செவ்வாய், 23 அக்டோபர், 2012

கொலுப்போட்டி




வெகு நாட்களுக்கு பிறகு அன்று கொஞ்சம் திருப்தியாக குளித்தேன்.. வழக்கமாக நான் எந்நாளும் குளித்தாலும், எப்போதும் அது ஒரு அவசரக் குளியலாகவே இருக்கும்.. ஆனால் இன்று மிகவும் அனுபவித்துக் குளித்தேன்.. சிறு வயதில் இருந்தே எனக்கு குளிப்பதென்றால் அலாதி பிரியம் தான்... அதிலும் அம்மணமாக ஆற்றில் குளிக்க சொன்னால் ஆயிரம் முறை வேண்டுமானாலும் குளிப்பேன்.. வெக்க கேடு தான்... என்ன செய்ய? ஆத்மார்த்த குளியலின் சுகம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தெரியும்... என் பள்ளி நாட்களில் காலையில் குளிக்க சென்று விட்டு மாலையில் திரும்பிய நாட்களும் உண்டு.... நீரியானைக்கு பொறந்த பய??? என்று என் அப்பாவே என்னை திட்டி இருக்கிறார்கள்...

குளிர குளிர குளிக்கும் போது உடம்போடு மனமும் சுத்தமாகி தெளிவடைவதாய் எனக்குள் ஒரு எண்ணம்.... உன் பொழுது போக்கு என்ன? என்று கேட்ட ஆசிரியரிடம் “ நல்ல குளிப்பேன் சார்”.. என்று கூறி பெருமை பட்டுக் கொண்டேன்..
சரி,, விசயத்துக்கு வருவோம்... இன்று இந்த இன்ப குளியலுக்கு காரணம்,,,என்னை எங்கள் ஊரில் உள்ள வீடுகளுக்கு சென்று கொலுப் போட்டிக்கு மதிப்பெண் இடச் சொல்லி இருந்தார்கள்... ஏதோ கவர்னர் பதவி கிடைத்த மாதிரி எனக்கு சந்தோசம்... ஏனென்றால் மிகச் சிறிய வயதில் இப்பொறுப்பை எனக்கு எங்கள் ஊர் வழங்கி இருந்தது.. வழக்கமாக பணி நிறைவு பெற்றவர்களே போன நவ ராத்திரிக்கி கூட வந்து மதிப்பெண் இட்டார்கள்... வயதான நல்லமுத்து வாத்தியாரும் அவருடன் உதவிக்கு ஒரு பையனும் வந்து எல்லோர் வீட்டையும் பார்வை இட்டார்கள்... கீழத்தெரு ரமா அக்கா வீட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது... மதிப்பெண் இட்ட நல்ல முத்து வாத்தியார்  அவர் மாமா என்ற குழப்பமும் ஏற்ப்பட்டது... அது வழக்கமாக உள்ளது தான்... எங்கள் ஊர் விழாக்கள் அனைத்தும் தடபுடலாக ஆரம்பித்து, பின்பு சிறிது மனக் கசப்பில் தான் முடியும்...
இந்த வருடம் நல்லமுத்து ஆசிரியர் ஆரம்பத்திலேயே “என்னால முடியாதுப்போ??? கண்ணு பத்த மாட்டங்கதுல்லா??? என்று கூறி நைசாக நழுவி விட்டார்... விழாக்குழுகாரர்கள் பிரசிடன்ட போய் சொல்லி இருப்பார்கள் போலும்.... கடைசியில் ஊர் பிரசிடென்ட் தான் என்னிடம் கேட்டார்.... நவ ராத்திரிதினத்திற்கு ஒரு வாரம் முன்னால்... ஒரு நாள் மாலையில் வலிய வந்து என்னிடம் பேச்சு கொடுத்தார்.
                                                                                 “என்னப்போ இன்னிக்கி ரெம்ப லேட் ஆயிட்டு...” என்றார் என்னிடம்...

“ஒண்ணும் இல்ல னே... இப்பம் பரிச்சைலா....” .இது நான்..

“நவ ராத்திரிக்கு எத்ர நாள் லீவுடே...”

"மூணு நாளுன்னு நெனைக்கேன்.. விழா ஏற்பாடெல்லாம் ஆயிட்டானே?"

"ஆயிட்டே......இருக்கு.... பயலுவோ பாதிதான் சாமிக்காக விழா நடத்துகானுவோ??  மீதி சண்டைகில்லா பிளான் போடுகானுவோ.... போதும்பா.... ஊருக்கு ஒளைச்சது??? அடுத்து முறை வேண்டாம்பா... உங்க ஊர் பஞ்சாயத்து..... "- பொரிந்து தள்ளினார்.... அவர் வாயிலிருந்து சில எஞ்சில் சிதறி என் முகத்தில் விழுந்தது... துடைத்து கொண்டேன்.... அவர் கூறியதற்கு ஆதரவாக சிரித்து கொண்டேன்...

"போன தடவை நடந்தது.....உனக்கு தெரியும்லா... சாமியை தூக்கிட்டு சர்ச் முன்னாடி போய் ஆடிரிக்கானுவோ.... ஏய்.... நம்மளுக்கு நம்ம சாமி பெருசுன்னா,,அவனுகளுக்கு அவனுவ சாமி பெருசுடே..."

பிரசிடன்ட் பேச்சை நிறுத்துவதாக தெரிய வில்லை... தொடர்ந்து பேசினார்... 

“அந்த காலத்துல ரூவா கொடுக்கான்னு இடத்தை வித்தானுகல்லா... அவனுகல சொல்லணும்... ஒரே  ஊருக்குள்ள இப்ப மல்லு கட்ட வேண்டி இருக்கு... ஆரம்பதில்ல மூணு குடும்பம்... இப்பம் முப்பத்தியேழு வீடுல்லா இருக்கு...”. சற்று மூச்சு வாங்கி கொண்டார்... பின்பு மெதுவாக “67 வோட்டு இருக்குடே....” “போன தடவை விளையாட்டா ஆரம்பிச்சு ..கத்தி குத்துலேலா முடிஞ்சது....   “இந்த தடவை என்னெல்லாம் திருக்கூத்தோ???”  பேசி முடித்து பெருமூச்சு வாங்கினார்....

"இந்த தடவை ஒண்ணும் நடக்காதுனே.... கடவுள் மேல பாரத்தை போட்டு ஆரம்பிக்க வேண்டியது தான்..... "மணியை பார்த்தேன் நழுவும் நோக்கத்தோடு......

"சரி.... இந்த தடவை கொலு போட்டிக்கி மார்க் நீ போடுன்னா..."

"அண்ணே.... நானா?? நல்ல முத்து சார்.. இருகாருல்லா???"

"அவரு பயப்பிடுகார் டே... போன தடவையே படாதபாடு படுத்திட்டார்...."
சற்று ஆச்சரியம் காட்டினேன்....

“நான் எப்டினே... வேற ஆள் இல்லையானே???

"இருந்தா.... யாண்டே உண்ட சொல்லுகேன்.... பந்தா பண்ணாம வந்துருடே???"

சற்று தயங்கி ... பின் தலையசைத்து விட்டேன்...... அதன்  பொருட்டு இப்பொழுது  தயாராகிக் கொண்டிருக்கிறேன்....

எங்கள் ஊர் எனக்கு இப்பணியை வழங்கியதற்கு என் ஆசிரிய பணி கூடக் காரணமாக இருக்கலாம்.... எது எப்படியோ அவர்களின் வேண்டுதலுக்கு சரி என்று நானும் தலையசைத்தாகி விட்டது..... இனி மாட்டேன் என்றால் வழக்கமாக முடிவில் வரும் மனக்கசப்பு விழாவின் ஆரம்பத்திலே வந்து விடும்... எங்கள் ஊரில் நவராத்திரி விழா அவ்வளவு சிறப்பாக் கொண்டாடப் படும்... எல்லோர் வீட்டிலும் கொலு வைப்பார்கள்.. பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்... இந்த முறை பொம்மைகளை விற்பவன் ஏகப்பட்ட புது பொம்மைகளை கொண்டு வந்திருந்தான்... பல வீடுகளில் புது பொம்மைகளை வாங்கி வெகு சிறப்பாக கொலு வைத்திருந்தனர்... இந்த முறை பரிசு வழங்குவது கொஞ்சம் கஷ்டம் தான்....

குளித்து விட்டு வரும் போதே அய்யர் வீட்டு மாமி என்னைப் பார்த்து சிரித்தாகி விட்டது....ஒரு வேளை அவர்கள் வைத்திருக்கும் கொலுவிற்கு நான்தான் மதிப்பெண் இடப் போகிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போலும்...  தெருவில் ரெம்ப கெமையாக நடந்து வந்து கொண்டிருந்தேன்...  வரும் வழியில் யாருடைய வீட்டிலிருந்தோ வெளியில் தூக்கி எறியப்பட்ட உடைந்த பொம்மைகளை என்னிடம் பயிலும் ராஜனின் தம்பி ஜோசப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.... ஏற்கனவே நிறைய இடங்களில் எடுத்திருப்பான் போலும்.. ஒரு கவர் நிறைய உடைந்த பொம்மைகளை வைத்திருந்தான்.. அவன் உடல்,கை கால்களில் எல்லாம் அழுக்கு படிந்திருந்தது... ராஜன் நன்றாக படிப்பான்.. எனக்கு அவனை ரெம்ப பிடிக்கும்.. ஜோசப்பிற்கும் ராஜனுக்கும் ஒரே முக சாயல்.... எங்கள் ஊர் ஐந்தாறு கிறஸ்தவக் குழந்தைகள் என்னிடம் தான் படிக்கின்றனர்...

"டேய்... இதெல்லாம் எதற்கடா.. " என்று கேட்டேன்...

என்னை பார்த்ததும் கொஞ்சம் பயந்து பின் சிரித்து விட்டு ஓடி விட்டான்...  வீட்டுக்கு சென்று 250 கி பவுடர் போட்டு, எட்டு முதல் ஒம்பது முறை தலை சீவி சந்தனமிட்டு சொப்பனச் சுந்தரனாக மதிப்பெண் இட கிளம்பிக் கொண்டிருந்தேன்... இதற்கிடையில் என் அம்மாவின் மூலம் ஐந்தாறு சிபாரிசுகளும் வந்திருந்தன.....

ஓவ்வொரு வீடாக சென்று மதிப்பெண் இட்டுக் கொண்டிருந்தேன்.. ஒரு சில இடங்களில் லஞ்சக் காப்பிகளும் கிடைத்தன... பெரிய வீட்டு தாத்தாவிற்கு அல்லது ராஜா அண்ணன் வீட்டுக்கு முதல் பரிசு கொடுக்கலாம் என தோன்றியது..... இரண்டு வீட்டிலும் தான் மிகவும் நன்றாக இருந்தது.. இருவர் வீட்டிலும் நிறைய புது பொம்மைகள் வைத்திருந்தனர்... எனவே அவர்கள் இருவரில் ஒருவருக்கு பரிசு கொடுப்பதென முடிவு செய்தேன்... இருவர் பெயரையும் சிபாரிசு செய்யலாம்.... முடிவை விழாக்குழு எடுக்கட்டும்.. என்ற எண்ணத்தில் நடக்க எத்தனித்த போதுதான் கவனித்தேன்.... பின்னால் அந்த சப்தம் கேட்டது...

"சார்....,,, "ஜோசப் நின்று கொண்டிருந்தான்.

"என்னடா ஜோசப்... என்ன விஷயம்??"

“நீங்கதான் எல்லார் வீட்டிலையும் மார்க் போடுவீங்களா...??

“ஆமா டா... ஏன்...... என்ன விஷயம்??

“சார்... எங்க வீட்டிலையும் கொலு வச்சிருக்கோம் மார்க் போட வாங்க... சார்....

சட்டென்று சிரித்து விட்டேன்...

ஜோசப் சிரித்தான்....

“வாங்க சார்.... எங்க வீட்டுக்கும்...”. கெஞ்சினான்....

“டேய்... சும்மா இருடா...”. சமாளிக்கப் பார்த்தேன்...

ஆனால் அவனோ பட்டென்று என் கை பிடித்து, அவன் வீட்டருகே அழைத்துச் சென்றான்...

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த நான், அவன் கை விடுத்து நின்றேன்....
கொஞ்சம் கோபம் வந்தது...

ஜோசப் அழும் குரலில் “சார்...வாங்க சார்..... ப்ளீஸ்.....” என்றான்...

என்னால் மதச்சண்டை ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என மனதுக்குள் பதை பதைத்தேன்...

ஜோசப் வலுக்கட்டாயமாக என்னை அழைத்தான்...

அவனை பார்க்கப் பாவமாய் இருந்தது...
யாரவது கவனிக்கிறார்களா? என்று பார்த்து கொண்டே அவனுடன் நடக்க ஆரம்பித்தேன்..  அவன் வீட்டின் பின் பக்கம் என்னை அழைத்து சென்றான்.. வீட்டின் பின்புறத்தில் இருந்த சிறு கொட்டகைக்கு அழைத்து சென்றான்.. அங்கு “கலர் பேப்பர்”, “தென்னம் ஓலை”, “சுக்குநாரி கம்புகளை வைத்து ஒரு சிறு குடில் இருந்தது... உடைந்த பொம்மைகளை கொண்டு ஒரு குடில் உருவாக்கப்பட்டிருந்தது...அவர்களின் கிறிஸ்தவ முறையில் உருவாக்கி இருந்தான்.. அந்த பொடியன்..

அதில் என் மனதை தொட்ட விஷயம் என்னவென்றால், “மாடு”, “மேரிமாதா”, வைக்கோல் மெத்தையின் மீது குழந்தையாக இருந்தது இயேசு கிறிஸ்து அல்ல... நம்ம கிருஷ்ணர்... இயேசு கிறிஸ்து பக்கத்தில் கோபியர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.... மற்றொரு இயேசு பானை பானையாக ஏறி வெண்ணை திருடிக் கொண்டிருந்தார்.. உடைந்த பொம்மைகளைக் கொண்டும், அவன் வீட்டில் இருந்ததைக் கொண்டும் மிக நேர்த்தியாக கொலு அமைத்திருந்தான்... இல்லை... இல்லை... குடில் அமைத்திருந்தான்.. உண்மையிலேயே அசந்து விட்டேன்..


எனக்கென்னவோ இது வரை நான் பார்த்த கொலுவிலேயே இது தான் மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றியது.. இந்தியாவும், இங்கிலாந்தும் கைக்கொடுப்பது போலவும் இருந்தது அக் குடில் பொம்மைகள்.. இந்தக் கொலுவிற்குதான் முதல் பரிசு கொடுக்க வேண்டுமென்று நான் கூறினால் எங்கள் ஊர் மக்களும், விழாக்குழுவும் ஒத்துக் கொள்வார்களா????? என்ற யோசையுடனே அங்கிருந்து நகர ஆரம்பித்தேன்...

ஜோசப் என்னைப் பார்த்து... எனக்கு எத்தனை மார்க்கு சார்??.. என்றான்... அவன் வலது கையைப் பிடித்து, பிரித்து நூற்றுக்கு நூறு என்று எழுதி வட்டமடித்துவிட்டு நகர்ந்தேன்.. 

கடைசியாக ஒரு முறை திரும்பி குடிலைப்…..…..…..…..…..….. இல்லை….. இல்லை….. கொலுவைப் பார்த்தேன்... 

இயேசு கிறிஸ்துவும்,கிருஷ்ணரும் என்னை பார்த்து சிரித்தனர்......

வியாழன், 18 அக்டோபர், 2012

ஒரு வருட காதல்


சித்திரையில் என் நித்திரையை கலைத்து
வைகாசியில் உன் கண் ஆசி கிடைத்து
ஆடியில் உன்னிடம்  நாடி வந்து
ஆனியில் உன்னையே நாண வைத்து
ஆவணியில் உன்மேல் தாவணி போலாகி
புரட்டாசியில் உனக்கு  புகழாசி செய்து
ஐப்பசியில் உன்னிலே ஐக்கியமாகி
கார்த்திகையில் உந்தன் கீர்த்தியினை பெற்று
மார்கழியில் நீ வேறுகதி சேர்ந்த பின்பு
தையில் நம் காதல் பொய் என்றாகி
மாசியில் என்னை யோசிக்க வைத்து
பங்குனியில் என்னை பரதேசி ஆக்கிவிட்டாய் ..................

சனி, 6 அக்டோபர், 2012

ஜன்னல்




ஜன்னல் வழிஅவளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் ஒரு வக்கிரப் புத்திஎன்னை விட இரண்டு அல்லது மூன்று வயது அவளுக்கு அதிகமாக இருந்த போதும்அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் புத்திக்கு இல்லைஒருவேளை நான் அவளைப் பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் அதற்குக்  காரணமாக இருக்கலாம்அல்லது என் வயது காரணமாக இருக்கலாம்


 
எது எப்படியோ ஒரு இருபத்திமூன்று வயது இளைஞனின் பருவ இச்சை காரணமாகபலமுறை அவள் குளிக்கச் செல்லும் அழகினைவீடு பெருக்கும் அழகினைபாத்திரம் கழுவும் அழகினை மறைந்திருந்துக்  கண்டிருக்கிறேன்
பார்க்க அழகாகத்தான்  இருந்தாள்கொஞ்சம் கலர் தான்கருப்பு இல்லைநீண்ட நெடிய கனத்த தேகம்பிட்டம் தொட்டு நிற்கும் கருத்த தலைமுடிசிரிக்கையில் வலிந்து தெரியும் கன்னக்குழிகள்.  நெஞ்சுக் கூட்டுக்குள் அடைந்திருக்கும் முயல் முகங்கள்எந்நேரமும் வெளியே குதிக்கலாமென்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் துள்ளல் நடை.  உடல்உடை ஏனைய பாவனைகளில் நடிகை சரிதாவை ஞாபகப் படுத்தினாள்

அத்தனை அழகான முட்டை கண்கள்கண்ணுக்கு மையிட்டு கூர்மை செய்திருந்தாள்

அவளோடு பேசிப் பார்த்ததில்லைஎன் பக்கமிருந்து வெறும் ஏக்கப் பார்வைகள் மட்டும்அங்கிருந்து ஏதும் இல்லை.

  

அவள் குளிக்கச் செல்லும் போதும்குனித்து நிமிர்ந்து பெருக்கும் போதும் என் மனமெங்கும் குப்பைஎதேச்சையாக கண்களில் அவள் தட்டுப்படும்போது மட்டும்பார்த்து ரசித்த நான்இப்போது அவள் வருகைக்காகக் காத்திருக்கவும் தொடங்கினேன்என் வீட்டு மாடியின் பின்புறத்தில் அவள் வீடும் இருந்தது எனக்கு மிகவும் வசதிமகிழ்ச்சியும் கூட.

 

பார்த்தவுடன் பரவசப்படுத்தும் பேரழகியாய் இல்லா விட்டாலும்எங்கள் ஊரில் பலபேர் அவளைப் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்காமத்தைத் தவிர்த்து அவளைப் பார்கையில் அவள் நிலை சற்று பரிதாபத்திற்கு உரியதுதான்ஏதோ ஒரு பண்ணையாரின் கள்ள உறவிற்கு பிறந்தவளாம்அவள் அம்மா உயர் குடியில் பிறந்தவராம்ஆனால் ஒரு பண்ணையாரின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி சின்ன வீடாகி சிரழிந்தவராம்அம்மா சிரழிந்ததற்கு அடையாளமாய் ஒரு மகள்தன் வாழ்க்கை தன் மகளுக்கு வரக் கூடாதென்றுஒரு வரன் பார்த்து மகளுக்கு மணம் முடித்து வைத்துள்ளாள்.

 

நல்ல உறவில் பிறந்தப் பெண்ணிற்கே நல்ல மாப்பிளை கிடைப்பது கஷ்டம்இப்படி கள்ள உறவில் பிறந்தப் பெண்ணுக்கா மாப்பிளை கிட்டும்.  இருந்தும் படாத பாடுபட்டு ஒரு மாப்பிளையைக் கண்டு பிடித்துவிட்டாள்எங்கள் ஊர்தான்கொஞ்சம் வயசாளிஎங்கள் ஊர் பள்ளியின் கணக்கர் ராஜரெத்தினம்கால் கொஞ்சம் ஊனம்.  கொஞ்சம் ஆஸ்த்மா நோயாளி வேறுஅந்தப் பெண்ணுக்கு அந்த கல்யாணத்தில் மன மகிழ்ச்சியே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

 

நாற்பத்தெட்டு வயது புது மாப்பிளையை யாருக்குத்தான் பிடிக்கும்முகத்தில் சலனம் ஏதும் இல்லாமல், அழகாக அலங்காரம் செய்துஅசையாமல் நிற்கும் ஜவுளி கடை பொம்மை போல மணவறையில் இருந்தாள் அந்தப்பெண்.  ரெம்ப குஷியோடு ராஜரெத்தினம் தாலி கட்டினார்.  கிழவனின் முகம் அலங்கார பூச்சுகளால் பளபளத்தாலும்சுருக்கு விழுந்த தோல்கை நடுக்கம் ஆகியவை உண்மை வயதைக் காட்டிக் கொடுக்கவே செய்தது.  தேய்த்து கழுவிவைத்த செப்புப்பாத்திரமாய் இருந்தாலும்பழைய பாத்திரத்தில் புதுப்பொலிவு கிட்டுமோ?  தேய்ந்து மழுங்கிய கலப்பைநிலத்தை ஆழ்ந்து அரவணைத்து கீறுமோ?  எதைப்பற்றியும் யோசிக்காமல்அந்த இளந்தளிரை முதிர்க்கொடியோடு இணைத்துக் கட்டியது உலகு.

 

நேரடி சொந்தக்  காரனில் தொடங்கிதிருமணத்திற்கு வாழைக்  கட்ட வந்தவர்கள் வரைசாப்பாட்டுப் பந்தியில் உப்பு வைத்தவனில் தொடங்கிசாமியானா பந்தல் போட குழி தோண்டியவன் வரைராஜரெத்தினத்தை நினைத்து ஏக்கப் பெரு மூச்சு விட்டார்கள்இவர்களின் கல்யாணமான அன்று முதல்எங்கள் ஊரின் காம கண்கள்அந்த கிழத்தை நினைத்தே பொறாமை கொண்டன.

 

காத்திருந்து காத்திருந்து... கிழவன் நல்ல ஆளாத்தான்யா புடிச்சிருக்கான்... குட்டி சிக்குனுல்லா இருக்கா..."

 

 

"கால் கொஞ்சம் சரியில்லைன்னு இந்த ஊர்காரனுவே அவன படுத்தின பாடு... இப்ப பாரு... நொண்டி பயலுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சி... அம்சமான கிளியும் கிடைச்சிருக்கு...”

 

 

"கிழட்டு கிளிக்குத்தான்பட்டு குஞ்சலம் வாய்க்கும்னு சும்மாவா சொன்னாங்ககிழவன் யோகக்காரன்தான்."

 

என்பது போன்ற உரையாடல்கள்.

 

எனக்கு பக்கத்துக்கு வீடு என்பதால் என்னிடமும் பலபேர் விசாரித்தார்கள்என்னிடம் ரெம்ப குறைச்சலாகப் பேசக் கூடிய பல பேர்கள் கூட இதன் பொருட்டுஎன்னிடம் "பெரிதாக"   விசாரித்தார்கள்... 

 

மக்கா... உன் வீட்டு பின்னாடி தானடே... நீ பார்த்து... பேச்சு குடுத்து வைடே... வசதிக்கு இல்லாடாலும்.. அசதிக்காவது ஒதுங்கிக்கிலாம்...” என்று நமட்டுச் சிரிப்புடன் ராமு அண்ணன்தான் முதல்ல ஆரம்பித்தான்.

 

அப்புறம் பார்த்தால்....

 

ராத்திரி எதாவது சத்தம் கேக்குமா டே... உன் வீட்டுக்கு கிட்ட தானடே... ஆள் எப்டின்னு நோட்டம் பாருடே....” என்றான் கொரட்டி கோவிந்தன்.

 

பகல் புல்லா மத்தவன்... அதான் அந்த ரத்தின கெழவன் ஸ்கூல்ல கணக்கு பாக்கான்... ராத்திரி கணக்க புல்லா மாப்பிளைதான் பாக்குறான்” என்று என்னை கேலி செய்தான் எடுபிடி மாமன்.

 

உன்ட நல்ல பேசுவாளாம்லா.... இளம் ப்ராயம்லா...  வந்த ரெண்டு மூணு நாள்லேயே பார்ட்டியை அமுக்கிட்டேயடே... என்னை பத்தி கொஞ்சம் சொல்லு பா...” என்றான் முட்டைகோஸ் ராமசந்திரன்.

 

இப்படி எல்லோரும் கேட்க கேட்க எனக்கும் ஒரு இனம் புரியாத ஆசைஅவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனிக்கத் தொடங்கிஇப்போது அவள் வரும்வரை காத்திருக்கவும் ஆரம்பித்தேன்என் வீட்டில் இருந்து பார்த்தால் அவள் வீட்டுப்  பின்புறம் தெரியும்.  நான் இருப்பது அவளுக்குத் தெரியாதவாறு ஜன்னல் அமைப்பு இருந்ததால் எனக்கு வசதியாய் இருந்ததுஎல்லோரும் சொல்லச் சொல்ல என் பார்வையின் வீரியமும் அதிகரித்ததுகண்கொத்திப் பாம்பாக அவள் அவயத்தின் நீள அகலங்களைக்  கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

 

 காமம் இனிது.  கண்முன் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும் "காலம்கொடிது.  அவள் ஒரு பெண்னென்றோஅவளும் ஒரு உயிரென்றோ என்பதுமாதிரியான எந்த எண்ணமும் இல்லாமல் காமம் என்னை ஆட்டிப்படைத்தது.  ஆனால் அந்த வீட்டில் அடிக்கடிக் கேட்கும் அந்த கிழவரின் இருமல் ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லைஇது தவிர சராசரி வீடுகளில் கேட்கும் தண்ணீர் சிந்தும் ஒலி... பாத்திரங்கள் நகரும் ஒலி... துணி துவைக்கும் ஒலி... கதவு திறக்கும் ஒலி... வேறேதும் இல்லை.

 

அன்று ஒரு நாள்அந்த பெண்ணின் “சிரிப்பொலி”. பொல பொல பொல பொல பொலவென அழகான சிரிப்புமழை குறைவான சமயங்களில் அருவிகளிலிருந்து தண்ணீர் விழும் போது வரும் சப்தம் போல்கருங்கல் படிக்கட்டில் சில்லறைகளைச் சிதறவிடுவது போல்.  சிறுகுழந்தையின் அரையில் கட்டிய மணியெழுப்பும் ஒலியைப்போல்.  அம்மாதிரி... பொல பொல பொல பொலவென அழகாகச் சிரித்தாள்

 

முதன் முதலாய் காமம் விடுத்து அவள் சிரிப்பை ரசித்தேன்.  ஏதோ ஓன்று என்னை அவள் பக்கம் ஈர்த்ததால் ஜன்னல் வழி பார்க்கத் தொடங்கினேன்கிழவன் பள்ளிக்கூடம் போனதால் அவள் ஒரு பூனைக் குட்டியிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்பூனைக்குட்டியைத் தூக்கி பிடித்துஅதனை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்அது மெதுவாய்... அவள் முகத்தைகன்னத்தை நக்கியதுஅந்த மெல்லுணர்வில் கண்கள் சுருக்கிபூனைமுடிகள் மேலெழும்பிமுகமெங்கும் புல்லரிப்போடு சிரித்துக்கொண்டிருந்தாள்.  பூனை அவள் கைகளில் நெளிந்துகுழைந்து கொண்டிருந்தது.  அதன் பின்னங்கால்கள் இரண்டும் அவள் கனமான மார்புகளில் பதிந்திருந்ததுஇம்ம்...ம்..ம்.... யோகம் செய்த பூனை.  என் ஏக்கப் பெருமூச்சின் தாக்கம் சூரியனை ஒத்திருந்தது.

 

அதன் பின்பு பலமுறை அவள் சிரிப்பொலி கேட்கும்சிரிப்பொலி கேட்கும் போதெல்லாம் அவள் ஏதேனும் ஒரு விலங்கோடு விளையாடிக் கொண்டிருப்பாள்பூனைக்குட்டிஅணில்கோழிக்குஞ்சுகாகங்கள்கிளிகளென ஏதேனும் ஒன்றுடன் கொஞ்சிக் கொண்டிருப்பாள்.  அல்லது அவற்றிக்கு “சோறு” வைத்துக் கொண்டிருப்பாள்.  சில சமயம் நானும் ஒரு விலங்காக பிறந்திருக்க மாட்டேனா...? என்று ஏங்கியதுண்டு.  அவள் வீட்டு பின் முற்றத்தில் இருந்துதான் அவள் சாப்பிடுவாள்நானறிந்த வகையில்அவள் தனியாகச் சாப்பிட்டதில்லை

 

பூனையுடன் சேர்ந்து சாப்பிடுவாள்.

 

கோழிகளோடு சேர்ந்து சாப்பிடுவாள்.

 

அணிலுடன் சேர்த்து சாப்பிடுவாள்.

 

அவள் கையில் அமர்ந்து காகம் சாப்பிடுவதைக் கூடப் பார்த்திருக்கிறேன்அந்த பூனைகோழிகாகம்சாப்பிடுவதை விட இவள் குறைவாகத்தான் சாப்பிடுவாள்.


அந்த வீட்டில் சிரிப்பொலியும்விலங்குகளும் இல்லையெனில் அந்த கிழவர் இருக்கிறார் என்று அர்த்தம்நாளாக நாளாக ராஜரெத்தினத்தின் “ஆஸ்த்மா” நோய் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்ததுஇருமல் சப்தம் இப்போது அடிக்கடி கேக்கிறதுமூச்சு முட்டி ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.   அடிக்கடி அவர் இருமுவதும்அவள் அவர் நெஞ்சை தடவிவிட்டுமாத்திரை கொடுப்பதும் நடக்கும்ஒன்றிரண்டு வருடங்களாக கிழவரோடு அந்த பெண்ணும் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்இருந்தும் “ஆஸ்த்மா” கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஆயுளைக் குடித்துக் கொண்டிருந்தது.  

 

 யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் மேலும் கீழுமாய் வேகமாய் மூச்சிழுக்க  முயன்றுமுடியாமல் "சிவபதம்பற்றினார் கிழவர்.   ஊர்க் கூடி கிழவனை வழியனுப்பி வைத்ததுநெறைய புது மனிதர்கள் சாவு வீட்டில் தென் பட்டார்கள்அவள் பெரிதாக அழவில்லைசோகத்துடனான கேள்விகளின் அறிகுறிகள் அவள் முகமெங்கும்.  ஐந்தாறு நாட்களில் ஏனைய உறவினர்களும் செல்லஎவர் அழைத்தும் போகாமல் வீட்டில் தனியாகவே இருந்தாள் அவள்.

 

ராஜரெத்தினம் பணியில் இருக்கும் போதே இறந்ததால்வேலை அவளுக்கு கிடைக்குமென்று பேசிக் கொண்டார்கள்கிடைத்துக் கொண்டிருக்கும் ஓய்வூதியத்தை கொண்டு அவள் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தாள்.  கிழவன் இறந்த நாளிலிருந்து அவள் மீது ஊரார் கண்கள் இன்னும் அதிகம் நிலைத்தன.  உறுமீனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்கைப் போல்கருவாட்டு பானைக்குள் தலையிடக் காத்திருக்கும்மதில் ஓட்டுப் பூனை போல்ஆடாதுஅசையாது அவளைப் பற்றிய நினைப்பிலிருந்தனர் ஊரார் பலர்.

 

இறந்த சில நாட்களுக்குஅவள் வீட்டில் எதுவும் இல்லாதது போல் இருந்தது.  ஜன்னலின் அருகில் பலமணிநேரம் காத்துக்கிடந்தும் பலனேதுமில்லைஇருமல் ஒலிசிரிப்பொலிஎதுவும் கேட்க வில்லைசில சமயங்களில் சில விலங்குகள் மட்டும் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.


 
 சில நாட்களில் அவள் சிரிப்பொலி மீண்டும்.  அதே விலங்குகளோடு மீண்டும் எப்போதும்போல் கொஞ்சிக் கூலாவிக் கொண்டிருந்தாள்தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருப்பாள் போலும்.  என் தின வேளைகளில் அவளைக் கவனிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தேன்காமத்தோடுப் பார்க்க ஆரம்பித்த போதிலும்இப்போது அவள் சிரித்த முகத்தையும் ரசித்தேன்.

 

அன்று ஒரு வித்தியாசமான விலங்கொலி அவள் வீட்டில்...

 

வீல்...ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்று வந்த சத்தத்தில் விழித்துக்கொண்டேன்.

 

மணியைப் பார்த்தேன்அதிகாலை இரண்டு மணிஜன்னல்களைத்  திறந்து சப்தமின்றி அவளைக் கண்டேன்அவள் ஒரு நாய் குட்டி அருகில் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்அவள் சேலை முந்தானையில் “அதிர்ஷ்டக்காரப் பூனை” தூங்கிக் கொண்டிருந்ததுஅந்த நாய் குட்டி பிறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்கலாம்முகத்தில் வெள்ளையுள்ள செவலை நாய்க்குட்டிகண் விழிக்க வில்லைஅங்கும் இங்கும் உருண்டு கொண்டுநாக்கை வெளியில் துருத்தி கொண்டு... வீல்..ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... என்று கத்திக் கொண்டிருந்தது.

 


எங்கிருந்து இந்த நாய் குட்டியைப் பிடித்தாளோ
விவரம் கேட்டவள்...! மனுசனை உறங்க விடாமல்?  கொஞ்சம் திட்டிக் கொண்டேன்பக்கத்தில் சின்ன தட்டில் பால்சோறுஎல்லாம் வைத்திருந்தாள்நாய் குட்டி அத்தனையையும் தொட்டுப் பார்த்ததாக தெரியவில்லைஅது ஊஊஊஊஊஊ என்று கத்தியதுபின்பு ஓஓஓஓஓ என்று முனங்கியது.

 

தூக்க கலக்கத்தோடு இருந்த அவள் முகத்தில் ஏதோ ஒரு கலவரம்.  நாய் குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  நாய் குட்டி உருண்டதால் முந்தானை நழுவியதுநான் கண்களை விரித்துக் கவனிக்கத் தொடங்கினேன்.  நாய் குட்டி தன் சத்தத்தை நிறுத்தியதாக தெரிய வில்லைஅது மீண்டும் ஊளையிடத் தொடங்கியதுஊஊஊஊ...ஊஊஊஊவ்... நாக்கை வெளியே நீட்டிநீட்டிகத்தியது.  அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

 

இவளுக்கு வேறு வேலை இல்லைஎரிச்சல் பட்டுக் கொண்டேன்நாய்க்குட்டி சப்தமிட்டுக்கொண்டே இருந்தது.  கண்களை உறக்கம் தழுவியதால்உறங்கும் நோக்கோடு படுக்கையில் சாய்ந்தேன்.  நாய்க்குட்டியின் "ஊளைசப்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.  உறங்க முடியவில்லை.  எரிச்சலாக வந்தது.  தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன்.  ஐந்து பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்திடீரென்று நாய்க்குட்டியின் சப்தம் நின்றதுஇரவின் மௌனம் அவ்விடமெங்கும்.  ஒரு சிறு சத்தம் கூட இல்லைஒரு வேளை நாய்க்குட்டி இறந்திருக்குமோஆர்வம் தாங்காமல் எழுந்து ஜன்னல் வழிப் பார்த்தேன்.

 

அவ்வளவு தூக்கக் கலக்கத்திலும் என் கண்களிலிருந்து கண்ணீர்உணர்ச்சியோட்டதை என்னால் அடக்க முடியவில்லைஉடம்பிலும் ஒரு சிறு பதற்றம்அவள் தன் மார்பகத்தைத் திறந்து அந்த நாய் குட்டியின் வாயில் வைத்திருந்தாள்அதுவும் உடம்பெங்கும் உதறலோடு உறிஞ்சி...உறிஞ்சி... குடித்துக் கொண்டிருந்தது. துக்கம் தாளாத எனக்கு “ஒரு தாயிடம் ஒரு குழந்தை பால் குடிப்பதைப் போலிருந்தது". ஏனோ மேற்கொண்டு பார்க்க முடியாமல்சட்டென்று படுக்கையில் விழுந்த எனக்கு பல நிமிடங்கள் தூக்கம் வரவில்லைஅப்புறம் நானறியாத ஒரு வேளையில் தூங்கிப்  போனேன்.


விடியற்காலையில் எழுந்து மீண்டும் ஜன்னல் வழி அப்பெண்ணை கவனித்தேன்அவள் அந்த நாய் குட்டியோடும்பூனையோடும் சிரித்த முகத்தோடு விளையாடிக் கொண்டிருந்தாள்எனக்கு ஏனோ ஒரு தாய் அதன் குழந்தைகளோடு விளையாடுவது போலிருந்ததுஅன்று முதல் என் தாயின் “முகச்சாயலே” அப்பெண்ணிடமும் தென்பட்டது