திங்கள், 27 ஜூன், 2016

மே 1ம் தேதி , 2011. அதிகாலை மணி 3.12…..

மே 1ம் தேதி , 2011. அதிகாலை மணி 3.12..
நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.. இரவு முழுவதும் மனக்கலக்கத்தில் வெகு நேரமாக தூங்காமல் இருந்திருந்தேன்.  

என்னை சுற்றி பலபேர் சப்தம் எழுப்பிய படி பேசிக் கொண்டிருந்தனர்.  எப்படி தூங்க முடியும் என்னால்? ஒருவாறாக எல்லோரும் தூங்கி போயினர். நாளை நடக்க போவதை நினைத்து ஒரு கலக்கம் மனதிற்குள் உருத்தி கொண்டே இருந்தது.   

எப்போது தூங்கினேன் என்று இப்போதும் நினைவில் இல்லை.

நன்றாக அயர்ந்த தூக்கத்தின் போதுதான் அது நடந்தது. 

கட கடவென காதுக்குள் ஏதோ கரடு முரடாக ஏறுவது போல். அலறி அடித்து எழுந்து தூர விலகி நகர்ந்தேன். தூக்கம் தெளிந்து எழுந்தது, ஒருவித வெறுப்பாக இருந்தது.

வீடெங்கும் மல்லிகை பூவின் மணமும், வெந்நீர் அடுப்பு புகையும் கலந்து, ஒரு வித புளகாங்கித மூச்சு முட்டுதலை ஏற்படுத்தியது.

தூரத்தில் வீட்டு வாசலில் யாரோ இருவர் பேசிக்கொண்டிருந்தது போல் இருந்தது.  அரை குறையாக வார்த்தைகள் காதில் விழுந்தது.

இத புடில .. ஏய் இந்த பக்கம் டே...

நல்ல இருத்தி சேர்த்து கெட்டு டே.....

கயிறை இருக்கு அப்படிதான்... விடாத.... இறுக்கி கட்டு...

லேய்.... லேய்... வெட்டாதல... போதும்.. போதும்...

யேய்.... சத்தம் போடாதீங்கப்பா... மெதுவா பேசுங்க...
----------------- என்பது மாதிரியான வசனங்கள்...!!!

ஒருவிதமாக சமாளித்து எழுந்து, காதுக்குள் நுழைய முயன்றது எது என்பதை கண்டு பிடித்து விட்டேன்.  என்னுடையே தொலைபேசி தான்.  படுக்கும் போது தலை மாட்டில் வைத்திருந்தேன். இப்படிதான் பல நேரங்களில் தொல்லை பேசியாகி,  தான் அதிர்ந்து, என்னையும் அதிர வைத்து விடுகிறது. 

இந்த நேரத்தில் யார் அழைத்திருப்பார்கள்..ஒருவித யோசனையுடே ஆராய்ந்து.. அவசரமாக பார்த்ததில்.... தெரிந்து விட்டது.  இரவு முழுவதும் நான் எதிர்பார்த்த அதே எண்ணிலிருந்து அழைப்பு.  

மனமெங்கும் பதட்டம் தொற்றி கொள்ள ஓடினேன்.  தூக்கத்திலிருந்து யாரோ எழுந்து,  என்னை வித்தியாசமாக பார்த்தார்கள். 

ஓட்டமும் நடையுமாக மொட்டை மாடிக்கு சென்று அதே எண்னை அழைத்தேன்... வாசலில் வாழைமரத்தை கட்டி முடித்திருந்தார்கள்..

ஹலோ...

வழக்கமாக இரண்டு மூன்று நிமிடங்களில் எடுக்கப்படும் அழைப்பு உடனே எடுக்கப்பட்டது..

ஹலோ...

கூப்பிடிருந்தையா?

தூங்கிட்டேங்களா?

இல்ல... இல்ல... உன்னையே நினைச்சு தூங்காமலே இருந்தேன்......------ என்று உலகத் தரம் வாய்ந்த உன்னத பொய்யை சொல்லி, ஆரம்பித்த மண வாழ்க்கை ....

அள்ள அள்ள குறையாத அன்போடும்,

ஆசை ஆசையாய் பெற்றெடுத்த பிள்ளைகளோடும்,

சலிக்க சலிக்க மாறாத சண்டைகளோடும்,

சிரித்து அழுது மகிழ்ந்த கண்ணீரோடும்,

சின்ன சின்ன பொய்களோடும்,

உயிரோடு கலந்த பாசத்தோடும்,

காதலோடும், நேசத்தோடும்,

வெற்றிகரமாக இன்று 5வது ஆண்டில்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks