வியாழன், 5 செப்டம்பர், 2019

மாங்காமடையன்

மகள், மருமகன், உற்றார் உறவினர் என யார் பேச்சையும் கேட்காமல் கிளம்பிக் கொண்டிருந்தாள் மணிமேகலைக்கிழவி. பலவருடமாய் உபயோகத்திலிருக்கும் தோசைக்கல்லின் நிறமுடைய, ஈட்டிப் பலகையில் செய்த அலமாரியைத் திறந்தாள். கரப்பான் பூச்சி வராமலிருக்க போடப்பட்ட, “பாச்சா” உருண்டைகளின் வீரிய மணம் உள்நாசியில் சுள்ளென்று ஏறியது. அதர பழைய மூக்குக் கண்ணாடியை, கைகளால் சரிசெய்து கொண்டே அலமாரியில் சேலையைத் தேடினாள். இருப்பதில் சிறந்ததாய் கண்டெடுத்த சந்தன நிறத்தில் அரக்கு நிற பார்டர் வைத்த காட்டன் சேலையுடுத்தி, முடிகுறைந்த பின் மண்டையில் “திருப்பனைச்” செருகி, கொண்டை போடுமளவிற்கு உருட்டித் திரட்டினாள். ஆறு வருடத்திற்கு முன்பு இறந்துபோன கணவன் வேலுப்பிள்ளையின் புகைப்படத்திற்கு முன்பு நின்று ஏதோ வேண்டினாள். அரங்கில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கையும், சாமிப் படங்களையும் கும்பிட்டுக் கொண்டு, நெற்றியில் திருநீற்றுக் குறிட்டாள். பலவருட உபயோகிப்பில் கால் தடம் பதிந்த செருப்பைத் தேடி எடுத்து, தூசு தட்டும் போதுதான் மகள் கவிதா கோபம் தெறிக்க அவள் முன் வந்து நின்றாள்.
“எம்மா.. உனக்கு கொஞ்சமாவது உழுக்கிருக்கா?”
மணிமேகலை எதுவும் பேச வில்லை. தோல் சுருங்கிய கிழட்டுப் பாதங்களை செருப்புக்குள் நுழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“எம்மா... நான் உன்ட தான் கேக்கேன்... நாங்க இவ்வளவு பேரு சொல்லுகோம்... உனக்கு உன் மகன்தான் பெருசா...”
மணிமேகலை அண்ணாந்து ஒரு ஏக்க பார்வை வீசினாள். கவிதா கொதிக்கும் உலைபானையாய் கோபத்தைக் கொட்டினாள்.
“நீ அந்த மகனுக்கு அம்மைல்லா....... நாங்க சொன்னா கேக்கவா போற... என்னெல்லாம் சொன்ன..... அவன் என்னை பாக்க மாட்டங்குகான்... போன் பேச மாட்டங்குகான்... என்னா..ஏதுன்னு.. ஒரு வார்த்தை கேக்க மாட்டங்குகான்.... இந்த வீட்டுநடையை சமுட்டி மூணு வருஷம் ஆகுது... பொண்டாட்டி தாசனா இருக்கான்... நான் செத்தாலும் அவன் இந்த நடைக்கு வரப்பிடாது.... என்னெல்லாம் சொன்ன... இப்பம் எல்லாம் மறந்திட்டு... அந்த “மாங்காமடையன்” போன் பண்ணிக் கூப்பிட்டானாம்.. இவ அலங்காரம் பண்ணிட்டு போறாளாம்...
மகனின் “மாங்கா மடையன்” என்ற சிறு வயது கிண்டல் பெயரைக் கேட்டதும், சிறிதாக கோபமுற்றாள் மணிமேகலை.
“அவனை மாங்கா மடைன்யன்னு சொல்லாததேன்னு பலதடவை சொல்லியிருக்கேன். நீ அவனுக்கு தங்கச்சிதாங்கறத.. மறந்துறாதா”
“மாங்கா மடையன்னு நான் வச்ச பேரா... சின்ன பிள்ளைலேயே ஊரு வச்ச பேரு...”
“ஊரு சொல்லட்டும் மக்கா... அண்ணன நீ அப்படி சொல்லலாமா?”
“சரிம்மா... சொல்லலை.... நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு... அவன் கல்யாணத்துக்கு அப்புறம்... எனக்கு அண்ணன்னா இருந்திருக்கானா? அத மட்டும், உன் நெஞ்சுல கையை வச்சு சொல்லு...”
வழக்கறிஞர் இல்லாத “கிராமத்தான்” நீதிமன்றத்தில் வாயடைத்து நிற்பதைப் போல் நின்று கொண்டிருந்தாள் மணிமேகலைக்கிழவி.
கவிதா சின்ன வயதிலிருந்தே அப்படித்தான். கோபக்காரி. வாயாடி. இக்கரையில் விதைத்தால், அக்கரையில் முளைக்கும் புத்தி சாதுர்யம். அம்மான்னா உயிர். பஞ்சாயத்துத் தலைவராய் இருந்து, ஊரை பயமுறுத்திய வேலுப்பிள்ளைக்கு கூட, மகள் கவிதான்னா ஒரு பயம். அப்பாச் செல்லமும் கூட. பாயிண்டு பாயிண்டாய் அவள் கேட்கும் கேள்விகளுக்கு, அண்ணன் மகேஷ் உட்பட, குடும்பத்தில் யாரிடத்திலும் பதில் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு மரண அவஸ்தையிலிருந்தாள் மணிமேகலைக் கிழவி.
“மக்கா... இப்படி தாறுமாறா பேசாதா.. அவன் நல்லவன்தான்.. வந்தவ சரியில்லை.. அதுக்கு அவன் என்ன செய்வான்.. என்ன இருந்தாலும் அவன் எனக்கு மகன்லா... அண்ணன் என்ன செய்வான்..?.”
“அண்ணணா... யாரது... அப்படி ஒருத்தன் முன்னால இருந்தான்... எப்ப கல்யாணம் கழிஞ்சு... வீட்டோட மாப்பிளையா.. போனானோ.. அப்பவே அவன் அண்ணன் செத்து போயிட்டான்..”
மணிமேகலைக் கிழவிக்கு சுருக்கென்றிருக்க... சற்று குரலை உயர்த்தி பேசினாள் மகளிடம்.
“எட்டி... இப்படி தானமானமா.. பேசாத... நான் மண்டையை போட்டா... எனக்கப்புறம் உனக்கு இருக்குற ஒரே சொந்தம் அவன்தான்..”
“பெரிய சொந்தம்.... நீதான் மெச்சிக்கணும்.... அப்பா செத்த வீட்டோட நாலு நாளையில போனவன். அப்புறம் நாப்பத்தொன்னுக்கு, காலைல வந்திட்டு மத்தியானம் போனவன்தான்.. அப்புறம் ஒரு தடவை வந்திருப்பானா... என்ன விடும்மா... உள்ளுருல கட்டிக் கொடுத்தாலும்.. என் மாப்பிளை, என்னை “ராஜாத்தி” மாறிதான் வச்சிருக்கேரு... உன்ன பாக்க வந்திருப்பானா.... நீ உயிரோடு இருக்கும் போதே வரல... நீ போன பொறவா வந்து கிழிக்கப் போறான்...”
ஆசிரியர் கேள்விக்கு பதில் தெரியாத பள்ளிச் சிறுமியாய் திணறினாள் மணிமேகலைக் கிழவி...
“மக்கா... ஆயிரம்தான் இருந்தாலும் அவன் என் மகன் பார்த்துக்கோ.. அவன் கூப்பிட்டிருக்கான்... நான் போகத்தான் செய்வேன்..”
“போ... நல்ல போ... வேணும்னா.. இடுப்புல தூக்கி வச்சி கொஞ்ச வேணும்னாலும் செய்யி...... ஆனா... அவன் எதுக்கு உன்ன கூப்பிடுகான்னு எனக்குத் தெரியும்... உன்னைய அவன் பைத்தியக்காரின்னு நினைச்சிருக்கான்.. எப்பவும் போல போய் ஏமாந்துட்டு வா... எத்ர தடவை பட்டாலும்... உனக்கு புத்தி வராது”
கவிதாவின் சூட்சமப் பேச்சால், நெற்றியைச் சுருக்கினாள் மணிமேகலை. பின் சந்தேக முகத்தோடு கவிதாவிடம் கேட்டாள்.
“அவன் என்னத்த ஏமாத்த போறான்? சொல்லு...”
“அதை நான் ஏன் வாயால சொல்ல மாட்டேன்... அங்க போ... உனக்கே தெரியும்...”
“என்னதுடி... விசயத்தை சொல்லு..... மனசில உள்ளத சொல்லு...” மணிமேகலை வற்புறுத்தினாள்.
முகமெங்கும் ஒரு ஏளனப் புன்னகையோடு கவிதா தொடர்ந்தாள்.
“நம்ம ரோட்டுக் கடை லீசு.. அஞ்சுவருசம் கழிச்சு, இந்த வருஷம் முடியில்லா... அதை எழுதிக் கேக்கதான் கூப்டுகான்”
“லீசு இந்த வருஷம் முடியுதா...என்று சிறிதான ஆச்சர்யத்தோடு கேட்டுவிட்டு மணிமேகலை தொடர்ந்தாள்.
“சரி.. அப்படியே இருக்கட்டும்... இது ஏற்கனவே முடிவு செய்தது தாலா... வீடு உனக்கும்... கடை உங்க அண்ணனுக்கும்னு... அவன் கேட்டா எழுதி கொடுத்திட்டு போறேன்...”
“அம்மா... தாயே... அவனுக்கு கடைய எழுதி கொடு.. வேணும்னா இந்த வீட்டையும் எழுதி கொடு.. எனக்கு ஒரு சல்லிக்காசு வேண்டாம்... ஆனா.. ஏமாளியா மட்டும் இருக்காதா... முந்தியே அப்படிதான்.... ஸ்கூலுக்கு பீஸ் கட்டுதுல, தொடங்கி காதலிச்சு கல்யாணம் பண்ணினது வரை உன்னை எப்டிலாம் ஏமாத்தியிருக்கான்... அப்பாட்டையும், யான்டையும் அவன் வேலைய காட்டவே மாட்டான்.. நீன்னா மட்டும், அதையும் இதையும் சொல்லி, உன்ன எப்படியோ ஏமாத்திருவான்.... நீயும் தெரிஞ்சே ஏமாருவ... அதுதான் ஏன்னு எனக்குப் புரியல..”
புறப்படும் தொனியோடு மணிமேகலை பதில் சொன்னாள்.
“அது... நீ...... “மகன்”-ன்னு ஒண்ணு பெத்து வச்சிருக்கேல்லா.... அவன் வளரும் போது உனக்கு புரியும் -என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறி, மகன் வீட்டுக்குச் செல்லும் பஸ்சிலேறி அமர்ந்தாள் மணிமேகலைக்கிழவி.
அந்த நகரத்தின் பிரதான பகுதியிலிருந்தது மகேசின் மனைவியின் வீடு. அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் திளைத்து மகிழ்ந்தான் மகேஷ். இடைவிடாத வேலையின் பொருட்டே அம்மாவைக் காண அங்கு வர இயலவில்லையென்றும், அம்மாவை நினைக்காத நாளில்லையெனவும் “ஆசாபாசம்” காட்டினான் மகன். மருமகள் வசந்தாவும் அத்தை அத்தையென சிரித்துப் பேசிக் கொண்டாள். சம்மந்திவீட்டாரும் தங்கள் பங்கிற்கான விருந்தோம்பலை வாரியிறைத்தனர்.
ஏழு வயது பேத்தி ஆச்சியோடு ஒட்டிக் கொண்டாள். ஆச்சி என்றழைக்காமல் “கிரான்மா” என்று பேத்தி அழைப்பது மணிமேகலைக்கு பூரிப்பைக் கொடுத்தது. பேத்தி படிக்கும் “ரைம்ஸ் பாடல்கள்” பாட்டிக்கு என்னவென்று புரியாமல், ஏதேதோ நினைத்துச் சிரித்தாள். முச்சந்தி மண்ணெடுத்து உப்பும், மிளகாய் வத்தலும் சேர்த்து, பேத்திக்கு “சுற்றிப்” போட்டாள். பாசப் பிணைப்பில் வீடே அதோகளப் பட்டது. அனைவரின் அன்பு மழையில் நனைந்து, பாசக்கடலில் மூழ்கித் திளைத்தாள் மணிமேகலை.
இரண்டொரு நாட்கள் வேகமாக நகர, நிறைவான மனதோடு மகனையும், குடும்பத்தினரையும் கண்டு, களித்து, உண்டு உறங்கினாள் மணிமேகலைகிழவி. நெடுநாட்களாய் மனதிற்குள் உருத்திக் கொண்டிருந்த “நெருஞ்சிமுள்” வெளியே வந்தது போலிருந்தது. ஆண்டாண்டாய் மாற்றாமல் கிடந்த மூக்கு கண்ணாடியையும், செருப்பையும் மாற்றிக் கொடுத்தான் மகன். மனநிறைவின் பேரானந்தத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டாள் மணிமேகலை.
மகன் “ரோட்டு கடையை” எழுதிக் கேட்கும் முடிவுடன் இருக்கிறானா? – என்று பார்த்தாள். அவன் அது பற்றி எதுவும் கேட்க வில்லை. கொஞ்சம் பெருமிதம் அடைந்தாள். இருந்தாலும் “மக்கா.. நான் போயிட்டு வாரேன்னு” சொல்லி விடைபெறும் போது, “அம்மா அந்த சொத்த எழுதி தான்னு” கேட்டுவிடுவானோ என்ற பயம் அவளுக்குள் இருந்தது. அனுபவித்துக் கொண்டிருக்கும் மகன் பாசம், வெறும் “மாயை” ஆகி விடுமோ- என்ற பயம் அவள் நெஞ்சுக் குழியை அடைத்தது. அவன் மனதில் “அந்த சொத்தை” பற்றிய தவிப்பிருந்து, அவனாக கேட்கும் முன், நாமாக கேட்டு விடுவோம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மணிமேகலை.
அடுத்த நாளின் ஒரு வசதியான நேரத்தில், அவளாகவே மகனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
“மக்கா.. எனக்கும் வயசாயிட்டு... கடை லீசு இந்த வருஷம் முடியுது பார்த்துக்கோ.. உனக்கு வசதி பட்ட நேரத்துல அங்க வந்தென்னா... உன் பேருல மாத்தி எழுதிரலாம்... பார்த்துக்கோ....”
மகேசின் முகமெங்கும் மந்தகாசப் புன்னகை. பற்றிப் படர்ந்தெரியும் “சொக்கப்பனையின்” பிரகாசம்.
“நானே.. உண்ட எப்படி கேக்கலாம் இருந்தேன் மா... நாளைக்கு நான் வாரேன்... நாளைக்கே முடிச்சிருவோம்...” – என்று மகேஷ் பட்டென்று சொல்ல, சில நாட்கள் வெளியே வந்திருந்த “கூரிய நெருஞ்சி முள்” மீண்டும் மணிமேகலையின் இதயத்தில் குடியேறிக் கொண்டது.
இரவெங்கும் தூங்கிய கண்களோடும், தூங்காத மனமோடும் எழுந்திருந்தாள் மணிமேகலை. மகனும், மருமகளும் உற்சாகமாக “பத்திரப்பதிவு” அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். பேத்தியும் பிரமாதமாக கண்ணாடி முன் நின்று அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தாள். அம்மாவிற்கு மகன் ஒரு “புதுச்சேலை” எடுத்துக் கொடுத்திருக்க, அதையணிந்து மணிமேகலையும் கிளம்யிருந்தாள். வெளியே வந்த பேத்தி, ஆச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
“கிரான்மா.. அம்மாவோட சாரி... உங்களுக்கு சூப்பரா இருக்கு... அம்மாவுக்குதான் இந்த கலர் பிடிக்கவே இல்லைன்னு”- சட்டென்று கூற,
மணிமேகலையின் இதயத்தில் குடியேறிய நெருஞ்சி முள், கடப்பாறையாய் மாறி இதயத்தை துளைத்தது.
“எந்நேரத்திலும் நாம் அழுதுவிட வாய்ப்புண்டு” – என்ற அளவிற்கு சோகம் மணிமேகலையின் நெஞ்சத்தை உலுக்கியது. எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், மனமெங்கும் சோகம் நிரம்ப, எல்லோருடன் சாலையில் நடந்தாள் மணிமேகலை. புதிய செருப்பு காலை கடிப்பது போன்றிருந்தது. மூக்கு கண்ணாடி மூளையை அழுத்துவது போலிருந்தது. உள்ளே அழுது கொண்டிருந்தாள். வெளியே கண்ணீர் இல்லை.
சார் பதிவாளர் அலுவலகத்தில் எல்லோரும் பரபரப்புடன் இருந்தனர். மகேசுக்கும் சிறு பதட்டம் இருந்தது. அம்மாவின் பாசப்பிணைப்பை “பணையம்” வைத்து, நடக்கும் இந்த “அவசர பத்திர பதிவு”, தன் தங்கை உட்பட அனைத்து குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்காது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கையெழுத்திடும் போதெல்லாம் திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டான். எந்த வித பதட்டமுமின்றி மணிமேகலை கையெழுத்திட்டாள்.
எல்லாம் ஐந்தாறு நிமிடங்களில் நடந்தது. மகேஷ் அம்மா வீட்டுக்கு செல்ல ஆட்டோ ஏற்பாடு செய்திருந்தான். இச்சூழ்நிலையில் தான் வீட்டுக்கு வந்தால் தங்கைக்கும், தனக்கும் "வாக்குவாதம்" வருமென்றான். மணிமேகலையும் வற்புறுத்த வில்லை. பேத்திக்கு முத்தமிட்டு, டாட்டா காட்டி, ஏதோ ஒரு தெளிவான மனதுடன் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை.
அம்மாவை வழியனுப்பி வைத்துக்கொண்டு, பதிவு முடிந்த பத்திர நகலை எதேச்சையாய் சரி பார்க்கும் போதுதான் அம்மா கையெழுத்திட்ட “அந்த வார்த்தையை” கவனித்தனர் மகேசும், மருமகளும்.
அது மணிமேகலை என்பதற்குப் பதிலாக “மாங்காமடையன்” என்றிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks