புதன், 10 ஜனவரி, 2018

பேண்டு

அப்பா அப்படிக் கூறியதில் அவனுக்கு வியப்பேதும் ஏற்படவில்லை. அவன் எதிர்பார்த்தது தான். இருந்தாலும் அவன் ஆசையாய்  கேட்டதும், அவர் சட்டென்று அப்படிக்கூறியது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.  சாதாரணமாகவே அப்பா, முரட்டுத்தனமானப் பேச்சுக்குச் சொந்தக்காரர். திண்டுக்கு முண்டு பேசுவதில் கெட்டிக்காரர். அன்பு கூட அவரிடமிருந்து ஒரு அதிகாரமாகவே வெளிப்படும்.  சிவப்பேறிய கண்கள் எப்போதும் சினத்தைக் கக்குவதாகவே தோன்றும்.  சிறு வயது முதலே, அம்மா இல்லாத, கரடு முரடான வாழ்க்கையைக் கடந்து வந்ததாலோ என்னவோ, எப்போதும் கொஞ்சம் கடுகடுப்பாகவே இருப்பார். அல்லது அப்படி இருப்பதாய் காட்டிக் கொள்வார்.

மம்பட்டி பிடித்து கிளரும் போதும், எருமை பசு மாடுகளுடன் புழங்கும் போதும், கலப்பைக் கட்டி உழும் போதும் மட்டுமே, அப்பா கொஞ்சம் நிதானமாக இருப்பதாகத் தோன்றும்.  அவன் அம்மா பாவம்.  சராசரியான கிராமத்து அம்மா. பல நேரங்களில் அப்பாவுடன் தர்கித்தும், சில நேரங்களில் சண்டையிட்டும், வாழ்கையைக் கழித்துக் கொண்டிருந்தார். அப்பாவின் கோபத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில், கண்ணீரைப் பரிசளித்துச் சண்டைகளை நிறைவு செய்வாள். அன்றும் அப்படித்தான்.

“இப்ப அவன் என்ன சொல்லிடானு அவன்ட இந்த நிலை நிக்கியோ? நாலு ஆளுக வந்தா கோரச்சலாலா இருக்கு.  மாட்டு தொழுவ இடிச்சி வீட்டை வார்த்து கட்டினா நல்லா தானா இருக்கும்”

அக்னி நட்சத்திர சூரியன் நெருப்பை உமிழ்வது போல் கோபத்தை சிந்தினார் அப்பா.

“கோரச்சலா இருக்கா?... ஏன்... இங்க எல்லாரும் என்ன சீலை இல்லாமலா இருக்கோம்.  இந்த மாட்ட வச்சிதான் அவன் படிச்சதே.. இப்ப கொஞ்சம் காசை கண்டதும்.. மாடு கோரச்சலா இருக்கா... நீ வாயை மூடு மூழி”.. - கோப மிகுதியில் கன்ன சதைகள் கணியாட்டம் ஆடியது.

அம்மா விடுவதாக இல்லை....

“நாப்பது வருசமா வாயை மூடிட்டுதான் இருக்கேன்..  நல்லப்போம் பிள்ளையோ வீடு வைக்கணும்னு சொன்னா... எல்லா அப்பனும் சந்தோசம்தான் படுவானுகோ... இங்க மட்டும்தான் இந்த கூத்து... உமக்கு மாடு முக்கியம்னா... கண்ணப்பனுக்கு களத்துல ஒரு தொழுவத்த போட்டா தீர்ந்து... மாசமானா உள்ள வாடகையை கொடுத்தா போச்சு... மாட்டா தலைமாட்டுல கட்டிட்டுத்தான் படுப்பேன்னு அடம் புடிச்சா என்ன செய்ய முடியும்”..

“நீ கண்ணப்பனுக்கு களத்துல போய் இரு மூழி.. ஏன் மாட்ட போக சொல்லுக... இன்னைக்கு மாடு கோரச்சலா இருக்கு... நாளைக்கு நாலு ஆளுக வரும் போது,  நாமளும் கோரச்சலா இருப்போம்.. போட்ட்டி..போட்ட்டிடி..  நான் இருக்குற வரை இப்படித்தான் இருப்பேன்.  நான் செத்த பொறகு, எங்க வேணாலும் வீட்டை கட்டுங்கோ”...

அம்மாவுக்கு வெப்ராளமாக வந்தது.

“நீரு இப்படியே இரும்.. நானும் பிள்ளையும் எங்கயாவது போயிறிடுறோம்.. வயசான காலத்துல ஒத்தையில இருந்து அழுந்த போறேரு”..

“நான் யாண்டி... அழுந்த போறேன்.  பொங்கதுக்கு நெல் இருக்கு.. கறிக்கு தேங்காய் இருக்கு.. உங்க அப்பன மாறி ஒண்ணும் இல்லாம, எங்கப்பன் என்னைய விடல”..- ஆக்ரோசமாகக் கத்தினார் அப்பா.

இருவர் பேச்சையும் கேட்கக் கேட்க, அவனுக்குக் கோபமாக வந்தது.  

இருவரும் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை.


“அய்யோ... கொஞ்சம் பேசாம இருக்கேளா ரெண்டு பேரும்.. வீடும் வைக்காண்டாம்... ஒரு மண்ணும் வைக்காண்டாம்.  மனுஷன் ரெண்டு நாளா நிம்மதியாக இருந்திட்டு போயிருகேன்”.- கோப மிகுதியைத் தாங்க முடியாமல், தொண்டை கிழியக் கத்தினான் அவன்.  அவன் கோப முகத்திற்கு இருவரும் சிறிது நேரம் அமைதியானார்கள்.  மழை பெய்து முடித்த அமைதியாக,  வீடும் மௌனித்தது.

துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தான்.  விவசாய குடும்பத்தில் பிறந்து, தட்டுத் தடுமாறிப் படித்து, விடாத முயற்சியால் வெளி நாட்டு வேலையில் சேர்ந்து, செட்டிலாகி, விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான்.  இரண்டு வருட சேமிப்பை வைத்து இருக்குமிடத்தில் ஊராருக்கு நிகராக ஒரு வீடு வைத்து விட வேண்டுமென்பது அவன் கனவாக இருந்தது.  

மகன் ஆசைக்கு மறுப்பு சொல்லாத  தந்தைக்கு, மாட்டு கொட்டகையை இடிக்க மனம் வரவில்லை.  மாட்டு கொட்டகை ஒரு ஓரமாக இருக்க, மீதி உள்ள இடத்தில் வீடு கட்டினாலென்ன..! - என்பது தந்தையின் எண்ணமாக இருந்தது.  மாட்டு தொழுவத்தை அகற்றிவிட்டு, மொத்தமாக பெரிய வீடாக வைக்க வேண்டுமென்பது மகனுக்கும், தாய்க்குமான எண்ணம். இந்த இரண்டு எதிர் மறையான எண்ணங்களின் விவாதப்பேச்சுகளே, இத்தனை நேரமாய் மேலே எழுத்துக்களின் மூலம் விவரித்தது.

பழைய வாழ்கை முறையில் ஒன்றிய அவன் அப்பாவின் வாழ்வியலால் பலமுறை அவன் சங்கடப்பட்டதுண்டு.  சட்டையில்லாமல் வெளியில் சுற்றுவது, தொடை தெரிய வேஷ்டியைத் தூக்கிக் கட்டுவது, வெற்றிலையைப் போட்டு கண்ட இடங்களில் துப்புவது, என்பதெல்லாம் அவரின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள்.  இவனுக்கோ, சிறிய அவமான நெருடல்கள்.  சின்ன வயதில் சட்டம்பியாய் திரிந்த அப்பா, அவன் வளர்ந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதும் அதே தொனி குறையாது, வெளியில் உலவுவது பல நேரங்களில் எரிச்சலாகவும், சில நேரங்களில் அவமானமாகவும் அவன் உணர்ந்ததுண்டு.  அப்பாவுக்கோ படிப்பு முக்கியம், அதே நேரம் மகன் விவசாயமும் பார்க்க வேண்டும். மாடு கன்றுகளோடு புழங்க வேண்டுமென்பதும் அவர் எண்ணம். 

“லேய்.. கணேஷா......மக்கா.. இன்னைக்கு உனக்கு லீவாதானா.. இந்த கலப்பையையும், மரத்தையும் கொண்டு வந்து வயல்ல தருவியாடே.. நான் உரத்த கொண்டுட்டு மொதல்ல போறேன்..”

“இந்த மாட்ட அவுத்து தெக்கு பத்துல விடுகேன்.... கொஞ்சம் பார்த்துக்கோ மக்கா... நாரோயில் வரைக்கும் போயிட்டு வந்திருகேன்.”

“நாளைக்கி காலையில கொஞ்சம் தோப்பு வரைக்கும் வாடே... தேங்காய் வெட்டுக்கு ஆள் வருகு... ஆத்து சைடுல மட்டும் கொஞ்சம் பொறக்கி தந்திரு மக்கா...”
--- என்பது மாதிரியான உபரி வேலைகளுக்கே அப்பா, அவன் உதவியை வேண்டுவது.  ஆரம்ப காலங்களில் இம்மாதியான வேலைகளில் அவனுக்கும் ஒரு ஈடுபாடு இருந்தது.  பின்னாளில் இவன் ஈடுபாடு குறைய அவன் அம்மாவின் பேச்சும், செல்லமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

“படிக்கிற பிள்ளையை எதுக்கு மாடு மேய்க்க சொல்லுகியோ... அவன் கூட படிக்கிறவங்கள்லாம் பார்த்து சிரிக்கதுக்கா.. --- என்பதைப் போல் அவன் அம்மா ஏதோ ஒன்றை மாறி மாறிச் சொல்ல, அவனுக்கும் இம்மாதியான வேலைகள் செய்வது கௌரவ குறைச்சலாகப் பட்டது.  முதலில் வேண்டா வெறுப்பாக செய்ய ஆரம்பித்தான்.  பின்னர் ஏதேதோ காரணங்களைக் கூறி தவிர்க்கலானான்.  அடிப்படையிலேயே பிடிவாதம் கொண்ட அவன் அப்பாவிற்கு இது பெரிய கோபத்தை உண்டாகியது.

“உன்னாலதாம்டி அந்த பய கெட்டு குட்டி சுவரா போறான்.  அத செய்யாத இத செய்யதானு சொல்லி, அவன விளங்க விடாமப் பண்ணியாச்சு.  என் அப்பனும், என் தாத்தனும் பண்ணுன வேலையச் செய்ய, என்ன குறைச்சல் வேண்டி இருக்கு.. படிப்பு வேண்டியதுதான்... ஆனா குடும்ப வேலையை செய்ய யோசிச்சா.. அந்த படிப்புக்கு என்ன அர்த்தம்னு கேக்கேன். அம்மையும் மகனும் என்ன இளவாவது கொண்டாடுங்கோ...”
.... என்று கூறி ஆரம்பித்த வெறுப்புதான்.....

அதன் பின்னர் அப்பாவின் பிடிவாதமும் பலமடங்கு கூடியது.  பேச்சு அளவாகவும், அடாவடித்தனமாகவும் மாறியது.  “மூக்குக்கு மேல கோபம் வரும்” என்பதை எல்லாம் தாண்டி,  அப்பா, முகத்துக்கு மேல கோபப்படும் கோபக்காரராய் மாறியிருந்தார். 

முதல் முறையாக வெளிநாட்டுக்குப் போவதை சொல்லும் போது அப்படித்தான்.

“எப்பா.. நான் துபாய்க்கு போலாம்னு இருக்கேன்.. ஒரு சான்ஸ் வந்திருக்கு..”

“அங்கெல்லாம் எதுக்கு மக்கா... இங்க உள்ள வேலைய பார்த்திட்டு இருக்க வேண்டியது தாலா..”

அம்மா இடையில் குறுக்கிட்டு, “இங்க பாக்கதுக்கு என்ன வேலை இருக்கு?”. என்றாள்.  அப்பா கோபப்படும் முன், அம்மாவை இடை மறித்தான் அவன். “எம்மா.. நீ பேசாம இரிம்மா?”.  அப்பா தலை குனிந்து, கால், கைகளுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார்.

“இல்லப்பா... இங்க இருந்து என்ன செய்ய... வெளிய போனா சட்டுன்னு சம்பாதிச்சிட்டு, கொஞ்ச நாளுல இங்க வந்து செட்டில் ஆகலாம்லா...”

“நம்மளுக்கு இருக்க வயலு கரையைப் பார்த்திட்டு, இங்கயே இருக்கலாம்லா... மக்கா.  எதாவது ஒரு சின்ன வேலையை பார்த்திட்டு, நம்ம வேலையையும் பார்த்தா போதாதா?..  இப்ப கண்ணு காணாத இடத்துல போய், நீ என்ன செய்ய போற..”

“ஆமா.... இங்க இருந்து உங்கள மாறி மண்ண கிண்டிட்டே கிடக்க சொல்லிராக்கும்” அம்மா வார்த்தைகளை உதிர்க்க, கோபத்தில் கொப்பளித்தார் அப்பா.  அவன் அம்மாவை கடிந்து கொண்டான்.  அதற்குள் அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டார்கள்.  அவனும் சண்டையிட்டான்.  சிறிது நேரத்தில் சந்தைக்கடை போலாயிற்று அவர்கள் வீட்டு திண்ணை.  

ஊருக்குப் புறப்படும் நாளில் அவன் அப்பா அவனிடம் பேசவே இல்லை.  அம்மா அழுதுகொண்டே எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“இல்லாததையும், பொல்லதாதையும் சொல்லி, அந்த பயலை போக சொல்லிட்டு, இப்ப யாம்டி நீலிக்கண்ணீர் வடிக்க..” – கோபத்தில் கொக்கரித்து விட்டு, மம்பட்டியை தோளில் போட்டுக்கொண்டு வயலுக்கு கிளம்பினார் அப்பா. அவனுக்கு அழுகையாய் வந்தது. அடக்கிக் கொண்டான். கடைசிவரை வயலுக்கு போன தந்தை, வழியனுப்பக் கூட வரவில்லை. இரண்டு வருடங்களில் நாலைந்துமுறைப் போனில் மட்டும் பேசியிருந்தார்.  கவலையும், இறுக்கமும் ஒரு சேர இரண்டு வருடங்களைக் கழித்து, விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோதும் கவனித்தான். அப்பாவின் கோபம் முழுமையாகக் குறைந்த பாடில்லை.

இரண்டு வருடம் கழித்து மகனைப் பார்த்த சந்தோஷசம் கண்களிலும், முகத்திலும் தெரிந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள வில்லை.  பின்னர் நடந்த “வீட்டை இடிக்க வேண்டுமென்ற பேச்சு”.. அவர் கோபத்தை மீண்டும் அதிகப்படுத்தியிருந்தது.

இரண்டு மாத விடுமுறை சட்டென்று நகர மீண்டும் துபாய் வாசம்.  வாகனங்கள், கட்டிடங்கள், குளிர்சாதன அறைகள் என ஒருமாதிரியான இயந்திர வாழ்க்கை.  வீட்டைப் பற்றிய நினைப்புகள் நெஞ்சமெங்கும் நிரம்பி இருக்க, வேலை.. வேலை.. வேலை.. என்றிருந்த போது தான் அது நிகழ்ந்தது.  ஒரு வணிகவளாகப் பரிசு குலுக்கலில் இரத்த சொந்தங்கள் இரண்டு பேரை துபாய் அழைத்து வருவதற்கான பரிசு கூப்பன். சந்தோசம் தாழ வில்லை அவனுக்கு.. ஊருக்கு போன் போட்டு அம்மாவிடம், உறவினர்களிடம், ஊராரிடம் என அத்தனை பேரிடமும் பகிர்ந்தான்.  அம்மாவையும், அப்பாவையும் அழைத்து வரத் தீர்மானித்தான்.

“எம்மா... பாஸ்போர்ட்க்கு சந்திரன் அண்ணன்ட சொல்லியிருக்கேன்.  ரேஷன் கார்டு காப்பியும், உனக்குள்ள, அப்பாக்குள்ள போட்டோவும், எலெக்சன் கார்டும் அவன்ட கொடுத்திரு.. ருவா அனுப்பி இருக்கேன்.. அப்பாக்கும், உனக்கும் புது துணி எடுத்துக்கோ..” – என ஆசை ஆசையாய் பேசினான்.

அவன் அம்மாவுக்கு சந்தோசம்தான்.  ஆனால் கவலையில் பேசாமலிருந்தாள்.

“எம்மா.. நான் பேசுகது கேக்கா... என்னாச்சு..”

“மக்கா.. நீ வருத்தப்படாத.. இந்த மனுஷன் வரலன்னு சொல்லுகாரு பார்த்துக்கோ.. நான் எப்படில்லாமோ சொல்லி பார்த்தாச்சு... கேக்க மாட்டேங்கேரு...”

கவலையும், கோபமும் ஒரு சேர வந்தது அவனுக்கு...

“அப்பாட்ட கொடு... நான் பேசுகேன்”... – மறுமுனையில் போன் நகர்ந்து அப்பாவின் கைக்கு போனது..

“எப்பா.. நல்லாஇருக்கியா”

“ஆமா மக்கா... நீ நல்லா இருக்கியா”

“ஆமா... நீ ஏன்பா.. இங்க வரலைன்னு சொல்லுக..”

“வயசான காலத்துல அங்க எதுக்கு மக்கா... எனக்கு எங்க போனாலும் நம்ம வீடு மாறி வராதுடே... அதான்.. நீ உங்க அம்மையை கூடிட்டு போடே..”

“ஒரு மாசம்தானப்பா... வாங்க.. please...”- என கெஞ்சினான் அவன்.

மறுமுனையில் அமைதி...

சிறிது நேரக் கெஞ்சலுக்குப்பின், அப்பா அரைமனதோடு “சரி.. வாரேன்”-  என்றார்.

சந்தோசமாக இருந்தது அவனுக்கு. 

ஊரே அதோகளப்பட்டது.. அவன் அம்மா துபாய் பயணத்தை சொல்லாத  ஆட்களே இல்லை.  கீரை விற்க வந்தவள், காஸ் சிலிண்டர் போட வந்தவன், போஸ்ட் மேன் என எல்லாரிடமும், துபாய் பயணம் பற்றிய “பீத்தக்கம்” தொடர்ந்தது.  ஆளாளுக்கு ஒவ்வொரு விஷயம் சொன்னார்கள். அப்பா கொஞ்சமும், அம்மா நிறையவும் பயந்தேவிட்டார்கள்.  விமானப்பயணமென்பது அவ்வூரில் பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது.  அதிலும் அப்பா, அம்மா வயதையொத்தவர்களுக்கு எளிதில் கிடைக்காத மர்மமாகவே இருந்தது.  விஷயம் கேள்விப்பட்ட அனைவரும், அங்கும் இங்கும் கேட்டதை வைத்து பல ஆலோசனைகளை வாரி வழங்கினர்.

“உம்பாட்டுக்கு தலைக்கு தேய்க்க எண்ணைலாம் கொண்டு போகாத... அப்புறம் அங்க ஏர்போர்ட்ல புடிச்சு வச்சுகிடுவானுகோ..”.

“அங்குள்ள பொம்பளைகள பார்த்து சிரிக்கெல்லாம் கூடாது... கேட்டயா... போனமா வந்தமான்னு இருக்கணும்”

“வேட்டி உடுத்திட்டு போகப்பிடாது பட்டா.. அங்க.. நம்ம டெய்லர்ட சொல்லி ஜம்முன்னு பேண்ட்டு போட்டிட்டு போவும்..”

“பாஸ்போர்ட்ட பத்திரமா வச்சிருக்கணும்.. களஞ்சி, கிளஞ்சு போச்சுன்னா... அப்புறம் இங்க வரமுடியாது பார்த்துக்கோ...”

“துபாய்ல இப்ப பயங்கர குளிராக்கும்.. நல்ல ஸ்வெட்டர் வாங்கி வச்சிகிடுங்கோ..”

ஒவ்வொரு தடவை போன் செய்யும் போதும் ஓராயிரம் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்தாள் அம்மா. நிறைய பேருக்குப் பொறாமையாய் இருப்பதாய் கூறினாள். அம்மாவுக்கு “அந்தப்பெருமிதம்” பிடித்திருந்தது. அப்பாவும் இப்போது கொஞ்சம் சந்தோசமாகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“மத்தவன் கெட்டிகாரன்டே... மாடு மேச்சி, பயலை படிக்க வச்சான்.. இப்ப ப்ளைன்ல ஏறி பறக்க போறான்... நமக்கு இருக்கு ஒரு வானரம்.. என்ன பிரயோஜனம்... இஙன இருக்க திருப்பதிக்கி கூடிட்டு போக மாட்டேங்குது....” – என்று அப்பா காதுபடப் பேசினார்கள்.. அப்பாவுக்கு அது சந்தோசமாக இருந்தது.

அதிலும் பண்ணையார் ஈஸ்வரபிள்ளை அப்பாவைக் கூப்பிட்டுக் கேட்டது, அப்பாவுக்கு மிகப்பெருமையாக இருந்தது.. வீட்டு வறுமையின் அத்தியாவசிய தேவைகளின் போது, அப்பா கூனி, குறுகி, கடன் கேட்பது பெரும்பாலும் அவரிடத்தில்தான்.  கடன் கொடுக்கும் பண்ணையார்களின் ஆதிக்க உடல்மொழியும், கடன்வாங்கும் எளியவரின் அடிமை உடல்மொழியும் காணச் சகிக்காது.  அவரே அப்பாவிடம் வந்து,

“என்னடே... ப்ளைன்ல துபாய்க்கு போராயாமே... அப்படியான்னு” – கேட்டது, அப்பாவுக்கு மிகப்பெரிய கௌரவமாக இருந்தது.

“ஆமாப் பண்ணையாரே.. பய ரெம்ப ஆசை பட்டு கூப்டுகான்.. அதான்.. போயிட்டு வரலாம்முன்னு போறேன்”.  அப்பா முதுகை நிமிர்த்துச் சொன்ன பதிலாக அது இருந்தது. 

நாட்கள் நெருங்க, நெருங்க சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தார்கள் அம்மாவும், அப்பாவும்..

குறித்த நாளில் அம்மாவையும் அப்பாவையும் தாங்கிய விமானம் துபாயில் இறங்கியிருந்தது.  அவன் இரண்டு மணிநேரம் முன்னதாகவே வந்திருந்தான்.  விமானச்சோதனை நிகழ்வுகளை எளிதாக்கும் “மர்கபா சர்வீசை”  முன் பதிவு செய்திருந்ததால், எந்த ஒரு சிரமமும் இல்லாமல் இருவரும் அவனை வந்தடைந்திருந்தனர். அவனைக் கண்டதும் அம்மா முகம் முழுதும் மகிழ்ச்சி. அப்பா இறுக்கமானப் பேண்டு போட்டு, ஆபிசர் போலிருந்தார். வாழ்கையில் போட்ட “முதல்பேண்டு” என்பதால் நெளிந்து, நெளிந்து நடந்தார். 

விமான நிலையத்தில் இருவரையும் பார்த்தவுடன், ஆர்வ மிகுதியில் அம்மாவைக் கட்டியணைத்தான்.  அப்பாவின் கரம் பிடித்துக் குலுக்கினான்.  வீட்டுக்குப் போகின்ற வழியெங்கும், புதிதாய் "தேரோட்டம்" பார்க்கும் சிறார்களைப் போல் துபாய் நகரைக் கண்டு களித்தனர் அம்மாவும் அப்பாவும்.  நண்பனின் குடும்பம் விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருப்பதால், ஒருமாதம் அந்த வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.  22 வது மாடியிலிருந்து மொத்த ஊரையும் எட்டிப் பார்த்தனர் அம்மாவும், அப்பாவும்.  

மூன்று நாள் விடுமுறை எடுத்து எல்லா இடத்தையும் சுற்றிக் காட்டினான்.  உலகிலேயே உயரமான கட்டிடமாகிய புர்ஜ் கலீபா, ஏழு நட்சத்திர ஹோட்டல் புர்ஜ் அல் அரப், துபாய் மால், குளோபல் வில்லேஜ், மிராக்கிள் கார்டன் என எல்லா இடங்களுக்கும் போனார்கள்.  
அம்மா கல கலவென பேசிக்கொண்டே வந்தாள்.  அப்பா “இங்க வயலு, காடு, கரைலாம் உண்டாவெனக் கேட்டார்.  நவ நாகரீக செயற்கை நகரம், கிராம இதயங்களை ஒருவாறு வசப்படுத்தியிருந்தது. 

மூன்றாம் நாளிலிருந்து அப்பா களைப்பாக இருந்தார்.  லேசாகத் தள்ளாடி தள்ளாடி நடந்தது மாறியிருந்தது.  இரவில் கடுமையான காய்ச்சலும் வந்து விட்டது.

அம்மா பெரிதாகக் கவலைப் பட்டதாய் தெரியவில்லை..

“தண்ணி மாறி குளிச்சால்லா.. அதான் காய்ச்சல் வந்திட்டு... “கசாயப்பொடி” கொண்டு வந்திருக்கேன்.. ரெண்டு பொழுது குடிச்சா தீரும்... வேற ஒண்ணும் இல்லை என்று சமையலறைச் சென்று விட்டாள்.

அப்பாவை பார்க்க அவனுக்கு வருத்தமாக இருந்தது.

“எப்பா... என்ன செய்யி?

“ஒண்ணும் இல்ல மக்கா.. கொஞ்சம் காச்சல்... வேற ஒண்ணும் இல்லை”.

“ஆசுத்திரிக்கு போவோமா...”

“அதுல்லாம் எதுக்கு டே...  ரெண்டு பொழுது கசாயம் குடிச்சா தீரும்....”

இரவு உணவு முடிந்து மூவரும் உறங்கச் சென்றனர்.  நடு இரவின் ஜாமத்தில் அப்பா நடக்கும் சப்தம் கேட்டு முழித்திருந்தான் அவன். 
கிண்டி.. கிண்டி நடந்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.  ஓடிச் சென்று அப்பாவை பிடித்தான் அவன்..

“எப்பா... எப்பா.. என்னாச்சு..”

“அவனைப் பிடித்து கொண்டார் அப்பா..”

“ஒண்ணுமில்லை மக்கா..”

“ஒண்ணும்மில்லையா... பின்ன ஏன் கிண்டி கிண்டி நடக்க??

“ஒண்ணும் மில்லை டே..”

“சொல்லுப்பா.... ஆசுத்திரிக்கி போவோமா..”

தயங்கி தயங்கிச் சொன்னார் அப்பா..

“ஒண்ணுமில்ல மக்கா... இந்த பேண்டு போட்டேன் பார்த்தியா... அதான் தொடையெல்லாம் கொஞ்சம் புண்ணாயிட்டு..

“புண்ணாயிட்டா... காட்டுங்க...”

“ஒண்ணும் இல்ல டே... லேசாதான்...  தயங்கினார்..”

வலுக்கட்டாயமாக உட்கார வைத்து, வேஷ்டியை விலக்கித் தொடையைப் பார்த்த அவன் திடுக்கிட்டான்.  பேண்டு துணி உராய்ந்து, உராய்ந்து இரு தொடை அரைகளும் இரத்த சிவப்பாயிருந்தன.. பேண்டு தைக்கத் தெரியாதவன், தைத்த லெட்சணம்.. இறுக்கம் கூடி, நடக்கும் போது அப்பாவின் தோலைப் பதம் பார்த்திருந்தது.  தீயில் வெந்த தோல் போல, இரத்தக் கசிவும் சிறிது இருந்தது. காய்ச்சல் வந்ததிற்கான காரணமும் அவனுக்கு அப்போதுதான் விளங்கியது.

“என்னதுப்பா... இது..” அதிர்ச்சியில் கத்தினான்.


அப்பா ஏதும் பேசவில்லை. தலையைக் குனிந்தபடியிருந்தார். 

அலமாரியில் தேடி, காயங்களுக்கு போடும் மருந்தை எடுத்து, சிவந்தப் பகுதியில் தடவினான்.  அப்பாவின் உடல் வேதனையில் ஒரு உதறல் கண்டது.  வலியால், கண்களை மூடி நெற்றியில் சுருக்க வரிகளை உண்டாக்கினார்.

பாவமாய் இருந்தது.

“ரெம்ப வலிக்காப்பா?
ஆமா என்பதுபோல் தலையாட்டினார்.

“ஏன்பா... இந்த தேவை இல்லாத வேலைலாம் செய்றீங்க... பேசாம வேஷ்டி உடுத்திட்டு வர வேண்டியது தானே... இதெல்லாம் எதுக்கு...”

வலியோடு கண்களை மூடிக்கொண்டே பேசினார்...
“உங்க அம்மதான் சொன்னா மக்கா... இங்க பயல கேவல படுத்திட்டு இருக்கிற மாறி, அங்கயும் வந்து கேவல படுத்திராதையும்னு... அவ அக்கா வேற சொன்னாளாம்... துபாய்ல வேஷ்டிலாம் உடுக்க கூடாது, பேண்டுதான் போடணும்னு.. அதான்...”  - பச்சைக் குழந்தைப்போல பேசினார் அப்பா.

“இதுல என்னப்பா கேவலம்... அம்ம சொன்னான்னா... என்ட கேக்க வேண்டியது தானே.. சரி.... இவ்வளவு தூரம் புண்ணாகது வரைக்கும் பேசாம இருந்திருக்கியெப்பா.....” – கோபமும், அனுதாபமும் ஒருசேரக்கேட்டான்.

“நீ இவ்வளவு பெரிய ஊர்ல.. எப்படி இருக்க மக்கா... என்னால உனக்கு கௌரவ குறைச்சல் எதுக்கு மக்கா...” – கண்ணீர் மல்க பேசினார் அப்பா..

அவன் பதிலேதும் பேச வில்லை.  அப்பாவைக் கட்டியணைத்துக் கொண்டான்.

“இதுல என்னப்பா.. கௌரவ குறைச்சல்... உன் மகன்னு சொல்றதுலதான்... என் கௌரவுமே..” – என்று அவன் கூறிய அடுத்த கணம் அப்பாவும் அணைத்துக் கொண்டார்.


அடுத்தநாள் உலகப்புகழ்பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா முன்னிருந்து, வேட்டியணிந்த அப்பாவும் மகனும் “ஒரு டஜன் போட்டோக்களை” எடுத்துத் தள்ளினர்.  அம்மா மட்டும் விஷயமேதும் தெரியாமல் ஆச்சர்யச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள்.