ஞாயிறு, 14 ஏப்ரல், 2013


பிரியத்துடன் இருப்பவர்களுடன் சண்டையிடுவது பிரியத்தை அதிகப்படுத்துமாம்... இது முற்றிலும் உண்மை.. எனக்கு பிரியமானவர்களை மற்ற நேரங்களில் நினைப்பதை விட சண்டையிட்டு பிரிந்த பின்பு அடிக்கடி நினைக்கிறது மனசு.. மேலும் பிரியமானவர்களுடன் ஏற்படும் சண்டை 5 காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாத சண்டையாகத்தான் இருக்கிறது.. ஏன் அம்மாவிடம் நான் சண்டையிட்டு சென்றாலும், வந்த பின் சமாதானம் செய்து மகிழ்ச்சியை நிரப்புவதில் இருக்கும் சுகமே அலாதிதான்.  இதே போல் இருமடங்கு சந்தோசம் என்னவளுடன் சண்டையிடும் போது...
என் பால்ய வயதில் என் பேனாவை உடைத்த ஒருவனுடன் மட்டும் நான் கட்டி பிடித்து சண்டையிட்டு உள்ளேன்.. நான் அடி வாங்கினேனோ அல்லது அடி கொடுத்தேனோ என்பதெல்லாம் தெளிவாக தெரியாத நிலையில் போட்ட சண்டை.. ஆனால் சண்டை முடிந்த பின்பு, ஏன் கால் முட்டி, மணிக்கட்டு முழுதும் காயம்.. “குளத்தில் வழுக்கி விழுந்திட்டேன்பா” என்று வீட்டில் சொல்லி சமாளித்தேன்..  ஒரு சண்டையில் ஒருவன் ஏன் தலையில் கல்லை விட்டு எரிந்ததால் ஏற்பட்ட காயமும்,  அந்த நினைவுகளும் இப்போதும் சுகமான சுமைகளாய்  ஏன் நெஞ்சு கூட்டில் உள்ளன.. அதன் பின்பு கல்லூரியில் ஏற்பட்ட சில சண்டைகள்.. பொதுவாக நான் ஒரு பயந்தான்கொள்ளி. ஆனால் என்னையும் மீறி கோபம் வரும் போது சில சண்டைகளை செய்திருக்கிறேன்.. நான் அடித்ததால் ஒருவனுக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்த போது வருத்தப்பட்டேன்.. பின்னர் என் வாழ்வில் “காதல்” நுழைந்து விட்ட காரணத்தால் அங்கு சண்டைகள் அன்பு சண்டையாக மட்டும் நடந்ததேயன்றி கலவர சண்டைகள் ஏதும் இல்லை.. என்னவளும் என் கோபத்தை ஏற்று கொள்வாளே தவிர எதிர்ப்பதில்லை.. காதலியின் அப்பாவிடம் சண்டையிட்டு என்னவளை தூக்கி செல்ல வேண்டும் (பாட்ஷா படம் மாதிரி) என்றெல்லாம் நான் கற்பனை செய்ததுண்டு.. ஆனால் இப்போது எனக்கும் என் மாமாவிற்கும், அதாவது என் காதலியின் அப்பாவிற்கும் சண்டை என்று நினைத்து பார்த்தால் சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.. வாட்ட சாட்டமாக இருப்பதால் அத்தையுடன் வேண்டுமென்றால் சண்டையிடலாம்.. இப்போது என்னவளுடன் ஏற்படும் செல்ல சண்டைகள் பிடித்திருக்கிறது.. அடுத்து என்மகளுடன் ஏற்படும் பாச சண்டைகளுக்காக காத்திருக்கிறேன்..