வியாழன், 5 செப்டம்பர், 2019

உலக்கருவி

உலக்கருவிக்கு போகலாமென உத்தமன் சொன்ன போது, மற்ற இருவரும் ஒத்துக் கொண்டனர். ஆதிக்கென்னவோ ஆலகால விஷத்தை அருந்த சொன்னது போலிருந்தது. பயத்தை வெளியில் காட்டாமல் "அங்க வேண்டாம் டே... நடக்க முடியாது" என்று பட்டென்று எதிர் வாதம் வைத்த போது, கிருபா இடை மறித்து சொன்னான். "சூப்பர் பிளேஸ்டே ... அங்கயே போலாம்.. போய்.. கொஞ்ச நாள் ஆச்சு."- என்றான். ஆதிக்கு தீக்கங்கை நெஞ்சுள் வைத்து தைத்தது போல் , "திக்"கென்றிருந்தது. அடிவயிற்றில் "ஏதோ" உருளுவது போன்ற பய அடையாளம்.
மற்ற நண்பர்களின் சம்பாஷணைகளுக்கு, பதிலேதும் பேசாமல், குடித்துக் கொண்டிருந்த பீரின் மீதியை தொண்டைக்குள் ஊற்றினான் கண்ணன். "லேய்.. கண்ணா ... நீ என்ன சொல்லுக...உலகருவிக்கு போவோமா.. எப்படி.? மீண்டும் கேள்வியை உத்தமன், கண்ணனுக்குள் திணிக்க, அரை போதையில் "சரி டே... அங்கயே போவோமென" - பதிலுரைத்தான் கண்ணன். "லேய்... ஆதி... எல்லாருக்கும் ஓகே வாம்.. உனக்கு மட்டுமென்ன,,, பேசாம வாடே"- என்று வற்புறுத்தினான் கிருபா.
போதை சூட்டில், ஏதோ ஒரு நினைவிலிருந்தான் ஆதி. உலக்கருவியை பற்றி நெஞ்சுக்குள் பதிந்த விஷயங்கள் ஆதியின் மூளையை ஆக்ரமித்திருந்தன. ஒரு பௌர்ணமி நாளில், பனிரெண்டாம் வயதில், ரத்தம் சூடேற அனுபவித்த அந்த துர் நிகழ்வுகள், முற்றித் திரண்ட வாழைமரத் தண்டை போல், பளபளப்பான, அருவியில் நனைந்த அந்த பெண்ணின் சந்தன நிறக் கால்கள், கூடுதலாக கருமை பூசிய அவளின் கண்கள், பின்புறமாய் நின்றிருக்கும் பூணூல் தறித்த அந்த பூசாரியின் முதுகு, அருவி நீரில், ஆர்ப்பரித்து விழும் தாம்பாளத் தட்டுகள் மற்றும் அருவிநீரில் சிதறி கலக்கும் ரெத்த சிவப்பு நிற மஞ்சணைகள், ஆணுறுப்பில் அடிபட்டு ஓடும் காளையை போன்ற அந்த பாலகனின் ஓட்டம். என மறந்தும் மறக்காமலும், தெரிந்தும் தெரியாமலும் சில நிகழ்வுகளின் "கூட்டங்கள்" ஒன்று மாற்றி ஒன்றென மனக்கண்ணில் காட்சிகளாய்.
மெதுவாக எழும்பி நின்று கை, காலை நீட்டி மடக்கினான் ஆதி. திருப்பதிசாரத்திலிருந்த உத்தமன் வீட்டு மொட்டைமாடியில் குளிர்காற்று சல சல வென வீசியது. முன்னிரவை கடந்த ஜாம நேரம். தொலைதூரத்தில் பெருத்த முலையுடன் படுத்துக்கிடக்கும் அரக்கி பெண்ணாய் "தாடகை மலை" காட்சியளித்தது. ஊருக்குள் ஆங்காங்கே நடப்பட்டிருந்த "சோடியம்" விளக்குகள், நல்லெண்ணை கலரில் ஒளிபரப்ப, இரவின் கருப்பும், மஞ்சள் ஒளியும் சேருமிடங்களில் "டின்டால் விளைவினால்" ஏற்பட்ட தூசுகளின் ஒளிச்சிதறல்கள். கூப்பிடும் தூரத்தில் தெரிந்த திருவாழிமார்பர் சந்நிதியின் கோபுர மேற்புறத்தில் இணை சேர்ந்த புறாக்களின் ரீங்காரம். தெருவின் சில பகுதிகளில் மார்கழிக் குளிரில் ஊளையிட்டு, உந்தி இணையும் நாட்டு நாய்களின் காம சேட்டைகள். அருகம்புல் சாரைப்போன்ற, பச்சை பசேலென பாசிமண்டிய கோவில் தெப்பக்குளதண்ணீர், சுற்று சுவர் மதிலோடு "அலம்பும்" ஓசை. அட்டை கருப்பு இரவு அழகுதான். ஆடியோடும் உயிர்கள் அனைத்தையும், அசையாமல் துயிலச் செய்யும், அனைத்து இரவுகளும் அழகுதான். எழும்பி நிற்கும், ரோட்டு தாரென பரவி நிற்கும் "இரவின் கருப்பை" போதையில் ரசித்தான் ஆதி.
மனம் ஒருவாறு இல்லாது பலவாறு சிந்தித்தது. பெரும் போதையோடு சொந்த ஊரில் நண்பர்களோடு இருப்பது என்பது பெரும்பேராகத் தோன்றியது . இடைவிடாத சென்னை வாழ்வின் நெருக்கடியில், ஆண்டொண்டுக்கு அனுபவிக்கும் இந்த விடுமுறை நாட்கள்தான், அவன் மனதிற்கு இதமான ஆறுதல். ஆத்ம சுகமும் கூட.
"லேய் ஆதி... காலைல உலக்கருவிக்கு போமா? எப்படி? என்று மீண்டும் பேச்சை தொடர்ந்தான் உத்தமன். ஏதோ ஒரு நினைப்பில், அங்கு அவனுக்காக ஜென்ம ஜென்மமாய் காத்திருக்கும் விபரீதம் பற்றித் தெரியாமல், சரியென்று தலையசைத்தான் ஆதி.
பேசிய படி காலையில் இரண்டு பைக்கில் நண்பர்கள் நால்வரும் கிளம்பி, தாழக்குடி, பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், பெருந்தலைக்காடு தாண்டி உலக்கருவியிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை கீழ்முகடை வந்தடைந்தனர். அருவிக்குளியல் கொண்டாட்டத்த்திற்கு தேவையான மது, மற்றும் உணவுப் பதார்த்தங்களை திட்டுவிளையில் வாங்கியிருந்தனர். தோவாளை கால்வாயை கடந்த பின்பு ஐந்து கிலோ மீட்டர் தூரம் வாகனமேதும் செல்ல முடியாத, கடுமையான மலைப்பாதை. அரசியல்வாதிகளாலும், தொழிலதிபர்களாலும் கவனிக்கப்படாத இடமாகையால், காணும் இடமெல்லாம் இயற்கையன்னையின் ஆசீர்வாதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சைன்னா பச்சை அப்படி ஒரு பச்சை. மலைமகளின் மார்புப்பாலென தெளிந்த நீரோடை. தாராளாமாய் தலைசீவி, முகம் பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவு சுத்தம், தூய்மை. தண்ணி ஓட்டத்தில் உருண்ட படிவுப் பாறைகளின் குவியல்கள். குளித்த பெண்ணுடம்பை அணைக்கையில் உணரும் "அதே குளிர்", நனைந்த பாறைகளை தொடுகையில்.
வானுயர வளர்ந்து நிற்கும் தேக்கு, ரப்பர், வாகை, ஈட்டி, சந்தன, மஞ்சணத்தி, கொல்லா பழ மரங்கள். காற்றில் லேசான தேக்கம்பூவின் மணம். ரப்பர் மரத்தின் அடித்தண்டில், ரப்பர் பாலுக்காக கரம் நீட்டி காத்திருக்கும் "தேங்காய் சிரட்டைகள்". மண் தெரியாத அளவிற்கு, இலை மூடிய நிலப்பரப்பு. அரிதாய் கேட்கும் மனித காலடி ஓசைகளில் பயந்து, தெறித்தோடும் ஊர்வன மற்றும் பறப்பன. மலைகளின் காடு, ஒரு புது வினோத உலகம் . அந்த புது உலகத்திலிருந்தனர் நண்பர்கள் நால்வரும்.
மலைப்பகுதியில் நடக்க ஆரம்பித்த பதினைந்து நிமிட நடையிலேயே ஆதிக்கு சிறுவயதில் ஏற்பட்ட "அந்த உணர்வு" இப்போதும் ஏற்பட்டது. அந்த ஆடையில்லாத பெண், அந்த பூசாரி, அந்த பாலகன் என மீண்டும், மீண்டும் அதே மாதிரியான நினைவுகள். தன்னை யாரோ கவனிப்பதாய், பின் தொடர்வதாய் ஒரு "தோணல்". இந்த நினைவுகளுக்கு காரணகர்த்தாவான, தன்னுடைய தாத்தா அகஸ்திலிங்கம் பிள்ளையை நினைத்துக் கொண்டான் ஆதி.
ஆதியின் தாத்தா அகஸ்திலிங்கம் பிள்ளை அழகியபாண்டியபுரத்துக்காரர். ஒவ்வொரு பௌர்ணமியின் போது, பின்னிரவின் அதிகாலையின் பிரம்ம முகூர்த்தத்தில், உலகருவிக்குள் இருக்கும் அகத்தியர் கோவிலுக்கு "யட்சி" பூஜைக்காக செல்வதுண்டு. பௌர்ணமியன்று யட்சியின் கட்டுப்பாட்டிலிருக்கும் அந்த மலைக்கு செல்ல அகஸ்திலிங்கம் பிள்ளையை தவிர யாருக்கும் துணிவில்லை. துணிந்து சென்றவர்களுக்கு, திரும்பி வருகையில் உயிரில்லை.
மற்ற நாளில் சாதாரண மனிதனாய் வாழும் அகஸ்திலிங்கம் பிள்ளை, பௌர்ணமி நாளில் உக்கிரமாகிவிடுவார். வெளியூர் சென்றாலும், உடல் நிலை சரியில்லையென்றாலும், புயலோ, மழையோ எதுவென்றாலும், ஒவ்வொரு பௌர்ணமியன்றும் "யட்சியின் ஈர்ப்பு" அவரை விட்டு வைப்பதில்லை. ஆக்ரோஷம் பொங்க, பௌணர்மி நாளில் அவரை ஈர்க்கும் உலக்கருவி. அவர் குடும்பத்தினருக்கு விளங்காத, அவருக்கும் புரியாத, அந்த புதிரான வழிமுறையிலிருந்து அவரால் வெளியேறவும் முடியவில்லை. நம்முடைய "சொம்மு" நம்மோடு போய்விடவேண்டுமென்பதில் மட்டும், உறுதியாக இருந்தார் அகஸ்திலிங்கம் பிள்ளை.
அவ்வாறு நெறிதவறாமலும், வழி தவறாமலும், முழுவிரதத்தோடும், மௌனத்தோடும் ஒரு பௌர்ணமியன்று அவர் கிளம்பும் போதுதான், பள்ளி விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த அவரின் மகள் பிள்ளை பேரன் ஆதி, தானும் வருவதாக அடம் பிடித்தான். அவன் அடம்பிடித்த அந்த கணத்தில், அவர் வீட்டிற்கு நேர் மேலே பறந்த பருந்திடமிருந்து சில சமிக்கைகள்உணர்ந்தார் அகஸ்திலிங்கம் பிள்ளை. அண்ணாந்து மேலே பருந்தை பார்த்த தாத்தா, கண்கள் மூடி சிறிது நேரம் நின்றிருந்தார். என்ன நினைத்தாரோ என்னவோ, பூஜை பொருட்களோடு, ஆதியையும் கூட்டி அகஸ்தியர் கோவில்நோக்கி நடக்கலானார்.
பௌணர்மி நாளின் நிலா பாலாய் பொழிந்துக் கொண்டிருந்தது. காலுக்கடியில் வந்து விழும், நிழல்களை மிதித்த படி, தாத்தாவும், பேரனும் உலக்கருவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியெங்கும் இயற்கையின் சப்தங்களை தவிர வேறெந்த ஒலியும் இல்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் இல்லை. நிதானமான நடை. புதுக்குளம் தாண்டி, சுடுகாட்டு சுடலைக்கோவிலைத் தாண்டி, பெருந்தலைக்காடு சாஸ்தா கோவில் தாண்டி, கால்வாய் விடுமாடன் கோவிலை தாண்டி காட்டுவழியில் நிதானமான நடை.
காட்டுஎல்லையில் கால் வைப்பதற்கு முன், மலையாற்றில் முங்கி எழுந்தார் அகஸ்திலிங்கம் பிள்ளை. கரையோரம் வளர்ந்திருந்த தர்ப்பை புல் பறித்து, பூணூல் கயிறாக்கி, அவரணிந்து, பேரனுக்கும் அணிவித்தார். காற்றை கிழித்துக் கொண்டு, "ஜெய் காளி" என்று நிலம் நடுங்க ஒரு சப்தம். அதுவரை அசாத்திய துணிச்சலோடு வந்த ஆதி, தாத்தா போட்ட சத்தத்தில் , அவர் முகத்திலிருக்கும் இதுவரை பார்த்திராத "தேஜஸில்" நடுங்கியே விட்டான். காட்டுப்பாதைக்குள் சிறுத்தையென வேகமாக நடக்க ஆரம்பித்தார் அகஸ்திலிங்கம் பிள்ளை. அவர் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஓட ஆரம்பித்தான் ஆதி. மனமெங்கும் பயமென்னும் "தீ".
உலகருவியை நெருங்கி கொண்டிருந்தனர் தாத்தாவும் பேரனும். காட்டு வழியின் ஆரம்பத்திலிருந்தே "அது" அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தது. மறைந்தும், தெரிந்தும் கூடவே வந்தது. ஆதியும் அதை உணர்ந்தான். சிலரை நேரங்களில் அது அவன் முதுகை தொட்டது மாதிரியிருந்தது. ஆனால் ஆதி திரும்பி பார்க்க வில்லை. தாத்தாவின் பூணூல் தரித்த முதுகை பின்பற்றியே நடந்தான்.
உலக்கருவியை அடைந்திருந்த போது, இருவரின் ஈர உடம்பும் காய்ந்திருந்தது. அகஸ்திலிங்கம் பிள்ளை அருவியில் மீண்டும் தலை நனைத்து, பூஜை பொருட்களை தாம்பாளத்தில் எடுத்துவைத்து, மனதிற்குள் மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அருவியின் உள்ளிருந்து அழகான ஒரு பெண்ணின் கால்கள். ஈரத்தில் பளபளக்கும் தொடைகள். அந்தரங்கங்கள், மார்பு பகுதியில் புகை மேகம் சூழ்ந்து, உடையாயிருக்க, தாமரை ஜோதியாய் ஒளிபரப்பும் அந்த முகம். கரும் மை சூழ்ந்த கண்களோடும், மந்தகாச புன்னகையோடும் வெளிவந்திருந்தாள் அந்த யட்சி. காற்றை கிழிக்கும் அளவிற்கு ஒரு சிரிப்பு அலறல். ஆதி பயத்தில் ஆடிப் போய்விட்டான்.
ஆக்ரோஷம் சற்றும் குறையாமல், யட்சியே, யட்சியே... என தாத்தா மனதிற்குள் மந்திரங்களாய் மூணு முணுக்க,
நடப்பது கனவா, நினைவா என்ற குழப்பத்தோடு, கண்கள் விரிய ஆதியும் எல்லாவற்றைடையும் பார்த்துக் கொண்டிருந்தான். காற்றில் மிதந்து, ஆக்ரோஷமாக பளிங்கு நிற கைகளை நீட்டிக்கொண்டே வந்தாள் யட்சி. அனாயசமாக, ஆர்வம் பொங்கி வந்தது அந்த யட்சியின் சிம்மக் குரல்.
உதிரம் தா...
உதிரம் தா...
உதிரம் தா...
உதிரம் தா..
உதிரம் தா.. - என்ற கட்டளையோடு.
சற்றும் பயப்படாத அகஸ்திலிங்கம் பிள்ளை பரவசத்தோடு தாம்பாளத் தட்டிலிருந்து மஞ்சணை எடுத்து கொடுக்க, யட்சி அதை நிராகரித்து, அதே வேண்டுதலோடு, ஆதியின் முன் கை நீட்டினாள்.
உதிரம் தா...
உதிரம் தா..
உதிரம் தா...
உதிரம் தா.. - என்ற வார்த்தை வந்து கொண்டேயிருந்தது.
அணு அணுவாய், செதில் செதிலாய் ஆடிப் போய்விட்டான் ஆதி. யட்சி ஆதியின் முன் ஏந்திய கைகளோடு நின்று கொண்டிருந்தாள். அகஸ்திலிங்கம் பிள்ளைக்கு நடக்கும் விஷயங்கள் மனசிலாகியது. தனக்கு பின், "பௌர்ணமி பூஜைக்கு" பேரனை தேர்வு செய்கிறாள் யட்சியென்று. ஒருக்காலம் அது நடக்க கூடாதென முடிவு எடுத்தார். ஆதி பயந்து,குழம்பி, வெகுண்டு, என்ன செய்வது என்ற திகைப்பில் இருந்த போதுதான் அகஸ்திலிங்கம் பிள்ளையிடமிருந்து அந்தக் குரல் வந்தது.
"ஆதி........ திரும்பி பாக்காமா ஓடுல.... என்ற ஆக்ரோஷ கட்டளை. தொடர்ந்து மொத்த பூஜை பொருட்களையும் அருவியில் வீசிக் கொண்டு ஓட ஆரம்பித்தார் அகஸ்திலிங்கம் பிள்ளை. மஞ்சணை விழுந்த அருவித் தண்ணீர, ரத்த பிரவாகத்துடன் ஓட ஆரம்பிக்க, ஆதியும் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓட ஆரம்பித்தான்..
என்ன நிகழ்ந்தது?
என்ன நிகழ்த்து கொண்டிருக்கிறது?
என்ன நிகழப்போகிறது? என எந்த நினைப்பும் ஆதியின் மனதில் இல்லை. ஓட்டம் ஒன்றே பிரதானம். தாத்தாவின் முதுகை நோக்கிய ஒரு ஓட்டம்... பத்து பதினைந்து நிமிட கடுமையான ஓட்டத்தில் வெகுவாக களைத்திருந்தான் ஆதி. மூச்சு முட்டுவதாக உணர்ந்த அந்த நேரத்தில்தான், தலையில் மரக்கட்டை ஓன்று மோத, களைப்புடன் கூடிய மயக்கத்திலானான் ஆதி.
கண்விழித்த போது அழகியபாண்டியபுரம் வீட்டிலிருந்தான் ஆதி. தாத்தாவின் "சொம்மை" தன் மீது இறக்க, "தெய்வம்" முயன்றதாக வீட்டுக்குள் பேசிக் கொண்டார்கள். யாரோ அவன் கைகளில் ஒன்றும், இடுப்பில் ஒன்றும் "செப்பு தாயத்து" கட்டியிருந்தார்கள். நடந்தவை எல்லாம் கனவு போல உள்ளதாக ஆதிக்கு தோன்றியது. மண்டையில் மரக்கட்டை பட்ட காயம் உண்மையாக இருந்தது. ஆதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அருவியை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போதே, பேச்சு ஸ்வாரஸ்யத்தோடு நடந்தவை எல்லாவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்தான் ஆதி. கண்ணன் சிறிதாக பயந்தது போலிருந்தது. கிருபாவும், உத்தமனும் சிரித்து உருண்டனர்.
"செம கதை... மச்சான்... சூப்பரு... வா... சட்டுன்னு நட... இன்னும் ஒரு முக்கா மணிக்கூர்ல போயிரலாம்... அருவிக்குள்ள அவ இருக்காளான்னு பாக்கலாம் - என்றான் உத்தமன்
"மாப்ள.. சின்ன பொண்ணுன்னு... சொல்லுக... ஆளு எப்படி இருந்தா" - என்று கிண்டல் அடித்தான் கிருபா.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. நால்வரின் கால்களும் நடந்து கொண்டிருந்தன. ஆதிக்கு அதே பிரமை. யாரோ பின்தொடர்வது போல். திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டான். கிருபாவும், உத்தமனும் கிண்டலடித்துக்கொண்டே நடந்து
வந்து கொண்டிருந்தனர்.
மேக்கோடு பள்ளம் தாண்டி, பன்றி பொத்தை ஏறி உலக்கருவியை நெருங்கிக் கொண்டிருந்தனர் நண்பர்கள் நால்வரும். தூரத்திலுள்ள "அருவியின் உறுமல்" அரைகுறையாய் கேட்க ஆரம்பித்திருந்தது. அகஸ்தியர் கோவில் எல்லைக்குள் புகுந்ததும், கூடுதலாய் ஒரு சப்தம், ஆதியின் செவிப்பறைக்குள் நுழைந்தது. மெலிதான ஒரு பெண்ணின் "ஹாஸ்ய" குரல். தூரத்திலிருந்து கூறுவது போல்..
உதிரம் தா...
உதிரம் தா..
உதிரம் தா...
உதிரம் தா..
கட்டுப்படுத்த முடியா பயத்துடன் ஆதி பேசினான்.
"லேய்... உங்களுக்கு ஏதாவது சவுண்ட் கேக்கா?"
"இல்லையே... யாம்ல?"
"எனக்கு கேக்கு... நான் சொன்னேம்லா.."
"சும்மா விளையாடாதல.."
"லேய்.... உண்மைல கேக்கு.. சொன்னா கேளுங்க போயிரலாம்.". - நாக்குகள் குழற பேசினான் ஆதி.
உத்தமனும், கிருபாவும்,
உதிரம் தா..
உதிரம் தா..
உதிரம் தா..
- என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். ஆதிக்கு பயமும், கோபமும் தலைக்கேற..
"இனி நான் வர மாட்டேன். வேணும்னா இங்க ஏதாவது ஒரு இடத்துல உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்புவோம்".
-- என்று உறுதியாக சொல்லி அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தான் ஆதி. விருப்பம் இல்லாமலிருந்தாலும், வேறு வழியில்லாமல் மரத்தடியில் உட்கார்ந்து அனைவரும் தண்ணியடிக்க ஆரம்பித்தனர். என்ன நினைத்தானோ என்னவோ ஆதி, மது வேண்டாமென்று கூறி சாப்பிட ஆரம்பித்தான். இடையிடையே காதுக்குள் அந்த பெண்ணின் குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது.
திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டான். போதையேறிய நண்பர்களிடமிருந்து, அளவுக்கு அதிகமான கிண்டல்களிள் ஆரவாரம்.
"அவள வர சொல்லுல... ஆதி..எனக்கு அவள பார்க்கணும்" - என்று கூறிச் சிரித்தான் உத்தமன்.
"மாப்ள..பாக்க மட்டும் செய்தா போதுமா?"- என்று மறு பதில் கூறினான் கிருபா.
எல்லாவற்றையும் கேட்டு போதையில் சிரித்துக் கொண்டிருந்தான் கண்ணன். சிறிது நேரத்துக்கெல்லாம் அருவியில் குளித்தே ஆக வேண்டுமென்று நண்பர்கள் மூவரும் அடம்பிடிக்க ஆரம்பித்தனர். வேண்டா வெறுப்பாக எல்லாவற்றை யும் கவனித்துக் கொண்டிருந்தான் ஆதி. நிலைமை எல்லை மீற, ஆதியை மரத்தடியில் இருக்க சொல்லிவிட்டு, அருவியில் குளிக்க சென்றனர் மூவரும்.
பயத்தின் பேயாட்டத்தில் உறைந்து போய், மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் ஆதி. பருந்து போன்ற பறவையொன்று அவன் தலை மேல வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கானகத்தின் அமைதி, சுற்றியிருக்கும் மரங்களின் அடர்வு, அருவியின் பேரிரைச்சல் என அத்தனையும் அவன் பயத்தைக் கூட்ட, யட்சியின் அமானுஷ்ய குரலும் அடிக்கடி காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நொடிகள் விழுந்து, நிமிடங்கள் நொறுங்கி நேரம் கடந்து கொண்டிருந்தது.
தீடிரென்று காற்றில் அந்த சிரிப்பின் ஒலி, யட்சியின் சிரிப்பு கர்ஜனையின் ஒலி. ஆதி பயத்தில் எழுந்து சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டான். அவன் தலைக்கு நேராய் பறந்த பருந்திடமிருந்து ஏதோ சில சமிக்கை மொழிகள். அதன் பின் எந்த அரவமும் இல்லை. அடிக்கடி காதில் கேட்டுக் கொண்டிருந்த அந்த "உதிரம் தா"-என்ற வார்த்தையும் கேட்க வில்லை. நண்பர்களை விடுத்து, வீட்டுக்கு போய் விடலாமாவென என்று யோசித்த அந்த கணத்தில், தூரத்தில் முகமெங்கும் பதட்டம் படற, சிங்கத்திற்கு பயந்த மானாய், கண்ணன் ஓடி வந்து கொண்டிருந்தான். ஆதியின் பக்கத்தில் வந்து, படபடப்பு அடங்காமல், அழுகையுடனும் பரிதவிப்புடன் பேச ஆரம்பித்தான்.
"லேய்... ஆதி.. பயக்கோ.. சொல்ல.. சொல்ல கேக்காம...அருவியிலேர்ந்து சாடி,"கசத்துல" மாட்டிகிட்டானுகோ.."
ஆதிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks