்பது போல் தோன்றியது. செண்பகத்தம்மாவை கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் செய்ய வில்லை. ஏதோ சிந்தனையோடு ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். விவரிக்க முடியாத ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியது. கண்ணில் மோதிய சூடான காற்று, கண்ணீரை அனிச்சையாய் வெளியேற்றியது.
- தெரிசை சிவா
வியாழன், 5 செப்டம்பர், 2019
கூடப்பொறப்பு
மேகமே மடுவாகி, பாலாய், ஊர் முழுதும் புதுமழை பெய்திருந்தது. மழைன்னா... மழை அப்படி ஒரு மழை. தண்ணியாய், வெள்ளமாய், நீராய், குடம் குடமாய், வரி, வரியாய் பெய்துத் தீர்த்தது மழை. இதற்காகவே காத்திருந்த விவசாயிகள் அனைவரின் முகத்திலும், பயிரேத்தத் துடிக்கும் பூரிப்பு. மண்ணிலிருந்து, பொங்கித் தின்னும் “சோற்றை” உருவாக்கும் உத்வேகம். சொந்தவயில் உள்ளவன், பாட்டவயில் உள்ளவன், ஏர்மாடு வைத்தவன், மண்வெட்டி சூட்சமம் தெரிஞ்சவன் - என எல்லோர் கால்களிலும் ஒரு ஓட்டம். ஒரு அவசரம்.
விவசாயம்னா.. அப்படிதான். மண்ணுல பயிறு மொளைக்கிறத பார்க்கிறதும், வாய்க்காலுல தண்ணி வருகத பார்ப்பதிலும் "உற்சாகம்". மண்ணும், தண்ணியும் கலந்த “தொளியில” நிக்குறது, விண்ணும், மழையும் கலந்த “மேகத்துல” நிக்குறதுக்கு சமம். விளைஞ்சு, குனிஞ்சு நிக்குற “கதிர” பாக்குறப்ப, சமைஞ்சு, குழைஞ்சு நிக்குற “பொண்ண” பாக்குற சந்தோசம். கொத்து கொத்தாய், “நெல்லப்” பாக்குறப்போ, கட்டி கட்டியாய் “பொன்னைப்” பார்த்த பூராப்பு. வளர்ந்தப் பயிரை, பொம்பளையாக் கட்டிப் புடிச்சி, உச்சம் கண்ட “விவசாயக் கிறுக்குக” இப்பவும் உண்டு ஊர்ப்புறத்துல.
கலப்பையும், மரமுமாய், காளையும், போத்துமாய் சேர்ந்து, மண்ணைக் கீறி உழுது, கொழையருக்கி, சாணி உரம் போட்டு, மட்டத்துக்கு மரமடிச்சு, திருப்தி இல்லாம தட்டுப் பலகை வீசி நிரப்பாக்கி, வெள்ளம் சேர்த்து, இடைவெளி விட்டு விதைச்சு, நாத்து நட்டு, வளர வளர காவல் காத்து, பச்ச புள்ளைக்கு பாலு கொடுக்கத போல, பச்சை நாத்துக்களுக்கு நீர் கொடுத்து, களையெடுத்து, விளையிறதுக்கு முன்ன, குடியானவன் “பரலோகமே” பார்த்திருவான். இடையில புயலோ, வெள்ளமோ, மழையோ வந்திச்சின்னா கூடவே “சிவலோகமும்” தெரியும்.
எல்லாத்தையும் எப்படியோ சமாளிச்சு, கதிரறுருத்து, சூடடச்சு, சண்டுவிட்டு, பொலியளந்து, கூறடிக்கும், பாட்டத்துக்கும் கொடுத்தது போக, மீதி முதலானத வச்சி, வரவு செலவு கணக்குப் பார்த்தா.. கைல காசெதுவும் நிற்காது. இருந்தாலும் சாக்குலயோ, பிரையிலயோ குவிச்சு, கட்டி வச்சிருக்க “வீட்டரிசி” நெல்லப் பார்த்ததும், “இன்னும் நாலஞ்சுமாசம் பிள்ள குட்டிகளுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை” -ன்னு ஒரு “மனசமாதானம்” வரும் பாருங்கோ. அந்த சமாதான நினைப்புதான் “அடுத்த மழை” பூமியில விழுந்ததும், “வாங்கடே.. போய் மண்ணைக் கிளருவோம்னு” மூளையை திசைத்திருப்பி, திரும்பவும் பயிரேத்த வைக்கிறது.
வயிலடி முழுதும் நீர் குடித்த “தொளி” - யின் மணம். வடக்குப்பத்து, தெக்குப்பத்து, தெள்ளாந்திப்பத்து, குளக்கரைப்பத்து, சுடுகாட்டுப்பத்து என எங்கும் அழுக்கேறிய மனிதர்கள். அவர்களின் நிறைத்த உழைப்புகள். நகைச்சுவைப் பேச்சுக்கள். மனிதர்களை விட அழுக்கான மாடுகள். நளினமாய் நடவு செய்யும் நன்றிக்குழி குமருகள் மற்றும் கிழவிகள், கேட்க, கேட்கத் திகட்டாத அவர்களின் “பேச்சு மொழிகள்”. ஒட்ட முடிவெட்டிய கிழட்டுப் பண்டாரங்களாய், இலையிழந்த பூவரசு மற்றும் புங்க மரங்கள். வயலில் உழுதுக் கொண்டிருக்கும், அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ, அத்தானுக்கோ, தாத்தாவுக்கோ தூக்கு வாளியில் “ஆகாரத்தை” வைத்துக்கொண்டு, வழுக்கும் தொளியில், நடையும், நடனமும் பழகும், “புதிதாய் வயலடி வரும் விடலைகள்”. அவர்களைக் கேலி செய்யும் “பெருசுகள்”.- என திரும்பும் பக்கமெல்லாம் திருவிழாக் கோலம். சிரிப்பு மழைகள், பேச்சு வெடிகள்.
தங்கப்பபிள்ளையின் வயல் நடவுக்குத் தயாராக இருந்தது. ஈருநேரு கட்டியடித்த மரம், வண்டலும் தண்ணீரும் கலந்த வயலை, “கடல்” போல் “நிரப்பாகக்” காட்டியது. நாத்தங்காலில் பறித்த “நடவு நாற்றுக்கள்” மண்ணில் வேரூன்றும் ஆசையோடு, வரப்புகளில் சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை பனியனும், கட்டம் போட்ட சாரமும் அணிந்திருந்த தங்கப்பபிள்ளை, சூரியனையும், குலச்சாமியையும் கும்பிட்டு விட்டு, வடகிழக்கு மூலையில், “முதல் நடவு” நட குனிந்த போதுதான் மிலிட்ரி காரரின் மகன் ராகவன் மூலமாய், காதுகளில் அந்த வார்த்தை விழுந்தது.
“வேய்... மாமா... உம்ம மகளுக்கு வயிறு வலி வந்திடுச்சு... மகேசுக்கு வண்டியில புத்தேரி ஆசுத்தரிக்கு கொண்டு போறாங்களாம்.”
“வேய்... மாமா... உம்ம மகளுக்கு வயிறு வலி வந்திடுச்சு... மகேசுக்கு வண்டியில புத்தேரி ஆசுத்தரிக்கு கொண்டு போறாங்களாம்.”
அவர் இதை எதிர்ப்பார்த்ததுதான். சட்டென்று வேகமாகி, முதன் முதலாய் இரண்டு மூன்றுக் கொத்து “முதல்நடவு” நட்டு விட்டு, வேலையாட்களிடம் பாக்கி நடவு காரியங்களை சுருக்கமாகச் சொல்லி, வரப்பில் செங்குத்தாய் குத்தி வைத்திருந்த “கேள்விக்குறி” கைப்பிடிக் கொண்ட “குடை”-யைப் பிடுங்கி கொண்டு,
“மக்கா.. ராகவா.. ஒரு கண்ணு இங்கயும் பார்த்துக்கப்போன்னு” – பக்கத்து வயல்காரனிடம், வயல் நடவை மேற்பார்வை செய்ய வேண்டுகோள் வைத்து, வீடு நோக்கி ஓட்டமும், நடையுமாய் விரைந்தார் தங்கப்பபிள்ளை.
“மக்கா.. ராகவா.. ஒரு கண்ணு இங்கயும் பார்த்துக்கப்போன்னு” – பக்கத்து வயல்காரனிடம், வயல் நடவை மேற்பார்வை செய்ய வேண்டுகோள் வைத்து, வீடு நோக்கி ஓட்டமும், நடையுமாய் விரைந்தார் தங்கப்பபிள்ளை.
தங்கப்பபிள்ளை நாற்பதெட்டு வயது சம்சாரி. வேளாண்மை மட்டும் தெரிந்த முழுநேர விவசாயி. மண்ணு, மம்முட்டி, மாடு, பாலு, கிடாரி, வாழை, தென்னை, கமுகு, புண்ணாக்கு, பருத்திகொட்டை, தெப்பக்குளம், ஊர்கோவில், அரச மரம், டீக்கடை இவைகள்தான் இவர் உலகம். இப்போது டிவியும், மகள் வாங்கி கொடுத்த போனும் கூடுதலாக இவர் உலகத்திற்குள் வந்துள்ளது.
மகள் ஈஸ்வரியும், மனைவி உலகம்மையும் தான் “உற்றஉறவுகள்”.
பாக்கி “உறவுகள்” - ஊரில் உள்ள வயது கூடிய எல்லாரையும் அழைக்கும் உறவுப் பதங்களான, யண்ணன், யத்தான், மாமோய், பாட்டாவ், யத்தே, யாச்சியோ, - போன்றவைகள்.
தன்னை விட வயது குறைந்த எல்லாரையும் “மக்கா” என்ற ஒற்றை உறவு பதத்திற்குள்ளேயே அடக்கி விடுவார் தங்கப்பபிள்ளை.
மது அருந்தியிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ, ஊரில் உள்ளவர்கள் மீது கோபம் வரும்போது சொல்லுகின்ற, “தே..யா மகன், கூ... மகன், பூ.. மகன், போன்ற பதங்களுக்கு வயது வித்தியாசம் இல்லை. கோபம் தீரும் வரை ஓன்று மாற்றி ஓன்று, வந்து கொண்டே இருக்கும்.
ஆண்டாண்டுகளாய் மண்வெட்டிப் பிடித்து, பூமிக்கிளறிய “ஊக்கம்” தங்கப்பபிள்ளையின் தேகமெங்கும் தெரிந்தது. வழித்து விட்ட கற்சிலையைப் போன்றதொரு உடல். எண்ணெய் படிய வாரியத் தலை. உயரம் இல்லை, குட்டையென்றும் கூற முடியாத சராசரி உயரம். “உடலுழைப்பு” உடம்பில் இன்னும் இளமையை தக்க வைத்துக் கொண்டிருந்தது. தடித்த “நல்லமிளகை” போன்ற மார்புக் காம்புகளை, எந்நேரமும் அடைகாத்துக் கொண்டிருக்கும் முண்டாபனியன். பெரும்பாலும் இடுப்பில் கட்டம் போட்ட “சங்குபிராண்ட்” சாரம். கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளுக்கு மட்டும் பால்ராமபுற “கறைவேஷ்டி”.
உற்றவள் உலகம்மை மணமகனுக்கு ஏற்ற மணவாட்டி. சொந்த அத்தை மகள்தான். அவர்களின் திருமணத்தின் போது உலகமறியா விடலைப் பெண், உலகம்மையின் வயது பத்தொன்பது. தங்கப்பபிள்ளைக்கு இருபத்தியாறு. இதோ.. இப்போதுதான்... இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன், அவர்கள் திருமணம் நடந்த மாதிரியிருந்தது. ஆனால் இப்போது அவர்களின் மகளின் தலைப்பிரசவத்திற்காக, தலைத் தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் தங்கப்பபிள்ளை.
வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தைப் பாருங்கள். ஒரு உயிர் மனிதனாகப் பிறந்து, மற்றொரு உயிரோடு இணைந்து, ஆறேழு கிலோமீட்டருக்குள், மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் “பெருமிதம்” கிராமங்களில் வாழும் வெள்ளந்தி மனிதர்களிடமே சாத்தியம். பெரிதான எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல், தன்னைச் சேர்ந்தவர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து, அவர்களுக்காகவே உழைத்து, உழைத்து பின் மடியும், அத்தனை சராசரி மனிதர்களும் “சாதனையாளர்கள்’-தாம். உற்றவர்களின் சிரிப்பிற்காக, உறவுகளின் சந்தோசத்திற்காக, தன் வாழ்க்கையை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும் அனைவரும் “அசாத்தியமானவர்கள்’-தாம்.
தங்கப்பபிள்ளை மனைவி உலகம்மை மீதும், மகள் ஈஸ்வரி மீது அளவற்ற பாசம் கொண்டவர். இப்போதும் தன்மகளை ஒரு குழந்தையாக பாவிக்கும் மனோபாவம் கொண்டவர். அவளுக்கு இப்போது ஒரு குழந்தை வரப்போகிறது என்பதை, அவராலேயே சிலநேரங்களில் நம்ப முடியவில்லை. தலைப்பிரசவத்திற்கு வந்திருந்தாலும், ஈஸ்வரியும் இன்னும் குழந்தை மனதோடுதான் இருந்தாள். இப்போதும் வெளியில் போய்கொண்டு வீட்டுக்கு வரும் அப்பாவிடம், “பண்டம் ஒண்ணும் வாங்கலையாப்பானு” கேட்கும் வெள்ளந்தி மகள்தான். “பிள்ளைக்கு ஏதாவது வாங்கீட்டு வரவேண்டியது தானே”-ன்னு உலகம்மையும் கடிந்து கொள்வதுண்டு. இதனால்தான் வெளியே போய் வரும் போதெல்லாம ரெண்டு உளுந்த வடையோ, ஆமை வடையோ, முள்ளுமுறுக்கோ, கடலைமிட்டாயோ, ஓமப்போடியோ வாங்காமல் தங்கப்பபிள்ளை வீட்டுக்குள் நுழைவதில்லை. உலகம்மையும், ஈஸ்வரியும் அதனை “அடி” போடாமல் தின்றதும் இல்லை.
“ரெண்டு பேரும்.... அம்மையும், மகளுமா? அல்லது அக்காளும், தங்கச்சியுமாட்டி? – எனச் செல்லமாக அவர்கள் சண்டையை தங்கப்பபிள்ளை கடிந்துக் கொள்வதும் உண்டு. தின்னும் பொருளின் ருசியோ அல்லது வாங்கி தரும் தங்கப்பபிள்ளையின் பாசமோ என்னவோ, அவர்களின் பாசப்பிணைப்பை, ஆண்டாண்டு காலத்திற்கு “ஈரமாகவே” வைத்துள்ளது.
“ரெண்டு பேரும்.... அம்மையும், மகளுமா? அல்லது அக்காளும், தங்கச்சியுமாட்டி? – எனச் செல்லமாக அவர்கள் சண்டையை தங்கப்பபிள்ளை கடிந்துக் கொள்வதும் உண்டு. தின்னும் பொருளின் ருசியோ அல்லது வாங்கி தரும் தங்கப்பபிள்ளையின் பாசமோ என்னவோ, அவர்களின் பாசப்பிணைப்பை, ஆண்டாண்டு காலத்திற்கு “ஈரமாகவே” வைத்துள்ளது.
புத்தேரி மருத்துவமனை அதற்குரிய வழக்கமான பரபரப்புடன் இருந்தது. 1895-ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஹென்றி ஆண்ட்ரூசால் வெறும் ஒரு குளியலறையில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை, இன்று காதரின் பூத் மருத்துவமனையாய் ஏகப்பட்ட வசதிகளுடன் கற்கட்டிடமாய் வளர்ந்து நிற்கிறது. இன்று CBH என்று செல்லமாக அழைக்கப்படும் மருத்துவமனைக்கு, தங்கப்பபிள்ளை சென்று சேரும்போது ஈஸ்வரியை அவசரப்பிரிவிற்கு கொண்டு சென்றிருந்தார்கள். உலகம்மை பரிதவிப்புடன் அறைவாசலில் நின்று கொண்டிருந்தாள். அவள் உடம்பெங்கும் வியர்த்திருந்தது. தங்கப்பபிள்ளையை பார்த்ததும் கண் கலங்கினாள்.
“எட்டி.. கிறுக்கி மாறி... கண்ண கசக்கிட்டு……..,வரும்போது யாக்கியம்மன் கோவிலுக்கு போயிட்டுத்தான் வந்தேன்” – என்று சொல்லி திருநீறைக் கொடுத்தார். பயபக்தியோடு அதனை வாங்கி நெற்றியிலிட்டு, சிறிது வாய்க்குள்ளும் இட்டாள். பின்பு கண்ணீர் மல்க, வான் நோக்கி வேண்டினாள்.
“மகமாயி.... அம்மையும் பிள்ளையையும் ரெண்டு பாத்திரம் ஆக்கிடம்மா”
தங்கப்பபிள்ளையும் கைகோர்த்து, வான் பார்த்து வாய்க்குள் ஏதோ மூணு முணுத்தார்.
“மாப்பிளைக்கும், அவங்க வீட்டுக்கும் சொல்லிட்டேளா?”
“போன்ல சொல்லியாச்சு.. எல்லாரும் இன்னைக்கு ராத்ரி கிளம்பி, நாளைக்கு காலையில வந்திருவாங்களாம்... ஆசுத்ரி அட்ரசும் கொடுத்திருக்கேன்....” – என்றார் தங்கப்பபிள்ளை.
சில நிமிடங்கள் இருவரும் பேசிக்கொள்ள வில்லை. நர்சுகள் அங்குமிங்கும் போவதும், வருவதுமாக இருந்தனர். ஏதோ நினைப்பில் உலகம்மை, தங்கப்பபிள்ளையிடம் பேசினாள்.
“பிள்ள... வலியில.. துடிச்சிட்டு,,,,, கேட்டேளா,,... பார்க்கவே கஷ்டமாயிட்டு..”
“வருத்தப்படாதடீ... இது எல்லா பொம்பளைகளுக்கும், உள்ளதுதலா....” – ஆறுதலாகப் பேசினார் தங்கப்பபிள்ளை. உலகம்மை தொடர்ந்தாள்.
“கடவுள் ஏன் தான் இப்படி படைச்சாரோ பொம்பளைகள... இப்படி நொந்துதான் பிள்ளை பெறணுமா.... எச்சி துப்பர மாறி, நகம் வெட்டுற மாறி, முடி வெட்டுற மாறி... புள்ள பொறந்தா என்னா.... அதுக்கில்லாம.... இது என்னா அவஸ்தைப்பா.”
தங்கப்பபிள்ளைக்கு சிறிதாக கோபம் வந்தது.
“இனி நீ பிள்ளை பெறும்போது... அப்படி பெத்துரு”-ன்னு சற்று ஆவேசமாக பதில் சொன்னார்.
உலகம்மை பதிலேதும் பேசவில்லை. ஈஸ்வரியை பற்றிய கவலை இருவர் மனதிற்குள்ளும் நிழலாடியது. அவசரப்பிரிவிற்குள் நர்சுகள் போவதும், வருவதுமாக இருந்தனர். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது? ஒரு விவரமும் இல்லை.
சிறிதான ஆவலுடன், பெரிதான திகைப்புடன் கழிந்தன ஐந்தாறு நிமிடங்கள். அப்போதுதான் தங்கப்பபிள்ளை எதிர்ப்பார்க்காத “அந்த விஷயம்” நடந்தது.
சிறிதான ஆவலுடன், பெரிதான திகைப்புடன் கழிந்தன ஐந்தாறு நிமிடங்கள். அப்போதுதான் தங்கப்பபிள்ளை எதிர்ப்பார்க்காத “அந்த விஷயம்” நடந்தது.
பெஞ்சிலிருந்து, இருந்த இருப்பிலேயே மயங்கி சாய்ந்தாள் உலகம்மை. ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார் தங்கப்பபிள்ளை.
“எட்டீ... எட்டீ... எட்டீ... உலகம்ம... எட்டீ..” – தோள்களைப் பற்றித் தூக்கி கத்தினார் தங்கப்பபிள்ளை.
உலகம்மையிடம் எந்த அனக்கமும் இல்லை.
வெகுவிரைவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நர்சுகள் சேர்ந்து உலகம்மையை சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.
தங்கப்பபிள்ளைக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. என்ன செய்ய? ஏது செய்ய, யாருக்காவது போன் செய்யலாமா? ஒரே குழப்பம் சில மணித்துளிகளுக்கு.
“சவம்... மகளுக்கு கூடச்சேர்ந்து இவளும் காலையில, ஆகாரம் ஒண்ணும் தின்னுருக்க மாட்டா... அதான் குடியாத்தளச்சையில மயங்கிட்டா” – என மனதிற்குள் அவருக்கு அவரே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
அரைமணிநேரம் குழப்பமும், தவிப்புமாக ஆஸ்பத்திரி பெஞ்சில் கழிந்தது. இடையே ஒருமுறை மருத்துவமனை கவுண்டரில் சென்று முன்பணம் கட்டச் சொல்லியிருந்தார்கள். பணத்தை கட்டி முடித்து திரும்பி வரும் வேளையில்தான், ஒரு நர்ஸ் சிரித்துக்கொண்டே அந்தச் செய்தியைச் சொன்னார்.
“மயங்கி விழுந்தது... உங்க பொண்டாட்டி தான... அவங்க பிள்ளை உண்டாகி இருக்காங்கன்னு”
காதுகளில் விழுந்த கேள்வியை, மனது ஏற்க மறுத்தது. அதிர்ச்சியோடு நின்று கேட்டுக் கொண்டிருந்தார் தங்கப்பபிள்ளை. நர்ஸின் உடல் மொழியில் ஒரு நையாண்டித்தனம் இருந்தது. முகத்திலிருந்த சிரிப்பு, தங்கப்பபிள்ளையின் “கிழட்டு பராக்கிரமத்தை” கிண்டல் செய்வதாகத் தோன்றியது. அதிர்ச்சியின் தாக்கத்திலிருந்ததால் அவறேதும் “மறுபடி” கொடுக்க வில்லை.
சிரிப்பை அடக்கிக்கொண்டு, உலகம்மை மயக்கம் தெளிந்து விட்டதாகவும், குடிக்க எதாவது வாங்கி வருமாறும் கூறினாள் நர்ஸ். இரண்டு செவ்விளநீர் வாங்கிகொண்டு, மருத்துவமனை அறைக்கு சென்று, உலகம்மையின் பக்கத்தில் அமர்ந்தார் தங்கப்பபிள்ளை. குற்ற உணர்வின் உச்சத்திலிருந்தனர் இருவரும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சிறுகூச்சம். மெதுவாக உலகம்மை, கவலையோடு பேச ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு சொல்ல... சொல்ல கேட்டேளா... இப்பம் எவ்வளவு பெரிய கேவலம்...”
“என்னைக்கு”
“ஆங்.... அன்னைக்கு... மூர்த்திக்கு மக கல்யாணத்திற்கு போயிட்டு “மூணு கால்ல” வந்தேள்ளா... அன்னைக்கு”
தங்கப்பிள்ளைக்கு விசயங்கள் பாதி நினைவுக்கு வந்தது.
“எனக்கு... அன்னைக்கு நடந்ததுல பாதி... நினைவே இல்லை... சரி விடு... இப்ப வேற என்ன செய்யதுக்கு...”
“வேற என்ன செய்துக்கா.... அங்க மக பிள்ளை பெறக் கிடக்கா... நான் இங்க அம்மை “பிள்ளை” உண்டாயிருக்கேன்... சீ... நல்லக் கூத்து... உங்கள ஒத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... என்னைய தான் காறித் துப்புவாங்க..”
“இதுல காறித் துப்பதுக்கு என்ன இருக்கு?”
“அப்பம்... ஒரு காரியம் செய்யுங்கோ.... முதல்ல உங்க மகள்ட விசயத்தை சொல்லுங்கோ... அப்பறம் மாப்பிளைடையும், அவங்க வீட்லயும் சொல்லிட்டு, பழமும் சீனியும் வாங்கி ஊரு புல்லா விளம்புங்கோ...” – கோபத்தில் கொக்கரித்தாள் உலகம்மை.
தங்கப்பபிள்ளை எதுவும் பேசவில்லை.. வெட்கிக் குனிந்திருந்தது மாதிரியிருந்தது. உலகம்மை ஏதோ யோசனையில் மீண்டும் பேசினாள்.
“ச்சே... மானம் கெடுத்தாச்சு... அங்க பிள்ளை எப்படி இருக்கா?”
“நர்சுகோ ஒண்ணும் தெளிவா... சொல்லலை... இவ கூட போனதுல, மூணுப்பேருக்கு பிள்ளை பொறந்தாச்சாம்..”
“கள்ளியங்காட்டு தேவி.. ஒரு நல்ல செய்தியை கொடம்மா...- மகளை நினைத்து சாமியிடம் வேண்டினார்.
தங்கப்பபிள்ளை மெதுவாகப் பேசினார்.
“எட்டீ... ஒரு காரியம் செய்வோம்... நம்ம விசயத்தை இப்ப யார்ட்டையும் சொல்லாண்டாம்... முதல்ல பிள்ளைக்கு, விசயத்தைப் பார்ப்போம்..”
உலகம்மையும் ஆதரவாய், தலையசைத்து, மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்த, சில நிமிட நேரத்தில் ஒரு “குண்டு நர்ஸ்” வந்து சொன்னாள்.
“உங்களுக்கு பேரன் பொறந்திருக்கான்.. சுகப் பிரசவம்தான்னு”
“உங்களுக்கு பேரன் பொறந்திருக்கான்.. சுகப் பிரசவம்தான்னு”
சந்தோசத்தின் உச்சத்திற்கு சென்றனர் தங்கப்பபிள்ளையும், உலகம்மையும். எல்லோருக்கும் போன் போட்டுச் சொன்னார்கள். மகன் பிறந்ததில் மாப்பிளைக்கும், அவர் வீட்டாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. காலையில் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லி, போனை வைத்தனர்.
புதிதாய் உலகைக் கண்ட, புத்தம்புதிய பிஞ்சை, துணியில் சுற்றி உலகம்மையிடம் கொடுத்தார்கள். சந்தோஷப் பூரிப்பில், நர்சுகளின் கையில் சில நூறு ருபாய் தாள்களைத் திணித்தார் தங்கப்பபிள்ளை. ஆஸ்பத்திரியில் உள்ள அனைவருக்கும் “இனிப்பு” வாங்கிக் கொடுத்தார். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. கண்களை, கைகளை மூடி குழந்தை தூக்கத்திலிருந்தது.
புதிதாய் உலகைக் கண்ட, புத்தம்புதிய பிஞ்சை, துணியில் சுற்றி உலகம்மையிடம் கொடுத்தார்கள். சந்தோஷப் பூரிப்பில், நர்சுகளின் கையில் சில நூறு ருபாய் தாள்களைத் திணித்தார் தங்கப்பபிள்ளை. ஆஸ்பத்திரியில் உள்ள அனைவருக்கும் “இனிப்பு” வாங்கிக் கொடுத்தார். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. கண்களை, கைகளை மூடி குழந்தை தூக்கத்திலிருந்தது.
நாற்பத்தியோரு வயதில் குழந்தை உண்டாகிய, தன்னைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?
உலகை விடு..
ஊர் என்ன நினைக்கும்?..
ஊரை விடு..
குடும்பத்தார் என்ன நினைப்பார்கள்?
குடும்பத்தாரை விடு..
சம்பந்தி என்ன நினைப்பார்கள்?
அவர்களையும் விடு?
ஈஸ்வரி என்ன நினைப்பாள்?
சீ... கேவலமாகத் தோன்றியது.
என்ன செய்ய போகிறோம்?
அடுத்தடுத்த வந்த கேள்விகள், நிம்மதி குலைப்பதாயிருந்தது. அறுபடக் காத்திருக்கும் காசாப்புக்கடை ஆட்டின் பார்வையைப்போல், பரிதாபம் மேலோங்கியது. மலங்க மலங்க விழித்தபடி ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள் உலகம்மை.
வெளிக்கு வெளித்தெரியாமல், யாரும் அறியாமல் “கலைத்து” விட வேண்டியதுதான். அவள் நினைப்பில், “ஒரு தீர்க்கமான முடிவின் சாயல்” தெரிந்தது.
சரியாக பதினெட்டு நாட்கள் கழித்து, தங்கப்பபிள்ளையும், உலகம்மையும் வெளிக்கு வெளித்தெரியாமல், திருவனந்தபுறத்திற்குச் சென்று கருவைக் கலைத்து விட்டு வந்திருந்தனர். ஊர் வந்து சேரும் போது இரவு மணி ஒன்பது. உலகம்மையின் வயதான உடம்பு கருக்கலைப்பால் தளர்ந்திருந்தது. சுகப்பிரசவம் ஆகையால் ஈஸ்வரி நடமாடத் தொடங்கியிருந்தாள். “பால்” குடித்தக் குழந்தை, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது.
இருவரும் தூரத்து சொந்தமொன்றின் திருமணத்திற்குச் செல்வதாக, ஈஸ்வரியிடம் “பொய்” சொல்லியிருந்தனர். தங்கப்பபிள்ளை வருத்தத்துடன் இருந்தார். மனம் முழுதும் ஏதோ ஒரு பாரம். வந்ததும் வராததுமாய் படுக்கையில் சாய்ந்தார். உலகம்மை வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ள வில்லை. அடிவயிற்றில் “கருக்கலைப்பின் வலி” உருத்திக் கொண்டேயிருந்தது. ஆடைமாற்றி, அடுக்களைக்கு வந்த உலகம்மையிடம், ஈஸ்வரிதான் பேச்சை ஆரம்பித்தாள்.
“கல்யாணம்லா நல்ல முடிஞ்சாம்மா?”
“ஆமா.. மக்கா... பாபு மாமா, அத்தை எல்லாரும் உன்னைய கேட்டாங்க?”
“எம்மா... நீ சொல்லுற அத்தை, மாமன் யாருண்னே, எனக்குத் தெரியல”
“எல்லாம்... நம்ம அப்பா வழி...சொந்த காரங்க மக்கா......”
“அப்பா.. ஏன் ஒருமாதிரி... இருக்கா...?? வந்த உடனே படுத்திட்டா”
“அங்க வரை போயிட்டு வந்ததுல்லா... சீணமா இருக்கும்... எனக்கும் ஒரு மாரிதான் இருக்கு”
“அப்ப படு மா... நான் வேலையைப் பாக்கேன்”
“விசாலக்கா... எப்ப போனா.... இன்னிக்கி நல்ல உன்ன பார்த்துக் கிட்டளா”
“எங்க பார்த்தா... ஆயிரம்தான் இருந்தாலும் அடுத்தவதானே.... உன்ட சொல்லிட்டமேன்னு வந்தா... நான் காப்பி போட்டுக் கொடுத்தேன்.... குடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல்ல போய்ட்டா..”
“என்ட.. நீங்க போங்க மயினி... நான் பிள்ளைய “கண்ணு” போல பார்த்துக் கிடுகேன்னுல்லா... சொன்னா...”
“சொல்லுவா.. சொல்லுவா... கூடப் பொறப்புக
பாக்கத போல... பக்கத்து வீட்டு ஆளுக பாப்பாங்களா?
பாக்கத போல... பக்கத்து வீட்டு ஆளுக பாப்பாங்களா?
“நாளைக்யாட்டு... அவள நாக்க புடுங்குற மாறி... நாலு கேள்வி கேக்கேன்.”
சிறிதாக கோபமாகப் பேசினாள் உலகம்மை.
ஏதோ ஒரு யோசனையில் ஈஸ்வரி கேட்டாள்.
ஏதோ ஒரு யோசனையில் ஈஸ்வரி கேட்டாள்.
“எம்மா நீ.... கூட ஒரு பிள்ள பெத்திருக்கலாம்லா.... உங்க காலத்துக்கு அப்பறம்... எனக்கு யாரு இருக்கா..”
உலகம்மை பதிலேதும் பேசாமல் படுக்கையில் சென்று படுத்து விட்டாள். புரண்டு படுக்கையில் கண்களில் கண்ணீர் பனித்தது. நிமிர்ந்துப் படுத்ததும் “அடிவயிற்றின் வலி” உயிரைக் குடித்தது. என்ன, ஏதென்றே தெரியவில்லை.. தொட்டிலில் கிடந்த ஈஸ்வரியின் மகன், தீடிரென்று “ஓவ்” – வென அழ ஆரம்பித்தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)