வியாழன், 5 செப்டம்பர், 2019

கூடப்பொறப்பு

மேகமே மடுவாகி, பாலாய், ஊர் முழுதும் புதுமழை பெய்திருந்தது. மழைன்னா... மழை அப்படி ஒரு மழை. தண்ணியாய், வெள்ளமாய், நீராய், குடம் குடமாய், வரி, வரியாய் பெய்துத் தீர்த்தது மழை. இதற்காகவே காத்திருந்த விவசாயிகள் அனைவரின் முகத்திலும், பயிரேத்தத் துடிக்கும் பூரிப்பு. மண்ணிலிருந்து, பொங்கித் தின்னும் “சோற்றை” உருவாக்கும் உத்வேகம். சொந்தவயில் உள்ளவன், பாட்டவயில் உள்ளவன், ஏர்மாடு வைத்தவன், மண்வெட்டி சூட்சமம் தெரிஞ்சவன் - என எல்லோர் கால்களிலும் ஒரு ஓட்டம். ஒரு அவசரம்.
விவசாயம்னா.. அப்படிதான். மண்ணுல பயிறு மொளைக்கிறத பார்க்கிறதும், வாய்க்காலுல தண்ணி வருகத பார்ப்பதிலும் "உற்சாகம்". மண்ணும், தண்ணியும் கலந்த “தொளியில” நிக்குறது, விண்ணும், மழையும் கலந்த “மேகத்துல” நிக்குறதுக்கு சமம். விளைஞ்சு, குனிஞ்சு நிக்குற “கதிர” பாக்குறப்ப, சமைஞ்சு, குழைஞ்சு நிக்குற “பொண்ண” பாக்குற சந்தோசம். கொத்து கொத்தாய், “நெல்லப்” பாக்குறப்போ, கட்டி கட்டியாய் “பொன்னைப்” பார்த்த பூராப்பு. வளர்ந்தப் பயிரை, பொம்பளையாக் கட்டிப் புடிச்சி, உச்சம் கண்ட “விவசாயக் கிறுக்குக” இப்பவும் உண்டு ஊர்ப்புறத்துல.
கலப்பையும், மரமுமாய், காளையும், போத்துமாய் சேர்ந்து, மண்ணைக் கீறி உழுது, கொழையருக்கி, சாணி உரம் போட்டு, மட்டத்துக்கு மரமடிச்சு, திருப்தி இல்லாம தட்டுப் பலகை வீசி நிரப்பாக்கி, வெள்ளம் சேர்த்து, இடைவெளி விட்டு விதைச்சு, நாத்து நட்டு, வளர வளர காவல் காத்து, பச்ச புள்ளைக்கு பாலு கொடுக்கத போல, பச்சை நாத்துக்களுக்கு நீர் கொடுத்து, களையெடுத்து, விளையிறதுக்கு முன்ன, குடியானவன் “பரலோகமே” பார்த்திருவான். இடையில புயலோ, வெள்ளமோ, மழையோ வந்திச்சின்னா கூடவே “சிவலோகமும்” தெரியும்.
எல்லாத்தையும் எப்படியோ சமாளிச்சு, கதிரறுருத்து, சூடடச்சு, சண்டுவிட்டு, பொலியளந்து, கூறடிக்கும், பாட்டத்துக்கும் கொடுத்தது போக, மீதி முதலானத வச்சி, வரவு செலவு கணக்குப் பார்த்தா.. கைல காசெதுவும் நிற்காது. இருந்தாலும் சாக்குலயோ, பிரையிலயோ குவிச்சு, கட்டி வச்சிருக்க “வீட்டரிசி” நெல்லப் பார்த்ததும், “இன்னும் நாலஞ்சுமாசம் பிள்ள குட்டிகளுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை” -ன்னு ஒரு “மனசமாதானம்” வரும் பாருங்கோ. அந்த சமாதான நினைப்புதான் “அடுத்த மழை” பூமியில விழுந்ததும், “வாங்கடே.. போய் மண்ணைக் கிளருவோம்னு” மூளையை திசைத்திருப்பி, திரும்பவும் பயிரேத்த வைக்கிறது.
வயிலடி முழுதும் நீர் குடித்த “தொளி” - யின் மணம். வடக்குப்பத்து, தெக்குப்பத்து, தெள்ளாந்திப்பத்து, குளக்கரைப்பத்து, சுடுகாட்டுப்பத்து என எங்கும் அழுக்கேறிய மனிதர்கள். அவர்களின் நிறைத்த உழைப்புகள். நகைச்சுவைப் பேச்சுக்கள். மனிதர்களை விட அழுக்கான மாடுகள். நளினமாய் நடவு செய்யும் நன்றிக்குழி குமருகள் மற்றும் கிழவிகள், கேட்க, கேட்கத் திகட்டாத அவர்களின் “பேச்சு மொழிகள்”. ஒட்ட முடிவெட்டிய கிழட்டுப் பண்டாரங்களாய், இலையிழந்த பூவரசு மற்றும் புங்க மரங்கள். வயலில் உழுதுக் கொண்டிருக்கும், அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ, அத்தானுக்கோ, தாத்தாவுக்கோ தூக்கு வாளியில் “ஆகாரத்தை” வைத்துக்கொண்டு, வழுக்கும் தொளியில், நடையும், நடனமும் பழகும், “புதிதாய் வயலடி வரும் விடலைகள்”. அவர்களைக் கேலி செய்யும் “பெருசுகள்”.- என திரும்பும் பக்கமெல்லாம் திருவிழாக் கோலம். சிரிப்பு மழைகள், பேச்சு வெடிகள்.
தங்கப்பபிள்ளையின் வயல் நடவுக்குத் தயாராக இருந்தது. ஈருநேரு கட்டியடித்த மரம், வண்டலும் தண்ணீரும் கலந்த வயலை, “கடல்” போல் “நிரப்பாகக்” காட்டியது. நாத்தங்காலில் பறித்த “நடவு நாற்றுக்கள்” மண்ணில் வேரூன்றும் ஆசையோடு, வரப்புகளில் சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை பனியனும், கட்டம் போட்ட சாரமும் அணிந்திருந்த தங்கப்பபிள்ளை, சூரியனையும், குலச்சாமியையும் கும்பிட்டு விட்டு, வடகிழக்கு மூலையில், “முதல் நடவு” நட குனிந்த போதுதான் மிலிட்ரி காரரின் மகன் ராகவன் மூலமாய், காதுகளில் அந்த வார்த்தை விழுந்தது.
“வேய்... மாமா... உம்ம மகளுக்கு வயிறு வலி வந்திடுச்சு... மகேசுக்கு வண்டியில புத்தேரி ஆசுத்தரிக்கு கொண்டு போறாங்களாம்.”
அவர் இதை எதிர்ப்பார்த்ததுதான். சட்டென்று வேகமாகி, முதன் முதலாய் இரண்டு மூன்றுக் கொத்து “முதல்நடவு” நட்டு விட்டு, வேலையாட்களிடம் பாக்கி நடவு காரியங்களை சுருக்கமாகச் சொல்லி, வரப்பில் செங்குத்தாய் குத்தி வைத்திருந்த “கேள்விக்குறி” கைப்பிடிக் கொண்ட “குடை”-யைப் பிடுங்கி கொண்டு,
“மக்கா.. ராகவா.. ஒரு கண்ணு இங்கயும் பார்த்துக்கப்போன்னு” – பக்கத்து வயல்காரனிடம், வயல் நடவை மேற்பார்வை செய்ய வேண்டுகோள் வைத்து, வீடு நோக்கி ஓட்டமும், நடையுமாய் விரைந்தார் தங்கப்பபிள்ளை.
தங்கப்பபிள்ளை நாற்பதெட்டு வயது சம்சாரி. வேளாண்மை மட்டும் தெரிந்த முழுநேர விவசாயி. மண்ணு, மம்முட்டி, மாடு, பாலு, கிடாரி, வாழை, தென்னை, கமுகு, புண்ணாக்கு, பருத்திகொட்டை, தெப்பக்குளம், ஊர்கோவில், அரச மரம், டீக்கடை இவைகள்தான் இவர் உலகம். இப்போது டிவியும், மகள் வாங்கி கொடுத்த போனும் கூடுதலாக இவர் உலகத்திற்குள் வந்துள்ளது.
மகள் ஈஸ்வரியும், மனைவி உலகம்மையும் தான் “உற்றஉறவுகள்”.
பாக்கி “உறவுகள்” - ஊரில் உள்ள வயது கூடிய எல்லாரையும் அழைக்கும் உறவுப் பதங்களான, யண்ணன், யத்தான், மாமோய், பாட்டாவ், யத்தே, யாச்சியோ, - போன்றவைகள்.

தன்னை விட வயது குறைந்த எல்லாரையும் “மக்கா” என்ற ஒற்றை உறவு பதத்திற்குள்ளேயே அடக்கி விடுவார் தங்கப்பபிள்ளை.
மது அருந்தியிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ, ஊரில் உள்ளவர்கள் மீது கோபம் வரும்போது சொல்லுகின்ற, “தே..யா மகன், கூ... மகன், பூ.. மகன், போன்ற பதங்களுக்கு வயது வித்தியாசம் இல்லை. கோபம் தீரும் வரை ஓன்று மாற்றி ஓன்று, வந்து கொண்டே இருக்கும்.
ஆண்டாண்டுகளாய் மண்வெட்டிப் பிடித்து, பூமிக்கிளறிய “ஊக்கம்” தங்கப்பபிள்ளையின் தேகமெங்கும் தெரிந்தது. வழித்து விட்ட கற்சிலையைப் போன்றதொரு உடல். எண்ணெய் படிய வாரியத் தலை. உயரம் இல்லை, குட்டையென்றும் கூற முடியாத சராசரி உயரம். “உடலுழைப்பு” உடம்பில் இன்னும் இளமையை தக்க வைத்துக் கொண்டிருந்தது. தடித்த “நல்லமிளகை” போன்ற மார்புக் காம்புகளை, எந்நேரமும் அடைகாத்துக் கொண்டிருக்கும் முண்டாபனியன். பெரும்பாலும் இடுப்பில் கட்டம் போட்ட “சங்குபிராண்ட்” சாரம். கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளுக்கு மட்டும் பால்ராமபுற “கறைவேஷ்டி”.
உற்றவள் உலகம்மை மணமகனுக்கு ஏற்ற மணவாட்டி. சொந்த அத்தை மகள்தான். அவர்களின் திருமணத்தின் போது உலகமறியா விடலைப் பெண், உலகம்மையின் வயது பத்தொன்பது. தங்கப்பபிள்ளைக்கு இருபத்தியாறு. இதோ.. இப்போதுதான்... இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன், அவர்கள் திருமணம் நடந்த மாதிரியிருந்தது. ஆனால் இப்போது அவர்களின் மகளின் தலைப்பிரசவத்திற்காக, தலைத் தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் தங்கப்பபிள்ளை.
வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தைப் பாருங்கள். ஒரு உயிர் மனிதனாகப் பிறந்து, மற்றொரு உயிரோடு இணைந்து, ஆறேழு கிலோமீட்டருக்குள், மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் “பெருமிதம்” கிராமங்களில் வாழும் வெள்ளந்தி மனிதர்களிடமே சாத்தியம். பெரிதான எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல், தன்னைச் சேர்ந்தவர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து, அவர்களுக்காகவே உழைத்து, உழைத்து பின் மடியும், அத்தனை சராசரி மனிதர்களும் “சாதனையாளர்கள்’-தாம். உற்றவர்களின் சிரிப்பிற்காக, உறவுகளின் சந்தோசத்திற்காக, தன் வாழ்க்கையை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும் அனைவரும் “அசாத்தியமானவர்கள்’-தாம்.
தங்கப்பபிள்ளை மனைவி உலகம்மை மீதும், மகள் ஈஸ்வரி மீது அளவற்ற பாசம் கொண்டவர். இப்போதும் தன்மகளை ஒரு குழந்தையாக பாவிக்கும் மனோபாவம் கொண்டவர். அவளுக்கு இப்போது ஒரு குழந்தை வரப்போகிறது என்பதை, அவராலேயே சிலநேரங்களில் நம்ப முடியவில்லை. தலைப்பிரசவத்திற்கு வந்திருந்தாலும், ஈஸ்வரியும் இன்னும் குழந்தை மனதோடுதான் இருந்தாள். இப்போதும் வெளியில் போய்கொண்டு வீட்டுக்கு வரும் அப்பாவிடம், “பண்டம் ஒண்ணும் வாங்கலையாப்பானு” கேட்கும் வெள்ளந்தி மகள்தான். “பிள்ளைக்கு ஏதாவது வாங்கீட்டு வரவேண்டியது தானே”-ன்னு உலகம்மையும் கடிந்து கொள்வதுண்டு. இதனால்தான் வெளியே போய் வரும் போதெல்லாம ரெண்டு உளுந்த வடையோ, ஆமை வடையோ, முள்ளுமுறுக்கோ, கடலைமிட்டாயோ, ஓமப்போடியோ வாங்காமல் தங்கப்பபிள்ளை வீட்டுக்குள் நுழைவதில்லை. உலகம்மையும், ஈஸ்வரியும் அதனை “அடி” போடாமல் தின்றதும் இல்லை.
“ரெண்டு பேரும்.... அம்மையும், மகளுமா? அல்லது அக்காளும், தங்கச்சியுமாட்டி? – எனச் செல்லமாக அவர்கள் சண்டையை தங்கப்பபிள்ளை கடிந்துக் கொள்வதும் உண்டு. தின்னும் பொருளின் ருசியோ அல்லது வாங்கி தரும் தங்கப்பபிள்ளையின் பாசமோ என்னவோ, அவர்களின் பாசப்பிணைப்பை, ஆண்டாண்டு காலத்திற்கு “ஈரமாகவே” வைத்துள்ளது.
புத்தேரி மருத்துவமனை அதற்குரிய வழக்கமான பரபரப்புடன் இருந்தது. 1895-ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஹென்றி ஆண்ட்ரூசால் வெறும் ஒரு குளியலறையில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை, இன்று காதரின் பூத் மருத்துவமனையாய் ஏகப்பட்ட வசதிகளுடன் கற்கட்டிடமாய் வளர்ந்து நிற்கிறது. இன்று CBH என்று செல்லமாக அழைக்கப்படும் மருத்துவமனைக்கு, தங்கப்பபிள்ளை சென்று சேரும்போது ஈஸ்வரியை அவசரப்பிரிவிற்கு கொண்டு சென்றிருந்தார்கள். உலகம்மை பரிதவிப்புடன் அறைவாசலில் நின்று கொண்டிருந்தாள். அவள் உடம்பெங்கும் வியர்த்திருந்தது. தங்கப்பபிள்ளையை பார்த்ததும் கண் கலங்கினாள்.
“எட்டி.. கிறுக்கி மாறி... கண்ண கசக்கிட்டு……..,வரும்போது யாக்கியம்மன் கோவிலுக்கு போயிட்டுத்தான் வந்தேன்” – என்று சொல்லி திருநீறைக் கொடுத்தார். பயபக்தியோடு அதனை வாங்கி நெற்றியிலிட்டு, சிறிது வாய்க்குள்ளும் இட்டாள். பின்பு கண்ணீர் மல்க, வான் நோக்கி வேண்டினாள்.
“மகமாயி.... அம்மையும் பிள்ளையையும் ரெண்டு பாத்திரம் ஆக்கிடம்மா”
தங்கப்பபிள்ளையும் கைகோர்த்து, வான் பார்த்து வாய்க்குள் ஏதோ மூணு முணுத்தார்.
“மாப்பிளைக்கும், அவங்க வீட்டுக்கும் சொல்லிட்டேளா?”
“போன்ல சொல்லியாச்சு.. எல்லாரும் இன்னைக்கு ராத்ரி கிளம்பி, நாளைக்கு காலையில வந்திருவாங்களாம்... ஆசுத்ரி அட்ரசும் கொடுத்திருக்கேன்....” – என்றார் தங்கப்பபிள்ளை.
சில நிமிடங்கள் இருவரும் பேசிக்கொள்ள வில்லை. நர்சுகள் அங்குமிங்கும் போவதும், வருவதுமாக இருந்தனர். ஏதோ நினைப்பில் உலகம்மை, தங்கப்பபிள்ளையிடம் பேசினாள்.
“பிள்ள... வலியில.. துடிச்சிட்டு,,,,, கேட்டேளா,,... பார்க்கவே கஷ்டமாயிட்டு..”
“வருத்தப்படாதடீ... இது எல்லா பொம்பளைகளுக்கும், உள்ளதுதலா....” – ஆறுதலாகப் பேசினார் தங்கப்பபிள்ளை. உலகம்மை தொடர்ந்தாள்.
“கடவுள் ஏன் தான் இப்படி படைச்சாரோ பொம்பளைகள... இப்படி நொந்துதான் பிள்ளை பெறணுமா.... எச்சி துப்பர மாறி, நகம் வெட்டுற மாறி, முடி வெட்டுற மாறி... புள்ள பொறந்தா என்னா.... அதுக்கில்லாம.... இது என்னா அவஸ்தைப்பா.”
தங்கப்பபிள்ளைக்கு சிறிதாக கோபம் வந்தது.
“இனி நீ பிள்ளை பெறும்போது... அப்படி பெத்துரு”-ன்னு சற்று ஆவேசமாக பதில் சொன்னார்.
உலகம்மை பதிலேதும் பேசவில்லை. ஈஸ்வரியை பற்றிய கவலை இருவர் மனதிற்குள்ளும் நிழலாடியது. அவசரப்பிரிவிற்குள் நர்சுகள் போவதும், வருவதுமாக இருந்தனர். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது? ஒரு விவரமும் இல்லை.
சிறிதான ஆவலுடன், பெரிதான திகைப்புடன் கழிந்தன ஐந்தாறு நிமிடங்கள். அப்போதுதான் தங்கப்பபிள்ளை எதிர்ப்பார்க்காத “அந்த விஷயம்” நடந்தது.
பெஞ்சிலிருந்து, இருந்த இருப்பிலேயே மயங்கி சாய்ந்தாள் உலகம்மை. ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார் தங்கப்பபிள்ளை.
“எட்டீ... எட்டீ... எட்டீ... உலகம்ம... எட்டீ..” – தோள்களைப் பற்றித் தூக்கி கத்தினார் தங்கப்பபிள்ளை.
உலகம்மையிடம் எந்த அனக்கமும் இல்லை.
வெகுவிரைவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நர்சுகள் சேர்ந்து உலகம்மையை சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.
தங்கப்பபிள்ளைக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. என்ன செய்ய? ஏது செய்ய, யாருக்காவது போன் செய்யலாமா? ஒரே குழப்பம் சில மணித்துளிகளுக்கு.
“சவம்... மகளுக்கு கூடச்சேர்ந்து இவளும் காலையில, ஆகாரம் ஒண்ணும் தின்னுருக்க மாட்டா... அதான் குடியாத்தளச்சையில மயங்கிட்டா” – என மனதிற்குள் அவருக்கு அவரே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
அரைமணிநேரம் குழப்பமும், தவிப்புமாக ஆஸ்பத்திரி பெஞ்சில் கழிந்தது. இடையே ஒருமுறை மருத்துவமனை கவுண்டரில் சென்று முன்பணம் கட்டச் சொல்லியிருந்தார்கள். பணத்தை கட்டி முடித்து திரும்பி வரும் வேளையில்தான், ஒரு நர்ஸ் சிரித்துக்கொண்டே அந்தச் செய்தியைச் சொன்னார்.
“மயங்கி விழுந்தது... உங்க பொண்டாட்டி தான... அவங்க பிள்ளை உண்டாகி இருக்காங்கன்னு”
காதுகளில் விழுந்த கேள்வியை, மனது ஏற்க மறுத்தது. அதிர்ச்சியோடு நின்று கேட்டுக் கொண்டிருந்தார் தங்கப்பபிள்ளை. நர்ஸின் உடல் மொழியில் ஒரு நையாண்டித்தனம் இருந்தது. முகத்திலிருந்த சிரிப்பு, தங்கப்பபிள்ளையின் “கிழட்டு பராக்கிரமத்தை” கிண்டல் செய்வதாகத் தோன்றியது. அதிர்ச்சியின் தாக்கத்திலிருந்ததால் அவறேதும் “மறுபடி” கொடுக்க வில்லை.
சிரிப்பை அடக்கிக்கொண்டு, உலகம்மை மயக்கம் தெளிந்து விட்டதாகவும், குடிக்க எதாவது வாங்கி வருமாறும் கூறினாள் நர்ஸ். இரண்டு செவ்விளநீர் வாங்கிகொண்டு, மருத்துவமனை அறைக்கு சென்று, உலகம்மையின் பக்கத்தில் அமர்ந்தார் தங்கப்பபிள்ளை. குற்ற உணர்வின் உச்சத்திலிருந்தனர் இருவரும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சிறுகூச்சம். மெதுவாக உலகம்மை, கவலையோடு பேச ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு சொல்ல... சொல்ல கேட்டேளா... இப்பம் எவ்வளவு பெரிய கேவலம்...”
“என்னைக்கு”
“ஆங்.... அன்னைக்கு... மூர்த்திக்கு மக கல்யாணத்திற்கு போயிட்டு “மூணு கால்ல” வந்தேள்ளா... அன்னைக்கு”
தங்கப்பிள்ளைக்கு விசயங்கள் பாதி நினைவுக்கு வந்தது.
“எனக்கு... அன்னைக்கு நடந்ததுல பாதி... நினைவே இல்லை... சரி விடு... இப்ப வேற என்ன செய்யதுக்கு...”
“வேற என்ன செய்துக்கா.... அங்க மக பிள்ளை பெறக் கிடக்கா... நான் இங்க அம்மை “பிள்ளை” உண்டாயிருக்கேன்... சீ... நல்லக் கூத்து... உங்கள ஒத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... என்னைய தான் காறித் துப்புவாங்க..”
“இதுல காறித் துப்பதுக்கு என்ன இருக்கு?”
“அப்பம்... ஒரு காரியம் செய்யுங்கோ.... முதல்ல உங்க மகள்ட விசயத்தை சொல்லுங்கோ... அப்பறம் மாப்பிளைடையும், அவங்க வீட்லயும் சொல்லிட்டு, பழமும் சீனியும் வாங்கி ஊரு புல்லா விளம்புங்கோ...” – கோபத்தில் கொக்கரித்தாள் உலகம்மை.
தங்கப்பபிள்ளை எதுவும் பேசவில்லை.. வெட்கிக் குனிந்திருந்தது மாதிரியிருந்தது. உலகம்மை ஏதோ யோசனையில் மீண்டும் பேசினாள்.
“ச்சே... மானம் கெடுத்தாச்சு... அங்க பிள்ளை எப்படி இருக்கா?”
“நர்சுகோ ஒண்ணும் தெளிவா... சொல்லலை... இவ கூட போனதுல, மூணுப்பேருக்கு பிள்ளை பொறந்தாச்சாம்..”
“கள்ளியங்காட்டு தேவி.. ஒரு நல்ல செய்தியை கொடம்மா...- மகளை நினைத்து சாமியிடம் வேண்டினார்.
தங்கப்பபிள்ளை மெதுவாகப் பேசினார்.
“எட்டீ... ஒரு காரியம் செய்வோம்... நம்ம விசயத்தை இப்ப யார்ட்டையும் சொல்லாண்டாம்... முதல்ல பிள்ளைக்கு, விசயத்தைப் பார்ப்போம்..”
உலகம்மையும் ஆதரவாய், தலையசைத்து, மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்த, சில நிமிட நேரத்தில் ஒரு “குண்டு நர்ஸ்” வந்து சொன்னாள்.
“உங்களுக்கு பேரன் பொறந்திருக்கான்.. சுகப் பிரசவம்தான்னு”
சந்தோசத்தின் உச்சத்திற்கு சென்றனர் தங்கப்பபிள்ளையும், உலகம்மையும். எல்லோருக்கும் போன் போட்டுச் சொன்னார்கள். மகன் பிறந்ததில் மாப்பிளைக்கும், அவர் வீட்டாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. காலையில் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லி, போனை வைத்தனர்.
புதிதாய் உலகைக் கண்ட, புத்தம்புதிய பிஞ்சை, துணியில் சுற்றி உலகம்மையிடம் கொடுத்தார்கள். சந்தோஷப் பூரிப்பில், நர்சுகளின் கையில் சில நூறு ருபாய் தாள்களைத் திணித்தார் தங்கப்பபிள்ளை. ஆஸ்பத்திரியில் உள்ள அனைவருக்கும் “இனிப்பு” வாங்கிக் கொடுத்தார். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. கண்களை, கைகளை மூடி குழந்தை தூக்கத்திலிருந்தது.
நாற்பத்தியோரு வயதில் குழந்தை உண்டாகிய, தன்னைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?
உலகை விடு..
ஊர் என்ன நினைக்கும்?..
ஊரை விடு..
குடும்பத்தார் என்ன நினைப்பார்கள்?
குடும்பத்தாரை விடு..
சம்பந்தி என்ன நினைப்பார்கள்?
அவர்களையும் விடு?
ஈஸ்வரி என்ன நினைப்பாள்?
சீ... கேவலமாகத் தோன்றியது.
என்ன செய்ய போகிறோம்?
அடுத்தடுத்த வந்த கேள்விகள், நிம்மதி குலைப்பதாயிருந்தது. அறுபடக் காத்திருக்கும் காசாப்புக்கடை ஆட்டின் பார்வையைப்போல், பரிதாபம் மேலோங்கியது. மலங்க மலங்க விழித்தபடி ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள் உலகம்மை.
வெளிக்கு வெளித்தெரியாமல், யாரும் அறியாமல் “கலைத்து” விட வேண்டியதுதான். அவள் நினைப்பில், “ஒரு தீர்க்கமான முடிவின் சாயல்” தெரிந்தது.
சரியாக பதினெட்டு நாட்கள் கழித்து, தங்கப்பபிள்ளையும், உலகம்மையும் வெளிக்கு வெளித்தெரியாமல், திருவனந்தபுறத்திற்குச் சென்று கருவைக் கலைத்து விட்டு வந்திருந்தனர். ஊர் வந்து சேரும் போது இரவு மணி ஒன்பது. உலகம்மையின் வயதான உடம்பு கருக்கலைப்பால் தளர்ந்திருந்தது. சுகப்பிரசவம் ஆகையால் ஈஸ்வரி நடமாடத் தொடங்கியிருந்தாள். “பால்” குடித்தக் குழந்தை, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது.
இருவரும் தூரத்து சொந்தமொன்றின் திருமணத்திற்குச் செல்வதாக, ஈஸ்வரியிடம் “பொய்” சொல்லியிருந்தனர். தங்கப்பபிள்ளை வருத்தத்துடன் இருந்தார். மனம் முழுதும் ஏதோ ஒரு பாரம். வந்ததும் வராததுமாய் படுக்கையில் சாய்ந்தார். உலகம்மை வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ள வில்லை. அடிவயிற்றில் “கருக்கலைப்பின் வலி” உருத்திக் கொண்டேயிருந்தது. ஆடைமாற்றி, அடுக்களைக்கு வந்த உலகம்மையிடம், ஈஸ்வரிதான் பேச்சை ஆரம்பித்தாள்.
“கல்யாணம்லா நல்ல முடிஞ்சாம்மா?”
“ஆமா.. மக்கா... பாபு மாமா, அத்தை எல்லாரும் உன்னைய கேட்டாங்க?”
“எம்மா... நீ சொல்லுற அத்தை, மாமன் யாருண்னே, எனக்குத் தெரியல”
“எல்லாம்... நம்ம அப்பா வழி...சொந்த காரங்க மக்கா......”
“அப்பா.. ஏன் ஒருமாதிரி... இருக்கா...?? வந்த உடனே படுத்திட்டா”
“அங்க வரை போயிட்டு வந்ததுல்லா... சீணமா இருக்கும்... எனக்கும் ஒரு மாரிதான் இருக்கு”
“அப்ப படு மா... நான் வேலையைப் பாக்கேன்”
“விசாலக்கா... எப்ப போனா.... இன்னிக்கி நல்ல உன்ன பார்த்துக் கிட்டளா”
“எங்க பார்த்தா... ஆயிரம்தான் இருந்தாலும் அடுத்தவதானே.... உன்ட சொல்லிட்டமேன்னு வந்தா... நான் காப்பி போட்டுக் கொடுத்தேன்.... குடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல்ல போய்ட்டா..”
“என்ட.. நீங்க போங்க மயினி... நான் பிள்ளைய “கண்ணு” போல பார்த்துக் கிடுகேன்னுல்லா... சொன்னா...”
“சொல்லுவா.. சொல்லுவா... கூடப் பொறப்புக
பாக்கத போல... பக்கத்து வீட்டு ஆளுக பாப்பாங்களா?
“நாளைக்யாட்டு... அவள நாக்க புடுங்குற மாறி... நாலு கேள்வி கேக்கேன்.”
சிறிதாக கோபமாகப் பேசினாள் உலகம்மை.
ஏதோ ஒரு யோசனையில் ஈஸ்வரி கேட்டாள்.
“எம்மா நீ.... கூட ஒரு பிள்ள பெத்திருக்கலாம்லா.... உங்க காலத்துக்கு அப்பறம்... எனக்கு யாரு இருக்கா..”
உலகம்மை பதிலேதும் பேசாமல் படுக்கையில் சென்று படுத்து விட்டாள். புரண்டு படுக்கையில் கண்களில் கண்ணீர் பனித்தது. நிமிர்ந்துப் படுத்ததும் “அடிவயிற்றின் வலி” உயிரைக் குடித்தது. என்ன, ஏதென்றே தெரியவில்லை.. தொட்டிலில் கிடந்த ஈஸ்வரியின் மகன், தீடிரென்று “ஓவ்” – வென அழ ஆரம்பித்தான்.

அணுகுண்டு

“மத்தவரு.... அந்த பிள்ளைக்கு மேல... கைய வச்சிட்டாரு” – என்ற பேச்சு, பாலில் கலந்த தண்ணீரைப் போல், ஊரெங்கும் காற்றில் கலந்திருந்தது. எவ்விடமும், எல்லோர் வாயிலும், மனதிலும் இது குறித்தப்பேச்சுக்கள், விவாதங்கள், சந்தேகங்கள், கணிப்புகள், ஆருடங்கள்.
வாய்க்கால் வரப்புகள், ஊரடிக் கோவில்கள், கலுங்குகள், முடுக்குகள், வெட்டிப்பேச்சு படுப்புரைகள், கொல்லைப்புறமதில்கள், ஆற்றுப் படித்துறைகளென ஒரு இடம் விடாமல் “அந்நிகழ்வையே” பேசித் தீர்த்தனர் அனைவரும். இரவில் சாப்பிட்டுவிட்டு “உறக்கம்” வராதவர்கள், அன்று “உடலுறவு” வாய்க்காதவர்கள், அரைபோதையில் உட்கார்ந்து அரசியல் பேசுபவர்கள், வயல் வரப்புகளில் “வெளிக்கி” இருப்பதற்காக, அடுத்தடுந்து உட்கார்ந்து இருப்பவர்கள், பால் வாங்க, ரேஷன் பொருட்கள் வாங்க, வரிசையில் காத்துக்கிடப்பவர்கள், வேலை வெட்டி இல்லாத பண்ணையார் குடும்பத்தார்கள் -என எல்லோர் வாயிலும் கிடந்து உருண்டது “அந்தப் பேச்சு”.
“இந்த வாத்தியானுகளே இப்படிதான்.... இந்த மாறியுள்ளவங்கள.. நடு ரோட்ல விட்டு காயடிக்கனும்”
“படிக்கிற பிள்ளைட போய்... இப்படி நடந்திருக்கானே... இவன் விளங்குவானா? இவன் வம்சம் விளங்குமா?”
“இந்த கையாலா..... எத்ர தடவை அவனை கும்டிருக்கேன்... த்தூ...”
“வெள்ளையும், சொள்ளையுமா லாந்திட்டு, பண்ணிருக்க வேலைய பார்த்தியா... சவம்.. இவனுகளெல்லாம் சுட்டு கொல்லணும்”
---- என்பது மாதிரியான தீர்ப்புகளை, அபிப்ராயங்களை உரையாடலின் முடிவில், அவரவர்களுக்கு முடிந்த வரையில் சொல்லித் தீர்த்தனர் மக்கள் அனைவரும்.
“உலை வாயை மூடினாலும், ஊர் வாயை முட முடியாது” என்பது உண்மைதானென்பது இராமசாமி வாத்தியாருக்கும் அப்போதுதான் புரிந்தது. தனது முப்பதாண்டு கால ஆசிரியர் வாழ்க்கை மொத்தமாக புரண்டு போன வருத்தம், அவர் நெஞ்சமெங்கும் சுட்டெரித்தது. எப்படி இருந்தார். ஊரெங்கும் எத்தனை மரியாதை. அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த இடத்திற்கு போனாலும், அவரிடம் படித்த மாணவமணிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்படுவதுண்டு. எங்கு சென்றாலும் “வெடுக், வெடுக்”-கென்று கையை உயர்த்தி சொல்லும் “வணக்கங்கள்”. உடம்பை பணிவாக்கி குசலம் விசாரிக்கும் “மரியாதைப்பேச்சுக்கள்”. தன்னுடைய ஆசிரியப்பணியை நினைத்து பல முறை அவர் கர்வப்பட்டதுண்டு. கோவிலுக்கு, மளிகைக் கடைக்கு, திரையரங்கிற்கு, என எங்கு சென்றாலும், “வணக்கம் சார்” என்ற குரல்கள். அதனைத் தொடர்ந்து கொடுக்கப்படும் ஆசிரியருக்கான “மரியாதைகள்”, பச்சையாகச் சொல்லப் போனால் “ஆளுமைச்சலுகைகள்”. ஆனால் இன்று எல்லாம் தலை கீழ். அவரை நேருக்கு நேராய் எதிர்கொள்ள தைரியம் இல்லாதவனெல்லாம், இப்போது அவரை பேச்சின் மூலம், நார், நாராய் கிழித்துக் கொண்டிருந்தனர்.
எந்த ஒரு மரியாதைமிக்க மனிதனையும் சமூகத்தில் பலவீனப்படுத்தும் வார்த்தை ஓன்று உண்டு. அது “அவன் மத்ததுல வீக்கு” – என்ற பதமாகும். தனிமனிதனின் சுய ஒழுக்கத்தை, அவன் தன்னம்பிக்கையை, அவன் நடத்தையை- என எல்லாவற்றையும் மிகச்சிறிய நேரத்தில் சீரழிக்கும் சக்தி “இந்த வாக்கியத்திற்கு” உண்டு. சரியாக யோசித்து பார்த்தால், ஆம்பிளையாக பிறந்த அத்தனை பேரும் “மத்ததுல வீக்கு தான்”. இது எல்லோருக்கும் தெரியும், இருந்தும் இம்மாதிரியான “மத்த” விசயங்களில், மற்றவர்கள் பெயர்கள் வெளியே தெரியும் போது, ஏனையோர் அனைவரும் “யோக்கியன்களாக” மாறி விடுவதுண்டு. சிலர் இன்னும் கூடுதலாய், நடந்த விசயங்களையெல்லாம் ஆராயாமல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாய் மாறி, “தீர்ப்புகளை” வதந்திகாளாய் பரப்பி விடுவதும் உண்டு. அம்மாதியான ஒரு உச்சகக்ட்ட அவமான நிலையிலிருந்தார் இராமசாமி வாத்தியார்.
ஏராளமான உவமைகளைச் சொல்லி அவர் உருவத்தை உங்கள் மனத்திரையில் கொண்டு வருவதற்குப் பதிலாக, கொஞ்சம் எளிமையாக “அவர்”, யாரைப்போல் இருப்பாரெனச் சொல்லி விடுகிறேன். உங்களுக்கு சினிமா நடிகர் ராஜேசை தெரிந்திருக்கும். அவரை கொஞ்சம் சிவப்பாக்கி, தலையில் சுருள் முடி வைத்தால் ஒரு உருவம் கிடைக்குமே. மனத்திரையில் கற்பனை செய்து பாருங்கள்.. அவரைப் போன்றே இருப்பார் இக்கதை நாயகன் இராமசாமி வாத்தியார். தொடர்ந்த முப்பதாண்டு கால ஆசிரியர் வாழ்க்கை, அவர் நடையில், உடையில் , பேச்சில், சிரிப்பில், உடல் மொழியில் அழகாக வெளிப்படும்.
அவர் எடுக்கும் அறிவியல் பாடங்கள், அனைத்தும் “சினிமாக்கதை” கேட்பது போலவே இருக்கும். ஆனால் முடிவில் அறிவியல் கொள்கைகளின் “சாராம்சம்” அக்கு வேறாய், ஆணிவேராய் அனைத்து மாணவர்கள் மனதிலும் பதிந்திருக்கும். அப்படி ஒரு கற்பிக்கும் வல்லமையை இயல்பிலேயே பெற்றிருந்தார் இராமசாமி வாத்தியார். இதனால் ஏராளமான மாணவர்களின் ஆத்மார்த்த அன்பிற்கும் சொந்தகாரராயிருந்தார். “இறைவனுக்கு அடுத்தபடியாய் இராமசாமி சாருத்தான்” என்று சொன்ன எத்தனையோ மாணவர்களுடன், ஆசிரிய- மாணவர் நட்பை, ஏதும் பிழையின்றி தொடர்ந்து கொண்டும் இருக்கின்றார். ஆனால் யார் கண் பட்டதோ என்னவோ, இன்று மொத்தமும் இடிந்து “அவமானச் சின்னமாய்” உடைந்து கிடக்கின்றார். “சாணி” எறியப்பட்ட தலைவர்களின் சிலையைப்போல், அவர் முகமெங்கும் அவமானத்தின் “தீ”.
அன்று நடந்த எதிர்பாரத ஒரு நிகழ்ச்சி, அவரை அகலப் பாதாளத்தில், அவமானக் குழியில் தள்ளி விட்டது.
அணுக்களைப் பற்றிய அறிவியல் பாடத்திற்கான நேரம், பத்தாம் வகுப்பு “C” பிரிவு.
தனக்கே உரிய பாணியில், விவரிப்பை ஆரம்பித்தார் இராமசாமி வாத்தியார். மொத்த வகுப்பும் அமைதியாய் கவனிக்கத் தொடங்கியது.
“எப்போ... இந்த உலகத்துல என்னெல்லாமோ பொருள்கள் இருக்கு... அப்படித்தானே.... கல்லு, மண்ணு, மரங்கள், விலங்குகள், மனிதர்கள், என எத்தனையோ விதமான படைப்புகள் இருக்கு. இது அத்தனைக்கும் பொதுவான உட்பொருள்... என்னன்னா... அதுதான்.... அணுக்கள். அந்த அணுவானது ரெம்ப ரெம்பச் சின்னது...” -என்று சொல்லி முடித்த அந்த தருணம்.. மாணவர் கூட்டத்திலிருந்து ஒரு குரல்...
“இல்ல.. சார்... நம்ம “அனு” ரெம்ப ரெம்ப பெரிது .....
வகுப்பு மொத்தமும் “கொல்”-லென்று சிரித்து குலுங்கியது. இராமசாமி வாத்தியாருக்கு ஒன்றும் விளங்க வில்லை. ஆனால் மாணவர் கூட்டத்தில் குண்டாக, “பொத்,பொத்”-தென்று, சிரிக்காமல், தலையில் முஸ்லிம்களுக்குரிய ஹிஜாப் அணிந்து, குனிந்திருக்கும், “அனுபாத்திமா”-வைப் பார்த்தபோது, அவருக்கு எல்லாம் சிறிதாக விளங்கியது.
அனுபாத்திமாவின் விளிப்பெயர் “அனு’ தான். அவள் அவ்வூரின் லாயர் மற்றும் மனித உரிமைகள் மன்ற உறுப்பினர் அஹமது பாட்சாவின் செல்ல மகள். இளவயது ஊட்டமோ, அல்லது உடம்பு வாக்கோ என்னவோ, பதினான்கு வயதில், பதினெட்டு வயது வளர்ச்சியோடு இருந்தாள் அனுபாத்திமா. கூட படிக்கும் அனைத்து மாணவிகளைவிட அழகாகவும், கொஞ்சம் குண்டாகவும் இருப்பதால், எல்லா மாணவர்களுக்கும், அவள்மீது ஈர்ப்பு உண்டு. எல்லா மாணவிகளுக்கும் அவள் மீது பொறாமையும் உண்டு.
இராமசாமி வாத்தியார் அறிவியல் பாடம் நடத்த, தமிழின் சிலேடை மொழியறிந்த ஒரு மாணவன், அனுவின் குண்டான உடம்பை கேலிச் செய்யும் பொருட்டு, அதனை இப்படித் திரித்து விட்டான்.
“இல்ல.. சார்... நம்ம “அனு” ரெம்ப ரெம்ப பெரிதென்று .....
எல்லா மாணவர்களும், மாணவிகளும் குண்டாக இருக்கும் அனுபாத்திமாவைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தார்கள். சிரிப்பலை அடங்க சிறிது நேரம் ஆகியது. நிலைமையைக் கையாளத் திணறி, மாணவர் கூட்டத்தினை ஒருவாறு அடக்கி, மீண்டும் பாடத்திற்குள் கொண்டு வந்தார் இராமசாமி வாத்தியார்.
வகுப்பறையின் பாடங்களேதும் அனுபாத்திமாவின் மூளைக்கு உரைக்க வில்லை. ஏதோ ஒரு அவமானத்திலிருந்தாள். சின்ன வயதல்லவா? சிறு ஏளனமும், பெரு வலியாக, “நெஞ்சை” அழுத்தியிருக்கும். அனுபாத்திமாவின் ஒரு பக்க முகத்தில் கோபமும், மறுபக்க முகத்தில் அழுகையும் தெரிந்தது. அடக்கி கொண்டாள். வீட்டுக்கு ஒரே செல்ல பிள்ளையான அவளுக்கு, மொத்த மாணவர்களின் சிரிப்பு “ஒரு வித மனப்பிரயாசத்தை” உண்டாக்கியது. விடலை பருவமல்லவா. “மானுடப்பாலியல்” குறித்து சந்தேகங்கள் நிறைந்த வயது. “இச்சையூட்டும் விசயங்கள்” பற்றி தெளிவில்லாத மனது. மொத்த மாணவிகள் இருக்குமிடத்தில், தன்னை மட்டும், தன் உடம்பை மட்டும், தன் வனப்பை மட்டும் நோட்டமிடும் ஆண்களின்கண்களை நினைத்து பலநேரங்களில் வெட்கத்தையும், சிலநேரங்களில் அருவருப்பையும் உணர்ந்திருக்கிறாள். ரோஜாக்களை பறிக்காமல், செடியோடு பூந்தொட்டியில் வைத்து ரசிக்கும் மனங்கள் இருக்கின்றன. ரோஜாக்களை பறித்து, பிரித்து, நுகர்ந்து களிக்கும் மனங்களும் உள்ளன. யார் எப்படி என்று, யாருக்குத்தான் தெரியும்? தன்னை, தன் இளமை செழிப்பை, வெறித்துப்பார்க்கும் பார்க்கும் ஆண்களின் மனதை, புரிந்துகொள்ள முடியாத குழப்பத்திலிருந்தாள் அனுபாத்திமா. அதற்கிடையில் வகுப்பறையில் இந்த கிண்டல், பரிகாச பேச்சுக்கள் வேறு. நேரம் செல்ல செல்ல ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு, பாடத்தை கவனிக்கலானாள்.
இராமசாமி வாத்தியார் அணுக்களின் கட்டமைப்பை விளக்கி, அணு மாதிரிகளை விளக்கி, இறுதியில் அணுக்களின் பயன்பாடுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.
“......இப்படி அணுவின் மாதிரிகளை ஜான் டால்டன், சாமர்பீல்ட், நீல்ஸ் போர் போன்றவர்கள் வடிவமைத்தனர். சரி... இதனால் மக்களுக்கு என்ன பயன் சார்..... அப்படிக் நீ கேட்டன்னா.. ஆமா... அணுக்களினால்தான்... இப்போது நாம் ஏகப்பட்ட பயன்களை அனுபவித்து வருகிறோம். முக்கியமானது அணு மின்சாரம் கேள்வி பட்டிருப்பீங்க... அதாவது அணுவை உடைச்சி, அதிலிருந்து வரும் ஆற்றலை மின்சாரமா மாத்துறது... கூடங்குளம் அணு ஆராய்ச்சி மையத்துல.. இதத்தான் பண்றாங்க.... அடுத்த முக்கியமான பயன் என்னன்னா... “அணுகுண்டு” – என்று உரக்கச் சொன்ன அடுத்த நிமிடம், கொளுத்தி போட்ட பட்டாசாய் வெடித்துச் சிரித்தனர் மாணவர்கள் அனைவரும்.
மீண்டும் தமிழ் சிலேடை தன் வேலையைக் காட்டியது . “அணுகுண்டை” “அனு குண்டாய்” நினைத்து சிரித்து உருண்டனர்.
சில மாணவர்கள்
“அனு குண்டு”
“அனு குண்டு”
“அனு குண்டு”
“அனு குண்டு” – என கத்த ஆரம்பித்தனர்.
மாணவர்களின் அலம்பலை கட்டுபடுத்த முடியாமல் திணறினார் இராமசாமி வாத்தியார். வகுப்பறை முழுதும் சிரிப்பலைகள். மொத்த முகங்களும் அனுபாத்திமாவை நோக்கி, ஏளனப்பார்வை வீச, அவமானத்தில் கூனிக் குறுகி, ஆற்ற முடியாமல் தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தாள் அனுபாத்திமா.
மற்ற மாணவர்களை வெளியே அனுப்பி விட்டு, ஏதேதோ சமாதானம் செய்தும் அவள் அழுகையை நிறுத்த வில்லை. வீட்டுக்கு போக வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள். மற்ற பெண் ஆசிரியர்கள் சமாதானம் செய்தும் பலனில்லை. வீட்டுக்கு போகவேண்டுமென்று அழுது கொண்டேயிருந்தாள். தலையை சுற்றியிருந்த ஹிஜாப் துணி முழுவதும் கண்ணீரில் நனைந்தது. பெண்பிள்ளை. தனியாக வீட்டுக்கு அனுப்ப முடியாது. வேறு வழியில்லாமல் வீட்டுக்கு போன் போட்டு, விசயத்தை தெரிவித்தனர். அவள் அழுது அழுது, முகம் முழுதும் சிவந்திருந்தது. இராமசாமி வாத்தியார் மீண்டும் சமாதானம் சொன்னார்.
“எம்மோ.. அழாத.. உங்க வீட்டுக்கு போன் பண்ணியாச்சு... இப்ப உங்க அப்பாம்மா வந்திருவாங்க..”
அனுபாத்திமாவிற்கு ஆண்களின் மீதிருந்த மொத்த கோபமும், அழுகையாக வெளியேறியது. “அணுகுண்டு” பாடமெடுத்த இராமசாமி வாத்தியார் மீதும் சிறிது கோபம் படர்ந்தது. அவரோ அவளை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தார்.
“எம்மோ..... அழாத... சொன்ன கேளு... முதல்ல அந்த துணியை அவித்து, முகத்தை கழுவு. இப்ப உங்க வீட்ல இருந்து வந்திருவாங்க.. அழாதமோ” – என்றார்.
சில பெண் ஆசிரியர்களும் சமாதானம் செய்ய, ஒரு வழியாக சமாதானமடைந்து, தலைத் துணியை அவிழ்த்து முகம் கழுவினாள். தலைமுடிகள் குலைந்து, கண்கள் சிவந்து, கண் மைகள் கலைந்து, முகம் கழுவிய ஈரம் மாரெங்கும் தெரிய, அரசு மருத்துவமனை வெளிநோயாளியைப் போல், பள்ளிக்கூட வெளிப்புறப் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அனுபாத்திமா.
லாயர் அகமது பாட்சா பதறியடித்து பள்ளிக்கு வந்து மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்தார். ஆசிரியர்களையோ, அவரின் பேச்சுக்களையோ அவர் கருத்தில் கொள்ளவே இல்லை. மகளின் அருகில் சென்று கையை பிடித்து “என்னாச்சு... பிள்ளே” – என்றார். அனுபாத்திமா மீண்டும் அழ ஆரம்பித்தாள். பேச்சு வரவில்லை. பெற்ற மகள் இந்நிலையில் அழுதுக் கொண்டிருந்தாள் யாருக்குத்தான் கோபம் வாராது. பக்கத்தில் இராமசாமி வாத்தியார் இன்ன பிற ஆசிரியர்கள் சேர்ந்து நடந்ததை விளக்க முயற்சித்தனர். யார் பேசுவதையும் அவர் கேட்பதாக இல்லை. சினம் கொண்ட பாம்பென எல்லோரையும் திரும்பிப் பார்த்தார். தொழுது கருத்த நேற்றிமேற்றில் வியர்வையின் வீச்சங்கள். உடம்பெங்கும் கோபத்தின் அதிர்வுகள். முதல் கேள்வியே ரெம்ப விவகாரமாக இருந்தது.
“மோளுக்கு... தலையில இருந்த “ஹிஜாப்ப” களத்துனது யாரு.”
எச்சி தெறிக்க, விழுந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் எல்லோரும் நெளிந்தனர். அடுத்தடுத்து ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார் லாயர். மகளைப் போல் அப்பாவையும் சமாளிக்க அரும்பாடு பட்டனர் ஆசியர்கள் அனைவரும். அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. சிறிது நேரம் ஒரே வாக்குவாதமாக இருந்தது. கடைசியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரையும் “கோர்டுக்கு” இழுப்பதாக “சபதம்” செய்து, மகளோடு இடத்தைக் காலி செய்தார் லாயர் அகமது பாட்சா.
எல்லோரும் இராமசாமி வாத்தியாரை ஒருமாதிரிப் பார்த்தனர். இதுவரை எந்த காரணத்திற்காகவும், யாரிடமிருந்தும் எந்த வித ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டிராத இராமசாமி வாத்தியார், முதன் முதலாய் கோப மிகுதியில் தலைமை ஆசிரியரிடமிருந்து அந்த கேள்வியை எதிர்கொண்டார்.
“நீரு... எதுக்கு வேய்... அந்த துணிய..அவுக்க... சொன்னேரு”
வெடிகுண்டில் அடிபட்ட பட்டாம்பூச்சியாய் அதிர்ந்து போனார் இராமசாமி வாத்தியார். பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் அவமானத்தில் மூச்சும், பேச்சுமற்று கற்சிலையாய் நின்றிருந்தார் இராமசாமி வாத்தியார்.
தலைமை ஆசிரியர் கேட்ட அந்த கேள்விதான், வாய் விட்டு, வாய்... நகர்ந்து, பலர் நாவுகளில் உருண்டு, ஊர்மக்களால் “பல விதமாய்” திரிக்கப்பட்டு, கதையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த “மத்தவரு.... அந்த பிள்ளைக்கு மேல... கைய வச்சிட்டாரு” – என்று மாறியிருந்தது.
அவமானம் என்பதற்கு வரையரையென்ன? அது அனுபவிக்கும் மனிதரின் தன்மையைப் பொறுத்தது. அது அமையும் சூழ்நிலையை பொறுத்தது. சில மனிதர்களுக்கு பெருத்த அவமானமும் சிறு விஷயம்தான். ஆனால் சில மனிதர்களுக்கு சின்ன அவமான பேச்சுக் கூட, பெருந்துயராய் நெஞ்சம் தாக்கும். இராமசாமி வாத்தியார் அந்த சில மனிதர்களில் முக்கியமானவர். பெருமதிப்பின் உச்சத்திலிருந்த அவருக்கு, இந்த அவமானப்புள்ளி, “கோபுரக்கலசம்” காற்றடித்து, சாக்கடையில் விழுந்த துயரத்தைக் கொடுத்தது. “ஊராரின் இழிபேச்சுக்கள்” அவர் உடம்பு, மனது, என மொத்தத்தையும் ஆட்டிப் படைத்தது. வணக்கம், வணக்கமென வாய்விட்டு சொன்ன நாவுகள், தயக்கமின்றி தன்னைத் தாக்கி பேசுவது, அவருக்கு ஆற்றொணாத் துயரத்தைத் தந்தது. போகட்டும்..... எல்லாம் போகட்டும்...... காலம் போகிற போக்கில், எல்லா மனிதர்களின் துயரங்களுக்கும், “ஒரு தீர்வை” தந்துவிட்டுத்தான் செல்கிறது. அதுவே “காலத்தின்” சக்தி. எனவே காத்திருப்போம். காத்திருப்போம். காலத்தின் கையில் “துயரங்களைக்” கொடுத்துக் காத்திருப்போம்.
நாலைந்து நாட்கள் விடுப்பு எடுத்து விட்டு, வீட்டிலேயே படுத்துக் கிடந்தார் இராமசாமி வாத்தியார். இறந்து போன மனைவி மங்களத்தின் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தார். துக்கம், துயரம் கூடும்போது, துணையை தேடுவது இயல்புதானே. அவள் இருந்திருந்தால் , இப்போது கொஞ்சம் ஆதரவாக இருந்திருக்குமென தோன்றியது. தூக்கமில்லா கண்கள், சவரம் செய்யா முகமென வாடி வதங்கிப் போயிருந்தார். ஒரு மாதிரியான அரை தூக்க மனநிலை.
“இப்ப என்ன நடந்திட்டுன்னு இப்படி இருக்கியோ” - மங்களத்தின் குரல்.
“இல்ல... என்னையையும், அந்த சின்ன பிள்ளையையும் பத்தி இப்படி பேசுகானுகளே.... ஒரு வருத்தம்” – இது இராமசாமி வாத்தியாரின் மனக்குரல்.
“அம்மையையும், மகனையும், - அப்பாவையும், மகளையும் தப்பா பேசுற உலகம் இது.. இருவது வயசு மகளை, பெத்த அப்பன் ரோட்டுல வச்சு பாசத்தோட கட்டிப் பிடிக்க முடியுமான்னு.. சொல்லுங்கோ... அத பார்த்துதான் இந்த உலகம் சும்மா இருக்குமா?”
“இல்ல... மதிப்பு... மரியாதை.. எல்லாம் போச்சேன்னு ஒரு கவலை”
“மண்ணாங்கட்டி......இவனுகளுக்கு மதிப்பையும், மரியாதையும், சட்டை பாக்கெட்டுல ரூவாயா.. வைக்க முடியுமா? அல்லது சட்டில வறுத்து திங்கதான் முடியுமா? குப்பைல போடுங்கோ.... எல்லாத்தையும்”
“இல்லமா.... நான் என்ன சொல்லுறேன்னா”
“நீங்க ஒண்ணும் சொல்லாண்டம்.... மொதல்ல ஸ்கூலுக்கு கிளம்புங்கோ? எனக்கு நீங்க எப்பவுமே, கையில “சாக்பீஸ்” கரையோட, வெள்ளையும், சொள்ளையுமா லாந்துனாதான்” பிடிக்கும்.
சட்டென்று தூக்க நிலை கலைந்து சுயநினைவிற்கு வந்தார் இராமசாமி வாத்தியார். திரும்பி மணியை பார்த்தார். பத்தாக பத்து நிமிடமிருந்தது. வேகமாக வெள்ளைச் சட்டையணிந்து, பள்ளிக்கூடம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். மங்களத்தின் போட்டோவில் கிடந்த சந்தன மாலை “காற்றில் அசைந்து” வழியனுப்பி வைத்தது.

நீங்க தயிர்சாதம் சாப்பிட்டிருக்கீங்களா...

நீங்க தயிர்சாதம் சாப்பிட்டிருக்கீங்களா...
வெள்ளையா, பூ பூவா, புளிப்பா... இருக்குற தயிர்சாதம் சாப்பிட்டிருக்கீங்களா...
நான் சொல்லுற தயிர் சாதம், நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. நீங்க நினைக்கிற மாறி கடையில் விற்கப்படும், பை அரிசியை புதிதாய் பொங்கி, வடித்து, சூடாற வைத்து, பாக்கெட் டப்பாவில் உள்ள தயிரை, அதன் மீது ஊற்றி, எங்க ஊற்ற???? செயற்கை கட்டித்தயிரை ஆப்பையால் வழித்து, சாதத்தில் கொட்டி, தாளிப்பு என்ற பெயரில் வேண்டாத குப்பையெல்லாம் அள்ளி போட்டு, எண்ணெய் பசையோடு, உப்பை போட்டுக் கிண்டி, சாதம் வித்து, வித்தாக இருந்தால், மிக்ஸ்யில் போட்டு அரைத்து, ஏதோ “கலா திலக, அச்டவதன சமையல் வித்வான்” போல், வலதுகை ஆப்பையால், கலவையை இடது கையில் விட்டு, நக்கி ருசி பார்த்து, காலம் போன கடைசியில் கை கொடுக்கும், “கிழட்டுத் தயிர்சாதமாய்” எல்லா விருந்து உபசரணைகளிலும் தட்டில் வந்து விழும்.
இன்னும் சில அதிக பிரசங்கிகள் அல்லது நவயுக சமையல் விஞ்ஞானிகள் தயிர் சாதத்தில் காரட் போடுதல், ரோசாப்பூ போடுதல், பூந்தி போடுதல், ஆரஞ்சு அல்லது திராட்சை பழம் போடுதல், இன்னும் சில அதிமேதாவி, அதிரூப சமையல் சுந்தரிகள்/சுந்தரர்கள் மாதுளம் பழம் போடுதல், அன்னாசி பழம் போடுதல்... எனக் கண்ட பழங்களையும் போட்டுக் கலக்கி, கிண்டி, தன் இயற்கை வெள்ளை நிறத்தை இழந்து, ஹோலிப் பண்டிகைக்கு பயந்த விடலை பெண்ணாய், எழுத்தில் சொல்ல முடியாத, வேறான ஒரு நிறத்தில் தட்டத்தை வந்து நிரப்பும் அந்த “தயிர் சாதம்”. அதனை மூன்று, நான்கு வாய்கள் நக்கித் தின்று விட்டு, தின்னும் போது நாக்கு உணரும் சுவை சோற்றினுடையதா? தயிரினுடையதா? அதனுடன் போட்ட இன்ன பிற வஸ்துக்களுடையதா? அல்லது சேர்த்த பழத்தினுடையதா? என்ற குழப்பம் மேலோங்க, சாப்பிட்டு முடித்து, கையும் கழுவி விடுவோம்.
நான் சொல்ல வருவது அந்த நவயுக, நாகரீக, கலியுக, புஜகல, பராக்கிரம “தயிர்சாதத்தை” பற்றியல்ல. இது கொஞ்சம் “பழசு கண்ணா.... பழசு”. இதை படிக்க படிக்க உங்கள், உள்நாக்கில் தண்ணீர் ஊறி, வெளி நாக்கில் வடியலாம். அல்லது “போடா.. நீயும்.. உன் டேஸ்டும்னு” கோபத்தில் எச்சில் விழுங்கி, படித்து முடிக்கலாம். எதுவாக இருந்தாலும் “என் கடன்...பணி செய்து கிடப்பதே” – என்பதைப் போன்று, “என் கடன்... கண்டதையும் எழுதிக் கிழிப்பதே” – என்பதாகும்.
So coming to the point, இந்த தயிர்சாதம் செய்ய, நீங்கள் ஒருநாள் மெனக்கிட வேண்டும். அதே தான்... புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஒரு வெள்ளித்தட்டை எடுத்து(எவர் சில்வர் என்றாலும் ஒகே), அதன் மையத்தில், வீட்டு அரிசியில் வடித்த பழைய சாதத்தை, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும் (வீட்டரிசியென்றால் என்ன என்பதை அறிய, என்னுடைய பழைய பதிவைப் படிக்கவும்). நீங்கள் சரியான அரிசியை தேர்த்தெடுத்திருந்தால், இப்போது அதை பார்ப்பதற்கு மட்டுமல்ல, தொடுவதற்கும் “பிச்சிப்பூ” போலவே இருக்கும். அதன் மீது ஊற்றும் நிலையிலுள்ள, (கவனிக்க....வழிக்கும் நிலையில் உள்ளதல்ல), சற்று புளிப்பு தூக்கலாக உள்ள பசுமாட்டுத் தயிரை “வெட, வெட, வெட, வென ஊற்றவும்(கவனிக்க.....கொட்ட வில்லை). “பரல் உப்பு” சிறிதெடுத்து தேவைக்கு ஏற்றார் போல், சேர்த்து நன்றாக உங்கள் “சொந்த கைகளால்” “அரை கூழ் பத நிலைக்கு” நன்றாக பிசையவும். இது ஒருபுறம் இருக்க, நன்றாக பச்சை நிறமுள்ள மிளகாய் நான்கெடுத்து, உப்பும், தேங்காயும் சேர்த்து, தண்ணீர் ஏதும் விடாமல், நன்றாக இடிக்கவோ அல்லது நுணுக்கவோ செய்யவும். No மிக்ஸி. Hand ஒன்லி.
பின்பு நுணுக்கிய பச்சை மிளகாய், தேங்காய், உப்புக் கலவையை, தயிர் சாதத்துடன் சேர்த்து, ஒய்யாரமாய் உட்கார்ந்து, “ஆஹா... ஓஹோ...” என புகழ்ந்து சாப்பிட்டுத் தீர்க்கவும்.
விதிமுறைகள்
1. ஒரு கடி சோறு.. ஒரு கடி அப்பளம் என்ற விளம்பரம் போல், ஒரு வாய் தயிர் சாதம், ஒரு வாய் “நுணுக்கிய தொவையல்” என சாப்பிட வேண்டும். ஏதேனும் ஒன்றை இருமுறை தொடர்ச்சியாக சாப்பிட்டு விட்டு, “அத்தனைச் சுவை இல்லை” என்று குறைச்சொன்னால், கம்பெனி பொறுப்பேற்காது.
2. இடையே, இடையே விரல்களில் வழிந்தோடும் தயிர்சாதக் கலவையை “நக்கி” சாப்பிடுவது, அவரவர் விருப்பத்திற்குரியது. இருந்தும் கம்பெனி அவ்வாறு சாப்பிடவே சிபாரிசு செய்கிறது. சாப்பிட்டபின் தட்டத்தை நக்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பத்திற்க்குரியது.
3. எக்காரணம் கொண்டும் இடையே தண்ணீர் குடிப்பது கூடவே கூடாது. சாப்பிட்ட மொத்த தயிரின், குளிரையும், சுவையையும், உடம்பு ஏற்றுக் கொண்டே பின்பே, தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. இதனால் வரும், காய்ச்சல், மூக்கடைப்பு, சளித்தொல்லை, இன்னபிற இத்யாதி வியாதிகளுக்கு கம்பெனி எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்காது.
5. மாங்கா ஊறுகாய், வடு மாங்காய், மாங்காய் தொக்கு, இன்ன பிற “தொடுசுவை”களை அவரவர் வசதிக்கேற்றார்போல் பயன்படுத்தலாம். இருந்தும் கம்பெனியின் சிபாரிசு “நுணுக்கிய தொவையலுக்கே”.
6. இத்தனை விவரிப்புக்குப் பிறகும் இதன் சுவை உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால், உங்கள் தயிர்சாதத்தை உங்களுக்கு பிடித்தபடி, நீங்கள் சாப்பிடுங்கள். என்னுடையதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
தயிர் சாதம் என்ற பெயரில், கண்டதைத் தின்று, ஏமாந்ததின் விரக்தியே இந்த பதிவு. ஜெய் தயிர் சாதம்.

சடலச்சாந்தி

அந்த இடம் முழுதும் ஒரு “அமானுஷ்ய” தன்மை இருந்தது. காற்றில் அரளிப் பூக்களின் மணமும், சாம்பிராணி மணமும் வியாபித்திருந்தது. அடிக்கடிக் கேட்கும் சங்கு மற்றும் மணிகளின் ஒலியைத் தவிரப் பக்தர்கள் கமுக்கமாகப் பேசிக்கொள்ளும் ஹாஸ்ய பாஷையும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்ததது.
சிறிய அறைகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த நெய் விளக்குகள் சொற்ப வெளிச்சத்தையும், சீடர்கள் நடக்கும் போது பெரிய நிழல்களையும் உண்டாக்கியது. சுவரிலிருந்த “காளிதேவி உக்கிரமாக வதம் செய்யும் அரக்கர்களின் படங்கள்” தவிர்க்க முடியாத ஒரு பயத்தை உண்டாக்கியது. அமர்ந்திருக்கும் எல்லோர் முகத்திலும் கேள்விக் குறிகளும், அதற்கு “அம்மணச்சாமி” என்ன பதில் சொல்லும் என்ற பேராவலும், கலக்கமும் குடிக் கொண்டிருந்தது.
சாமியிடம் குறி கேட்க வந்திருந்த மிங்கூர் ஜமீன் சபாபதி கலக்கத்திலிருந்தார். முகமெங்கும் சோகத்தின் ரேகைப் படர்ந்திருந்தது. ஐம்பத்தைந்து வயது உடம்பு தொப்பையாலும், அணிந்திருந்த கதர் ஜிப்பாவினாலும் சற்றுப் பெரிதாகத் தெரிந்தது. நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தது. ஆடம்பர வாழ்க்கை உடலுக்கு வனப்பை கொடுத்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலையால், கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கத்தைப் போல் வாடி, வதந்கியிருந்தார். தூக்கம் இல்லாத கண்கள் தீக்கங்காய்ச் சிவந்திருந்தது. தலையைக் குனிந்து, நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தார். கூட வந்திருந்த கணக்குபிள்ளை செல்வரெத்தினம் மட்டும் சீடர்களிடம் அம்மணச்சாமியின் வருகைப் பற்றிக் பேசிக்கொண்டிருந்தார். ஒரு சீடன் முன்பக்கமாய்க் குனிந்து பௌயமாகப் பதில் சொல்லிகொண்டிருந்தான்.
“சாமி எப்ப வரும்?”
“வர நேரம் தான்.. இன்னைக்கு அமாவாசைனால குளிச்சிட்டுப் பைரவப் பூஜை முடிச்சிட்டுதான் சாமி வரும்.”
“வந்ததும் உள்ள போயிரணும்.. விஷயம் வெளிய கசியப்பிடாது”.
“சரிதான்.... ஆண்டைக்குக் குடிக்க எதாவது?”
வேண்டுமா.... என்பதுபோல் செல்வரெத்தினம் ஜமீன் பக்கம் திரும்ப, தலையை நிமிர்த்தி, வேண்டாமெனச் சைகை செய்தார் ஜமீந்தார். சீடர்கள் போனதும் தவிர்க்க இயலாத ஒரு அசாதாரண மௌனம் அந்த இடமெங்கும் நிரம்பி வழிந்தது.
அம்மணச்சாமியார் வந்த பாடில்லை. அனைவரின் மனங்களும் அவர் வருவதையே ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தன. கட்டைப் பிரம்மசாரியான அம்மணச் சாமியார் ஆயுள் முழுதையும் காளிவழிபாட்டிற்கு அர்ப்பணித்தவர். கருத்த உடம்பும், நிறைத்த முடியும், வெளுத்த சந்தனமும், தியான நிலையுமாய் உலாவுபவர்.
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி – என்ற குதம்பைச் சித்தர் வழி வாழ்பவர்.
ஆடைக்களைந்தவர். நிர்வாணமென்பது நிர்கதியின் அந்தமென்பவர். முற்றும் துறந்தவறேன்றும், முன்பின் நிலைகள் அறிந்தவறென்றும் அறியப்படுபவர். அம்மணச்சாமியாரின் ஆலோசனைகள் அங்குள்ளவர்களுக்கு, ஆக்கப் பூர்வமான அனுகூலங்களைத் தந்ததால் அல்லது அவ்வாறு தோன்றியதால் அவரை நம்புபவர்களுக்கு அவர்தான் ஆபத்பாண்டவன், அனாத இரட்சகன் எல்லாமே. வாக்குச் சித்தத்தினால் சில பேருக்குச் சாமியாராகவும், பல பேருக்குக் கடவுளாகவும் அருள் பாலித்துக்கொண்டிருந்தார் அம்மணச் சாமியார்.
மிங்கூர் ஜமீனுக்கு அம்மணசாமியின் மீது அபார நம்பிக்கை உண்டு. ஜமீனின் நல்லது கெட்டது தொடங்கி, ஏனைய அனைத்துக் காரியங்களுக்கும் நாள் குறிப்பது அம்மணச்சாமிதான். ஜமீன்குடும்பத் திருமணக் காரியங்கள், குலதெய்வ வழிபாடுகள், தானதர்ம காரியங்கள் முதற்கொண்டு, அடுத்த வாரிசு நியமிப்பது வரையிலான அத்தனை விசயங்களிலும் அம்மணச்சாமியின் தலையீடு இருக்கும். அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை அம்மணச்சாமி மீது வைத்திருந்தார் மிங்கூர் ஜமீன்.
ஜமீனின் நலனுக்காக, ஆயுள் அதிகரிக்கும் பொருட்டு, அரண்மனையிலிருக்கும் இளம் கன்னியை மணம் முடிப்பாய் – என அம்மணச்சாமி ஆலோசனைக் கூற, கழிந்த ஆண்டுதான் பதினாலுவயது பத்மாவதியை நான்காவதாகத் திருமணம் செய்திருந்தார் மிங்கூர் ஜமீன். பத்மாவதி இப்போது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறாள். அந்தத் திருமணத்திலிருந்து தொடங்கியதுதான், ஜமீன் இளவரசி மூத்த மகள் செந்தேவி நாச்சியாருக்கும், தந்தையார் ஜமீன்தார் சபாபதிக்கும் நடந்து கொண்டிருக்கும் தந்தை-மகள் பிரச்சனை.
உடனிருந்து விளையாடிய உற்றத் தோழியை, பெற்ற தந்தையே திருமணம் செய்து கொண்டால், யாருக்குத்தான் பிடிக்கும். பத்மா.. பத்மாவெனப் பாசத்தோடு அழைத்த சிநேகிதியை, “சித்தி” என்றழைக்கச் சிறு மனதிற்கு முடிய வில்லை. தோழிக்கு ஆதரவாய் தந்தையை எதிர்த்தாள். எதிர்த்தே மடுத்தாள் செந்தேவி. என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். அழுதாள்.. அடம் பிடித்தாள்.. ஆண்டவனிடம் முறையிட்டு மண்டியிட்டாள். பள்ளித்தோழியை ஜமீன் அரண்மனைக்குக் கூட்டி வந்ததை நினைத்துக் குற்றவுணர்வு கொண்டாள். ஏழையான பத்மாவதியின் பெற்றோர்கள், மனதிற்குள் வருத்தம் இருந்தாலும், பெரிதாக எதிர்க்கவில்லை. அல்லது அவர்களால் எதிர்க்க முடியவில்லை. அதிகாரத் தோரணைகளுக்கு முன்பு, அந்நாடம்காட்சிகள் என்ன செய்ய முடியும். செந்தேவி நாச்சியாரின் ஏகோபித்த எதிர்ப்பையும் மீறி, அம்மணச்சாமியார் குறித்த நாளில், சுற்றம் சூழ, பெருநரிக்குச் சிற்றெரும்புடன் திருமணம் முடிந்தது.
அந்நாளிலிருந்து ஒருவித அசாதார நிலைக்குச் சென்றாள் செந்தேவி நாச்சியார். யாருடனும் அவ்வளவாகப் பேசுவதில்லை. அலங்காரம் செய்து கொள்வதில்லை. வழக்கமான விளையாட்டுக்களில்லை. அறையை விட்டு வெளியே வருவதில்லை. எப்போது சாப்பிடுகிறாள்? எப்போது தூங்குகிறாள்? யாருக்கும்....எதுவுமே தெரிவதில்லை. அறைப்பணிப்பெண் ஆருத்ரா மட்டும் இளவரசியின் அருகிருந்து அத்தனையும் கவனித்துக் கொள்கிறாள். சில நாட்களில் சரியாகிவிடுவாளென ஜமீந்தாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாட்களாகி, வாரங்களாகி, மாதங்களாகி, ஒன்றரை வருடங்கள் முடியப் போகிறது. மண்ணுக்குள் புதைத்து வைத்த “கருங்கல்லை” போல், மட்காமல், மாறாமல் அப்படியே இருந்தாள் செந்தேவி நாச்சியார்.
அருமை மகளைச் சமாதானம் செய்ய ஜமீந்தார், பலவழிகளில் முயன்றும் முடியவில்லை. சினம் கொண்ட நாகமாய்ச் சீறிக்கொண்டேயிருந்தாள் செந்தேவி நாச்சியார். “மனம்” ஒரு வித்தியாசமான எந்திரம். மனித உடம்பால் செய்ய முடிந்ததெல்லாம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் மனித மனத்தால் செய்ய முடிந்ததை, முடியாததை வரையறுக்க முடியுமோ? எல்லையில்லா எண்ண ஆற்றல் கொண்டது “மனம்”. பழுதுப்பட்ட மனத்தைச் செம்மைப்படுத்துவது சிரமம். அதுவும் உணர்வுகளால் துயருற்ற பெண் மனதை சாந்தப்படுத்துவதென்பது, “கடந்தைகூட்டு”-க்குள் சென்று, கைத்தட்டுவதற்குச் சமமாகும். எந்தச் சமரசத்திற்கும் செவி சாய்க்காமல் செவிட்டு கற்சிலையாயிருந்தாள் செந்தேவி நாச்சியார்.
மகளின் பிடிவாதத்தால் மனம் வெதும்பியிருந்த மிங்கூர் ஜமீனுக்கு, அந்த முன்னிரவில் வந்த செய்தி, நெஞ்சை பிளந்து, தீக்கங்கை கொட்டியது போலிருந்தது.
இளவரசியின் பணிப்பெண் ஆருத்ரா தான் “அந்தச்செய்தியைச்” சொன்னாள்.
ஆம்...
அவர் எதை நினைத்து அனுதினமும் பயந்துக் கொண்டிருந்தாரோ?
அவர் எது நடக்கக் கூடாதென்று எண்ணிக் கொண்டிருந்தாரோ?
அதுவே நடந்து விட்டது.
ஜென்ம விமோசனம் அடைய முடியா “பெரும்சாபம்” நிகழ்ந்திருந்தது.
செந்தேவி நாச்சியார் விஷமருந்தி, தற்கொலைச் செய்திருந்தார்.
அணு அணுவாய்ச் சிதறியிருந்தார் மிங்கூர் ஜமீன். எப்படி நடந்திருக்கும் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை. ஓடிச்சென்று மகளின் சடலத்தைப் பார்த்துத் துடிதுடித்துப் போனார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடம்பெங்கும் பதற்றம் தொற்றிக்கொள்ள, அரச வாரிசுகள் கன்னியாய் சாவது ஜமீனின் அழிவிற்கே காரணமாகுமென அம்மணச்சாமி கூறியது நினைவுக்கு வந்தது. ஒரு கணம் சிந்தித்தார். மரணச்செய்தியை ரகசியமாக்க முடிவு செய்தார்.
அம்மணச்சாமியின் ஆலோசனை வரும் வரை இறந்த செய்தி யாரும் அறியக்கூடாதென்று ஆருத்ராவுக்கு ஆணையிட்டார். காற்றென விரைந்து, இப்போது கணக்குபிள்ளை செல்வரெத்தினதுடன் அம்மணச்சாமிக்காகக் காத்திருக்................கிறார்.
….
சட்டென்று வந்த மணியோசை எல்லோர் உடம்பிலும் ஒரு அதிர்வை கொடுக்கத்தான் செய்தது. அதைத் தொடர்ந்து காற்றில் புதுச் சாம்பிராணியின் மணம். பைரவப் பூஜை முடிந்ததற்கான அறிகுறி.
சிறிது நேரத்திற்கெல்லாம் அம்மணச்சாமி வந்து கொண்டிருந்தார். மயிர் மண்டிய தலையின் நெற்றியில், பால் வெள்ளையில் திருநீற்றுத் தீட்டல். அதன் மத்தியில் பைரவரின் காலடியிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தச் சிவப்பு நிற, வட்ட குங்குமப் போட்டு. வியர்வையில் நனைந்து அது, அரக்கு கலருக்கு மாறிக் கொண்டிருந்தது. அம்மணமாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல், உடம்பெங்கும் சந்தனம், களபம், திருநீறு, மஞ்சனைப் பூச்சல்கள். வேகமாக நடந்து, காளிதேவியின் சொரூப சிலையிருக்கும், பூஜை அறைக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் மணியோசை, சாம்பிராணி, கற்பூரவாசனைகள்.
பூஜை முடிந்ததைக் குறிப்பாலுணர்ந்த ஜமீனும், கணக்கு பிள்ளையும், எழுந்திரிக்க, சிடனோருவன் வந்து, உள்ளே வருமாறு சைகை செய்தான்.
ஜமீனைக் கண்ட அம்மணச்சாமி இலேசாகச் சிநேகப் புன்னகைப் பூத்தார்.
ஜமீன் சிரிக்காமல் அழும் நிலையிலிருந்தார். அம்மணச்சாமி பேச ஆரம்பித்தார்.
“என்ன சபாபதி.. இளவரசி கடந்து விட்டாளா?”
பொட்டிப் பொடிந்து கரைந்து விட்டார் ஜமீன் சபாபதி. அழுகையின் விளும்பல்கள் அறையெங்கும் எதிரொலித்தது. சிறிது நேர சமாதானத்திற்குப் பின் அம்மணச்சாமி மீண்டும் பேசினார்.
“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே உன்பாதஞ் சேரேனோ..”
---- என்று பாடி, பின்பு பேசினார்.
“சபாபதி..... பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உலகின் நீயதி. செந்தேவி என்பவள் பிறந்தாள்... இறந்தாள்.. அவ்வளவே. அவள் கன்னியாய் இறந்த கலக்கம் மட்டுமே என்னுள்.” – என்றார்.
கண்கள் முழுதும் நீர்க்கோர்க்க சபாபதி கேட்டார்.
“மிங்கூர் ஜமீன் என் இன, ஜாதி மக்களுக்காவே நான் வாழ்கிறேன். அவர்கள் நலனே எனக்கு முக்கியம். மக்களைப் புரிந்து கொண்ட என்னால், என் மகளைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான் சாமி...”
“யாரை... யாரால்தான் புரிந்து கொள்ள முடியும். புரிதல் என்பது உன்னால் உனக்குள்ளே செய்யப் படுவது. உன்னை நீ முதலில் புரிந்து கொள்” – என்றார் அம்மணச்சாமி.
சிறிதுநேர இடைவெளிக்குப் பின் கலக்கத்தோடும், கண்ணீரோடும் பேசினார் சபாபதி..
“அரச வாரிசுகள் கன்னியாய் சாவது ஜமீனின் அழிவிற்கு வழி வகுக்குமென ஒரு முறை கூறினீர்களே சாமி..”
“...அந்த யோசனைதான் எனக்கும்.. கன்னியாய்.. பரிசுத்தமாய் வீழ்ந்தவள், கண்டிப்பாக மீள் வருவாள். அவள் கன்னித்தன்மை அவளுக்கு அசாதாரண சக்திகளை வாரி வழங்கும். கட்டுப்படுத்த முடியா காட்டாற்று.... பேயாய் அவள் தாக்குவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு வருடமாய் நெஞ்சமெங்கும் வெம்பி, விசும்பி.....இன்று இறந்திருக்கிறாள் செந்தேவி நாச்சியார். எனவே கொடும் பிசாசாய் துர்சக்தியுடன் மீண்டும் வருவாள்... கண்டிப்பாக.. மொத்த எதிர்வினையும், எதிர்கொள்ளத் தயாராகு சபாபதி.. – அம்மணச்சாமி ஆக்ரோசமாகப் பேசினார்.
சோகம் மறந்து, துக்கம் தொண்டையை அடைக்க, பயத்தில் அலறினார் ஜமீன் சபாபதி.
“சாமி அப்படிச் சொல்லாதீங்க.... ஏதாவது பண்ணுங்க”
தீவிர யோசனையிலிருந்தார் அம்மணச்சாமி.
துக்கமும். பயமும் சரிவிகிதத்தில் கலந்து மண்டையைப் பிழிய, கொசு பிடிக்கக் காத்திருக்கும் பல்லியைப் போல் அசையாமல், அம்மணச்சாமியின் பதிலுக்குக் காத்திருந்தார் மிங்கூர் ஜமீன்.
இரு நிமிட இடைவெளியில் சட்டென்று பேசினார் அம்மணசாமியார்.
“ஒரு வழி இருக்கிறது.. அதற்கு நீ ஒத்துக்கொள்வாயா?”
“எதுனாலும் செய்றேன் சாமி... சொல்லுங்கோ..”
“சடலச் சாந்தி”
அப்ப்டினா? – சபாபதியின் குரல் தழுதழுத்தது.
அம்மணச்சாமியார் அமைதியாக விவரித்தார்.
“சாந்தி முகூர்த்தம்” உயிருள்ள உடம்பிற்கானது. “சடலச்சாந்தி” உயிரில்லா உடம்பிற்கானது. பஞ்சபூதங்களான இந்த உடம்பிற்குத் தேவை மற்றொரு உடம்பு. ஆகோஷமாய், ஆர்பரிப்புடன் இவ்வுலகிற்கு வரும் உடலானது, மற்றொரு இணையோடு சேர, பிறந்தது முதல் துடித்துக்கொண்டே இருக்கிறது. அந்தத்துடிப்பே இந்த உலகத்தை இயக்குகிறது. அடுத்தடுத்து நகர்த்துகிறது.
சராசரியாய் நாம் இதற்குப் பல பெயர்கள் வைத்திருக்கிறோம். காதல், காமம், மோகம், இன்பமெனப் பல பெயர்கள். இணைச்சேரத் துடிக்கும் உடலுக்கு, மற்றொரு துடிக்கும் உடல் கிடைக்கும் போது, ஆக்ரோஷமாய் இணைந்து சுக்கிலமும், சுரோணிதமும், கலந்து ஜீவலிங்க சொரூப நிலையில் “சாந்தி” கொள்கிறது. இதைதான் நாம் “சாந்தி முஹுர்த்தம்” என்கிறோம்.
இவ்வாறு சாந்தி பெறாத, உடல் இறக்கும் போது, அத்தனை துடிப்பையும், தவிப்பையும் துர்சக்தியாக ஆத்மாவிற்கு வழங்குகிறது. அந்த ஆத்மா இறைவனடி சேராமல், கொடும்பேயாக, அதற்குக் காரணமானவர்களைத் துரத்துகிறது. செந்தேவிநாச்சியாரின் நிலையும் இந்நிலைதான். எனவே இந்நிலையிலுள்ள உடல்களை “சாந்தி” செய்யும் பொருட்டு யாரும் அறியா வண்ணம் “சடலச்சாந்தி” செய்வதுண்டு. அதாவது ஆண்மை மிக்க ஒரு இளம் வாலிபனைக் கொண்டு, இறந்த பெண் உடலைப் புணரச் செய்வது. அதுவும் இவன் விந்துச்சுக்கிலம் அவள் யோனித்தூறை நனைக்கும் வரை. இவ்வாறு இறந்த உடலின் கன்னித் தன்மை மாறும் போது, உடல் சாந்தி கொள்ளும், சக்தி குறையும், உயிரும் இறைவனடி இணையும் என்பது நம்பிக்கை.
அத்தனையும் கேட்டு ஆடிப்போய் விட்டார் மிங்கூர் ஜமீன். அவர் உடம்பெங்கும் அழுகையும் ஆச்சர்யமும் பயமும் ஒருங்கே கொப்பளித்தன. உதடு அனிச்சையாக மெதுவாக உளறியது......“சடலச்சாந்தி”..
அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை மிங்கூர் ஜமீன். பின் மண்டையில் ஆணியடித்தது போல் அசையாமல் இருந்தார்.
“சபாபதி... இம் மாதிரியான சூழ்நிலைகளில் இது வழி வழியாக, ரகசியமாக நடக்கும் பழக்கம் தான். வெளிக்கு வெளித் தெரியாமல், இறந்த உடலும், உயிரும் மோட்சமடைய நடக்கும் சடங்கு... அவ்வளவே. யோசிப்பதற்கு நேரம் இல்லை.. உடல் இறந்த பதினெட்டு நாழிகைக்குள் நடத்தப் படவேண்டிய சடங்கு இது” – அவசரமாகப் பேசிக்கொண்டே காளி தேவியின் காலடியிலிருந்து ஒரு கைப்பிடிக் குங்குமத்தை எடுத்து ஜமீனிடம் கொடுத்தார் அம்மணச்சாமி.
“செந்தேவியின் உடம்பு முழுதும் இந்தக் குங்குமத்தைத் தேய்த்துச் சாந்திச்சடங்கை நடத்து. பின்பு சந்தனக் கட்டைகளை வைத்து உடம்பை எரித்து விடு. அரண்மனை தீ விபத்தில் செந்தேவி இறந்து விட்டதாய் ஊராரை நம்ப வைத்து விடு. ஜமீனின் நலனுக்காக, உன் நலனுக்காக, உன் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.. வேகமாய்ச் செய்து முடி” -எனக் கட்டளையிட்டார் அம்மணச்சாமியார்.
நடைப்பிணமாய் எழுந்து இயங்க ஆரம்பித்தார் சபாபதி. பெற்ற மகளை நினைத்துப் பெருந் துயரம் கொண்டார். ஆளும் அதிகாரவெறியும், ஜமீன் நலனும் அவர் கண் முன்னே தெரிந்தது. சாமி சொல்வதுபோலவே செய்து விடக் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினதிற்கு உத்தரவிட்டார்.
இரவோடு இரவாகப் பம்பரமாய்ப் பணிச்செய்தார் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம். நம்பத்தகுந்த ஜமீன் விசுவாசிகளைத் இருவரைத் தவிர விஷயம் வெளியே யாருக்கும் கசியவில்லை. செந்தேவி நாச்சியாரின் உடலைத் தண்ணீரால் கழுவி, பூக்களால் அலங்கரித்து, உடம்பெங்கும் குங்குமம் பூசப்பட்டது. அவர் கட்டிலுக்குக் கீழே சந்தன மரக்கட்டைகள் அடுக்கப்பட்டது. எரிவதற்கு வசதியாகப் பனங்கற்கண்டு கலந்த எரிஎண்ணெய் தயார் நிலையிலிருந்தது. அந்த அறையிலிருந்து மற்ற அறைக்கு “தீ” பரவாமலிருக்கத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாம் தயார்..
ஆனால் புணரும் ஆண் மகனுக்கு என்ன செய்ய?..
வா.. வந்து செத்த பிரேதத்தைப் புணர்ந்து விட்டு போ... என்று யாரைக் கூப்பிட?
கணக்குப்பிள்ளை யோசித்தார். யாரையல்லோமோ நினைத்துப் பார்த்தார். இருபதுவயது ஆண்மை மிக்க ஆடவன். அதுவும் பிணத்தைப் புணரும் மனஉறுதி கொண்டவனாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, இதுப்பற்றி வெளியே சொல்லாதவனாக இருக்க வேண்டும். பல்நிலைகளிலும் யோசித்துக் கடைசியில் ஒருவனைக் கண்டுப்பிடித்தார் செல்வ ரெத்தினம்.
ராயப்பன்.
குதிரை லாயத்தில் வேலைப் பார்ப்பவன். சுட்டுக் கொன்றாலும் ஏனென்று கேட்க ஆளில்லாதவன். குதிரையின் “கொள்”ளை தின்ற குற்றத்திற்காகக் கணக்குப்பிள்ளையால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவன். “கொள்”ளை தின்றதலோ என்னவோ, திகுதிகுவென்ற ஆஜானுபாகுவான உடம்பிற்குச் சொந்தக்காரன். கிறுக்கனில்லை. ஆனால் புத்திக்குறைந்தவன். என் கடன் “குதிரைக்கு லாடம் அடிப்பதும், சாப்பிட்டு தூங்குவதுமே” - என வாழ்பவன். அரை உறக்கத்திலிருந்தவனை எழுப்பிக், காரியத்தைக் கூறிக் கூட்டி வந்திருந்தார் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம்.
ஜமீன் சபாபதியின் முன்னால் பௌயமாக நின்று கொண்டிருந்தான் ராயப்பன். அவரை இத்துணை அருகிலிருந்து பார்ப்பது இதுதான் முதல்முறை. நாப்பந்தைந்து டிகிரிக்கு முதுகு வளைந்து நின்று கொண்டிருந்தது. கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம்தான் பேசினார்.
“ராயப்பா.. சொன்னது ஞாபகம் இருக்குல்லா...”
“ஆமாஞ்சாமி...”
“போனதும் “வேலை”யை முடிச்சிட்டு பட்டுன்னு வந்திரணும்”
“சரிங்க சாமி...”
“முழுசா முடிச்சிட்டு வரணும்..அரைகுறையா வந்திடப்பிடாது...”
“ஆகட்டும் சாமி..”
“ஏமாத்திட பிடாது... அங்க உடம்புல உள்ள மொத்த குங்குமமும்.. இங்க.. உன் உடம்புக்கு வந்திருக்கணும்...”
“செஞ்சிரலாம் சாமி....”
“விஷயம் வெளிய தெரிஞ்சா.... தெரியுமுல்லா”
“அய்யோ... கழுத்தருத்தாலும்.. யார்ட்டையும் சொல்ல மாட்டேன் சாமி...”
ஜமீன் சபாபதியின் கண்களில் கண்ணீர் பனித்தது. அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம் கண்ணசைக்க, ராயப்பன் செந்தேவி நாச்சியாரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம், ஜமீனின் கலங்கிய மனநிலைமையை உணர்ந்தவராய்,
“ஐயா... இத நினைச்சு வருதப்படப்பிடாது.. நாம....பிள்ள நல்லதுக்குத்தான் செய்யோம்... நாளைக்குப் பேய், பிசாசுன்னா.. நமக்குத்தான் கஷ்டம்.. ஏற்கனவே உசிரு போயாச்சு... உடம்பும் சாந்தியடையட்டுமே... ஆண்டை எல்லாத்தையும் பொறுத்துக்கணும்...”
சற்று நேரம் அமைதியாக இருந்த ஜமீன் சபாபதி, ஏதோ ஒரு யோசனையில் மெதுவாகக் கணக்குப்பிள்ளை செல்வரெத்தினத்திடம் கேட்டார்.
வே.. கணக்கு... இவன் என்ன சாதியாக்கும்???
.....................................
கதவைத் திறந்து உள்ளே வந்த ராயப்பனுக்குச் சிறிது சிறிதாய் பயம் வர ஆரம்பித்தது. சற்றுக் கற்பனைச் செய்யுங்கள். ஆடம்பர மாளிகையின் அழகான பெரிய அறை. அறையெங்கும் உச்சிக்குளிரும் இனிய மணம். அதன் மையத்தில் பூக்களாலும் சந்தனக் கட்டையாலும் அலங்கரிக்கப்பட்ட கட்டில். அதனுள் இளமையும், அழகும், வனப்பும் மிகுந்த பேரழகு பெண். ஆனால் உயிரில்லை. ஆண்மையைத் தட்டி எழுப்பும் அத்தனை விசயங்கள் இருந்தும், அவள் உடம்பில் “உயிர்” இல்லாததால், இவன் சுத்தியில் உணர்வில்லை.
பதுங்கிப், பதுங்கி மெதுவாக நடந்தான். கட்டிலை நெருங்க, நெருங்க உடல் உதறல் கூடியதாகத் தோன்றியது. பத்துப்பதினைந்துச் சடலங்களை அள்ளியெடுத்து, எரிக்கச் சொன்னால், ஒற்றை ஆளாகப் பயமின்றிச் செய்யும் மனஉறுதி கொண்டவன்தான் ராயப்பன். ஆனால் ஒரு இளவரசியை. அதுவும் பேரழகியை, உயிரில்லா நிலையில் புணர வேண்டுமென்பது எப்படி? மடையைத் திறந்ததும் “வெள்ளம்” வழிகின்ற காரியமா அது. மனமெங்கும் பயமிருக்க, “இவளைப் புணர்வது”... இல்லை... இல்லை.. “இதனைப் புணர்வதென்பது” நடக்கவே இயலாத காரியமென்பதை உணர்ந்து கொண்டான். கட்டிலுக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளிகள் குறைந்துக் கொண்டேயிருந்தன. பளபளப்பான செந்தேவியின் கால்கள், அதன் நகங்கள், பளிங்கு கைகள், பால் மார்புகள், கரிய கூந்தலென ஒவ்வொன்றாக ராயப்பனின் பார்வைக்குக் கிடைத்தன.
அஞ்சி, அஞ்சி, கட்டிலை அடைந்து மொத்த உடலையும் கண்டான் ராயப்பன். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, குங்குமம் தடவப்பட்ட நிர்வாண உடல். இறந்த செந்தேவி நாச்சியாரின் முகத்தில் ஒரு சிறு சலனம் கூட இல்லை. பேரழகும், பெருங்கருணையும் கொட்டிக் கிடக்கும் முகம். ராயப்பனுக்குப் பயம் போயிருந்தது. என்றாலும் புணரும் அளவிற்குத் துணிவில்லை. அவன் உடம்பிலும், அதற்கான உணர்வில்லை.
ஆனால் மீண்டும் மீண்டும், அந்தக்கேள்வி மட்டும், நெற்றி முன்பே சுற்றிக் கொண்டிருந்தது. வெளியே போனால் கேள்வி கேட்பார்களே? புணர்ந்தாயே? என்று கேட்டால் என்ன பதில் சொல்ல? நேரம் கடந்து கொண்டிருந்தது. துணிச்சலாய் ஒரு முடிவெடுத்தான். செந்தேவி நாச்சியாரின் உடம்பிலிருந்து குங்குமத்தை எடுத்துக் கை, கால் உடம்பெங்கும் தேய்க்கத் தொடங்கினான். குங்குமம் தானே புணர்ந்ததற்கான அடையாளம். மொத்தமாக உடம்பெங்கும் பூசிக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். வேகமாகச் செயல்பட்டான். அந்த உடம்பிலிருந்து குங்குமத்தை, இந்த உடம்பிற்கு மாற்றிக் கொண்டிருந்தான். செந்தேவியின் கழுத்துப் பக்கத்திலிருந்து குங்குமம் எடுத்து, அவன் நெஞ்சுப் பகுதியில் தேய்க்கும் போதுதான் கவனித்தான், செந்தேவியின் கண்ணிமைகள் சிறிதாக அசைவதை.
ஆடிப்போய் விட்டான் ராயப்பன். மீண்டும் சோதித்தான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. ஒருவாறு யுகித்திருந்தான் ராயப்பன். விஷமருந்தி மயங்கிய நிலையிலிருந்த செந்தேவி நாச்சியாரை, தவறாக இறந்தாக முடிவு செய்திருந்தனர்...
உண்மைதான்.. உண்மைதான்....
இளவரசிக்கு உயிர் இருக்கிறது.
உடம்பில் உயிர் இருக்கிறது.
உடம்பில் உயிர் இருக்கிறது.
உடம்பில் உயிர் இருக்கிறது.
பதறினான். ஓடி வெளியேறினான். உடம்பெங்கும் குங்குமத்தோடு கணக்குப் பிள்ளையிடம் கூறினான்.
“இளவரசிக்கு உயிர் இருக்கிறது”.
பதட்டம் மேலோங்க கணக்குப்பிள்ளை செல்வரெத்தினம், உடனடியாக ஜமீன் அறைக்குச் சென்று விஷயத்தைக் கூறினார்.
விஷயமறிந்து ஜமீன் வேகமாக ஓடி வந்தார். வழியில் உடம்பெங்கும் குங்குமத்தோடு ராயப்பனைக் கண்டார். வைத்த கண் வாங்காமல் அந்தக் குங்கும தீட்டல்களைக் கண்டு கொண்டிருந்தார். மகள் பிழைத்த செய்தியை விட, ராயப்பன் செந்தேவியைப் புனர்ந்திருப்பானோ என்ற சந்தேகமே அவர் மனமெங்கும் மேலோங்கியிருந்தது. என்ன நினைத்தாரோ என்னவோ, கணக்கு பிள்ளையின் காதில் ஏதோ சொன்னார். பின்பு அமைதியாய் கண்கலங்க அவர் அறைக்கு நடந்தார்.
சிறிது நேரத்தில் ஜமீன் விசுவாசி காவலர்கள் இருவர், ராயப்பனைக் குத்திக் கொன்று, செந்தேவி நாச்சியாரின் அறைக்குள் வீசி, தயார் நிலையிலிருந்த எரிஎண்ணெயை ஊற்றித் தீயிட்டனர்.
கீழ்ஜாதி ராயப்பனும், மேல்ஜாதி செந்தேவி நாச்சியாரும் “தக” “தக” “தக”-வென எரியத் தொடங்கினர்.

செத்தபின்...

இந்த உடல் நீங்கள் சிறிது சிறிதாக சேகரித்ததுதான். இந்த உடலை நீங்கள் பூமித்தாயிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நேரம் வரும்போது ஒரு அணுவைக்கூட விடாமல் திரும்பப் பெறுவாள். ஆனால் மக்கள் அந்தக் கடனை எப்போதுமே திருப்பிக் கொடுக்க விரும்புவதில்லை. நீங்கள் இறக்கும்போது எப்படியும் இந்த பூமிக்கு உங்கள் கடனைத் திருப்பி செலுத்தி விடுவீர்கள். ஆனால் இதை விருப்பத்துடன் செய்தீர்களா இல்லை விருப்பமின்றி செய்தீர்களா என்பதுதான் கேள்வி. நீங்கள் ஒரு யோகியாக இருந்தால், இந்த உடல் திரும்பப் பெறப்படும்போது, ஆனந்தமாக கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள்.
ஒரு சாரத்தின் மேல் கட்டிடம் எழுப்புவது போல நம் பருவுடலும், சாரம் போன்ற சூட்சும உடலின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது; நீங்கள் ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது. பின்பு அழிந்து மண்ணோடு மண்ணாக கலக்கிறது. ஆனால் உயிரென்ற ஆன்மா அழிவில்லாதது. உடல் அழிந்தாலும் ஆன்மாவிற்கு அழிவில்லை. உயிருக்கு உடம்பை விட்டும், உடலுக்கு உயிரைவிட்டும் பிரிய மனமிருப்பதில்லை. இறப்பு நிகழ்ந்த பின்பு, அழிவற்ற உயிர், அழியும் உடலிலிருந்து பிரியும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. உயிர் பிரியும் அவஸ்தையை உடம்பு அனுபவிக்கிறது. இது படிப்படியாக சில மணித்துளிகளில் வலியின்றி நிகழ்கிறது. உடம்பிற்கும், அதன் உறுப்புக்களுக்குமே வலியின் வேதனை. உயிருக்கு வலியேது. அது சூடான காப்பிலிருந்து ஆவி பிரிவதுபோல் மெலிதாக பிரிகிறது. பிரிந்த உயிர் உடல் மீது கொண்ட பற்றினால், இத்தனைக்காலம் வாழ்ந்த உடம்பை சிறிதுநேரம் சுற்றி சுற்றி வருகிறது. இயற்கை செயல்பாடுகளால் உடம்பு அழுகத்தொடங்க, வேறு வழியின்றி உயிர் உடல் மீது ஒன்ற இயலாமல் தவிக்கிறது. முடிவில் உடல் மண்ணோடு கலக்க, உயிர் நீண்ட நித்திரைக்குள் பயணிக்கிறது - என்ற கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் போதே.......
ஜெய... ஜெய... ஜெய... ஜெயகே... - என்று தேசிய கீதத்தின் முடிவில் பள்ளிக்கூட மணியோசை கணீரென்று ஒலித்தது. கட்டுரையின் அமானுஷ்யத்தில் என்னை மறந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணாந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 4:35ஐ காட்டியது. ராதாவின் அலுவலகம் முடிய இன்னும் அரைமணிநேரம் ஆகும். அதன் பின்பே வீட்டிற்கு பைக்கில் செல்ல முடியும். ஐந்து மணிவரை அவள் அலுவலக வாசலில் "நாய் காவல்" காக்க வேண்டும். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் அவள் வெளிய வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூடுதல் ஆகும்.
காரணம் கேட்டாலோ, நல்ல மன நிலைமையிலிருந்தால் "கேஷ் டேலி ஆகல.. அதான் லேட்டாயிட்டு" என்று ஆறுதலான புன்முறுவல் பதில் கிடைக்கும். வங்கி வேலைப்பளுவின் தாக்கம் மூளையை உருத்திக்கொண்டிருந்தால், நறுக்கென்று "என் வேலை..உங்கள மாரி கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல "ஈ"வோட்டுற வேலை இல்லையென்று, ராணித் தேனீயாய் கொட்டுவாள்.
"ஆமா.. பெரிய கவர்னர் வேலை" - யென்று அசட்டையுடன் கிண்டலடிப்பேன் நான்.
பதில் கூறிய அந்த நிமிடத்திலிருந்து, சில நிமிடங்களுக்கு இருவருக்குள்ளும் பேச்சிருக்காது. திரும்பி பார்த்தால் அவள் முகம் நீர் குடித்த "பம்ளிமாஸ்" போலிருக்கும். வளைந்து, நெளிந்து சரியும் புளிமூட்டையைப் போல் பைக்கின் பின்புறத்தில் சலனமின்றி அமர்ந்திருப்பாள். எனக்குதான் மனசு கேட்காது. இலேசாக வழிந்து, அவளுக்கு பிடித்த ஏதாவது விஷயம் சார்ந்து பேச்சை ஆரம்பிப்பேன்.
இம்ம்ம்ம்ம் .. ஹூம்... நோ வே...
தெப்பக்குளத்தில் போட்ட அம்மிக்கல்லைப் "உம்ம்" என்றிருப்பாள். அவள் வேலையை குறை சொல்லிய கோபம். பின்ன இருக்காதா... தனியார் வங்கியில் அடிமைதன வேலையிலிருக்கும் அவளை, உடற்கல்வி ஆசிரியர் என்ற சுகபோக அரசாங்க வேலை பார்க்கும் நான், ஏகத்தாளமாய் குறை சொன்னால் கோபம் வருமா?வராதா? கோபத்தில் சிவக்கும் அவள் முகத்தை, பைக்கின் முன்புறக் கண்ணாடியில் பார்த்து ரசிப்பேன். அவள் கோபத்தை ரசிக்கும் "சேடிஸ்ட்" இல்லை நான். அவள் என்றால் உயிரெனக்கு. இருந்தும் அவளை இப்படி வம்புக்கிழுப்பதில் ஒரு சுகம். ஒருவேளை ஆணின ஆதிக்கவெறியின் அடையாளமோ, என்னவோ. என் அகராதியில் இதன் பெயர் "வம்புக்கிழுக்கும் அன்பு".
குளிர் காற்று முகம் மோதி நெஞ்சுக்குள் நிறைய, மௌனத்தோடு இருவரும் பைக்கில் பயணித்துக்கொண்டே இருப்போம். அவள் பேசாமல் இருப்பது எனக்குள் உருத்தும். படுக்கையறையில் மண்டியிடும் ஆணினத்தின் அடிமைநிலை அப்போது மேலிடும். பேச்சில் ஒரு படி கீழே இறங்குவேன்.
"சரி விடு டே... தெரியாம சொல்லிட்டேன்... உனக்கு உன் வேலை பெருசு... எனக்கு என் வேலை பெருசு... மன்னிச்சுக்கோ" - என்று உட்டாலக்கடி மன்னிப்பு கேட்டாலும் பேசவே மாட்டாள்.
"பேசாமலிலிருந்தால் ஆம்பள வழிக்கு வருவான்" - என்ற பெண்ணின அஸ்திரத்தை பிரயோகித்துக் கொண்டே இருப்பாள். கடைசியில் வேறு வழியின்றி நான் "பிரம்மாஸ்திரத்தை" கையிலெடுப்பேன். பைக்கின் வேகத்தை கூட்டி, எதிர்ப்படும் வளைவுகளில் ஒன்றிரெண்டு குலுக்கு குலுக்கும் போது, பட்டென்று அவள் மலர்க்கரம் என் திருத்தோள் பற்றும். அதைத்தொடர்ந்து அனிச்சையாய் பயத்தோடு அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை விழும்.
"பைய... போ... பண்ணி."
அவ்வளவுதான். எங்களுக்குள் சண்டை தீர்ந்தது. பரஸ்பர புன்னகைகளோடு அந்த நாளின் உரையாடல்கள் தொடங்கும். இருபத்தியொரு வருட திருமண வாழ்வின் இன்னல்கள், இன்பங்கள் விவாதிக்கப்படும். ராதா பேசிக்கொண்டே இருப்பாள். பேசிக்கொண்டே என்றால்... பேசிக்கொண்டே. காலையில் பேங்க் ஆரம்பித்தது முதல் அவள் வருவது வரையிலான அத்தனை நிகழ்வுகளும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் ஒப்பிப்பாள். எத்தனை நேரம்தான் ஆர்வத்தோடு கேட்பது மாதிரியே நடிக்க முடியும். இருந்தும் அவள் வாயடைப்பது கடினம். ஆனால் ஊர் முழுதும், அவள் யாரிடமும் கலகல வென பேச மாட்டாள் என்கிறார்கள். அதிலும் என் அம்மா ஒருபடி மேலே சென்று குறை சொல்வாள்.
"பொம்பளைன்னா கொஞ்சம் பேசி கலகலன்னு இருக்க வேண்டாமா.. உன் பொண்டாட்டி ஊமைக் குசும்பி" என்பாள். அதிலும் இந்த "ஊமைக்குசும்பி" என்ற வார்த்தையை சொல்லும்போது மட்டும் ஒரு மெல்லிய, ஹாஸ்ய, ரகசிய பாஷையில் கதைப்பாள் அம்மா.
"இத அவள்ட சொல்லட்டாமான்னு" - கேட்டால்,
"சொல்லு... எனக்கென்ன பயமா" -என்று சொல்லிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்து, பயந்து சிரிப்பாள்.
இப்படி ஊராரோடு பேசாமலிருப்பதாலோ என்னவோ, மொத்தத்தையும் என்னோடு பேசித் தீர்ப்பாள் ராதா. எங்கள் பேச்சுத்தான் என்னவாக இருக்கும்? மிடில் கிளாஸ் மனிதர்களின் சராசரியான பேச்சுக்கள்தான்.
நாமளும் சட்டுனு வீடு வைக்கணும்... வீடு வச்சு முன்னால நெறைய செடி வைக்கணும்...
(மனதிற்குள் என் பதில்: அப்ப செடியெல்லாம் இப்பவே... வாங்கி வச்சிருவோமா?)
கெங்கா ஜுவல்லரியில் வந்திருக்க நெக்லஸ் டிசைன்ஸ் சூப்பரா இருக்கு...
(மனதிற்குள் என் பதில்: அதவிட புதுசா வந்திருக்க ராயல் என்பீல்ட் பைக் சூப்பரா இருக்கு)
இந்த வாட்டி ஆடித் தள்ளுபடியில் திருனவேலி போத்தீஸ்ல போய் டிரஸ் எடுக்கணும்...
(மனதிற்குள் என் பதில்: ரெண்டு அலமாரி புல்லா இருக்குற டிரஸ் எல்லாம் யாருக்கோ?)
உங்க தங்கச்சி வீட்டு பால் காச்சுக்கு ரொம்ப பெருசா எதுவும் செய்ய வேண்டாம்... நம்ம கஷ்டபட்டப்போ யாரு உதவுனா..
(மனதிற்குள் என் பதில்: அத நீ எப்படி முடிவு செய்யலாம்?)
எங்க மாமா பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா ரெண்டு பவுனாவது செய்யணும்... நம்ம மக பொறந்த நாளுக்கு மூணு பவுன்ல செயினு போட்டாங்க
(மனதிற்குள் என் பதில்: அத நான்தானே முடிவு செய்யணும்.. பார்க்கலாம்)
தப்பித் தவறி இந்த மனதிற்குள் கூறிய பதிலை உணர்ச்சிவசப்பட்டு வாயில் கூறிவிட்டால்... அவ்வளவுதான். கட்டியது சுடிதாரோ, சேலையோ, எதுவாக இருந்தாலும் மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவாள். வழக்கம்போல் நான் தான் வெள்ளைக் கொடியை காட்டி சமாதானத்திற்கு செல்ல வேண்டும். எங்களுக்குள் வாடிக்கையான சண்டைகள் இப்போதெல்லாம் "வேடிக்கையாக"- வே தோன்றின.
கொஞ்சம் கூட மாறாத அந்த சராசரி வாழ்க்கையைத்தான் ஏனைய உலகத்தினரோடு நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறு வாழ்வதில் எங்களுக்குள் சலிப்பேதும் வந்ததில்லை. அடிநாதத்தில் அழுத்தமான காதல் இருப்பதால் சலிப்பு இனியும் வரப்போவதுமில்லை. இருபத்தியொரு ஆண்டுகள் கழிந்தன. இனி ஒரு இருபதோ, முப்பதோ ஆண்டுகள், இதே சண்டைகளோடு, இதே சமானத்தோடு வாழ்ந்துவிட்டு சாக வேண்டுமென்ற நினைப்போடு பயணித்துக் கொண்டிருந்தேன்.
ராதா எதையோ விடாமல் பேசிக்கொண்டிருந்தாள். நான் ஏதோதோ நினைத்துக்கொண்டே "ம்ம்ம்ம்" கொட்டிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து " நீ சொன்னா சரியாத்தான் இருக்குமென" சொல்ல முடிவு செய்திருந்தேன். அப்படிச் சொன்னால் அவளுக்கு சந்தோசம் தான். "பெண்களை வெற்றி பெறச் செய்ய வேண்டாம். ஆனால் அவர்கள் வென்றது போன்றதொரு மாயையை உண்டாக்கினால் இல்லற வாழ்வில் வென்று விடலாமென" எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. இப்படி பற்பல நினைவுகளில் பயணித்துக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில்தான், எதிர்பாராமல் எதிர்ப்பட்ட மணல் லாரியில் வேகமாக மோதி, அடித்த தீடீர் பிரேக்கில் ராதா பக்கத்து குளத்தில் தூக்கிவீசியெறியப்பட, நேருக்கு நேராய் லாரியின் முன்பக்கத்தில் நான் மட்டும் மோதியிருந்தேன்.
முன் மண்டையின் உள்ளில், நகக்கண்ணில் "பனஞ்சிரா" ஏறி பழுத்தது போலொரு வலி. ஆம்புலன்ஸில் அசைவில் மண்டை ஓடு, மூளையை வெளியே பிரசவித்து விடுமென தோன்றியது. அவ்வளவு வலி. அருகில் ஒரு ஓரத்தில் ஈரத்துணியோடு ராதா உட்கார்ந்திருக்க, மகன் தினேஷ் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். இவன் எப்போது வந்தான். "அப்பாக்கு ஆக்க்ஷிடென்ட் ஆயிட்டு... சட்டுன்னு வான்னு"- ராதா கூப்பிட்டிருப்பாள்.
எல்லாம் ஓரளவிற்கு மனசிலாகியது. ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறார்கள். பிழைப்பேனா? அல்லது என்னவர்களை விட்டு பிரிவேனா? பணத்திற்கு என்ன செய்ய போகிறார்களோ? என்று மனதிற்குள் ஒரு சில ஆவேச சிறகடிப்புகள். ஒரு சில நிமிடங்களில், பற்பல நினைவுகள் போயும் வந்துமிருந்தன. மூளைக்குள் நினைவுகள் தப்பிப் படர்ந்தன. தலைக்குள் பிரளய வலிகள் இருக்க, உடம்பில் மட்டும் வலியேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்து என் நினைவு திரும்பிய போது, அந்த குளிர்ந்த அறையில் அம்மாவும் தினேசும் அழுது கொண்டிருந்தார்கள். நான் காற்றோடு காற்றாக கலந்தது போலிருந்தது. என்னுடல் அசைவற்று கிடந்தது. பார்வை மேல்புறத்தில் நிலைக்க, அடுத்த மின்னணு திரையில் நீளமான ஒரு வெள்ளைக் கோடும், அதைத் தொடர்ந்து பயணிப்பது போன்ற பீப்ப்ப்பப்... என்ற ஒலியும் ஒலித்துக்கொண்டிருந்தது.
எனக்கு பல தமிழ் சினிமாக்கள் ஞாபகத்திற்கு வந்தது. நான் செத்து விட்டேனா? அது சரி. ஆமாம் நான் இறந்து விட்டேன். ஆனால் வருத்தமாகவே இருக்க வில்லை. வருத்த பட முனைந்தேன். முடிய வில்லை. பொம்மை போல் உணர்வற்று கிடக்கும் என் உடம்பை பார்க்க சிரிப்பாக வந்தது. ஆப்பரேஷன் செய்வதற்கு முன்பு மீசையை எடுத்திருக்கிறார்கள். அதை பார்த்து சிரிப்பாக வந்தது. சிரிக்க முடிய வில்லை. நான் அனுபவித்த ஒரு வலி கூட இப்போது இல்லை. ஒரு சொட்டு வலி இல்லை. இறப்பு இத்தனை இனிமையானதா... வலியில்லாததா... இந்த இறப்பை நினைத்தா மொத்த உலகமும் பயந்து நடுங்குகிறது. காலையில் படித்த கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. ஏதோ ஒரு அவசரத்தில் காற்றில் இருந்த நான், கட்டிலில் இருந்த என் உடம்பிற்குள் நுழைந்து, கைகால்களை அசைக்க, கண் இமைகளை அசைக்க முயன்றேன். எதுவும் முடிய வில்லை. உண்மைதான் நான் இறந்து விட்டேன். கடவுளே... என் சாவுக்கு கூட என்னால் அழ முடியவில்லையே... வருத்தபட முயன்று தோற்றேன்.
ஐந்தாறு நிமிடங்கள் என்னை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள் ராதா. அவளை பார்க்கவே ரெம்ப பாவமாக இருந்தது. மகனும் அழுது குலுங்கிக் கொண்டிருந்தான். நான் உடம்பிற்கும், காற்றுக்கும் மாறி, மாறித் தாவி அல்லாடிக் கொண்டிருந்தேன். இருபது நிமிடத்தில் மகன் வெளியே சென்று ஒவ்வொருத்தருக்காக போன் செய்யத் தொடங்கினான். அரைமணிநேரம் அழுது களைத்த ராதாவிற்கு சில நர்ஸுகள் வந்து ஆறுதல் சொன்னார்கள். நானும் அவள் முன் சென்று "செத்தா சுகமாத்தான் இருக்கு, டோன்ட் ஒரி- என்று கூறினேன். என் சப்தம் யாருக்கு கேட்க. செத்தாலும் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது. இரண்டு மணிநேரத்திற்குள் சில உறவினர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருத்தரும் வரும்போது ராதா பேச வார்த்தையின்றி பொட்டிக் கரைந்தாள்.
மூன்று மணிநேரத்தில் என் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்த்திருந்தது. போற்றி பாதுகாத்த உடல் படிப்படியாக அழுக ஆரம்பித்திருந்தது. அதன் பின்பு எனக்கும் உடலுக்குள் செல்ல விருப்பமில்லை. இருந்தும் ஆசாபாசத்தில் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் என் உடம்பை எங்கோ தூக்கி சென்றனர். வேறு எங்கு? ஆக்சிடென்ட் கேஸ் அல்லவா? போஸ்ட்மாட்டம் செய்வதற்கு இருக்கும். துண்டு துண்டாக வெட்டுவார்கள் என நினைக்கும் போதே எனக்கு ஒருமாதிரி இருந்தது.
இப்போது "நான்" என்பது பிரிந்து நிற்கும் இந்த உயிரா? அல்லது எடுத்து போகும் அந்த உடலா? என்ற குழப்பம் ஏற்பட்டது. நிகழ்வுகள் நினைவுகளாக மீண்டதேயன்றி உணர்வுகளாக மாற வில்லை. உணர்ச்சியே இல்லை. சுக துக்கமற்ற ஆன்மாவாக மாறியதில் சந்தோசம் இருந்தது. என் சாவுக்கு அழாதீர்கள். யார் சாவுக்கும் அழாதீர்கள். இறப்பு அத்தனை சுகமாக இருக்கிறது என்று அத்தனை பேரிடமும் கத்தி கூறவேண்டுமென்றிருந்தது.
ராதா உட்பட அழுது களைத்த எல்லோரும் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களில் மும்முரமாயினர். என் சாவை நானும் ஒத்துக் கொண்டிருந்தேன். சினிமாக்களில் காட்டுவது போல், எமதர்ம ராஜனோ, கிறிஸ்தவ ஏஞ்சல்களோ, இறைதூதர்களோ வந்து என்னை
கூட்டிச்செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் அந்த அறையிலேயே காத்துக் கிடந்தேன்.
ஏறத்தாழ எம தர்மனின் சாயலில் கழுத்தில் சிலுவையோடு அந்த உருவம் நானிருந்த அறை நோக்கி வந்தது. வந்துட்டான்யா... வந்துட்டான்யா...என்று அடுத்த பயணத்திற்கு நான் தயாராக, வந்தவன் என் குடும்பத்தினரோடு சமாதானம் பேசினான். அது சரி... வந்தவன் மனிதன்... அவர்கள் சம்பாஷணையிலிருந்து அவர் என்னை இடித்த லாரியின் உரிமையாளர் என்று அனுமானித்துக் கொண்டேன். ராதா பேச்சேதுமின்றி, கண்களில் கண்ணீரோடு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றிக் கொள்ள, ஆஸ்பத்திரி ஊழியர்கள் நாலைந்து பேர் ஓடி வந்தனர்.
நான் மீண்டும் அறைக்குள் சென்று காற்றில் மிதக்க, ராதாவை பற்றிய நினைவுகள் நெஞ்சுக்குள் வந்து கொண்டே இருந்தன. இனி யாரிடம் அவள் "நொய்.. நொய்யென்று" பேச போகிறாள் என்ற கலக்கம் மட்டும் எனக்குள் நிலைக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் "தூக்கம்" போன்ற ஏதோ ஓன்று என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. அந்த மயக்கத்தில் காலையில் படித்த கட்டுரையின் கடைசி பத்தியானது என் நினைவுகளில் மீண்டது.
"உயிருக்கு வலியேது. அது சூடான காப்பிலிருந்து ஆவி பிரிவதுபோல் மெலிதாக பிரிகிறது. பிரிந்த உயிர், உடல் மீது கொண்ட பற்றினால், இத்தனைக்காலம் வாழ்ந்த உடம்பை சிறிதுநேரம் சுற்றி சுற்றி வருகிறது. இயற்கை செயல்பாடுகளால் உடம்பு அழுகத்தொடங்க, வேறு வழியின்றி உயிர், உடல் மீது ஒன்ற இயலாமல் தவிக்கிறது. முடிவில் உடல் மண்ணோடு கலக்க, உயிர் நீண்ட நித்திரைக்குள் பயணிக்கிறது......................."

சொல்லிக்கொடுங்கள்

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக செய்தி படித்தேன். என்னுடன் பணிபுரியும் அயல்நாட்டவன் ஒருவன் (நண்பன்தான்) இந்த செய்தியை உரக்க படித்து, என்னைப் பார்த்து சிரிக்கிறான். செய்தி உண்மையாயிருக்காது, என்று வாதாடினேன். ஆதாரங்களோடு நிரூபித்தான். உண்மைதான். “நாங்கெல்லாம் ஒருவனுக்கு ஒருத்தியாயிட்டு” வாழுற ஆட்களாக்கும்” – என்று அவனுடன் பீத்திக் கொண்ட நாட்கள் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது. உற்ற நண்பன் ஆதலால் பெரிதான அவமானம் இல்லை. இருந்தும் ஏதோ ஓன்று, இடுப்புக்கும் நெஞ்சுக்கும் இடையில் “குடைந்து” கொண்டேயிருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு, இங்கு வெளிநாட்டிற்கு என் குடும்பத்தை அழைத்துச் செல்ல போகிறேன் என்று கூறிய அடுத்தக் கணத்தில், என்னைச் சார்ந்தவர்களிடமிருந்து நான் எதிர் கொண்ட முதல் கேள்வி, “அங்க பொம்பளைக்கெல்லாம் பாதுகாப்பு” உண்டா? என்பதாகும். அதிலும் சிலர், “என்னதான் இருந்தாலும்... நம்ம ஊரு மாறி சுதந்திரமா, பாதுகாப்பா வாழ, அங்கு முடியாது” என்று அறுதியிட்டுக் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் இன்று நிலைமை தலை கீழ்.
“இந்தியனாலே... புடிச்சு கற்பழிச்சு விட்டிருவான்னு”- என்ற பேச்சை, இலைமறை காயாக உலமெங்கும் பரவச் செய்தததில் “நம் நாட்டு ஊடகங்களுக்கு” சிறப்பான(?) பங்குண்டு.
"கதறக் கதறக் கற்பழிப்பு"
"ஓடும் பஸ்ஸில் வன்புணர்வு"
"கூட்டத்தில் பாலியல் தீண்டல்கள்"
"சுற்றுலா பயணிகளுக்கு பாலியல் தொல்லை"
- படித்த மொழியறிவை இம்மாதிரியான விசயங்களில் “விரசமாகப்” பிரகடனப்படுத்தி, பிரபலப்படுத்தியதில் ஊடகங்கள் கொஞ்சம் தார்மீகச் சிந்தனைகளோடு செயல்பட்டிருக்கலாம். “அப்படியின்னா.. இம்மாதிரி நடந்த விசயங்களை ஊடகங்களில் போடக்கூடாது என்கீறீர்களா” -என்றால், என் பதில்... “இந்தியாவில் இதுமட்டும் தான் நடக்கிறது என்பது போல் போடாதீர்கள்” என்பதாகும்.
சற்று காமரசம் சொட்ட நான் எழுதிய “யோக்கியன்” சிறுகதை நினைவுக்கு வருகிறது. இணைப்பு முதல் கமெண்டில்.
பெண் என்பது யார்? ஆணைப் போன்ற சக மனிஷி. ஒரு உயிர். அவ்வளவே. ஒரு உயிரை ஒரு உயிராய் மதிக்க கூடவா நம் ஆண்களுக்கு தெரியவில்லை. ஒரு ஆண் இருக்கிறான். ஒரு பெண் இருக்கிறாள். இருவரும் பழகுகிறார்கள். ஆணின் ஒவ்வொரு நகர்வும், அவளிடமிருந்து காமத்தை எதிர்பார்க்கிறது. அது உண்மை. இயற்கை அவன் உடலை அப்படியே படைத்திருக்கிறது. காமம் அவன் இறுதிக் குறிக்கோளாக இருந்தாலும், இடையினில் அவள் மீது, மட்டற்ற அன்பை பொழிகிறான். பரிசுகள் கொடுக்கிறான். வார்த்தைகளின் மூலம், செய்கைகளின் மூலம் அவள் பாதுகாப்பை உறுதி செய்கிறான். பெண் தன் பாதுகாப்பு ஒன்றை பிராதானமாகப் பார்க்கிறாள். உரியவனை தேர்வு செய்ததும், அவள் தன்னை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை வந்ததும், தன்னைக் கொடுத்து, அவன் தேவையை நிறைவு செய்கிறாள். உலகமெங்கும் இதுவே நடைமுறை. அதாவது ஆணாகப் பிறந்த உயிரினம் இணை சேர துடித்துக் கொண்டே இருக்கிறது. பெண்ணாகப் பிறந்த உயிரினம் தன்னை பாதுகாத்து நேசிக்கும் ஆணுக்கும் தன் உடம்பை பரிசாக்குகிறது. பச்சையாகச் சொன்னால், “இனப்பெருக்கமே” பிராதானம் எல்லா உயிர்களுக்கும்.
எல்லா உயிர்களும் இப்படி இயங்க, பகுத்தறிவு தேடுதல்களில், மனிதர்களுக்குள் “மதம்” புகுகிறது. பெரும்பாலும் எல்லா இந்திய மதங்களும் பெண்ணுடம்பை “புனிதம்” என்கிறது. அதிலும் கட்டுக்கடங்காத “கற்புக்கரசிகளின்” கதைகளை முன்னிறுத்தி, காமமுருவதை பாவம் என்றாக்கியது. அதிலும் நம் இந்திய சமூகத்தில் ஒரு பெண், நான் இந்த ஆணின்மேல் காமமாக இருக்கிறேன் என்று பகிரங்கமாக, வெளிப்படையாக கூறவே முடியாது.
இது எவ்வாறு நடந்திருக்கும்? ஒரு வீடு இருக்கிறது. 10 பேர்கள் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம் என்ற சுதந்திரம் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். நாட்கள் செல்ல செல்ல அவ்வீட்டில் 500 பேர்கள் வாழ வருகிறார்கள் என்றால், குழப்பம் தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிப்பதைப்போல், மனிதருக்குள்
பேதமின்றி எல்லோருடன் உடலுறவு இருந்த போது ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க, “இவனுக்கு இவள்”, “இவளுக்கு இவன்” என்ற உறுதிப்பாட்டை நிலை நிறுத்த, கூடி வாழ்தலையும், குடும்ப கட்டமைப்பையும் பாதுகாக்க, இம்மாதிரியான கட்டுப்பாடுகளை “மதங்களின்” வழி நடைமுறை படுத்தியிருக்கலாம்.
சரி, விதிக்கப்பட்ட இக்கட்டுப்பாடுகளை ஆண் எளிதாக மீற முடிந்தது. அவன் மீறுவதால் பெரிதான பாதிப்புகளை அவன் எதிர்கொள்வதில்லை. ஐந்தாறு நிமிட ஆனந்தத்தை, அவனால் கட்டுப்பாடுகளை மீறி அனுபவிக்க முடிந்தது. பெண்ணின் நிலையோ, சுகித்தபின் பத்துமாதம் பிள்ளை சுமக்கும் கடமைக்குள், அவளை விழச் செய்தது. பிள்ளை பிறந்தபின் வரும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு, “பெண்களின்காமம்” சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு சற்று பின்னோக்கியது. அதனால்தான் சிறு தொடுதல்களிலேயே ஆண் தயாராகிவிடுகிறான். பெண்ணோ பாதுகாப்பை உணர்ந்த பின்புதான் தன்னிலை மறக்கிறாள்.
இவ்வாறாக புனிதம், கற்பு, பெண்மை என்ற அடையாளங்களால் பெண்கள் ஆண்களிடமிருந்து பெரிதும் தனிப்படுத்தப்பட, எதிர்பாலின ஈர்ப்பின் வேகம் மொத்த சமூகத்திற்குள்ளும் அதிகரிக்கிறது. அந்த உந்துதல் கட்டுபாடுகளை உடைக்கவோ, அல்லது வாய்ப்புக் கிடைத்தால் மீறவும் வழிவகைச் செய்கிறது.
சரி.. அது இப்போது மட்டும் ஏன் இத்தனை அழுத்தமாக – என்று யோசிக்கும் போது “தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி” அதற்கான விடையைக் கொடுக்கிறது. இதற்கு முன்னால் ஆண் பெண்களுக்குள் தவறுகள் நடந்ததில்லையா? கண்டிப்பாக நடந்திருக்கும். “மறதி” என்ற மாமருந்து காலவோட்டத்தில் அவர்கள் “தவறை” மறைத்திருக்கும். ஆனால் இப்போதிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில், “காலங்களை” “நிகழ்வுகளை” நிலைநிறுத்தும் இயந்திரங்களான புகைப்படம், வீடியோ போன்றவை அவர்களுக்குள் நடந்தவைகளை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. இணையத்தில் புதைந்து கிடக்கும், மறை கேமராக்களின் வீடியோக்களே இதற்கு சான்று. புதிதாக பாலியல் உணர்ச்சி ஊற்றேடுக்கும், நம் பதின்ம பிள்ளைகள் இவற்றை பார்கிறார்கள். . “போலச் செய்தல்” என்பார்கள். அதாவது “Imitation”. காதல் செய்தால் இதுவெல்லாம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். முயற்சிக்கிறார்கள். முடியாதபோது மூர்க்கமாகிறார்கள். ஒரு பதினைந்து வயது பையனை, “பெண்” பாதிப்பது போல் வேறு எந்த விசயமும், பாதிக்காது என்கிறார்கள். உண்மைதான்.. பாலியல் விடியோக்களால், தாய் தந்தையரால் விளக்கப்படாத விஷயங்களால், சமூக கட்டமைப்புகளால், உந்தப்பட்ட “இளைஞர் சமூகம்” தன்னிலை அறியாது, ஏதேதோ செய்யத் துணிகிறார்கள்.
சரி.. வெளிநாட்டில் இந்த பிரச்சனை இல்லையா என்றால், அங்கு பெண்ணை, பெண்ணுடம்பை இத்தனைப் “புனிதமாகப்” பார்க்கும் மனோபாவம் இல்லை. மதங்கள் இல்லை. பெண் தெய்வங்கள் இல்லை. பெண் என்பவள் சக உயிர். ஆணை போன்ற ஒரு உடம்பு அவளுக்கும். ஒரு பெண் குளிப்பதை படமெடுத்து, இணையத்தில் போட்டு விடுவேன் என்று அங்கு அவளை மிரட்ட முடியாது. மேலாடையின்றி படமெடுத்து மிரட்டிய மோசமான காதலனுக்கு(?) பயந்து, தற்கொலை செய்யும் பெண்களை கொண்ட, இதே இந்திய சமூகத்தில்தான், பல கோடி ரூபாய் சம்பளம் பெரும் “பாலியல் நடிகையும்” வலம் வருகிறாள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
சரி இதற்கு என்ன செய்யலாம். ஒரே விசயம்தான்தான். தயக்கம் விடுத்து, வெட்கம் ஏதுமின்றி, குழந்தைகளோடு பேசுங்கள். தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். வெளிச்சமாக இருக்கிறது என்று வேறு இடத்தில் தேட முடியாது.
அம்மாவும், அப்பாவும் “இப்படிச் செய்ததால்தான்” நீ வந்தாய் என தெளிவாக விளக்குங்கள். உங்கள் குழந்தையின் குஞ்சுமணியை பிடித்து “ஒண்ணுக்கு” போவதை சொல்லிக் கொடுத்தீருப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கினை உபயோகப்படுத்த சொல்லிக் கொடுத்தீருப்பீர்கள். அதே போல் அவர்களுக்கு புரியும் வயதில், நேரடியாக சொல்லி விடுங்கள். முடியவில்லையென்றால் at least இலைமறை காயாக, அவர்களுக்கு விளங்கும் படி சொல்லுங்கள். அவர்களின் கேள்விகளுக்கு, தெளிவான பதிலளியுங்கள். உடல்ரீதியாக விளக்கி, உள்ளத் தேவையையும் புரிய வையுங்கள்.
அப்பாவைப் போல் உனக்கும் ஒருவன் வருவான். அவனுக்கு இதெல்லாம் இருந்தால் நீ வாழ்வில் மகிழ்வாக இருக்கலாம்மென நம்பிக்கையை மகளுக்கு ஏற்படுத்துங்கள். அம்மாவைப்போல் உனக்கும் ஒருத்தி வருவாள், அவளை நீ எவ்வாறெல்லாம் கவனிக்க வேண்டுமென்ற உறுதியை மகனுக்கு ஊட்டுங்கள். புறஅழகை கண்டு, infatuation – ல் விழும் “அந்த ஈர்ப்பு” காதலில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். உடலை பற்றி விளங்குங்கள். உள்ளம் தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. உண்மை வேறாகவும் இருக்கலாம்.