எப்போதிருந்து மகேசுக்கு அந்த வட்டப்பெயர் வந்ததென்று அவனுக்கு சரியாக நினைவிலில்லை. சிறுவயதில் ஏதோ ஒரு விளையாட்டின் போது நண்பர்கள் கூப்பிட ஆரம்பித்ததாய் ஞாபகம். செங்கோட்டை (கிட்டி புல்) விளையாட்டில் இவன் செய்த சிறு கள்ளத்தனத்திற்காக முதன் முதலாய் அந்த பெயரைச் சொல்லி நண்பர்கள் அழைத்ததாய் ஒரு நினைவு உள்ளது. "லேய் கோழி மகேசு... வசமா ஏமாத்த பாக்கையா? சாக்குட்டான்.. சத்தியாம்பிரை... மும்முட்டி..னு அடுக்கிட்டே போற... எங்களுக்கும் விளையாட்டு தெரியும்டே... கள்ளக்கோழி.." என்று முதன் முதலாய் "கோழி" என்ற அடைமொழியோடு அவன் பெயரை உச்சரித்தது இசக்கிமுத்துதான்.
சிறந்த ஆட்சியாளர் என்ற பொருளுடைய மகேஸ்வரன் என்ற அவனுடைய சான்றிதழ் பெயர் தற்போது வழக்கொழிந்து, சாதாரணநிலையில் மகேஷ் என்றும், கிண்டல் தொனியில் "கோழிமகேஷ்" என்றும், ஊரின் இன்னபிற நகைச்சுவை பேச்சு அத்யாவசியங்களுக்கு "மத்தவன்.. கோழியை எங்க?" என்றும் பரிகாசம் தெறிக்கும் தொனியோடும் பயன்படுத்தப்படுகிறது. ஊரின் வடகிழக்கிலிருந்த மஹேஸ்வரர் சந்நிதியால், ஊருக்குள் ஒவ்வொரு தலைமுறைக்கும் மகேஷ் என்ற பெயர் ஏழெட்டு பேருக்காவது இருக்கும். எனவே ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்த ஏதோ ஒரு அடைமொழி தேவை பட்டது. கம்பு மகேஷ், கரண்டி மகேஷ், கத்திரிக்கா மகேஷ், மாங்கா மகேஷ், மகுடி மகேஷ், கோம்பை மகேஷ், போலீஸ் மகேஷ், போத்து மகேஷ் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடைமொழி வாய்க்க, இவனுக்கு விதிக்கப்பட்டதோ கோழி மகேஷ் என்றாகியது. எது எப்படியோ இன்று அவன் அடையாளத்திலிருந்து அழிக்க முடியாத பெயராய் அது மாறியிருந்தது. நடுத்தர நிலையிலிருந்த அவன் குடும்பத்திற்கும் அவனுடைய இந்த வட்ட பெயர் சிறிதான நெருடலை தந்தது.
குழந்தை பருவம் முடிந்து, விடலை பருவம் நுழைந்ததும் ஹார்மோன்களால் ஊற்றெடுக்கும் "காதல்" மகேஷை என்னவெல்லாமோ செய்தது. பதின்ம வயது வாலிபனை பெண்கள் பாதிப்பது போல், வேறு யார்தான் பாதிக்க முடியும். ஹார்மோன்களின் தூண்டுதலால் பெண்களுடன் பேச ஆரம்பித்து, கண்ணில் பட்ட பெண்களையெல்லாம் மானாவாரியாக காதலிக்க தொடங்கினான் மகேஷ். அவர்களும் பதிலுக்கு தன்னை காதலிக்க வேண்டுமென்ற "பெரும் எதிர்பார்ப்பெல்லாம்" அவனிடம் இல்லை. ஆனால் இவன் விடாமல் அனைவரையும் உயிருக்குயிராய் காதலித்தான். அது ஒருவிதமான மகிழ்வு போதை. காதல் செருக்கோடு அத்தனை பெண்களுடனும் வழிந்து, வழிந்து பேசினான். அப்பேச்சினை அதிகப்படியான காம ரசத்தோடு, கற்பனை கலந்து நண்பர்களிடம் வேறு விதமாய் விவரித்தான். அவனையறிந்த இளைஞர்கள் அனைவருக்கும் அவன்மீது பொறாமையின் பொறுமல்கள். அதனாலோ என்னவோ அதுவரை கிண்டலாக உச்சரிக்கப்பட்ட இளவயது கோழி என்ற வட்டப்பெயர், அதன் பின்னர் வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட்டது.
ரோட்டில் சிவப்பு தூவல்களுடன், பெட்டைக் கோழிகளை கண்டவுடன், ஒருபக்க சிறகை சாய்த்து, படபடத்து, பெட்டையின் முதுகேறி, தன்னுறுப்பை கோர்த்து, பற்றிப் புணரும் சேவல் கோழிகளை நீங்கள் கண்டிருக்கலாம். கண்டவரையெல்லாம் காதலித்து மகிழும் மகேஷை அந்த சேவல் கோழியுடன் ஒப்பிட்டு, கோழிமகேஷ் என்று நமட்டு சிரிப்புடன் நண்பர்கள் அழைக்கையில், ஆரம்ப காலங்களில் மகேசுக்கு பெருமிதமாக இருந்தது. அதாவது எல்லா பெண்களையும் வளைத்தெடுப்பதில் வல்லவன் என்ற அர்த்தத்தில். ஆனால் நாளாக நாளாக பெண்கள் விஷயத்தில் அவன் மிகவும் மோசம் என்ற அர்த்தத்தில் "அந்த வட்டப்பெயர்" திரிக்கப்பட்ட போதுதான், சொல்ல முடியா ஒரு சோகம், அவன் நெஞ்சமெங்கும் ஆட்கொண்டது. இத்தனைக்கும் எந்த பெண்ணுடனும் அம்மாதிரியான உடல்தொடர்பேதும் அவனுக்கு இருந்ததில்லை. அதை செய்யும் அளவிற்கு அவனுக்கு மனத்துணிவும் இருந்ததில்லை, வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே. இருந்தும் அவன் வயதொத்த இளைஞர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மீது அப்படியொரு கிண்டல் மொழியை வாரியிறைத்துக் கொண்டே இருந்தனர்.
என்னடே.... கோழி இன்னைக்கு... வடசேரியில மேயுது?
மத்தவன் கில்லாடிடே... கும்பாட்ட காரிய மடக்கிட்டான்லா... கோழி.. கோழிதான்..
சூரம்பாடுக்கு(சூரசம்காரம்) நெறைய வெடக்கோழிகள் வரும்.. சேவலுக்கு கொண்டாட்டம்தான்..
நம்ம தூப்புக்காரிட்ட நேத்து கோழி பேசிட்டு இருந்தான். எப்படியும் கொத்தியிருப்பான்..
- என்பது மாதிரியான அங்கத உரையாடல்கள். அடுத்தடுத்த அடுக்கடுக்கான எள்ளி நகையாடும் உரையாடல்கள். இந்நாட்களில் தன்னை கோழி என்றழைப்பதை பெரும் கௌரவக் குறைச்சலாக நினைக்க ஆரம்பித்தான் மகேஷ். கோழி என்றழைத்தவர்களின் குரல்வளையை பிடித்து சண்டையிட்டான். இருந்தும் அப்பெயர் அவனிடமிருந்து அகலவே இல்லை. அதன் பொருளிலேயே ஊராரும் அவனை அடையாளப்படுத்தினர். பெண்களிடம் வாய்ப்பேச்சுக் காரனாக இருந்த அவனுக்கோ, செயல்வீரனாகும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. ஊருக்குள்ளேயே சிறு மளிகை கடைவைத்து அதன் வருமானத்திலும், பூர்வீக சொத்து வருமானத்திலும் குறை சொல்ல முடியா வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் மட்டும் நடந்த பாடில்லை. அந்நிகழ்வு நடப்பதற்கான அறிகுறியுமில்லை. அவன் வயதொத்த இளைஞர்கள் அனைவரும் திருமண பந்தத்தில் இறங்க, ஊருக்குள் உலவிய கெட்ட பெயரால், மணம் முடிக்க மணப்பெண் கிடைக்காமல் மனம் வெதும்பி, தண்ணி கிட்டாத செவ்வாழை மரமென வதங்கி, தெவங்கி நின்றான் மகேஷ்.
கடுக்கரை ஊர் முதலடி வெள்ளை வேஷ்டி குத்தாலம் பிள்ளைக்கு முன்னும் பின்னுமாய் இரண்டு பெண் மக்கள். வருகிற சித்திரை பதினாறு வந்தால் மனைவி விசாலாட்சி இறந்து ஆறு வருடங்கள் முடிகிறது. கொல்லைக்கு போவதிலிருந்து , ஆற்றுக்கு குளிக்க போவது வரை வெள்ளை வேஷ்டியை பிஷ்டத்திலிருந்து இறக்காத குத்தாலம் பிள்ளையை "வெள்ளை வேஷ்டி குத்தாலம் பிள்ளையென" ஊர் விளிப்பதில் வியப்பேதும் இல்லை. குத்தாலம் பிள்ளையின் முதல் பெண் நீலாம்பரி என்ற நீலா செவ்வாய் தோசத்தில் மணமாகாமலிருக்க, இளையவள் வசந்தா ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தாள். கண்களுக்கு அழகான ஓவியமாக, தேய்த்து வைத்த செப்பு சிலைகளாக பெண் மக்கள் இருவருமிருந்த போதும், அக்காவின் செவ்வாய் தோஷம், தங்கச்சியின் எதிர்கால வாழ்க்கைக்கும் தடையாகயிருந்தது.
வரதட்சணையை கூட்டி, தோஷ ஜோசியம் தவிர்த்து, சில நேரங்களில் மறைத்து என பல விதங்களில் மூத்த மகளின் திருமணத்திற்கு அடித்தளமிட முயன்றார் குத்தாலம் பிள்ளை. ஆனால் ஓட்டை ஒடிசலென்று, ஊரார்கள் பேசிய குடத்திற்குள், வாட்டமின்றி நீர் இறைக்க, வந்தவர் எவருமில்லை. வேண்டாத தெய்வம் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. சில ஜோசியர்கள் வியாழநோக்கு வரவில்லையென்றார்கள். சிலபேர்கள் தெய்வ குத்தம் என்றார்கள். ஊரடி கோவில் வீரவநங்கையம்மனுக்கு அடிமேல் அடிவைத்து அங்க பிரதட்சணம் செய்தாள் நீலா. ஆயிரத்தெட்டு தடவை ஸ்ரீராமஜெயமெழுதி மாலையாக்கி அனுமனுக்கு இட்டு வணங்கினாள். தங்கச்சி வசந்தா துணையுடன் எம்பெருமான் கோயிலுக்கு சென்று எள்ளு விளக்கேற்றினாள். தென்னைக்கு இறைத்த நீரில், வாழை செழித்து வளர்வதைப் போல், சில தினங்களிலேயே வசந்தாவை பெண்கேட்டு மாப்பிளை வீட்டார் வந்து நின்றனர். அம்மாவில்லாத நீலா வெப்ராளம் மேலோங்க, ஆறுதல் சொல்ல ஆளின்றி, அழுது, அலுத்து களைத்தாள். தங்கையின் மணவாழ்க்கைக்கு தடையாக இருக்கிறோமே என்ற தவிப்பு அக்காவிற்கு. அக்காவின் திருமணத்திற்கு போட்டியாக நாமே இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி தங்கைக்கு. முதிர் குலையை விடுத்து, இளங்கருதை மணவடையில் எப்படி ஏற்றுவது என தன் பங்கிற்கு குழம்பி வெகுண்டார் குத்தாலம் பிள்ளை. பெண் பிள்ளைகள் இருவருக்கும் போதுமென்ற அளவிற்கு சொத்திருக்க, ஆஸ்தியோட சேர்ந்து அறிவிருக்க, அழகிருக்க, செவ்வாய் தோஷமென்ற பெயரில் "பெருங்கவலையை" அவர்களுக்குள் விதைத்திருந்தான் இறைவன்.
வயல்கரையில் குத்தாலம் பிள்ளையின் அத்தான் முறை போஸ்ட் ஆபீஸ் சிவதாணு பிள்ளைதான் முதன் முதலாய் அந்த பேச்சை ஆரம்பித்தார்.
"மாப்பிள.. எத்ர காலம் டேய்... இப்படி பிள்ளைல நினைச்சி கவலை பட்டுட்டு இருப்ப... நான் சொல்லுகத நீ விதர்ப்பமா எடுக்க கூடாது... உம்ம பிள்ளையா இருந்தா... இப்படி கேப்பீரான்னும்... கேட்டுறதா... ஒரு அபிப்ராயம் தான்..." - சரியான பீடிகையுடன் பேச்சை வீசினார் சிவதாணு பிள்ளை.
"சொல்லுங்கத்தான்... முதல்ல விஷயத்தை சொல்லுங்க"
"இல்ல.. மாப்ள... நம்ம மூத்த குட்டியை... நடுத்தெரு கடை முத்தையா பிள்ளைக்கு மகனுக்கு குடுப்பியான்னு, கேட்காங்க பார்த்துக்கோ..."
"யாரு கோழி மகேசுக்கா...ஆச்சர்யத்தோடு புருவம் உயர்த்தி கேட்ட குத்தாலம் பிள்ளை... அதிருப்தியோடு மேலும் தொடர்ந்தார். யத்தான்... நீரு.. இப்படி கேப்பீருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... - என்று.
சிவதாணு பிள்ளையும் பதட்டப்பட்டார்.
"இதான் உண்ட முதல்லயே சொன்னனேன்... நாளைக்கு ஒரு காலத்துல... யார் மூலமாவது விஷயம் கேள்விப்பட்டு, ஆனாலும் யத்தான்... நீரு ஒரு வார்த்தை யான்ட கேட்கலையேன்னு.... நீ சொல்ல கூடாது பார்த்தியா... அதான் கேட்டேன்..
இல்லத்தான்... அது வந்து...
ஏய்... ரெண்டு பிள்ளைலும் கோவில் கோவிலா... வேண்டுதலோடு சுத்துகத பாக்க முடியலைடே... பாவம்லா...... அம்ம இல்லாத பிள்ளைக வேற... நல்லதோ.. கெட்டதோ... காலா காலத்துல அது..அது நடந்துரணும் டே...
குத்தாலம் பிள்ளை அமைதியாக யோசனையிலிருந்தார். அவரின் அந்த யோசிக்கும் நேரத்தை பயன்படுத்தி சிவதாணு பிள்ளை மேலும் பேசினார்.
"பய... கொஞ்சம் அப்டி..இப்படித்தான்... கல்யாணம் ஆனா.. எல்லாம் சரியாகும் டே... வீட்ல ஆகாரம் இல்லாட்டாதான்... நாய்கோ, தெருவுக்கு போய், கண்ட கண்ட இடத்துல வாயை வைக்கும்.... பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருந்தா.. அவன் யான்டே ஊர் மேய போறான்... நம்ம பிள்ளைக்கு வேற செவ்வாய் தோஷம்.... கட்டிக்குடுடே... ரெண்டாவது குட்டிக்கும் வயசு ஏறிட்டு போகு பார்த்துக்கோ...அப்புறம் உன் இஷ்டம்...
நகர்த்தும் விதமாய் கல்லை நகர்த்தி, கரைக்கும் விதத்தில் "கரைப்பார்" கரைத்தால் "கருங்கல்லும்" கரையாமல் இருக்குமோ...குத்தாலம் பிள்ளை கரையத் தொடங்கியிருந்தார்.
திருமணத்திற்காக ஏங்கிய இரு மனங்களும் நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில் கல்யாண கடலில் குதித்தன. பெண்ணுடம்பை பற்றிய காம ஈரத்தோடு கட்டில் கரையில் காத்திருந்தான் மகேஷ். கதவைத் திறந்து வந்த நீலா வேறொரு மனநிலைமையிலிருந்தாள். கல்யாணம் என்ற ஒன்றை காட்டி தன்னை இத்தனை காலமாய் நிராகரித்த சமூகத்தின் மீது கட்டுங்கடங்கா கோபத்திலிருந்தாள் நீலா. கண்களெங்கும் காமம் கொப்பளிக்க உட்கார்ந்திருந்த மகேஷை கம்பளிப் பூச்சியை பார்ப்பது போல் பார்த்தாள். கம்பங்கொல்லையில் பாயத் துடித்த காய்ந்த மாட்டினை தடுத்து, ஒற்றை கேள்வியால் எதிர்திசையில் இழுத்தாள்.
நீ தொடப்போற, எத்தரையாவது ஆளு நான்? - என்ற எதிர்பாராத கேள்வியால் நிலைகுலைந்தான் கோழி மகேஷ். திருமணம் என்ற ஒற்றைச்சொல்லால் தன்னை அழவைத்த, நிராகரித்த, அவமானப்படுத்திய ஆண் வர்க்கத்தின் மீது ஆற்றொணா விரக்தியிலிருந்தாள் நீலா. தன் தங்கையின் வாழ்க்கையை நினைத்தே இந்த பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக உறுதிப்படுத்தினாள். "எப்போதும் போல் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள். என் முன் உன் சிறகுகளை விரிக்காதே என்ற பொருளுடன், உறுதிப்படப் பேசிய நீலாவை பார்த்து, "கோழி" பெரும் பயம் கொண்டது. பேச்சு சாதுர்யத்தால் பல பெண்களை வசீகரித்த கோழி மகேஷின் "காம மூக்கு" அவன் காலடியிலேயே விழுந்து நொறுங்கியது. ஆவேசமாக அத்தனையும் பேசிமுடித்து கட்டிலின் ஒரு ஓரத்தில் நெடுநாட்களுக்கு பிறகான நிம்மதியான பெருந்தூக்கத்தில் நீலா லயிக்க, அவள் அழகான முதுகையும், வளைவுகளையும் பார்த்து கொண்டு தூங்கமின்றி படுத்துக் கிடந்தான் மகேஷ். முதலிரவு அறை முழுவதும் நிரம்பியிருந்த பூக்களின் மணத்தோடு, தூங்கமின்றி புரண்டு கொண்டிருந்த மகேஷின் ஏக்க பெருமூச்சும் சேர்ந்து கொண்டது.
விரக்தியில் இருக்கிறாள், இரண்டொருநாளில் சரியாகிவிடுமென நினைத்தான் மகேஷ். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாகியும் வீம்பு குறையாத நாகமென விரக்தியின் உச்சத்திருந்தாள் நீலா. ஏதேதோ செய்து நீலாவின் நம்பிக்கையை பெற முயற்சித்தான் மகேஷ். கடைக்கு வரும் பெண்களிடம் பேச்சை குறைத்து, கண்ணியவானாக நடந்து கொண்டான். திருமணமான நாள் தொட்டு, ஊருக்குத்தான் அவர்கள் கணவன் மனைவி. ஆனால் தாம்பத்யம் சிறகடிக்கும் கட்டிலறையில், எதிர் எதிரே படுத்துக்கொண்டு பயணிக்கும் ரயில் பயணிகள் மட்டுமே. கொப்பளிக்கும் காமத்தை உடலுக்குள் அடக்க முடியாமல் தவித்தான் மகேஷ்.
இதுவேதும் அறியாத நவீன உலகம், கிண்டல் பேச்சுக்களால், ஆபாச வார்த்தைகளால் மகேஷை மேலும் வறுத்தெடுத்தது.
அன்று அப்படித்தான். முட்டை வாங்கும் அவசரத்தில் கடைக்கு வந்து நின்ற நையாண்டி சேகர் உச்ச ஸ்தாயில் சிரித்துக் கொண்டே பேச துவங்கினான்.
"என்ன மாப்ள... ராத்திரி முழுக்க பயங்கர வேலை போல.."
சட்டென்று அரண்ட மகேஷ், அடுத்த அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நீலாவுக்கு கேட்டிருக்குமோவென பயந்து, பட்டென்று பேச்சை மாற்றினான்.
"உனக்கு என்ன வேணும்..."
நையாண்டி சேகரோ விட்ட பாடில்லை.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மாப்ள... ஆளு ஒடிஞ்சு போயில்லா இருக்க.... முட்டை கிட்டை குடிக்க கூடாதா?
நான் என்ன குடிக்கணும்னு எனக்கு தெரியும்.. உனக்கு என்ன வேணும்னு சொல்லு..
அது சரிதான்... கோழிக்கு தெரியாதா... எப்ப முட்டை குடிக்கணும்னு....- என்று நக்கலடித்தான் சேகர்.
மகேசுக்கு சுள்ளென்று கோபம் பின் மண்டையில் ஏறியது. அடக்கி கொண்டான். மெலிதான கோபத்தோடு,
லேய்.. உனக்கு என்ன வேணும் சொல்லு... இல்லாட்டா.. இடத்தை காலி பண்ணு...
முட்டைதான் வேணும் மாப்ள... - சிரித்து கொண்டே பதிலுரைத்தான் நையாண்டி சேகர்.
அவசர அவசரமாக முட்டையை எடுத்துக் கொடுத்து ஆசுவாசப்பட்டான் மகேஷ்.
"பார்த்து டே.. சின்ன பிள்ளையாக்கும் என் தங்கச்சி... ஊர்ல ஏனோ தானமா மேஞ்ச மாதிரி அவள்டையும் உன் வேலையை காட்டிராத ..."
என்று போகிற போக்கில் தன் நையாண்டி தனங்களுக்கு அடையாளமாய் ஒன்றிரெண்டு வார்த்தைகளை விட்டுக் கொண்டே சென்றான் சேகர்.
ஆவலாதியில் மகேஷ் பரபரக்க, அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த நீலாவுக்கு அவமானப் புள்ளிகள் மேலோங்கி, மகேஷின் மீதான வெறுப்பு மேலும் சில மடங்கு கூடியது.
எறும்பு கூட்டுக்குள் கைவிட்ட தேன் திருடனாய், தன்னிலையை நினைத்து, விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் மொத்த பரிதவிப்பையும் மனதிற்குள் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான் கோழி மகேஷ்.
தீப்பட்ட காயத்தில் தேள்வந்து கொட்டுவது போல், மொத்த ஊரையும் கலங்கடித்தது அந்த செய்தி. ஆம். கெட்ட செய்திதான். யாரும் எதிர்பார்க்காத செய்திதான். இளையவள் வசந்தா வயலடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்றும், தலையில் பலத்த அடி என்றும், இளைஞர்கள் சிலபேர் குத்துயிரும், கொலை உயிருமாய் மயங்கியநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர் என்றும். என்ன பிரச்சனை? யாரால் பிரச்சனை? எதற்காக இப்படி ஒரு முடிவு? ஏகப்பட்ட கேள்விகள் எல்லோர் மனதிலும். மகேஷ் படபடப்புடன் இருந்தான். குத்தாலம் பிள்ளை அணுஅணுவாய் சிதறியிருந்தார். நீலா மூர்ச்சையாகி அரைகுறை நினைவிலிருந்தாள். சரியாக காரணம் யாருக்கும் தெரியாமல், ஆங்காங்கே பல ஆருடங்கள் கணிக்க ஆரம்பித்தனர். அதில் சில மகேஷை குறி வைப்பதாயிருந்தது.
"ஊருக்குள்ளயே அவன் வேலையை காட்டுனவன்.. வீட்டுக்குள்ளே சும்மையா இருந்திருப்பான்.. பாவம் பிள்ளை.. பயந்து.. கிணத்துல விழுந்திருக்கு.... "
மொத்த ஊரும் ஏற்றுக் கொள்ளும் ஊர்ஜிதமாக அது இருந்தது. அவரவருக்கு விரும்பிய வகையில் மேலும் சிலவற்றை சேர்த்து இழித்தும் பழித்தும் பேசினர். நரம்பில்லாத நாக்கால், குத்தாலம் பிள்ளையின் காது பட வரம்பு மீறி பேசினர்.
அத்தான் சிவதாணு பிள்ளையும் ஊரோடு சேர்ந்து கொண்டார்.
"மாப்பிள... இவன.. இப்படியே விட்டா..என்ன வேணாலும் செய்வான்.. பேசாம போலீஸ்ல பராதி கொடுத்திருவோமென" - குத்தாலம் பிள்ளையை வற்புறுத்த, ஆவேசத்துடன் மாமனாரே மருமகன் மீது புகார் கொடுத்திருந்தார். சில மணிநேரத்துக்குள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தான் மகேஷ். என்னவோ? என்ன குழப்பமோ தெரியவில்லை. அவன் போலீசாருக்கு பெரிதான எதிர்ப்பெதுவும் தெரிவிக்க வில்லை. என்னவோ மாதிரியிருந்தான். பித்து பிடித்த மனநிலையில் சிறை கதவுகளுக்குள் இருந்தான் மகேஷ்.
இருமகள்களின் வாழ்க்கையை நினைத்து குத்தாலம் பிள்ளை இடிந்து போயிருந்தார்.
"அந்த படுபாவிக்கு கைல உன்னைய புடிச்சி கொடுத்திட்டேன்னே... அது இப்ப நம்ம வம்சத்தையே அழிச்சிருக்கும் போலிருக்கே? " -நீலாவின் முன்னின்று கண்ணீர் வடித்தார். தன்னை நினைத்து வெடித்து அழுது நொந்து கொண்டாள் நீலா. சோகம் மேலோங்க அப்பாவும் மகளும் ஆஸ்பத்திரியில் இருந்து தங்கையை கவனித்துக் கொண்டனர். ஆறேழு நாளாகியும் நினைவேதும் திரும்பாமல், மயக்க நிலையிலேயே இருந்தாள் வசந்தா.
சம்பந்தப்பட்ட அனைவரின் மனங்களும்,
சோகம் என்பது என்ன?
துயரம் என்பதற்கான அடையாளம்தான் என்ன? துன்பத்தின் வரையறை என்ன?
- என்பது போன்ற கேள்விக்கான விடைகளை அனுபவித்து களைத்திருந்தன. எட்டு நாட்கள் சிறை வாழ்க்கையில் முற்றிலும் ஒடிந்திருந்தான் மகேஷ். கண்களுக்கு கீழே அயற்சியின் அடையாளமாய் கருப்பாய் சிறுகோடு போல. நறு நறுவென வளர்ந்திருந்த எட்டு நாள் தாடி, அவன் அகத் துயரத்தை அப்பட்டமாய் பறைசாற்றுவது போலிருந்தது.
என்ன சொல்லி நீலாவை சமாதானம் செய்வது?
-என யோசித்தான்.
என்ன சொல்லி ஊராரை, உறவுகளை, சட்டத்தை நம்ப வைப்பது? -என யோசித்தான்.
காமம் என்பதை இதுவரை அனுபவித்திராத தனக்கு, காமக்கோழி என்ற பெயர் வந்தது எப்படியென யோசித்தான்.
எதனால் வசந்தா கிணற்றுக்குள் விழுந்திருப்பாள்வென யோசித்தான்.
எந்த ஒரு எதிர்ப்பும் எழுப்பாமல் தான் இப்படி இருப்பதற்கான காரணங்களை சிந்தித்தான்.
சிந்தனைகள் அவன் எண்ணமெங்கும் கேள்வியெழுப்பி, அலையலையாய், மலைமலையாய் தாவிச் செல்லும் குரங்குகளைப் போல, எங்கெல்லாமோ அழைத்து சென்றது. தெளிவாகத் தேடியும் கண்களுக்கு அகப்படா குண்டூசியை போல, தெளிவாக சிந்தித்தும் தீர்க்கமான முடிவு கிட்டிய பாடில்லை. அரைகுறை உறக்கத்தோடு அன்றைய இரவும் கழிந்தது.
ஒன்பதாம் நாள் காலையில் தன் காதில் விழுந்த வார்த்தைகளால், தூக்கம் விழித்து சிறிதான பதட்டத்திற்குள்ளானான் மகேஷ். ஆமாம். சிறைக்கு வெளியே மாமனார் குத்தாலம் பிள்ளைக்கும் இன்ஸ்பெக்டருக்குமான உரையாடல் அரைகுறையாய் காதில் கேட்டது.
"அப்ப.. கேஸ வாபஸ் வாங்குறீங்களா"
"ஆமா சார்... எல்லாரும் சொன்னதுனால நானும் ஒரு குழப்புத்துல புகார் கொடுத்திட்டேன். கிணத்துல விழுந்த என் மக சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு எல்லா விஷயமும் மனசிலாச்சு "
இன்ஸ்பெக்டர் ரெம்ப பந்தா காட்டினார். அருகில் நின்றிருந்த ரைட்டரிடம் உயரதிகாரிக்கே உரித்தான தோரணையில் பேசினார்.
"என்னையா.. இவரு சொல்லுறது எல்லாம் உண்மையா.. அந்த பொண்ணோட வாக்குமூலம் என்ன?"
"உண்மைதான் சார்... தோட்டத்துல கரண்டு ஷாக் அடிச்சுதான் அந்த பிள்ளை கிணத்துல விழுந்துச்சாம்.. அந்த பையனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்"
சம்பாஷணைகளை கேட்ட அம்மாத்திரத்தில் ஒருவித புளகாங்கித மனநிலைக்குள் விழுந்தான் மகேஷ். பொங்கி வந்த அழுகையை அடக்கியதால் உதடுகள், சிலந்தி வலையில் சிக்கிய தட்டாம் பூச்சி இறகாய் படபடத்தது.
காரில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மாமனாரும், மருமகனும் மருந்துக்கு கூட பேசிக்கொள்ளவில்லை. தன் பராதியால்தான் தன் மாப்பிளைக்கு இப்படி ஒரு அவமானம் என்பதை குத்தாலம் பிள்ளையால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. மகேசும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை. அசாத்திய மௌனம் இருவருக்குள்ளும். திறந்திருந்த கார் கண்ணாடியின் வழி, மத மதவென வந்து மோதிய காற்றினாலோ என்னவோ, இருவரின் கண்களிலும் கண்ணீர் துளிகளின் அடையாளங்கள்.
வசந்தாவை டிஸ்சார்ஜ் செய்வதற்காக வழியில் ஆஸ்பத்திரியில் இறக்கி கொண்டார் குத்தாலம் பிள்ளை. தனியாக வீடு வந்திறங்கி, தயங்கி தயங்கி ஒருவித ஆவேச மனநிலையில் வீட்டுக்குள் நுழைந்த மகேஷின் நெஞ்சோடு அன்பும், அழுகையும் கலந்த அட்டை பூச்சியாய் ஆவேசமாய் வந்து ஒட்டிக்கொண்டாள் நீலா. சந்தோசம் மேலோங்க சின்னஞ்சிறு துகள்களாகி காற்றில் மிதந்து கொண்டிருந்தான் மகேஷ்.
மகிழ்ச்சியின் பெருமிதத்தில், அழுகையின் விம்மலோடு ஆனந்த கண்ணீருடன் நீலா பேசினாள்.
"வசந்தா.. மட்டும் கரண்ட் ஷாக் அடிச்சு, கிணத்துல விழலைண்ணா... நான் இன்னும் உங்கள வெறுத்திட்டுத்தான் இருப்பேன்.".- என்றாள்.
தன் மீதிருந்த நெடுநாள் பழி நீங்கிய மகிழ்வில், முதன் முதலாக உணரும் நீலாவின் ஸ்பரிசத்தில் அவளை ஆனந்த பெருக்குடன் ஆரத்தழுவிக் கொண்டான் மகேஷ். விம்மி விட்ட இருவரின் பெருமூச்சில் மொத்த சோகங்களும் தூள் தூளாகியது.
பொங்கி எழும்பும் உணர்ச்சி பிரவேசத்தில், காற்றுப் புக முடியா இடைவெளியில் இரு உடல்களும் கட்டித் தழுவிக்கொள்ள, இதுநாள் வரை நடக்காமல் இருந்த மன்மத ஆட்டத்தின் அசைவிற்கு, அவ்வீட்டின் "படுக்கையறைகட்டில்" தன்னை தயார் செய்து கொண்டது.
தெரிசை சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks