வியாழன், 14 மார்ச், 2019

வாழ்வே யோகம்

சின்னதாய் மழை பெய்திருந்த மதிய நேரம். வானம் மிதமான மேகமூட்டத்துடன் மீண்டும் மழை கொட்டலாம் என்பது போன்றிருந்தது. காற்றெங்கும் புதிதாய் நீர் குடித்த மண்ணின் வாசம். சாலையெங்கும் மங்கலாய் முகம் தெரியும் நீர் தேங்கல்கள். குளித்து முடித்த இளம்பெண்ணின் தலைமுடி நுனியில் வழியும் நீர்துளிகளைப்போல், மழையில் நனைந்த மர இலைகளிலிருந்து நீர் துளிகள் வழிந்துக் கொண்டிருந்தது.
அன்பை யாரிடம் காட்டலாம் என்ற அசாத்திய உணர்வோடு வெளியே வந்திருந்தான் ராகவன். “வாழ்வே யோகம்” என்ற மனவெழுச்சி வகுப்பில் கற்றுக் கொண்ட பாடங்கள், அறிவுரைகள், பொங்கி வரும் அணை வெள்ளமென மனம் முழுவதும் திரண்டிருந்தது. மூன்று நாள் வகுப்பாக இருந்தாலும் முப்பதாண்டு வாழ்க்கைக்கு தேவையானவற்றை அவ்வகுப்பு தனக்கு கற்பித்ததாக அவனுக்குத் தோன்றியது. அன்பை விதையுங்கள்...அன்பை விதையுங்கள் என கடைசி நாளில் கைகளை ஆட்டி “ஐம்பது” முறை சொன்னது நினைவிற்கு வந்தது. யாரிடமாவது அன்பை காட்ட வேண்டுமென்பது அதிகப்படியான ஆதங்கமாகியது. எப்படியும் வீட்டுக்கு சென்று சேர இரவு ஏழு, எட்டு மணி ஆகி விடும். அங்கு போனதும் மனைவி செல்வியிடமும், மகள் ப்ரியாவிடமும் அன்பை கொட்டி விட வேண்டியதுதான். மனதிற்குள் முடிவு செய்து கொண்டான் ராகவன்.
ஆர்வமிகுதியில் அலைபேசி எடுத்து செல்வியின் எண்ணுக்கு சுழற்றினான்.
"ஹலோ"
"என்னா.. முடிஞ்சுதா.. 6 மணிக்குதான் முடியும்னு சொன்னீங்க"
"இல்லப்பா... இப்பவே முடிஞ்சிட்டு"
"அப்ப.. இனி ஒரே அன்புதான்" - செல்வி நக்கலடித்தாள்.
"ஆமா.. அன்புதான்"
"அப்ப.. இனி "முன்கோபி ராகவன்" இல்ல... "அன்பன் ராகவன்தான்" - என்றாள்.
"ஆமா. இனியெங்கும் அன்புமயம் தான்" - என்று சிரித்தான் ராகவன்.
"அப்படின்னா... அந்த ஊர்ல தானே என் வீடு இருக்கு.. எங்க அப்பா, அம்மாவை ஒரு எட்டு பார்த்திட்டு வாரீங்களா? - உண்மையான ஒரு ஆவலில் தான் கேட்டாள் செல்வி.
இரண்டொரு நாட்களாக உள்ளுக்குள் இருந்த முன்கோபநாய் சிறிதாக வெளியே வரப்பார்த்தது. அடக்கி கொண்டான்.
"நான் மட்டும் தனியா எப்படி போறது... ரெண்டு நாள் கழிச்சு புள்ளையையும் கூட்டிட்டு எல்லாரும் சேர்ந்து வருவோம்"
ராகவனின் அமைதியான இந்த பதிலை கண்டு ஆச்சர்யம் காட்டினாள் செல்வி.
"என்னங்க... எப்படி அமைதியாய் பதில் சொல்றீங்க.. பேசுறது என் மாப்பிள்ளைதானா"
"உன் மாப்பிளையேதான்" -மீண்டும் சிரிப்புடன் பதில் கூறினான் ராகவன்.
"அப்ப சண்டை வந்துன்னா தூக்கி தூக்கி எறிவீங்களே அந்த செம்ப எடுத்து தூர போட்டுறவா?"
"போடு... போடு..சரி வந்து பேசிக்கலாம்"-என்று சொல்லி போனை அணைத்தான் ராகவன்.
கதை நாயகன் ராகவனை நடுத்தர பொருளாதார சமுதாயத்தின் பிரதிநிதியாக எவ்வித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம். அதாவது நாம் பணக்காரனா, ஏழையா என்ற சந்தேகத்துடனே சுற்றித் திரியும் மிடில் கிளாஸ் மக்களின் பிரதிநிதியாக. இன்னும் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன். அப்போது உங்களுக்கு தெளிவாகப் புரிவதற்கான வாய்ப்பு அதிகம். குடும்பத்தோடு சினிமா பார்க்கச் சென்று, சினிமாத் தியேட்டரின் வரிசையில் நின்று கொண்டே, தொண்ணூறு ருபாய் டிக்கெட் எடுக்கலாமா? நூற்றியிருபது எடுக்கலாமா என குழம்பித் தவிக்கும் குடும்பத்தலைவர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். அடுத்தவர் மெச்ச உயர்தர சட்டை, பேண்டுகளை தள்ளுபடியில் வாங்குவதாக நினைத்து, அநியாய விலைக்கு வாங்கி, அதனை ஆறேழு வருடங்களாய் மாற்றாத, கிழிந்த, நைந்த உள்ளாடைகளின் மீது அணிந்து, ஒய்யாரமாய் கண்ணாடி முன் அழகு பார்க்கும் அப்பாவிகளை உங்களுக்கு தெரிந்திருக்கும். தின்னத் தெரியாத, கொஞ்சமும் பிடிக்காத பிட்சாவையோ, பர்கரையோ கூட்டத்தோடு சேர்ந்து ருஷி பார்த்து, ஆகா, ஓகோ வெனப் பாராட்டும் அலவலாதிகளை உங்களுக்கு தெரிந்திருக்கும், போனஸ், டிஸ்கவுன்ட், தள்ளுபடி போன்ற வார்த்தைகளை கேட்ட உடனே, காது வரை சிரித்து, கடை கடையாக ஏறி இறங்கும் கண்ணியவான்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இவர்களில் யாரை வேண்டுமானாலும் ராகவனின் சாயலாக நீங்கள் உருவகித்துக் கொள்ளலாம். வீட்டில் புலியாகவும், வெளியில் எலியாகவும் நடந்து கொள்ளும் ராகவன் ஆறேழு வருடங்களாய் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கௌன்டன்டாக பணிபுரிகிறான். அலுவலகத்தின் மனிதவளத்துறையின் சார்பாக இரண்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக "வாழ்வே யோகம்" பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இன்று உங்கள் முன் அன்பின் வடிவமாக நிலைகொண்டிருக்கிறான் மிடில் கிளாஸ் ராகவன்.
அன்பு என்பது என்ன? அதற்கு உருவம் உண்டா? அதனை எப்படி அடுத்தவர்களுக்கு கொடுப்பது? கைவசம் கால்கிலோ அன்பு கிடைக்குமான்னு யாரிடமாவது கேட்க முடியுமா? "அன்பின் திருவுருவமே அன்னை தெரசா" என்கிறார்கள். அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ் என்கிறார்கள். "அன்பென்றாலே அம்மா" என்று பாட்டெல்லாம் இருக்கிறது. இதில் எதுவுமே நானில்லையே என்று ஆரம்பத்தில் பரிகாச கேள்விகள் எழுப்பியவன்தான் ராகவனும். ஆனாலும் இந்த "வாழ்வே யோகம்" பயிற்சி வகுப்பு அவனை முற்றிலும் மாற்றியிருந்தது.
அடுத்தவரை சந்தோஷப்படுத்தும் எல்லாவுமே அன்பென்கிறது இந்த பயிற்சி வகுப்பு. ஏதோ ஒன்றை செய்து அடுத்தவரை மகிழ்ச்சி கடலில் வீழ்த்தும் போது, அவர்கள் மீது நீங்கள் அன்பு பாராட்டியிருக்கிறீர்களென அர்த்தப்படுத்துகிறது. அதனை நீங்களே மனமுவந்து செய்யும் போது, பேரன்பின் பெருநதி உங்கள் உள்ளமெங்கும் பாய்ந்தோங்கும் என்று பறைசாற்றுகிறது பயிற்சி வகுப்பு. முன்பின் தெரியாதவர்களிடம் இதையே நீங்கள் செய்யத் துணிந்தால், "அகில உலகத்தின் அன்பின் சாரம்" நீங்களே என்கிறது பயிற்சி வகுப்பு. இப்படி அன்பை அடுத்தடுத்து போதித்து, நாடி, நரம்பு, மூளை, முதுகென எல்லாம் அன்பால் நிரப்பி, நம்ம ராகவனை மிதமிஞ்சிய அன்பனாக மாற்றியிருந்தது அவ்வகுப்பு.
ஊருக்கு செல்லும் பஸ்ஸிலேறி, எதிர்ப்படும் அனைவருக்கும் ஒரு மிதமான புன்னகையை வீசி, சீட்டை பிடித்து அமர்ந்திருந்தான் ராகவன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பஸ்சுக்குள் கூட்டம் அலைமோதியது. செல்போனை எடுத்து நோண்டலாமா என்று நினைத்த போது, "இயற்கையை நேசித்து, உலகை கவனித்து, அன்பை விதையுங்கள்" என்று பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாளில் இளவயது டாக்டர் புனிதா சொன்னது நினைவுக்கு வந்தது. செல்போனை பாக்கெட்டிலிருந்து எடுக்க வில்லை. லேசான பசி வயிற்றை கிள்ளியதால், பையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை மெதுவாக தின்ன ஆரம்பித்து, ஏதோ நினைவில் கண்களை விரித்து உலகத்தை கவனிக்க தொடங்கினான். தீடிரென அந்த புனிதா டாக்டரின் திரண்ட தோள்களும், அவர் கட்டிக்கொண்டு வந்த சாரியும், அவர் அசைந்து, அசைந்து பேசும் போது கண்ணில் பட்ட அவரின் அழகான தொப்புளும் நினைவுக்கு வந்தன. "அன்பே சிவம்" என்று மனதிற்குள் சொல்லி கொண்டான். பிறகு காமம் என்பதும் அன்பின் வெளிப்பாடுதானே என்று அவனாகவே சமாதானம் செய்து கொண்டான். அவ்வாறு யோசித்துக் கொண்டேயிருக்கையில் காமமும், அன்பும் ஒன்றா? என்ற பெருங்குழப்பம் அவன் பின் மண்டையை ஆக்கிரமித்தது. மரம் பற்றி, கிளை பற்றி, இலை பற்றி தொடர்ந்து தாவும் குரங்கென மனம் பற்பல சஞ்சல சலனத்தில் அலைந்து கொண்டேயிருந்தது.
அடுத்தடுத்து வந்த பேருந்து நிறுத்தங்களில் மக்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தார்கள். கடைசியாக பக்கத்தில் வந்தமர்ந்த பையனை பார்த்தபோதே தெரிந்தது அவனின் ஏழ்மை நிலை. ஒரு பதினாறு வயதிருக்கலாம். எங்கோ வேலைக்கு சென்று திரும்புகிறான். கருத்த உருவம், கலையான முகம். கைகால்களின் நக இடுக்குகளில் திருநீறு போல சிமெண்ட் படிவுகள். ஏதோ ஒரு கட்டிட கட்டுமானத்தில் வேலை செய்யலாம். பொங்கி வரும் அன்பை இவன் மீது கொட்டி விடலாமா என யோசித்தான் ராகவன். யோசித்துக் கொண்டிருக்கும்போதே அப்பையனை பார்த்து சிரித்தும் வைத்தான். அதுவரை இயல்பாய் இருந்த பையன் கொஞ்சம் உஷாராகியது போலிருந்தது. அன்பு மிகுதியில் கையிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் அவன் முன்னே நீட்டிவிட்டு, குரலெங்கும் அன்பு வழிய, மெதுவாக பேச ஆரம்பித்தான்.
உன் பெயரென்னப்போ?
அப்பையன் ராகவனின் செய்கைகளை, வார்த்தைகளை கவனித்ததாக தெரியவில்லை. "போடா... போ.. நீயும் உன் பிஸ்கட்டும்" என்பதுபோல் பஸ்ஸின் முன்புறத்தையே கண்களை கூர்மையாக்கி அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். ராகவனும் குழப்பமாய் பஸ்ஸின் முன்புறத்தை பார்த்தான். சில கனகாம்பரம் பூ வைத்த இரட்டைச்சடைகள், அரக்கு மற்றும் பச்சை நிற தாவணிகள் பார்வைக்கு கிடைத்தன. திரும்பி அப்பையனை பார்த்தான் ராகவன். அவன் விழிகளுக்குள் "பசலை நோயின்" அறிகுறி. அவன் செய்கைகளில் "காதல் தாக்கத்தின்" அடையாளங்கள். ராகவனுக்கு விளங்கியது. இச்சூழ்நிலையில் அரைலிட்டர் அன்பெடுத்து அவன் வாயில் வைத்து ஊட்டினாலும், தன் முகத்திலேயே திருப்பி துப்பி விடுவான்யென ராகவனுக்கு தோன்றியது. ராகவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. பாழாய் போன உலகில் பொங்கி வரும் அன்பை காட்ட கூட ஆள் இல்லையே என்ற விரக்தி சிந்தனையின் போதுதான், அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் ஏறிய அப்பெண்ணை கவனித்தான்.
மூன்று வயது பெண் பிள்ளையை தூக்கி ஏறிய அழகான அப்பெண், கூட்டத்தில் அசௌகரியமாய் நின்று கொண்டிருந்தாள். தன்னை சுற்றி ஆம்பிளைகளாக இருந்ததால் அக்குழந்தையை மட்டும் தருமாறு ராகவன் சைகை செய்தான். அப்பெண்ணும் அதை ஆமோதித்து குழந்தையை சிறிய புன்முறுவலுடன் ராகவனிடம் கொடுத்தாள். அப்பெண்ணின் சிரித்த முகம் ராகவனுக்கு நிரம்ப பிடித்தது. குழந்தையும் அப்பெண்ணின் சாயலில் மிக அழகாக இருந்தது. பொங்கி வந்த அன்பையெல்லாம் கொஞ்சி தீர்த்து மகிழ்ந்தான் ராகவன். அதுவரை அழுது கொண்டிருந்த குழந்தையும் ராகவனோடு ஒட்டிக்கொண்டு சிரித்தது. பக்கத்திலிருந்த பையன் நடக்கும் எதையும் பெரிதாக சட்டை செய்யாதபடி, முன்பிருந்தபடியே தாவணி சீட்டுகளை நோக்கி, "கருமமே காதலாய்" இருந்தான்.
இருபது நிமிடங்களில் அப்பெண் இறங்குமிடம் வந்தது. ராகவனிடம் குழந்தையை பெற்றுக்கொண்டு, கூட்டத்தில் நுழைந்து இறங்கும் நேரத்தில், அப்பெண்ணின் அபயக்குரல் ஒலித்தது.
"குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க செயினை காண வில்லையென்று" பஸ்ஸெங்கும் எதிரொலித்தது. பஸ்சுக்குள் பெருங்குழப்பம். ஆளாளுக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் சொன்னார்கள். பஸ் அடுத்து நகராமல் நிறுத்தப்பட்டது.
பிள்ளையிருந்த ராகவனின் சீட், அதன் கீழே சில பேர் குனிந்து தேடினார்கள். ராகவனும் ஆடைகளை உதறி, எதேச்சையாக எங்கும் சிக்கி இருக்குமான்னு தேடிக் கொண்டிருக்க, சில பேர் மட்டும் சந்தேக கண்களோடு ராகவனை பார்க்கத் தொடங்கினர். சிலபேர் கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாய் ராகவனின் பையில் தேட வேண்டுமென்றனர். சிலர் பஸ்சை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல சப்தமிட்டனர். இக்கட்டான அவமானத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றான் ராகவன். உடம்பெங்கும் வியர்த்திருந்தது. கூர்ந்து பார்க்கையில் விரல்களில் லேசான நடுக்கமும். போதாத குறைக்கு "இவரு ஏண்டையும் பிஸ்கட்டை கொடுத்து திங்க சொன்னாருன்னு" வாக்கு மூலம் கொடுத்தான் பக்கத்திலிருந்த சிறுவன். சரியாகச் சொன்னால் ஐந்தாறு நிமிடங்கள், யாரிடம் என்ன சொல்வது என்ற எந்த அறிவுமின்றி, மனம் முழுதும் பரிதவிப்போடு செயல்பாடின்றி நின்றிருந்தான் ராகவன். மனம் முழுதும் பொதுமக்களால் தூக்கி எறியப்பட்ட "அவமானக் குப்பை".
ஏழாவது நிமிடத்தின் ஆரம்பத்தில் யாரோ சொன்னார்கள் "செயின் கிடைச்சிருச்சு". கூட்டத்திற்குள் ஒரு ஆசுவாசம். அக்குழந்தையின் அம்மாவின் சேலை முந்தானை அடுக்கில் சிக்கி இருந்தாக பேச்சு நடந்தது. ராகவனுக்கு கொஞ்சம் சமாதானமாக இருந்தது. பெருமூச்சு விட்டு சீட்டில் அமர, சிறிது நேரத்தில் பஸ் நகர ஆரம்பித்தது. அவன் மீதான பரிதாப, அனுதாப பேச்சுக்கள் சில அவன் காதுகளுக்குள்ளும் விழுந்தது. ராகவன் யார் முகத்தையும் பார்க்கவில்லை. பக்கத்திலிருந்த பையன் ராகவனை பார்த்து இரண்டொருமுறை சிரிக்க முயற்சித்தான். மோன நிலையிலிருக்கும் சாமியாரைப் போல் ஆடும் பஸ்ஸில் அமைதியாக உட் கார்ந்திருந்தான் ராகவன்.
வீட்டுக்குள் ஏறும்போதே முகமெங்கும் சிரிப்புடன், செம்பில் தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள் செல்வி. ராகவன் அதை எதிர்பார்த்தது போலவே, பட்டென்று வாங்கி குடிக்கும் போது, "அப்புறம்... அன்பன் ராகவன்,, எப்படி இருக்கீங்க" - என்று கிண்டல் தொனியில் செல்வி கேட்க, யார் மீதோ இருந்த கோபத்தில் தண்ணீர் செம்பை வீசியெறிந்தான் ராகவன்.
- தெரிசை சிவா

1 கருத்து:

  1. நல்ல கதை சிவா அண்ணா.தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

Thanks