வியாழன், 5 செப்டம்பர், 2019

விடுதலை 18+

முன்பேதுமில்லாத ஒரு பதட்டம் ஆத்மிகாவை பார்க்கும் போதிருந்தது. உடம்பெங்கும் அழுக்காய் இருந்தாலும், குப்பைத்தொட்டியில் கிடக்கும் வைரமோதிரமாய் இயற்கையான பேரழகோடு படுத்துக் கிடந்தாள் ஆத்மீகா. சில மனித உருவங்களை, சில வார்த்தைகளை கையிலிருந்த கரிக்கொட்டையால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அங்குமிங்கும் ஒரு முறை நோக்கி கொண்டான் மணியன். யாருமில்லை. மனநிலை காப்பகத்திற்கே உரித்தான நோயாளிகளின் வினோத ஒலிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டுக் கொண்டிருக்க, அறைகளுக்கு நேர் எதிராய், படர்ந்து விரிந்திருந்த நீண்ட நெடிய புங்கை மரத்தில் சில பறவைகளின் கூச்சல்கள். நான்கைந்து கோன் ஐஸுகளை கவிழ்த்து வைத்தது போலிருந்த, கூரிய அசோக மரங்களில், அணில்களின் விளையாட்டுச் சப்தங்கள். தக்காளி நிறத்திலிருந்த செம்மண் மைதானத்தில் சில தட்டான்களின் ரீங்காரம். அழுகை முட்டி நிற்கும் விடலை பெண்ணின் முகத்தை போன்றிருந்தது சூல் கொண்டு தவழும் மேகம். எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற பதட்டத்தில் கருநீல வானம். இயற்கை சப்தங்களைத் தவிர்த்த "மௌனம்", மனநிலை காப்பகத்தின் காணும் இடமெங்கும் கொட்டிக்கிடந்தது.
தூரத்தில் சமையல்காரர் சோமுவின் சப்தம், நெடிய மதிலின் மறுபுறத்தில் விறகு வெட்டும் வேலை நடக்கும் இடத்தில் "தூர... ஸ்வரத்தில்" கேட்டது. பெண் நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயாக்கள் வள்ளியக்கா, ராமாயி இருவரும் காப்பகத்தின் கடைகோடியிலிருந்த D பிளாக்கில் இருந்தனர். கடந்த மூன்று மாதங்களாக காப்பகப் பணியாளர்களின் உயிரை வாங்கும் மனநிலைபாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சுமித்ராவின் பிரசவத்திற்கு உதவியாய் இருந்தனர். மருத்துவர்களும், ஊழியர்களும் குழந்தையை காப்பாற்றும் பணியில் பரபரப்பாயிருக்க, "சுமித்ராவின் சப்தம்" மனநிலை காப்பகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. தனக்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல், புத்தி பேதலித்து கத்தினாள் சுமித்ரா. சப்தம் மிதந்து, மிதந்து A பிளாக்கில் புதிதாக வந்திருக்கும் மனநிலை நோயாளி ஆத்மிகாவுக்கும், அவளை எச்சி வடிய வேடிக்கை பார்க்கும் வாட்ச்மேன் மணியனின் காதுக்கும் கேட்டது. இன்னும் பிரசவம் ஆகலை போலுக்கு? மனதிற்குள் நினைத்துக்கொண்டே, ஆத்மீகாவை "காமப்பார்வை" பார்த்துக்கொண்டிருந்தான் மணியன். முப்பத்தெட்டு வயது வாட்ச்மேன் மணியனை, இளம்பெண் மனநோயாளி ஆத்மீகா வெகுவாக பாதித்திருந்தாள்.
யாரும் நம்மை தட்டிக்கேட்கபோவதில்லை என்ற நினைப்பு மேலோங்கும் போது, ஏதுவான சூழ்நிலைகளில் யாருக்கும் தெரியாமல் தப்பை "சரியாகச்" செய்யும் மனித வஸ்துக்களை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்களில் ஒருவன்தான் மணியன். ஒன்றரை ஏக்கரிலுள்ள மனநிலைக்காப்பகத்தின் முழுநேர காவலாளி. அங்கு வருகின்ற அனைத்து நோயாளிகளின் மீதும் அவனுக்கு அக்கறை உண்டு, பரிதாபம், பச்சாதாபம் எல்லாம் உண்டு. கூடவே பெண் நோயாளிகளின் மீது ஒரு ஈர்ப்பும். "குருட்டு கோழியா இருந்தாலும், குழம்பு எப்பவுமே ருசிதான்" என்ற மனநிலையிருப்பவன் மணியன். அதற்காக அவர்களை பாலியல் உறவுகளுக்கெல்லாம் அவன் பயன்படுத்தியதில்லை. அல்லது பாலியல் உறவு கொள்ளுமளவிற்கான "சூழ்நிலை" அவனுக்கு வாய்க்க வில்லை. அவன் செய்வதெல்லாம் முறை தவறிய "தொடுகைகள்". அதை செய்வதற்கு மட்டுமே அவனுக்கு தைரியம் உண்டெனவும் கூறலாம். மனம், புத்தி பேதலித்து இருக்கும் அவர்களின் அவயங்களை தொட்டு, அமுக்கி, தடவி விளையாடுவதில் அவனுக்கொரு அலாதியான இன்பம். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் முன்னிலையில் மணியன் நோயாளிகளை அணுகும் முறைகளை பார்த்தால், யாருக்கும் அவன் மீது சந்தேகம் வராது. அப்படியொரு மனிதநேயம் மிக்க மனிதனாக தன்னை காட்டிக்கொள்வான் மணியன்.
"மணியன்... அந்த ரெண்டாம் நம்பர் பையன் குளிக்க ரெம்ப அடம் பிடிக்கான்... பார்த்துக்கோ... கொஞ்சம் குளிப்பாட்டி விடுவையா?"
"அந்த பெருசு... மொத்த ரூம்லையும் பேண்டு வச்சிருக்கு... வாடை, வயித்த பொரட்டுகு... கொஞ்சம் தூக்கி குளியல் ரூம்ல போட்டுடு மணியா... உனக்கு புண்ணியமா போகும்"
"8ம் நம்பர் பொம்பள டிரஸ் இல்லாம நிக்கு... நாங்க கிட்ட போனா ஆக்ரோஷமா கடிக்க வருகு... கொஞ்சம் ஓடி வா மணியா..."
"பதின்னொன்னு A , செத்தாச்சாம்... பெரிய டாக்டர் வரத்துக்குள்ளாடி உடம்ப குளிப்பாட்டணுமாம்... மேடம் சொல்ல சொன்னாங்க..."
- என்பது மாதிரியான எந்த பணியும் செய்வதற்கு, மணியனை தவிர அங்கு வேறு ஆளில்லை.
"பைத்தியார... இளவுகளோட கிடந்துக்கிட்டு... போதும்மா எனக்கு... என்று மணியன் வெளிப்படையாக அலுத்துக் கொண்டாலும், இத்யாதி வேலைகளை செய்ய அவன் எப்போதுமே தவறியதில்லை, தயங்கியதுமில்லை. அப்படி பட்ட "மனிதருள் மாணிக்கம்தான்" தனியாக இருக்கும் பெண் நோயாளிகளிடம், யாருக்கும் தெரியாமல் தன் சில்லறை வேலைகளையும் காட்டிக்கொண்டிருந்தான். அதுவும் சட்டென்று யார் மீதும் கைவைத்து விட மாட்டான் மணியன். தொடர்ந்த சந்திப்புகளின் மூலம் அவர்களைப் பரிசீலித்து, எதிர்கொள்ளும் நோயாளியின் இயலாமையை உறுதி செய்து விட்டால், ஆனமட்டும் அத்துமீறி ஆசையை தீர்த்துக் கொள்வான் மணியன்.
சராசரி பெண்களை மட்டுமே கண்டு கழித்த மணியனுக்கு, ஆத்மீகாவின் பேரழகு பெருங்காமத்தைத் தந்துக் கொண்டிருந்தது. பெண்ணழகை கூர்ந்து கூர்ந்து ரசிக்கும் "ஏக்கக் கண்களுக்கா" ஊருக்குள் பஞ்சம். ஆத்மிகாவும் அப்பபட்ட அழகு சிலையாயிருந்தாள். எப்படிப்பட்ட ஆணையும் கவர்ந்திழுத்து விழவைக்கும் "நாகப்பழ கண்கள்" அவளுக்கு. அச்சில் வார்த்த பதுமையாய், அதிகப்படியான சதையேதுமில்லாத வெளிர் நிற தளிர் உடம்பு. திரண்ட நெஞ்சங்களுக்கும், சிறிதான தொப்பையும் அசைகின்ற அக்கணத்தில் "ஆலிங்கன பரிதவிப்பை" உண்டாக்குபவை. என்ன பாவம் செய்தாளோ, இன்று புத்தி பேதலித்து இக்காப்பகத்தில் "காணப்பொருளாய்" நிலை குலைந்து கிடக்கிறாள்.
எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு யாரும் இங்கு வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் அறை கம்பிக் கதவின் கம்பி வழி ஆத்மீகாவின் அறைக்குள் கை நீட்ட்ட்ட்ட்டினான் மணியன். பால்குவியலாய் படர்ந்திருந்த அவள் முழங்கால் திரட்சி அவன் கைக்குள் சிக்கியது. மெதுவாக தடவத் தொடங்கினான். ஒரு பூனைக்குட்டியின் தலையை தடவுவது போல். ஒரு கோழிக்குஞ்சின் தலையை தடவுவது போல்.
தடவித்,
தடவித்,
தடவித்,
வருடிக் கைவிரல்கள் முன்னேறி தொடைகளைப் பற்ற முயன்றன. முடியவில்லை. ஒருக்களித்து படுத்திருந்த அவள் உடலும், ஒன்றன் மீது ஒன்றாய் சாய்ந்திருந்த வெளுத்த மார்புகளும் அவனுக்குள் என்னவெல்லாமோ செய்தது. கொஞ்சம் அருகில் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணினான். காலைப் பிடித்து அருகில் இழுத்தால் என்னவென யோசித்தான். எந்த தொடுதலுக்கும் எதிர்வினையாற்றாமல், உடல் குறுகுறுப்பில் சிறிதான நடுக்கத்தோடு தரையில் பரவிக் கிடந்தாள் ஆத்மீகா. ஆத்மீகாவின் ஓவியங்களை அப்போதுதான் கூர்ந்து கவனித்தான் மணியன். பெரும்பாலும் மனித உருவங்கள். அருகில் அவர்கள் பெயர்கள். அவள் எழுதியவைகளை எழுத்து கூட்டி வாசித்துப்பார்த்தான்.
அம்மா
Bus
அம்மு
Cash
கேன்சர்
Owner
வலி
Free
Facial
அனிதா
- என தமிழும், ஆங்கிலமுமாய் சில வார்த்தைகள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மணியனை, சட்டை செய்யாமல் ஓவியக் கருமமே கண்ணாயிருந்தாள் ஆத்மீகா.
மணியன் தொடர்ந்து ஆக்கிரமிக்க முயல, எதிர்பாராத விதமாய் வள்ளியக்கா A பிளாக்கில் நுழைந்து கொண்டிருந்தாள்.
சட்டென்று விலகிய மணியன், பதட்டமில்லா நடத்தையுடன் "பணி செய்யும் பாவனையைக்" காட்டிக் கொண்டே வள்ளியாக்களிடம் பேசினான்.
என்னா... பிள்ளை பொறந்திருச்சா, D ப்ளாக்குல?
ஆமாப்பா... சவம் என்னா அவஸ்தை... ரெம்பக் கஷ்டப்பட்டு போச்சு குட்டி... பிள்ளை பொறந்த உடனே பிள்ளையை பார்த்து கதறு... கதறுன்னு கதருகு... மாப்பிளையை ஞாபகம் இருக்கானு கேட்டா... பரக்க பரக்க முழிக்கு... அவ வீட்லேர்ந்து எல்லோரும் வந்திருக்காங்க...
"அது சரி... அப்ப உன் கைச்செலவுக்கு காசு கிடைச்சாச்சுன்னு சொல்லு..." - நடந்தவைகளை கிரகித்துக்கொண்டே வள்ளியக்காளை கிண்டல் செய்தான் மணியன்.
மேலுதட்டை மட்டும் விரித்து முன்பற்கள் தெரிய ஒரு சிரிப்புச் சிரித்தாள் வள்ளியக்கா.
ஆத்மீகாவின் அறையை காட்டி இது என்ன கேஸு?- என்ற ரீதியில் சைகை காட்டினான் மணியன்.
இது சித்த பிரம்ம கேஸாம்... அப்பா இல்லாத பிள்ளை. அம்மைக்கு ஏதோ நோயாம். ஏதோ பியூட்டி சென்டர்ல வேலை பார்த்திட்டு இருந்திருக்கு. பிள்ளை அம்சமா இருக்குல்லா... எவனோ மேஞ்சிட்டான்னு நினைக்கேன்...நோய் கோளாறோ... பேய் கோளாறோ... நாலுமாசமா வீட்டுக்குள் கிடந்து ஒரே சத்தமாம்... சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேச்சாம்... அப்புறம் இப்படி படுத்து கிடந்து படம் வரைச்சலாம்... யாரு எது சொன்னாலும், செய்தாலும் சட்டை செய்யாம மணிக்கணக்கா இப்படியே கிடக்குமாம்... அவ அம்ம பயந்து போய் இங்க கொண்டு சேர்த்திருக்கு... நம்ம கோகிலா டாக்ட்டர்தான் பாக்குறாங்க...- அனுதாபத்தோடு சொல்லிமுடித்தாள் வள்ளியக்கா.
சவம் கடவுள் ஏன்தான் இப்படி பண்ணுகாரோ... பிள்ளை கிளி மாதிரி இருக்கு. நமக்கு பார்த்தாலே பாவமா இருக்கு... வார்த்தையில் ஆசுவாசம் காட்டினான் மணியன்.
இங்க வரதுல யாருதான் பாவம் இல்லை... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு... பரிதாபப் பட்டுக்கொண்டே அவ்விடம் நகர்ந்தாள் வள்ளியக்கா.
சுற்றி ஆளற்ற நிலையில் திரும்பி ஆத்மீகாவைப் பார்த்தான் மணியன். புரண்டு படுத்ததில் கைக்கெட்டும் தூரத்தில் அவள் உடல் இருக்க, தொடர்ந்து வரைச்சலின் கர கர சப்தங்கள். ஆர்வம் மேலிட சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளை நெருங்கினான் மணியன். அவளோ வரைந்த மனித உருவத்தின் கழுத்தை கல்லால் அறுத்துக் கொண்டிருந்தாள்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் இயற்கையோடு இயைந்தவர்கள். நாற்றம் பிடித்த மனித வர்க்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். லீ சாட்லியரின் பௌதீக விதியான "அதிகபட்ச உந்துதலை சமாளிக்கும் பொருட்டு இயற்கை தன்னை தானே சமன் செய்து கொள்ளும்" என்பதை மனரீதியாக உணர்ந்தவர்கள். வாழ்ந்த வாழ்க்கையின் ஏதோவொரு கணத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உந்துதலை சமாளிக்கும் பொருட்டு, இயற்கையோடு மனதினை சமன் செய்தவர்கள். ஆத்மீகா அப்படிப் பட்டவள். அப்பா இல்லாத அழகான பெண். வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடித்தவள். கேன்சரில் துயருறும் அம்மாவின் வேதனையை கண்டு, கண்ணீர் விட்டவள். வாழ்ந்து விட எத்தனித்து எத்தனித்து எது வேண்டுமென்றாலும் செய்யத் துணிந்தாள். உடல் எடுத்த முடிவுக்கு மனம் ஒத்துழைக்க மறுத்தது. துயரங்கள் துரத்தி அடிக்கும் போது, சிறுபெண்ணால் என்ன செய்ய முடியும். பெரும் புயலில் சிறுகுருவி எப்படி பிழைக்கும். மன அழுத்தத்தில், அதன் விரக்தியில் இன்று மயங்கி, கிறங்கி கிடக்கிறாள். மனநிலை பாதிக்கப்பட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவளோ... எண்ணவோட்டத்தில் மனிஷியாகவும், இயற்கையாகவும் மாறி மாறிப் பறக்கிறாள். விரக்தியில், பயத்தில் தன்னை பார்க்கும் மனிதர்களை "அசாத்திய திமிரோடு" கேலி செய்கிறாள். அவர்களைப் பார்த்துப், பார்த்துச் சிரிக்கிறாள். பார்த்து சலித்த மனித உருவங்களை ஓவியமாக்கி பின் அதை அழிக்கிறாள். ஓவியம் படைக்கிறாள். பின் அழிக்கிறாள். படைத்தலும், அழித்தலும் "என்வசம்" என்கிறாள். இயற்கை எய்தினார், இறைவனோடு கலந்தார் என்று நாம் இறப்பை அழைக்கிறோமோ, அந்த "இறப்பை" உயிரோடு இருக்கும்போதே உணர்ந்தவர்கள் ஆத்மீகாவைப் போன்ற மனநிலை நோயாளிகள்.
மணியனுக்கு எலிப்பொறியில் இருக்கும் தேங்காய் துண்டாய் தெரிந்தாள் ஆத்மீகா. கடிக்கவும் வேண்டும், அகப்படவும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் மணியன். சுற்றும் முற்றும் ஆளில்லாததை உறுதி செய்து, மீண்டும் அவள் சுற்றம் அமர்ந்து முதுகை தடவினான். இம்முறை பட்டென்று வரைவதை நிறுத்தி அவன்பால் திரும்பினாள் ஆத்மீகா.
அசட்டு சிரிப்புடன் "உன் பெயரென்ன" - வென்றான்.
ஆத்மீகா புன்னகைத்தாள்.
அவள் சரீரம் தடவிக்கொண்டே, பயப்படாத... நான் உன்னை பாத்துக்கிடுகேன் - என்றான் மணியன்.
ஆத்மீகா மீண்டும் புன்னைகைத்தாள்.
முதுகின் வழி கழுத்தில் ஏறி காதுமடலில் விரலை நிறுத்தி இதமாக சுழற்றினான் மணியன். ஆத்மிகாவின் உடல் குறுகுறுப்பில் ஏராளமான உணர்வுப்புள்ளிகளை உண்டாக்கியது. பட்டென்று எழுந்தமர்ந்து சுவரில் சாய்ந்து புன்னைகைத்தாள்.
கண்ணுக்கெட்டியது கைக்கெட்டாத பதட்டத்தில் அவள் முகம் பார்த்து புன்னைகைத்தான் மணியன். முன்பக்க மார்பு வெளி தெரிய ஒருக்களித்து அமர்ந்தாள் ஆத்மீகா. முகமெங்கும் ஒரு மந்தகாச புன்னகை. நகர்ந்த வேண்டிய விதத்தில் நகர்த்தினால் "இந்த அம்மியை" கண்டிப்பாக நகர்த்திவிடலாமென்ற நம்பிக்கை மணியனிடம் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும், வெண்டைக்காயை ஒத்த அவள் விரல்களை பற்றிப்பிடித்து நீவிக்கொண்டே, அவளிடம் பேச்சு கொடுக்க முயன்றான்.
பயப்படாத... பாப்பா... நான் ஒன்னைய ஒண்ணும் செய்ய மாட்டேன் - என்றான்.
ஆத்மீகா பயப்பட்டதாய் தெரியவில்லை. குழைவான ஒரு புன்னகையுடன், சரிவான வளைவுகளை கொண்ட உடல் குலுக்கி அவனை எதிர்கொண்டாள்.
மணியனும் காமம் கொப்பளிக்க சிரித்துக்கொண்டே "நீ நல்ல பாப்பா ... உனக்கு என்ன வேண்டுமென்றான்..."
அவள் புன்னகை ஒன்றே பதிலாய் தந்தாள்.
சொல்லு... உனக்கு ஏதாவது வேணுமா?- மீண்டும் கேட்டான் மணியன்.
உடல் குழைந்து, புன்னகையோடு முதன்முறையாக ஒரு மறு பதில் தந்தாள் ஆத்மீகா.
என்ன தருவ? - பெட்டைக் கோழியின் குரலைப் போல் லேசான ஒரு கரகரப்பு அவள் மொழியில்.
என்ன வேணாலும்... !
என்ன வேணாலும்னா?
என்ன வேணாலும்ன்னா... என்ன வேணாலும்... ! - ஆர்வம் கொப்பளிக்கப் பேசினான் மணியன்.
கீழுதட்டை நாக்கால் ஈரம் செய்து கொண்டு, அசையாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆத்மீகா.
உனக்கு எதாவது சாப்ட வேணுமா?
இம்ம்...ஹூம்... - இல்லையென்று முகமசைத்தாள்.
அப்ப, யாருக்காவது போன் பேசணுமா, இன்னா பார்த்தியா போனு? - அவன் கைபேசியை காண்பித்தான்.
இம்ம்...ஹூம்... இல்ல... - முகத்தோடு உடலசைத்தாள்.
படம் வரைய பென்சில், நோட்டு ஏதாவது?
இல்ல வேண்டாம்... - என்று கூறி புன்னைகைத்தாள்.
சிறிதான யோசனைக்கு பிறகு "அப்ப கஞ்சா, போதை மாத்திரை மாதிரி ஏதாவது வேணுமா, எல்லாம் நம்ம கைவசம் இருக்கு? - பெரிதாக இளித்தான் மணியன்.
ஏதோ யோசனையோடு அதெல்லாம் வேண்டாமென்று மௌனமாக தலையசைத்தாள் ஆத்மீகா.
வேற என்னதான் வேணும் உனக்கு? - ஆர்வ மிகுதியில் பேசினான் மணியன்.
சிறிதான பெருமூச்சோடு, "வேற என்ன தருவ..." என்று முன்பக்க திரட்சிகளை அசைத்து, மெதுவாக புன்னகைத்தாள் ஆத்மீகா.
அவள் நெஞ்சு மேட்டிலிருந்து பார்வையை எடுக்காமல் , ஊறிய எச்சிலை தொண்டைக்குள் விழுங்கி, ஆர்வம் மேலிடக் கேட்டான் மணியன்.
வேற என்னதான் வேணும் உனக்கு?
உதட்டை உணர்ச்சி ததும்ப சுழற்றி, "ஒரே ஒரு தடவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவியா, எனக்கு அம்முவ பாக்கணும்?" - என்றாள் பரிதாபத்துடன்.
அம்முவா?
ஆமா.. - சொல்லும்போதே அவள் கண்களில் அன்பின் பாரம்.
யாரது... உன் அம்மாவா?
அம்மா இல்ல... - தலையை தரை நோக்கித் சாய்த்தாள்.
வேற யாரு... - ஆச்சர்ய கேள்வி எழுப்பினான் மணியன்.
நாய்க்குட்டி... என் செல்லக்குட்டி... - உணர்ச்சி கொந்தளிப்பிலிருந்தாள் ஆத்மீகா. கண்களில் கண்ணீர் கோர்த்து, நேரான கோடாய் வலது கன்னத்தில் மட்டும் வழிந்தது.
அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான் மணியன்.
ஏய்...அழாத... அம்முவ உனக்கு அவ்வளவு புடிக்குமா? - கொஞ்சும் குரலில் கேட்டான் மணியன்.
ஆமா... ரெம்ப...- சொல்லும் போதே கண்களை கடந்த கண்ணீரின் துளிகள் கன்னம் கடந்து, மார்பை நனைக்க ஆரம்பித்தது.
சரி... அழாத... நான் வேணா நாளைக்கு அம்முவ மாதிரி ஒரு நாய்க்குட்டி கொண்டு வரவா? - அவள் மாரழகை கண்களில் நிலைநிறுத்தி சொன்னான் மணியன்.
ம்ம்...ஹூம்... எனக்கு அம்மு தான் வேணும்... - சற்று சப்த அழுகையோடு சொன்னாள் ஆத்மீகா.
நீ அழாத... நீ அழுதா... நான் போயிருவேன்...-என்றான் மணியன்.
ப்ளீஸ்... ஒரு வாட்டி...ஒரே ஒரு வாட்டி அம்மூட்ட கூட்டிட்டு போவியா...- அதிகாரத்தோடும், சட்டென்று வெடித்த, உரத்த அழுகையோடும் கேட்டாள்.
சட்டென்ற பதட்டத்தில் "அம்மாடி... அது நடக்காது..." - என எழுந்தான் மணியன்.
அப்ப நீ நினைக்கிறதும் நடக்காது... - என்று முன்பக்க மார்புக் காட்சியை கைவிரல்களால் மூடி மறைத்து கண்ணீரோடு புன்னைகைத்தாள்.
மணியனால் அதன் பின்பு அங்கு நிற்க இயலவில்லை. இவளுக்கு பைத்தியமா? இருக்காது. தெளிவாக பேசிகிறாளே... நான் அவளிடம் வேண்டுவதை சரியாக புரிந்து கொள்கிறாளே... இவளா பைத்தியம்... கண்டிப்பா இருக்காது. "இவள நம்புனா... உம்பாடு அம்பேல்தான் மணியா" - என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். விறு விறுவென நடந்தாலும் மீண்டும் மீண்டும், அவளின் உடல் செழுமை கண்ணின் முன்பு ஓவியமாய். "சே... என்னா அழகா இருக்கா" - மனதிற்குள் ஆசுவாசப்பட்டான். "போயும் போயி, நாய பாக்கணும்னு சொல்லுகா... புத்தி கெட்ட மூதி... பைத்தியாரா இளவுதான்..."- சட்டென்று மனம்மாறிய மணியனின் மனசாட்சியின் குரல். லேசாகக் குழம்பி, சிறிது தூரம் சென்று திரும்பி அவள் அறையை பார்த்தான். மார்புகள் குலுங்க மீண்டும் சுவரில் கிறுக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.
பெரிதான ஆரவாரம் ஏதுமில்லாமல் மூன்று நாட்கள் கழிந்திருந்தது. இரண்டு நாட்களாக சுமித்ராவின் குழந்தையின் அழுகை மட்டுமே மொத்த காப்பகத்தையும் ஆக்ரமித்திருந்தது. அவளை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றியதால் அந்த சப்தமும் இன்று இல்லை. இயல்பான வழக்கமான ஒலியலைகள் காற்றெங்கும். யாருக்கும் சந்தேகம் வராதபடி, குட்டி போட்ட பூனையாய் ஆத்மீகாவின் அறையை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான் மணியன். இரண்டொரு முறை அவளிடம் பேச்சு கொடுக்க முனைந்த போது அவள் மனித உருவங்கள் வரைந்து கொண்டிருந்தாள். சில நேரங்களில் அவன் பார்க்க வேண்டுமென்பதற்காகவே, மார்பு தரிசனம் காட்டியது போலிருந்தது. முந்தாநாள் இரவில் ஒருமுறை அவனையழைத்து அம்முவை பாக்கணுமென அழுது, கெஞ்சினாள். அதன் பின்பு மீண்டும் படம் வரைச்சல். சில நேரங்களில் எதற்கும் தயாரென்ற உடல்மொழியில் மணியனை பார்த்து ஒரு குழைந்த புன்னகை. கோகிலா டாட்டர் அவள் இயல்பு நிலைக்கு திரும்புவதாக பேசிக் கொண்டார்கள். மணியனோ பெருங்குழப்பதில் இருந்தான்.
ஆத்மீகாவின் பேரழகு அவனுள் பெரும் காமத்தை விதைத்திருந்தது. தன் வாழ்நாளில் இப்படியொரு பெண் தனக்கு கிடைக்க மாட்டாளே என மனதிற்குள் பொருமினான் மணியன். ஆத்மீகாவின் வீட்டுக்கு அவளை கூட்டிச் சென்றால்தான் என்ன... வேறெங்கும் இல்லையே... பெரிதாக என்ன நடந்து விட முடியும்... ஏதாவது பிரச்சனையெனில் நோயாளி மனநிலை காப்பகத்திலிருந்து தப்பி விட்டார்... அவ்வளவுதான்... தலை போகிற காரியமா, என்ன?... இதற்கு முன் எத்தனை முறை நடந்திருக்கிறது. மொத்த காப்பகத்திற்கும் ஒரு காவலாளி போதாதென்று சூப்பர்வைசர் முருகன் எத்தனை முறை அதிகாரிகளிடம் பேசியிருப்பார்... "பாவம், மணியன் ஒத்த ஆளா கிடந்து கஷ்டபடுகான்னு, எல்லோருக்கும் முன்னால் வச்சு பாராட்டினாரே". சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. எப்படியும் தப்பித்து விடலாம் - என்ற உறுதி அவன் மனமெங்கும்... கடைசியில் அந்தக்குரங்கு அந்த பூமாலையை எப்படியும் கசக்கி விடத் தீர்மானித்திருந்தது.
காமம் ஒரு மனிதனை என்னபாடு படுத்துகிறது. என்ன மாதிரியான எண்ணவோட்டங்களையெல்லாம் ஏற்படுத்துகிறது. உறக்கம் விழித்ததும் ஏதோ ஒன்றை நோக்கி நகரத்தொடங்கும் உயிரிகளை நினைத்துப் பாருங்கள். உணவைத் தேடும் ஓட்டமது. உணவு கிடைத்த அடுத்த மாத்திரத்தில் துணையைத் தேடும் ஓட்டம். பின்பு மீண்டும் உணவை தேடும் ஓட்டம். பின்பு மீண்டும் துணையை தேடும் ஓட்டம். பெரிதான திட்டமிடுதலும் சேமிப்பை பற்றிய கவலையும் இல்லாத எல்லா உயிர்களின் கூட்டு வாழ்க்கைமுறை இதுதான். இயற்கை பணித்த திட்டம் இதுவே. ஆனால் மனிதன் என்ற உயிருக்குதான் எத்தனை விதமான தேடல்கள். இயற்கையினுடையது என்றிருந்ததை என்று, என்னுடையது என்று எண்ணினானோ அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை. என் மண் இது, என் பெண் இது, என்று இயற்கையைப் பழித்த அந்த நிமிடத்திருந்து ஆரம்பிக்கிறது இன்று வரை நாம் காணும் அத்தனை பிரச்சனைகளின் ஆணிவேர்.
ஏதாவது வில்லங்கமாகிவிடப்போகிறது என சில நேரங்களில் ஆசையை விடுத்தான் மணியன். மீண்டும் எதிர்பாராத ஒரு பொழுதில் ஆத்மீகாவின் உணர்வுக் கெஞ்சல்கள். அவளுக்குள் இருக்கும் மானசீக பிரச்சனையின் வலிமையை டாக்டர் கோகிலாவை விட மணியன் வெகுவாக உணர்ந்திருந்தான். நடப்பதெல்லாம் நடக்கட்டும். அவள் கேட்ட மாதிரி அவளை அவள் வீட்டுக்குச் கூட்டிச்சென்று விட, சனிக்கிழமை இரவை தேர்ந்தெடுத்திருந்தான் மணியன். உண்மைதான்... சனிக்கிழமை இரவே சரியான நேரம். ஞாயிறு விடுமுறை என்பதால் சனிக்கிழமை சாயங்காலம் தொட்டு, ஞாயிறு காலை பதினோரு மணிவரை மொத்த காப்பகமும் மணியனின் கட்டுப்பாட்டிலிருக்கும். சனியிரவு எட்டு மணிக்கு கிளம்பினால், எப்படியும் பத்து மணிக்கு முன்னால் வந்து விடலாம். வெறும் அரைமணிநேர இருசக்கர வாகனப் பயணம். அவள் இவ்விஷயத்தில் தெளிவாக இருக்கிறாள். இதை முடித்துக் கொடுத்தால் எப்படியும் ஆசைக்கு இசைவாள். அப்படி நடக்காவிட்டால் ஒரு பைத்தியத்தின் ஆசையை நிறைவேற்றிய "புண்ணியக் கணக்கில்" இச்செயல் சேரட்டும் - என எண்ணினான். பலவித எண்ணவோட்டத்தில் முடிவெடுத்த மணியன், அதற்குரிய முன்னேற்பாடுகளில் மும்முரம் கட்டினான். காப்பகத்தின் எல்லா இடங்களையும் நோட்டம் விட்டு, எப்படி, எந்த நேரத்தில், எவ்விடம் வழியாக வெளியேற வேண்டும், எப்படி மீண்டும் வர வேண்டுமென, என எல்லாவற்றையும் திட்டமிட்டான்.
****
தீர்மானித்த படி ஆத்மீகாவை வீட்டில் விட்டு விட்டு சற்று தூரத்தில் காத்திருந்தான் மணியன். திட்டமிட்டபடியே எல்லாம் நடந்திருந்தது. சரியாகச்சொன்னால் அதைவிட சிறப்பாக. சொன்ன நேரத்தில், சொன்ன இடத்திற்கு திரும்பி வந்திருந்தாள் ஆத்மீகா. யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க காப்பகச் சீருடையின் மேல்புறம், மணியனின் முழுக்கை பனியனைப் போட்டிருந்தாள். மணியனுக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.
அம்முவ பார்த்தியா? வண்டியில் அவசர அவசரமாய் ஏறிக்கொண்டே கேட்டான் மணியன்.
ஆமாம் என்று தலையசைத்து வண்டியின் பின்னமர்ந்தாள்.
அம்மா பாக்கல?
அம்மா வெளிய வரமாட்டாங்க... கேன்சர் வலியினால, எப்பவுமே படுத்த படுக்கைதான்.- தெளிவாகப் பேசினாள்.
உண்மையில் இவளுக்கு பைத்தியம் தானா? இல்லை நடிக்கிறாளா? - மனதிற்குள் குழம்பிக்கொண்டே காப்பகத்தை நோக்கி வண்டியை விரட்டிக் கொண்டிருந்தான் மணியன். ஆத்மீகா ஆணின் ஸ்பரிசத்திற்கு ஏங்கியது போல் அவனோடு ஒட்டியிருந்தாள். அவள் நெஞ்சின் கனங்கள், முதுகில் பாய மும்முரமாய் வண்டியோட்டிக்கொண்டிருந்தான் மணியன். காப்பகத்தை அடையும் பரிதவிப்பு பெரும் பாடாய் படுத்தியது. ஒன்பது நாற்பதெற்கெல்லாம் காப்பகத்தை அடைந்திருந்தனர். காப்பகம் முழுதும் மயான அமைதி. மணியன் நிம்மதி பெரு மூச்சு விட்டான். செல்போனை எடுத்து சூப்பர்வைசர் ஏதும் அழைத்திருக்கிறாரா என்று நோக்கிக் கொண்டே, ஆத்மீகாவின் அறையை நோக்கி நடக்கலானார்கள் இருவரும். அறைக்கு அடுத்து வந்ததும் இவன் எதிர்பார்க்க ஒரு கணத்தில் அவனை வாரியணைத்து முத்தமிட்டாள் ஆத்மீகா. எதிர்பாராத அணைப்பில் சற்று தடுமாறிவிட்டான் மணியன். பயத்தில், வெட்கத்தில், பூரிப்பில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.
"மொதல்ல உள்ள போ... வரேன்... வரேன்... கொஞ்ச நேரத்தில் வரேன்... இந்த முழு ராத்திரியும் நம்மளுக்குதான் - என்று அவளை அறைக்குள் செலுத்தி அவசரமாக கதவை மூடினான் மணியன். உடம்பெங்கும் கிளர்ச்சிபொங்க, காப்பகத்தின் மற்ற எல்லா பிளாக்கையும் சுற்றி நோட்டமிட்டான். ஒரு பதினோரு மணிக்கு மேல் "பணி"-யை ஆரம்பிக்கலாமென முடிவு செய்திருந்தான். என்ன அவசரம். கஷ்டமான காரியம் எல்லாம் சிறப்பாக செய்தாயிற்று. இனி பயமின்றி அவளை பருகித் திளைக்கலாமென, பற்பல எண்ணவோட்டங்கள் அவன் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
மணி பதினொன்று பத்து ஆகியிருந்தது. உடம்பெங்கும் காமம் பீறிட, ஆத்மீகாவின் அறைக்கு வெளியே நின்றிருந்தான் மணியன். வெளிப்பக்க லைட்டை அணைத்திருந்தான். மணியனின் பனியனோடு தரையில் "பூக்குவியலாய்" குவிந்து கிடந்த ஆத்மீகா, அவள் வரைந்த அம்மு, அம்மாவென்ற வார்த்தைகளை தடவிக் கொண்டிருந்தாள். பூட்டை திறந்து பின்பக்கமாய் அவள்மேல் படர்ந்தான் மணியன். சட்டென்று திரும்பிய ஆத்மீகாவும் புன்னைகைத்து அவனை அணைத்துக் கொண்டாள். பூசு பூசுவென்றிருந்த அவளை பூதமாய் நசுக்க தொடங்கினான் மணியன். உணர்வு தத்தளிப்பில் அவள் உடைகளை களைய முற்பட்டு, அந்த பனியனை கழற்றினான்.
உள்நாக்கில் தேள்கொட்டியது போல், பின்முதுகில் ஆணியறைந்தது போல் "பேரதிர்ச்சி". வெள்ளைநிற காப்பக சீருடை முழுதும் குவியல் குவியலாய் ரத்த துளிகள். காய்ந்த இரத்த தீட்டல்கள்.
உடம்பெங்கும் பதட்டம் பற்ற "உதறி" "பதறி" எழுந்து வெளியே ஓடினான் மணியன். எந்த வித அதிர்வுமில்லாமல் அவன் செய்த செய்கையில் மயங்கி, கிறங்கி கிடந்தாள் ஆத்மீகா.
பதட்டம் தணிந்து, தன்னிலை திரும்ப சில நிமிடங்கள் ஆகியது. என்ன நடந்திருக்கும்? மூச்சு இன்னும் சீராகவில்லை. என்னதான் நடந்திருக்கும்? நடந்தவைகளை நினைவுபடுத்த முயற்சிக்கையில், அவன் செல்போன் வீறிட்டு அலறியது. சூப்பர்வைசர் முருகனிடம் இருந்து அழைப்பு.
மணியா... எந்த ப்ளாக்குல நிக்க...
B ப்ளாக்குல ணே... இந்த நேரத்துல கூப்டிருக்கீங்க? - பயத்தை வெளிக்காட்டாமல் பேசினான்.
அங்கதான் வந்திட்டு இருக்கேன்... அந்த A பிளாக் புது பேசியென்ட் ஆத்மீகாவ வெளிய கூட்டிட்டு போக வேண்டியிருக்கும்... போலீஸ் கொஞ்சம் விசாரிக்கணும்னு சொல்லுகாங்க
ஏன்... என்னாச்சு ணே...
அந்த பிள்ளைக்கு அம்மைய யாரோ கழுத்தறுத்து கொன்னுட்டாங்களாம்...
சப்த நாடிகளும் அடங்க, "பொத்தென்று" மண்ணில் விழுந்தான் மணியன்.
தூரத்து சர்ச்சின் ஒலிப்பெருக்கியில் அந்த வாசகங்கள் கேட்டுக்கொண்டிருந்தது.
"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்."
மத்தேயூ - அதிகாரம் 5

1 கருத்து:

Thanks