வியாழன், 5 செப்டம்பர், 2019

நீங்க தயிர்சாதம் சாப்பிட்டிருக்கீங்களா...

நீங்க தயிர்சாதம் சாப்பிட்டிருக்கீங்களா...
வெள்ளையா, பூ பூவா, புளிப்பா... இருக்குற தயிர்சாதம் சாப்பிட்டிருக்கீங்களா...
நான் சொல்லுற தயிர் சாதம், நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. நீங்க நினைக்கிற மாறி கடையில் விற்கப்படும், பை அரிசியை புதிதாய் பொங்கி, வடித்து, சூடாற வைத்து, பாக்கெட் டப்பாவில் உள்ள தயிரை, அதன் மீது ஊற்றி, எங்க ஊற்ற???? செயற்கை கட்டித்தயிரை ஆப்பையால் வழித்து, சாதத்தில் கொட்டி, தாளிப்பு என்ற பெயரில் வேண்டாத குப்பையெல்லாம் அள்ளி போட்டு, எண்ணெய் பசையோடு, உப்பை போட்டுக் கிண்டி, சாதம் வித்து, வித்தாக இருந்தால், மிக்ஸ்யில் போட்டு அரைத்து, ஏதோ “கலா திலக, அச்டவதன சமையல் வித்வான்” போல், வலதுகை ஆப்பையால், கலவையை இடது கையில் விட்டு, நக்கி ருசி பார்த்து, காலம் போன கடைசியில் கை கொடுக்கும், “கிழட்டுத் தயிர்சாதமாய்” எல்லா விருந்து உபசரணைகளிலும் தட்டில் வந்து விழும்.
இன்னும் சில அதிக பிரசங்கிகள் அல்லது நவயுக சமையல் விஞ்ஞானிகள் தயிர் சாதத்தில் காரட் போடுதல், ரோசாப்பூ போடுதல், பூந்தி போடுதல், ஆரஞ்சு அல்லது திராட்சை பழம் போடுதல், இன்னும் சில அதிமேதாவி, அதிரூப சமையல் சுந்தரிகள்/சுந்தரர்கள் மாதுளம் பழம் போடுதல், அன்னாசி பழம் போடுதல்... எனக் கண்ட பழங்களையும் போட்டுக் கலக்கி, கிண்டி, தன் இயற்கை வெள்ளை நிறத்தை இழந்து, ஹோலிப் பண்டிகைக்கு பயந்த விடலை பெண்ணாய், எழுத்தில் சொல்ல முடியாத, வேறான ஒரு நிறத்தில் தட்டத்தை வந்து நிரப்பும் அந்த “தயிர் சாதம்”. அதனை மூன்று, நான்கு வாய்கள் நக்கித் தின்று விட்டு, தின்னும் போது நாக்கு உணரும் சுவை சோற்றினுடையதா? தயிரினுடையதா? அதனுடன் போட்ட இன்ன பிற வஸ்துக்களுடையதா? அல்லது சேர்த்த பழத்தினுடையதா? என்ற குழப்பம் மேலோங்க, சாப்பிட்டு முடித்து, கையும் கழுவி விடுவோம்.
நான் சொல்ல வருவது அந்த நவயுக, நாகரீக, கலியுக, புஜகல, பராக்கிரம “தயிர்சாதத்தை” பற்றியல்ல. இது கொஞ்சம் “பழசு கண்ணா.... பழசு”. இதை படிக்க படிக்க உங்கள், உள்நாக்கில் தண்ணீர் ஊறி, வெளி நாக்கில் வடியலாம். அல்லது “போடா.. நீயும்.. உன் டேஸ்டும்னு” கோபத்தில் எச்சில் விழுங்கி, படித்து முடிக்கலாம். எதுவாக இருந்தாலும் “என் கடன்...பணி செய்து கிடப்பதே” – என்பதைப் போன்று, “என் கடன்... கண்டதையும் எழுதிக் கிழிப்பதே” – என்பதாகும்.
So coming to the point, இந்த தயிர்சாதம் செய்ய, நீங்கள் ஒருநாள் மெனக்கிட வேண்டும். அதே தான்... புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஒரு வெள்ளித்தட்டை எடுத்து(எவர் சில்வர் என்றாலும் ஒகே), அதன் மையத்தில், வீட்டு அரிசியில் வடித்த பழைய சாதத்தை, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும் (வீட்டரிசியென்றால் என்ன என்பதை அறிய, என்னுடைய பழைய பதிவைப் படிக்கவும்). நீங்கள் சரியான அரிசியை தேர்த்தெடுத்திருந்தால், இப்போது அதை பார்ப்பதற்கு மட்டுமல்ல, தொடுவதற்கும் “பிச்சிப்பூ” போலவே இருக்கும். அதன் மீது ஊற்றும் நிலையிலுள்ள, (கவனிக்க....வழிக்கும் நிலையில் உள்ளதல்ல), சற்று புளிப்பு தூக்கலாக உள்ள பசுமாட்டுத் தயிரை “வெட, வெட, வெட, வென ஊற்றவும்(கவனிக்க.....கொட்ட வில்லை). “பரல் உப்பு” சிறிதெடுத்து தேவைக்கு ஏற்றார் போல், சேர்த்து நன்றாக உங்கள் “சொந்த கைகளால்” “அரை கூழ் பத நிலைக்கு” நன்றாக பிசையவும். இது ஒருபுறம் இருக்க, நன்றாக பச்சை நிறமுள்ள மிளகாய் நான்கெடுத்து, உப்பும், தேங்காயும் சேர்த்து, தண்ணீர் ஏதும் விடாமல், நன்றாக இடிக்கவோ அல்லது நுணுக்கவோ செய்யவும். No மிக்ஸி. Hand ஒன்லி.
பின்பு நுணுக்கிய பச்சை மிளகாய், தேங்காய், உப்புக் கலவையை, தயிர் சாதத்துடன் சேர்த்து, ஒய்யாரமாய் உட்கார்ந்து, “ஆஹா... ஓஹோ...” என புகழ்ந்து சாப்பிட்டுத் தீர்க்கவும்.
விதிமுறைகள்
1. ஒரு கடி சோறு.. ஒரு கடி அப்பளம் என்ற விளம்பரம் போல், ஒரு வாய் தயிர் சாதம், ஒரு வாய் “நுணுக்கிய தொவையல்” என சாப்பிட வேண்டும். ஏதேனும் ஒன்றை இருமுறை தொடர்ச்சியாக சாப்பிட்டு விட்டு, “அத்தனைச் சுவை இல்லை” என்று குறைச்சொன்னால், கம்பெனி பொறுப்பேற்காது.
2. இடையே, இடையே விரல்களில் வழிந்தோடும் தயிர்சாதக் கலவையை “நக்கி” சாப்பிடுவது, அவரவர் விருப்பத்திற்குரியது. இருந்தும் கம்பெனி அவ்வாறு சாப்பிடவே சிபாரிசு செய்கிறது. சாப்பிட்டபின் தட்டத்தை நக்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பத்திற்க்குரியது.
3. எக்காரணம் கொண்டும் இடையே தண்ணீர் குடிப்பது கூடவே கூடாது. சாப்பிட்ட மொத்த தயிரின், குளிரையும், சுவையையும், உடம்பு ஏற்றுக் கொண்டே பின்பே, தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. இதனால் வரும், காய்ச்சல், மூக்கடைப்பு, சளித்தொல்லை, இன்னபிற இத்யாதி வியாதிகளுக்கு கம்பெனி எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்காது.
5. மாங்கா ஊறுகாய், வடு மாங்காய், மாங்காய் தொக்கு, இன்ன பிற “தொடுசுவை”களை அவரவர் வசதிக்கேற்றார்போல் பயன்படுத்தலாம். இருந்தும் கம்பெனியின் சிபாரிசு “நுணுக்கிய தொவையலுக்கே”.
6. இத்தனை விவரிப்புக்குப் பிறகும் இதன் சுவை உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால், உங்கள் தயிர்சாதத்தை உங்களுக்கு பிடித்தபடி, நீங்கள் சாப்பிடுங்கள். என்னுடையதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
தயிர் சாதம் என்ற பெயரில், கண்டதைத் தின்று, ஏமாந்ததின் விரக்தியே இந்த பதிவு. ஜெய் தயிர் சாதம்.

2 கருத்துகள்:

  1. ம் நல்ல தயிர்சாதம் தான் நல்லா இருக்கும்..
    இதைவிட எங்க அப்பா recipe சூப்பரா இருக்கும் 😅
    எதுவும் இல்லை தட்டு எடுத்து கொஞ்சம் சாதம் போட்டு நல்லா எல்லாவிரலும் படும்படி பிசைந்து (விரலுக்கு வஞ்சனை இல்லாமல் ) தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து திரும்ப பிசைந்து , தண்ணீர் எதுவும் சேர்க்காமல் வெறும் பசுந்தயிர் (எருமை தயிராக இருப்பினும் பரவாயில்லை) பிசைந்து அவர் தான் சாப்பிட வேண்டியதையே மறந்து எங்களுக்கு மட்டும் ஊட்டுவார் (இந்த தயிர்சாதம் விற்பனைக்கு அல்ல) ப்பா அப்படி ஒரு சுவையா இருக்கும்
    எங்களையும் இதுவரை இதுமாதிரி கிடைக்கல
    அம்மா என்னதான் சமைச்சாலும் அப்பா கையில தான் ருசி இருக்கு 😅

    பதிலளிநீக்கு

Thanks