வியாழன், 5 செப்டம்பர், 2019

செத்தபின்...

இந்த உடல் நீங்கள் சிறிது சிறிதாக சேகரித்ததுதான். இந்த உடலை நீங்கள் பூமித்தாயிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நேரம் வரும்போது ஒரு அணுவைக்கூட விடாமல் திரும்பப் பெறுவாள். ஆனால் மக்கள் அந்தக் கடனை எப்போதுமே திருப்பிக் கொடுக்க விரும்புவதில்லை. நீங்கள் இறக்கும்போது எப்படியும் இந்த பூமிக்கு உங்கள் கடனைத் திருப்பி செலுத்தி விடுவீர்கள். ஆனால் இதை விருப்பத்துடன் செய்தீர்களா இல்லை விருப்பமின்றி செய்தீர்களா என்பதுதான் கேள்வி. நீங்கள் ஒரு யோகியாக இருந்தால், இந்த உடல் திரும்பப் பெறப்படும்போது, ஆனந்தமாக கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள்.
ஒரு சாரத்தின் மேல் கட்டிடம் எழுப்புவது போல நம் பருவுடலும், சாரம் போன்ற சூட்சும உடலின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது; நீங்கள் ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது. பின்பு அழிந்து மண்ணோடு மண்ணாக கலக்கிறது. ஆனால் உயிரென்ற ஆன்மா அழிவில்லாதது. உடல் அழிந்தாலும் ஆன்மாவிற்கு அழிவில்லை. உயிருக்கு உடம்பை விட்டும், உடலுக்கு உயிரைவிட்டும் பிரிய மனமிருப்பதில்லை. இறப்பு நிகழ்ந்த பின்பு, அழிவற்ற உயிர், அழியும் உடலிலிருந்து பிரியும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. உயிர் பிரியும் அவஸ்தையை உடம்பு அனுபவிக்கிறது. இது படிப்படியாக சில மணித்துளிகளில் வலியின்றி நிகழ்கிறது. உடம்பிற்கும், அதன் உறுப்புக்களுக்குமே வலியின் வேதனை. உயிருக்கு வலியேது. அது சூடான காப்பிலிருந்து ஆவி பிரிவதுபோல் மெலிதாக பிரிகிறது. பிரிந்த உயிர் உடல் மீது கொண்ட பற்றினால், இத்தனைக்காலம் வாழ்ந்த உடம்பை சிறிதுநேரம் சுற்றி சுற்றி வருகிறது. இயற்கை செயல்பாடுகளால் உடம்பு அழுகத்தொடங்க, வேறு வழியின்றி உயிர் உடல் மீது ஒன்ற இயலாமல் தவிக்கிறது. முடிவில் உடல் மண்ணோடு கலக்க, உயிர் நீண்ட நித்திரைக்குள் பயணிக்கிறது - என்ற கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் போதே.......
ஜெய... ஜெய... ஜெய... ஜெயகே... - என்று தேசிய கீதத்தின் முடிவில் பள்ளிக்கூட மணியோசை கணீரென்று ஒலித்தது. கட்டுரையின் அமானுஷ்யத்தில் என்னை மறந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணாந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 4:35ஐ காட்டியது. ராதாவின் அலுவலகம் முடிய இன்னும் அரைமணிநேரம் ஆகும். அதன் பின்பே வீட்டிற்கு பைக்கில் செல்ல முடியும். ஐந்து மணிவரை அவள் அலுவலக வாசலில் "நாய் காவல்" காக்க வேண்டும். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் அவள் வெளிய வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூடுதல் ஆகும்.
காரணம் கேட்டாலோ, நல்ல மன நிலைமையிலிருந்தால் "கேஷ் டேலி ஆகல.. அதான் லேட்டாயிட்டு" என்று ஆறுதலான புன்முறுவல் பதில் கிடைக்கும். வங்கி வேலைப்பளுவின் தாக்கம் மூளையை உருத்திக்கொண்டிருந்தால், நறுக்கென்று "என் வேலை..உங்கள மாரி கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல "ஈ"வோட்டுற வேலை இல்லையென்று, ராணித் தேனீயாய் கொட்டுவாள்.
"ஆமா.. பெரிய கவர்னர் வேலை" - யென்று அசட்டையுடன் கிண்டலடிப்பேன் நான்.
பதில் கூறிய அந்த நிமிடத்திலிருந்து, சில நிமிடங்களுக்கு இருவருக்குள்ளும் பேச்சிருக்காது. திரும்பி பார்த்தால் அவள் முகம் நீர் குடித்த "பம்ளிமாஸ்" போலிருக்கும். வளைந்து, நெளிந்து சரியும் புளிமூட்டையைப் போல் பைக்கின் பின்புறத்தில் சலனமின்றி அமர்ந்திருப்பாள். எனக்குதான் மனசு கேட்காது. இலேசாக வழிந்து, அவளுக்கு பிடித்த ஏதாவது விஷயம் சார்ந்து பேச்சை ஆரம்பிப்பேன்.
இம்ம்ம்ம்ம் .. ஹூம்... நோ வே...
தெப்பக்குளத்தில் போட்ட அம்மிக்கல்லைப் "உம்ம்" என்றிருப்பாள். அவள் வேலையை குறை சொல்லிய கோபம். பின்ன இருக்காதா... தனியார் வங்கியில் அடிமைதன வேலையிலிருக்கும் அவளை, உடற்கல்வி ஆசிரியர் என்ற சுகபோக அரசாங்க வேலை பார்க்கும் நான், ஏகத்தாளமாய் குறை சொன்னால் கோபம் வருமா?வராதா? கோபத்தில் சிவக்கும் அவள் முகத்தை, பைக்கின் முன்புறக் கண்ணாடியில் பார்த்து ரசிப்பேன். அவள் கோபத்தை ரசிக்கும் "சேடிஸ்ட்" இல்லை நான். அவள் என்றால் உயிரெனக்கு. இருந்தும் அவளை இப்படி வம்புக்கிழுப்பதில் ஒரு சுகம். ஒருவேளை ஆணின ஆதிக்கவெறியின் அடையாளமோ, என்னவோ. என் அகராதியில் இதன் பெயர் "வம்புக்கிழுக்கும் அன்பு".
குளிர் காற்று முகம் மோதி நெஞ்சுக்குள் நிறைய, மௌனத்தோடு இருவரும் பைக்கில் பயணித்துக்கொண்டே இருப்போம். அவள் பேசாமல் இருப்பது எனக்குள் உருத்தும். படுக்கையறையில் மண்டியிடும் ஆணினத்தின் அடிமைநிலை அப்போது மேலிடும். பேச்சில் ஒரு படி கீழே இறங்குவேன்.
"சரி விடு டே... தெரியாம சொல்லிட்டேன்... உனக்கு உன் வேலை பெருசு... எனக்கு என் வேலை பெருசு... மன்னிச்சுக்கோ" - என்று உட்டாலக்கடி மன்னிப்பு கேட்டாலும் பேசவே மாட்டாள்.
"பேசாமலிலிருந்தால் ஆம்பள வழிக்கு வருவான்" - என்ற பெண்ணின அஸ்திரத்தை பிரயோகித்துக் கொண்டே இருப்பாள். கடைசியில் வேறு வழியின்றி நான் "பிரம்மாஸ்திரத்தை" கையிலெடுப்பேன். பைக்கின் வேகத்தை கூட்டி, எதிர்ப்படும் வளைவுகளில் ஒன்றிரெண்டு குலுக்கு குலுக்கும் போது, பட்டென்று அவள் மலர்க்கரம் என் திருத்தோள் பற்றும். அதைத்தொடர்ந்து அனிச்சையாய் பயத்தோடு அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை விழும்.
"பைய... போ... பண்ணி."
அவ்வளவுதான். எங்களுக்குள் சண்டை தீர்ந்தது. பரஸ்பர புன்னகைகளோடு அந்த நாளின் உரையாடல்கள் தொடங்கும். இருபத்தியொரு வருட திருமண வாழ்வின் இன்னல்கள், இன்பங்கள் விவாதிக்கப்படும். ராதா பேசிக்கொண்டே இருப்பாள். பேசிக்கொண்டே என்றால்... பேசிக்கொண்டே. காலையில் பேங்க் ஆரம்பித்தது முதல் அவள் வருவது வரையிலான அத்தனை நிகழ்வுகளும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் ஒப்பிப்பாள். எத்தனை நேரம்தான் ஆர்வத்தோடு கேட்பது மாதிரியே நடிக்க முடியும். இருந்தும் அவள் வாயடைப்பது கடினம். ஆனால் ஊர் முழுதும், அவள் யாரிடமும் கலகல வென பேச மாட்டாள் என்கிறார்கள். அதிலும் என் அம்மா ஒருபடி மேலே சென்று குறை சொல்வாள்.
"பொம்பளைன்னா கொஞ்சம் பேசி கலகலன்னு இருக்க வேண்டாமா.. உன் பொண்டாட்டி ஊமைக் குசும்பி" என்பாள். அதிலும் இந்த "ஊமைக்குசும்பி" என்ற வார்த்தையை சொல்லும்போது மட்டும் ஒரு மெல்லிய, ஹாஸ்ய, ரகசிய பாஷையில் கதைப்பாள் அம்மா.
"இத அவள்ட சொல்லட்டாமான்னு" - கேட்டால்,
"சொல்லு... எனக்கென்ன பயமா" -என்று சொல்லிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்து, பயந்து சிரிப்பாள்.
இப்படி ஊராரோடு பேசாமலிருப்பதாலோ என்னவோ, மொத்தத்தையும் என்னோடு பேசித் தீர்ப்பாள் ராதா. எங்கள் பேச்சுத்தான் என்னவாக இருக்கும்? மிடில் கிளாஸ் மனிதர்களின் சராசரியான பேச்சுக்கள்தான்.
நாமளும் சட்டுனு வீடு வைக்கணும்... வீடு வச்சு முன்னால நெறைய செடி வைக்கணும்...
(மனதிற்குள் என் பதில்: அப்ப செடியெல்லாம் இப்பவே... வாங்கி வச்சிருவோமா?)
கெங்கா ஜுவல்லரியில் வந்திருக்க நெக்லஸ் டிசைன்ஸ் சூப்பரா இருக்கு...
(மனதிற்குள் என் பதில்: அதவிட புதுசா வந்திருக்க ராயல் என்பீல்ட் பைக் சூப்பரா இருக்கு)
இந்த வாட்டி ஆடித் தள்ளுபடியில் திருனவேலி போத்தீஸ்ல போய் டிரஸ் எடுக்கணும்...
(மனதிற்குள் என் பதில்: ரெண்டு அலமாரி புல்லா இருக்குற டிரஸ் எல்லாம் யாருக்கோ?)
உங்க தங்கச்சி வீட்டு பால் காச்சுக்கு ரொம்ப பெருசா எதுவும் செய்ய வேண்டாம்... நம்ம கஷ்டபட்டப்போ யாரு உதவுனா..
(மனதிற்குள் என் பதில்: அத நீ எப்படி முடிவு செய்யலாம்?)
எங்க மாமா பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா ரெண்டு பவுனாவது செய்யணும்... நம்ம மக பொறந்த நாளுக்கு மூணு பவுன்ல செயினு போட்டாங்க
(மனதிற்குள் என் பதில்: அத நான்தானே முடிவு செய்யணும்.. பார்க்கலாம்)
தப்பித் தவறி இந்த மனதிற்குள் கூறிய பதிலை உணர்ச்சிவசப்பட்டு வாயில் கூறிவிட்டால்... அவ்வளவுதான். கட்டியது சுடிதாரோ, சேலையோ, எதுவாக இருந்தாலும் மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவாள். வழக்கம்போல் நான் தான் வெள்ளைக் கொடியை காட்டி சமாதானத்திற்கு செல்ல வேண்டும். எங்களுக்குள் வாடிக்கையான சண்டைகள் இப்போதெல்லாம் "வேடிக்கையாக"- வே தோன்றின.
கொஞ்சம் கூட மாறாத அந்த சராசரி வாழ்க்கையைத்தான் ஏனைய உலகத்தினரோடு நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறு வாழ்வதில் எங்களுக்குள் சலிப்பேதும் வந்ததில்லை. அடிநாதத்தில் அழுத்தமான காதல் இருப்பதால் சலிப்பு இனியும் வரப்போவதுமில்லை. இருபத்தியொரு ஆண்டுகள் கழிந்தன. இனி ஒரு இருபதோ, முப்பதோ ஆண்டுகள், இதே சண்டைகளோடு, இதே சமானத்தோடு வாழ்ந்துவிட்டு சாக வேண்டுமென்ற நினைப்போடு பயணித்துக் கொண்டிருந்தேன்.
ராதா எதையோ விடாமல் பேசிக்கொண்டிருந்தாள். நான் ஏதோதோ நினைத்துக்கொண்டே "ம்ம்ம்ம்" கொட்டிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து " நீ சொன்னா சரியாத்தான் இருக்குமென" சொல்ல முடிவு செய்திருந்தேன். அப்படிச் சொன்னால் அவளுக்கு சந்தோசம் தான். "பெண்களை வெற்றி பெறச் செய்ய வேண்டாம். ஆனால் அவர்கள் வென்றது போன்றதொரு மாயையை உண்டாக்கினால் இல்லற வாழ்வில் வென்று விடலாமென" எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. இப்படி பற்பல நினைவுகளில் பயணித்துக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில்தான், எதிர்பாராமல் எதிர்ப்பட்ட மணல் லாரியில் வேகமாக மோதி, அடித்த தீடீர் பிரேக்கில் ராதா பக்கத்து குளத்தில் தூக்கிவீசியெறியப்பட, நேருக்கு நேராய் லாரியின் முன்பக்கத்தில் நான் மட்டும் மோதியிருந்தேன்.
முன் மண்டையின் உள்ளில், நகக்கண்ணில் "பனஞ்சிரா" ஏறி பழுத்தது போலொரு வலி. ஆம்புலன்ஸில் அசைவில் மண்டை ஓடு, மூளையை வெளியே பிரசவித்து விடுமென தோன்றியது. அவ்வளவு வலி. அருகில் ஒரு ஓரத்தில் ஈரத்துணியோடு ராதா உட்கார்ந்திருக்க, மகன் தினேஷ் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். இவன் எப்போது வந்தான். "அப்பாக்கு ஆக்க்ஷிடென்ட் ஆயிட்டு... சட்டுன்னு வான்னு"- ராதா கூப்பிட்டிருப்பாள்.
எல்லாம் ஓரளவிற்கு மனசிலாகியது. ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறார்கள். பிழைப்பேனா? அல்லது என்னவர்களை விட்டு பிரிவேனா? பணத்திற்கு என்ன செய்ய போகிறார்களோ? என்று மனதிற்குள் ஒரு சில ஆவேச சிறகடிப்புகள். ஒரு சில நிமிடங்களில், பற்பல நினைவுகள் போயும் வந்துமிருந்தன. மூளைக்குள் நினைவுகள் தப்பிப் படர்ந்தன. தலைக்குள் பிரளய வலிகள் இருக்க, உடம்பில் மட்டும் வலியேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்து என் நினைவு திரும்பிய போது, அந்த குளிர்ந்த அறையில் அம்மாவும் தினேசும் அழுது கொண்டிருந்தார்கள். நான் காற்றோடு காற்றாக கலந்தது போலிருந்தது. என்னுடல் அசைவற்று கிடந்தது. பார்வை மேல்புறத்தில் நிலைக்க, அடுத்த மின்னணு திரையில் நீளமான ஒரு வெள்ளைக் கோடும், அதைத் தொடர்ந்து பயணிப்பது போன்ற பீப்ப்ப்பப்... என்ற ஒலியும் ஒலித்துக்கொண்டிருந்தது.
எனக்கு பல தமிழ் சினிமாக்கள் ஞாபகத்திற்கு வந்தது. நான் செத்து விட்டேனா? அது சரி. ஆமாம் நான் இறந்து விட்டேன். ஆனால் வருத்தமாகவே இருக்க வில்லை. வருத்த பட முனைந்தேன். முடிய வில்லை. பொம்மை போல் உணர்வற்று கிடக்கும் என் உடம்பை பார்க்க சிரிப்பாக வந்தது. ஆப்பரேஷன் செய்வதற்கு முன்பு மீசையை எடுத்திருக்கிறார்கள். அதை பார்த்து சிரிப்பாக வந்தது. சிரிக்க முடிய வில்லை. நான் அனுபவித்த ஒரு வலி கூட இப்போது இல்லை. ஒரு சொட்டு வலி இல்லை. இறப்பு இத்தனை இனிமையானதா... வலியில்லாததா... இந்த இறப்பை நினைத்தா மொத்த உலகமும் பயந்து நடுங்குகிறது. காலையில் படித்த கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. ஏதோ ஒரு அவசரத்தில் காற்றில் இருந்த நான், கட்டிலில் இருந்த என் உடம்பிற்குள் நுழைந்து, கைகால்களை அசைக்க, கண் இமைகளை அசைக்க முயன்றேன். எதுவும் முடிய வில்லை. உண்மைதான் நான் இறந்து விட்டேன். கடவுளே... என் சாவுக்கு கூட என்னால் அழ முடியவில்லையே... வருத்தபட முயன்று தோற்றேன்.
ஐந்தாறு நிமிடங்கள் என்னை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள் ராதா. அவளை பார்க்கவே ரெம்ப பாவமாக இருந்தது. மகனும் அழுது குலுங்கிக் கொண்டிருந்தான். நான் உடம்பிற்கும், காற்றுக்கும் மாறி, மாறித் தாவி அல்லாடிக் கொண்டிருந்தேன். இருபது நிமிடத்தில் மகன் வெளியே சென்று ஒவ்வொருத்தருக்காக போன் செய்யத் தொடங்கினான். அரைமணிநேரம் அழுது களைத்த ராதாவிற்கு சில நர்ஸுகள் வந்து ஆறுதல் சொன்னார்கள். நானும் அவள் முன் சென்று "செத்தா சுகமாத்தான் இருக்கு, டோன்ட் ஒரி- என்று கூறினேன். என் சப்தம் யாருக்கு கேட்க. செத்தாலும் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது. இரண்டு மணிநேரத்திற்குள் சில உறவினர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருத்தரும் வரும்போது ராதா பேச வார்த்தையின்றி பொட்டிக் கரைந்தாள்.
மூன்று மணிநேரத்தில் என் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்த்திருந்தது. போற்றி பாதுகாத்த உடல் படிப்படியாக அழுக ஆரம்பித்திருந்தது. அதன் பின்பு எனக்கும் உடலுக்குள் செல்ல விருப்பமில்லை. இருந்தும் ஆசாபாசத்தில் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் என் உடம்பை எங்கோ தூக்கி சென்றனர். வேறு எங்கு? ஆக்சிடென்ட் கேஸ் அல்லவா? போஸ்ட்மாட்டம் செய்வதற்கு இருக்கும். துண்டு துண்டாக வெட்டுவார்கள் என நினைக்கும் போதே எனக்கு ஒருமாதிரி இருந்தது.
இப்போது "நான்" என்பது பிரிந்து நிற்கும் இந்த உயிரா? அல்லது எடுத்து போகும் அந்த உடலா? என்ற குழப்பம் ஏற்பட்டது. நிகழ்வுகள் நினைவுகளாக மீண்டதேயன்றி உணர்வுகளாக மாற வில்லை. உணர்ச்சியே இல்லை. சுக துக்கமற்ற ஆன்மாவாக மாறியதில் சந்தோசம் இருந்தது. என் சாவுக்கு அழாதீர்கள். யார் சாவுக்கும் அழாதீர்கள். இறப்பு அத்தனை சுகமாக இருக்கிறது என்று அத்தனை பேரிடமும் கத்தி கூறவேண்டுமென்றிருந்தது.
ராதா உட்பட அழுது களைத்த எல்லோரும் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களில் மும்முரமாயினர். என் சாவை நானும் ஒத்துக் கொண்டிருந்தேன். சினிமாக்களில் காட்டுவது போல், எமதர்ம ராஜனோ, கிறிஸ்தவ ஏஞ்சல்களோ, இறைதூதர்களோ வந்து என்னை
கூட்டிச்செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் அந்த அறையிலேயே காத்துக் கிடந்தேன்.
ஏறத்தாழ எம தர்மனின் சாயலில் கழுத்தில் சிலுவையோடு அந்த உருவம் நானிருந்த அறை நோக்கி வந்தது. வந்துட்டான்யா... வந்துட்டான்யா...என்று அடுத்த பயணத்திற்கு நான் தயாராக, வந்தவன் என் குடும்பத்தினரோடு சமாதானம் பேசினான். அது சரி... வந்தவன் மனிதன்... அவர்கள் சம்பாஷணையிலிருந்து அவர் என்னை இடித்த லாரியின் உரிமையாளர் என்று அனுமானித்துக் கொண்டேன். ராதா பேச்சேதுமின்றி, கண்களில் கண்ணீரோடு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றிக் கொள்ள, ஆஸ்பத்திரி ஊழியர்கள் நாலைந்து பேர் ஓடி வந்தனர்.
நான் மீண்டும் அறைக்குள் சென்று காற்றில் மிதக்க, ராதாவை பற்றிய நினைவுகள் நெஞ்சுக்குள் வந்து கொண்டே இருந்தன. இனி யாரிடம் அவள் "நொய்.. நொய்யென்று" பேச போகிறாள் என்ற கலக்கம் மட்டும் எனக்குள் நிலைக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் "தூக்கம்" போன்ற ஏதோ ஓன்று என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. அந்த மயக்கத்தில் காலையில் படித்த கட்டுரையின் கடைசி பத்தியானது என் நினைவுகளில் மீண்டது.
"உயிருக்கு வலியேது. அது சூடான காப்பிலிருந்து ஆவி பிரிவதுபோல் மெலிதாக பிரிகிறது. பிரிந்த உயிர், உடல் மீது கொண்ட பற்றினால், இத்தனைக்காலம் வாழ்ந்த உடம்பை சிறிதுநேரம் சுற்றி சுற்றி வருகிறது. இயற்கை செயல்பாடுகளால் உடம்பு அழுகத்தொடங்க, வேறு வழியின்றி உயிர், உடல் மீது ஒன்ற இயலாமல் தவிக்கிறது. முடிவில் உடல் மண்ணோடு கலக்க, உயிர் நீண்ட நித்திரைக்குள் பயணிக்கிறது......................."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks