செவ்வாய், 7 ஜூன், 2016

இழப்பு

சட்டென்று அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
சார்..! சற்று அழுத்தமாக உரக்க கூப்பிட்டேன்..
யாருப்போ.......?
நெற்றி வகிட்டில் யோசிப்பின் அடையாளமாய் மூன்று, நான்கு வரிகள் தோன்றின.  நன்கு முற்றி காய்ந்த பேரித்தம் பழம் போல இருந்தார் என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்.
சார் நான் உங்கள்ட படிச்சேன்ம்லா.....
புருவம் உயர்த்தி கைகளால் என் தோளை தொட்டு சாய்த்து.....
அப்படியா..? எனக்கு தெரியலைப்போ.....! எப்ப படிச்சே..? எந்த வருஷம்?
அந்த நாட்களில் எல்லாம் அடி கொடுப்பதற்காக மட்டும் அவர் கைகள் என் மேல் பட்டதாக ஞாபகம்..! முதல் முறையாக ஒரு குழந்தையை அரவணைப்பது போல்.....
1988 – ல சார்..! என் பேரு சிவா...!
சிவாவா...  எம்பதேட்டுல நான் தெர்ச்னகோப்புல இருந்தேன்.. சிவா வா..?
அவருக்கு என்னை அடையாளம் தெரிய வில்லை...
சார்... நீங்க என் கைல அடிச்சு, ரத்தம் வந்து ஆசுத்ரிக்கு கூடிட்டு போனீங்களே..!  சிவந்த பெருமாளு சார்...!
ஏய்.. சிவந்த பெருமாளு... முழு பேரே சொல்லுடே.. சிவானு சொன்னா எனக்கெப்படி தெரியும்..!
முகமெங்கும் பிரகாசம் மின்ன பேசினார்....
என்னப்போ செய்ய இப்ப? நல்லா இருக்கியா? கல்யாணம் ஆயிட்டா..? அப்பெல்லாம் உனக்கு மீசை கிடையாது பார்த்தியா.. அதான் உன்னைய அடையாளம் தெரியலை...
சாக்லேட் கையில் கிடைத்த குழந்தையை போல் சந்தோசமாக பேசினார்.. இவன் என் மாணவன்... என்ற தோரணை அல்லது அதிகாரம் அவர் உடல், பேச்சு எல்லாவற்றிலும் பிரதி பலித்தது.
என்னை பற்றி, வேலை பற்றி, குடும்பத்தை பற்றி,.....எல்லாவற்றையும் பகிர்ந்தபோது கவனமாக கேட்டு கொண்டிருந்தார். என்னுடன் படித்த சில நண்பர்களை விசாரித்தார். அத்தனை பேரின் பெயரையும் மறக்காமல் வைத்திருந்தார்..!
அவரை பற்றி, அவர் குடும்பம் பற்றி விசாரித்தேன். ஏதோ ஒரு வெறுமை அல்லது ஒரு சோகம் அவர் பேச்சில் வெளிப்படுவதை உணர்ந்தேன்.. அவர் உணர்ச்சிவசப்படுவதாக தோன்றியதால், மேற்கொண்டு அதை பற்றி பேசாமல் வேறு திசையில் பேச்சை மாற்றினேன்.  பணிநிறைவு பெற்று பல வருடங்கள் ஆன போதிலும், கைகளில் சாக்பீஸ் பிடித்ததால் ஏற்பட்ட கறைவடு அப்படியே இருந்தது...
சரிப்போ.. நான் கிளம்புகேன்..  உன்ன பார்த்ததுல ரெம்ப சந்தோசம்போ... கண்ணாடியை சரி செய்து விட்டு நடக்க எத்தனித்தார்.
சரியென்று சொல்லி, கையை பிடித்து “ சார் உங்களுக்கு எதாவது செய்யணும் சார்...! என்றேன்..
சிரித்தார்... அவர் கண்களை உற்று நோக்கினேன். சிறிது கண்ணீர் பெருகுவது போல் தோன்றியது..
நீ எனக்கொண்ணும் செய்யாண்டாம்போ... உன் அம்மா அப்பாவ நல்லா பாரு.. உன் பிள்ளைல நல்ல படிக்க வை.. கவேர்மென்ட் ஸ்கூலுல படிக்க வைக்கணும் கேட்டயா..  வேற ஒன்னும் வேண்டாம்.. வரட்டா.. நல்லா இருப்போ.... – என்று சொல்லி என் கை விடுத்து, நடந்து போய் விட்டார். அவர் சோகமாக இருப்பதாக தோன்றியது. காரணம் தான் தெரியவில்லை.  அதைக் கேட்க தைரியமும் வரவில்லை.  பின்னாலிருந்து பார்த்தபோது,  அன்று பார்த்த அதே வேகமான நடை.  முன்னாலிருந்து பார்த்தால் ஒருவேளை அவர் கண்களில், சில கண்ணீர் துளிகள் இருந்திருக்கலாம்.
பணி நிமித்தமாக ஓரிரு நாளில் நான் வேலை செய்யும் ஊருக்கு வந்து விட்டேன். பின்னாளில் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சொன்னார்கள்.
முந்தாநாளு  .....................சார் செத்து போனாரு மக்கா.  நாலஞ்சு நாளா சோம்மில்லாம இருந்தாரு. ரெம்ப கஷ்ட பட்டிட்டு கிடந்தாரு.  பின்ன ஆசுத்ரிக்கு கொண்டு போகும் போதே சீவன் போயிருக்கு. என்னா கூட்டம் நேத்தைக்கு.  எல்லாம் அவர்ட படிச்ச பிள்ளைலாம். நல்ல மனுசன் போய் சேர்ந்திட்டாரு. 
கொஞ்சம் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.  சிறிதாய் வருத்த பட்டு மௌனமாக இருந்தேன்.
என்னைக்கு நம்ம ஊரு கவேர்மென்ட் ஸ்கூல மூட போராங்கன்னு சொன்னாங்களோ.. அன்னைக்கே மனுஷன் உடைஞ்சிட்டார்.  பிள்ளையோ இல்லேன்னா கவர்மென்ட் மூடத்தானே செய்யும். சாயங்காலமானா ஸ்கூல் வாசல்ல உக்காந்துதான் பேசிட்டு இருப்பாரு. இப்பம் அவரும் போய் சேர்ந்திட்டாரு.  நல்ல சாக்காலம் கேட்டயா... – அம்மா பேசிக்கொண்டிருந்தாள்.
எப்போது அனுபவித்திராத ஒரு வித அசாத்திய உணர்வு நிலையில் கேட்டு கொண்டிருந்தேன். போனை வைத்து சற்று நேரம் அமைதியாய் இருந்தேன்.  ஆழமான ஒரு பெருமூச்சை உடம்பு விரும்பியதால், பெருமூச்சு விட்டேன்.  ஒரு கன்னப்பரப்பில் மட்டும் கண்ணீர் துளியின் கோடு கீழ்நோக்கி பாய, கொஞ்சமாக அழுதிருந்தேன்.




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks