வியாழன், 5 செப்டம்பர், 2019

கூடப்பொறப்பு

மேகமே மடுவாகி, பாலாய், ஊர் முழுதும் புதுமழை பெய்திருந்தது. மழைன்னா... மழை அப்படி ஒரு மழை. தண்ணியாய், வெள்ளமாய், நீராய், குடம் குடமாய், வரி, வரியாய் பெய்துத் தீர்த்தது மழை. இதற்காகவே காத்திருந்த விவசாயிகள் அனைவரின் முகத்திலும், பயிரேத்தத் துடிக்கும் பூரிப்பு. மண்ணிலிருந்து, பொங்கித் தின்னும் “சோற்றை” உருவாக்கும் உத்வேகம். சொந்தவயில் உள்ளவன், பாட்டவயில் உள்ளவன், ஏர்மாடு வைத்தவன், மண்வெட்டி சூட்சமம் தெரிஞ்சவன் - என எல்லோர் கால்களிலும் ஒரு ஓட்டம். ஒரு அவசரம்.
விவசாயம்னா.. அப்படிதான். மண்ணுல பயிறு மொளைக்கிறத பார்க்கிறதும், வாய்க்காலுல தண்ணி வருகத பார்ப்பதிலும் "உற்சாகம்". மண்ணும், தண்ணியும் கலந்த “தொளியில” நிக்குறது, விண்ணும், மழையும் கலந்த “மேகத்துல” நிக்குறதுக்கு சமம். விளைஞ்சு, குனிஞ்சு நிக்குற “கதிர” பாக்குறப்ப, சமைஞ்சு, குழைஞ்சு நிக்குற “பொண்ண” பாக்குற சந்தோசம். கொத்து கொத்தாய், “நெல்லப்” பாக்குறப்போ, கட்டி கட்டியாய் “பொன்னைப்” பார்த்த பூராப்பு. வளர்ந்தப் பயிரை, பொம்பளையாக் கட்டிப் புடிச்சி, உச்சம் கண்ட “விவசாயக் கிறுக்குக” இப்பவும் உண்டு ஊர்ப்புறத்துல.
கலப்பையும், மரமுமாய், காளையும், போத்துமாய் சேர்ந்து, மண்ணைக் கீறி உழுது, கொழையருக்கி, சாணி உரம் போட்டு, மட்டத்துக்கு மரமடிச்சு, திருப்தி இல்லாம தட்டுப் பலகை வீசி நிரப்பாக்கி, வெள்ளம் சேர்த்து, இடைவெளி விட்டு விதைச்சு, நாத்து நட்டு, வளர வளர காவல் காத்து, பச்ச புள்ளைக்கு பாலு கொடுக்கத போல, பச்சை நாத்துக்களுக்கு நீர் கொடுத்து, களையெடுத்து, விளையிறதுக்கு முன்ன, குடியானவன் “பரலோகமே” பார்த்திருவான். இடையில புயலோ, வெள்ளமோ, மழையோ வந்திச்சின்னா கூடவே “சிவலோகமும்” தெரியும்.
எல்லாத்தையும் எப்படியோ சமாளிச்சு, கதிரறுருத்து, சூடடச்சு, சண்டுவிட்டு, பொலியளந்து, கூறடிக்கும், பாட்டத்துக்கும் கொடுத்தது போக, மீதி முதலானத வச்சி, வரவு செலவு கணக்குப் பார்த்தா.. கைல காசெதுவும் நிற்காது. இருந்தாலும் சாக்குலயோ, பிரையிலயோ குவிச்சு, கட்டி வச்சிருக்க “வீட்டரிசி” நெல்லப் பார்த்ததும், “இன்னும் நாலஞ்சுமாசம் பிள்ள குட்டிகளுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை” -ன்னு ஒரு “மனசமாதானம்” வரும் பாருங்கோ. அந்த சமாதான நினைப்புதான் “அடுத்த மழை” பூமியில விழுந்ததும், “வாங்கடே.. போய் மண்ணைக் கிளருவோம்னு” மூளையை திசைத்திருப்பி, திரும்பவும் பயிரேத்த வைக்கிறது.
வயிலடி முழுதும் நீர் குடித்த “தொளி” - யின் மணம். வடக்குப்பத்து, தெக்குப்பத்து, தெள்ளாந்திப்பத்து, குளக்கரைப்பத்து, சுடுகாட்டுப்பத்து என எங்கும் அழுக்கேறிய மனிதர்கள். அவர்களின் நிறைத்த உழைப்புகள். நகைச்சுவைப் பேச்சுக்கள். மனிதர்களை விட அழுக்கான மாடுகள். நளினமாய் நடவு செய்யும் நன்றிக்குழி குமருகள் மற்றும் கிழவிகள், கேட்க, கேட்கத் திகட்டாத அவர்களின் “பேச்சு மொழிகள்”. ஒட்ட முடிவெட்டிய கிழட்டுப் பண்டாரங்களாய், இலையிழந்த பூவரசு மற்றும் புங்க மரங்கள். வயலில் உழுதுக் கொண்டிருக்கும், அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ, அத்தானுக்கோ, தாத்தாவுக்கோ தூக்கு வாளியில் “ஆகாரத்தை” வைத்துக்கொண்டு, வழுக்கும் தொளியில், நடையும், நடனமும் பழகும், “புதிதாய் வயலடி வரும் விடலைகள்”. அவர்களைக் கேலி செய்யும் “பெருசுகள்”.- என திரும்பும் பக்கமெல்லாம் திருவிழாக் கோலம். சிரிப்பு மழைகள், பேச்சு வெடிகள்.
தங்கப்பபிள்ளையின் வயல் நடவுக்குத் தயாராக இருந்தது. ஈருநேரு கட்டியடித்த மரம், வண்டலும் தண்ணீரும் கலந்த வயலை, “கடல்” போல் “நிரப்பாகக்” காட்டியது. நாத்தங்காலில் பறித்த “நடவு நாற்றுக்கள்” மண்ணில் வேரூன்றும் ஆசையோடு, வரப்புகளில் சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை பனியனும், கட்டம் போட்ட சாரமும் அணிந்திருந்த தங்கப்பபிள்ளை, சூரியனையும், குலச்சாமியையும் கும்பிட்டு விட்டு, வடகிழக்கு மூலையில், “முதல் நடவு” நட குனிந்த போதுதான் மிலிட்ரி காரரின் மகன் ராகவன் மூலமாய், காதுகளில் அந்த வார்த்தை விழுந்தது.
“வேய்... மாமா... உம்ம மகளுக்கு வயிறு வலி வந்திடுச்சு... மகேசுக்கு வண்டியில புத்தேரி ஆசுத்தரிக்கு கொண்டு போறாங்களாம்.”
அவர் இதை எதிர்ப்பார்த்ததுதான். சட்டென்று வேகமாகி, முதன் முதலாய் இரண்டு மூன்றுக் கொத்து “முதல்நடவு” நட்டு விட்டு, வேலையாட்களிடம் பாக்கி நடவு காரியங்களை சுருக்கமாகச் சொல்லி, வரப்பில் செங்குத்தாய் குத்தி வைத்திருந்த “கேள்விக்குறி” கைப்பிடிக் கொண்ட “குடை”-யைப் பிடுங்கி கொண்டு,
“மக்கா.. ராகவா.. ஒரு கண்ணு இங்கயும் பார்த்துக்கப்போன்னு” – பக்கத்து வயல்காரனிடம், வயல் நடவை மேற்பார்வை செய்ய வேண்டுகோள் வைத்து, வீடு நோக்கி ஓட்டமும், நடையுமாய் விரைந்தார் தங்கப்பபிள்ளை.
தங்கப்பபிள்ளை நாற்பதெட்டு வயது சம்சாரி. வேளாண்மை மட்டும் தெரிந்த முழுநேர விவசாயி. மண்ணு, மம்முட்டி, மாடு, பாலு, கிடாரி, வாழை, தென்னை, கமுகு, புண்ணாக்கு, பருத்திகொட்டை, தெப்பக்குளம், ஊர்கோவில், அரச மரம், டீக்கடை இவைகள்தான் இவர் உலகம். இப்போது டிவியும், மகள் வாங்கி கொடுத்த போனும் கூடுதலாக இவர் உலகத்திற்குள் வந்துள்ளது.
மகள் ஈஸ்வரியும், மனைவி உலகம்மையும் தான் “உற்றஉறவுகள்”.
பாக்கி “உறவுகள்” - ஊரில் உள்ள வயது கூடிய எல்லாரையும் அழைக்கும் உறவுப் பதங்களான, யண்ணன், யத்தான், மாமோய், பாட்டாவ், யத்தே, யாச்சியோ, - போன்றவைகள்.

தன்னை விட வயது குறைந்த எல்லாரையும் “மக்கா” என்ற ஒற்றை உறவு பதத்திற்குள்ளேயே அடக்கி விடுவார் தங்கப்பபிள்ளை.
மது அருந்தியிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ, ஊரில் உள்ளவர்கள் மீது கோபம் வரும்போது சொல்லுகின்ற, “தே..யா மகன், கூ... மகன், பூ.. மகன், போன்ற பதங்களுக்கு வயது வித்தியாசம் இல்லை. கோபம் தீரும் வரை ஓன்று மாற்றி ஓன்று, வந்து கொண்டே இருக்கும்.
ஆண்டாண்டுகளாய் மண்வெட்டிப் பிடித்து, பூமிக்கிளறிய “ஊக்கம்” தங்கப்பபிள்ளையின் தேகமெங்கும் தெரிந்தது. வழித்து விட்ட கற்சிலையைப் போன்றதொரு உடல். எண்ணெய் படிய வாரியத் தலை. உயரம் இல்லை, குட்டையென்றும் கூற முடியாத சராசரி உயரம். “உடலுழைப்பு” உடம்பில் இன்னும் இளமையை தக்க வைத்துக் கொண்டிருந்தது. தடித்த “நல்லமிளகை” போன்ற மார்புக் காம்புகளை, எந்நேரமும் அடைகாத்துக் கொண்டிருக்கும் முண்டாபனியன். பெரும்பாலும் இடுப்பில் கட்டம் போட்ட “சங்குபிராண்ட்” சாரம். கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளுக்கு மட்டும் பால்ராமபுற “கறைவேஷ்டி”.
உற்றவள் உலகம்மை மணமகனுக்கு ஏற்ற மணவாட்டி. சொந்த அத்தை மகள்தான். அவர்களின் திருமணத்தின் போது உலகமறியா விடலைப் பெண், உலகம்மையின் வயது பத்தொன்பது. தங்கப்பபிள்ளைக்கு இருபத்தியாறு. இதோ.. இப்போதுதான்... இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன், அவர்கள் திருமணம் நடந்த மாதிரியிருந்தது. ஆனால் இப்போது அவர்களின் மகளின் தலைப்பிரசவத்திற்காக, தலைத் தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் தங்கப்பபிள்ளை.
வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தைப் பாருங்கள். ஒரு உயிர் மனிதனாகப் பிறந்து, மற்றொரு உயிரோடு இணைந்து, ஆறேழு கிலோமீட்டருக்குள், மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் “பெருமிதம்” கிராமங்களில் வாழும் வெள்ளந்தி மனிதர்களிடமே சாத்தியம். பெரிதான எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல், தன்னைச் சேர்ந்தவர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து, அவர்களுக்காகவே உழைத்து, உழைத்து பின் மடியும், அத்தனை சராசரி மனிதர்களும் “சாதனையாளர்கள்’-தாம். உற்றவர்களின் சிரிப்பிற்காக, உறவுகளின் சந்தோசத்திற்காக, தன் வாழ்க்கையை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும் அனைவரும் “அசாத்தியமானவர்கள்’-தாம்.
தங்கப்பபிள்ளை மனைவி உலகம்மை மீதும், மகள் ஈஸ்வரி மீது அளவற்ற பாசம் கொண்டவர். இப்போதும் தன்மகளை ஒரு குழந்தையாக பாவிக்கும் மனோபாவம் கொண்டவர். அவளுக்கு இப்போது ஒரு குழந்தை வரப்போகிறது என்பதை, அவராலேயே சிலநேரங்களில் நம்ப முடியவில்லை. தலைப்பிரசவத்திற்கு வந்திருந்தாலும், ஈஸ்வரியும் இன்னும் குழந்தை மனதோடுதான் இருந்தாள். இப்போதும் வெளியில் போய்கொண்டு வீட்டுக்கு வரும் அப்பாவிடம், “பண்டம் ஒண்ணும் வாங்கலையாப்பானு” கேட்கும் வெள்ளந்தி மகள்தான். “பிள்ளைக்கு ஏதாவது வாங்கீட்டு வரவேண்டியது தானே”-ன்னு உலகம்மையும் கடிந்து கொள்வதுண்டு. இதனால்தான் வெளியே போய் வரும் போதெல்லாம ரெண்டு உளுந்த வடையோ, ஆமை வடையோ, முள்ளுமுறுக்கோ, கடலைமிட்டாயோ, ஓமப்போடியோ வாங்காமல் தங்கப்பபிள்ளை வீட்டுக்குள் நுழைவதில்லை. உலகம்மையும், ஈஸ்வரியும் அதனை “அடி” போடாமல் தின்றதும் இல்லை.
“ரெண்டு பேரும்.... அம்மையும், மகளுமா? அல்லது அக்காளும், தங்கச்சியுமாட்டி? – எனச் செல்லமாக அவர்கள் சண்டையை தங்கப்பபிள்ளை கடிந்துக் கொள்வதும் உண்டு. தின்னும் பொருளின் ருசியோ அல்லது வாங்கி தரும் தங்கப்பபிள்ளையின் பாசமோ என்னவோ, அவர்களின் பாசப்பிணைப்பை, ஆண்டாண்டு காலத்திற்கு “ஈரமாகவே” வைத்துள்ளது.
புத்தேரி மருத்துவமனை அதற்குரிய வழக்கமான பரபரப்புடன் இருந்தது. 1895-ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஹென்றி ஆண்ட்ரூசால் வெறும் ஒரு குளியலறையில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை, இன்று காதரின் பூத் மருத்துவமனையாய் ஏகப்பட்ட வசதிகளுடன் கற்கட்டிடமாய் வளர்ந்து நிற்கிறது. இன்று CBH என்று செல்லமாக அழைக்கப்படும் மருத்துவமனைக்கு, தங்கப்பபிள்ளை சென்று சேரும்போது ஈஸ்வரியை அவசரப்பிரிவிற்கு கொண்டு சென்றிருந்தார்கள். உலகம்மை பரிதவிப்புடன் அறைவாசலில் நின்று கொண்டிருந்தாள். அவள் உடம்பெங்கும் வியர்த்திருந்தது. தங்கப்பபிள்ளையை பார்த்ததும் கண் கலங்கினாள்.
“எட்டி.. கிறுக்கி மாறி... கண்ண கசக்கிட்டு……..,வரும்போது யாக்கியம்மன் கோவிலுக்கு போயிட்டுத்தான் வந்தேன்” – என்று சொல்லி திருநீறைக் கொடுத்தார். பயபக்தியோடு அதனை வாங்கி நெற்றியிலிட்டு, சிறிது வாய்க்குள்ளும் இட்டாள். பின்பு கண்ணீர் மல்க, வான் நோக்கி வேண்டினாள்.
“மகமாயி.... அம்மையும் பிள்ளையையும் ரெண்டு பாத்திரம் ஆக்கிடம்மா”
தங்கப்பபிள்ளையும் கைகோர்த்து, வான் பார்த்து வாய்க்குள் ஏதோ மூணு முணுத்தார்.
“மாப்பிளைக்கும், அவங்க வீட்டுக்கும் சொல்லிட்டேளா?”
“போன்ல சொல்லியாச்சு.. எல்லாரும் இன்னைக்கு ராத்ரி கிளம்பி, நாளைக்கு காலையில வந்திருவாங்களாம்... ஆசுத்ரி அட்ரசும் கொடுத்திருக்கேன்....” – என்றார் தங்கப்பபிள்ளை.
சில நிமிடங்கள் இருவரும் பேசிக்கொள்ள வில்லை. நர்சுகள் அங்குமிங்கும் போவதும், வருவதுமாக இருந்தனர். ஏதோ நினைப்பில் உலகம்மை, தங்கப்பபிள்ளையிடம் பேசினாள்.
“பிள்ள... வலியில.. துடிச்சிட்டு,,,,, கேட்டேளா,,... பார்க்கவே கஷ்டமாயிட்டு..”
“வருத்தப்படாதடீ... இது எல்லா பொம்பளைகளுக்கும், உள்ளதுதலா....” – ஆறுதலாகப் பேசினார் தங்கப்பபிள்ளை. உலகம்மை தொடர்ந்தாள்.
“கடவுள் ஏன் தான் இப்படி படைச்சாரோ பொம்பளைகள... இப்படி நொந்துதான் பிள்ளை பெறணுமா.... எச்சி துப்பர மாறி, நகம் வெட்டுற மாறி, முடி வெட்டுற மாறி... புள்ள பொறந்தா என்னா.... அதுக்கில்லாம.... இது என்னா அவஸ்தைப்பா.”
தங்கப்பபிள்ளைக்கு சிறிதாக கோபம் வந்தது.
“இனி நீ பிள்ளை பெறும்போது... அப்படி பெத்துரு”-ன்னு சற்று ஆவேசமாக பதில் சொன்னார்.
உலகம்மை பதிலேதும் பேசவில்லை. ஈஸ்வரியை பற்றிய கவலை இருவர் மனதிற்குள்ளும் நிழலாடியது. அவசரப்பிரிவிற்குள் நர்சுகள் போவதும், வருவதுமாக இருந்தனர். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது? ஒரு விவரமும் இல்லை.
சிறிதான ஆவலுடன், பெரிதான திகைப்புடன் கழிந்தன ஐந்தாறு நிமிடங்கள். அப்போதுதான் தங்கப்பபிள்ளை எதிர்ப்பார்க்காத “அந்த விஷயம்” நடந்தது.
பெஞ்சிலிருந்து, இருந்த இருப்பிலேயே மயங்கி சாய்ந்தாள் உலகம்மை. ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார் தங்கப்பபிள்ளை.
“எட்டீ... எட்டீ... எட்டீ... உலகம்ம... எட்டீ..” – தோள்களைப் பற்றித் தூக்கி கத்தினார் தங்கப்பபிள்ளை.
உலகம்மையிடம் எந்த அனக்கமும் இல்லை.
வெகுவிரைவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நர்சுகள் சேர்ந்து உலகம்மையை சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.
தங்கப்பபிள்ளைக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. என்ன செய்ய? ஏது செய்ய, யாருக்காவது போன் செய்யலாமா? ஒரே குழப்பம் சில மணித்துளிகளுக்கு.
“சவம்... மகளுக்கு கூடச்சேர்ந்து இவளும் காலையில, ஆகாரம் ஒண்ணும் தின்னுருக்க மாட்டா... அதான் குடியாத்தளச்சையில மயங்கிட்டா” – என மனதிற்குள் அவருக்கு அவரே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
அரைமணிநேரம் குழப்பமும், தவிப்புமாக ஆஸ்பத்திரி பெஞ்சில் கழிந்தது. இடையே ஒருமுறை மருத்துவமனை கவுண்டரில் சென்று முன்பணம் கட்டச் சொல்லியிருந்தார்கள். பணத்தை கட்டி முடித்து திரும்பி வரும் வேளையில்தான், ஒரு நர்ஸ் சிரித்துக்கொண்டே அந்தச் செய்தியைச் சொன்னார்.
“மயங்கி விழுந்தது... உங்க பொண்டாட்டி தான... அவங்க பிள்ளை உண்டாகி இருக்காங்கன்னு”
காதுகளில் விழுந்த கேள்வியை, மனது ஏற்க மறுத்தது. அதிர்ச்சியோடு நின்று கேட்டுக் கொண்டிருந்தார் தங்கப்பபிள்ளை. நர்ஸின் உடல் மொழியில் ஒரு நையாண்டித்தனம் இருந்தது. முகத்திலிருந்த சிரிப்பு, தங்கப்பபிள்ளையின் “கிழட்டு பராக்கிரமத்தை” கிண்டல் செய்வதாகத் தோன்றியது. அதிர்ச்சியின் தாக்கத்திலிருந்ததால் அவறேதும் “மறுபடி” கொடுக்க வில்லை.
சிரிப்பை அடக்கிக்கொண்டு, உலகம்மை மயக்கம் தெளிந்து விட்டதாகவும், குடிக்க எதாவது வாங்கி வருமாறும் கூறினாள் நர்ஸ். இரண்டு செவ்விளநீர் வாங்கிகொண்டு, மருத்துவமனை அறைக்கு சென்று, உலகம்மையின் பக்கத்தில் அமர்ந்தார் தங்கப்பபிள்ளை. குற்ற உணர்வின் உச்சத்திலிருந்தனர் இருவரும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சிறுகூச்சம். மெதுவாக உலகம்மை, கவலையோடு பேச ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு சொல்ல... சொல்ல கேட்டேளா... இப்பம் எவ்வளவு பெரிய கேவலம்...”
“என்னைக்கு”
“ஆங்.... அன்னைக்கு... மூர்த்திக்கு மக கல்யாணத்திற்கு போயிட்டு “மூணு கால்ல” வந்தேள்ளா... அன்னைக்கு”
தங்கப்பிள்ளைக்கு விசயங்கள் பாதி நினைவுக்கு வந்தது.
“எனக்கு... அன்னைக்கு நடந்ததுல பாதி... நினைவே இல்லை... சரி விடு... இப்ப வேற என்ன செய்யதுக்கு...”
“வேற என்ன செய்துக்கா.... அங்க மக பிள்ளை பெறக் கிடக்கா... நான் இங்க அம்மை “பிள்ளை” உண்டாயிருக்கேன்... சீ... நல்லக் கூத்து... உங்கள ஒத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... என்னைய தான் காறித் துப்புவாங்க..”
“இதுல காறித் துப்பதுக்கு என்ன இருக்கு?”
“அப்பம்... ஒரு காரியம் செய்யுங்கோ.... முதல்ல உங்க மகள்ட விசயத்தை சொல்லுங்கோ... அப்பறம் மாப்பிளைடையும், அவங்க வீட்லயும் சொல்லிட்டு, பழமும் சீனியும் வாங்கி ஊரு புல்லா விளம்புங்கோ...” – கோபத்தில் கொக்கரித்தாள் உலகம்மை.
தங்கப்பபிள்ளை எதுவும் பேசவில்லை.. வெட்கிக் குனிந்திருந்தது மாதிரியிருந்தது. உலகம்மை ஏதோ யோசனையில் மீண்டும் பேசினாள்.
“ச்சே... மானம் கெடுத்தாச்சு... அங்க பிள்ளை எப்படி இருக்கா?”
“நர்சுகோ ஒண்ணும் தெளிவா... சொல்லலை... இவ கூட போனதுல, மூணுப்பேருக்கு பிள்ளை பொறந்தாச்சாம்..”
“கள்ளியங்காட்டு தேவி.. ஒரு நல்ல செய்தியை கொடம்மா...- மகளை நினைத்து சாமியிடம் வேண்டினார்.
தங்கப்பபிள்ளை மெதுவாகப் பேசினார்.
“எட்டீ... ஒரு காரியம் செய்வோம்... நம்ம விசயத்தை இப்ப யார்ட்டையும் சொல்லாண்டாம்... முதல்ல பிள்ளைக்கு, விசயத்தைப் பார்ப்போம்..”
உலகம்மையும் ஆதரவாய், தலையசைத்து, மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்த, சில நிமிட நேரத்தில் ஒரு “குண்டு நர்ஸ்” வந்து சொன்னாள்.
“உங்களுக்கு பேரன் பொறந்திருக்கான்.. சுகப் பிரசவம்தான்னு”
சந்தோசத்தின் உச்சத்திற்கு சென்றனர் தங்கப்பபிள்ளையும், உலகம்மையும். எல்லோருக்கும் போன் போட்டுச் சொன்னார்கள். மகன் பிறந்ததில் மாப்பிளைக்கும், அவர் வீட்டாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. காலையில் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லி, போனை வைத்தனர்.
புதிதாய் உலகைக் கண்ட, புத்தம்புதிய பிஞ்சை, துணியில் சுற்றி உலகம்மையிடம் கொடுத்தார்கள். சந்தோஷப் பூரிப்பில், நர்சுகளின் கையில் சில நூறு ருபாய் தாள்களைத் திணித்தார் தங்கப்பபிள்ளை. ஆஸ்பத்திரியில் உள்ள அனைவருக்கும் “இனிப்பு” வாங்கிக் கொடுத்தார். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. கண்களை, கைகளை மூடி குழந்தை தூக்கத்திலிருந்தது.
நாற்பத்தியோரு வயதில் குழந்தை உண்டாகிய, தன்னைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?
உலகை விடு..
ஊர் என்ன நினைக்கும்?..
ஊரை விடு..
குடும்பத்தார் என்ன நினைப்பார்கள்?
குடும்பத்தாரை விடு..
சம்பந்தி என்ன நினைப்பார்கள்?
அவர்களையும் விடு?
ஈஸ்வரி என்ன நினைப்பாள்?
சீ... கேவலமாகத் தோன்றியது.
என்ன செய்ய போகிறோம்?
அடுத்தடுத்த வந்த கேள்விகள், நிம்மதி குலைப்பதாயிருந்தது. அறுபடக் காத்திருக்கும் காசாப்புக்கடை ஆட்டின் பார்வையைப்போல், பரிதாபம் மேலோங்கியது. மலங்க மலங்க விழித்தபடி ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள் உலகம்மை.
வெளிக்கு வெளித்தெரியாமல், யாரும் அறியாமல் “கலைத்து” விட வேண்டியதுதான். அவள் நினைப்பில், “ஒரு தீர்க்கமான முடிவின் சாயல்” தெரிந்தது.
சரியாக பதினெட்டு நாட்கள் கழித்து, தங்கப்பபிள்ளையும், உலகம்மையும் வெளிக்கு வெளித்தெரியாமல், திருவனந்தபுறத்திற்குச் சென்று கருவைக் கலைத்து விட்டு வந்திருந்தனர். ஊர் வந்து சேரும் போது இரவு மணி ஒன்பது. உலகம்மையின் வயதான உடம்பு கருக்கலைப்பால் தளர்ந்திருந்தது. சுகப்பிரசவம் ஆகையால் ஈஸ்வரி நடமாடத் தொடங்கியிருந்தாள். “பால்” குடித்தக் குழந்தை, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது.
இருவரும் தூரத்து சொந்தமொன்றின் திருமணத்திற்குச் செல்வதாக, ஈஸ்வரியிடம் “பொய்” சொல்லியிருந்தனர். தங்கப்பபிள்ளை வருத்தத்துடன் இருந்தார். மனம் முழுதும் ஏதோ ஒரு பாரம். வந்ததும் வராததுமாய் படுக்கையில் சாய்ந்தார். உலகம்மை வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ள வில்லை. அடிவயிற்றில் “கருக்கலைப்பின் வலி” உருத்திக் கொண்டேயிருந்தது. ஆடைமாற்றி, அடுக்களைக்கு வந்த உலகம்மையிடம், ஈஸ்வரிதான் பேச்சை ஆரம்பித்தாள்.
“கல்யாணம்லா நல்ல முடிஞ்சாம்மா?”
“ஆமா.. மக்கா... பாபு மாமா, அத்தை எல்லாரும் உன்னைய கேட்டாங்க?”
“எம்மா... நீ சொல்லுற அத்தை, மாமன் யாருண்னே, எனக்குத் தெரியல”
“எல்லாம்... நம்ம அப்பா வழி...சொந்த காரங்க மக்கா......”
“அப்பா.. ஏன் ஒருமாதிரி... இருக்கா...?? வந்த உடனே படுத்திட்டா”
“அங்க வரை போயிட்டு வந்ததுல்லா... சீணமா இருக்கும்... எனக்கும் ஒரு மாரிதான் இருக்கு”
“அப்ப படு மா... நான் வேலையைப் பாக்கேன்”
“விசாலக்கா... எப்ப போனா.... இன்னிக்கி நல்ல உன்ன பார்த்துக் கிட்டளா”
“எங்க பார்த்தா... ஆயிரம்தான் இருந்தாலும் அடுத்தவதானே.... உன்ட சொல்லிட்டமேன்னு வந்தா... நான் காப்பி போட்டுக் கொடுத்தேன்.... குடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல்ல போய்ட்டா..”
“என்ட.. நீங்க போங்க மயினி... நான் பிள்ளைய “கண்ணு” போல பார்த்துக் கிடுகேன்னுல்லா... சொன்னா...”
“சொல்லுவா.. சொல்லுவா... கூடப் பொறப்புக
பாக்கத போல... பக்கத்து வீட்டு ஆளுக பாப்பாங்களா?
“நாளைக்யாட்டு... அவள நாக்க புடுங்குற மாறி... நாலு கேள்வி கேக்கேன்.”
சிறிதாக கோபமாகப் பேசினாள் உலகம்மை.
ஏதோ ஒரு யோசனையில் ஈஸ்வரி கேட்டாள்.
“எம்மா நீ.... கூட ஒரு பிள்ள பெத்திருக்கலாம்லா.... உங்க காலத்துக்கு அப்பறம்... எனக்கு யாரு இருக்கா..”
உலகம்மை பதிலேதும் பேசாமல் படுக்கையில் சென்று படுத்து விட்டாள். புரண்டு படுக்கையில் கண்களில் கண்ணீர் பனித்தது. நிமிர்ந்துப் படுத்ததும் “அடிவயிற்றின் வலி” உயிரைக் குடித்தது. என்ன, ஏதென்றே தெரியவில்லை.. தொட்டிலில் கிடந்த ஈஸ்வரியின் மகன், தீடிரென்று “ஓவ்” – வென அழ ஆரம்பித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks