அவள் குளிக்கச் செல்லும் போதும், குனித்து
நிமிர்ந்து பெருக்கும் போதும் என் மனமெங்கும் குப்பை. எதேச்சையாக
கண்களில் அவள் தட்டுப்படும்போது மட்டும், பார்த்து ரசித்த நான், இப்போது
அவள் வருகைக்காகக் காத்திருக்கவும் தொடங்கினேன். என் வீட்டு மாடியின்
பின்புறத்தில் அவள் வீடும் இருந்தது எனக்கு மிகவும் வசதி. மகிழ்ச்சியும்
கூட.
பார்த்தவுடன் பரவசப்படுத்தும் பேரழகியாய்
இல்லா விட்டாலும், எங்கள் ஊரில் பலபேர் அவளைப் பார்ப்பதையே
வழக்கமாகக் கொண்டிருந்தனர். காமத்தைத் தவிர்த்து அவளைப் பார்கையில் அவள்
நிலை சற்று பரிதாபத்திற்கு உரியதுதான். ஏதோ ஒரு பண்ணையாரின் கள்ள
உறவிற்கு பிறந்தவளாம். அவள் அம்மா உயர் குடியில் பிறந்தவராம். ஆனால்
ஒரு பண்ணையாரின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி சின்ன வீடாகி சிரழிந்தவராம். அம்மா
சிரழிந்ததற்கு அடையாளமாய் ஒரு மகள். தன் வாழ்க்கை தன் மகளுக்கு
வரக் கூடாதென்று, ஒரு
வரன் பார்த்து மகளுக்கு மணம் முடித்து வைத்துள்ளாள்.
நல்ல உறவில் பிறந்தப் பெண்ணிற்கே நல்ல மாப்பிளை
கிடைப்பது கஷ்டம். இப்படி கள்ள உறவில் பிறந்தப் பெண்ணுக்கா
மாப்பிளை கிட்டும். இருந்தும் படாத பாடுபட்டு
ஒரு மாப்பிளையைக் கண்டு பிடித்துவிட்டாள். எங்கள் ஊர்தான். கொஞ்சம்
வயசாளி. எங்கள்
ஊர் பள்ளியின் கணக்கர் ராஜரெத்தினம். கால் கொஞ்சம் ஊனம். கொஞ்சம்
ஆஸ்த்மா நோயாளி வேறு. அந்தப் பெண்ணுக்கு அந்த கல்யாணத்தில் மன
மகிழ்ச்சியே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாற்பத்தெட்டு வயது புது மாப்பிளையை
யாருக்குத்தான் பிடிக்கும். முகத்தில் சலனம் ஏதும் இல்லாமல், அழகாக
அலங்காரம் செய்து, அசையாமல் நிற்கும் ஜவுளி கடை பொம்மை போல
மணவறையில் இருந்தாள் அந்தப்பெண். ரெம்ப குஷியோடு
ராஜரெத்தினம் தாலி கட்டினார். கிழவனின் முகம் அலங்கார
பூச்சுகளால் பளபளத்தாலும், சுருக்கு விழுந்த தோல், கை
நடுக்கம் ஆகியவை உண்மை வயதைக் காட்டிக் கொடுக்கவே செய்தது. தேய்த்து
கழுவிவைத்த செப்புப்பாத்திரமாய் இருந்தாலும், பழைய பாத்திரத்தில்
புதுப்பொலிவு கிட்டுமோ? தேய்ந்து மழுங்கிய கலப்பை, நிலத்தை
ஆழ்ந்து அரவணைத்து கீறுமோ? எதைப்பற்றியும் யோசிக்காமல், அந்த
இளந்தளிரை முதிர்க்கொடியோடு இணைத்துக் கட்டியது உலகு.
நேரடி சொந்தக் காரனில் தொடங்கி, திருமணத்திற்கு
வாழைக் கட்ட வந்தவர்கள் வரை, சாப்பாட்டுப் பந்தியில் உப்பு வைத்தவனில்
தொடங்கி, சாமியானா
பந்தல் போட குழி தோண்டியவன் வரை, ராஜரெத்தினத்தை நினைத்து ஏக்கப் பெரு மூச்சு
விட்டார்கள். இவர்களின்
கல்யாணமான அன்று முதல், எங்கள் ஊரின் காம கண்கள், அந்த
கிழத்தை நினைத்தே பொறாமை கொண்டன.
“காத்திருந்து காத்திருந்து... கிழவன்
நல்ல ஆளாத்தான்யா புடிச்சிருக்கான்... குட்டி
சிக்குனுல்லா இருக்கா..."
"கால் கொஞ்சம் சரியில்லைன்னு இந்த ஊர்காரனுவே
அவன படுத்தின பாடு... இப்ப பாரு... நொண்டி
பயலுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சி... அம்சமான
கிளியும் கிடைச்சிருக்கு...”
"கிழட்டு கிளிக்குத்தான், பட்டு
குஞ்சலம் வாய்க்கும்னு சும்மாவா சொன்னாங்க, கிழவன் யோகக்காரன்தான்."
- என்பது போன்ற உரையாடல்கள்.

எனக்கு பக்கத்துக்கு வீடு என்பதால்
என்னிடமும் பலபேர் விசாரித்தார்கள். என்னிடம் ரெம்ப
குறைச்சலாகப் பேசக் கூடிய பல பேர்கள் கூட இதன் பொருட்டு, என்னிடம் "பெரிதாக" விசாரித்தார்கள்...
“மக்கா... உன்
வீட்டு பின்னாடி தானடே... நீ பார்த்து... பேச்சு
குடுத்து வைடே... வசதிக்கு
இல்லாடாலும்.. அசதிக்காவது
ஒதுங்கிக்கிலாம்...” என்று நமட்டுச் சிரிப்புடன்
ராமு அண்ணன்தான் முதல்ல ஆரம்பித்தான்.
அப்புறம் பார்த்தால்....
“ராத்திரி எதாவது சத்தம் கேக்குமா டே... உன்
வீட்டுக்கு கிட்ட தானடே... ஆள் எப்டின்னு நோட்டம் பாருடே....” என்றான்
கொரட்டி கோவிந்தன்.
“பகல் புல்லா மத்தவன்... அதான்
அந்த ரத்தின கெழவன் ஸ்கூல்ல கணக்கு பாக்கான்... ராத்திரி
கணக்க புல்லா மாப்பிளைதான் பாக்குறான்” என்று என்னை கேலி செய்தான்
எடுபிடி மாமன்.
“உன்ட நல்ல பேசுவாளாம்லா.... இளம்
ப்ராயம்லா... வந்த
ரெண்டு மூணு நாள்லேயே பார்ட்டியை அமுக்கிட்டேயடே... என்னை
பத்தி கொஞ்சம் சொல்லு பா...” என்றான் முட்டைகோஸ்
ராமசந்திரன்.
இப்படி எல்லோரும் கேட்க கேட்க எனக்கும் ஒரு
இனம் புரியாத ஆசை. அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனிக்கத்
தொடங்கி, இப்போது
அவள் வரும்வரை காத்திருக்கவும் ஆரம்பித்தேன். என் வீட்டில் இருந்து
பார்த்தால் அவள் வீட்டுப் பின்புறம் தெரியும். நான்
இருப்பது அவளுக்குத் தெரியாதவாறு ஜன்னல் அமைப்பு இருந்ததால் எனக்கு வசதியாய்
இருந்தது. எல்லோரும்
சொல்லச் சொல்ல என் பார்வையின் வீரியமும் அதிகரித்தது. கண்கொத்திப்
பாம்பாக அவள் அவயத்தின் நீள அகலங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன்.
காமம் இனிது. கண்முன்
இருந்தும் அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும் "காலம்" கொடிது. அவள்
ஒரு பெண்னென்றோ, அவளும்
ஒரு உயிரென்றோ என்பதுமாதிரியான எந்த எண்ணமும் இல்லாமல் காமம் என்னை
ஆட்டிப்படைத்தது. ஆனால் அந்த வீட்டில்
அடிக்கடிக் கேட்கும் அந்த கிழவரின் இருமல் ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. இது
தவிர சராசரி வீடுகளில் கேட்கும் தண்ணீர் சிந்தும் ஒலி... பாத்திரங்கள்
நகரும் ஒலி... துணி
துவைக்கும் ஒலி... கதவு
திறக்கும் ஒலி... வேறேதும்
இல்லை.
அன்று ஒரு நாள்அந்த பெண்ணின் “சிரிப்பொலி”. பொல
பொல பொல பொல பொலவென அழகான சிரிப்பு. மழை குறைவான சமயங்களில்
அருவிகளிலிருந்து தண்ணீர் விழும் போது வரும் சப்தம் போல். கருங்கல்
படிக்கட்டில் சில்லறைகளைச் சிதறவிடுவது போல். சிறுகுழந்தையின்
அரையில் கட்டிய மணியெழுப்பும் ஒலியைப்போல். அம்மாதிரி... பொல
பொல பொல பொலவென அழகாகச் சிரித்தாள்.
முதன் முதலாய் காமம் விடுத்து அவள் சிரிப்பை
ரசித்தேன். ஏதோ
ஓன்று என்னை அவள் பக்கம் ஈர்த்ததால் ஜன்னல் வழி பார்க்கத் தொடங்கினேன். கிழவன்
பள்ளிக்கூடம் போனதால் அவள் ஒரு பூனைக் குட்டியிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். பூனைக்குட்டியைத்
தூக்கி பிடித்து, அதனை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அது
மெதுவாய்... அவள்
முகத்தை, கன்னத்தை
நக்கியது. அந்த
மெல்லுணர்வில் கண்கள் சுருக்கி, பூனைமுடிகள் மேலெழும்பி, முகமெங்கும்
புல்லரிப்போடு சிரித்துக்கொண்டிருந்தாள். பூனை
அவள் கைகளில் நெளிந்து, குழைந்து கொண்டிருந்தது. அதன்
பின்னங்கால்கள் இரண்டும் அவள் கனமான மார்புகளில் பதிந்திருந்தது. இம்ம்...ம்..ம்.... யோகம்
செய்த பூனை. என்
ஏக்கப் பெருமூச்சின் தாக்கம் சூரியனை ஒத்திருந்தது.
அதன் பின்பு பலமுறை அவள் சிரிப்பொலி கேட்கும். சிரிப்பொலி
கேட்கும் போதெல்லாம் அவள் ஏதேனும் ஒரு விலங்கோடு விளையாடிக் கொண்டிருப்பாள். பூனைக்குட்டி, அணில், கோழிக்குஞ்சு, காகங்கள், கிளிகளென
ஏதேனும் ஒன்றுடன் கொஞ்சிக் கொண்டிருப்பாள். அல்லது
அவற்றிக்கு “சோறு” வைத்துக்
கொண்டிருப்பாள். சில
சமயம் நானும் ஒரு விலங்காக பிறந்திருக்க மாட்டேனா...? என்று
ஏங்கியதுண்டு. அவள்
வீட்டு பின் முற்றத்தில் இருந்துதான் அவள் சாப்பிடுவாள். நானறிந்த
வகையில், அவள்
தனியாகச் சாப்பிட்டதில்லை.
பூனையுடன் சேர்ந்து சாப்பிடுவாள்.
கோழிகளோடு சேர்ந்து சாப்பிடுவாள்.
அணிலுடன் சேர்த்து சாப்பிடுவாள்.
அவள் கையில் அமர்ந்து காகம் சாப்பிடுவதைக்
கூடப் பார்த்திருக்கிறேன். அந்த பூனை, கோழி, காகம், சாப்பிடுவதை
விட இவள் குறைவாகத்தான் சாப்பிடுவாள்.
அந்த வீட்டில் சிரிப்பொலியும், விலங்குகளும்
இல்லையெனில் அந்த கிழவர் இருக்கிறார் என்று அர்த்தம். நாளாக
நாளாக ராஜரெத்தினத்தின் “ஆஸ்த்மா” நோய் கொஞ்சம் கொஞ்சமாய்
அதிகரித்தது. இருமல்
சப்தம் இப்போது அடிக்கடி கேக்கிறது. மூச்சு முட்டி ஒன்றிரண்டு
வார்த்தை பேசுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அடிக்கடி
அவர் இருமுவதும், அவள் அவர் நெஞ்சை தடவிவிட்டு, மாத்திரை
கொடுப்பதும் நடக்கும். ஒன்றிரண்டு வருடங்களாக கிழவரோடு அந்த
பெண்ணும் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள். இருந்தும் “ஆஸ்த்மா” கொஞ்சம்
கொஞ்சமாக அவர் ஆயுளைக் குடித்துக் கொண்டிருந்தது.
யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் மேலும்
கீழுமாய் வேகமாய் மூச்சிழுக்க முயன்று, முடியாமல் "சிவபதம்" பற்றினார்
கிழவர். ஊர்க் கூடி கிழவனை வழியனுப்பி வைத்தது. நெறைய புது மனிதர்கள் சாவு வீட்டில் தென்
பட்டார்கள். அவள்
பெரிதாக அழவில்லை. சோகத்துடனான கேள்விகளின் அறிகுறிகள் அவள்
முகமெங்கும். ஐந்தாறு
நாட்களில் ஏனைய உறவினர்களும் செல்ல, எவர் அழைத்தும் போகாமல்
வீட்டில் தனியாகவே இருந்தாள் அவள்.
ராஜரெத்தினம் பணியில் இருக்கும் போதே
இறந்ததால், வேலை
அவளுக்கு கிடைக்குமென்று பேசிக் கொண்டார்கள். கிடைத்துக் கொண்டிருக்கும்
ஓய்வூதியத்தை கொண்டு அவள் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தாள். கிழவன்
இறந்த நாளிலிருந்து அவள் மீது ஊரார் கண்கள் இன்னும் அதிகம் நிலைத்தன. உறுமீனை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்கைப் போல், கருவாட்டு
பானைக்குள் தலையிடக் காத்திருக்கும், மதில் ஓட்டுப் பூனை போல், ஆடாது, அசையாது
அவளைப் பற்றிய நினைப்பிலிருந்தனர் ஊரார் பலர்.
இறந்த சில நாட்களுக்கு, அவள்
வீட்டில் எதுவும் இல்லாதது போல் இருந்தது. ஜன்னலின்
அருகில் பலமணிநேரம் காத்துக்கிடந்தும் பலனேதுமில்லை. இருமல் ஒலி, சிரிப்பொலி, எதுவும்
கேட்க வில்லை. சில
சமயங்களில் சில விலங்குகள் மட்டும் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.
சில நாட்களில் அவள் சிரிப்பொலி மீண்டும். அதே
விலங்குகளோடு மீண்டும் எப்போதும்போல் கொஞ்சிக் கூலாவிக் கொண்டிருந்தாள். தன்னைத்
தானே தேற்றிக் கொண்டிருப்பாள் போலும். என்
தின வேளைகளில் அவளைக் கவனிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தேன். காமத்தோடுப்
பார்க்க ஆரம்பித்த போதிலும், இப்போது அவள் சிரித்த முகத்தையும் ரசித்தேன்.
அன்று ஒரு வித்தியாசமான விலங்கொலி அவள்
வீட்டில்...
வீல்...ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்று
வந்த சத்தத்தில் விழித்துக்கொண்டேன்.
மணியைப் பார்த்தேன். அதிகாலை
இரண்டு மணி. ஜன்னல்களைத் திறந்து
சப்தமின்றி அவளைக் கண்டேன். அவள் ஒரு நாய் குட்டி அருகில் உட்கார்ந்துக்
கொண்டிருந்தாள். அவள்
சேலை முந்தானையில் “அதிர்ஷ்டக்காரப் பூனை” தூங்கிக்
கொண்டிருந்தது. அந்த
நாய் குட்டி பிறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்கலாம். முகத்தில்
வெள்ளையுள்ள செவலை நாய்க்குட்டி. கண் விழிக்க வில்லை. அங்கும்
இங்கும் உருண்டு கொண்டு, நாக்கை வெளியில் துருத்தி கொண்டு... வீல்..ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்று
கத்திக் கொண்டிருந்தது.
எங்கிருந்து இந்த நாய் குட்டியைப் பிடித்தாளோ? விவரம்
கேட்டவள்...! மனுசனை
உறங்க விடாமல்? கொஞ்சம்
திட்டிக் கொண்டேன். பக்கத்தில் சின்ன தட்டில் பால், சோறு, எல்லாம்
வைத்திருந்தாள். நாய்
குட்டி அத்தனையையும் தொட்டுப் பார்த்ததாக தெரியவில்லை. அது
ஊஊஊஊஊஊ என்று கத்தியது. பின்பு ஓஓஓஓஓ என்று முனங்கியது.
தூக்க கலக்கத்தோடு இருந்த அவள் முகத்தில் ஏதோ
ஒரு கலவரம். நாய்
குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். நாய்
குட்டி உருண்டதால் முந்தானை நழுவியது. நான் கண்களை விரித்துக்
கவனிக்கத் தொடங்கினேன். நாய் குட்டி தன் சத்தத்தை
நிறுத்தியதாக தெரிய வில்லை. அது மீண்டும் ஊளையிடத் தொடங்கியது. ஊஊஊஊ...ஊஊஊஊவ்... நாக்கை
வெளியே நீட்டி, நீட்டி, கத்தியது. அவள்
அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
இவளுக்கு வேறு வேலை இல்லை? எரிச்சல்
பட்டுக் கொண்டேன். நாய்க்குட்டி சப்தமிட்டுக்கொண்டே இருந்தது. கண்களை
உறக்கம் தழுவியதால், உறங்கும் நோக்கோடு படுக்கையில் சாய்ந்தேன். நாய்க்குட்டியின் "ஊளை" சப்தம்
தொடர்ந்து கொண்டேயிருந்தது. உறங்க முடியவில்லை. எரிச்சலாக
வந்தது. தூக்கமின்றி
புரண்டு கொண்டிருந்தேன். ஐந்து பத்து நிமிடங்கள்
கடந்திருக்கும். திடீரென்று
நாய்க்குட்டியின் சப்தம் நின்றது. இரவின் மௌனம் அவ்விடமெங்கும். ஒரு
சிறு சத்தம் கூட இல்லை. ஒரு வேளை நாய்க்குட்டி இறந்திருக்குமோ? ஆர்வம்
தாங்காமல் எழுந்து ஜன்னல் வழிப் பார்த்தேன்.
அவ்வளவு தூக்கக் கலக்கத்திலும் என்
கண்களிலிருந்து கண்ணீர். உணர்ச்சியோட்டதை என்னால் அடக்க முடியவில்லை. உடம்பிலும்
ஒரு சிறு பதற்றம். அவள் தன் மார்பகத்தைத் திறந்து அந்த நாய்
குட்டியின் வாயில் வைத்திருந்தாள். அதுவும் உடம்பெங்கும்
உதறலோடு உறிஞ்சி...உறிஞ்சி... குடித்துக்
கொண்டிருந்தது. துக்கம்
தாளாத எனக்கு “ஒரு
தாயிடம் ஒரு குழந்தை பால் குடிப்பதைப் போலிருந்தது". ஏனோ
மேற்கொண்டு பார்க்க முடியாமல், சட்டென்று படுக்கையில் விழுந்த எனக்கு பல
நிமிடங்கள் தூக்கம் வரவில்லை. அப்புறம் நானறியாத ஒரு வேளையில் தூங்கிப்
போனேன்.
விடியற்காலையில்
எழுந்து மீண்டும் ஜன்னல் வழி அப்பெண்ணை கவனித்தேன். அவள் அந்த நாய்
குட்டியோடும், பூனையோடும்
சிரித்த முகத்தோடு விளையாடிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏனோ ஒரு தாய் அதன்
குழந்தைகளோடு விளையாடுவது போலிருந்தது. அன்று முதல் என் தாயின் “முகச்சாயலே” அப்பெண்ணிடமும்
தென்பட்டது.