வியாழன், 5 செப்டம்பர், 2019

அணுகுண்டு

“மத்தவரு.... அந்த பிள்ளைக்கு மேல... கைய வச்சிட்டாரு” – என்ற பேச்சு, பாலில் கலந்த தண்ணீரைப் போல், ஊரெங்கும் காற்றில் கலந்திருந்தது. எவ்விடமும், எல்லோர் வாயிலும், மனதிலும் இது குறித்தப்பேச்சுக்கள், விவாதங்கள், சந்தேகங்கள், கணிப்புகள், ஆருடங்கள்.
வாய்க்கால் வரப்புகள், ஊரடிக் கோவில்கள், கலுங்குகள், முடுக்குகள், வெட்டிப்பேச்சு படுப்புரைகள், கொல்லைப்புறமதில்கள், ஆற்றுப் படித்துறைகளென ஒரு இடம் விடாமல் “அந்நிகழ்வையே” பேசித் தீர்த்தனர் அனைவரும். இரவில் சாப்பிட்டுவிட்டு “உறக்கம்” வராதவர்கள், அன்று “உடலுறவு” வாய்க்காதவர்கள், அரைபோதையில் உட்கார்ந்து அரசியல் பேசுபவர்கள், வயல் வரப்புகளில் “வெளிக்கி” இருப்பதற்காக, அடுத்தடுந்து உட்கார்ந்து இருப்பவர்கள், பால் வாங்க, ரேஷன் பொருட்கள் வாங்க, வரிசையில் காத்துக்கிடப்பவர்கள், வேலை வெட்டி இல்லாத பண்ணையார் குடும்பத்தார்கள் -என எல்லோர் வாயிலும் கிடந்து உருண்டது “அந்தப் பேச்சு”.
“இந்த வாத்தியானுகளே இப்படிதான்.... இந்த மாறியுள்ளவங்கள.. நடு ரோட்ல விட்டு காயடிக்கனும்”
“படிக்கிற பிள்ளைட போய்... இப்படி நடந்திருக்கானே... இவன் விளங்குவானா? இவன் வம்சம் விளங்குமா?”
“இந்த கையாலா..... எத்ர தடவை அவனை கும்டிருக்கேன்... த்தூ...”
“வெள்ளையும், சொள்ளையுமா லாந்திட்டு, பண்ணிருக்க வேலைய பார்த்தியா... சவம்.. இவனுகளெல்லாம் சுட்டு கொல்லணும்”
---- என்பது மாதிரியான தீர்ப்புகளை, அபிப்ராயங்களை உரையாடலின் முடிவில், அவரவர்களுக்கு முடிந்த வரையில் சொல்லித் தீர்த்தனர் மக்கள் அனைவரும்.
“உலை வாயை மூடினாலும், ஊர் வாயை முட முடியாது” என்பது உண்மைதானென்பது இராமசாமி வாத்தியாருக்கும் அப்போதுதான் புரிந்தது. தனது முப்பதாண்டு கால ஆசிரியர் வாழ்க்கை மொத்தமாக புரண்டு போன வருத்தம், அவர் நெஞ்சமெங்கும் சுட்டெரித்தது. எப்படி இருந்தார். ஊரெங்கும் எத்தனை மரியாதை. அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த இடத்திற்கு போனாலும், அவரிடம் படித்த மாணவமணிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்படுவதுண்டு. எங்கு சென்றாலும் “வெடுக், வெடுக்”-கென்று கையை உயர்த்தி சொல்லும் “வணக்கங்கள்”. உடம்பை பணிவாக்கி குசலம் விசாரிக்கும் “மரியாதைப்பேச்சுக்கள்”. தன்னுடைய ஆசிரியப்பணியை நினைத்து பல முறை அவர் கர்வப்பட்டதுண்டு. கோவிலுக்கு, மளிகைக் கடைக்கு, திரையரங்கிற்கு, என எங்கு சென்றாலும், “வணக்கம் சார்” என்ற குரல்கள். அதனைத் தொடர்ந்து கொடுக்கப்படும் ஆசிரியருக்கான “மரியாதைகள்”, பச்சையாகச் சொல்லப் போனால் “ஆளுமைச்சலுகைகள்”. ஆனால் இன்று எல்லாம் தலை கீழ். அவரை நேருக்கு நேராய் எதிர்கொள்ள தைரியம் இல்லாதவனெல்லாம், இப்போது அவரை பேச்சின் மூலம், நார், நாராய் கிழித்துக் கொண்டிருந்தனர்.
எந்த ஒரு மரியாதைமிக்க மனிதனையும் சமூகத்தில் பலவீனப்படுத்தும் வார்த்தை ஓன்று உண்டு. அது “அவன் மத்ததுல வீக்கு” – என்ற பதமாகும். தனிமனிதனின் சுய ஒழுக்கத்தை, அவன் தன்னம்பிக்கையை, அவன் நடத்தையை- என எல்லாவற்றையும் மிகச்சிறிய நேரத்தில் சீரழிக்கும் சக்தி “இந்த வாக்கியத்திற்கு” உண்டு. சரியாக யோசித்து பார்த்தால், ஆம்பிளையாக பிறந்த அத்தனை பேரும் “மத்ததுல வீக்கு தான்”. இது எல்லோருக்கும் தெரியும், இருந்தும் இம்மாதிரியான “மத்த” விசயங்களில், மற்றவர்கள் பெயர்கள் வெளியே தெரியும் போது, ஏனையோர் அனைவரும் “யோக்கியன்களாக” மாறி விடுவதுண்டு. சிலர் இன்னும் கூடுதலாய், நடந்த விசயங்களையெல்லாம் ஆராயாமல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாய் மாறி, “தீர்ப்புகளை” வதந்திகாளாய் பரப்பி விடுவதும் உண்டு. அம்மாதியான ஒரு உச்சகக்ட்ட அவமான நிலையிலிருந்தார் இராமசாமி வாத்தியார்.
ஏராளமான உவமைகளைச் சொல்லி அவர் உருவத்தை உங்கள் மனத்திரையில் கொண்டு வருவதற்குப் பதிலாக, கொஞ்சம் எளிமையாக “அவர்”, யாரைப்போல் இருப்பாரெனச் சொல்லி விடுகிறேன். உங்களுக்கு சினிமா நடிகர் ராஜேசை தெரிந்திருக்கும். அவரை கொஞ்சம் சிவப்பாக்கி, தலையில் சுருள் முடி வைத்தால் ஒரு உருவம் கிடைக்குமே. மனத்திரையில் கற்பனை செய்து பாருங்கள்.. அவரைப் போன்றே இருப்பார் இக்கதை நாயகன் இராமசாமி வாத்தியார். தொடர்ந்த முப்பதாண்டு கால ஆசிரியர் வாழ்க்கை, அவர் நடையில், உடையில் , பேச்சில், சிரிப்பில், உடல் மொழியில் அழகாக வெளிப்படும்.
அவர் எடுக்கும் அறிவியல் பாடங்கள், அனைத்தும் “சினிமாக்கதை” கேட்பது போலவே இருக்கும். ஆனால் முடிவில் அறிவியல் கொள்கைகளின் “சாராம்சம்” அக்கு வேறாய், ஆணிவேராய் அனைத்து மாணவர்கள் மனதிலும் பதிந்திருக்கும். அப்படி ஒரு கற்பிக்கும் வல்லமையை இயல்பிலேயே பெற்றிருந்தார் இராமசாமி வாத்தியார். இதனால் ஏராளமான மாணவர்களின் ஆத்மார்த்த அன்பிற்கும் சொந்தகாரராயிருந்தார். “இறைவனுக்கு அடுத்தபடியாய் இராமசாமி சாருத்தான்” என்று சொன்ன எத்தனையோ மாணவர்களுடன், ஆசிரிய- மாணவர் நட்பை, ஏதும் பிழையின்றி தொடர்ந்து கொண்டும் இருக்கின்றார். ஆனால் யார் கண் பட்டதோ என்னவோ, இன்று மொத்தமும் இடிந்து “அவமானச் சின்னமாய்” உடைந்து கிடக்கின்றார். “சாணி” எறியப்பட்ட தலைவர்களின் சிலையைப்போல், அவர் முகமெங்கும் அவமானத்தின் “தீ”.
அன்று நடந்த எதிர்பாரத ஒரு நிகழ்ச்சி, அவரை அகலப் பாதாளத்தில், அவமானக் குழியில் தள்ளி விட்டது.
அணுக்களைப் பற்றிய அறிவியல் பாடத்திற்கான நேரம், பத்தாம் வகுப்பு “C” பிரிவு.
தனக்கே உரிய பாணியில், விவரிப்பை ஆரம்பித்தார் இராமசாமி வாத்தியார். மொத்த வகுப்பும் அமைதியாய் கவனிக்கத் தொடங்கியது.
“எப்போ... இந்த உலகத்துல என்னெல்லாமோ பொருள்கள் இருக்கு... அப்படித்தானே.... கல்லு, மண்ணு, மரங்கள், விலங்குகள், மனிதர்கள், என எத்தனையோ விதமான படைப்புகள் இருக்கு. இது அத்தனைக்கும் பொதுவான உட்பொருள்... என்னன்னா... அதுதான்.... அணுக்கள். அந்த அணுவானது ரெம்ப ரெம்பச் சின்னது...” -என்று சொல்லி முடித்த அந்த தருணம்.. மாணவர் கூட்டத்திலிருந்து ஒரு குரல்...
“இல்ல.. சார்... நம்ம “அனு” ரெம்ப ரெம்ப பெரிது .....
வகுப்பு மொத்தமும் “கொல்”-லென்று சிரித்து குலுங்கியது. இராமசாமி வாத்தியாருக்கு ஒன்றும் விளங்க வில்லை. ஆனால் மாணவர் கூட்டத்தில் குண்டாக, “பொத்,பொத்”-தென்று, சிரிக்காமல், தலையில் முஸ்லிம்களுக்குரிய ஹிஜாப் அணிந்து, குனிந்திருக்கும், “அனுபாத்திமா”-வைப் பார்த்தபோது, அவருக்கு எல்லாம் சிறிதாக விளங்கியது.
அனுபாத்திமாவின் விளிப்பெயர் “அனு’ தான். அவள் அவ்வூரின் லாயர் மற்றும் மனித உரிமைகள் மன்ற உறுப்பினர் அஹமது பாட்சாவின் செல்ல மகள். இளவயது ஊட்டமோ, அல்லது உடம்பு வாக்கோ என்னவோ, பதினான்கு வயதில், பதினெட்டு வயது வளர்ச்சியோடு இருந்தாள் அனுபாத்திமா. கூட படிக்கும் அனைத்து மாணவிகளைவிட அழகாகவும், கொஞ்சம் குண்டாகவும் இருப்பதால், எல்லா மாணவர்களுக்கும், அவள்மீது ஈர்ப்பு உண்டு. எல்லா மாணவிகளுக்கும் அவள் மீது பொறாமையும் உண்டு.
இராமசாமி வாத்தியார் அறிவியல் பாடம் நடத்த, தமிழின் சிலேடை மொழியறிந்த ஒரு மாணவன், அனுவின் குண்டான உடம்பை கேலிச் செய்யும் பொருட்டு, அதனை இப்படித் திரித்து விட்டான்.
“இல்ல.. சார்... நம்ம “அனு” ரெம்ப ரெம்ப பெரிதென்று .....
எல்லா மாணவர்களும், மாணவிகளும் குண்டாக இருக்கும் அனுபாத்திமாவைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தார்கள். சிரிப்பலை அடங்க சிறிது நேரம் ஆகியது. நிலைமையைக் கையாளத் திணறி, மாணவர் கூட்டத்தினை ஒருவாறு அடக்கி, மீண்டும் பாடத்திற்குள் கொண்டு வந்தார் இராமசாமி வாத்தியார்.
வகுப்பறையின் பாடங்களேதும் அனுபாத்திமாவின் மூளைக்கு உரைக்க வில்லை. ஏதோ ஒரு அவமானத்திலிருந்தாள். சின்ன வயதல்லவா? சிறு ஏளனமும், பெரு வலியாக, “நெஞ்சை” அழுத்தியிருக்கும். அனுபாத்திமாவின் ஒரு பக்க முகத்தில் கோபமும், மறுபக்க முகத்தில் அழுகையும் தெரிந்தது. அடக்கி கொண்டாள். வீட்டுக்கு ஒரே செல்ல பிள்ளையான அவளுக்கு, மொத்த மாணவர்களின் சிரிப்பு “ஒரு வித மனப்பிரயாசத்தை” உண்டாக்கியது. விடலை பருவமல்லவா. “மானுடப்பாலியல்” குறித்து சந்தேகங்கள் நிறைந்த வயது. “இச்சையூட்டும் விசயங்கள்” பற்றி தெளிவில்லாத மனது. மொத்த மாணவிகள் இருக்குமிடத்தில், தன்னை மட்டும், தன் உடம்பை மட்டும், தன் வனப்பை மட்டும் நோட்டமிடும் ஆண்களின்கண்களை நினைத்து பலநேரங்களில் வெட்கத்தையும், சிலநேரங்களில் அருவருப்பையும் உணர்ந்திருக்கிறாள். ரோஜாக்களை பறிக்காமல், செடியோடு பூந்தொட்டியில் வைத்து ரசிக்கும் மனங்கள் இருக்கின்றன. ரோஜாக்களை பறித்து, பிரித்து, நுகர்ந்து களிக்கும் மனங்களும் உள்ளன. யார் எப்படி என்று, யாருக்குத்தான் தெரியும்? தன்னை, தன் இளமை செழிப்பை, வெறித்துப்பார்க்கும் பார்க்கும் ஆண்களின் மனதை, புரிந்துகொள்ள முடியாத குழப்பத்திலிருந்தாள் அனுபாத்திமா. அதற்கிடையில் வகுப்பறையில் இந்த கிண்டல், பரிகாச பேச்சுக்கள் வேறு. நேரம் செல்ல செல்ல ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு, பாடத்தை கவனிக்கலானாள்.
இராமசாமி வாத்தியார் அணுக்களின் கட்டமைப்பை விளக்கி, அணு மாதிரிகளை விளக்கி, இறுதியில் அணுக்களின் பயன்பாடுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.
“......இப்படி அணுவின் மாதிரிகளை ஜான் டால்டன், சாமர்பீல்ட், நீல்ஸ் போர் போன்றவர்கள் வடிவமைத்தனர். சரி... இதனால் மக்களுக்கு என்ன பயன் சார்..... அப்படிக் நீ கேட்டன்னா.. ஆமா... அணுக்களினால்தான்... இப்போது நாம் ஏகப்பட்ட பயன்களை அனுபவித்து வருகிறோம். முக்கியமானது அணு மின்சாரம் கேள்வி பட்டிருப்பீங்க... அதாவது அணுவை உடைச்சி, அதிலிருந்து வரும் ஆற்றலை மின்சாரமா மாத்துறது... கூடங்குளம் அணு ஆராய்ச்சி மையத்துல.. இதத்தான் பண்றாங்க.... அடுத்த முக்கியமான பயன் என்னன்னா... “அணுகுண்டு” – என்று உரக்கச் சொன்ன அடுத்த நிமிடம், கொளுத்தி போட்ட பட்டாசாய் வெடித்துச் சிரித்தனர் மாணவர்கள் அனைவரும்.
மீண்டும் தமிழ் சிலேடை தன் வேலையைக் காட்டியது . “அணுகுண்டை” “அனு குண்டாய்” நினைத்து சிரித்து உருண்டனர்.
சில மாணவர்கள்
“அனு குண்டு”
“அனு குண்டு”
“அனு குண்டு”
“அனு குண்டு” – என கத்த ஆரம்பித்தனர்.
மாணவர்களின் அலம்பலை கட்டுபடுத்த முடியாமல் திணறினார் இராமசாமி வாத்தியார். வகுப்பறை முழுதும் சிரிப்பலைகள். மொத்த முகங்களும் அனுபாத்திமாவை நோக்கி, ஏளனப்பார்வை வீச, அவமானத்தில் கூனிக் குறுகி, ஆற்ற முடியாமல் தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தாள் அனுபாத்திமா.
மற்ற மாணவர்களை வெளியே அனுப்பி விட்டு, ஏதேதோ சமாதானம் செய்தும் அவள் அழுகையை நிறுத்த வில்லை. வீட்டுக்கு போக வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள். மற்ற பெண் ஆசிரியர்கள் சமாதானம் செய்தும் பலனில்லை. வீட்டுக்கு போகவேண்டுமென்று அழுது கொண்டேயிருந்தாள். தலையை சுற்றியிருந்த ஹிஜாப் துணி முழுவதும் கண்ணீரில் நனைந்தது. பெண்பிள்ளை. தனியாக வீட்டுக்கு அனுப்ப முடியாது. வேறு வழியில்லாமல் வீட்டுக்கு போன் போட்டு, விசயத்தை தெரிவித்தனர். அவள் அழுது அழுது, முகம் முழுதும் சிவந்திருந்தது. இராமசாமி வாத்தியார் மீண்டும் சமாதானம் சொன்னார்.
“எம்மோ.. அழாத.. உங்க வீட்டுக்கு போன் பண்ணியாச்சு... இப்ப உங்க அப்பாம்மா வந்திருவாங்க..”
அனுபாத்திமாவிற்கு ஆண்களின் மீதிருந்த மொத்த கோபமும், அழுகையாக வெளியேறியது. “அணுகுண்டு” பாடமெடுத்த இராமசாமி வாத்தியார் மீதும் சிறிது கோபம் படர்ந்தது. அவரோ அவளை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தார்.
“எம்மோ..... அழாத... சொன்ன கேளு... முதல்ல அந்த துணியை அவித்து, முகத்தை கழுவு. இப்ப உங்க வீட்ல இருந்து வந்திருவாங்க.. அழாதமோ” – என்றார்.
சில பெண் ஆசிரியர்களும் சமாதானம் செய்ய, ஒரு வழியாக சமாதானமடைந்து, தலைத் துணியை அவிழ்த்து முகம் கழுவினாள். தலைமுடிகள் குலைந்து, கண்கள் சிவந்து, கண் மைகள் கலைந்து, முகம் கழுவிய ஈரம் மாரெங்கும் தெரிய, அரசு மருத்துவமனை வெளிநோயாளியைப் போல், பள்ளிக்கூட வெளிப்புறப் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அனுபாத்திமா.
லாயர் அகமது பாட்சா பதறியடித்து பள்ளிக்கு வந்து மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்தார். ஆசிரியர்களையோ, அவரின் பேச்சுக்களையோ அவர் கருத்தில் கொள்ளவே இல்லை. மகளின் அருகில் சென்று கையை பிடித்து “என்னாச்சு... பிள்ளே” – என்றார். அனுபாத்திமா மீண்டும் அழ ஆரம்பித்தாள். பேச்சு வரவில்லை. பெற்ற மகள் இந்நிலையில் அழுதுக் கொண்டிருந்தாள் யாருக்குத்தான் கோபம் வாராது. பக்கத்தில் இராமசாமி வாத்தியார் இன்ன பிற ஆசிரியர்கள் சேர்ந்து நடந்ததை விளக்க முயற்சித்தனர். யார் பேசுவதையும் அவர் கேட்பதாக இல்லை. சினம் கொண்ட பாம்பென எல்லோரையும் திரும்பிப் பார்த்தார். தொழுது கருத்த நேற்றிமேற்றில் வியர்வையின் வீச்சங்கள். உடம்பெங்கும் கோபத்தின் அதிர்வுகள். முதல் கேள்வியே ரெம்ப விவகாரமாக இருந்தது.
“மோளுக்கு... தலையில இருந்த “ஹிஜாப்ப” களத்துனது யாரு.”
எச்சி தெறிக்க, விழுந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் எல்லோரும் நெளிந்தனர். அடுத்தடுத்து ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார் லாயர். மகளைப் போல் அப்பாவையும் சமாளிக்க அரும்பாடு பட்டனர் ஆசியர்கள் அனைவரும். அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. சிறிது நேரம் ஒரே வாக்குவாதமாக இருந்தது. கடைசியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரையும் “கோர்டுக்கு” இழுப்பதாக “சபதம்” செய்து, மகளோடு இடத்தைக் காலி செய்தார் லாயர் அகமது பாட்சா.
எல்லோரும் இராமசாமி வாத்தியாரை ஒருமாதிரிப் பார்த்தனர். இதுவரை எந்த காரணத்திற்காகவும், யாரிடமிருந்தும் எந்த வித ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டிராத இராமசாமி வாத்தியார், முதன் முதலாய் கோப மிகுதியில் தலைமை ஆசிரியரிடமிருந்து அந்த கேள்வியை எதிர்கொண்டார்.
“நீரு... எதுக்கு வேய்... அந்த துணிய..அவுக்க... சொன்னேரு”
வெடிகுண்டில் அடிபட்ட பட்டாம்பூச்சியாய் அதிர்ந்து போனார் இராமசாமி வாத்தியார். பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் அவமானத்தில் மூச்சும், பேச்சுமற்று கற்சிலையாய் நின்றிருந்தார் இராமசாமி வாத்தியார்.
தலைமை ஆசிரியர் கேட்ட அந்த கேள்விதான், வாய் விட்டு, வாய்... நகர்ந்து, பலர் நாவுகளில் உருண்டு, ஊர்மக்களால் “பல விதமாய்” திரிக்கப்பட்டு, கதையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த “மத்தவரு.... அந்த பிள்ளைக்கு மேல... கைய வச்சிட்டாரு” – என்று மாறியிருந்தது.
அவமானம் என்பதற்கு வரையரையென்ன? அது அனுபவிக்கும் மனிதரின் தன்மையைப் பொறுத்தது. அது அமையும் சூழ்நிலையை பொறுத்தது. சில மனிதர்களுக்கு பெருத்த அவமானமும் சிறு விஷயம்தான். ஆனால் சில மனிதர்களுக்கு சின்ன அவமான பேச்சுக் கூட, பெருந்துயராய் நெஞ்சம் தாக்கும். இராமசாமி வாத்தியார் அந்த சில மனிதர்களில் முக்கியமானவர். பெருமதிப்பின் உச்சத்திலிருந்த அவருக்கு, இந்த அவமானப்புள்ளி, “கோபுரக்கலசம்” காற்றடித்து, சாக்கடையில் விழுந்த துயரத்தைக் கொடுத்தது. “ஊராரின் இழிபேச்சுக்கள்” அவர் உடம்பு, மனது, என மொத்தத்தையும் ஆட்டிப் படைத்தது. வணக்கம், வணக்கமென வாய்விட்டு சொன்ன நாவுகள், தயக்கமின்றி தன்னைத் தாக்கி பேசுவது, அவருக்கு ஆற்றொணாத் துயரத்தைத் தந்தது. போகட்டும்..... எல்லாம் போகட்டும்...... காலம் போகிற போக்கில், எல்லா மனிதர்களின் துயரங்களுக்கும், “ஒரு தீர்வை” தந்துவிட்டுத்தான் செல்கிறது. அதுவே “காலத்தின்” சக்தி. எனவே காத்திருப்போம். காத்திருப்போம். காலத்தின் கையில் “துயரங்களைக்” கொடுத்துக் காத்திருப்போம்.
நாலைந்து நாட்கள் விடுப்பு எடுத்து விட்டு, வீட்டிலேயே படுத்துக் கிடந்தார் இராமசாமி வாத்தியார். இறந்து போன மனைவி மங்களத்தின் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தார். துக்கம், துயரம் கூடும்போது, துணையை தேடுவது இயல்புதானே. அவள் இருந்திருந்தால் , இப்போது கொஞ்சம் ஆதரவாக இருந்திருக்குமென தோன்றியது. தூக்கமில்லா கண்கள், சவரம் செய்யா முகமென வாடி வதங்கிப் போயிருந்தார். ஒரு மாதிரியான அரை தூக்க மனநிலை.
“இப்ப என்ன நடந்திட்டுன்னு இப்படி இருக்கியோ” - மங்களத்தின் குரல்.
“இல்ல... என்னையையும், அந்த சின்ன பிள்ளையையும் பத்தி இப்படி பேசுகானுகளே.... ஒரு வருத்தம்” – இது இராமசாமி வாத்தியாரின் மனக்குரல்.
“அம்மையையும், மகனையும், - அப்பாவையும், மகளையும் தப்பா பேசுற உலகம் இது.. இருவது வயசு மகளை, பெத்த அப்பன் ரோட்டுல வச்சு பாசத்தோட கட்டிப் பிடிக்க முடியுமான்னு.. சொல்லுங்கோ... அத பார்த்துதான் இந்த உலகம் சும்மா இருக்குமா?”
“இல்ல... மதிப்பு... மரியாதை.. எல்லாம் போச்சேன்னு ஒரு கவலை”
“மண்ணாங்கட்டி......இவனுகளுக்கு மதிப்பையும், மரியாதையும், சட்டை பாக்கெட்டுல ரூவாயா.. வைக்க முடியுமா? அல்லது சட்டில வறுத்து திங்கதான் முடியுமா? குப்பைல போடுங்கோ.... எல்லாத்தையும்”
“இல்லமா.... நான் என்ன சொல்லுறேன்னா”
“நீங்க ஒண்ணும் சொல்லாண்டம்.... மொதல்ல ஸ்கூலுக்கு கிளம்புங்கோ? எனக்கு நீங்க எப்பவுமே, கையில “சாக்பீஸ்” கரையோட, வெள்ளையும், சொள்ளையுமா லாந்துனாதான்” பிடிக்கும்.
சட்டென்று தூக்க நிலை கலைந்து சுயநினைவிற்கு வந்தார் இராமசாமி வாத்தியார். திரும்பி மணியை பார்த்தார். பத்தாக பத்து நிமிடமிருந்தது. வேகமாக வெள்ளைச் சட்டையணிந்து, பள்ளிக்கூடம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். மங்களத்தின் போட்டோவில் கிடந்த சந்தன மாலை “காற்றில் அசைந்து” வழியனுப்பி வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks