வியாழன், 2 நவம்பர், 2017

மெழுகுவர்த்திகள்


இப்படி ஒரு பதிவை எழுதியே தீரவேண்டுமென்பது, பல நாட்களாக என்னுள் இருந்த உத்வேகம்.. ஆசிரியராக சில காலம் இருந்ததினாலேயோ அல்லது ஆசிரியர்களைக் கதாநாயகர்களாகப் பார்த்ததினாலோ என்னவோ, என் மனம் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.

ஆசிரியர் 1 - 

காக்கி நிக்கர் போடத் தொடங்கிய காலம்.  நிக்கரின் பின் புற ஓட்டையை “பெரிய அவமானமாக” நினைக்காத காலம். அவஸ்தையோடுப் பள்ளிக்குச் சென்ற மனம் மாறி, நண்பர்களை, விளையாட்டுகளை நினைத்துப் பள்ளிக்கு ஆர்வத்தோடு சென்ற காலம்.  அரசு நடுநிலைப்பள்ளி தெரிசனம்கோப்பு.  பள்ளி கொடிமரம் முதல், வேப்பமரம் வரை, உடைந்து கிடந்த செங்கலிருந்து, “ஒண்ணுக்கு” அடிக்கும் பாறைச் சுவர் வரை, ஒற்றை ஒவியமாய், மனதிற்குள் இன்னும் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.  முதல் காதல் ஏற்படுத்திய “டீச்சரின்” முகமும், முதல் தண்டனை ஏற்படுத்திய “முழங்கால் வடுவும்” நெஞ்சகத்துள் படபடக்கிறது.  “சின்னப் பையனாகவே இருந்திருக்கலாம்” என்ற ஏக்கம் வலுக்கிறது இதயமெங்கும் இப்போதும்......

அழகான பள்ளி.. இரண்டாம் வகுப்பென நினைக்கிறேன். முதல் முதலில் அவரைப் பார்க்கிறேன்.  ஒல்லியான நீண்டத் தேகம்.  வேஷ்டி சட்டையில் கொஞ்சம் அதிகமாக எண்ணை, பளப்பளக்கும் விரிந்த நெற்றி. கூர்மையான கண்கள்.  முத்து சார் அது.  ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பையனை மிரட்டிக் கொண்டிருந்தார்.  பயத்தோடு அவரைப் பார்க்கிறேன்.  நாளாக நாளாக அவருடைய வகுப்புகள், பேச்சுக்கள், என அவரின் மொத்த ரசிகனாகிப் போகிறேன்.  அவரின் செல்ல மணாவனாகிறேன். அப்பாவிற்கு அடுத்த படியாக அன்பையும், கண்டிப்பையும் ஓன்று சேர, சம விகிதத்தில் தந்தவர்.  முத்து சார் சொன்னால் “தாடகை மலையையும்” இழுத்து வர,  ஒரு “மாணவர் படை” எப்போதும் தயாராக இருக்கும். அழுத்தத்தோடு கதை சொல்வதிலும், உடல் மொழியோடு உறவாடுவதிலும் வல்லவர்.  “சிலரைப் பார்த்து சொல்லுவோம்லா.. அவர்ட என்னவோ இருக்குதுடேன்னு”.. அந்த “என்னவோ ஓன்று” அவரிடமும் இருந்தது.  மனதார ரசித்த முதல் ஆசிரியர். 

ஆசிரியர் 2

அதன் பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி, குறத்தியறை.  ஒன்பதாம் வகுப்பு. நிக்கர் பெண்டாகியிருந்தது.. மூக்குக்குக் கீழே புதிதாய் பூனை முடிகள். கழுத்தில் வெளித்தள்ளிய குரல்வளை தடிப்பு.  பையனா? இளைஞனா?- எனக் கணிக்க முடியாத ஒரு தோற்றம்.    “ஹெர்குலஸ் சைக்கிள்”, “லூனார் செருப்பு”, “கோனார் தமிழ் உரை”, “ரெனால்ட்ஸ் பெண்” என்பது போன்ற மறக்க முடியாத உன்னத தயாரிப்புகளினால் உலகை ரசித்தக் காலம்.  காதல் அதிகமாகவும், காமம் குறைவாகமும் ஆட்கொண்ட நேரம்.  கூட படிக்கும் பெண்ணிடம் பேனா வாங்கும் போது, எதிர்பாராமல் அவள் விரல் பட்ட, என் வலக்கையின் விரல்களை, தண்ணீர் படாமலும், சோப்பு போடாமலும், ஓரிரு வாரங்கள் “பாதுகாத்து” காதலில்(?) திளைத்தக் காலம்.

ஒரு ராஜா வேடத்திற்குரிய அனைத்துத் தகுதிகளோடும், முகப்பொலிவோடும் அவரைப் பார்க்கிறேன்.  வகுப்புள்  அவர் நுழைவது, ராஜாங்க தர்பாரில் “ராஜா” நுழைவது போலவே இருக்கும்.  அந்த மாதிரி ஒரு “சுருள் ஹேர் ஸ்டைல்”, “மீசை முறுக்கு”, “சபாரி டிரஸ்” என அனைத்திலும்.... தனித்துவம்.  முதுகு தண்டு வளையாத நிமிர்த்த நன் நடை.  கால் தடம் பதிந்த செந்நிற தோல் செருப்பு.  முகத்தின் ஒரு பக்கத்திலும் மட்டும் வழிந்தோடும் புன்னகை.  அம்மைஅப்பன் பிள்ளை சார். அவரின் கணித பாட விவரிப்பும், சாக்பீசைப் பிடித்து எழுதும் வேகமும், அழகான கையெழுத்தும், இடை இடையே தொடர்ச்சியான கேள்விகளும், சரியான பதிலுக்கு, அருமையானப் பாராட்டும், தவறானப் பதிலுக்கு, அவருக்கே உரிய பாணியிலான நக்கலான மறு படிகளும்.. அப்பப்பா..... சொல்லி மாளாது. அத்துணை இனிமையான நேரங்கள்.  “ஐம்பது நிமிட வகுப்பு, அதற்குள் முடிந்து விட்டதே” -என்று கவலைப்பட்ட காலங்களும் உண்டு.  அவ்வளவு நளினமும், நடிப்பும் கலந்த,  ஒரு விதமான ஏகாந்த கற்ப்பித்தல் முறை அவர் நடை முறை...  Hats off Sir.

ஆசிரியர் 3

தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோயில்.  இப்பெயரை எழுதி முடித்ததும் ஒரு வித புத்துணர்வை என்னுள்ளே உணர முடிகிறது.  வானுயர வளர்ந்த மரங்களும், கலர் கலரான சுடிதார்களும், சேலைகளும், கற்கட்டிடங்களும், ஓட்டுபுரை கேண்டீனும், இதுவரை வகைப்படுத்தப் படாத ஒரு இனிமையான மணம் வீசும் நூலகமும், செந்நிற விளையாட்டு திடலும், அடுத்தடுத்து நினைவிற்கு வந்து கொண்டே இருக்கின்றன. 

வாழ்வியலில் எது சரி.. எது தவறு என ஓரளவிற்கு கணிக்க தொடங்கிய காலம்.  சக மனிதர்களோடு ஒப்பிட்டு பார்த்து, நம் நிலை உயர வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்ட காலம்.  "வறுமை என்பது இழிவல்ல.. வாழும் நிலையே அடிப்படை" என்பதை அரைகுறையாய் புரிந்து கொண்ட நேரம்... 

வழுக்கை தலையோடும், நரைத்த தாடியோடும், வற்றாத புன்னைகையோடும் அந்த முகத்தை பார்க்கிறேன்.  அவரின் முதல் வகுப்பு அது.. ஒவ்வொருவராய் சுய அறிமுகப்படுத்த சொல்லுகிறார்.  என் முறையில் நான்,,

“சிவா, அரசு மேல்நிலை பள்ளி, குறத்தியறை, from தெரிசனம்கோப்புஎன்கிறேன்.

“தெரிசனம்கோப்பா????”- என்று ஆச்சர்யம் கலந்த மறுபதில் அவரிடமிருந்து வருகிறது. ஒரு வேளை இடம் தெரியவில்லையோ என்று நான் மேலும் விளக்குகிறேன்.

“ஆமா சார்.. பூதப்பாண்டி தெரியுமா?? அதற்கு அடுத்ததாக.. ஒரு மூணு கிலோ மீட்டர் வரும்” -  என்கிறேன்.

“ஓ.. அப்படியா.. தெரியலையே” – என்று கூறி நமட்டு சிரிப்பு சிரித்தார்.
பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் எங்களூரை சார்ந்தவர் என்று.

பின்னொருநாளில்  அவரே சொன்னார்.. “நீ.. எனக்கே.. தெரிசனம்கோப்பிற்கு வழி சொன்னவன்லா..”  கொஞ்சம் வெக்கமாக இருந்தது.

அவர் உமையொருபாகன் சார்... Listen first, then respond well என்பார்களே. அதற்கு சரியான எடுத்துக் காட்டாய் திகழ்பவர்.  ஐந்தாறு நிமிடங்கள் அவரோடுப் பேசிக்கொண்டிருந்தால், ஆண்களுக்கும், அவரோடு ஒரு மரியாதையை நிமித்தமான “காதல்” வந்து விடும்.   பேச்சு மொழியின் வீரியத்தை எனக்கறிய செய்தவர்.  அழகழாய் பாடங்களையும், அற்புதமாய் கதைகளையும் விவரிப்பவர்.  அழகான ஆங்கில உச்சரிப்புக்கு சொந்தக்காரர்.. ஆசிரியராக மட்டும் செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்தியில், மாணவர்கள் மனநிலையிலும் கருத்துக்களைத் தருபவர்.  சாதி, மதங்களைக் கடந்தும், “சகோதரத்துவம்” பாராட்டுபவர். இளமையாய் சிந்திப்பவர் அல்லது இளைஞர்களைப் போல் சிந்திப்பவர்.  இந்து இறையாண்மை மிக்கவர்.  பல வருடம் கழிந்த பின்பும் மாணவர்களின் பெயர்களை மறக்காது அழைக்கும் ஞாபகம் மிக்கவர். அவர் வகுப்பில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதலாம். 

மேல் கூறிப்பிட்டவர்கள், எனது எண்ணம் கவர்ந்த பல ஆசிரியர்களில், ஆகச் சிறந்தவர்களாக என் மனதிற்குப் பட்டவர்கள்.  அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆராயாமல், வகுப்பு நேரத்தில் என்னைக் கவர்ந்த நினைவுகளின் தொகுப்பே இது..

இறுதியாகச் சொல்ல விரும்புவது இதைத்தான்...

“இளைஞர்களே... ஆசிரியர்கள், சினிமா நடிகர்களை விட உயர்ந்தவர்கள், போற்றுதலுக்குரியவர்கள்”, முடிந்தால், மிகவும் பிடித்த ஒரு ஆசிரியருக்கு “ஒரு கட் அவுட்” வைத்து பாலாபிஷேகம் பண்ணுங்கள். அல்லது  வருடங்கள் கடந்திருந்தாலும் அவரைக் கண்டு பிடித்து, கட்டியணைத்து, கையாவது குலுக்குங்கள்.. உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும்”


----தெரிசை சிவா.

4 கருத்துகள்:

Thanks